தளிர் 33
அடுத்த நாள் காலையில் நிசப்தி கண் விழிக்கும் போது கண்டது, அவளையேப் பார்த்துக் கொண்டு யோசனையில் அமர்ந்திருந்த விக்ரமைத்தான். பட்டென்று எழுந்து அமர்ந்தவள் சுற்றும் முற்றும் அவசரமாகப் பார்த்துவிட்டு, விக்ரமை அரண்டு போய் பார்த்தாள்.
அவளால் விக்ரம் தான் தன்னைக் காப்பாற்றினான் என்று நம்பவே முடியவில்லை. அவனும்தானே அவளைக் கடத்தியிருந்தான், அப்படியிருக்க எப்படி அவன்மேல் நம்பிக்கை வரும்? அவளது பார்வையை உணர்ந்தவனுக்கு தன் மேலே கோபம் வந்தது. ஒரு பெண் தன்னைக் கண்டு பயப்படுகிறாள் என்பது அல்ல ஆண்மை, தன்னைப் பார்த்து பாதுகாப்பாக உணர வேண்டும் அதுவே அவனது ஆண்மை.
இப்போது தான் ஒரு ஆண் என்று வெளியில் சொல்லவே வெறுத்தான். நிசப்தி இன்னும் தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தவன், “யூ ஆர் சேஃப் ஜோன். டோன்ட் பானிக்.” என்றாலும் அவள் பார்வை மாறவில்லை. அவள் தன்னை நம்பவில்லை என்பதை ஒரு வலியுடன் உணர்ந்தான். எப்படி நம்பிக்கை வரும் நீ செய்த வேலை அப்படி என, மனசாட்சி காறித் துப்ப அதை லூசில் விட்டான்.
இப்போது நிசப்தியின் தந்தை எழுந்து வருவதற்குள் சிலவற்றைப் பேசி முடிக்க வேண்டிய கட்டாயம் அவனுக்கு. அவளின் அரண்ட பார்வையை ஒதுக்கிவிட்டு அருகில் அமர்ந்து, பெண்ணவளின் கைகளை எடுத்து தனக்குள் பாதுகாப்பாக வைத்துக் கொண்டான்.
நிசப்தியின் அரண்ட பார்வை அதிர்ச்சியாகி பின் ஆராய்ச்சியாக மாறியும், அவன் பேச ஆரம்பிக்கவில்லை. அமைதியாக கழிந்த சில நொடிகளுக்குப் பிறகு, “சாரி… சாரி… வெரி சாரி. உன்னோட இந்த நிலைக்கு நான் மட்டும்தான் காரணம்னு எனக்குத் தெரியும். எக்ஸ்ட்ரீம்லி சாரி… இதுவரை எப்படி போயிருந்தாலும் ஓகே, ஆனா இனி தப்பா போக நான் விடமாட்டேன். நான் ஆரம்பிச்சு வச்ச இந்தப் பிரச்சனையை நானே முடிச்சு வைக்கிறேன். ப்ளீஸ் என்னை நம்பு.” என்றவனின் கெஞ்சலில், இதுவரை இப்படி யாரிடமும் அவன் பேசியதில்லை என்று அவளுக்குப் புரிந்தது. ஆனாலும் நம்புவதற்குத்தான் அவள் மனம் இடம் கொடுக்கவில்லை.
“அப்பா, அப்பாவுக்கு இதெல்லாம்…” எனத் தெளிவில்லாமல் பேச, “எஸ், அதுதான் நானும் பேசணும்னு வந்தேன். அங்கிள் இன்னும் எழுந்துக்கல. அவர் வர்றதுக்குள்ள, சிலதை பேசி முடிச்சிடலாம்னு நினைக்கிறேன். பயமோ, பதட்டமோ, கோபமோ, இவன்கிட்ட ஏன் சொல்லணும் என்ற எந்த எண்ணமும் இல்லாம, நேத்து என்ன நடந்ததுனு சொல்லணும் ப்ளீஸ். அப்போதான் அடுத்து என்ன செய்யலாம்னு எனக்கும் ஒரு ஐடியா வரும்.” என்றவனிடம் எதைச் சொல்ல எனத் தெரியவில்லை.
