தளிர் 63
சென்னை விமான நிலையம் அதன் பரபரப்போடு இயங்கிக் கொண்டிருந்தது. மாலை நான்கு மணிக்கு சென்னையில் இருந்து கோவா செல்லும் ப்ளைட்டிற்காக விக்ரம் காத்திருக்க, அவனை வழியனுப்ப வந்திருந்தான் நரேன்.
“பாஸ் இதெல்லாம் சரியா வருமா?” என்றான் நரேன். அவனுக்கு விக்ரமின் இந்த செயல்பாட்டில் கொஞ்சம் உடன்பாடில்லை. ஆனாலும் அவன் சொல்வதை செய்தான், கேட்டான்.
“டேய் மறுபடியும் ஆரம்பிக்காத, ப்ளான்ல எந்த சேன்ஞ்சும் இல்ல. நான் சொன்ன மத்த வேலையெல்லாம் முடிஞ்சதா? இந்த மீட்டிங் எனக்கு சக்ஸஸ்ஃபுல்லா முடியணும். நான் வரும் போது உனக்கு கொடுத்த எல்லா வொர்க்கும் முடிஞ்சிருக்கணும், ரைட்!” எனவும்,
“ஸ்யூர் பாஸ், பட் நாளைக்கு நிசா வந்துடுவா. அவ வரும்போது நீங்க இல்லாம எப்படி?” என்றான் நரேன் யோசனையாக.
“இருந்தா மட்டும் என்ன செய்ய முடியும்? உடனே பாசிடிவா எதையும் யோசிக்காத. நிசா வர்றேன்னு சொன்னதே என்னை யோசிக்க வைக்குது. அவ என்ன ப்ளான்ல வர்றானு ஃபர்ஸ்ட் வாட்ச் பண்ணலாம். இந்த அம்மா மட்டும் எதுவும் சொதப்பாம இருக்கணும்.” என விக்ரம் பெருமூச்சுவிட,
“அவங்க அதெல்லாம் பர்ஃபெக்டா பண்ணுவாங்க, உங்க பொண்ணை பார்த்து நீங்க சொதப்பாம இருந்தா சரி.” என நரேன் சிரிக்க,
“அது கொஞ்சம் கஷ்டம்தான்…” என சிரித்த விக்ரமின் முகத்தில் வேதனையின் சாயல் வந்து போனது.
“பாஸ் எல்லாம் சரியாகும், நிசா உங்களைக் கண்டிப்பா புரிஞ்சிப்பா. அவ ஒன்னும் பழிவாங்குற டைப் எல்லாம் கிடையாது. அந்த நேரம் கோபத்துல பேசுறது மட்டும்தான் பாஸ்…” என ஒரு வழியாக சமாதானம் செய்து அனுப்பி வைத்தவன், உஷாவிற்கு அழைத்தான்.
இரண்டு முறை அழைத்தும் எடுக்கவில்லை பெண். ‘என்னாச்சு? இந்த லூசு போன் எடுக்காம எங்க சுத்திட்டு இருக்கோ தெரிலயே?’ என புலம்பியபடியே தன் ஆஃபிஸ்க்கு கிளம்பினான்.
ஆபிஸ்க்கு வந்ததும் முதல் வேலையாக உஷாவைப் பற்றி அறிந்துகொள்ள, மனோகருக்குத்தான் அழைத்தான் நரேன்.
அந்த நேரம்தான் அங்கு உஷாவிற்கும் மனோகருக்கும் காரசாரமாக ஒரு விவாதம் நடந்து கொண்டிருந்தது.
நரேனின் எண்ணைப் பார்த்த மனோ, ‘இவ இருக்கும் போது பேசமுடியாது’ என அறிந்து, கட் செய்வதற்குப் பதிலாக அட்டென்ட் செய்து மேஜையில் போட்டுவிட்டான்.
