Home Love - Family - Romanceதளிர் – 64

தளிர் 64

நிசா சென்னை வந்தது, விக்ரம் அழைத்து அவளை மிரட்டியது, நிசாவிற்கு குண்டடி பட்டது, அதில் ஏற்பட்ட குழப்பத்தில் உஷா தற்கொலை முடிவை எடுத்தது, அதில் இருந்து வெளியில் வருவதற்கு முன், இறந்துவிட்டாள் என்று நினைத்தவள் உயிருடன் வந்தது, வந்தவள் வீட்டில் அனைவரிடமும் பிரச்சனை செய்ய, அது முத்திப்போய் ரித்திக்கும் ஸ்வாதிக்கும் வாக்குவாதம் அதிகமாகிட ஸ்வாதி, ரித்தியை கீழேத் தள்ளிவிட, அதில் ரித்தியின் வயிற்றில் அடிபட்டு குழந்தை இறந்தே பிறந்தது.

இதையெல்லாம் ஜீரணிக்க நேரம் கொடுக்காமல், தான் கொலை செய்த ஒருவன் இப்போது உயிருடன் வந்து நிற்க, ஒட்டுமொத்த அதிர்ச்சியையும் உள்வாங்கியவள் போல் அரண்டு போயிருந்தாள் நிசா.

எவ்வளவு வேகத்தில் வந்தானோ தெரியாது விக்ரம், அடுத்த அரை மணி நேரத்தில் வீட்டில் இருந்தான். குழந்தைகள் ஒரு பக்கம் அழுது கொண்டிருக்க, நிசா ஒரு பக்கம் பயத்தில் வெளுத்த முகத்துடன் ஒடுங்கி போய், பார்க்கவே பரிதாபமான நிலையில் அமர்ந்திருந்தாள்.

உள்ளே வந்தவன் இருக்கும் சூழ்நிலை உணர்ந்து செயல்படும் முன், குழந்தைகளுக்கு முன் நிசா வந்து விக்ரமிடம் ஒண்டிக்கொண்டாள்.

அவள் வந்து தனக்குள் புதைந்ததில் அதிர்ந்தவன், “ஹேய் என்னம்மா? என்ன? இங்க பாரு நிசாம்மா ஒன்னுமில்ல… இங்க பாரு முதல்ல, குழந்தைகளும் உன்னைப் பார்த்து பயப்படுறாங்க, அழறாங்க பாரு…” என்றவளை அணைத்து, முதுகைத் தடவி என சமாதானம் செய்தாலும், நிசாவால் அந்த அதிர்ச்சியிலிருந்து ஒரு நிதானத்திற்கு வரமுடியவில்லை.

நிசாவின் நிலை அவனுக்குப் புரியாமல் இல்லை. ஆனால் இப்போது இவளோடு சேர்த்து குழந்தைகளையும் சமாளிக்க வேண்டும். ஹாஸ்பிடலுக்கு சென்று ரித்தி மற்றும் அம்மாவைப் பார்க்க வேண்டும். அதற்கு முதலில் இவளை சரி செய்ய வேண்டும் என்று நினைத்தவன், தனக்குள் இருந்தவளைப் பிரித்து எடுத்தான்.

அதில் அவள் மீண்டும் திமிற, “நிசா!” என ஒரு அதட்டலிட, அந்த சத்தத்தில் மேலும் அவள் அரண்டு போய் விழிக்க, “இங்க பாரும்மா, ஒன்னும் இல்ல… ஒன்னுமே இல்ல… நீ பயப்படுற போல ஒன்னுமே இல்லம்மா. அவன் உன் பக்கத்துல கூட வர முடியாது, புரிஞ்சிக்கோம்மா…” என பொறுமையாக எடுத்து சொல்ல, நிசாவின் முகத்தில் அதை உள்வாங்கிய உணர்வே இல்லை.

“நிசா இட்ஸ் எமர்ஜென்சி. நான் ஹாஸ்பிடல் போயே ஆகணும். நான் உன்னை பார்க்கவா, அங்க பார்க்கவ? ரித்தியோட பேபி நோ மோர்…” என அதட்டலாக பேசி, கடைசியில் கரகரப்பாக முடிக்க,

“என்ன…?” என அதிர்ந்து, “பேபி… பேபிக்கு என்ன? எப்படி…? அய்யோ…!” என கதற, அவள் அழுகையைப் பார்த்து குழந்தைகளும் அழ ஆரம்பிக்க, “கடவுளே!” எனத் தவிக்க ஆரம்பித்தான் விக்ரம்.

