Home Antiheroதளிர் – 84

தளிர் – 84 

அடுத்தநாள் காலையில் அந்த மருத்துவமனையில் இருந்தனர் விக்ரமும் நிசப்தியும்.. அந்தப் பெண் இன்னும் கண் விழிக்கவில்லை. தீவிர சிகிச்சைப் பிரிவில் தான் இருந்தாள் அந்த பெண்.

அவளைப் பார்த்துவிட்டு, மருத்துவரை சந்திக்க காத்திருந்த நேரம் முகுந்தனும், ரஞ்சனியும் வந்துவிட்டனர்.

‘இவர்கள் ஏன்.?’ என்ற கேள்வியோடு நிசப்தி கணவனை பார்க்க, 

“ம்ச்.. முகுந்தன் ஃப்ரண்டோட அப்பாதான் இந்த டீன். அதுதான் அவனை வர வச்சிருக்கேன்..” என்றதும்,

“அவருக்கு சர்ஜரி இருக்குன்னு சொன்னீங்க.. அதை முடிச்சு உடனே கிளம்பிருப்பாங்க. ஏன் இவ்ளோ டென்சன் கொடுக்குறீங்க..?” என கணவனைத் திட்டிக் கொண்டிருந்தவளை நெருங்கியிருந்தனர் இருவரும்.

“எப்படி இருக்கு அந்த பொண்ணு.?” என ரஞ்சனி கேட்க,

“ம்ச்.. ரஞ்சிக்கா..” என்ற நிசப்திக்கு குரலே வரவில்லை.

“ம்ம்.. ஓக்கே ஓக்கே..” என நிசாவை சமாதானம் செய்து, “இவளை ஏன் விக்கி கூப்பிட்டு வந்த.?” என விக்ரமிடம் பாய்ந்தாள் ரஞ்சனி..

“ஹேய் பைத்தியம் அவ தாண்டி வரேன்னு சொன்னா?” என ரஞ்சனியை முறைத்த விக்ரம், மனைவியிடம் “ரொம்ப தைரியசாலிமா நீ..?” என கிண்டலடிக்க,

“டேய் அவளை வம்பிழுக்காம நீ வா?” என்ற முகுந்தன் விக்ரமை இழுத்துக்கொண்டு சென்றான்.

“பார்க்கவே முடிலக்கா.. ரொம்ப பாவம் அந்த பொண்ணு. அவங்க அம்மா அழுத அழுகையை பார்க்கவே முடியல. என் பொண்ணுக்கு திருட்டு புத்தியெல்லாம் இல்லங்கன்னு அழறாங்க.” என்றாள் நிசப்தி.

“அந்த அகியூஸ்டை நேத்தே விக்ரம் முடிச்சிட்டதா முகுந்தன் சொன்னான் அப்போ இந்த கேஸ் எப்படி நிக்கும்..?” என்ற ரஞ்சனியிடம்,

“ரஞ்சிக்கா அவன் ஒரு ஆள் மட்டும் அகியூஸ்ட் இல்ல. இவன் மெயின் அகியூஸ்டும் இல்ல. இவன் கூட இன்னும் நாலு பேர் இருக்காங்க. அவங்களை தான் இப்போ பிடிக்கனும். கம்ப்ளைன்ட் SP ஆஃபிஸ்ல கொடுத்ததுனால நேரடியா எங்கிட்ட வந்துருக்கு. இதே லோகல் ஸ்டேஷன்ல கொடுத்துருந்தா இந்த நியூஸ் வெளிய வராமலே கூட போயிருக்கலாம்.. அவ்ளோ செல்வாக்கு அந்த ஆளுக்கு..” என ஆக்ரோசமாகி விட்டாள் நிசப்தி.

“சரி சரி விடு… அதுதான் உங்கிட்ட வந்துடுச்சே, இனி அவனுங்கள என்னனு பார்த்துக்கலாம்.. விக்கி இருக்கும் போது ஏன் கவலைப்படுற..” என ரஞ்சி நிசப்தியை சமாதானம் செய்தாள்.

அதற்குள் முகுந்தனும் விக்ரமும் மருத்துவரைப் பார்த்துவிட்டு வந்தனர். இருவர் முகமும் மிகவும் கலங்கிப் போய் இருந்தது. அதிலும் விக்ரமின் முகம் கோபத்தில் இறுகிப் போய் பார்க்கவே பயமாக இருந்தது.

அவனைப் பார்த்த இரு பெண்களும் “என்ன என்ன விக்கி.?” என பதற, “பாக்யாவை சிஃப்ட் பண்ணனும்னா பண்ணிக்க சொல்றாங்க நிசா..” என்றான் முகுந்தன் கோபமாக..

