அகானா – 97
குரங்கணி மலையை விட்டு கீழிறங்கிய பிறகும், அகானாவின் மனம் அமைதியடையவில்லை.
வேலாயுதம் கைது செய்யப்பட்டிருந்தான்.
தங்கராஜ் மீது நடவடிக்கை தொடங்கப்பட்டிருந்தது.
கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்கப்பட்டிருந்தனர்.
ஆனால்… அவள் தேடிக்கொண்டிருந்த சௌந்தர் இன்னும் கிடைக்கவில்லை.
அடுத்த நாள் காலை.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்.
மேசை முழுவதும் கோப்புகள் பரவிக் கிடந்தன.
குறுங்குன்றம் ரெய்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், கணக்கு புத்தகங்கள், நில ஆவணங்கள் என அனைத்தையும் அகானாவும் உதய்யும் ஆராய்ந்து கொண்டிருந்தனர்.
அப்போது… “மேம்!” என்று அவசரமாக அறைக்குள் நுழைந்தார் ஒரு SI.
“என்ன குமார்?” என்றான் உதய்.
“பெங்களூர்ல நம்ம டீம் அனுப்பின அப்டேட் வந்திருக்கு.”
அகானா உடனே நிமிர்ந்தாள்.
“சொல்லுங்க.” என்றாள் அகானா இப்போது
ஹேமா ஜூன் பதினெட்டாம் தேதி போகல மேம், அதுக்கு முன்னாடியே, அதாவது நேத்தே போயிருக்காங்க, அப்படி அவங்க எங்க போனாங்கன்னு கண்டுபிடிச்சுட்டாங்க.”
“எங்க?”
“பெங்களூர் சிட்டி அவுட்ஸ்கர்ட்ஸ்ல இருக்குற ஒரு பிரைவேட் லாக்கர் சென்டர்.”
அகானாவின் கண்கள் கூர்மையடைந்தன.
“அங்க என்ன பண்ணினாங்க?”
“ஒரு கவர் வாங்கிட்டு போயிருக்காங்க.”
“யார் அனுப்பினது?”
“அதுதான் தெரியல மேம்.”
அந்த SI யிடமிருந்த பென் ட்ரைவை வாங்கி தன்னுடைய லேபில் மாட்டியதும், அந்த SI வெளியேறிவிட்டான்.
உதய் லேப்டாப்பை அகானாவிடம் திருப்பிக் காட்டினான்.
CCTV காட்சி ஓட ஆரம்பித்தது..
கருப்பு நிற சல்வாரில் இருந்த ஹேமா, ஒரு சிறிய லாக்கரிலிருந்து கவரை எடுத்துக்கொண்டு வெளியேறிக் கொண்டிருந்தாள்.
அகானா சில விநாடிகள் அமைதியாகப் பார்த்தாள். பிறகு திடீரென… வீடியோவை நிறுத்துங்க.” என்றாள்.
“மேம்?”
“ஜூம் பண்ணுங்க.”
உதய் வீடியோவை பெரிதாக்கினான். கவரின் ஓரத்தில் சிறிய ஸ்டிக்கர் ஒன்று ஒட்டப்பட்டிருந்தது. அதில்… KK – 17 என்று எழுதப்பட்டிருந்தது.
“என்ன மேம்?”
அகானாவின் பார்வை உறைந்தது. “இது சாதாரண கோடுவேர்ட் மாதிரி இல்ல.”
“அப்படின்னா?”
“KK…” அவள் மெதுவாக எழுந்து நின்றாள். “கருங்குன்றம்.”
உதயின் முகத்தில் அதிர்ச்சி பரவியது. “வாட்?”
“நேத்து நாம ரெய்டு பண்ண இடம்.” அறைக்குள் சில நொடிகள் அமைதி நிலவியது.
“அப்படின்னா சௌந்தர்…”
“அங்கதான் இருந்திருக்கணும்.” அகானாவின் குரல் உறுதியாக ஒலித்தது. “ஆனா இப்போ இல்ல.”
“எப்படி மேம்?”
“வேலாயுதம் கைது ஆகுறதுக்கு முன்னாடியே யாரோ அவனை வேற இடத்துக்கு மாற்றியிருக்காங்க.”
உதய் யோசனையில் ஆழ்ந்தான். “யாரு?”
“அதுதான் நாம கண்டுபிடிக்கணும்.”