அதட்டி, உருட்டி நிசாவை சோபாவில் உட்கார வைத்தவன், தசிராவைத் தூக்கி தோளில் போட்டு சமாதானம் செய்து, நிசாவிடம் விட்டுட்டு ரித்தியின் பிள்ளைகள் இருவரையும் அணைத்துக் கொண்டவன், “அம்மாவுக்கு ஃபீவர் கண்ணம்மா, அதனால ஹாஸ்பிடல் கூப்பிட்டு போயிருக்காங்க. அம்மாக்கு காய்ச்சல் வந்ததால அம்மா வயித்துக்குள்ள இருக்குற குட்டி பாப்பாவுக்கும் காய்ச்சல் வந்துடுச்சு, வேற பயப்படுற மாதிரி எல்லாம் இல்ல.” என மிக மிக பொறுமையாக கூறிவிட்டு இருவரையும் பார்க்க, அதில் நித்திலனுக்கு ஏதோ புரிந்திருக்க வேண்டும்.

மாமனின் அருகில் வந்து, “மாமா அப்படின்னா பாப்பா இல்லையா…?” என நித்திலன் கேட்க, பதில் சொல்லவே முடியவில்லை அவனால்.

நித்திலனை இழுத்து அணைத்துக் கொண்டவன், “நம்ம பாப்பாவை சாமிக்கு ரொம்ப பிடிச்சு போச்சாம், அதனால அவர்கூட தான பாப்பா இருக்கணும்னு கூட்டிட்டு போயிட்டார்.” என அழுகையை அடக்கியபடியே சமாதானம் செய்ய, நிலா இன்னுமே அவன் கழுத்தடியை விட்டு நகரவில்லை.

“நீங்க மூணு பேரும் இங்கே சமத்தா இருந்தா, நான் ஹாஸ்பிடல் போய் பார்த்துட்டு, நரேன் அங்கிளை இங்கே அனுப்பி விடுறேன். நீங்களும் அங்க வரலாம், மாமா அங்கே போயே ஆகணும், என்ன செய்யலாம் சொல்லுங்க?” என அதே குரலில் கேட்க,

“நான் இவங்க மூணு பேரையும் பார்த்துக்குவேன் மாமா, நீங்க போய் அம்மாவைப் பாருங்க, அம்மா பாவம்.” என்ற நித்திலனின் புரிதலும் அறிவுக் கூர்மையும், விக்ரமை வியப்பில் ஆழ்த்தியது.

“எஸ்! நித்திலன் இஸ் குட் அன்ட் பிக் பாய். ஹீ இஸ் சூப்பர் மேன்!” என சின்னவனை உத்வேகப்படுத்தி, “கண்ணா, பாப்பா ரெண்டு பேரையும் கூப்பிட்டு போ, நான் அத்தைக்கூட பேசிட்டு வர்றேன்.” என மூவரையும் அறைக்குள் அனுப்பியவன், நிசப்தி அமர்ந்திருந்த சோபாவின் அருகில் வந்து, அவளின் கைகளைப் பிடித்தபடி காலுக்கடியில் அமர்ந்தான்.

சில நொடி மௌனத்திற்குப் பிறகு, “நிசா, உனக்கு என்மேல கோபம் என்னை கொல்லுற அளவுக்கு இருக்கும்னு எனக்குத் தெரியும். உன்னுடைய கோபமும் நியாயம்தான். இதுக்கு நீ என்ன தண்டனை கொடுத்தாலும் எனக்கு சம்மதம்தான்.” என்றவனை நம்பாமல் அதிர்ந்து பார்க்க,

‘ஆமாம்’ என்பது போல் தலையாட்டியவன், “உங்கிட்ட உக்காந்து பேசுற தகுதி கூட எனக்கில்லனு எனக்குத் தெரியும். உனக்கு நடந்த எல்லாக் கஷ்டத்துக்கும் நானும் காரணம். எனக்காக மட்டும்தான் ஸ்வாதி இந்தளவுக்கு இறங்கி செஞ்சிருக்கானு உனக்குத் தோனுதா?” என அவள் முகத்தைப் பார்க்க, ‘அப்படித்தானே ஸ்வாதியும் சொன்னாள், ஆனால் அப்படியில்லையா?’ என்று மிகுந்த குழப்பத்தில் நிசாவும் அவனைப் பார்த்தாள்.

