Home Antiheroஎன் சரி – 02

சரி – 02

மருத்துவமனையின் வெளியே மாலை ஒளி மெதுவாக குறைந்து கொண்டிருந்தது.

சுமதியிடம் எவ்வளவோ போராடிப் பார்த்தான் வேந்தன். அவனால் அவர் முடிவை மாற்ற முடியவில்லை. அதனால் அவனுக்கும் வேறுவழியிருக்கவில்லை. ஆப்ரேஷனுக்கான தேதி குறிக்கப்பட்டது.

அன்றைய நாள் காலையில் மகனின் திருமணம் நடந்தே ஆகவேண்டும் என்று முடிவாக கூறிவிட்டார் சுமதி.

“நாளைக்கு நல்ல நாள் தானாம்…” பாட்டி சொன்ன அந்த ஒரு வரி, அவனுக்கு மேலும் வலித்தது. அவனின் அம்மாவிற்காக அனைத்தையும் ஏற்றுக்கொள்ள முயன்றான்.

ஆதினி அந்த மருத்துவமனை வாயிலில் மிகவும் தயக்கத்தோடு, தன் கைகளைக் கைகோர்த்தபடி நின்றிருந்தாள்.

உள்ளே செல்லும் முன் ஒரு நிமிடம் தன் மூச்சை இழுத்து தன்னை சரி செய்து கொண்டாள்.

இது அவளுக்கு சாதாரண வருகை அல்ல. தன் வாழ்வில் மிக முக்கியமான நபரை சந்திக்கும் நிகழ்வு.
அவள் வாழ்க்கையை தன் கையில் வைத்துக்கொண்டு பொம்மலாட்டாம் ஆடும் அத்தையை பார்க்க வந்திருந்தாள்.

சுப்பு மகளிடம் ‘சுமதிகிட்ட நீ தான் சொல்லனும், நீ சொன்னாதான் அவளுக்கும் நிம்மதியா இருக்கும்’ என கூறி இங்கு வந்து விட்டு சென்றிருந்தார்.

மகளோடு கிளம்பிய கலாவை, ‘நீ வந்தா சும்மா இருக்கமாட்ட, அதனால வேண்டவே வேண்டாம்’ என வீட்டிலேயே விட்டுவிட்டு வந்துவிட்டார்.

காரிலிருந்து இறங்கவே யோசித்த மகளிடம், “நீ கஷ்டப்படுற மாதிரி ஒரு வாழ்க்கையை அப்பா உனக்கு அமைச்சு கொடுக்கமாட்டேன், நம்பு ஆதி..” என்றார் கடைசியாக கெஞ்சலில்.

ஏனோ அதன் பிறகு அவளால் அவரிடம் பேச முடியவில்லை. தன் முடிவு இனி இங்கு செல்லாக்காசு என்று புரிந்து, அவரிடம் தலையசைத்துவிட்டு இறங்கிவிட்டாள்.

“ஒரு அரை மணி நேரத்தில் வந்துடுவேன்..” என்ற அவரும் கிளம்பிவிட்டார்.

அந்த காரிடாரைக் கடந்து, அவள் உள்ளே நுழைந்தபோது
நெடுந்தொலைவு நடைபாதை. ஆட்களற்ற அந்த இடம் அவளை சற்றே பயமுறுத்தியது.

எச்சில் கூட்டி விழுங்கியபடியே நடந்தாள். சற்று தூரத்தில் அவன் நின்றிருந்தான். நொடியில் திகைத்து இயல்பிற்கு வந்திருந்தாள் பெண்.

அவன் பாரிவேந்தன்.

அவன் கைகளில் phone இருந்தது. ஆனால் பார்வை எங்கோ தொலைவில் நிலைத்திருந்தது.

வேந்தன் முதலில் அவளைக் கவனிக்கவில்லை.

ஆதினி இரண்டு அடிகள் முன்னே வந்து, அவன் அருகே நின்றதும்தான், அவன் திரும்பி பார்த்தான்.

அந்த ஒரு கணம், இருவரிடமும் அமைதி.

அங்கிருந்த சூழல் அமைதியாக இருந்தாலும், உள்ளுக்குள் இருவருக்கும் ஒரு போரே நடந்து கொண்டிருந்தது உண்மை.

இருவருக்கும் அறிமுகம் இருந்தது. ஆனால் அருவருப்பு இல்லை. பதட்டம் இருந்தது, ஆனால் நெருக்கம் இல்லை.