“ஹான்.. ஏன்.?” என நிசா கூர்மையாக கேட்க,

“ம்ச்… அவங்க பக்கம் நிறைய ப்ரெசர் இருக்கு நிசா. அவரை தப்பு சொல்ல முடியாது. அவர் நமக்கு ஹெல்ப்தான் பண்றார். பாக்யாவை சிஃப்ட் பண்ணி அவளை சேவ் பண்ணிக்க சொல்றார்..” என்ற விக்ரமை புரியாமல் பார்த்தாள் நிசா.

“அடுத்து என்ன?” என்ற ரஞ்சனியிடம்,

“நம்ம ஹாஸ்பிடலுக்கு ஷிஃப்ட் பண்ணிடலாம் ரஞ்சி. பாக்யாவுக்கு அதுதான் சேஃப்..” என்றான் முகுந்தன்.

ஆரம்பத்திலேயே அதாவது பாக்யாவின் முதலுதவி முடிந்த உடனே விக்ரம் முகுந்தனின் ஹாஸ்பிடலுக்கே ஷிஃப்ட் செய்து விடலாமென்றுதான் சொன்னான்.

ஆனால் நிசாதான் கவர்ன்மென்ட் ஹாஸ்பிடலில் என்றால், வழக்குக்கு பிரச்சினை இருக்காது. அரசு மருத்துவர்களின் சாட்சிகள் தான் வழக்குக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று நினைத்துதான் இங்கு அட்மிட் செய்ய சம்மதித்தாள். 

மருத்துவர்களும் அப்படித்தான் நடந்தும் கொண்டார்கள். ஆனால் ஒரே வாரத்தில் என்ன நடந்ததோ, இப்படி மாற்றி பேசுகிறார்கள் என அவளுக்கு மிகுந்த குழப்பம், அதோடு அந்த மருத்துவர்கள் மீதும் கோபம்.

அதை இப்போது வெளிப்படுத்த முடியாமல், முகுந்தன் சொன்னது போல, உடனுக்குடனே பாக்யாவை அவனுடைய ஹாஸ்பிடலுக்கு மாற்றிக் கொண்டனர்.

மிகவும் பாதுகாப்பாக அவளுக்கு சிகிச்சை தொடர்ந்தது. விக்ரமையும், அவனது கூட்டாளிகளையும் தாண்டி அவர்களால் பாக்யாவை நெருங்க முடியவில்லை.

பாக்யாவை நெருங்க முடியாமல், அவளது குடும்பத்தை பிடித்திழுத்து மிரட்டுவார்கள் என்று முன்னமே தெரிந்து கொண்ட விக்ரம், அவர்களை யாரும் கண்டுபிடிக்க முடியாத இடத்தில் மிகவும் பாதுகாப்பாக வைத்து விட்டான்.

நரேனும் உஷாவும் சேர்ந்து அந்த அக்கியூஸ்டுகளின் வரலாறைத் தோண்ட ஆரம்பித்தனர்.

அவர்கள் மொத்தம் ஐந்து பேர். அதில் இறந்துபோன டிபார்ட்மென்டல் ஸ்டோர் ஓனரும் ஒருவர்.

இவர்கள் ஐந்து பேருமே டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸ் ஓனர்கள்தான். இவர்கள் அனைவரும் தென்மாவட்டங்களில் இருந்து, மிகவும் கஷ்டப்படும் பெண்களை ஏஜென்ட் மூலம் எடுத்து, குறைந்த சம்பளத்தில் உணவும் தங்குமிடமும் கொடுத்து வைத்துக் கொள்வார்கள்.

அப்படி வரும் பெண்களின் பின்புலத்தை ஆராய்ந்து, அவர்களுக்கு ஒன்று என்றால் கேட்க ஆளில்லாத, மிகவும் கஷ்டப்படும் பெண்களைத்தான் கை வைப்பர்.

ஆனால் பாக்யாவின் விசயத்தில் அவர்களின் கொள்கை மாறிப் போயிருந்தது. காரணம் அவளின் துறுதுறுப்பும், அழகும்தான்.

பார்த்ததுமே அவளின் அழகு அந்த டிபார்ட்மென்டல் ஓனரின் வக்கிர பார்வையில் விழ,  தொடர்ந்து அவளைக் கண்கானிக்க, அப்போதுதான் அவளின் துறுதுறுப்பும், அவள் இருக்கும் இடமே கலகலப்பாக இருப்பதும் தெரிந்தது.

