Home Antiheroதளிர் – 81

தளிர் 81

இருவரும் உருண்டு புரண்டு சண்டை போட்டதை சிரிப்புடன் பார்த்தவள், பின் சிங்கில் தட்டைப் போட்டுவிட்டு குழந்தையோடு சென்று படுத்துவிட்டாள்.

சில நிமிடங்கள் கழிந்துதான் இருவருக்கும் அது தெரிந்தது. ‘எல்லாம் உன்னால தான்டா…’ என, இருவரும் மாறி மாறி சொல்லிக்கொண்டு, மீண்டும் ஒரு சண்டையைத் தொடர்ந்து அதை முடிக்க பல நிமிடங்கள் ஆனது.

அப்போது முகுந்தனுக்கு ரஞ்சனி அழைக்க, “என் பொண்டாட்டியால நீ தப்பிச்ச…” என்றபடியே போனை எடுத்து பேச ஆரம்பித்தான் முகுந்தன்.

“முதல்ல இடத்தை காலி பண்ணு.” என்றவன், “ரஞ்சி, அவனை போ போன்னு சொன்னா, என் பொண்டாட்டி தொல்லை தாங்க முடியல. அதனால நான் ரெண்டு நாள் இருந்துட்டு போறேன்னு சொல்றான்.” என விக்ரம், ரஞ்சனிக்கு கேட்கும்படி கத்திச் சொல்ல,

இங்கு ரஞ்சனி சாமியாட ஆரம்பிக்க, “கடவுளே!” எனத் தலையில் கை வைத்த முகுந்தன், “கடைசி வரை நிசா உன்னை மன்னிக்கவே கூடாதுடா பாவி. இது என்னோட சாபம்!” என்று விக்ரமைத் திட்டியபடியே, தன் துணிகளை அள்ளிக்கொண்டு வேகமாக காரை நோக்கி ஓடினான்.

நண்பனின் சாபத்தையும் ஓட்டத்தையும் பார்த்த விக்ரமிற்கு சிரிப்புத்தான் வந்தது. ‘எப்படி பொண்டாட்டிக்கு பயந்துக்குறாங்க, இந்த பசங்க.’ என நினைத்த நொடி, தானும் இப்போது அப்படி ஒரு சூழலில் தான் இருக்கிறோம் என்ற எண்ணம் வரவும், அய்யோ என்றானது அவனுக்கு.

இவளை எப்படி சமாதானம் செய்ய என யோசித்தபடியே நிசாவிடம் செல்ல, அவளோ குழந்தையை அணைத்தபடி ஏசியை கூட போடாமல், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.

‘இப்போதானே வந்தா, அதுக்குள்ள எப்படி தூங்கினா?’ என நினைத்துக்கொண்டே அவளுக்கருகில் வந்தமர்ந்தான். கைகள் தன்போல் அவளது முகத்தை வருட ஆரம்பித்தது.

கைகள் நடுங்க, கண்கள் கூட லேசாக கலங்க ஆரம்பித்தது. ‘தன்னை காதலித்ததை தவிர, அவள் வேறு என்ன தப்பு செய்தாள். ஆனால் அவள் பட்ட கஷ்டம் ஷப்பா! வேண்டாம்… வேண்டாம்… எதையும் யோசிக்க வேண்டாம். போனது எல்லாம் போனதுதான்.’ என்று அதை அப்படியே ஒதுக்கினான்.

இனி வரும் வாழ்நாட்களில் அந்த கஷ்டத்தின் சுவடு கூட தெரிந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இத்தனை யோசனையிலும் அவன் விரல்கள் நிசாவின் முகத்தை வருடுவதை நிறுத்தவில்லை. அப்போதும் கூட அவள் தூக்கத்திலேயே இருக்க, ‘என்ன இவ, இப்படி தூங்குறா? இத்தனை நாள் தூங்காததை எல்லாம் சேர்த்து தூங்குவா போல…’ என நினைத்தபடியே, நெற்றியில் இருந்த காயத்தை மிருதுவாக வருடினான்.

