தளிர் 41
உஷா அதிர்ந்து நின்றது எல்லாம் சில நிமிடங்கள்தான். அடுத்த நொடி, நரேன் பேசிய வார்த்தைகளின் தாக்கம் அவளையும் செயலிழக்கச் செய்ய, காரில் ஏறியவனின் தோளைப் பற்றித் தனக்கு முன்னே திருப்பியவள், “நீங்க எதை மனசுல வச்சு சொன்னீங்கனு எனக்குப் புரியல நரேன்.” என்றாள் அடக்கப்பட்டக் கோபத்துடன்.
“நான் சொன்னது உனக்குப் புரியாமலா, இவ்வளவு கோபத்தோட வந்து எங்கிட்ட பேசுற?” என்றான் எள்ளல் குரலில்.
“ஸோ, உங்க மனசுல இத்தனை நாளா இதை வச்சுக்கிட்டுத்தான் எங்கூட பழகிருக்கீங்க, இல்லையா?” என்றாள் தளர்ந்து போன குரலில்.
“இல்லனு பொய் சொல்லமாட்டேன்.” என்றான் ஏளனமாக.
“ஓ… ம்ம் ஓகே, இனி நம்ம வாழ்க்கை இப்படியே போக வேண்டிய அவசியம் இல்லை. நான் உங்க வாழ்க்கையில இருந்து மொத்தமா விலகிக்கிறேன். நீங்களே டிவோர்ஸுக்கான எல்லா ஏற்பாடுகளையும் செஞ்சிடுங்க. உங்களை இவ்வளவு நாளா கஷ்டப்படுத்தினதுக்கு என்னை மன்னிச்சிடுங்க.” என்றவள் சற்றும் யோசிக்காமல், தன் கழுத்தில் இருந்த மாங்கல்யத்தைக் கழட்டி அவன் கையில் திணித்துவிட்டு,
“இந்த தாலிக்கான மரியாதையோ, திருமணத்துக்கான ஒரு மரியாதையோ உங்ககிட்ட இல்லனும் போது, இந்த மாங்கல்யம் எங்கிட்ட இருந்து, ஒரு பிரயோஜனமும் இல்லை.” என்றவள், நீர் நிறைந்த விழிகளோடு அங்கிருந்து ஓடினாள்.
ஒன்றுமே இல்லாத ஒரு சின்ன விடயம். இருவருக்கும் இருந்த மன அழுத்தத்தில் பேசிப் பேசியே பெரிய பிரச்சனையாக்கி வாழ்க்கையையே தொலைக்க முடிவெடுத்து விட்டனர்.
இருவருக்கும் வலிதான், வேதனைதான். ஆனால் அதை யாரிடம் காட்ட முடியும்? கூரிய கத்திமுனையைக் கொண்டு இருவரும் ஒருவரையொருவர் மாற்றி மாற்றி குத்திக் கொண்டதைப் போல, பேசிப் பேசியே ஆற்றவே முடியாதக் காயத்தை உருவாக்கிக் கொண்டனர்.
உஷாவின் அப்பா டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்ததும் எல்லோரிடமும் உஷா உண்மையைச் சொல்லிவிட, ஒரு ஆட்டம் ஆடித் தீர்த்துவிட்டார் அவளின் பெரியம்மா. அவர்களுக்கு வெளியேப் போ என்றும் சொல்ல முடியாத நிலை வேறு. அதுவும் சேர்ந்துகொள்ள உஷாவை வார்த்தைகளால் வதைத்து, உண்டு இல்லை என்றாக்கிவிட்டார் அவர்.
மனதளவில் ஜடமாகிவிட்டவளுக்கு இந்த பேச்சுக்கள் ஒன்றும் பெரிதாக ரோசத்தையோ, வலியையோ வரவைக்கவில்லை. நரேனின் செலவால் படித்த படிப்பிற்கு ஒரு முழுக்கு போட்டவள், கல்லூரியில் இருந்து நின்று கொண்டாள். தன்னை வளர்த்த மதரிடம் சென்றவள், சில நாட்கள் அங்கேயே தங்கிக் கொள்வதாகச் சொல்ல, அவரும் மன வருத்தத்திலும் குழப்பத்திலும் இருப்பவளிடம், எதுவும் இப்போது பேச வேண்டாம் என்று அமைதி காத்தார்.