அதே நேரத்தில்…
அலுவலக கதவு மீண்டும் திறக்கப்பட்டது. சிறப்புப் படை அதிகாரி ஒருவர் உள்ளே வந்தார்.
“மேம்… குரங்கணி எஸ்டேட்ல கைப்பற்றிய கணக்கு வழக்கு புத்தகங்கள்.”
“கொடுங்க.” அகானா அவற்றைப் புரட்டிப் பார்த்தாள். ஒரு இடத்தில் அவளது விரல்கள் நின்றுவிட்டன. “உதய்… இதைப் பாருங்க.”
உதய் அருகே வந்தான். ஒரு பக்கத்தில் தொடர்ந்து மாதந்தோறும் குறிப்பிடப்பட்டிருந்த செலவு கணக்கு.
KK Camp Maintenance
KK Medical Expenses
KK Security
உதயின் இதயம் ஒரு நொடி நின்றது போல ஆனது. “மேம்…”
“யாரையோ பல மாதங்களா உயிரோட வச்சிருக்காங்க.”
“சௌந்தரா?”
“யெஸ்.” அகானாவின் கண்களில் வெற்றியின் ஒளி மின்னியது. “நாம சரியான பாதையிலதான் இருக்கோம்.” ஆனால்… அந்த நம்பிக்கை சில நொடிகளே நீடித்தது.
“மேம்…” சட்டென உதயின் குரல் பரபரப்பாக வந்து விழுந்தது.
அகானா திரும்பிப் பார்த்தாள்.
“இந்த லொகேஷனை பாருங்க.”
திரையில் காட்டுப்பகுதியின் ஒரு GPS பாயிண்ட் ஒளிர்ந்தது.
“என்ன?” என்று கேட்டாள்.
“வேலாயுதத்தோட ஆளுங்க அடிக்கடி போயிருக்குற இடம்.”
சில நொடிகள் திரையைப் பார்த்த அகானாவின் முகம் இறுகியது.
“டீம் ரெடி பண்ணுங்க.”
“மேம்…?”
“சௌந்தர் அங்க இருக்க வாய்ப்பு இருக்கு.”
**
இங்கு அடர்ந்த காட்டின் நடுவே…
சிறிய மரக்குடிசை.
சௌந்தர் தரையில் அமர்ந்திருந்தான்.
கைகளில் கட்டுகள். முகத்தில் காயங்கள்.
வெளியே வாகனம் வேகமாக வந்து நிற்கும் சத்தம் கேட்ட, அடுத்த நொடி கதவு திறந்தது.
முன்பு வந்த அதே மனிதன் உள்ளே வந்தான். அவன் முகத்தில் பதற்றம் தெரிந்தது.
“ப்ளீஸ்?” என்று பலவீனமான குரலில் கேட்டான் சௌந்தர்.
பதில் சொல்லாமல் மொபைலை எடுத்தவன் யாரோடோ பேச ஆரம்பித்தான்.
“சார்… வேலாயுதம் மாட்டிட்டார்.”
மறுமுனையில் இருந்த குரல் சில விநாடிகள் பேசிக் கொண்டிருந்தது.
“ஆமா சார்…”
“அகானா நம்ம கிட்ட நெருங்கிட்டாங்க.” சௌந்தர் அதிர்ச்சியுடன் நிமிர்ந்தான்.
“இவனை இங்க வச்சிருக்கிறது இனிமே சேஃப் இல்ல சார்.”
சில நொடிகள் அமைதி. பிறகு… மறுமுனையில் இருந்த குரல் தெளிவாக ஒலித்தது.
“அப்போ முடிச்சிடு.”
அதைக் கேட்ட நொடி… சௌந்தரின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன. உடம்பே நடுங்கியது.
“இல்ல…” அவன் உதடுகள் தன்னையும் அறியாமல் முணுமுணுத்தன.
பிறகு… அவன்சௌந்தரை நோக்கி திரும்பினான். அவனது கையில் துப்பாக்கி இருந்தது. காட்டின் இருள் இன்னும் அடர்ந்தது. சௌந்தரின்
“இல்ல… ப்ளீஸ்…” என்றான் பலவீனமாக.
ஆனால் அவனை நோக்கி நெருங்கிய மனிதன் துப்பாக்கியை உயர்த்திய அடுத்த நொடி…
டூம்!
குடிசையின் கதவு உடைந்து விழுந்தது.