தனக்கு ஏற்பட்ட அவமானத்தையும் அசிங்கத்தையும் வெளியில் சொல்லும் அளவிற்கு, அவள் தன்மானம் இடம் கொடுக்கவில்லை. அமைதியாக அமர்ந்திருந்தவளைப் பார்த்தவன், “விக்னேஷ் இப்போ உயிரோட இல்லை. என்ன நடந்ததுனு தெரிஞ்சாதான் அடுத்து என்ன பண்ணனு யோசிக்க முடியும்.” என்றான் சற்று சலிப்பாக.
‘என்ன செத்துட்டானா?’ அதிர்ச்சியில் அவள் விழிகள் விரிந்து, உடலெல்லாம் மெல்ல நடுங்கத் தொடங்கியது. அவள் நிலையை உணர்ந்தவன் வேகமாக அவள் அருகில் நெருங்கி, தோளோடணைத்துக் கொண்டு முதுகை வருடி விட்டான்.
“அவன் செத்துட்டான், அதுக்கு நீ காரணம் இல்ல புரியுதா? உனக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்ல. அவன் ஒரு ஆக்சிடென்ட்ல செத்துட்டான்.” என சொல்ல,
“இல்ல, இல்ல… நான்தான் அவனைக் கொன்னுட்டேன், நான்தான் இந்தக் கையால அவன் மண்டைல அடிச்சேன். செத்துட்டானா? நான் கொலை செய்துட்டேனா? என்னை போலிஸ் பிடிக்குமா? அப்பா எப்படி தாங்குவாங்க. ஐயோ…” எனக் கதறியவளை சமாளிப்பது பெரும்பாடாகிப் போனது விக்ரமிற்கு.
அதோடு அடுத்த அறையில் உறக்கத்தில் இருக்கும் வேணுகோபால், இவளின் சத்தத்தில் எழுந்து வந்துவிட்டால் என்ன செய்வது, என்றொரு பதட்டம் வேறு. அவளை உலுக்கி எடுத்தவன், “நான் சொல்றது உன் மரமண்டைல ஏறுச்சா இல்லையா? அவன் செத்துட்டான், அதுக்கும் உனக்கும் எந்த சம்மந்தமும் இல்ல புரியுதா?” என அதட்டலாகச் சொன்னவனுக்கு அதிர்ந்து, ‘சரி’ என்பது போல பயத்துடன் தலையை அசைத்தாள் நிசப்தி.
“தட்ஸ் குட்!” என்றவன், “இந்த நியூஸ் நீ, நான், பார்க்கவி தவிர யாருக்கும் தெரியாது, தெரியவும் கூடாது. உன் ஃப்ரண்ட், உன் அண்ணன் இப்படி யாருக்கும் எப்பவும் சொல்லாத, சொல்லவும் கூடாது.” எனக் கட்டளையாகச் சொன்னவன், வேணுகோபாலிடம் நேற்றிரவு சொல்லியிருக்கும் காரணத்தைக் கூறி, “அங்கிள்கிட்ட இப்படித்தான் சொல்லியிருக்கோம், நீயும் அப்படியே சொல்லி மெயின்டென் பண்ணு. அன்ட் எங்கிட்ட உன்னால சொல்ல முடியாம போகலாம், ஆனா கவிக்கிட்ட சொல்ல முடியும்ல, அவக்கிட்டயாச்சும் ஷேர் பண்ணு.” என்றவன், “நீங்க கொஞ்ச நாள் ஊருக்குப் போறீங்களா? அங்கிள்காகத்தான் சொல்றேன். கண்டிப்பா உங்களுக்கு ஒரு மாற்றம் வேணும்.” எனவும்,
“ம்ம்ம் சரி.” என்றவள் அப்படியே அமர்ந்திருக்க, அதே நேரம் விக்ரமின் ஃபோன் அலற, பார்க்கவியும் அறைக்குள் வந்தாள். இருவரிடமும் கண்ணைக் காட்டிவிட்டு விக்ரம் வெளியேற, பார்க்கவியைப் பார்த்து மீண்டும் அழ ஆரம்பித்திருந்தாள் நிசப்தி. அவளால் இதிலிருந்து வெளியில் வர முடியும் என்றேத் தோன்றவில்லை.
சில நிமிடங்கள் அவளை அழவிட்ட பார்கவி, “நிசா ப்ளீஸ், நடந்தது நடந்து போச்சு. இனி அழுது ஒரு பிரயோஜனமும் இல்ல. அடுத்து என்ன செய்யலாம்னு யோசிக்கலாம். விக்ரம் சொன்ன மாதிரி கொஞ்ச நாள் ஊர்ல போய் இருங்க, இங்க எல்லாம் கொஞ்சம் சரியானதும் வந்துக்கலாம். முக்கியமா யாருக்கிட்டயும் எதையும் சொல்லாத.” என்றதும்,
“பயமா இருக்கு சீனியர்.” என்ற நிசப்தியின் குரலில் உண்மையிலேயே பயம் அப்பட்டமாகத் தெரிந்தது.