“ஹாய் எப்படி இருக்கீங்க.?” என
முதலில் ஆரம்பித்தது ஆதினிதான்.

“ஃபைன்..” அவன் சற்றே தலையசைத்தான் அவ்வளவே.
அதற்கு மேல் வார்த்தைகள் வரவில்லை வேந்தனிடமிருந்து.

அடுத்து என்ன பேச வெண்டும் என்றும் தெரியவில்லை.

“அம்மா எப்படி இருக்காங்க?” அவள் மெதுவாக கேட்டாள். அவளுக்குமே என்ன பேச என்று தெரியவில்லை.

“Doctor ஸ்டேபிள்ன்னு சொல்றாங்க.”
அவன் பதில் சுருக்கமாக வந்தது.

மீண்டும் இருவரிடமும் அமைதி.

“அத்தைக்கு எல்லாம் சீக்கிரம் சரியாகிடும்..” என்றாள் அவனுக்கு ஆறுதல் கூறும் வழியில்.

ஆதினி அவனை நேராக பார்த்தாள். அவன் முகத்தில் சோர்வு இருந்தது. கண்ணுக்கு கீழ் கருவளையம். அவன் சோகத்தையும், உறங்கா இரவுகளையும் பறை சாற்றியது.
ஆனாலும் அந்த கண்களில் அத்தனை உறுதியும் தென்பட்டது.

அந்த உறுதிக்கு காரணம் அவளா? அல்லது அவன் அம்மாவா? அவளுக்கு புரியவில்லை.

“இது… இப்படி ஒரு முடிவை நீ.. நீங்க எதிர்பார்த்திருக்க மாட்டீங்க. ஐ நோ இது ரொம்ப அவசரமா நடந்துருச்சு.”
அவன் திடீரென்று ஆரம்பித்தான்.

ஆதினி சற்றே அதிர்ந்து பார்த்தாள் வேந்தனை.

“நீங்க… okayயா இருக்கீங்களா?” அவன் கேட்ட கேள்வி மரியாதையானது. ஆனால் அதில் அவள் மீதான ஈடுபாடு கிஞ்சித்தும் இல்லை.

அவள் ஒரு நொடி யோசித்தாள். ‘இவரிடம்
உண்மையான பதில் சொல்லலாமா?
அல்லது ம்ச்.. வேண்டாம்..’ என்று நினைத்தவள். “Yes I am ok.” என பொதுவாக ஒரு வார்த்தை பதில்யில் சொன்னாள். அவள் சொன்னது உண்மையில்லை, என்று அவனால் உணர முடிந்தது.

அவன் அவளை ஒரு கணம் பார்த்தான். அந்த பார்வையில் கேள்வி இருந்தது. “நீங்க வேண்டாம்னு நினைச்சிருந்தா…” அவன் சொல்லி நிறுத்தினான்.

அவள் புரிந்துகொண்டாள்.

“ம்ச் நம்ம முடிவை யாரும் கேட்கலயே..? நம்ம பேரண்ட்ஸ் முடிவு பண்ணிட்டாங்க. ஆனா உங்களுக்கு ஒரு ஆப்சன் இருந்தது.” அவள் பதில் அமைதியாக வந்தது.

ஆதினியின் கேள்வியும், அதற்கு அவளே கொடுத்த பதிலும் இருவரிடமும் திணிக்கப்பட்ட பதில், இருவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத பதிலும் கூட.

இது இருவரும் விரும்பி எடுத்த முடிவும் அல்ல.

“ஹ்ம்ம்” என பெருமூச்சு விட்ட வேந்தன், “நீங்க சொல்றது உண்மைதான். ஆனா எனக்கு இப்போ ஃபர்ஸ்ட் priority அம்மாதான்.” வேந்தன் தெளிவாக சொன்னான்.

ஆதினி சிரிக்கவுமில்லை. கோபப்படவும் இல்லை.

“அது தப்பில்லை.” என பதிலும் உடனே சொன்னாள்.

வேந்தன் முகத்தில் ஒரு மெச்சுதல் வந்து போனது. ஆதினியின் பதிலில் அவன் சிறிது ஆச்சரியப்பட்டான்.

“ஆனா…” அவள் மெதுவாக தொடர்ந்தாள்,
“என் வாழ்க்கையைப் பற்றி முடிவு எடுக்குறப்போ,
என்னை கேட்டிருந்தா நல்லா இருந்திருக்கும்.” என அமைதியாக கூறினாலும், அழுத்தமாக கூறியிருந்தாள் பெண்.

