Home Antiheroதளிர் – 42

தளிர் 42

மருத்துவர் சொன்னதை நம்ப முடியாமல் அமர்ந்திருந்தாள் ஸ்வாதி. இப்போது தோன்றும் இந்த உணர்வுக்கு என்ன பெயர் என்று கூட அவளால் உணர்ந்து கொள்ளமுடியவில்லை. தன் ஒட்டு மொத்த மகிழ்வையும் தாண்டி, இந்த உலகையே வென்றுவிட்ட ஒரு உணர்வு. கண்களில் நீர் தன் பாட்டில் வழிந்தது.

அதைத் துடைக்க வேண்டும் என்று கூடத் தோன்றாமல், ‘என் விக்கி எனக்காக மட்டுமே மீண்டும் வந்திருக்கிறான்.’ இந்த எண்ணத்தைத் தாண்டி வேறொன்றையும் அவள் யோசிக்கவில்லை. தன்னைச் சுற்றி இருக்கும் அனைத்தையும் மறந்து ஒரு யோக நிலைக்குச் சென்றுவிட்டாள், என்றுதான் சொல்ல வேண்டும். அவளுக்கு விபரம் தெரிந்து முதன்முறையாக அழுகிறாள். விக்கியை ரத்த வெள்ளத்தில் பார்த்த போது கூட, கண்ணீர் விடாதவள் அவள். ஆனால் பிழைப்பதற்கு வாய்ப்பிருக்கிறது என்று தெரியவும் ஆனந்தத்தில் கண்ணீர் கொட்டியது.

சில நிமிடங்களில் தன் உணர்வுகளைக் கட்டுக்குள் கொண்டுவந்தவள், “நான் என்ன செய்யணும் டாக்டர்?” என்றாள் நிமிர்ந்து.

“ஸ்வாதி என்னோட ஃப்ரெண்ட் ஜோன்ஸ் இப்போ லண்டன் பாரிஸ்டர்ல ஒரு ரிசர்ச்ல இருக்கான். டூ வீக்ஸ் முன்னாடி அவனுக்கு விக்னேஷோட ரிப்போர்ட்ஸை சென்ட் பண்ணிருந்தேன். இப்போதான் அவனுக்கு டைம் கிடைச்சிருக்கும் போல, டுடே ஜஸ்ட் ஹி சா த ரிப்போர்ட்ஸ்.

அவன் பார்த்துட்டு உடனே எனக்கு மெயில் பண்ணான். அவனால இந்த கேசை ஹேண்டில் பண்ண முடியும். பட் அதுக்கு ஒரு டூ மன்த்ஸ் மட்டும் டைம் கேட்குறான். அதுவரை நாம இங்கே வச்சிக்கலாம். அவன் ரிசர்ச் முடிஞ்சி வந்ததும் நீங்க லண்டன் கிளம்புற மாதிரி பார்த்துக்கோங்க. அதுக்குள்ள உங்க ஃபினான்ஸ் ஸ்டேடசையும் பார்த்துக்கோங்க. எகனாமிக்கலா அங்க செலவு அதிகம். என்னால என்ன ஹெல்ப் பண்ண முடியுமோ அதை நான் செஞ்சி தரேன். அங்கே போனதும் ஜோன்ஸ் உங்களை ஃபாலோவ் பண்ணிப்பான். அவன் ஒரு கேசை அவ்வளவு சீக்கிரம் அட்டென் செய்ய மாட்டான். அப்படி அட்டெண்ட் செய்தா அது ஃபெயிலியர் ஆக வாய்ப்பே இருக்காது. சோ, தைரியமா நீங்க அடுத்து செய்யப்போற ஏற்பாடுகளைக் கவனிங்க.” என்று முடித்துவிட, அடுத்து ஸ்வாதி எங்கேயும் எதிலும் சுணக்கம் காட்டவில்லை.

விக்னேஷை லண்டனுக்கு அழைத்துச் செல்லும் வேலையில் மும்முரமாக இறங்கினாள். இறந்தவன் இறந்தவனாகவே இருக்கட்டும் என்று நினைத்தவள், கமலின் துணையோடு அந்த மருத்துவரின் மூலமே அவனுக்கு ஒரு புது அடையாளத்தை உருவாக்கினாள்.

பணம் இருந்ததால் அனைத்தும் அவளுக்கு சாத்தியமாகிப் போனது. இப்போது அவள் நிசப்தியைச் சுத்தமாக மறந்து போனாள். அவளுக்கு இருக்கும் இரண்டு மாத காலத்தில் அனைத்தையும் சாத்தியமாக்கி, விக்னேஷுடன் லண்டன் சென்றுவிட வேண்டும். அது மட்டுமே மூளையில் இருக்க, அதற்கான வேலைகளில் கவனம் செலுத்தினாள். வீட்டில் இருக்கும் நேரங்கள் குறைந்து போனது.

