அகானா -74
நித்யா அலைபேசியை வைத்ததுமே, உடனே பதறிப்போய் வந்தது என்னவோ ராகினியின் தந்தை தான்.
சரியாக அவர் அந்த நேரத்தில் வருவார் என்று கணித்திடாத அந்த கயவன், சற்று அதிர்ந்து பின் உடனே அவரை தள்ளி விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட, அவருக்கும் இப்போது அவன் பின்னே சென்று நேரத்தை வீணாக்காமல், மகளைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
வேகமாக ஒவ்வொரு அறையும் சென்று மகளைத் தேடி, ஒரு வழியாக அவளை கண்டுபிடித்து, வெளியில் கொண்டு வரும் வரை அவரின் உயிர் அவரிடம் இல்லை.
மகளைப் பத்திரமாக வெளியில் கூட்டி வந்தவரிடம் “அந்த தாத்தா உள்ளே இருக்காரு ப்பா..” என அவரை கட்டிக்கொண்டு அழுத மகளை சமாதானம் செய்துவிட்டு, மீண்டும் உள்ளே செல்ல திரும்பியவரிடம், “நான் பாக்குறேன்.. நீங்க மருமகளை ஆஸ்பத்திரி கூப்பிட்டு போங்க..” என்றபடியே அந்த வீட்டுக்குள் நுழைந்தார் தாமோதரன்.
தாமோதரனின் இந்த பேச்சை சற்றும் எதிர்பார்க்கவில்லை ராகினியின் தந்தை. பைத்தியக்காரனாக இருந்தவன் எப்படி இவ்வளவு தெளிவானான் என்ற யோசனை வந்தது. ஆனாலும் அவர் சொல்வதும் சரிதான் என்று நினைத்தவர், மகளை அங்கிருந்து அழைத்துச் செல்ல, உள்ளே சென்ற தாமோதரனுக்கு படுக்கையில் இருந்த அழகரைப் பார்த்து எந்த உணர்வும் தோன்றவில்லை
உயிருக்கு பயந்து பதட்டத்துடன் எழுந்து கொள்ள முடியாத நிலையில் இருந்தவர் ‘எப்படியாவது என்னை காப்பாத்தி விடுப்பா..’ என்ற பார்வையை கொடுக்க, தாமோதரனோ அதை கண்டு கொள்ளவே இல்லை.
அங்கிருந்து வேகமாக கிச்சனுக்கு சென்றவர் சிலிண்டர் வாழ்வை மூடி, அடைத்திருந்த ஜன்னல்கள் எல்லாவற்றையும் திறந்து விட்டு, அழகரின் அறைக்கு மீண்டும் திரும்பி வந்தார்.
இப்போது அழகரின் அருகில் இருந்த ஜன்னல்களைத் திறந்து விட்டு, அவருக்கு எதிரில் நிதானமாக அமர்ந்து, அவரையே கூர்பார்வையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.
தாமோதரனின் அந்தப் பார்வையில், அழகருக்கு பயத்தில் உடல் நடுங்க ஆரம்பித்தது.
“இன்னைக்கோ நாளைக்கோ சாவு வரப்போற உனக்கே வாழனும்னு ஆசை இருக்கும்போது, என் மஞ்சு குட்டிக்கு எவ்வளவு ஆசை இருந்திருக்கும். அந்த ஆசையில் எல்லாரும் சேர்ந்து மண்ணள்ளி போட்டுட்டு, நீங்க நிம்மதியா இருப்பீங்க, அதைக் கேட்க வந்த யாரையும் மனுசனா கூட மதிக்க மாட்டீங்க. உங்க அதிகாரத் திமிரை காட்டுவீங்க. மீறிப் பஞ்சாயத்து வச்சா, ஆள் வச்சு அடிப்பீங்க.. மிரட்டுவீங்க இத்தனை செஞ்சும் உங்களை எதிர்த்து நின்னா, அவங்க எழுந்துக்கவே முடியாத அளவுக்கு அடிச்சி கீழத் தள்ளிருவீங்க. இதெல்லாம் எப்படி வருது பணத்தால தானே, பணத் திமிரு. இந்த பணம் உனக்கு எப்படி வந்ததுனு எனக்கு தெரியாதா? நீ என்ன பிறக்கும்போதே பணக்காரனா? உனக்கு எதுக்கு இவ்வளவு திமிரு, கோபம், ஆங்காரம் எல்லாம்.? இப்ப சாகப் போறியே என்ன கொண்டு போக போறேன் இல்ல உன் பொண்டாட்டி தான் என்ன கொண்டு போனா.? அன்னைக்கு என் மஞ்சுவை விட்டிருந்தா இன்னைக்கு உனக்கு நல்ல சாவு கிடைச்சிருக்கும், ஏன் உனக்கு இந்த நிலமை கூட வந்திருக்காது. தங்கம் மாதிரி பார்த்திருப்பா உங்களை எல்லாம். உங்களுக்கெல்லாம் மனுசங்களோட அருமை தெரியுமா? அந்த பணம் தானே நீ செத்த பிறகும் உன் கூட வரப்போகுது..” என அழுத்தமாக பேசிக் கொண்டிருந்த தாமோதரனை பார்க்க, பார்க்க அழகருக்கு இதயம் தாறுமாறாக துடித்தது.