“அதையே யோசிக்காத நிசா, விக்ரம் எல்லாத்தையும் பார்த்துப்பான். எல்லாமே சரியாகிடும். நேத்து நடந்ததை அப்படியே மறந்துடு. அந்த நாள் உன் வாழ்க்கையிலேயே வரலன்னு நினைச்சிக்கோ. நீ மறுபடியும் மறுபடியும் அதையே யோசிச்சா உன் அப்பா நிலையை நினைச்சிப்பாரு.” என்றுவிட, “ம்ம்.” என்றதோடு அமைதியாகிவிட்டாள்.
அன்று மாலையே அவள் சரியாகிவிட்டாள் என்று மருத்துவர் கூற, வேணுகோபாலிடம் திருச்சி போவதற்காக விக்ரம் பேச, அவருக்குமே அதுவே சரியென்று பட, அடுத்த நாள் காலையில் தந்தையும் மகளும் திருச்சி வந்திறங்கினர்.
அன்றுமே வீட்டுக்குச் செல்லவில்லை விக்ரம், அடுத்தநாள் விக்னேஷின் இறுதிச் சடங்கென்று ரவி அழைத்துச் சொல்லியிருக்க, மறுக்க முடியாமல் சென்றிருந்தான்.
இரண்டு நாட்கள் கழித்து வீட்டுக்கு வந்தவனை உனர்ச்சிகளற்றப் பார்வை பார்த்தார் ரேணுகா. அது விக்ரமிற்குப் புரிந்தாலும் இப்போது எதையும் பேசி விளக்கம் கொடுக்கும் மனநிலையில் அவன் இல்லை. அதனால் அறைக்குள் செல்ல, அங்கோ கையைக் கிழித்துக்கொண்டு, குருதி கொட்ட அவனது படுக்கையறையில் கிடந்தாள் ஸ்வாதி.
அந்த நிலையில் மனைவியைப் பார்த்ததும் மற்றது எல்லாம் மறந்துவிட, “ஸ்வே!” எனப் பெருங்கூவலுடன் அவளிடம் ஓடியவன், கையைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு மற்றக் கையால் அவளை எழுப்ப, அதற்குள் வீட்டில் இருந்த வேலையாட்களும் ரேணுகாவும் வந்துவிட, அந்த நிலையை யாரும் எதிர்பார்க்கவில்லை.
ஒரு துணியை எடுத்துக் கையைக் கட்டிவிட்ட ரேணுகா, “சீக்கிரம் தூக்கு, ஹாஸ்பிடல் போகணும்.” என மகனுக்கு அதட்ட, அவனும் சட்டென்று அவளைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்குப் பறந்தான்.
அடுத்து வந்த நான்கு மணி நேரங்களும் மிகுந்த சோதனையாகிப் போனது அனைவருக்கும். ஏன் எதற்கென்று யாருக்குமே காரணம் தெரியவில்லை. கண்விழித்தவளோ விக்ரமைப் பக்கத்திலேயே விடவில்லை.
“எனக்கு குழந்தை வேணும், அதுக்கு சரின்னா இருக்கேன். இல்லைனா இப்படியே செத்துப் போயிடுறேன்.” இந்த வார்த்தைகளை மட்டுமே கிளிப்பிள்ளை போல் சொல்லிக் கொண்டிருக்க, அனைவருக்கும் எரிச்சலும் கோபமும் வந்துவிட்டது.
ரேணுகாவிற்கு ஆரம்பத்தில் இருந்தே ஸ்வாதியின் மேல் சந்தேகம்தான். ஆனால் மகனாக சொல்லாமல் எப்படி கேட்பது என யோசித்தபடியே இருக்க, இன்று அவளின் செயல் அவரின் சந்தேகத்தை உறுதி செய்திருந்தது.
