24
தனித்து இவ்வுலகில் இருக்க கிளம்பியிருந்த சாருவும் சஷ்டியும், புகழ் என்ற கரையின் மடியில் சேர்ந்திருந்தனர். புகழினால் இன்னமும் நம்ப முடியவில்லை சாரு தன்னருகே இருப்பது.
தன்னை மன்னித்துவிட்டாளா என்றால் அதற்கு அவனிடத்தில் பதில் இல்லை. நிச்சயம் அவள் தன்னை மறக்கவே இல்லை என்பது, தான் அழைத்ததும் தன்னுடன் வந்துவிட்டாள் என்பதே உணர்த்தியது அவனுக்கு.
உறக்கம் கலைந்து சாரு விழிக்க, அவளையே பார்த்திருந்தவனை கண்டுகொள்ளாது எழுந்தாள் அவள். “சாரு!” என்று இவன் அழைக்க, “விட்டுடுவோம், இப்படியே விட்டிருவோம். ரெண்டு பேரும் நிறைய கஷ்டப்பட்டுடோம், ஒருத்தரை ஒருத்தர் காயப்படுத்திக்கிட்டோம். இதைப்பத்தி இனி பேச வேணாம்.”
“பேசணும் சாரு, கடைசியா ஒரு தரம் பேசணும். அதுக்கு பிறகு நான் எப்பவும் பேச மாட்டேன்.” என்று அவன் சொல்ல, சஷ்டி விழித்து அழுக மகனை தூக்கி சமாதானம் செய்தாள் சாருகேஷி.
சஷ்டியோ விடாது அழுது கொண்டிருக்க, குழைந்தையின் அழுகுரல் கேட்டு வசந்தா வெளியே இருந்து உள்ளே வந்திருந்தார்.
“அவனை என்கிட்ட கொடு.” என்று கையை நீட்டியவரிடம் மறுக்க முடியாது தன் மகனை கொடுக்க, அவனும் தயங்காது பாட்டியிடம் தவ்வினான்.
“நான் பார்த்துக்கிறேன்.” என்று இருவருக்கும் பொதுவாய் சொல்லிவிட்டு, அவர் வெளியே சென்றுவிட்டார். சிறிது நேரம் அவர்கள் சென்ற பாதையை வெறித்தவள், கலைந்திருந்த கேசத்தை சரிசெய்து படுக்கையில் இருந்து எழப்போக, அவளின் கரம் பற்றினான் திருப்புகழ் நீண்ட நாளைக்குப் பிறகு.
அவன் பிடித்திருந்த பிடியை அவள் அழுந்த நோக்க, அவன் மேலும் அழுத்தமாக பிடிக்க, என்னவென்பது போல கேள்வியாய் நோக்கினாள்.
“பேசணும்னு சொன்னேன்.”
“தேவையில்லைன்னு நானும் தான் சொன்னேனே…”
“ப்ளீஸ் சாரு…” என்று அவன் சற்றே இறங்கிய குரலில் கூற, அமைதியானாள்.
“நான் அன்னைக்கு பேசினது சரி, தப்புனு உங்கிட்ட நியாயம் சொல்லப் போறதில்லை. நான் கொஞ்சம் நிதானமா இருந்திருக்கலாம், உன்கிட்ட என்னனு முழுசா கேட்ருக்கலாம், அவசரப்பட்டு பேசிட்டேன்னு தோனுச்சு. அதுக்கான தண்டனையா உங்களை பிரிஞ்சிருக்க நானும் என்னை தயார் படுத்திக்கிட்டேன்.” என்றான் வெறுமையான குரலில்.
“ப்ளீஸ் போதும்…” என்றவளின் முகம் எதுவோ போல் இருக்க, “என்னாச்சும்மா?” என்றான் இவன்.
“அதான் சொன்னேன்ல, பேச வேணாம்னு…”
“அப்போ, எப்போ தான் பேசுறது சாரு?”