“என்ன.? என்ன பண்ணப் போற.? என்ன விட்டுடு.” என்ற வார்த்தைகளை பார்வையால் கொடுக்க, அந்த அறையே அதிறுமளவிற்கு ஆங்காரமாக சிரித்தார் தாமோதரன்.
“நீ செத்த பாம்பு தான். உன்னை அடிச்சு எனக்கு ஒரு பிரயோஜனமும் இல்ல தான். ஆனா உன்னை அப்படியே விடவும் மனசுல்ல.. என்ன செய்ய சொல்ற.? என்னோட கோபத்தையும் ஆத்திரத்தையும் பல வருஷமா பூட்டி வச்சுருக்கேன். அதை இப்போ இந்த இடத்துல வெளிப்படுத்தினா மட்டும்தான் நான் நிம்மதியா இருக்க முடியும். நானாவது என் மஞ்சுக்கு நியாயம் வாங்கிக் கொடுக்கனும்ல..” என்றார் அந்த சிரிப்பு மாறாமலே.
“நான் செஞ்சது தப்புதான். அதை உணர்ந்திட்டேன்.. என்னை மன்னிச்சி, என்னை விட்டுடு.” என மீண்டும் பார்வயாளேயே கெஞ்ச, அதை கேட்கும் மூடில் தாமோதரன் இல்லை.
தான் செய்யப்போகும் காரியம் யாருக்கும் பிடிக்காதுதான். சிறைக்கு கூட செல்ல வேண்டி வரலாம். இனியாவது குடும்பத்துடன் வாழலாம் என நினைத்து நிம்மதி பெருமூச்சு விடும் வேலையில் இந்த மைதிலியின் செய்கை அவரை கடுங்கோபத்திற்கு ஆளாக்கியது.
இன்னும் எத்தனை பேர்தான் அவளுக்காக பலியாவது. அவளை முடித்தே ஆகவேண்டும் என்று அவருக்குள் ஒரு வெறியே கிளம்பிவிட்டது. அதோடு வயிற்றில் பிள்ளையோடு இருக்கும் பெண்ணை உயிரோடு கொழுத்த திட்டமிட்ட அவளின் ஈனத்தனமான செயலை அவரால் எப்போதும் மன்னிக்கவே முடியாது.
அவள் இந்தளவிற்கு ஆட காரணம் இவர்கள் தானே. அவளின் ஒவ்வொரு பழி வாங்கலிலும் பின்னே இருந்தவர்கள் இவர்கள் தானே. அப்போ இவர்களுக்குத் தானே பெரிய தண்டனைக் கிடைக்க வேண்டும்.
இத்தனை யோசனைகள் வர, அழகரின் அருகில் அமர்ந்து, அவருக்கு மாட்டியிருந்த ஆக்சிஜன் மாஸ்கை நிதானமாக எடுத்து விட்டார்.
அந்த ஆக்சிஜனில் தான் அவரின் உயிர் ஒட்டிக்கொண்டிருந்ததோ? வேகவேகமாக தலையைத் திமிறி, சுவாசத்துக்கு தடுமாறி, அந்த உயிர் மெல்ல பிரிவதை மிகவும் பொறுமையாகவும், நிதானமாகவும் பார்த்துக் கொண்டிருந்தார் தாமோதரன்.
அழகரின் உயிர் பிரிந்து, அவர் உடல் கட்டையாக கிடக்க, அதைப் பார்த்து கூட தாமோதரனுக்கு இரக்கம் வரவில்லை. இப்படியான சாவுதான் உனக்கு கடவுள் எழுதியிருக்கிறார் என்று மனதுக்குள் முனங்கிக் கொண்டே வெளியில் வர, சரியாக அதே நேரம் நித்யா பதறிக்கொண்டு வர, “அவரைக் காப்பாத்த முடியல ம்மா..” என்றார் மரக்கட்டையான குரலில்.