“ஹலோ! ஹலோ!” என கத்திக் கொண்டிருந்த நரேன், உஷாவின் பேச்சைக் கேட்டதும் கத்துவதை நிறுத்திவிட்டு அங்கு நடக்கும் பேச்சைக் கேட்க ஆரம்பித்தான்.
“உஷா நான் சொல்றதை நீ புரிஞ்சிக்கவே மாட்டியா? உனக்கு வந்த இத்தனை எவிடென்சும் விக்ரமுக்கு போகாம இருக்குமா? இல்ல, இதெல்லாம் விக்ரமுக்கு தெரியாம இருக்குமா? அவருக்குத் தெரியாம உனக்கு வர வாய்ப்பே இல்ல, தேவையில்லாம நீ இதுல இறங்காத. இன்வெஸ்டிகேட் பண்றேன், குற்றவாளியை கண்டுபிடிக்கிறேன்னு ஆரம்பிச்சு, புதுசா எந்த சிக்கல்லையும் மாட்டிக்காத. எனக்கு என்னமோ அவங்களேதான் உனக்கு அனுப்பிருப்பாங்களோனு தோனுது.” என தனக்கு வந்த ஆதாரங்களைப் பார்த்து கொந்தளித்துக் கொண்டிருந்த தோழிக்கு, தன் பொறுமையெல்லாம் பறந்து போன எரிச்சல் குரலில், பேசிக் கொண்டிருந்தான் மனோகர்.
‘இவன் இங்க இருக்க வேண்டிய ஆளே இல்ல…’ நரேன் மைண்ட் வாய்ஸ்.
“மனோ உனக்கு இன்னும் நான் எப்படி புரிய வைப்பேன்? அந்த விக்ரமும் அவன் குடும்பமும் சேர்ந்து நிசாவோட வாழ்க்கையை மொத்தமா அழிச்சிருக்காங்க. அதுக்கான எவிடென்ஸ் எல்லாம் இருந்தும் நம்மாளால எதுவுமே செய்ய முடியல. எல்லாம் பணம் இருக்குற திமிர். பணத்தால எதையும் மாத்திடலாம் என்ற அகம்பாவம், அதை உடைக்கணும். அவனை நான் சும்மா விடமாட்டேன் மனோ, அவனுக்கு கண்டிப்பா தண்டனை கிடைச்சே ஆகணும்.” என ஆக்ரோசமாகக் கத்த,
‘ஷப்பா! இந்த சில்வண்டு தொல்லை தாங்கலடா. சிஐடி சகுந்தலானு நினைப்பு.’ என இருவரும் ஒன்றுபோல தலையில் அடித்துக் கொண்டனர்.
“ஏய் உஷா! உனக்கு ஒருதடவை சொன்னா புரியாதா? அந்த விக்ரம் மாட்டினா, உன் அழகன் அந்த எருமை மாடு புருசனும் தான் மாட்டுவான். ஏன், முதல் அக்யூஸ்டே உன் புருசன்தான், அவன்தான் முதல்ல மாட்டுவான். அப்புறம்தான் விக்ரமும் ஸ்வாதியும்.” எனக் கடுப்பில் கிண்டலாகக் கூற,
‘கபோதி பய! இவனே அந்த கிறுக்கிக்கு எடுத்து கொடுப்பான் போல…’ என நரேன் மனோவைத் திட்ட,
“அதெல்லாம் பரவாயில்ல, அந்த பைத்தியக்கார மூதேவியும் உள்ளேயே போகட்டும். வெளியில இருந்து யாருக்கு என்ன யூஸ்? இன்னும் அந்த கொலைகாரன்கூட சேர்ந்து திருட்டு வேலைதான் பார்ப்பான்.” என நரேனை கழுவி ஊத்த,
‘எத! பைத்தியக்கார மூதேவியா!’ அதுலயே நரேன் ஸ்டன்னாகிவிட, இங்கு மனோகர் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தான்.