“விக்னேஷ்…” என பெருமூச்சுவிட்டவன், “விக்னேஷ்க்காக மட்டும் தான் இவ்வளவும் பண்ணிருக்கா.” என்றவன், “இப்போ நீ ஓகேவா, பேசலாமா?” என தவிப்பாக கேட்க,

“ம்ம்…” என ஆழ்ந்து மூச்செடுத்தவள், “நான் ஓகேதான், ஆனா இப்போ இதைப்பத்தி பேசுற சூழல் இல்லனு நினைக்கிறேன். அங்க உங்களுக்காக எல்லாரும் வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க. ரேணும்மாவுக்கு கண்டிப்பா நீங்க கூட இருக்கணும். எல்லாருக்கும் ஏதோ ஒரு வகையில நீங்க தேவைப்படலாம். நீங்க கிளம்புங்க, எல்லாம் சரியானதும் நாம பேசலாம்.” என அமைதியான குரலில் சொல்ல, விக்ரமிற்கு அது புரிந்தாலும் நிசாவை மீண்டும் இப்படி ஒரு அமைதியான சூழலில், இருக்க வைத்து பேசமுடியுமா என்று சந்தேகம் வரவே தயக்கத்துடன் அவளைப் பார்த்தான்.

ஏனோ விக்ரமை அவளால் இப்படி பார்க்க முடியவில்லை போலும், “என் வாழ்க்கைல இதுவரை நடந்த எதையும் உங்களால மாத்த முடியுமா?” என்று கேட்க, அவன் பரிதாபமாக பார்த்தான்.

பின் ஒரு பெருமூச்சுடன் தொடர்ந்தவள், “முடியாது இல்லையா? இதுவரைக்கும் என்னை சுத்தி என்ன நடந்ததுனு ஒரு யூகம் இருந்தது. இப்போ நீங்க பேச நினைக்கிறதும் அதை சார்ந்து தான்னும் புரியுது. ஆனா அதை இப்போ பேச வேண்டாம். நான் இன்னுமே மென்டலி ஸ்ட்ராங் இல்லை. வெளியேதான் அப்படி காட்டிக்கிறேன். ஆனா உள்ளுக்குள்ள ரொம்ப வீக், இதெல்லாம் சமாளிக்க எனக்கு கொஞ்சம் மன தைரியம் வேணும். அது எனக்கு சுத்தமா இல்லை. ஐம் மென்டலி வீக், சோ ஐ நீட் சம்டைம்.” என்றவள், அவன் மேல் படாமல் தன் கால்களை நகட்டிக்கொண்டு எழுந்து, குழந்தைகளின் அறைக்குள் நுழைந்துவிட்டாள்.

விக்ரமிற்கு ஏமாற்றமாக இருந்தாலும், இப்போது ஆரம்பித்தால் இந்த பேச்சுவார்த்தை முடியும் என்ற நம்பிக்கையும் இருக்கவில்லை. அதனால் முதலில் ரித்தியைப் பார்க்கலாம் என்று மருத்துவமனைக்கு கிளம்பிவிட்டான்

இங்கு மருத்துவமனையில் ரித்தி எழுந்து குழந்தையைப் பற்றிக் கேட்டால் என்ன பதில் சொல்வது, அவளை எப்படி சமாளிப்பது என யோசனையும் பயமுமாக, அடுத்தடுத்து செய்ய வேண்டிய வேலைகளை செய்து கொண்டிருக்க, அப்போதுதான் விக்ரம் வந்து சேர்ந்தான்.

விக்ரம் வரவும் தான் ரவியால் மற்றதை யோசிக்கவே முடிந்தது. நரேனை நிசாவிற்கு துணையாக வீட்டுக்கு அனுப்பியவன், உஷாவை ரேணுகாவிற்கு துணையாக இருக்க வைத்தான்.

மதியழகிக்கு மகன் என்ன சொல்வானோ? விக்ரம் என்ன பேசுவானோ என்று பயம் மனதைக் கவ்வினாலும், அதை வெளிக்காட்டினாலும் அமைதியாக அமர்ந்திருக்க, இதில் ஸ்வாதி அங்கிருந்து கிளம்பியதை யாருமே கவனிக்கவில்லை.