*********
மேற்கு தொடர்ச்சி மலையின் அடர்ந்த காட்டுப் பகுதி.
அகானா, உதய் மற்றும் சிறப்புப் படையினர் அந்த லொகேஷனை நோக்கி நகர்ந்தனர்.
சிறிது தூரம் சென்றதும், மரங்களுக்கிடையே மறைந்திருந்த பழைய மரக்குடிசை ஒன்று அவர்களின் கண்களில் பட்டது.
“மேம்… அதுதான்.”
அகானா கையசைத்தாள்.
அடுத்த நொடி…
படையினர் நான்கு பக்கமும் சுற்றி வளைத்தனர்.
“போலீஸ்! யாரும் தப்பிக்க முயற்சி பண்ணாதீங்க!”
குடிசைக்குள் இருந்தவர்கள் பதறினர்.
ஒருவன் துப்பாக்கியை எடுக்க முயன்றான்.
அடுத்த சில நிமிடங்கள் பரபரப்பாகக் கடந்தன.
சிறிய மோதலுக்குப் பிறகு அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
குடிசைக்குள் ஓடிய உதய் திடீரென நின்றுவிட்டான்.
“மேம்…”
அகானாவும் உள்ளே நுழைந்தாள்.
ஒரு மூலையில்… காயங்களுடன், பலவீனமான நிலையில் அமர்ந்திருந்தான் சௌந்தர்.
அவனைப் பார்த்ததும் உதயின் கண்கள் கலங்கின. “சௌந்தர்…” பல மாதங்களுக்குப் பிறகு நண்பனை உயிருடன் பார்த்த நிம்மதி அவன் முகத்தில் தெரிந்தது.
சௌந்தர் மெதுவாக எழ முயன்றான்.
“மேம்…”
“யூ ஆர் சேஃப்.”
அந்த வார்த்தையைக் கேட்டதும் அவன் கண்களில் கண்ணீர் தேங்கியது.
சில மணி நேரங்கள் கழித்து…
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்.
மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு சௌந்தர் விசாரணை அறையில் அமர்ந்திருந்தான்.
அகானா, உதய், விமல் மூவரும் எதிரே இருந்தனர்.
“என்ன நடந்துச்சு சௌந்தர்?” என்று கேட்டாள் அகானா.
சில நொடிகள் அமைதியாக இருந்தவன் மெதுவாகப் பேச ஆரம்பித்தான். “நான் கொத்தடிமை விஷயத்தை மட்டும் விசாரிக்கல மேம்…”
அறை அமைதியானது.
“அங்க இன்னொரு பெரிய விஷயம் நடந்துட்டு இருந்துச்சு.”
அகானாவின் பார்வை கூர்மையானது.
“என்ன?”
“சின்ன குழந்தைகளை கடத்தி வெளிநாட்டுக்கு அனுப்புறது மட்டுமில்ல,” என்று மேலும் சிலதை கூற, கேட்டவர்களுக்கோ அதிர்ச்சி.
“அந்த முழு ஆபரேஷனுக்கு பின்னாடி வேலாயுதம் மட்டும் இல்ல.”
“யார்?” என்று கேட்டாள் அகானா.
சௌந்தரின் முகம் இறுகியது. “ஸ்ரீகாந்த்.”
அறை முழுவதும் அமைதி சூழ்ந்தது.
விமல் மெதுவாக ஒரு பென் டிரைவை மேசை மீது வைத்தான்.
“மேம்… நானும் இதே பெயரைத்தான் ட்ரேஸ் பண்ணியிருக்கேன்.”
“சௌந்தர் நாளைக்கு நீங்க கோர்ட்ல இதைத்தான் சொல்லனும்..” என்றதோடு, அவனுக்கு பாதுகாப்பான ஒரு இடத்திலும் தங்க வைத்தாள்.
******
அடுத்த நாள் காலை…
மதுரை உயர்நீதிமன்ற வளாகம். டாக்டர் ரவி வழக்கு விசாரணைக்கு வந்திருந்தது.
தங்கராஜின் தரப்பு வழக்கறிஞர்கள், குற்றத்தை டாக்டர் ரவி மீதே திருப்ப முயன்று கொண்டிருந்தனர்.
இருதரப்பு வழக்கறிஞர்களுக்கும் மிக காரசாரமாக வாக்குவாதங்கள் போய்க்கொண்டிருந்த நேரம், அந்த அறைக்குள் நுழைந்தாள் அகானா.