அதுதான் பாக்யாவை தன் கூட்டாளிக்கு கொண்டு செல்ல போதுமானதாகவும் இருந்தது.

பாக்யாவின் நல்ல நேரமோ, அவர்களின் கெட்ட நேரமோ பாக்யா அந்த அறையிலிருந்து தப்பித்து வெளியில் வந்துவிட்டாள்.

அவளைப் பார்த்ததுமே நடந்த விபரீதம் அங்கிருந்த அனைவருக்கும் புரிந்து விட்டது. 

அவர்கள் என்ன என்று விசாரிக்கும் முன்னே ‘பணத்தை திருடி மாட்டிக்கொண்டாள்’ என மாற்றி சொல்ல, மற்றவர்களுக்கு புரிந்தும் புரியாத நிலை.

பாக்யா இல்லையென்று முறையிட, அவர்கள் ஆமாம் என்று முடிவே எடுத்துவிட, இவர்களிடம் சிக்கினால் தன்னை மானபங்கம் செய்து கொன்றுவிடுவார்கள் என்று புரிந்து கொண்டாள் பாக்யா.

இந்த கயவர்களிடம் சிக்கி சின்னாபின்னமாவதற்கு மொத்தமாக உயிரை மாய்த்துக் கொள்வதே நல்லது என மாடியிலிருந்து குதித்துவிட்டாள்.

இப்போது இது அனைத்திற்கும் ஆதாரங்களை திரட்டிக் கொண்டிருந்தனர். பாக்யாவின் வாக்குமூலம் மிக முக்கியமான சாட்சி.

பாக்யாவின் உடல்நிலை முன்னேறி அவள் பேசும் அளவிற்கு வந்ததுமே, முதல் வேலையாக அவளிடம் வாக்குமூலத்தை வாங்க வேண்டும் என்று விக்ரம் கூறியிருந்தான்.

அந்த குற்றவாளிகள் நால்வருமே மிகப்பெரும் மனிதர்கள். அவர்கள் மேல் கைவைக்கும் போது தகுந்த ஆதாரங்களோடுதான் நெருங்க வேண்டும். இப்போது இருக்கும் ஆதாரங்கள் அதற்கு போதாது. அதனால் விக்ரம் ஒரு திட்டம் தீட்டினான்.

தன்னுடைய ஜூனியர் பெண்ணை அந்த நான்கு கடைகளில் ஒரு கடைக்கு வேலைக் கேட்டு அனுப்பினான். அதோடு வேலை கிடைத்தால் அடிக்கடி அவர்கள் கண்ணில் படும்படியும் பார்த்துக் கொண்டான். 

அவன் நினைத்தது போலவே அந்த பெண்ணை அவர் வேலைக்கு எடுத்துக்கொண்டனர்.

முதல் மூன்று நாட்கள் எந்த தொந்தரவும் இல்லை. அந்த ஜூனியர் பெண்ணும் தனக்குத் தேவையான ஆதாரங்களை எடுத்துக்கொண்டாள்.

மேலும் அங்கு கலப்பட பொருட்கள் அதிகம் இருப்பதையும் விக்ரமிற்கு தெரிவித்திருந்தாள்.

நான்காவது நாளில் அந்த பெண்ணிற்கு  வழக்கம்போல அவர்கள் தொல்லை கொடுக்க ஆரம்பிக்க, அவளும் அவர்களுக்கு இணைவது போலவே ஆரம்பித்து வசமாக விக்ரமின் டீமுடன் சிக்க வைத்துவிட்டாள்.

இப்படியெல்லாம் செய்வது நிசப்திக்கு பிடிக்காதுதான். வழக்கிற்காக ஒரு பெண்ணை பயன்படுத்துவதா என்று கோபம் வரும். அதனால் விக்ரமோடு சண்டையும் வரும். 

ஆனால் இப்போது பாக்யாவின் நிலையைப் பார்க்கும் போது விக்ரம் செய்வது பிடிக்கவில்லை என்றாலும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்காக சரி என்று அமைதியாகிவிட்டாள். அதோடு அந்த பெண்ணின் பாதுகாப்பை அத்தனை முறைக் கேட்டு தெரிந்து கொண்டாள். 

“மேம்.. நான் டேக்வேண்டா ஸ்டூடன்ட். அதோட விக்ரம் சார் என்னை சேஃபாதான் உள்ள அனுப்பிருக்கார். நீங்க பயப்படாம இருங்க..” என அவளே நிசாவிற்கு தைரியம் சொல்லும் அளவிற்கு அவளுடைய பயம் இருந்தது.