விக்ரம் உள்ளே நுழைந்ததும் முதலில் ஸ்வாதியைத்தான் தேடினான். அவளை அடித்து துவம்சம் செய்யுமளவிற்கு கோபம். ஆனால் அவள் அங்கில்லை என்றதும், தன் கையலாகத தனத்தை எண்ணி எரிச்சலில் அடுத்த வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தான்.

ரேணுகாவிற்கு வேறு பிபி தன்னால் எகிற, அவரையும் கேஸ்வாலிடியில் அனுமதித்துவிட்டு ரவியைப் பார்க்க, அவனின் வலியை யாரிடமும் பகிர முடியாமல், ஓய்ந்து போய் அமர்ந்திருந்தான்.

ரஞ்சனியிடம் குழந்தையைப்பற்றி விசாரித்துவிட்டு, ரவியிடம் வந்தான்.

தன் தோளில் கையை வைத்த விக்ரமை நிமிர்ந்து பார்த்த ரவி, “என்னோட குழந்தை விக்கி… அது இந்த உலகத்தைப் பார்க்காமலே போயிடுச்சே விக்கி… ரித்தி எழுந்து கேட்டா நான் என்னடா பதில் சொல்வேன்…?” எனக் கதறியவனை, என்ன சொல்லித் தேற்ற என புரியாமல் அமைதியாக நின்றான் விக்ரம்.

அவனுக்குமே ரித்திக்கு என்ன பதில் சொல்வது, அவளுக்கு எப்படி புரிய வைப்பது எனத் தெரியவில்லையே… ரேணுகா சரியாகி வந்தால் கூட நிலைமையை ஓரளவுக்கு சமாளித்து கொள்வார். அவரும் இப்படி மயக்கத்தில் இருக்கிறாரே என்று தனக்குள் மருகி நின்றான் அவன்.

“விக்கி ஃபார்மாலிடிஸ் எல்லாம் முடிஞ்சது, பேபியை எடுத்துக்கலாம்.” என்று வந்த முகுந்தன், இருவரின் முகத்தையும் பார்த்து அமைதியாக நின்றான்.

“அம்மாவுக்கு எப்போ கான்சியஸ் வரும், அடுத்து என்ன செய்றதுனு கேட்கணும்?” என்ற விக்ரமிடம்,

“விக்கி ஆன்ட்டி கண் விழிக்க டைம் ஆகும், அதே நேரம் ரித்தியும் கண் விழிச்சிடுவா. ரெண்டு பேரையும் சமாளிக்க முடியுமானு பாரு, ரிஸ்க் எடுக்காதே…” என,

“கடவுளே என் குழந்தை…!” என ரவி கதறிட, ‘ரவி… ரவி…’ என மற்ற இருவரும் தவித்துதான் போயினர்.

ஒருவழியாக ரவியை சமாதானம் செய்து, குழந்தைக்கு செய்ய வேண்டியதை செய்து, அதை ரவியின் வீட்டில் உள்ள கார்டனில் ஒரு ஓரமாகவே அடக்கம் செய்ய முடிவு செய்தனர். ரித்தி கண் முழிக்கும் முன் செய்துவிட வேண்டும் என யோசித்து, அதற்கான ஏற்பாடுகளை செய்ய நரேனை அழைத்தவன், நிசாவைப் பற்றியும் விசாரித்துக் கொண்டான்.

ஆண்கள் மட்டுமே அங்கிருக்க, இப்போது மதியழகியையும் காணவில்லை. கடைசி காரியம் செய்ய பாட்டியாக அவரைத் தேட ஆளைக் காணவில்லை. மருத்துவமனையில் இருப்பார் என்று நினைத்து அவரை விட்டுவிட்டு, மற்ற காரியங்களை செய்ய ஆரம்பித்தனர்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் ரவி மற்றும் ரித்தியின் குழந்தை, தாய்மாமன் விக்ரமின் மூலம் நல்லடக்கம் செய்யப்பட, பூமிக்குள் புதைக்கப்பட்டது. இல்லை இல்லை… விதைக்கப்பட்டது அந்த பிஞ்சு.

***

You may also like

1 comment

M. Sarathi Rio April 20, 2026 - 7:48 pm

அடிப்பாவி…! ஆட்டை கடிச்சு, மாட்டை கடிச்சு, கடைசியில குழந்தையையும் விட்டு வைக்கலையா…? இவளெல்லாம் நல்லா இருப்பாளா ?

😀😀😀
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Comment

About Me

Featured