அவளைப் பார்த்ததும் நீதிபதி, புருவம் சுருக்கி யோசித்து பின் வரவேற்பாக தலையசைக்க, அதற்குள் ஒருவர் உதய் கொடுத்த ஆதாரங்களை நீதிபதியிடம் வழங்க, அந்த நேரத்தில் அரசு தரப்பு சார்பாக புதிய ஆதாரங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட, அந்த வழக்கின் விசாரனை இப்போது சூடுபிடிக்க ஆரம்பித்தது.
இப்போது அகானா உதயைத் திரும்பி பார்க்க, அவனின் கண்ணசைவில் இருவர் கைத்தாங்கலாக சௌந்தரை அழைத்து வந்தனர்.
இப்போது முழு நீதிமன்றமும் பரபரப்பானது.
“மை லார்டு… இந்த வழக்கில் முக்கிய சாட்சியாளர் உயிருடன் இருக்கிறார்.” அரசு தரப்பு வழக்கறிஞரின் குரல் நீதிமன்றத்தில் எதிரொலித்தது.
சௌந்தர் சாட்சிக் கூண்டில் ஏற முற்பட, அவருக்கு கீழேயே ஒரு நாற்காலியில் அமர்ந்து பேச அனுமதிக்கப்பட்டது.
.
“நான் முதல்ல அங்க இருக்கிற மக்களை காப்பத்தனும்னு நினச்சிதான் போனேன். ஆனா அங்க இருக்குற மக்கல் படுற துன்பங்கள் ஒருபக்கம் என்னை வேதனை படுத்தினாலும், அதையும் தாண்டி அங்க ஏதோ தப்பு நடக்கிறதா எனக்கு பட்டுச்சு. அதனால அவங்க ஆட்கள் மாதிரியே இருந்து அங்க இருக்குற ஆதாரங்களை சேகரிக்க ஆரம்பிச்சேன். கலெக்ட் பண்ண எவிடெண்ஸ்ல பாதி என் மனைவியோட ஆஃபிஸ் அட்ரஸ்க்கு கொரியர் பண்ணிருந்தேன், மீதியை அனுப்ப நினைக்கும் போது தான் இவங்ககிட்ட மாட்டிக்கிட்டே. என்னை கடத்தி வைத்திருந்தது வேலாயுதத்தின் ஆட்கள்.” என பொறுமையாக, தன் வலியையும் மீறி கூறினான் சௌந்தர்.
“அப்படி அங்க என்ன இல்லீகல் பிசினஸ் நடந்தது..” நீதிபதியின் கேல்வி சௌந்தரை நிமிர்ந்து அமரச் செய்தது.
“ஏலாக்காய், காபி செடிகளுக்கு நடுவுல கஞ்சா செடிகளை பயிரிடுறாங்க. அதை தமிழ்னாட்டுக்குள்ள கொண்டுவராம, கேரளா பார்டர்ல இருந்து கடல் மூலமா வெளிநாட்டுக்கும், வெளிமாநிலங்களுக்கும் சப்ளை பண்றாங்க. அங்க இருக்குற மக்களுக்கு மருத்துவ உதவிகள் கூட கொடுக்குறதில்ல, குழந்தைகள் முதல் பெரியவங்க வரை எல்லாருக்கும், ‘இதை குடிச்சா வலி தெரியாதுனு’ கஞ்சா சாரயம்னு போதையைக் கொடுத்து அவங்க வாழ்க்கையை மொத்தமா முடிச்சிட்டாங்க..”
“அதுக்கான ஆதாரங்கள் இருக்கா?” மீண்டும் நீதிபதி கேட்க, சௌந்தர் அகானாவைப் பார்க்க, அவளின் பார்வையில் உதய் தன்னிடமிருந்த ஆதாரங்களை நீதிபதியிடம் கொடுத்தான்.