சிறிய ப்ளாஸ்டர் மட்டும் தையல் போட்ட இடத்தை மறைத்திருந்தது. அன்று அவள் சட்டையைப் பிடித்து ஆக்ரோசமாக சண்டையிட்டது இப்போதும் நினைவில் வருகிறது. சிறு புன்னகை தானே தவழ்கிறது இதழில்.

எட்டி அந்தப் பக்கம் குழந்தையைப் பார்த்தான். தலையனையை வைத்து பாதுகாப்பாகவே படுக்க வைத்திருந்தாள். தசிராவும் இப்போது எழுந்து கொள்வாள் என்று தெரியவில்லை. இவர்கள் இருவரின் தூக்கத்தைப் பார்த்து அவனுக்குமே தூக்கம் வந்துவிட்டது.

கொட்டாவி விட்டபடியே எழுந்தவன், “இவ வந்து ஏதும் கேட்பா, சண்டை போடுவா. அப்படியே பிடிச்சு சமாதானம் செய்யலாம்னு பார்த்தா, இவ பாட்டுக்கு ஒன்னுமே நடக்காத மாதிரி சாப்பிட்டு, தூங்கிட்டு இருக்கா. என்ன நினைக்கிறா, என்ன செய்யப்போறா ஒன்னும் புரியல. படுத்துறாய்யா… எப்படித்தான் எல்லாரும் கல்யாணம் செஞ்சி நிம்மதியா இருக்கேன்னு சொல்றாங்களோ…” என புலம்பியபடியே கேட்டை பூட்டி, வீட்டையும் பூட்டிவிட்டு உள்ளே வந்து அவளுக்கருகில் சாய்ந்தவன், அப்படியே சில நிமிடங்களில் உறங்கியும் விட்டான்.

அடுத்த சில மணி நேரங்கள் கழித்து, விடாமல் அலறிய அலைபேசியின் சத்தத்தில் விழித்த நிசப்திக்கு, சட்டென்று எழுந்து கொள்ள முடியவில்லை. முதலில் ஒன்றும் புரியவில்லை பெண்ணவளுக்கு. பின்தான் இருக்குமிடம் உணர முடிந்தது. அது சற்று அவஸ்தையாகவும் இருந்தது.

முன் பக்கம் குழந்தை அவளை அணைத்துப் படுத்திருக்க, பின்பக்கம் விக்ரம். விக்ரம் அணைத்துப் படுக்கவில்லைதான், ஆனால் சற்றே அசைந்தாலும் அவனை இடித்துக்கொள்ளும் இசகுபிசகான நிலைதான்.

எப்படி எழுவது என யோசனை. போன் வேறு விடாமல் அடித்துக் கொண்டிருக்க, “ச்ச்சு… ச்சு…” என எரிச்சலாய் முனக, அந்த சத்தத்தில் குழந்தையும் அசைய ஆரம்பிக்க, அவனிடமோ அசைவே இல்லை.

இனி யோசிக்க வேண்டியதில்லை என முடிவெடுத்தவள் சட்டென்று எழுவது போல, முன்னுடலை குழந்தையோடு ஒட்டி அணைத்து, இடது காலை பின்பக்கமாக வேகமாக அசைக்க, அது சரியாக விக்ரமின் மேல் டொம்மென்று விழ, அடித்து பிடித்து எழுந்தான் வக்கீல்.

“என்ன… என்ன…” என எழுந்தவன், போன் ஒலிப்பதைப் பார்த்து முகத்தை தேய்த்துக் கொண்டே எழுந்து அதை எடுத்தான். ரேணுகாதான் அத்தனை முறை அழைத்திருந்தார் நிசாவிற்கு. இங்கு வந்த இத்தனை நாளில் அவனுக்கு ஒருமுறை கூட அழைத்ததில்லை ரேணுகா. அதில் கடுப்பானவன் அவளை முறைத்தபடியே போனை நீட்ட, ‘என்ன’ எனும்படியாக கையில் வாங்க, போன் அடித்து ஓய்ந்திருந்தது.

“ஒன்னு சொல்றேன் நல்லா கேட்டுக்கோ, இனிமேல் என் அம்மாக்கூட சேர்றதை கொஞ்சம் குறைச்சுக்கோ. அது நம்ம வாழ்க்கைக்கு நல்லதில்ல. முடிஞ்சா டைவர்ஸ் பண்ணு.” என்றான் எரிச்சலாக.