இப்போது வேந்தன் அவளை முழுவதுமாக நிமிர்ந்து பார்த்தான்.

இந்த பெண் அமைதியாகத்தான் பேசுகிறாள்.
ஆனாலும் பேச வேண்டியதை சரியாக பேசிவிடுகிறாள் என்று நினைத்துக் கொண்டான்.

‘இவள் தன்னை புரிந்துகொள்வாள்’ என அவனது மனம் சற்றே ஆசுவாசப்பட்டது.

அவளை அவன் புரிந்து கொள்ள வேண்டும் என யோசிக்க மறந்திருந்தான்.

இவளுடனான வாழ்க்கை எப்படி இருக்குமோ என்றிருந்த பயம் கொஞ்சம் விலகியது வேந்தனுக்கு.

“நான்…” இப்போது வேந்தன் அவளுக்கு பதில் கொடுக்க
 வார்த்தைகளைத் தேடினான்.

ஆனாலும் பதில் சொல்ல முடியவில்லை. அதனால் “இங்க எல்லாம் settle ஆனதும், நாம பேசிக்கலாம்.” அவன் பொதுவாக சொன்னான்.

அது ஒரு வாக்குறுதி அல்ல. அவனிடமிருந்து ஒரு ஒப்புதல் வந்தது. அந்த நேரத்தில் அவன் தப்பிக்கும் மார்க்கம்.

அவள் மெதுவாக தலையசைத்தாள். இனி வாழ்க்கையை அதன் போக்கில் தான் கொண்டு போக வேண்டும் என்று அவளுக்கு புரிந்தது.

அந்த நொடி இருவருக்கும் ஒரு உண்மை தெளிவாயிற்று.

இந்த கல்யாணம் காதலால் தொடங்கவில்லை.
கடமையால் தொடங்குகிறது என்று.

கடமையில் தொடங்கியது, ஒருநாள் அன்பாக மாறுமா?
அல்ல வெறும் பொறுப்பாகவே மிஞ்சுமா?

அதை இருவருமே அறியவில்லை.

‘மஞ்சள் கயிறு இவர்கள் வாழ்க்கையிலும் மேஜிக் செய்யுமா?’

அப்போது அந்த ஐசியுவின் அறை கதவு திறந்தது.

வேந்தனைப் பார்த்தபடியே டாக்டர் வெளியே வந்தார். இருவருக்கும் மிகவும் பதட்டமாகியது.

“இப்போ அம்மா ஸ்டேபிள் வேந்தன்.. சர்ஜரிக்கு முன்னாடி இதெல்லாம் நார்மல் தான். டோன்ட் லூஸ் யுவர் ஹோப்.. ஃபேமிலில யாராவது ஒருத்தர் உள்ளே போய் பாருங்க.” என்றவர், “அப்பாவுக்கு கூப்பிட்டு சொல்லிடுங்க, எனக்கு கால் பண்ணார்.” என வேந்தனின் தோல் தட்டி சென்றார்.

வேந்தன் வேகமாக உள்ளே நடந்தான். பின் என்ன நினைத்தானோ நின்று, ஆதினியை பார்த்தான்.

அந்த பார்வையில் முதல் முறையாக ஒரு பகிர்வு.

“நீங்களும் வாங்க.” என்றான் கட்டாயப்படுத்தும் குரலில்.

அவள் சற்றே தயங்கி அவன் பக்கத்தில் நடந்தாள்.

இருவருக்கும் இடையில் இன்னும் ஒரு கைநீள தூரம் இருந்தது.

அந்த தூரம் ஒருநாள் குறையுமா?

அந்த அறைக்குள் நுழையும் போதே இருவரையும் விழியெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார் சுமதி.

அவரின் முதல் பார்வை தன் மகன். அடுத்து அவனைத் தொடர்ந்து உள்ள வந்த ஆதினி.

இதழ்களை விரித்து மெதுவாக சிரித்தார்.

அந்த சிரிப்பில் ஆசை இருந்தது. அமைதி இருந்தது.
ஒரு நம்பிக்கை இருந்தது. தன் முடிவு சரி என்ற நிம்மதி பிறந்தது.

ஆனால் அந்த நம்பிக்கை அவர்கள் இருவரின் மனதிலும் இன்னும் பிறக்கவில்லை.