ஸ்வாதி வெளியே சென்று வந்த ஒரு நாளில், அவளுக்கு முன்னே கோபமாக அமர்ந்திருந்தான் விக்ரம். அவனைச் சுற்றி அவஸ்தையாக ஸ்வாதியின் வீட்டினர். உள்ளே வந்த ஸ்வாதி அவனைக் கண்டதும் புருவம் சுருக்கினாலும், ஒன்றும் பேசாமல் அவளது அறைக்குள் நுழைந்துவிட, அவளது உதாசீனம் அங்கிருந்த அனைவரையும் கோபப்படுத்தியது.

தனக்கு எதிரே இருந்த ரவியை முறைத்துப் பார்க்க, அவனோ, “என்னம்மா இதெல்லாம்?” எனத் தன் தாயை அதிருப்தியாகக் கேட்க,

“என்னைக் கேட்டா எனக்கு மட்டும் என்னடா தெரியும்? நான் கேட்டா மட்டும் சொல்லிடுவாளா? எதுவும் பிரச்சனைல மாட்டிக்கிட்டாளோனு நானே பயந்து போய் இருக்கேன், நீ என்னடான்னா எங்கிட்ட விளக்கம் கேட்டுட்டு இருக்க?” என அவரும் எரிச்சலில் கத்த,

இருவரின் வாக்குவாதத்தையும் பார்த்த விக்ரம், “ம்ச்…” என சலிப்பாகக் கூறிவிட்டு, ஸ்வாதியின் அறைக்குள் நுழைந்தான்.

“வா விக்கி, வேலை எல்லாம் முடிஞ்சி ஃப்ரீ ஆகிட்டீங்க போல? பொண்டாட்டியைப் பார்க்க எல்லாம் நேரம் கிடைச்சிருக்கு.” எனக் கிண்டல் குரலில் கூறியபடியே போனை நோண்ட,

“ம்ம், எனக்கு இப்போவாச்சும் டைம் கிடைச்சது, ஆனா வொய்ஃப் மேடத்துக்கு இன்னும் கூட டைம் கிடைக்கல போல. பிசிலயே சுத்திட்டு இருக்காங்க.” என, அவனும் பதிலுக்கு கிண்டலாகப் பேசியபடி அவளிடமிருந்த போனை பிடுங்கி கட்டிலில் எறிந்தான்.

பட்டென்று தன்னிடமிருந்த போன் பறிக்கப்படவும் கோபமானவள், “வாட்ஸ் ராங்க் வித் யூ விக்கி?” என எரிச்சலாகக் கேட்க,

“சேம் கொஸ்டீன் எங்கிட்டயும் இருக்கு ஸ்வாதி. அதுக்கு நீதான் பதில் சொல்லணும்.” என இதுவரை ஸ்வாதி அறிந்திராத கோபக் குரலில் விக்ரம் கேட்க, அதிர்ச்சியாகப் பார்த்தாள் அவனை.

“என்ன பிரச்சனை உனக்கு? யாராச்சும் உங்கிட்ட பிரச்சனை பண்றாங்களா? அந்த கமல்கூட உனக்கு என்ன மீட்டிங்? அவனை ஏன் நீ அடிக்கடி பார்க்குற?” என வரிசையாக கேள்வியை அடுக்க, சட்டென்று சுதாரித்தாள் ஸ்வாதி.

இவனுக்கு எதுவோ தெரிந்திருக்கிறது. அதனால்தான் தன்னிடம் போட்டு வாங்குகிறான். என்ன தெரியும், எவ்வளவு தெரியும் என்பதை முதலில் கண்டுபிடிக்க வேண்டும் என நினைத்தவள், “என்ன சொல்ற விக்கி? கமல்கூட என்னை எத்தனை தடவை பார்த்த? அப்போ நான் கமல்கூட இல்லீகல் ரிலேசன்ஷிப் வச்சிருக்கேன்னு சொல்றியா? விக்கி நீ என்னைச் சந்தேகப்படுறியா?” என முகத்தில் அத்தனை அதிர்வையும் காட்டிக் கேட்க,