“என்ன? நம்ம வாழ்க்கைக்கா? நான் எப்போ உங்களுக்கு வாழ்க்கைத் தரேன்னு சொன்னேன்?” என நிசாவும் நக்கலாக கேட்டபடியே அவனைப் பார்க்க,

“எல்லாம் என் நேரம்!” என முனங்கிக்கொண்டே, “என்ன, நீ எனக்கு வாழ்க்கை தரலையா? அப்போ நானும் என் பொண்ணும் என்ன செய்வோம்? எனக்கு பொண்டாட்டி இல்ல, என் பொண்ணுக்கு அம்மாவும் இல்லையா?” என்றான் திமிராக.

நிசப்திக்கு சற்று நேரம் மட்டுப்பட்ட கோபம் மீண்டெழ, “ஆமா, உனக்கு பொண்டாட்டி அந்த ஸ்வாதிதானே? இப்ப அவ இல்லதானே?” என்றாள் ஆத்திரமாக.

“ஹேய்…!” என்று கர்ஜித்தவன், “ச்சீ… என்ன பேசுற, பொம்பளையாடி நீ? முடிஞ்சதை பத்தி பேசாதனு எத்தனை தடவை சொல்றது? அடங்கவே மாட்டியா? உன் திமிர் எப்போத்தான்டி குறையும்?” என பதிலுக்கு அவனும் ஆத்திரமாகக் கத்த,

“என்ன… என்ன திமிரா பேசுறேன்? சொல்லு, என்ன திமிரா பேசுறேன்? உண்மையை பேசினா திமிரா?” என கண்கள் சிவக்க பேசியவளின் உடல் கோபத்தில் நடுங்கத் தொடங்க, அதை உணர்ந்த விக்ரம் சட்டென்று தன் கோபத்தையெல்லாம் விட்டு, “ஏய்… ஒன்னுமில்ல… ஒன்னுமில்லப்பா… இங்கபாரு… இங்கபாரு…” என அவளை அணைத்து சமாதானம் செய்ய, அவளோ திமிறிக்கொண்டிருந்தாள்.

“என்ன திமிரா நான் பேசினேன்? நான், நானா இருந்தா திமிரா? எனக்கு புரியல, அப்படி என்ன தப்பா பேசிட்டேன்? ஏன், எல்லாரும் இப்படியே சொல்றீங்க? நான் இந்த லைஃப்க்கு தகுதியில்லாத மாதிரியே ஃபீலாகுது. எனக்கு புரியவே இல்லை, நான் என்ன தப்பு செஞ்சேன், இவ்வளவு கஷ்டப்பட…” என்றாள் கண்ணீருடன்.

“இல்லப்பா… அதெல்லாம் உன்னை யாரும் ஒன்னும் சொல்லல. நான் ஏதோ கோபத்துல அப்படி பேசிட்டேன். இங்க பார், இனி நீ வருத்தப்படுற மாதிரி நான் பேசவே மாட்டேன்.” என்றதும், நிசா நம்பாமல் நிமிர்ந்து பார்க்க,

“நம்புடா… ப்ராமிஸ்! இனி நான் மட்டுமல்ல, யாருமே அப்படி பேசமாட்டாங்க.” என்றான் சிறுபிள்ளைக்கு சொல்வது போல.

“ம்ம்ம்… ம்ம்…” என்றவள் அவனை நிமிர்ந்து பார்க்க, “ம்ம்… என்ன?” என்றான் அவனும் மூக்கோடு மூக்கை உரசியபடி. சட்டென்று உடல் சிலிர்த்து அடங்கியது, அது அவனுக்கும் புரிந்தது. இப்படியான உணர்வுகள் இருவருக்குமே புதிது.

திருமணம் என்று ஒன்று நடந்தும் கூட, தாம்பத்திய வாழ்க்கையின் அரிச்சுவடியைக்கூட அவன் கண்டதில்லை.

அதேபோல ஒரு குழந்தையை சுமந்து பிரசவித்திருந்தாலும், நிசாவிற்கும் இதே நிலைதானே! அந்த உணர்வை அப்படியே ஏற்றுக்கொள்ள முனைந்தனர்.