“தப்பு நீங்க மட்டும் செய்யலைன்னு அர்த்தம், போதுமா?” என்று எரிந்து விழுந்தாள் அவன் மனைவி.
“தெரியும், எங்கம்மா தானே…” என்றவன், கதவு திறந்திருப்பதைக் கண்டு மெல்ல எழுந்து சென்று கதவடைத்து வந்தான்.
“ஏன், நானும் தான் ஒரு காரணம். யோசிக்கருக்கணும் தானே நானும்? அவங்க தான் பேசுறாங்கன்னா நானும் தானே பதிலுக்கு பேசினேன். அதுவும் தப்பு தானே? அவங்களை நான் தப்பா எதுவும் பேசலை. அது என் மனசாட்சிக்கு தெரியும். ஏன், அது உங்கம்மாவுக்கு கூட நல்லாத் தெரியும்.
நீங்க சொன்னது தான், நான் பேச முன்ன யோசிச்சிருக்கணும். பெரியவங்களை நான் எதிர்த்து பேசி இருக்ககூடாது தானே? பார்க்கப் போனா அவங்களுக்கு நாம சொல்லி தெரிஞ்சிருக்க வேண்டிய விஷயம், அவங்களுக்கு வேற யார் மூலமாவது தெரிஞ்சா எப்படி ரியாக்ட் பண்ணி இருப்பாங்களோ, அப்படி தானே அவங்களும் செய்தாங்க. தப்பெல்லாம் நம்ம பக்கம் வச்சுட்டு நான் அவங்களை பேசியிருக்க கூடாது தானே!”
மனைவி பேசப்பேச அவளைத் தான் கண்கொட்டாது பார்த்திருந்தான் திரு.
“எனக்கு உங்க மேலயும் எந்த கோபமும் இல்லை. என் கோபம் எல்லாம் என் மேல மட்டும் தான். கோபம், இயலாமை எல்லாம் நீங்க பேசினதும், அந்நேரம் எப்படி ரியாக்ட் பண்ணுறதுனு தெரியாம தான் அப்படி செஞ்சிட்டேன்.
என்னமோ… பெரிய தப்பு பண்ண மாதிரி ஒரு உணர்வு. அந்த வீட்டில இருக்க எனக்கு உரிமையும் இல்லைனு தோனுச்சு. ஏற்கனவே உங்கம்மா நான், என் கழுத்துல போட்டிருக்கிறது வெறும் சங்கிலினு சொல்லிட்டாங்க. அவங்க அப்படி நினைச்சிருக்கலாம். ஆனா எனக்கு அது அப்படியில்லை, எங்க தாத்தா முன்னாடியும் மாமா முன்னாடியும் நீங்க எப்போ அதை என் கழுத்துல போட்டீங்களோ, அந்த நிமிஷத்துல இருந்து உங்களை என்னோட சரிபாதியா, என் வாழ்க்கை முழுக்க என் கூட இருக்கப் போற உறவா, என் கணவரா தான் நினைச்சேன், நினைச்சுட்டு இருக்கேன் இந்த நிமிஷம் வரை.”
பேச வேண்டாம் என்று சொன்னவள், அவனை பேசவிடாது அவள் தன் போக்கில், தன் மனபாரங்களை இறக்கி வைத்துக் கொண்டிருந்தாள்.
“எனக்கு தெரியும் சாரு, நானும் அந்த செயினை தாலியா நினைச்சு தான் உன் கழுத்துல போட்டேன். அந்த நினைப்புல தான் அதுக்கான உரிமையை கூட நான் எடுத்துக்கிட்டேன்.” என்றவன் அவளைப் பார்க்க, அவள் பார்வையோ எதையும் பிரதிபலிக்காது வெறுமையாய் இருந்தது.
“சாரு நான் உன்கிட்ட ஒண்ணு கேட்பேன், தப்பா நினைக்க மாட்டியே…?”
“என்ன?” என்றாள் வாய்மொழியாய்.