“போதும் மனோ, எதுக்கு இப்போ கெக்கபிக்கனு லூசு போல சிரிக்கிற?” என எரிச்சல் குரலில் கேட்க,
அதில் சட்டென்று சீரியஸ் மோடிற்கு வந்தவன், “உஷ், நான் சொல்றதை சொல்லிட்டேன், அப்புறம் உன் இஷ்டம். நீ மைக்கை தூக்கிட்டு போனா, உன் பின்னாடி கேமராவோட வர நான் தயாரா இருக்கேன். ஆனால் நீ இன்வெஸ்டிகேட் பண்றேன் என்ற பேர்ல, இந்த பேனா கத்தியை மட்டும் வச்சுட்டு சுத்தின… அம்மாடியோவ்! என்னை ஆள விட்டுரு சாமி, எனக்கு இன்னும் ஒரு தடவை கூட கல்யாணம் ஆகல. உன்கூட வந்து பரலோகம் போக எனக்கு ஆசையில்ல…” என மனோ முடிக்கும் முன்னே அவனை மொத்தி எடுத்திருந்தாள் உஷா.
அடிதடி முடிந்து சிலபல நிமிடங்கள் கழிந்து, “பீ சீரியஸ் மனோ, நான் இதை கண்டிப்பா செய்யத்தான் போறேன். எனக்கு யாரைப் பத்தியும் கவலையே இல்லை, டாட்.” என தன் விளையாட்டுத்தனத்தை விட்டு மிகவும் சீரியசாக சொல்ல,
“ம்ச்! என்னவோ பண்ணித் தொலை, ஆனா என்னை எதுலயும் சேர்க்காத.” என மனோகரும், சொன்னால் புரிந்து கொள்ளாதவளைப் பார்த்து எரிச்சலில் கத்திவிட்டு போய்விட்டான்.
பதிலுக்கு எரிச்சலானவள், “சரிதான் போடா டுபுக்கு! உன்னை எப்படி, எங்க சிக்க வைக்கணும்னு எனக்குத் தெரியும்டா என் அழுகிப்போன டொமேட்டோ, ஹா… ஹா…” என வில்லி போல பேசியவள், “லூசு மாக்கான்! கோபத்துல போனை எடுக்காம போகுது பாரு…” என மனோகரைத் திட்டிக்கொண்டே அதை எடுக்கப் போக,
“ஆத்தி கண்டுபிடிச்சிடுவாளோ! இப்போ கட் பண்ணாலும் தெரிஞ்சிடுமே…” என நரேன் அங்கு புலம்ப,
அவனை காப்பது போல, “டோன்ட் டச் மை போன்.” என வேகமாக வந்த மனோகர், அவளிடமிருந்து தன் போனை பிடுங்கிக் கொண்டான்.
“தோடா, உன் இத்துப்போன போன் யாருக்கு வேணும்? அதுல முக்கால்வாசி சன்னி லியோன் போட்டோவும் வீடியோவும் தான வச்சிருக்க. பெரிய சிதம்பர ரகசியம் மறைக்க வந்துட்டாரு, ச்சீ ப்பே…” என நக்கலடிக்க,
“சன்னி லியோன் என் தலைவி, என் தலைவிய தப்பா பேசின சாவடிச்சிடுவேன், ஓடிரு.” என மனோ கத்த,
“அவ்வா… அவ்வா… தலைவியா? உருப்புடுவியாடா நீயெல்லாம்…?” என அதிர்ந்து சாபம் விட,
“என் தலைவியோட அருமை, பெருமை எல்லாம் உனக்குத் தெரியுமா? முதல்ல இடத்தை காலி பண்ணு…” என மனோ நக்கலடிக்க,
“டேய், ஒரு சன்னி லியோனுக்காக என்னை இன்டைரக்டா இன்சல்ட் பண்ற…” எனப் பல்லைக் கடிக்க,
“இன்டைரக்டா எல்லாம் இல்ல, டைரக்டாவே தான் இன்சல்ட் பண்றேன். இனிமே என் தலைவியை கிண்டலடிக்கிற வேலை வச்சிக்கிட்ட, சங்கத்துல கம்ப்ளைன்ட் பண்ணி உன்னை உண்டுல்லன்னு செஞ்சிடுவேன், பார்த்துக்கோ.” என மனோ சீரியசாக பேச,
“எப்புட்றா…!” என அதிர்ச்சியில் வாயைப் பிளந்த உஷா பின், “நான் அடிச்சா தாங்கமாட்ட நாலுமாசம் தூங்கமாட்ட…” என பாடலை சத்தமாகப் பாடிக்கொண்டே, மனோகரை இடித்து கீழேத் தள்ளிவிட்டு ஓடிவிட்டாள் உஷா.