பெண்ணவளின் விழிகள் எதையோ எதிர்பார்த்தது அவனிடம். அது அவனுக்கும் புரிந்ததோ? தன் அழகியின் வதனத்தைப் பிடித்து தனக்கு நேராக்கி, அவளின் நெற்றியில் இருந்த காயத்தில் மெல்ல… மிக மிக மெல்ல அவளுக்கு வலிக்காதபடி முத்தமிட்டான்.

பின் தன் நெஞ்சோடு அழுத்தி அணைத்துக்கொண்டான். ஏனோ அதற்குமேல் அவளிடம் தன்னை வெளிப்படுத்த முடியவில்லை. இருவரும் அமைதியாக அப்படியே நிற்க, “சபீ!” என்றான் மிருதுவாக. பட்டென்று நிமிர்ந்தாள் பெண்.

இதுவரை இப்படி அவளை யாரும் அழைத்ததே இல்லை. இவன் அழைத்த நேரம் அவளுக்கு நினைவு இருந்ததில்லை. இவ்வளவு குழைவாக, காதலாக! ம்ஹ்ம்ம்ம்… ஆச்சரியமாகப் பார்த்தாள். அந்தப் பார்வையை நேர்கொண்டு பார்த்தவன், குரலில் இருந்த அதே குழைவும் காதலும் இப்போது பார்வையிலும் இருக்க, மீண்டும் ஒருமுறை மேனி சிலிர்த்தது அவளுக்கு.

“சபீ… நான் உனக்கு எப்படி எல்லாம் சொல்லி புரிய வைப்பேன்… அது…” என தடுமாற்றமாக ஆரம்பிக்கும் போதே, தன் விரல் கொண்டு அவன் இதழை மூடியவள், “ம்ஹ்ஹூம்…” என்றவள், ‘வேண்டாம்’ என்பது போல் தலையசைத்தாள்.

விக்ரம் கேள்வியாக பார்க்க, “எனக்கு மறுபடியும் மறுபடியும் அதைப்பத்தி பேச விருப்பம் இல்ல. நீங்க என்னை உதாசீனப்படுத்திய ஒவ்வொரு முறையும், உங்களை விட்டு தூரமா, ரொம்ப தூரமா போயிடணும்னு நினைப்பேன். போகவும் செஞ்சேன்தான், ஆனா முடியல. உங்களை விட்டு உங்கமேல இருக்குற இந்த காதலை மறைச்சு, என்னால இருக்க முடிஞ்சதே இல்ல.

உங்க மேல எனக்கு கோபம் இல்ல, சொல்லப் போனா நீங்க எனக்கு எந்த ஹோப்பும் கொடுக்கல. என் மேலத்தான் கோபம். இப்படி எல்லாத்தையும் இழந்து, தெருவுல நிக்கும் போது கூட உங்கமேல இருக்குற இந்தக் காதல் குறையலயேன்னு கோபம். அப்படி என்ன கொஞ்சம் கூட எனக்கு ரோசம், சூடு, சுரனையே இல்லன்னு என்மேலத்தான் கோபம்.” என்றாள் அவமானமாக.

“ஸ்வாதி வந்து பேபிக்காக பேசும்போது கூட, அது ஒரு கட்டாயம்தான். ஆனா முடிவெடுக்க வேண்டியது நான்தான். நினைச்சிருந்தா வேண்டாம்னு சொல்லிருக்கலாம். ஆனா எனக்கு ஸ்வாதி எங்கேயும் தெரியல. எனக்கு அது உங்க குழந்தை, நம்ம குழந்தை இப்படித்தான் தோனுச்சு. அப்பா நல்லா இருந்திருந்தா அவரோட நானும் குழந்தையும், எங்கேயாச்சும் போயிருப்போம். உண்மைதான், உங்ககூட வாழமுடியல. ஆனா உங்க குழந்தையோட வாழலாம்னு முடிவு எடுத்தேன், அதுவும் நடக்கல. அப்பா என்னை விட்டு போயிட்டார். நான் கஷ்டப்படகூடாதுனு போயிட்டார். என்னைக் கஷ்டப்படுத்தக் கூடாதுனு போயிட்டார்.” என்றவள் அதற்கு மேல் முடியாமல் கதறியழ, என்ன சொல்லி தேற்றுவது என்றேத் தெரியாமல் நின்றிருந்தான் விக்ரம்.