“என்ன? என்ன சொல்றீங்க?” என பயந்தபடியே கேட்க,
“பயத்துல தலையை ஆட்டி, மாஸ்கை தட்டி விட்டிருப்பார் போல, நான் பார்க்கும் போது மூச்சே இல்ல..” என்றார் கொஞ்சமும் வருத்தம் இல்லாமல்.
“இப்போ என்ன செய்ய?” என தளர்ந்து போய் நித்யா கேட்க,
“எல்லாருக்கும் சொல்லனும் நித்யா.. அப்புறம் போலிஸ் கேஸ் கொடுக்கனும் அந்த பொறுக்கி மேல..” என்றார் எதுவும் நடவாதது போல.
“ஹான்..” என்றபடியே அமர்ந்தவருக்கு, சத்தியமாக அடுத்து என்ன செய்வது என்றேத் தெரியவில்லை.
அதற்குள் தெருவில் இருப்பவர்கள் ஒவ்வொருவராக, அடுத்த வேலையை அவர்களே கையில் எடுத்துக் கொண்டார்கள்.
இதேநேரம் டிஸ்ட்ரிக்ட் ஜட்ஜ் முன் அமர்ந்து, தன் மனதைக் கல்லாக்கிக்கொண்டு ரவிக்கான ஜாமினில் கையெழுத்திட்டுக் கொண்டிருந்தாள் அகானா.
“அகானா.. நீங்க ரிஸ்க் எடுக்குறீங்க.?” என்றார் நீதிபதி.
தன் சொந்த ஜாமினில் எடுப்பதால் தான், சில விதிமுறைகளை சுலபமாக கையாள முடியும் என விமல் கூறியிருக்க, அகானாவும் அதையே செய்தாள்.
அதனால் அந்த நீதிபதியின் கேள்விக்கு அமைதியாக புன்னகைக்க, “சாரி உங்க பெர்சனல் லைஃப்ல இன்வால்வ் ஆகுறேனு நினைக்க வேண்டாம். அவரைப்பத்தி விசாரிச்ச வரைக்கும், பெர்சனல் லைஃப்ல ரொம்ப மோசமான ஒரு ஆளாதான் சொல்றாங்க. இந்த ரிஸ்க் தேவையில்லன்னு தோனுது அகானா.” என்றார்.
“எனக்குத் தெரியும் சார். ஆனா இப்போ எனக்கும் வேற வழி இல்ல. இப்போ இந்த வாய்ப்பை பயன்படுத்திக்க எனக்கும் ரொம்ப ஆசைதான். இப்படியே அவரை வெளியவே வர முடியாத அளவுக்கு ஜெயில்ல வைக்க என்னால முடியும். ஆனா என்னோட அம்மாவும், ஹஸ்பண்டும் அதை விரும்பமாட்டாங்க. அதனால எனக்குப் பிடிக்கலன்னாலும் இதை செய்ய வேண்டியதா போச்சு. லைஃப்ல சிலதை காம்ப்ரமைஸ் பண்ணித்தான் ஆகனும்னு வரும் போது, வேற என்ன செய்ய முடியும்..” என வேதனையாக கூற, அந்த நீதிபதிக்கும் என்ன பதில் சொல்வது எனத் தெரியவில்லை.
“ஓக்கே. ஓக்கே அகானா ப்ளீஸ் காம் டவுன். எல்லாம் சரியாகும். டோன்ட் ஃபீல் ஓக்கே..” என ஆறுதல்படுத்தி அனுப்ப, வெளியே வந்தவள் உதயிடம் அந்த ஆர்டரைக் கொடுத்துவிட்ட, “மீதியை நீங்க பார்த்துக்கோங்க உதய். ஹரியோட அப்பாவுக்கு இன்ஃபார்ம் பண்ணிடுங்க.” என்றதும், உதயின் முகம் மிகவும் வலியைக் காட்டியது.
“என்னாச்சு உதய்..?” என்றவளிடம்,
“ராகினி மேடத்தை சேஃபா வெளிய கொண்டு வாந்தாச்சு. அந்த மேள் நர்ஸ்தான் அகியூஸ்ட். அவன் தப்பிச்சு டூவீலர்ல போகும் போது, கண்டமனூர் பாலத்துக்கிட்ட ஆக்சிடென்ட் ஆகி ஸ்பாட் அவுட்..” என்றதும்,
“ஓ..” என்றவள், அவன் முகத்தில் இன்னும் மீதி செய்தி இருப்பது போலத் தோன்ற “இன்னும் என்ன உதய்?” என்று கேட்க,
“அது.. ஆகன் சாரோட தாத்தா இறந்துட்டார். அவன் அவரோட ஆக்சிஜன் மாஸ்கை ரிமூவ் பண்ணிட்டு தான் ஓடிருக்கான்.” எனவும், அகானாவின் முகத்தில் எந்த உணர்வுகளும் உண்டாகவில்லை.