“ஏய்! என்ன பேசுறனு தெரிஞ்சிதான் பேசுறியா? நான் உன்னைச் சந்தேகப்படுறேனா? பைத்தியமா உனக்கு? பார்க்குறவங்க வந்து சொல்லும் போதும், கேட்கும்போதும் நான் என்ன சொல்லணும்? எங்கிட்ட என் பொண்டாட்டி எதுவுமே சொல்றது இல்லனு சொல்லவா முடியும்? எங்கிட்ட என்ன பதில் இருக்கு? அதை வந்து உங்கிட்ட கேட்டா முட்டாள் மாதிரி பெரிய வார்த்தை எல்லாம் பேசுற? உன் மேல சந்தேகப்பட்டா இப்போ வரை நான் உன்னை சும்மா விட்டு வச்சிருக்கமாட்டேன் புரியுதா? ப்ளடி…” எனக் கத்தியவன், “எனக்கு உண்மையான பதில் வேணும் ஸ்வாதி, கமல்கூட உனக்கு என்ன பேச்சு?” என்றான் இறுக்கமாக.

விக்ரமின் பேச்சில் ஸ்வாதி அதிரவெல்லாம் இல்லை. அப்படி காட்டிக்கொண்டாள் அவ்வளவே! இப்போதும் அப்படியே முகத்தை வைத்துக்கொண்டு, “விக்கி… விக்கி சாரி விக்கி, நான் செஞ்சது தப்புதான். யாரோ சொல்ல முன்னாடி, நானே உனக்கு சொல்லிருக்கணும், தப்பு பண்ணிட்டேன். சாரி விக்கி ரியலி சாரி…” என்றவள், “நான் உங்கிட்ட நெறைய பேசணும், சொல்லணும். எனக்கு இந்த உண்மையை மறைச்சு உங்கிட்ட நடிக்க முடியல விக்கி. நான் உனக்கு துரோகம் பண்ணிட்டேனோனு தோனுது விக்கி. நான் அப்படி உண்மையைச் சொல்லிட்டா என்னை வெறுத்துடுவியா விக்கி?” எனத் தன் நடிப்புத் திறமையோடு நீலிக்கண்ணீரையும் திறந்துவிட,

“நான் நடந்துக்கிறது செகண்டரிதான். பட் நீ என்ன நடந்ததுனு முதல்ல சொல்லு.” என அதேப் பிடியில் அப்படியே நின்றான் விக்ரம்.

“விக்கி…” என அவள் அவனையேப் பார்க்க, “எனக்கு எல்லாமே தெரியணும் ஸ்வாதி.” என்றான் கொஞ்சமும் இறங்காமல்.

“சொல்றேன், அதுவந்து நான் உங்க யாருக்கிட்டயும் சொல்லாம ஒரு முக்கியமான முடிவை எடுத்துட்டேன். அது இப்போ வரைக்கும் எனக்கு தப்பாவே தெரியல. ஆனா நீங்க எல்லாரும் அதுக்கு சப்போர்ட் செய்ய மாட்டீங்கனு பயந்துதான், இதைச் சொல்லல.” என மெதுவாக அவன் நம்பும் விதமாக சொல்ல,

‘முழுசா எல்லாத்தையும் சொல்லி முடி’ என்பது போல் விக்ரம் நின்றான்.

“அது… அதுவந்து நான் ஒரு பொண்ணு மூலமா நமக்கு ஒரு குழந்தைக்கு ரெடி பண்ணிட்டேன்.” என மெதுவாகச் சொல்ல,

“வாட்! என்ன சொல்ற? நான்தான் அன்னைக்கே அந்த ப்ளானை ட்ராப் பண்ணச் சொன்னேனே? மறுபடியும் நீ யாரைக் கேட்டு ஆரம்பிச்ச? உனக்கு ஹெல்ப் பண்ண அந்த டாக்டர் யார்? என்னோட அனுமதி இல்லாம எப்படி இதை ப்ரொசீட் பண்ணாங்க? அந்த பொண்ணாலதான் உனக்கு இப்போ பிரச்சனையா? இங்க கமல் எப்படி வந்தான்?” என அதிர்ச்சியாகவும் கோபமாகவும் கேட்க,

அவனுக்கு கமல் எப்படி வந்தான் என்பதுதான் முக்கியம். ஏனென்றால் விக்னேஷைப் பற்றியும், அவனுடைய இறப்பைப் பற்றியும் முழுதாக அறிந்தவன் அவன் மட்டுமே. அதை வைத்து ஸ்வாதியை மிரட்டுகிறானோ என்று பயந்துதான், இன்று வந்து மனைவியிடம் விசாரனையை ஆரம்பித்திருந்தான்.