அய்யோ… அய்யோ… என்ன செஞ்சி வச்சிருக்கேன் நான்? இந்தக் காதலுக்கு நான் தகுதியே இல்லையே! இப்படி தன்னையே மறந்து, இழந்து, சுயம் தொலைத்து காதலித்த, இந்தக் காதலுக்கு நான் தகுதியற்றவனே! இவளை எப்படி நான் சரி செய்ய? என்னை எப்படி புரியவைக்க, குற்றவுணர்ச்சி கொன்றது விக்ரமை. அப்படியே அமைதியாகிவிட்டான், எதுவும் பேச தோன்றவில்லை.

அணைப்பை மட்டும் இறுக்கிக் கொண்டான். சில நிமிடங்களில் சுதாரித்தவன், “சபீ, நான் சொல்றதை கொஞ்சம் கேட்குறியா?” என்றான் ஆதரவாக. குரலில் குற்றவுணர்ச்சி தாண்டவமாடியது.

அது அவளுக்கும் புரிய, “நான் எனக்கு இந்த ஃபேமிலி செட்டப் எல்லாம் செட்டாகாது போல. அதான் எனக்கு பிடிச்ச, நான் விரும்பின எல்லாருமே என்னை விட்டுப் போயிட்டாங்க. முதல்ல அம்மா, அப்புறம் அப்பா, இப்போ நீங்க… நீங்களும் என்னைவிட்டு வந்துட்டீங்க.” என்றவளுக்கு என்ன முயன்றும் அழுகையை அடக்கவே முடியவில்லை.

கேவி கேவி அழ, “ஹேய்! என்னம்மா நீ? நான் எப்போ உன்னைவிட்டு போறேன்னு சொன்னேன்? அப்படியெல்லாம் நான் யோசிக்கவே இல்லை. எனக்கு உன்னை எப்படி ஃபேஸ் பண்றதுன்னு பயம். அதோட நீ பட்ட கஷ்டத்துக்கு எந்த நியாயமும் செய்யல. அதனாலத்தான் என்னைப்பத்தி யோசிக்காம சரண்டராக நினைச்சேன். ஆனா உடனே நீ தனியா இருப்ப, உன்னை அப்படி விடமுடியாதுன்னு குழப்பம். நான் செய்றது, செஞ்சது எல்லாம் சரியானு முடிவெடுக்க முடியாம குழப்பம். அதுதான் இங்க வந்தேன். நீ என்னைத் தேடி வந்துட்டா, நான் என் முடிவை மாத்திக்கலாம். இல்லை, சரண்டராகிடலாம்னு நினைச்சேன்…” என்றவனின் குரல், கடைசியில் சற்று கர்வமாகவே வந்தது.

அது அவள் தன்மேல் வைத்த காதலினால் கூட இருக்கலாம்!

“தெரிலயே… இவ்வளவு நடந்தும் கூட என்மேல உங்களுக்கு அன்பு வரவே இல்லயோ? நான்தான் உங்க பின்னாடி கெஞ்சிட்டு அலையுற மாதிரி அசிங்கமா ஃபீலாச்சு…” இப்போது என்ன முயன்றும் அவள் குரலில், அந்த இயலாமையும் அவமானமும் வந்தே விட்டது. குழந்தையைப் போல் அவன் முகம் பார்த்து ஆறுதல் தேடியவளை, இன்னுமாக இறுக்கியவன் அப்படியே கைகளில் அள்ளிக்கொண்டான்.

திமிறாமல் அவன் கைகளுக்குள் தன்னைக் கொடுத்தவள், அவன் முகத்தையே விழியெடுக்காமல் பார்க்க, “என்ன?” என்றான் மெதுவாக. அந்த பார்வையில் சற்று கூச்சம் கூட வந்தது ஆடவனுக்கு.