“ஓக்கே உதய்.. கண்ணன் அங்கிளை மட்டும் வர சொல்லிடுங்க. நீங்க வினோத் சாருக்கு இன்ஃபார்ம் பண்ணிட்டு மத்த ப்ரொசியூசர் ஸ்டார்ட்.. ஐ நீட் சம் ரெஸ்ட். ஐம் சோ டயர்ட்..” எனவும்,
“ஐ நோ மேம்.. ப்ளீஸ் டேக் கேர்..” என்றுவிட்டு, கண்ணனை அகானாவிடம் அனுப்பிவிட்டு கிளம்பியிருந்தான்.
அதற்குள் கண்ணனுக்கும் செய்தி தெரிந்துவிட, “எங்க போகனும் பாப்பா..” என்றார் அவசரமாக.
“அங்கிள் இப்போ எனக்கு அம்மாக்கிட்ட போகனும்..” என்றாள் ஒரே வார்த்தையாக.
அதற்கு அவர் மறுத்து எந்த வார்த்தையும் பேசாமல் காரில் ஏற்றிக் கிளம்பினார்.
சில நொடிகளில் “பாப்பா..” என ஆரம்பித்து “ரவி சாரோட கேஸ்ல விட்னஸ் கிடைச்சிட்டாங்கன்னு விமல் சார் சொன்னார். சார் இன்னும் ரெண்டு நாள் லாக்கப்ல இருந்திருந்தா, அவரை மர்டர் பண்ற ப்ளானும் இருந்திருக்கு..” என,
“ஹ்ம்ம் எனக்குத் தெரியும் அங்கிள். அதனாலத்தான் நான் இவ்ளோ பெரிய ரிஸ்க் எடுத்திருக்கேன். அப்புறம் துரைப்பாண்டி அங்கிள்கிட்ட கால் பண்ணி மைதிலியை வச்சிருக்கிற லொகேசன் அன்ட் சிசிடிவி ஆக்சஸ் மட்டும் வாங்கிடுங்க..” என்றுவிட்டு சீட்டில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டாள்.
அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகளில் உடலும், மனமும் வெகுவாக சோர்வாகியிருந்தது.
அவள் நினைத்து வந்ததென்ன? இப்போது நடந்து கொண்டிருப்பதென்ன.? என யோசனையில் இருக்கும் போது, அவளின் பெர்சனல் போன் ஒலிக்க, எடுத்துப் பார்த்தவள் சலிப்பாக “என்ன?” என்றாள்.
“கலெக்டரம்மா. உன்னோட புத்தியைக் காமிச்சிட்ட பார்த்தியா? நீயே உன் அப்பனை போட சொல்லுவ? அப்புறம் நீயே அவனைக் காப்பாத்துவ? இதுக்கு ஏன் நீ எங்களுக்கு வேலை கொடுக்கனும்? எங்களைப் பார்த்தா முட்டாளா தெரியுதா?” என அந்தப்பக்கம் கத்த,
“ஹேய்..” என ஒற்றை அதட்டலில் அந்தப்பக்கம் இருந்தவன் பேச்சை நிறுத்த, “நீ என்ன எனக்கு சும்மா வேலை செய்றேன்னு சொன்னியா? உனக்கு வேலை ஆகனும். அதுக்காகன் இந்த வேலையை நீ எனக்கு செய்றேன்னு சொன்ன? என்னமோ நான் உனக்கு சும்மா வேலை கொடுத்த மாதிரி கத்திட்டு இருக்க. இந்த சத்தமெல்லாம் எங்கிட்ட ஆகாது. எப்படி உன்னோட கேஸ்கட்டை க்ளோஸ் பண்ணேனோ? அதே மாதிரி ரீஓப்பன் பண்ணவும் முடியும், செய்யவா?” என அதே ஆத்திரத்துடன் கேட்க, இங்கு கார் ஓட்டிக் கொண்டிருந்த கண்ணனின் கைகளில் கார் ஒரு முறை ஆட்டம் கண்டு, மீண்டும் ஓடியது.
அவர் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியை கண்டுகொள்ளாமல், “நானா கால் பண்ற வரை, எனக்கு கால் பண்ணக்கூடாது, அப்படி கால் வந்தா, நீ உள்ள இருப்ப?” என்று வைத்துவிட, கண்ணன் அவளைத்தான் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்.
‘நடந்த அனைத்திற்கும், நடக்கப்போகிற அனைத்திற்கும் இவள் தான் காரணமோ?’ என அவர் மனம் வேக வேகமாக யோசிக்க ஆரம்பித்தது.