ஆனால் அவர்களுக்குள் ஒரு விதை சுமதியால் விதைக்கப்பட்டது என்பது உண்மை.

“ஆதிம்மா..” என்றார் திணறிப்போய்

“அத்த..” என வேந்தனைத் தாண்டி வேகமாக சென்று சுமதியின் கையைப் பிடித்துக் கொண்டாள் ஆதினி.

“உன்னை கஷ்டப்படுத்திட்டேனா?” என்றார் மெதுவாக.

இல்லையென்று சொல்ல முடியவில்லை. அதனால் அமைதியாகவே இருந்தாள்.

“உன்னை என்னால புரிஞ்சிக்க முடியுது கண்ணம்மா.. ஆனா நீ வந்தா தான் என் மகன் வாழ்க்கை நல்லா இருக்கும்னு ரொம்ப நாளா என் மனசு சொல்லிட்டே இருக்கு. இந்த நோய் மட்டும் வரலன்னா, இவங்க அப்பாவை சமாளிச்சு, என் அண்ணன்கிட்ட பொண்ணு கேட்ட்டு வந்திருப்பேன். ஆனா சூழ்நிலை பார்த்தியா.?” என வருத்தமாக பேசினாலும், சிரிக்க முயன்றார்.

“எல்லாம் சரியாகிடும் அத்த.. நீங்க சீக்கிரம் குணமாகி வீட்டுக்கு வந்துடுவீங்க.. இப்போ நீங்க நெகடிவா யோசிக்கிறதை மட்டும் நிறுத்துங்க, போதும். நெகடிவ் திங்கிங்க்ஸே நம்மளை சரியாக விடாது..” என்றாள் பொறுமையாக.

“ஹ்ம்ம்.. எனக்கும் அந்த எண்ணம் தான். ஆனாலும் சில நேரங்கள்ள இவனை பத்தின பயம், என்னை வேற யோசிக்க விடுறதில்ல..” என்றார் ஒரு பெருமூச்சை விட்டு.

இதற்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல், வேந்தனை திரும்பி பார்த்தாள் ஆதினி.

“ம்மா.. நீங்க நினைச்சது, ஆசைப்பட்டது தான் நடக்கப்போகுது. அதனால மனசைப் போட்டு குழப்பிக்காம, நாளைக்கு சர்ஜரி முடிஞ்சதும், எங்களை எங்க ஹனிமூன் அனுப்பலாம்னு யோசிங்க. அப்படியே எங்க குழந்தைகளுக்கு என்ன பெயர் வைக்கனும்னு யோசிங்க..” என சிரித்துக் கொண்டே கூற, சுமதி முகம் மலர ஆதினியைப் பார்க்க, அவளோ விழிகளை விரித்து ‘அடப்பாவி, என்ன என்ன பேசுறான் பாருங்க சாமி’ என்ற ரியாக்சனோடு அதிர்ந்து பார்த்தாள் பாரி வேந்தனை.

அதே நேரம் ஜெர்மனியில் இருந்த ஆதினியின் அண்ணன் கௌதம் “ம்மா யாரைக்கேட்டு இதெல்லாம் முடிவு பண்ணீங்க. ஆதிக்கு அந்த வேந்தன் கொஞ்சமும் பொருத்தமே இல்ல. அதோட அந்த வீட்டுக்கு ஆதியை கொடுக்க உங்களுக்கு எப்படி மனசு வந்தது. அவளுக்கு என்ன தலையெழுத்து, அங்க போய் கஷ்டப்பட, நீங்க இருங்க. நான் அப்பாக்கிட்ட இதைப்பத்தி பேசுறேன். அவன் ஒரு சிடுமூஞ்சி மா.. அவன்கிட்ட நம்ம ஆதியால வாழவே முடியாது ம்மா..” என கலாவிடம் கத்திக் கொண்டிருந்தான்.

மகன் பேசியதைக் கேட்டதும் தான் கலாவுக்கு மூச்சே சீரானது. இனி மகன் பார்த்துக் கொள்வான் என நிம்மதியானார்.

ஆனால் விதி.?

You may also like

1 comment

M. Sarathi Rio March 6, 2026 - 5:07 pm

என்னாத்தை கௌதம் பார்க்குறது, வேணுமின்னா கல்ளாணத்துக்கு வந்து நாலு
அட்சதையை போட்டுட்டு போகச் சொல்லுங்க.

😀😀😀
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Comment

About Me

Featured