“இல்ல, இல்ல… டாக்டர் மேல எல்லாம் எந்த தப்பும் இல்ல. அவங்க ஃபர்ஸ்ட் எனக்கு ஹெல்ப் பண்ணமாட்டேன்னு தான் சொன்னாங்க. நான்தான் எனக்கு ஹெல்ப் பண்ணலனா, அவங்க ஹாஸ்பிடல் பில்டிங் மேல இருந்து விழுந்து சூசைட் பண்ணிப்பேன்னு…” எனச் சொல்லி முடிக்கும் முன்னே, ஓங்கி ஒரு அறை அறைந்திருந்தான் அவள் கன்னத்தில்.

“என்ன முட்டாள்தனம் இதெல்லாம்? உனக்கு பைத்தியம் முத்திப் போயிடுச்சா என்ன? யாரைக் கேட்டு இப்படியெல்லாம் நீ முடிவெடுத்த? உன்னால குழந்தை பெத்துக்க முடியாதுனு யார் சொன்னா? அவங்க மட்டும்தான் டாக்டரா? இன்னும் பத்து டாக்டர்கிட்ட ஒப்பீனியன் வாங்கியிருக்கலாம். அதுக்குப்பிறகு உன் முட்டாள்தனத்தை செயல்படுத்தியிருக்கலாம். ஆனா நீ என்ன செஞ்சிருக்க தெரியுமா? படிச்சவ தானே நீ? உனக்கு அறிவு எங்க புல் மேய போயிருந்திச்சா என்ன? நோ நோ… நீ சொல்றதை என்னால நம்பவே முடியல.” எனக் கத்தி தீர்த்தவனை, முதன்முறையாகத் தன் திமிரெல்லாம் மறந்து பயத்துடன் பார்த்தாள்.

அதற்குள் இவன் சத்தத்தைக் கேட்டு எல்லோருமே உள்ளே வந்திருந்தனர். ரவியும் ரித்தியும், விக்ரமை ஆராய்ச்சியாகப் பார்க்க, மகளின் அடிவாங்கியக் கன்னத்தைப் பார்த்த மதியழகிதான், “என்ன பண்ற விக்ரம், என் பொண்ணை எதுக்கு அடிச்ச?” எனக் கோபமாகக் கேட்க,

“உங்க பொண்ணா? அப்போ என் பொண்டாட்டி இல்லையா?” என அதே கோபத்தோடு அவரிடம் கேட்டவன், “உங்க பொண்ணு என்ன பண்ணி வச்சிருக்கானு கேளுங்க, அவ இப்படி செஞ்சது உங்களுக்குத் தெரியுமா? தெரியாதா? கண்டிப்பா தெரியாம இருக்காது. அப்போ நீங்களும் அவ செஞ்ச எல்லாத் தப்புக்கும் துணை போயிருக்கீங்க அப்படித்தானே?” என மேலும் கத்த,

“என்ன நடந்தது விக்ரம்?” என ரவி கேட்க, அதற்குள் ஸ்வாதி சுதாரித்துவிட்டாள். ரவி உள்ளே வந்தால் மொத்த ப்ளானும் வெளியேத் தெரிந்துவிடும் வாய்ப்பிருக்க, அவனை மறுக்கும் பொருட்டு,

“ம்மா, எங்க ரெண்டு பேருக்குள்ள என்ன நடந்தாலும் அதை நாங்க பார்த்துக்குறோம். நீங்க பஞ்சாயத்து பண்ண வேண்டிய அவசியமே இல்ல. முதல்ல விக்கிக்கிட்ட இப்படி பேசுறதை நிறுத்திட்டு வெளியேப் போங்க.” எனக் கத்த, இருவரையும் ஒருமாதிரி பார்த்த மதி, “ஸ்வாதிம்மா நான் என்ன சொல்றேன்னா…” என ஆரம்பிக்க,

“ம்மா ப்ளீஸ்… நீ பேசி பெருசாக்காத. நாம அப்புறம் பேசலாம்.” என எரிச்சலாகக் கத்த, “என்னமோ போ.” என்று அவர் வெளியேறிவிட, ரவி அப்படியே நின்றிருந்தான்.

“உங்களுக்கு மட்டும் தனியா சொல்லணுமா?” என அவர்களிடமும் பாரபட்சம் காட்டாமல் கத்த, விக்ரமை முறைத்துப் பார்த்த ரித்தி, கணவனை அழைத்துக்கொண்டு வெளியேறிவிட்டாள்.