அதில், “அம்மா…!” என அலறியவன், “படுபாவி எப்படித் தள்ளிவிட்டு போறா பாரு குண்டோதரி…” எனப் புலம்பிக்கொண்டே வெளியில் வர, இங்கு தன் மனைவியின் புதிய பரிணாமத்தில் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தான் நரேன்.
***
விக்ரம் சென்றிருப்பது எக்ஸ் மினிஸ்டர் கேஸ் பத்தின விவரங்களை சேகரிப்பதற்கு. அதற்குத்தான் மினிஸ்டர் மற்றும் அவரின் பினாமிகளுடன் இன்று மிக முக்கியமான, ரகசியமான மீட்டிங்.
விக்ரம் இந்த கேசை நேரடியாக எடுத்துக் கொள்ள காரணம், அந்த மினிஸ்டரால் தான் மிக முக்கியமான வேலை நடக்க வேண்டியிருந்தது. அதோடு நிசா வரும்போது அவன் அங்கு இருக்க வேண்டாம் என்று நினைத்ததும் முக்கியக் காரணம்.
***
“ம்மா, நாளைக்கு விக்கிய கூப்பிட நான் போவேன், நிசாவை வெல்கம் பண்ண ரவி போவார். நீங்க வீட்டுக்கு போறீங்களா, எப்படி?” என ரித்தி கேட்டுக் கொண்டிருக்க,
“நிசா இதைபத்தி பேசவே இல்ல ரித்தி, என்னை அங்க வாங்கனு கூட சொல்லவே இல்ல. அவ என்ன நினைக்கிறானே தெரில. உன் அண்ணன் வேற ஏதேதோ ப்ளான் பண்றான். கடைசில மொத்தமா சொதப்ப போகுது. எங்கிட்ட நல்லா வாங்கி கட்டப் போறான்.” என கடுப்பாக சொல்ல,
“ம்மா… அவளுக்கு நாம கண்டிப்பா டைம் கொடுக்கணும். எல்லாமே நம்ம இஷ்டத்துக்கு நடத்திக்கக்கூடாது. எனக்குத் தெரிஞ்சி நிசா எல்லாம் யோசிச்சு, அதுக்கு தகுந்த மாதிரிதான் வருவா. நீ அங்க போனா, அவளுக்கு அந்த வீட்டுல ப்ரைவைசி இருக்காதுனு நினைக்கலாம். அவளும் அவ அப்பாவும் மட்டும் இருந்த வீடு. தனியா இருக்கணும்னு நினைக்கலாம். நீ எதையாச்சும் யோசிச்சி எங்களையும் டென்சன் பண்ணாத.” என ரித்தி எடுத்து சொல்ல,
“மூளைக்கு புரியுது, மனசுக்கு புரியல என்ன செய்ய சொல்ற? சரி, நீ சாப்பிட்டு கிளம்பு. மதி நாலு தடவை போன் பண்ணியாச்சு.” என்றவர் மட்டும் அல்ல, அனைவருமே நிசா வரும் அடுத்த நாளை ஆவலுடன் எதிர்பார்த்தனர்.
மறுநாள் காலை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த, நிசா சென்னை வரும் நாள்.