இங்கு தன் கையில் இருந்த தாலியையே வெறித்துக் கொண்டிருந்தான் நரேன். இன்றோடு இந்த அறைக்குள் வந்து மூன்று நாட்கள் ஆகிவிட்டது. கண்ணை மூடவே முடியவில்லை அவனால்.
என்ன நடந்தது என யூகிக்கவே முடியவில்லை. நிமிடத்தில் அனைத்தும் நடந்து முடிந்தது போல இருந்தது. அந்த நேரம் ஏற்பட்ட கோபத்தில் வார்த்தைகளை விட்டுவிட்டான். அதனால் ஏற்படும் பின்விளைவுகளை அப்போது அவன் யோசிக்கவில்லை. ஆனால் உஷா தாலியைக் கொடுத்துவிட்டு சென்ற பிறகுதான், நிதர்சனம் உறைக்க ஆரம்பித்தது. அதன்பிறகு உறைத்து என்ன பயன்?
கொஞ்சம் கொஞ்சமாக தனிமைக் கூட்டுக்குள் இருந்து வெளியில் வந்தவளை, மீண்டும் மொத்தமாக உள்ளே அனுப்பிவிட்டதை அவன் உணர்ந்து கொண்டான். தன் முட்டாள்தனத்தை எண்ணி நொந்து கொண்டவன், அவளைத் தொடர்பு கொள்ள, அவளோ அவனது அழைப்பைத் தொடவே இல்லை.
மனைவியின் கோபம் புரிந்து அவளது வீட்டிற்குச் சென்றவனை, யாரும் வீட்டிற்குள்ளே விடவில்லை. வார்த்தை எனும் சொல்லம்புகளால் வதைத்து அனுப்ப, ஆண் என்ற ஈகோ அவனுக்கும் தலைதூக்க, கோபத்திலும் வீம்பிலும் போனவள் அவளாகவே வரட்டும் என்று நினைத்து மனதை அடக்கினாலும் உஷாவின் அழுத தோற்றமும், உணர்வுகளற்ற முகமுமே வந்து பாடாய்படுத்த மீண்டும் அவளிடம் கெஞ்ச, அவளோ அவனை திரும்பியும் பார்க்காமல் கொடைக்கானல் சென்றுவிட, மொத்தமாக மூர்க்கனாகிப் போனான் நரேன்.
விக்ரமும் வேலையாக டெல்லி, மும்பை என சுற்ற நிசப்தியை மட்டுமல்ல, அடைத்து வைத்திருந்த கமலையுமே மொத்தமாக மறந்து போனான். ரவியும் ரித்தியும் தங்களால் முடிந்தளவு நிசப்தியைத் தேட முயற்சிக்க, அனைத்து வழியிலும் தோல்வியேக் கிடைக்க, அவர்களும் தளர்ந்து போய் தங்கள் தேடலைக் கைவிட்டுவிட்டனர்.
இப்படியாக நிசப்தியின் நலன் நாடும் அனைவரும் அவரவருக்கான பிரச்சனைகளில் மூழ்கியிருக்க, ஸ்வாதிக்கு பெரும் கொண்டாட்டமாகிப் போனது. தன் விளையாட்டை மிகவும் பொறுமையாகவும் நிதானமாகவும் விளையாடத் தொடங்கினாள். நிசப்தியை அவளது தந்தையின் உடல்நிலையைக் காட்டி, தன் கை பொம்மையாகவே மாற்றியிருந்தாள்.
காலம் யாருக்காகவும் காத்திருக்கவில்லை. நாட்கள் வெகு சீக்கிரமாக ஓட ஆரம்பிக்க, நிசப்திக்கு இப்போது ஆறு மாதமாகியிருந்தது. உடலில் ஏற்பட்ட ஹார்மோன் மாற்றங்கள், அவளை வெகுவாக பாதிக்கத் தொடங்கின. தாயின் அரவணைப்பையும் தந்தையின் மடியையும் தேடத் தொடங்கியது.
