தளிர் 65
ரித்தி வீட்டுக்கு வந்து ஒருவாரம் ஆகியிருந்தது. இப்போது எல்லோரும் நிசாவின் வீட்டில்தான். மருத்துவமனையில் இருந்து வரும்போதே நிசா வீட்டிற்கு போகலாமென்று ரேணுகா மகனிடம் கூறிவிட்டார்.
விக்ரம் யோசிக்க, ரவியோ ஏனென்று கேட்க, “உங்க வீட்டுக்கு இனி நான் என் பொண்ணை அனுப்பமாட்டேன் ரவி. அதோட எனக்கு என் பேத்தி கூடவும் இருக்கணும். நிசா இங்க வரமாட்டா, அவளை வானு நானும் கூப்பிடமாட்டேன். அங்கே போனா குழந்தைங்களைப் பார்த்து, ரித்தி கொஞ்சம் சமாதானம் ஆக வாய்ப்பிருக்கு. குழந்தைகளும் அங்கேயே தானே இருக்காங்க.” என முடித்துவிட,
“ம்மா ஏன்?” என நண்பனின் கசங்கிய முகத்தைப் பார்த்து விக்ரம் வர,
சற்றும் யோசிக்காமல் மகனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார் ரேணுகா.
“அத்த… ம்மா… ரேணும்மா…” என அனைவரும் பதற, விக்ரமோ குற்றவுணர்ச்சி ததும்ப தன் தாயையே வெறித்துப் பார்த்தான்.
“நீ எதுவும் பேசிடாத… எனக்கு இருக்குற கோபத்துக்கு மகன், மருமகன்னு எல்லாம் வச்சு பார்க்கமாட்டேன். உன்னை கொன்னுட்டா கூட என்னோட கோபம் குறையுமா தெரியாது. இது எல்லாத்துக்கும் முதல் காரணம் நீ மட்டும்தான். விக்ரமாதித்தன் தலைல ஏறி உக்காந்த வேதாளம் மாதிரி, அவளும் உன்னை விட்டு போய் தொலைய மாட்டேங்குறா, நீயும் தலை முழுகித் தொலைய மாட்டேங்குற. சரி, செத்துப் போயிட்டா, இனியாச்சும் நிம்மதியா இருக்கலாம்னு பார்த்தா, அதுக்கும் சேர்த்து வச்சு செஞ்சிட்டு போயிருக்கா.
சரி, எல்லாத்தையும் சரி செஞ்சி நிம்மதியா இருக்கலாம்னு பார்த்தா, செத்தவ உயிரோட வந்து நிக்கிறா. இதெல்லாம் உன்னால மட்டும்தான்… அன்னைக்கு அவளை வேண்டாம்னு சொல்லிருந்தா, நீ மட்டும் தான் கஷ்டப்பட்டிருப்ப. ஆனா அவளைக் கல்யாணம் செஞ்சி, இன்னைக்கு எத்தனை பேரோட வாழ்க்கையை கெடுத்துருக்க தெரியுமா? பாவி! எல்லாத்தையும் மொத்தமா நாசம் பண்ணிட்டு போயிட்டாளே…” என ரேணுகா கதறியழ, அவருக்கு யாராலும் ஆறுதல் சொல்லவே முடியவில்லை.
“அத்தை போதும்… அழுது அழுது மறுபடியும் உடம்பை கெடுத்துக்காதீங்க. நீங்கதான் இப்போ திடமா இருக்கணும். நடந்தது எல்லாம் போகட்டும், இனி யாருக்கும் எந்த பிரச்சனையும் வராம பார்த்துக்கலாம். அதுக்கு முதல்ல நீங்க நார்மல் ஆகுங்க.” என ரஞ்சனி அவரை மிரட்டி, சமாதானம் செய்ய ஆரம்பித்தாள்.