அனைவரும் வெளியே சென்ற பிறகு, “விக்கி ப்ளீஸ் புரிஞ்சிக்கோங்க, நான் எனக்கு குழந்தைப் பிறக்காதுன்ற பயத்துலதான் அப்படி செஞ்சிட்டேன். ஆனா இப்போ அது தப்புனு புரியுது. அதுல இருந்து எப்படி வெளியே வரதுனு தெரியல விக்கி. நான் என்ன செய்யனு தெரியாம…” எனத் திக்கித் திணற,

“சரி சொல்லு, என்ன பிரச்சனை?” என இப்போது விக்ரம் நிதானமாக கேட்க, அவன் அருகில் வந்தவள் அவளாகவே அவன் கையை விலக்கி மார்பில் சாய்ந்து கொண்டே, “அந்த பொண்ணோட வயித்துல இருக்குற குழந்தைக்கு இப்போ ஆறுமாசம் ஆகுது. ஸ்டார்டிங்ல எனக்கு ஒன்னும் பெருசா தெரியல. ஆனா நாளாக நாளாக எனக்கு ஒரு பயம் வந்துடுச்சு. அந்தக் குழந்தையைப் பார்த்ததும், உனக்கு என் மேல இருக்குற லவ் குறைஞ்சிப் போயிடுமோ, அந்த பேபியை சுமந்ததால அந்தப் பொண்ணை உனக்கு பிடிச்சிடுமோனு பயம் வந்துடுச்சி.” என்றதும் அவன் உடல் இறுக,

அதை உணர்ந்தவள் போல, “அப்படியெல்லாம் நீ செய்யமாட்டனு மூளைக்குப் புரியுது, ஆனா மனசுக்கு அது புரியல விக்கி. நான் என்ன செய்யட்டும்?” என அவன் இதயத்தின் பக்கத்தில் நின்று முனங்குபவளிடம் என்ன பதில் சொல்ல முடியும் அவனால். அவள் எப்படியோ, ஆனால் அவன் அவளை உயிராக நேசித்தானே!

“ம்ம்ம்…” என ஒரு பெருமூச்சு விட, “ஒரு நாள் அந்த பொண்ணை, ஹாஸ்பிடல்ல பார்த்துட்டு வரும்போது கமல் என்னைப் பார்த்தான். அவன் ஃப்ரெண்ட் விக்னேஷ் பத்தி எல்லாம் சொல்லிட்டு, நீங்கதான் அவனை கொலை செஞ்சீங்க, அதுவும் அந்த பொண்ணு நிசப்திக்காகனு சொல்றான். அந்த பொண்ணையும் காணோமாம். நீங்கதான் மறைச்சு வச்சிருக்கீங்க, உங்க ரெண்டு பேரையும் போலீஸ்ல பிடிச்சுக் கொடுக்காம விடமாட்டேன்னு சொன்னான். அவன் சொன்னதை என்னால நம்ப முடியல, ஆனா நம்பாமலும் இருக்க முடியல. அதோட…” என நிறுத்த,

“அதோட…?” என விக்ரமும் சொல்ல,

“இந்த ட்ரீட்மெண்ட் விஷயமும் உங்க யாருக்கும் தெரியாதுனும் அவன் தெரிஞ்சி வச்சிருக்கான். அதையும் உங்க எல்லாருக்கிட்டயும் சொல்லிடுவேன்னு சொன்னான்.” என்றவளின் உடல் அழுகையில் குழுங்க,

அவள் அழுகையைக் காண சகிக்காதவன், “சரி விடு அழாத, இனி நான் பார்த்துக்குறேன்.” என முதுகை வருடினான்.

“நான் நம்பிட்டேன்னு தெரிஞ்சதுல இருந்து, இதைச்சொல்லி என்னை மிரட்டி பணம் கேட்டுட்டு இருக்கான். நானும் எங்கிட்ட இருந்த எல்லாமே கொடுத்துட்டேன். ஆனா இன்னும் வேணும்னு கேட்டு டார்ச்சர் பண்றான். நம்ம குழந்தையை சுமக்குற பொண்ணையும் மிரட்டிருக்கான். இப்போ அந்த பொண்ணைக் காணோம்.” எனத் தேம்பி தேம்பி அழ, என்ன செய்வது என்றுத் தெரியாமல் திகைத்து நின்றிருந்தான் விக்ரம்.

***

You may also like

1 comment

M. Sarathi Rio March 26, 2026 - 2:18 pm

ஆனாலும் இந்த விக்ரம் இப்படி பொண்டாட்டி தாசனா இருக்க வேணாம் போங்க.

😀😀😀
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Reply to M. Sarathi Rio Cancel Reply

About Me

Featured