***
“நிசா, நீயும் குழந்தையும் கவனமா இருக்கணும், அங்க உன்னால சமாளிக்க முடியலனு எப்போ தோனுதோ அப்பவே இங்க வந்துடு. யாரும் இல்ல, எங்கே போவோம்னு நீ எப்பவும் தனிமையா யோசிக்கக்கூடாது, புரியுதா?” என தசிராவை கையில் வைத்தபடி, நிசாவிடம் சொல்லிக் கொண்டிருந்தாள் சாரு.
“இந்தக் குட்டியைத்தான் ரொம்ப மிஸ் பண்ணுவேன், அடுத்தடுத்து எனக்கு இங்க ரெண்டு கேஸ் இருக்கு நிசா. அது மட்டும் இல்லைன்னா நான் உங்ககூடவே வருவேன். எனக்கும் கொஞ்சம் சேன்ஞ்சிங்கா இருக்குமில்ல…
நிசா அங்கே போனதும் பழசெல்லாம் ஞாபகம் வரும், அதை தவிர்க்க முடியாது. ஆனா அதிலிருந்து வெளியே வரப் பார். நீ இப்படி இருந்தா உன் அப்பாக்கூட உன்னை மன்னிக்க மாட்டார். அதோட உன் நிலையைப் பார்த்து அவரோட ஆன்மாவும் அழுது புலம்பும். அதனால எல்லாத்தையும் மறந்து வாழப்பார்.
நீ ஏதோ ஒரு முடிவோடத்தான் அங்கே போறனு எனக்குத் தெரியுது. ஆனா ஒன்னு மட்டும் புரிஞ்சிக்கோ, நான் விசாரிச்ச வரைக்கும் இந்த விக்ரம் கொஞ்சம் மோசமான ஆளுதான். ஆரம்பத்துலயே விக்ரம் கூட சண்டை போடாத, எனக்குத் தெரிஞ்சி ஹீ இஸ் ஹேன்டில் வித் கேர் ப்ராடக்ட். சோ, ரொம்பவே கவனமா ஹேன்டில் பண்ணு.” என ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டிருக்க, அதற்கு நிசாவிடம் வெறும், ‘ம்ம்… சரி… ஒரு தலையாட்டல்’ மட்டும் தான் பதிலாக கிடைத்தது.
“ம்ச்…” என பெருமூச்சுவிட்ட சாரு, “டேக் கேர்டா! ஹெல்த்தை பார்த்துக்கோ, அடிக்கடி வீடியோ கால் பண்ணு.” எனத் தோளோடு அணைத்து குழந்தையைக் கொடுக்க, பயணிகளுக்கான அழைப்பு வர, குழந்தையோடு சேர்த்து சாருவை இறுக்கி ஒருமுறை அணைத்து விடுவித்தவள், “தேங்க்ஸ்டா!” என்றதோடு, தன் புதிய பயணத்தை நோக்கி அடியெடுத்து வைத்தாள் நிசா.
இதோ, நிசா சென்னை வந்து அடுத்தடுத்த நிகழ்வுகள் நடந்திருக்க, அனைத்தையும் அசை போட்டபடி அவரவர் யோசனையில் இருந்தனர் அனைவரும்.
விக்னேஷும் ஸ்வாதியும் என்ன செய்ய போகிறார்கள்? அவர்களை விக்ரம் எப்படி தடுக்க போகிறான்? குழந்தையையும் நிசப்தியையும் எப்படி இவர்களிடமிருந்து காப்பாற்ற போகிறான் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
***
1 comment
இவங்க எல்லாம் இவங்களுங்குள்ளத் தான் யோசிக்கிறான்ங்க, அங்க ரெண்டு பேர் இவங்க எல்லாரையும் போட்டுத்தள்ள
கிளம்பி வந்துட்டிருக்காங்கன்னு இவங் யாருக்குமே தெரீயலை போங்க.
😀😀😀
CRVS (or) CRVS 2797