“என்னடா உங்க மாமியார் பேசிட்டே போறாங்க, நீ கேட்டுட்டு சும்மா இருக்க? அவங்க என்ன வேணும்னாலும் பேசுவாங்க, நாம கேட்டுட்டு சும்மா இருக்கணுமா? செத்து போனதா நினைச்ச என் பொண்ணு உயிரோட வந்துருக்காளேனு யாருக்காச்சும் இங்க சந்தோசம் இருக்கா? இப்படியெல்லாம் நடக்கும்னு அவ நினைச்சா பார்த்தா? உன் பொண்டாட்டி வாயையும் பார்த்த இல்ல, எப்படி பேசினானு. அப்படி இருக்கும் போது என் பொண்ணை மட்டும் ஏன் குறை சொல்லணும்?” என மதி மகளுக்காக பொங்கி கொண்டு வர,
“ம்மா…” என ரவி அதட்ட, “போதும் மதி! இதுக்கு மேல எதுவும் பேசாத. என் பொண்ணு இனி அந்த வீட்டுக்கு வந்து வாழமாட்டா அவ்ளோதான்.” எனக் கட்டளையான குரலில் பேசிய ரேணுகா,
“குழந்தையோட போச்சு, என் பொண்ணுக்கு மட்டும் எதுவும் ஆகிருக்கணும், அப்புறம் தெரியும் இந்த ரேணுகாவை பத்தி. என்ன? ம்ம்… என்னனு கேட்குறேன்? என்ன பேசினாலும் கேட்டுட்டு பொறுமையா போய்டுவாங்கனு நினைச்சியா? ஹான்! அப்படித்தான் நான் இருந்தேன், என் பிள்ளைங்க வாழ்க்கை நல்லா இருக்கணும்னு நானும் பொறுமையாதான் இருந்தேன். ஆனா என் பொறுமைக்கு கிடைச்ச பரிசு என்ன தெரியுமா? என் பேத்தி இந்த உலகத்தை பார்க்காமலே போயிட்டா. என் பொண்ணு எமன்கிட்ட இருந்து தப்பிச்சு வந்துருக்கா. இதுக்கா நான் பொறுமையா இருந்தேன்?!” என ஆங்காரமாகக் கத்த,
இதுவரைக்கும் ரேணுகாவை யாரும் இப்படி பார்த்திருக்கவில்லை. “ம்மா… ம்மா…” என விக்ரம் பதறி அவரைப் பிடித்து சமாதானம் செய்ய, “ஆசை ஆசையா பெத்து அருமையா வளர்த்த பொண்ணை, இப்படி நடைபிணமா பார்க்குற ஒரு தாயோட வேதனை எல்லாம் உங்களுக்கு புரியாது.” என்றவர் விக்ரம் மேலேயே சாய்ந்து கதறியழ, அங்கிருந்த அத்தனை பேர் கண்களிலும் நீர் வழிந்தது.
தன் கண்ணீரை அழுந்த துடைத்தவன், ரஞ்சனியிடம் கண்ணைக் காட்டிவிட்டு, “ம்மா என்னம்மா நீங்க… இப்படி அழுது அழுது இன்னும் வேதனையை இழுத்துக்காதீங்க. முதல்ல நாம ரித்தியை பார்ப்போம். தசிக்குட்டி வேற ரெண்டு நாளா உங்களைக் கேட்டுக்கிட்டே இருக்கா. முதல்ல இந்த குளுக்கோஸ் வாட்டரை குடிங்க, மத்ததை அப்புறம் பார்த்துக்கலாம்.” என ரஞ்சனி கொண்டு வந்த, தூக்க மாத்திரை கலந்த குளுக்கோஸ் வாட்டரை அவருக்கு கொடுத்து குடிக்க வைத்தான்.
பின் மதியிடம் திரும்பி, “அத்தை, என் பொறுமையை ரொம்பவே சோதிச்சிட்டு இருக்கீங்க. உங்க வயசுக்கு மரியாதை கொடுத்தும், ரவியோட அம்மாங்கிற காரணம் மட்டும் தான் நான் பொறுமையா இருக்க காரணம். அம்மா சொன்ன மாதிரி இனி ரித்தி அங்க வரமாட்டா. ரவிக்கு விருப்பம் இருந்தா அங்க வந்து இருக்கட்டும்.” என்றவன், தன் பேச்சில் அதிர்ந்து நின்ற ரவியைப் பார்த்து “ஸாரி மச்சான்!” என்றுவிட,
இங்கு ரவியின் நிலைதான் மிக மோசம். குழந்தையை பறிகொடுத்து, மனைவியையும் பார்க்க முடியாமல், அவளுக்கு என்ன சமாதானம் செய்வது என்று தெரியாமல், கிட்டத்தட்ட பைத்தியக்காரன் போல் இருந்தான். இதில் இந்த பிரச்சனைகளும் சேர்ந்து கொள்ள கோபமும் ஆற்றாமையும் பொங்கியது.
அது கொடுத்த எரிச்சலில், “ம்மா இன்னும் இங்க என்ன வேலை உங்களுக்கு? கிளம்புங்க, உங்க பொண்ணு எங்க போயிருக்கா, என்ன பண்றானு போய் பாருங்க. என் குழந்தைங்களையும் பொண்டாட்டியையும் பார்த்துக்க எனக்குத் தெரியும். இனி என்னை கேட்காம இங்க நீங்க வராதீங்க.” என முகத்திலடித்தாற்போல் சொல்லிவிட்டு வெளியில் சென்றுவிட்டான்.