சிறுவயதில் இருந்தே பார்க்கிறார்தானே, அவள் எந்த குழந்தையையும் தூக்கிக் கொஞ்சியதை பார்த்ததே இல்லை. ஏன், ரித்தியின் குழந்தையைக் கூட அவள் தூக்கியதில்லை. அப்படியிருக்க இவளுக்கு குழந்தை ஆசை வந்துவிட்டதா? நம்பவே முடியவில்லை. மகன் எதையோ மறைக்கிறான் என்று மட்டும் புரிய, எப்படியும் தன்னை மீறி எதுவும் நடந்திடாது என மகன் மீதிருந்த நம்பிக்கையில், மகள் வீட்டில் தனியாக இருப்பாள் என்று விக்ரமிடம் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார்.
இரண்டு நாட்கள் அவனுடன் பேசாமல் போக்கு காட்டி கடைசியில் அவள் நினைத்ததைச் சாதித்து இருந்தாள் ஸ்வாதி. ஆம் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விக்ரம் சரி என்றிருந்தான். அவள் உடலும் மனமும் சரியாகவும் பேசி மனைவியின் மனதை மாற்றிவிடலாம் என்று, குழந்தை பற்றி வீட்டில் யாரிடமும் சொல்லாமல் விட்டான் விக்ரம். அதுவே ஸ்வாதிக்கும் வசதியாகப் போக, அடுத்த நாளே மருத்துவமனைக்குப் போகலாம் என்று வந்து நிற்க, தவிர்க்க முடியவில்லை அவனால்.
சரி மருத்துவரிடம் பேசி, இவளுக்குப் புரிய வைக்கலாம் என்று நினைக்க, அதற்கு ஸ்வாதி எங்குமே வாய்ப்பைக் கொடுக்கவில்லை. ஏற்கனவே மருத்துவரிடம் பேசி வைத்தது போல, மீண்டும் இருவருக்கும் டெஸ்ட் செய்யப்பட்டது, அன்று மாலை வரை அங்கேதான். மாலை ரிப்போர்ட்ஸை பார்த்த மருத்துவர் ஏற்கனவே பேசி வைத்ததைப் போலவே பேச, ஸ்வாதி அழ விக்ரமிற்கு அவளின் ஆசைக்கு இணங்காமல் இருக்க முடியவில்லை.
‘எல்லாம் சரியாகும்’ என்று மனதை தேற்றிக் கொண்டு அனைத்து டாகுமெண்ட்சிலும் கையெழுத்திட, “உங்களுக்கான க்ளைன்ட் கிடைக்கும் போது தகவல் கொடுக்குறோம். அதோட விக்ரம் நீங்க அவங்களைப் பார்க்க முடியாது, சில க்ளைன்ட்ஸ் அதுக்கு ஒத்துக்க மாட்டாங்க, சோ…” என இழுக்க, “இட்ஸ் ஓகே டாக்டர், அதுதான் நான் பார்த்துப்பேனே, எனக்கு என்ன வேலை? எங்க பேபியை நான் பார்த்துக்குறேன்.” என மகிழ்ச்சியாகப் பேச, விக்ரமிற்கும் சந்தோசமாக இருந்தது.
பலநாள் கழித்து மனைவியின் முகத்தில் சிரிப்பைப் பார்க்கவும் அவனுக்கு சற்று நிம்மதியானது. இனி இதை எப்படி வீட்டில் சொல்வது என யோசிக்க, “இப்போ சொல்ல வேண்டாம், க்ளைன்ட் கிடைச்சு எல்லாம் செட்டானா சொல்லிப்போம், இல்லாட்டி எல்லாருக்கும் கஷ்டம்.” என ஸ்வாதி பாவமாகச் சொல்ல, விக்ரமிற்கும் அதுவே சரியெனப்பட்டது.
நாட்கள் இப்படியே நகர, ஸ்வாதி மீண்டும் தாய் வீட்டிற்குச் சென்று விட்டாள். அதுதான் அவளுக்கு வசதியும் கூட. அங்கிருந்தால் மட்டுமே விக்னேஷை மருத்துவமனையில் சென்று பார்க்க முடியும். தினமும் அவனைப் பார்க்கச் சென்றாள், அவன் கோமாவில் இருப்பதே நினைவில் இல்லாதது போல பேசிக் கொண்டே இருப்பாள். தான் செய்தது, செய்யப் போவது அனைத்தையும் ஒன்று விடாமல் பேசிக் கொண்டே இருப்பாள்.
அந்த வாரம் மனைவியைப் பார்க்க ஹைதராபாத் வந்திருந்தான் நரேன். அப்போதுதான் வேணுகோபால், நிசாவை அழைத்துக் கொண்டு திருச்சி போனதை அவளிடம் சொன்னான் நரேன்.