அந்தமாதிரி நேரங்களில் தந்தையின் அறையிலேயே மணிக்கணக்கில் அமர்ந்திருப்பாள். அப்படியிருந்தும் அவளால் தன் ஏக்கத்தை மறைக்க முடியவில்லை. இங்கிருந்து வெளியேறினால் நன்றாக இருக்குமோ எனத் தோன்ற, தந்தையின் உடல்நிலையிலும் பெரிதாக எந்த முன்னேற்றமும் இல்லாமல் போக, அவளுக்கு அங்கிருந்து கிளம்பினாலே போதும் என்று தோன்றத் தொடங்கியது.
அதற்கு காரணமும் உண்டு. ஸ்வாதி இங்கு வரும் நாளும் சரி, போனில் பேசும் போதும் சரி, விக்ரம் குழந்தை அது, மிகவும் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த பாட்டைக் கேளு, இந்த மியூசிக்கை கேளு, இப்படி இருந்தால்தான் குழந்தை விக்ரம் போலவே அறிவாளியாகப் பிறக்கும். அப்படி இருந்தால்தான் குழந்தை விக்ரம் போலவே பொறுமையாக, நல்லவனாக பிறக்கும் என, நிசப்தியை மனதளவில் டார்ச்சர் செய்ய ஆரம்பித்துவிட்டாள்.
தனிமையில் இருந்த நிசப்திக்கு யாரை மறக்க வேண்டும் என்று நினைத்தாளோ, அவனையே ஸ்வாதியின் பேச்சுக்கள் ஞாபகப்படுத்த, கடுப்பின் உச்சிக்கே செல்ல வைத்தது. அது ஒருவகையான கோபத்தையும் எரிச்சலையும் கொடுக்க, இங்கிருந்து போனால் போதும் என்ற எண்ணத்தைக் கூட்டியது.
நிசப்தியின் இந்த எண்ண அலைவரிசைகள் ஸ்வாதியையும் எட்டியிருக்க வேண்டும். அன்று ஸ்வாதி, நிசப்தியைக் காண வரும் நாள். அப்போது வந்தவளிடம் நிசப்தியாகவே தன் பேச்சை ஆரம்பித்தாள்.
“ஸ்வாதி, உங்க ப்ளான்படி குழந்தையைப் பாதுகாப்பா பெத்துக் கொடுத்தா போதும் தானே? அது எங்க இருந்தா என்ன? இங்க அப்பாவுக்கு ஒன்னும் சரியான மாதிரி எனக்கு தெரியல, அதனால நாங்க எங்க சொந்த ஊருக்கே போகட்டுமா? அங்க போனா கொஞ்சம் ரெகவர் ஆக வாய்ப்பிருக்குனு தோனுது.” எனவும்,
“வாட்!” என்று சத்தமாகக் கேட்ட ஸ்வாதியின் முகத்தில் தோன்றிய கோபத்தைப் பார்த்து, நிசப்தியே அந்நேரம் அதிர்ந்துதான் போனாள்.
“என்ன நினைச்சிட்டு இப்போ நீ இதை பேசுற? எங்க இருந்து உனக்கு இவ்ளோ தைரியம் வந்தது?” என ஆங்காரமாகக் கத்த,
“என்ன ஸ்வாதி, ஏன் இப்படி ரியாக்ட் பண்றீங்க?” என்றாள் ஒருவித அச்சத்துடன்.
“வாட் ரியாக்ட் பண்றேனா? என்னை பைத்தியம்னு சொல்றியா? ஏன் சொல்லமாட்ட, உனக்கு பாவம் பார்த்து என்னோட லைஃப்போட முக்கியமான குழந்தையை உனக்கு கொடுத்தேன்ல, நீ பேசத்தான் செய்வ. யாருமே ஹெல்ப் பண்ண முன்ன வராம இருக்கும் போது, நான் வந்தேன்ல எனக்குத் தேவைதான்…” என எகத்தாளமாகக் கேட்டவளைப் பார்த்து, பயத்தில் உடல் நடுங்கத் தொடங்கியது நிசப்திக்கு.
ஒரு கை வயிற்றிலும் மற்றொரு கை அமர்ந்திருந்த சேரின் கைப்பிடியையும், இறுக்கமாகப் பிடித்துக்கொண்டது. ஆனாலும் உடலில் ஏற்பட்ட நடுக்கம் குறையவில்லை.