அவன் சென்ற வேகத்தில் விக்ரமும் முகுந்தனும் பின்னே செல்ல, காரில் ஏறியவன் ஓவென்று கதறியழ ஆரம்பித்தான். முகுந்தனும் விக்ரமும் சமாதானம் செய்தாலும், இறந்த குழந்தையின் நினைவு அவனை தினமும் பாடாய்படுத்தியது.
‘என்னை விட்டுவிட்டாயா அப்பா? நான் உங்களுக்கு வேண்டாத பிள்ளையா? என் அம்மாவிடமிருந்து ஏன் என்னைப் பிரித்தாய்? என் அண்ணனையும் அக்காவையும் பார்க்காமலே ஏன் என்னை மண்ணுக்குள் புதைத்தாய்?’ என அந்த பெண் குழந்தை, தினமும் அவனிடம் வந்து கேள்வி கேட்டு அவனை நிம்மதியிழக்க செய்திருந்தது.
இதில் ரித்தியும் இந்த பத்து நாட்களாக அவனிடம் பேசவில்லை. தன் அம்மாவும் சுயநலமாக நடந்து கொள்ள, மொத்தமாகவே உடைந்து போயிருந்தான் ரவி சங்கர்.
ரவியை ஒருவழியாக சமாதானம் செய்து அனைவரும் நிசாவின் வீட்டிற்கு வர, உஷாவும் நிசாவும் ஆரத்தியெடுக்க குழந்தைகள் இருவரும் வந்து கட்டிக்கொள்ள, தசிராவும் தத்தி தத்தி வந்து அத்தையின் கைகளைப் பிடித்துக்கொள்ள, அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகையை அழுது தீர்த்தாள் ரித்தி.
மனைவியின் அழுகையைப் பார்த்து அவளை அப்படியே அள்ளிய ரவி, அவளுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டான்.
வருந்திய முகத்துடன் அனைவரும் அமைதியாக அந்த அறையையே பார்க்க, குழந்தைகளை வழக்கம் போல நிசா அழைத்துக்கொள்ள, தசிரா மட்டும், “ப்பா… ப்பா…” என விக்ரமை நோக்கி ஓடியது.
“அடடே தங்கமயிலு! என்னைத் தேடி வந்துட்டாங்களே… புவ்வா சாப்பிட்டாச்சா?” என்றபடியே மகளைத் தூக்கிக்கொண்டு சோபாவில் அமர, அவனை கேவலமாக முறைத்துக்கொண்டு எதிரில் அமர்ந்தாள் ரஞ்சனி.
விக்ரமிற்கு அருகில் பாவப்பட்ட முகத்துடன் அமர்ந்தான் முகுந்தன். இருவரையும் பார்த்து, “என்னடா இன்னும் உங்க பிரச்சனை தீரலையா?” என மகளைக் கொஞ்சிக் கொண்டே கேட்க,
“உனக்கு மட்டும் இப்போ பொண்ணு இல்லன்னு வச்சுக்கோயேன், என் அத்தைக்கு பையனே வேண்டாம்னு நானே உன்னை விசம் வெச்சு கொன்னுருப்பேன்.” எனக் கடுப்பில் ரஞ்சனி கத்த,
“ஏய் சும்மா இருடி…” என முகுந்தன் மனைவியை சமாதானம் செய்ய,
“நீ முதல்ல வாயை மூடு. முதல்ல உன்னைக் கொல்லணும், அப்புறம் அவனைக் கொல்லணும்.” என சகட்டுமேனிக்கு கத்த, ரவி மற்றும் ரித்தியைத் தவிர்த்து அனைவரும் ஹாலில் மீண்டும் ஒன்று கூடிட,
“என்னாச்சு ரஞ்சனிம்மா…?” என ரேணுகா கேட்க,
“ரஞ்சனி காரணம் இல்லாம பேசமாட்டாங்க ரேணும்மா.” என நிசப்தி கூற,
‘இவ வேற…’ என மனதுக்குள் நொந்து கொண்ட விக்ரம், ரஞ்சனியைப் பாவமாக பார்க்க, “நடிக்காதடா…” என பல்லைக் கடிக்க,
“சும்மா இரேன்டி…” என மீண்டும் முகுந்தன் கூற,
“என்ன ரஞ்சி?” என மீண்டும் கேட்ட ரேணுகாவிடம், “அத்தை, உங்க பையன்கிட்ட சொல்லி எனக்கு டிவோர்ஸ் வாங்கித் தர சொல்லுங்க.” என விக்ரமைப் பார்த்து கடுகடுவென சொல்லி முகுந்தனை முறைத்தாள்.