“இப்போ உன் கழுத்துல…” என்று அவன் முடிக்காது இழுக்க, நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
“அதைப்பத்தி பேச வேணாம்னு நினைக்கிறேன்.” என்றவள், நினைவு வந்தவளாக அங்கிருந்த அவளின் பெட்டியைத் துழாவி நகைப்பெட்டி ஒன்றை எடுத்து வந்தாள்.
திருவிற்கு அது என்னவென்று உணர முடிந்தது. இருந்தும் அவளே பேசட்டும் என்று அமைதியாயிருந்தான். அவள் கையில் எடுத்து வந்ததை அவன் முன் நீட்டினாள். “என்ன?” என்றான்.
“வாங்கிக்கோங்க.” என்று சொல்லி, அவன் உள்ளங்கையில் திணித்தாள் அவன் மனைவி.
“இந்த செயின் தான் நமக்குள்ள பந்தத்தை உருவாக்கினதா நான் நினைக்கல. நம்மோட உறவுக்கு அது ஒரு சாட்சியா தான் நான் நினைக்கிறேன். இதை சங்கிலினு நினைச்சா வெறும் சங்கிலி தான். தாலினு நினைச்சா தாலி. ரொம்ப நாளா நான் இதை தாலியா தான் நினைச்சேன். உங்களோட நினைப்பு தான் எனக்கும், அந்த தாலி கொடுத்த தைரியம் தான் மனைவிக்கான உரிமையை உங்களுக்கு கொடுக்க வைச்சது. ஆனா அதே செயின் வேற மாதிரி தெரிஞ்சு இருக்கு.” என்றவள், நீண்ட பெருமூச்சு ஒன்றை வெளியேற்றினாள்.
“அதுக்கு பிறகு இதை போட்டுக்க எனக்கு விருப்பமில்லை. இனி எனக்கு அது வேணாம், இப்பவும், எப்பவும்…” என்றாள் அழுத்தம் திருத்தமாய்.
“ஏன்னு தெரிஞ்சுக்கலாமா?” என்றான் கேள்வியாய்.
“தேவையில்லைனு நினைக்கிறேன், எனக்கும் சொல்ல விருப்பமில்லைனு வச்சுக்கோங்களேன்.” என்றாள் உறுதியான குரலில்.
அவளுக்கு வசந்தா பேசியதை இப்போதும் அவனிடத்தில் சொல்ல விருப்பமில்லை. ஒருவேளை அங்கே அவன் என்னவாகிற்று என்று கேட்டிருந்தால், சொல்லியிருப்பாளோ என்னவோ! இப்போது அதைப்பற்றி பேச அவளுக்கு துளியும் எண்ணமில்லை.
என்ன காரணம் என்று மனைவி சொல்லாத போதும், அதற்கு பின்னே அவன் தாய் இருக்கிறார் என்று மட்டும் புரிந்தது அவனுக்கு.
“சாரு!” என்றழைத்தான் மெல்ல.
“நாம் ரெண்டு பேருமே தான் காரணம் இந்த பிரிவுக்கு. நீங்க மட்டும் தான் காரணம்னோ, வேற யாருமோ தான் காரணம்னோ நான் எப்பவும் நினைக்க மாட்டேன். ஒரு அம்மாவோட நிலை என்னனு எனக்கும் புரியும். நானும் ஒரு அம்மா தானே இப்போ?
அன்னைக்கு ஒரு கோபம், விரக்தி, எனக்குன்னு யாருமில்லைனு ஒரு எண்ணம். கூடவே உரிமையில்லாத வீடுனு தோனுச்சு, கிளம்பிட்டேன்.”
“சாரும்மா ப்ளீஸ்…” என்றான், அவள் வேதனை குரல் புரிந்தவனாய். அவள் கரத்தின் மீது தன் கரம் வைத்து அவன் அழுத்திக் கொள்ள அமைதியாக இருந்தாள்.