“ஏன் என்னாச்சு? திடீர்னு எதுக்கு இந்த முடிவு?” என உஷாவும் பதட்டமாகக் கேட்க,
“ம்ம், அந்த விக்னேஷ் இறந்தது உனக்கு தெரியும்தானே, ஆக்சிடென்ட்ன்னு சொல்லிருக்காங்க. அவன் இறந்ததும் அப்பாவுக்கு பயம் வந்துடுச்சு, அவங்க வீட்டு ஆளுங்க எதுவும் பிரச்சனை செய்துடுவாங்களோன்னு. நாம ரெண்டு பேரும் இருந்திருந்தா கூட யோசிச்சிருப்பாங்க, நாமளும் கூட இல்லைன்னும் போது அவங்களுக்கு தனியா இருக்குறது கஷ்டம்தானே, அதோட அப்பாவுக்கும் சொந்த ஊருக்குப் போகணும்னு ஆசை வந்துடுச்சு. நிசாவை அங்கேயே அவங்க ரிலேடிவ்லயே மேரேஜ் செய்யணும்னு நினைக்கிறார். அது எனக்கும் தப்பா தெரியல சரின்னு சொல்லிட்டேன்.” என நரேன் சொல்வதை அமைதியாகக் கேட்டிருந்தாள் உஷா.
அவளிடம் நிசப்தி இதைப்பற்றி மூச்சுக் கூட விடவில்லை. ஏன் என்ற யோசனையோடு இருந்தவளை, “வா கொஞ்சம் வெளியேப் போயிட்டு வரலாம்.” என வேறு பேசி அவள் கவனத்தைக் கலைத்துவிட்டான். அன்றே இருவரும் இதுபற்றி பேசியிருந்தால் பின்னாளில் நிசாவிற்கு வந்த பிரச்சனையையும் சரி செய்திருக்கலாம். இவர்களுக்குள்ளும் பிரச்சனை வராமல் பார்த்திருந்திருக்கலாம்.
எந்தப் பிரச்சனையும் இல்லாமல் நாட்கள் நகர்ந்து வருடத்தைத் தொட ஆரம்பித்தது. நிசப்தி இப்போது திருச்சியில் ஒரு லாயரிடம் ஜூனியராக சேர்ந்திருந்தாள். இதுவும் விக்ரமின் மூலமாக பார்கவியின் ஏற்பாடுதான்.
விக்ரம் எப்படியும் அவளைத் தன் பாதுகாப்பு வளையத்தில்தான் வைத்திருப்பான் என்று அறிந்திருந்த ஸ்வாதி, அவன் அசரும் நேரத்திற்காகக் காத்திருந்தாள்.
அந்த நேரமும் வந்தது. அதற்காகவே காத்திருந்ததைப் போல அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டாள் ஸ்வாதி.
வேண்டாத மருமகளாக இருந்தாலும், மகனோடு வாழ்ந்தால் போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டார் ரேணுகா. அதற்காகவே பலமுறை விக்ரமிடம் ஸ்வாதியை அழைத்து வா என்று நச்சரிக்க ஆரம்பித்தார். மகன் வாழ்க்கை கண் முன்ணே வீணாகப் போவதை எந்த தாயால் தாங்கிக்கொள்ள முடியும்.
தாய்க்கு சந்தேகம் வந்துவிட்டதை உணர்ந்த விக்ரம் மீண்டும் ஸ்வாதியிடம் பேச, அவள் மீண்டும் ஒரு தற்கொலை முயற்சி நாடகத்தை அரங்கேற்ற, வாழ்க்கையே வெறுத்துப் போனது அவனுக்கு.
ரவிக்கு தங்கையின் மேல்தான் தவறு இருக்கும் என்று முழுதாக நம்பினான். அதனால் அவளிடம் விசாரிக்காமல் விக்ரமிடம் கேட்க, அவனுக்கும் இதையெல்லாம் யாரிடமாவது சொல்ல வேண்டும் போல இருக்க, அனைத்தையும் சொல்லியிருந்தான். கேட்டவனுக்கு என்ன பதில் சொல்வதென்றேத் தெரியவில்லை.
மருத்துவ உலகம் எத்தனையோ முன்னேறியிருக்கும் இந்த காலத்தில் இப்படி அடம்பிடிக்கும் தங்கையை நினைத்து எரிச்சல் வந்தது.