அதை உணர்ந்து மெல்ல சிரித்தவள், “உங்களை இப்படி பக்கத்துல பார்க்கணும்னு ரொம்ப நாள் ஆசை.” என்றாள் முணுமுணுப்பாக.

அவள் காதலில் திணறியன், “சபீ ப்ளீஸ்… நான் இந்த காதலுக்கு தகுதியே இல்லடி. நீ கொட்டிக் கொடுக்குற இந்த காதல், என்னை மூச்சு முட்ட வைக்குதுடி, என்ன செய்ய?” என்றான் உணர்ச்சிவசப்பட்டு.

“ஒன்னும் செய்ய வேண்டாம், நீங்க இப்படியே இருங்க. எப்பவும் போல் நானே உங்களைத் திகட்ட திகட்ட காதலிச்சுக்குறேன். நீங்க எங்க எல்லாரையும் ரொம்ப பத்திரமா பார்த்துக்கோங்க.” என்றாள், முதன்முறையாக தன் காதலை அவள் கண்களில் காட்டி.

“ம்ம்ம்… நான் உங்கிட்ட ஒரு மன்னிப்பு கூட கேட்கலடி. இப்போ வரை என்னோட ஈகோ இறங்கிவர வைக்கல. ஆனா நீ என்னை மொத்தமா காலி பண்ணிட்ட. நான் காலி… மொத்தமா காலி…” என்றான் குற்றவுணர்ச்சி இல்லாமல் கர்வமாக, காதலாக!

“ஹ்ம்ம்…” என்று புருவத்தை உயர்த்தி ரசிப்புடன் பார்க்க, அவனும் அதே பார்வை பார்க்க, இப்போது இருவரின் போனும் ஒரே நேரத்தில் ஒலிக்க, ஏதோ பிரச்சனை என்று புரிந்தவர்கள் போனை எடுக்க, விக்ரமிற்கு ரவிதான் அழைத்திருந்தான்.

“சொல்லு ரவி, என்ன… என்ன சொல்ற? எப்போ? எப்படி?” எனப் பதட்டமாக கேட்க,

“சரி, நாங்க கிளம்பிட்டோம், வந்துடுறோம்.” என்று வைத்துவிட்டு நிசாவைப் பார்க்க, அவளுக்கும் ரேணுகா அழைத்து விசயத்தை சொல்லியிருக்க, அவள் முகம் நிர்மலமாக இருக்க, “போகலாமா? உனக்கு ட்ராவல் பண்ண முடியுமா?” என்றான்.

“ம்ம்…” என்று தலையசைத்தாலும், சற்றுமுன் பொலிவாக இருந்த முகத்தில் மேலும் பொலிவு கூடியது. அது கேட்ட செய்தியின் தாக்கமாக இருக்கலாம்.

அடுத்த அரைமணி நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்த தசிராவோடு அவர்களின் சென்னை பயணம் தொடங்கியது.

***

இங்கு காரில் திரும்பிய நரேனுக்கு மனைவியின் நினைவே அதிகம். மாலத்தீவிலிருந்து வந்த அன்றிலிருந்து இருவருக்கும் தனிமையென்பதே கிடைக்கவில்லை.

நிசப்தியை விக்ரமிடம் சேர்த்த பிறகுதான் ஒரு ஆசுவாசம் அவனுக்குள். இனி பாஸ் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கையும் வந்துவிட, உடனே மனைவிக்கு அழைத்தான்.

“என்னடா, எங்க இருக்க? ரேணும்மா என்ன செய்றாங்க?” என்றான் அதே ஆசுவாசத்தோடு.

“ம்ம்… நம்ம வீட்டுலதான்ப்பா இருக்கேன், அங்க போகலப்பா. ரேணும்மாவுக்கு கூப்பிட்டு சொல்லிட்டேன். நீங்க எங்க இருக்கீங்க? அங்க ஒன்னும் பிரச்சனை இல்லையே?” என்றாள் கணவனின் குரலை உணர்ந்து கொண்டே.

“அதெல்லாம் தெரிலடா, நிசா என்னை அப்படியே கிளம்ப சொல்லிட்டா. நானும் கிள்மபிட்டேன், இன்னும் ஒன்னவர்ல வீட்டுக்கு வந்துடுவேன்.” என்றான் சாதாரணமாக.