“அது மட்டுமில்ல.. ** இந்த மெடிகல் காலேஜ்ல இருந்து குழந்தைகள் காணமல் போனதுக்கும், டாக்டர் ரவிக்கும், அவங்க மனைவிக்கும் எந்த சம்மந்தமும் இல்ல. இன்குபேட்டர் இன்ஸ்ட்ருமென்ட்ஸ்க்கான ஆர்டர்ல தான் மைதிலி மேம் சைன் பண்ணிருக்காங்க. அதை இவங்க பொய் கைய்யெழுத்து போட்டு அவங்களுக்கு யூஸ் பண்ணிக்கிட்டாங்க, டாக்டர் ரவியையும் இதுல மாட்டிவிட்டாங்க. இந்த முழு திட்டத்துக்கும் பின்னால் இருந்தது… வேலயுதமோ, தங்கராஜோ மட்டும் இல்ல,” என்று கூறியவன் நேராக ஸ்ரீகாந்தைப் பார்த்தான்.
“ஸ்ரீகாந்த். ஸ்ரீகாந்த் தங்கராஜ் தான்.. இத்தனை திட்டத்திற்குமான மூளை, அவன் மட்டும் தான்.” அந்த நொடி நீதிமன்றம் முழுவதும் அதிர்ச்சியில் உறைந்தது.
அகானா சேகரித்திருந்த ஆவணங்கள்…
சௌந்தரின் சாட்சி…
துரைப்பாண்டி கொடுத்த தகவல்கள்…
விமல் சேகரித்த டிஜிட்டல் ஆதாரங்கள்…
எல்லாம் ஒன்றாக இணைந்தபோது உண்மை முழுமையாக வெளிச்சத்துக்கு வந்தது.
டாக்டர் ரவியை சிக்க வைக்கவே திட்டமிட்டு உருவாக்கப்பட்ட சதி அது. மைதிலியின் பெயரையும் பயன்படுத்த முயன்றிருந்தனர்.
ஆனால்… அகானா முன்கூட்டியே அனைத்து ஆதாரங்களையும் பாதுகாத்திருந்தாள்.
சில நிமிடங்கள் கழித்து… நீதிபதி தீர்ப்பை வாசித்தார்.
“டாக்டர் ரவி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை. எனவே அவர் விடுவிக்கப்படுகிறார்.” டாக்டர் ரவி அமைதியாக கண்களை மூடினார். மைதிலியின் கண்களில் கண்ணீர் வழிந்தது.
அவரருகில் அமர்ந்திருந்த ஆகன், பல நாட்களாக சுமந்திருந்த பாரத்தை இறக்கி வைத்தவன் போல ஆழமாக மூச்சை இழுத்து விட்டான்.
அந்த காட்சியை பார்த்த அகானாவின் முகத்தில் எந்த உணர்வும் இல்லை.
அவர் அவளது தந்தை. ஆனால்… அவளது வாழ்க்கையில் தந்தையாக வாழ தகுதியில்லாதவர்.
இன்று அவள் காப்பாற்றியது தன் தந்தையை அல்ல…
ஒரு நிரபராதியை. அதை இருந்த குற்றவுணர்ச்சி மெல்ல மெல்ல விலகும் உணர்வு அவளுக்கு.
“ஸ்ரீகாந்த் தங்கராஜ்…” நீதிபதியின் குரல் மீண்டும் ஒலித்தது.
“உங்கள்மீது உள்ள ஆதாரங்களின் அடிப்படையில் கைது நடவடிக்கைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்குகிறது.”
அடுத்த நொடி… போலீசார் ஸ்ரீகாந்தை சுற்றி வளைத்தனர்.
“நோ! இது பொய்!” என்று அவன் கத்தினான். ஆனால் சட்டம் அவனுக்காக நிற்கவில்லை. அவனது கைகளில் விலங்கு பூட்டப்பட்டது.
நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே… அகானா தனியாக நின்றிருந்தாள். அப்போது அவளருகே வந்தான் ஆகன்.
“முடிஞ்சிடுச்சு…” என்றான் மெதுவாக.
அகானா ஆழமாக மூச்சை இழுத்தாள். பின் “ஆமா… ஒரு அத்தியாயம் முடிஞ்சிடுச்சு.” என்றாள்.
ஆகன் அவளைப் பார்த்தான். அந்த பார்வை அவனுக்கு நன்றி சொல்லியது.. தன்னவளைப் பெருமையாக பார்த்தது. என் அம்முவால் யாரையும் கஷ்டப்படுத்த முடியாது என்ற திமிரைக் கூட கொடுத்தது.
1 comment
ஆமா..! அம்மு தன் கடமையை அழகா செஞ்சு முடிச்சிட்டா.
😀😀😀
CRVS (or) CRVS 2797