“நீ ஏன் அவ சொல்ற எல்லாத்துக்கும் ஒத்துக்குற? அத்தைக்குத் தெரிஞ்சா என்னாகும்? அவங்களுக்கு சும்மாவே உங்க மேல வருத்தம். இதுல நீங்க இப்படி ஒரு முடிவெடுத்தது தெரிஞ்சா என்ன நினைப்பாங்க? ஸ்வாதிக்கிட்ட நான் பேசுறேன், அவ புரிஞ்சிப்பா. நீங்க இந்த ப்ளானை ட்ராப் பன்ற வழியைப் பாருங்க. இப்போ என்ன மேரேஜ் முடிஞ்சி இரண்டு வருஷம்தானே ஆகுது. அதுக்குள்ள ஏன் ட்ரீட்மென்ட் அது இதுன்னு ஆரம்பிக்கிறீங்க? பொறுமையா பார்ப்போம்.” என்றவன் அன்றிரவே தங்கையிடமும் பேசினான்.
“ஸ்வாதி நீ எப்போ வீட்டுக்கு கிளம்புற?” எனக் கேட்டவனை புரியாமல் பார்த்தாள்.
“நீ இங்கேயும், விக்ரம் அங்கேயும் இருந்தா எப்படி? இப்படி தனித்தனியா இருக்குறதுக்கு ஏன் கல்யாணம் செஞ்சீங்க? ஒன்னு நீ அங்க போ, இல்ல அவன் இங்க வரட்டும்.” என ரவி பேச, ரித்திக்கு ஆத்திரம் வந்தது.
“என் அண்ணா இங்க வந்துட்டா, நாம ரெண்டு பேரும் அங்கே போயிடுவோமா?” என கிண்டலாக ரித்தி கேட்க,
“என்ன பேசுற? நாம எப்படி அங்க போக முடியும்? அம்மாவைத் தனியா விட முடியுமா?” எனப் பல்லைக் கடிக்க,
“ஓ… உங்க அம்மாதான் தனியா இருப்பாங்களா? எங்க அம்மா அவங்க எப்படி இருப்பாங்க? விக்கி இங்க வந்துட்டா எங்க அம்மாவும் தனியாதான் இருப்பாங்க. அது உங்களுக்குத் தோனவே இல்லையா? நீங்க இவ்வளவு சுயநலவாதியா இருப்பீங்கன்னு நான் யோசிச்சது கூட இல்லை. உங்களை நம்பி…” என்றவள் அதற்கு மேல் வார்த்தைகள் வரவில்லை. அதற்குள்ளாகவே தொண்டையடைத்து குரல் அழுகைக்கு மாறியது. அவர்கள் முன் அழப் பிடிக்காமல் அறைக்கு சென்று கதவடைத்துக் கொண்டாள்.
“ச்சே…” எனத் தலையில் அடித்துக் கொண்டவன், ஏதோ பேசப் போய் ஏதோ நடந்திடுச்சே’ என நொந்து போனவன், தங்கையிடம் திரும்பி, “விக்ரம் இப்போ வருவான், அவன் கூட கிளம்பு.” எனக் கட்டளையாகச் சொல்லிவிட்டு மனைவியை சமாதானம் செய்ய ஓட, மதியழகி குரூரமாகப் பார்த்துக் கொண்டிருந்த மகளின் தோளில் கையை வைத்தார். அதில் சட்டென்று தன் முக மாற்றத்தை மறைத்தவள் தாயின் இடையைக் கட்டிக்கொண்டு கதற ஆரம்பித்தாள்.
“ஒன்னும் இல்ல கண்ணு, எல்லாம் சரியாகும். மனசை விட்டுடாத. அம்மா எப்பவும் உன் கூட உனக்கு சப்போர்ட்டா இருப்பேன் அழாத.” எனக் கண்ணைத் துடைத்துவிட,
“நிஜமாவாம்மா? நான் என்ன செஞ்சாலும், சொன்னாலும் என்கூடவே இருப்பீங்களா? சத்தியமா?” என அவர் முகத்தைப் பார்க்க, “சத்தியமா…” என மகளின் கை மேல் கை வைக்க, ஸ்வாதியின் முகம் குரோதத்தில் சிவந்து மின்னியது.
***
1 comment
இந்த ஸ்வாதி பொம்பிளையா, பிசாசான்னே தெரியலையே ?
அது சரி, இவை போட்ட ப்ளான்ல, நிசாப்தி எப்படி மாட்டினாள்ன்னே தெரியலையே ?
😀😀😀
CRVS (or) CRVS 2797