“பாஸ்.. அவங்களை நம்ம இடத்துக்கு கொண்டு வந்துட்டேன்..” என்ற நரேன் அனுப்பிய செய்தியில், விக்ரம் மற்றும் ரவியும் கிளம்ப,

“விக்ரம் அவங்களை கோர்ட்ல ஒப்படைக்கனும். அவங்களுக்கு சின்ன அடி, காயம் எதுவும் இருக்கக்கூடாது.” என்று நிசா எச்சரிக்கை செய்ய, அவனோ அதை காதில் வாங்கியது போல தெரியவில்லை.

“திமிர்.. திமிர் உடம்பெல்லாம் திமிர்..” என நிசாவால் பல்லைக் கடிக்க மட்டுமே முடிந்தது.

“நீ என்ன சொன்னாலும் அது அவன் மூளையில ஏறாது. அப்புறம் ஏன் அவன்கூட பேசி உன் எனர்ஜியை வேஸ்ட் பண்ற, உன் டர்ன் வரும் போது வச்சு செஞ்சிடு..” என ரேனுகா கண் சிமிட்ட,

“ம்மா அவளை இப்படி ஏத்தி விடாத. அப்புறம் இவ டார்ச்சர் தாங்காம விக்கி தான் புலம்பிட்டு திரிவான்..” என ரித்தி அண்ணனுக்காக பாசப் பயிர் வளர்க்க, வழக்கம் போல மாமியார் மருமகள் கூட்டணி அவளை கண்டுகொள்ளவே இல்லை.

“பாவம் விக்கி” என ரித்தியால் புலம்ப மட்டுமே முடிந்தது.

“பாஸ்… அக்கியூஸ்ட் மேல கைபடாம விசாரிக்கனும்னு நிசாம்மா ஆர்டர்..” என நரேன் சிரிக்க,

“என் பொண்டாட்டி சொன்னா கண்டிப்பா கேட்கனும்.. கைதானே வைக்கக்கூடாது.. இந்த நாய்ங்களை என் கையால தொட்டு பாவம் பண்ண சொல்றியா? நோ.. நோ.. இந்த பண்டார பரதேசி நாய்ங்களுக்கு, நாய்கள் தான் பெஸ்ட் ட்ரீட்மென்ட். கூப்பிடுங்கடா என் செல்லங்களா?” என விக்ரம் நக்கலாக கூறி, நரேனுக்கு பின் நின்றிருந்த, அந்த இடத்தின் செக்யூரிடியைப் பார்த்து கண் சிமிட்ட, அவரும் “ஏஸ் சார்..” என தோட்டத்தில் கட்டி வைத்திருந்த ஐந்து ராஜபாளையம் நாய்களையும் அவிழ்த்து விட, அந்த ஐந்தும் மின்னல் வேகத்தில் வந்து தன் இரைக்காக விக்ரமை சுற்றி நின்றது.

பலநாள் பசியோடு தன் கோரைப் பற்களைக் காட்டி, இரைக்ககா நின்ற ஐந்து நாய்களை பார்த்ததும், அந்த குற்றவாளிகளுக்கு உடலெல்லாம் உதற ஆரம்பித்தது.

அவர்களுக்கு எதற்காக தங்களை இங்கு கொண்டு வந்திருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. 

“சார்.. சார்.. யார் நீங்க? ஏன் இப்படி எங்களை அடைச்சி வச்சிருக்கீங்க.. நாங்க எல்லாம் சமுதாயத்துல ரொம்ப பெரிய இடத்துல இருக்கோம். மரியாதையான குடும்பம் சார்.” என ஒருவர் பேச,

“ஸார் எதுக்ககா எங்களை இங்க வச்சிருக்கீங்க? நாங்க எந்த தப்பும் செய்யல சார்..” என மற்றொருவர் சொல்ல,

“ஸார் சொல்லுங்க சார்.. நாங்க புள்ள குட்டிக்காரங்க சார். எங்களை விட்டுடுங்க சார்..” என மூன்றாவது ஒரு நபர் பேச,

“என்னடா ரவி இவ்ளோ தற்பெருமை பேசிட்டு இருக்கானுங்க..” என கிண்டலாக பேசிய விக்ரம் நொடியில் தன் முகபாவத்தை மாற்றி “பாக்யாவை நியாபகம் இருக்கா.?” என்றான் இறுகியக் குரலில்.

அந்த பேரைக் கேட்டதுமே சர்வமும் ஒடுங்கிப் போனது குற்றவாளிகள் அனைவருக்கும்.

You may also like

Leave a Comment

About Me

Featured