“நீங்க சொல்றது எனக்குப் புரி… புரியல… நீங்கதான் என்னைக் கடத்தி இப்படியெல்லாம் செய்ய வச்சது. அந்தக் கமல் அவன் என் அப்பாவைக் காட்டி மிரட்டினது. இப்போ நான் தப்பு செஞ்ச போல பேசுறீங்க?” என்றவளின் குரல் ஏகத்திற்கும் தந்தியடித்தது.
“எஸ்… நான்தான் செஞ்சேன். இல்லைனு எப்போ சொன்னேன்? ஒரு கொலையை செஞ்சிட்டு நீ தைரியமா வெளிய சுத்துவ, உன்னையும் ஒருத்தன் காப்பாத்துவான். அதைப் பார்த்துட்டு நான் சும்மா இருக்கணுமா? என்னை என்ன சொம்பன்னு நினைச்சியா?” என்றவளின் குரல் ஆங்காராமாய் ஓங்கி ஒலிக்க, நிசப்தியின் இதயத் துடிப்பு தாறுமாறாக எகிறியது.
ஸ்வாதியின் இந்த முகத்தை நிசப்தியால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. பழகிய வரைப் பார்த்ததில் ஒருவகையான சுயநலவாதி என்று தெரிந்ததுதான். ஆனால் இந்தப் பேச்சு… பழிவாங்கத்தான் இதெல்லாம் செய்தாளா? ஆனால் ஏன்? என்ற கேள்வி மூளையை குடைய, மங்கிய மூளையைத் தூசித் தட்ட பார்த்தாள்.
“என்ன பார்க்குற, எனக்கும் விக்கிக்கும் என்ன சம்மந்தம்னு யோசிக்குறியா? அவனுக்காக நான் ஏன் உங்கிட்ட பேசுறேன்னு உன் மங்கிப் போன மூளை கேட்குதா? கேட்கட்டும், நல்லா குடையட்டும். யோசி, நல்லா யோசிச்சு கண்டுபிடி. உன்னால முடியுதா பார்க்கலாம். வக்கீலு இல்ல, கண்டுபிடிச்சாலும் கண்டுபிடிச்சிடுவ. அதுக்குப் பிறகு நீ சொன்னதைப் பத்தி நான் யோசிக்குறேன்.” என்றவள், கோமதியை அழைத்து காதில் ஏதோ சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டாள்.
ஸ்வாதி சென்ற பிறகும் அப்படியேதான் இருந்தாள் நிசப்தி. அவளால் எதையும் யோசிக்க முடியவில்லை. அவளைச் சுற்றி எதுவோ நடக்கிறது என்று கொஞ்ச நாளாகவேப் புரிந்துதான் இருந்தது. ஆனால் இப்போது முழுதாக தெரிந்து போனது, விக்கியின் கொலைக்காகத் தன்னை பழிவாங்குகிறாள் ஸ்வாதி என்று.
‘என்ன செய்ய? எப்படி இதிலிருந்து மீள? யாரிடம் உதவி கேட்க?’ என மூளை வேகமாக யோசிக்க ஆரம்பிக்க, அதைத் தடை செய்வது போல, “நிசா… நிசா… இங்க சீக்கிரம் வா, அப்பாவோட பல்ஸ் குறைய ஆரம்பிக்குது.” என கோமதியின் அலறல் கேட்க, யோசனைகளை எல்லாம் மூட்டைக் கட்டி வைத்துவிட்டு தந்த்தையின் அறைக்குள் ஓடினாள் நிசப்தி.
உயிர் இருப்பதற்கான அறிகுறியாக ஓடிக் கொண்டியிருந்த மெசினில், இப்போது சத்தம் ஒரு அலைவரிசை இல்லாமல் கேட்க பயந்து போனவள், “அக்கா எதாச்சும் செய்ங்களேன் க்கா, பயமா இருக்கு சீக்கிரம் பாருங்க.” எனக் கதற,
“நீ அமைதியா இரு, நான் டாக்டரை வர சொல்றேன். முதல்ல நீ டென்சன் ஆகாத.” என்றவள் டாக்டருக்கு அழைத்துச் சொல்ல, அவரும் உடனே வந்து பார்த்து சில மருந்துகளை மாற்றி, ஊசியையும் போட்டுவிட்டு செல்ல, இப்போது அந்த மெசினில் சத்தம் ஒரே அலைவரிசையில் கேட்க ஆரம்பித்தது. அதன்பிறகு நிசப்தியின் மனமும் உடலும் சமாதானம் ஆனது.