“ஏய் உனக்கென்ன பைத்தியமாடி? வாயை மூடு.” என முகுந்தன், மனைவியை எச்சரித்துக் கொண்டே அவளுக்கருகில் வந்து அமர்ந்து கையைப் பிடிக்க, அதைப் பட்டென்று தட்டிவிட்டவள்,
“டேய் கொலை காண்டுல இருக்கேன், ஒழுங்கா எழுந்து ஓடிடு.” என மீண்டும் கத்த,
“என்ன நடக்குது விக்கி, ஏன் ரஞ்சி இவ்வளவு கோபமா இருக்கா? நிசா சொல்ற மாதிரி காரணம் இல்லாம கோபப்பட மாட்டா. என்னடா பண்ணீங்க பிள்ளைய?” என ரேணுவும் கேட்க,
“ஏய் நான் கிரிமினல் லாயர்டி, சிவில் கேஸ் எல்லாம் நான் பார்க்கமாட்டேன். வேணும்னா அங்க நிக்கிறா பாரு, அவக்கிட்ட கொடு.” என நிசாவைக் காட்டி சொல்ல,
“நீ கிரிமினல் லாயரா இருந்து புடுங்கினது எல்லாம் போதும். ஒழுங்கா எனக்கு இவன்கிட்ட இருந்து டிவோர்ஸ் வாங்கிக் கொடுத்துடு. நீயா வாங்கி கொடுத்தா இவனுக்கு சேதாரம் கம்மியா இருக்கும். இதுவே நிசா வந்தா உன்னையும் சேர்த்து டிவோர்ஸ் பண்ண வச்சிடுவேன்.” என கோபம் குறையாமல் பேசிக் கொண்டிருக்க, விக்ரமோ எதிரில் அமர்ந்து தன் மகளின் பாதத்தைப் பிடித்துக் கொண்டிருக்க, அதுவோ தகப்பனது மீசையைப் பிடித்து இழுத்துக் கொண்டிருந்தது.
“உனக்கு ஏன்டி இவ்வளவு வன்மம்? அவனை பிடிக்கலையா டிவோர்ஸ் பண்ணிட்டு போ. அதுக்காக என் வாழ்க்கையில கும்மியடிச்சிட்டு போவியா? நல்ல எண்ணம்…” என்றதும், “துரோகி!” முகுந்தன், நண்பனைப் பார்த்து பல்லைக் கடிக்க,
“என்னாச்சு ரஞ்சனிக்கா? ஏன் இவ்வளவு டென்சன் ஆகுறீங்க? முகுந்தன் சார் பம்முறதைப் பார்த்தா அவர்தான் ஏதோ சம்பவம் பண்ணிருப்பார் போலயே?” என உஷா எடுத்துக் கொடுக்க,
“ஏன்மா நீயுமா?” என நொந்து கொண்ட முகுந்தன், “ரஞ்சி வா, வீட்டுக்கு போகலாம். இங்க நிலைமை சரியில்ல. இன்னொரு நாள் வந்து உன் பஞ்சாயத்தை தீர்த்துக்கோ.” என்றான்.
“இன்னொரு நாளா? ஹான்! இப்படி கொத்தா நீங்க இன்னொரு நாள் சிக்கமாட்டீங்க, அதனால இன்னைக்கே எல்லாத்தையும் முடிச்சிட்டு போயிடலாம்.” என்றவள்,
ரேணுகாவிடம், “அத்தை அங்க இருந்து என்னை கிளம்ப வைக்க எவ்வளவு நாடகம் போட்டான் இந்த முகுந்த். இப்போ மறுபடியும் அங்கேயே போகலாம்னு சொல்றான். இதை என்னனு நீங்களே கேளுங்க…” என கூறவும்,
“சோலி முடிஞ்ச்!” என ஆண்கள் இருவரும் கோரசாக சொல்லிவிட்டு ரஞ்சனியை முறைக்க, நிசா இருவரையும் யோசனையாக பார்த்தாள்.
அதில் விக்ரம் குழந்தையைக் கொஞ்சுவது போல் தலையைக் குனிந்து கொள்ள, முகுந்தனோ மனைவியிடம் காலில் விழாத குறையாக கெஞ்சிக் கொண்டிருந்தான்.
“நீங்க அங்க இருந்தா, நான் அங்க இருந்து கிளம்ப மாட்டேன்னு, இவங்க ப்ளான் பண்ணி உங்களை இங்க கூப்பிட்டு வந்துட்டாங்களா?” என ரஞ்சனியைப் பார்த்து நிசா கேட்க, சட்டென்று குழந்தையோடு எழுந்த விக்ரம் வெளியில் சென்றுவிட, முகுந்தன் அங்கிருந்த பெண்கள் நால்வரையும் பாவமாக பார்த்தபடி, ‘ஆமாம்’ என்று தலையசைத்தான்.
***
1 comment
இன்னும் அந்த பிசாசு எங்க இருக்கான்னு கண்டு பிடிக்கலையாக்கும்.
😀😀😀
CRVS (or) CRVS 2797