“அம்மாவுக்கு பேச அவங்க பசங்க இருக்காங்க, பிள்ளைக்கு பேச அம்மா இருக்காங்க. எனக்கு அந்த நேரம் பேச யாருமில்லை தானே? அதான், எனக்கு தாங்க முடியலை.” என்று சொல்லும் போதே, தொண்டை அடைத்தது அவளுக்கு.
அவனுக்கு முதுகு காட்டிக் கொண்டு அமர்ந்தவள் மெல்ல விசும்ப, அவளின் தோளின் மீது கரம் வைத்தான் புகழ். அதில் சட்டென்று தன்னை மீட்டுக் கொண்டவள், “அன்னைக்கு என்னோட சூழ்நிலையை சொன்னேன். அன்னைக்கு எனக்குனு யாருமில்லைனு தான் தோனுச்சு.
வெளிய போன பிறகுதான் தெரியும், எனக்கே எனக்கான உறவு எனக்குள்ள வளர்ந்திட்டு இருக்குன்னு. வழக்கமா எனக்கு பீரியட்ஸ் லேட்டா தானே வரும், அந்த நினைப்புல இருந்த எனக்கு, எனக்குள்ள உயிர் இருக்குனு தெரிஞ்சது.
திரும்ப அதே வீட்டுக்கு வர்றதுக்கு என்னோட தன்மானம் இடம் கொடுக்கலை. கூடவே அவமானம் வேற பட்டுட்டேனே, தாலியே இல்லாம பிள்ளைக்கு தாயானு கேட்டுட்டா, அதுக்கு பிறகு நான் உயிர் வாழ்ந்திருக்க மாட்டேன். எல்லாம் யோசிச்சு தான் தனியாவே இருக்க முடிவு பண்ணேன்.
ஆனா ஒரு அம்மாவுக்கு நெறைய கடமை இருக்கே. பிள்ளை வளர வளர கடமை தான் முன்னாடி வந்து நின்னுச்சு. என் பிள்ளையை அவனோட அப்பாகிட்ட இருந்து பிரிக்க, எனக்கு எந்த அதிகாரமும் இல்லை தானே?
அந்த ஒரு காரணம் தான், நீங்க கூப்பிட்டதும் நான் உடனே வந்தது.” என்றவளை என்ன செய்தால் தகும் என்று பார்த்தவன், விருட்டென்று எழுந்து வெளியேறிவிட்டான். அவனுக்கு கோபம், அவள் தன்னை எங்குமே தேடவில்லை என்பதில். அவள் சொன்ன காரணம், அவளுக்கு வேண்டும் என்றால் சரி. ஆனால், அவனுக்கு அப்படியில்லையே!
பிள்ளையை காரணம் காட்டித் தான் அழைத்து வந்திருந்தான். தானாய் அவளை அழைத்தால் வந்திருப்பாளா என்பது சந்தேகமே, அதனால் மட்டுமே அவனும் பிள்ளை என்ற காரணம் சொன்னான். அவள் பேசியது அவனுக்கு கோபத்தை வரவழைத்திருக்க, அதனால் தான் அங்கிருந்து கிளம்பிவிட்டான் ஒன்றும் சொல்லாது.
‘ஏன், நான் என்ன பேசிட்டேன்னு இப்படி போறார்? நீ எனக்கு முக்கியம்னு இவரும் தானே ஒரு வார்த்தை சொல்லலை. இதுல கோபம் மட்டும் எப்படி வரும் இவருக்கு?’ என்று மனதிற்குள்ளாக பொருமினாள் அவன் மனைவி.
சிவகுருவிற்கு இப்போது தான் நிம்மதியே மீண்டு(ம்) வந்திருந்தது. பேரனை எப்போதும் தூக்கி திரியும் அவர் மனைவி, மகன், மருமகள் என்று வீடே நிறைந்திருப்பதாக உணர்ந்தார் அம்மனிதர்.