இங்கு நிசப்தியைப் பார்த்துவிட்டு வந்த ஸ்வாதி நேராக விக்கி அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்குத்தான் சென்றாள். இவள் வரவிற்காகக் காத்திருந்தது போலவே மகிழ்ச்சியாக அமர்ந்திருந்தான் கமல்.
“என்ன கமல், உன் முகத்துல ஒரு ஒளிவட்டம் தெரியுது? என் விக்கி இப்படி இருக்குறது உனக்கு ஹேப்பியா இருக்கோ?” என்றவள், அவன் பதிலுக்குக் கூட காத்திராமல் விக்கியின் அருகில் நெருங்கியமர்ந்து கொண்டாள்.
“ஹேய், என்ன ஸ்வே நீ எப்போ வருவ, டாக்டர் எங்கிட்ட சொன்ன குட் நியூசை உனக்கு எப்போ சொல்லன்னு வெயிட் செஞ்சிட்டு இருந்தா கோபமா பேசுற?”
“ம்ச், சாரி கமல்… எனக்கு வேற டென்சன், சரி நீ சொல்லு, டாக்டர் என்ன சொன்னார்?”
“இட்ஸ் ஓகே ஸ்வே, நான் சொல்ற மேட்டர்ல உன்னோட டென்சன் எல்லாம் பறந்து போயிடும்.”
“ம்ம்… என் டென்சன் எல்லாம் பறந்து போற அளவுக்கு குட் நியூஸ்னா, என்னோட விக்கி எழுந்து வர்றதுதான். அப்படி ஒன்னுதான் நடக்க வாய்ப்பே இல்லையே…”
“என்னாச்சு ஸ்வே உனக்கு? ஏன் இவ்வளவு டென்சன்?”
“உனக்குத் தெரியாதா? ஹ்ம்ம்ம்… இவனை இப்படி படுக்க வச்சிட்டு அதுக்கு காரணமானவங்க எல்லாம் நிம்மதியா வெளிய இருக்காங்க. ஆனா என் விக்கி… என் விக்கி…” என்றவள், “என்னால முடியலயே? அவங்கள சும்மாவிட முடியலையே? என் முன்னாடியே சந்தோசமா இருக்குற, அந்த விக்ரமைப் பார்க்கும் போது கொன்னுடலாம் போல இருக்கு கமல். ஆனா இப்போ அதுவும் என்னால முடியாதே சிட்!” என கத்தினாள்.
“ஸ்வே, காம் டவுன் ஸ்வே. ப்ளீஸ் காம் டவுன். நீ ஒன்னும் அவங்களை சும்மா விடலையே அப்புறம் என்ன? இப்போவும் யாரும் நிம்மதியா இல்ல, இனியும் இருக்க மாட்டாங்க. அப்படியிருக்கும் போது நீ ஒன்னும் செய்யலனு ஏன் ஃபீல் பண்ற? முதல்ல நான் சொல்றதைக் கேளு, விக்கிக்கு ட்ரீட்மெண்ட் பார்த்த டாக்டர் அவரோட ஃப்ரண்ட்ஸ்க்கு, விக்கியோட ரிப்போர்ட்ஸ் எல்லாம் அனுப்பிருக்கார். அந்த டாக்டர் அவரால் சரி பண்ண முடியும்னும் சொல்லிருக்கார்.” என்று சந்தோசமாகச் சொல்ல, தன் காதுகளில் விழுந்த வார்த்தைகள் உண்மையா என்ற அதிர்ச்சியில், அப்படியே சிலையாக நின்றிருந்தாள் ஸ்வாதி.
***
1 comment
எல்லாருமே இங்க லூசாகிட்டாங்கப் போல.
😀😀😀
CRVS (or) CRVS 2797