“ம்ம் சரிதான்… ஆனா அங்க எதுவும் பிரச்சனை ஆகிட போகுதுப்பா. நிசா இருக்குற கோபத்துல விக்ரம் அண்ணாவை திட்டி சண்டை போடப் போறா. அவர் மறுபடியும் நிசாகூட கோவிச்சுக்க போறார்.” என்றாள் சற்றே பதட்டத்துடன்.

“அதெல்லாம் இல்லாம இருக்குமா? அவங்களே சண்டை போட்டு, அவங்களே சமாதானமாகி வரட்டும். இனி யாரும் அவங்க வாழ்க்கையைப் பிடிச்சு தொங்க வேண்டாம். இனியாச்சும் நிசா ஒரு நல்ல வாழ்க்கையை வாழட்டும். அதுக்கு நாம கொஞ்சம் அவளுக்கு ஸ்பேஸ் கொடுக்கணும். அவளே சரியாகி வர்றவரை டிஸ்டர்ப் செய்ய வேண்டாம், விடு.” என்றான் மனைவியை சமாதானம் செய்யும் பொருட்டு.

“ம்ம்… அதுவும் சரிதான், சண்டையோ சமாதானமோ அவங்களே பார்க்கட்டும். நான் என்ன சமைக்கட்டும் உங்களுக்கு?” என்றாள் இப்போது மனைவியாக.

“ம்ஹ்ம்…” என்று பெருமூச்சுவிட்ட நரேன், “இப்போதான் எனக்கு ஒரு ஹஸ்பண்ட் ஃபீலே வருதுடி.” என்று இன்பமாக சொல்லி, “நீ ரெஸ்ட் எடுமா, நான் வரும்போது வாங்கிட்டு வந்துடுறேன்.” எனவும்,

“அதெல்லாம் வேண்டாம்ப்பா, எனக்கு சாதமும் ரசமும் சாப்பிடணும் போல இருக்கு. ரொம்ப நாளான மாதிரி இருக்கு, நான் போய் செய்றேன். உங்களுக்கு வேற வாங்கணும்னா வாங்கிட்டு வாங்க, ஷேர் பண்ணிக்கலாம். வீடும் அப்படியே கிடக்கும், க்ளீன் செஞ்சிட்டு சமைச்சா, நீங்க வர்ற டைம் சரியா இருக்கும்.” என மனைவியாக அட்டவனையிட்டவளை நினைத்ததும், உடனே அவளைப் பார்க்க உள்மனம் உந்தியது நரேனுக்கு.

“ம்ம் சரிம்மா, அதிகமா வருத்திக்காதே, கொஞ்சம் கொஞ்சமா செய்யலாம். அப்புறம் உங்க அண்ணா கால் பண்ணான், உனக்கு கூப்பிட்டு நீ எடுக்கலன்னு சொன்னான். அவன்கிட்ட பேசுடா, நமக்கு அவங்க தேவையில்லைதான். ஆனா அவங்களுக்கு நாம தேவையிருக்கும் போல. அந்த மாதிரி நேரத்துல உதாசினப்படுத்தக்கூடாது கண்ணம்மா.”

“ம்ம்… சித்தி பேசினாங்க, அப்பாவுக்கு உடம்பு சரியில்லையாம். பார்க்கணும்னு சொல்றார், வந்துட்டு போக சொன்னாங்க.” என்றாள் வெறுமையான குரலில்.

“சரி, போகலாம் நாளைக்கு. அவங்க எப்படியோ, நாம பழியுணர்வோட, கோபத்தோட இருக்க வேண்டாம். பார்த்துக்கலாம் விடு, நீ ஸ்ட்ரெஸ் ஆகாம வேலையைப் பாரு, நான் வந்துடுறேன்.” என மேலும் பலது பேசி, போனை வைத்துவிட்டு சென்னை நோக்கி காரை செலுத்தினான்.

***

You may also like

1 comment

M. Sarathi Rio May 3, 2026 - 6:30 pm

இப்ப யாருக்கு என்னாச்சுன்னு ரெண்டு பேரும் எங்க போறாங்க?

😔😔😔
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Comment

About Me

Featured