குடும்பத்துடன் ஒருமுறை திருத்தணிக்கு சென்று வர வேண்டும் என்று, வேண்டுதல் வைத்திருந்தார் அவர் முருகனிடம். சாரு மீண்டும் வீட்டிற்கு வந்தால் குடும்பத்துடன் யாத்திரை வருவதாக அப்போதே வேண்டியிருந்தார்.
வீட்டில் அனைத்தும் சரியானது போல இருந்தாலும், இன்னமும் முழுதாக சரியாகவில்லை என்பதே உண்மை. ஆம், சிவகுரு இன்னமும் மனைவியிடத்தில் சகஜ பேச்சை துவக்கியிருக்கவில்லை.
வசந்தா பேசியது இப்போதும் நெருஞ்சி முள்ளாய் உறுத்திக் கொண்டேதான் இருந்தது அவருக்கு. இந்த நிலையில் குடும்பத்துடன் சென்று எப்படி வேண்டுதல் நிறைவேற்றுவது என்று தெரியவில்லை. அதனால் அவர் மட்டுமாக கிளம்ப முடிவெடுத்தார்.
இரவு உணவின் போது அனைவருமே உணவு மேஜையில் இருந்தனர். வசந்தா தான் சஷ்டிக்கு உணவூட்டிக் கொண்டிருந்தார்.
“நான் நாளைக்கு திருத்தணிக்கு போகலாம்னு இருக்கேன். அப்படியே அறுபடை வீட்டையும் பார்க்கிறதா இருக்கேன்.” என்று பொதுவாக சொன்னார் அவர்.
பேரனுக்கு உணவூட்டுவதை ஒரு நொடி நிறுத்திவிட்டார் வசந்தா. பின் தன் குரலை மெல்ல செருமிக் கொண்டவர், “எனக்கும் ஒரு வேண்டுதல் இருக்கு. ஒ… ஒரு ரெண்டு, மூணு நாள் கழிச்சு எல்லாருமே சேர்ந்து போகலாமே புகழ்.” என்ற வசந்தாவின் பேச்சு, பொதுவாக ஆரம்பித்து மகனிடம் முடித்தாலும் பார்வை மொத்தமும் சிவகுருவின் மீதே.
மனைவியின் பேச்சு ஆச்சரியம் தான் சிவகுருவிற்கு. ஏற்கனவே மனைவி, பேரனை தூக்கி கொஞ்சியதிலும், மருமகளை அமைதியாய் எதிர்கொண்டதிலும், அவரை ஆச்சரியப்படுத்தி இருந்தார். இப்போது அனவைரும் செல்வோம் என்று சொன்னது, மிகப்பெரிய உலக அதிசயம் தான் அவரை பொறுத்தவரை.
“உனக்கு ஓகே தானே?” என்று மருமகளைப் பார்த்து அவர் கேட்க, ‘இன்னைக்கு என்ன இவ்வளவு ஷாக்!’ என்றுதான் பார்த்து இருந்தனர் தந்தையும் மகனும்.
வசந்தா எதற்காக கேட்கிறார் என்று உணர்ந்தவளாக, “எனக்கு ஓகே.” என்றாள் மருமகள்.
***
அதிகாலை பொழுதிலேயே அக்குடும்பம் கிளம்பி இருந்தது திருத்தணியை நோக்கி. ஆறு மணிக்குள் அங்கிருக்க வேண்டும் என்பதால், நான்கு மணிக்கே கிளம்பி இருந்தனர் அனைவரும். இரண்டு நாட்களாய் வசந்தா தனியே வெளியே செல்வதும் வருவதுமாய் இருக்க, என்னவென்று யோசித்தாலும் யாரும் எதுவும் கேட்கவில்லை.
திருதான் காரை ஓட்டிக்கொண்டிருந்தான். அவனுக்கு அருகில் சிவகுரு அமர்ந்திருந்தார். செல்வின் தானும் வருவதாக சொல்லியிருக்க, அவனை நேரே வரச்சொல்லி இவர்கள் குடும்பமாய் கிளம்பிவிட்டனர்.
***