Home Antiheroதளிர் – 82

தளிர் 82

விடிந்தும் விடியாத அதிகாலைப் பொழுது, பிரம்ம முகூர்த்த நேரத்தில் நிசப்தியின் வீடு முழுக்க மலர் தோரணம், வண்ண விளக்குகள், விருந்தினர்கள் அழைப்பு என மண்டபம் போல் காட்சியளிக்க,

“நரேன் எங்கடா உன் பாஸ்? சீக்கிரம் கூட்டிட்டு வா.” என ரவி போனில் கத்த,

“சீனியர் ஏர்போர்ட்ல தான் இருக்கேன், ஃப்ளைட் லேண்டாகிடுச்சு. பாஸ் வெளிய வந்ததும் அள்ளிப் போட்டுட்டு வந்துடுறேன். எப்படியாச்சும் ரேணும்மாவை சமாளிச்சிடுங்க.” என்ற நரேனுக்கும், அதே அளவு கடுப்புத்தான், ஆனால் காட்ட முடியாதே…

“சரி, வாங்க.” என்ற ரவியை, எதிரில் சிரிப்புடன் பார்த்திருந்தாள் ரித்தி.

“நீ வேற ஏன்டி…” என்றவனுக்கும் சிரிப்பு வந்துவிட்டது.

“உன் அண்ணனை நிசாவும் அத்தையும் வச்சு செஞ்சா, இவன் நம்ம எல்லாரையும் வச்சு செய்றான்டி, முடில… இப்போ போய் நான் அத்தைக்கு என்ன பதில் சொல்ல?” என்றவன், மனைவியை இழுத்து அணைத்துக்கொள்ள,

“ஸார் என்ன பண்றீங்க? உங்க அத்தை உங்க பதிலுக்காக காத்துட்டு இருப்பாங்க, கிளம்புங்க.” என்று கிண்டலடிக்க,

“எப்படியும் என் காதுல ரத்தம் வர்ற அளவுக்கு ஒரு லெக்சர் கொடுப்பாங்க. உன் அண்ணன் வாங்க வேண்டிய கச்சேரியை எல்லாம் எனக்கு வாய்தா இல்லாம கொடுப்பாங்க. அதுக்கு நான் ஸ்டெடி ஆகணும்ல, அதான் இப்போ சார்ஜ் ஏத்திக்கிட்டு இருக்கேன்.” என மனைவியின் நெத்தியில் உதடுகள் உரச பேச,

“ஆஹான்…! இது சரி வாரது, கோவிலுக்கு கிளம்பணும், நான் போறேன். எல்லாமே ரெடி, விக்கிக்காகத்தான் வெயிட்டிங். நீங்க கீழ போய் வேலையை பாருங்க, நான் ரஞ்சிக்கு எதுவும் வேணுமானு கேட்டுட்டு வந்துடுறேன்.” என அவனை வழுக்கட்டாயமாக தள்ளிவிட்டு நகர,

“ஏன்டி…” என முகத்தைத் தூக்கியவனைப் பார்த்து, சிரித்துக் கொண்டே அவன் இதழில் இதழைப் பதித்து, அவன் பிடிக்கும் முன்னே வெளியே வந்துவிட்டாள் ரித்தி.

அன்று ரவியின் போன் வந்ததுமே பதறிக் கொண்டெல்லாம் வரவில்லை இருவரும். ஆனால் கண்டிப்பாக போயே ஆகவேண்டும் என்ற கட்டாயம் மட்டுமே. அதுவும் ரவிக்காகவும் ரித்திக்காகவும்தான்.

பயணத்தில் இருவரும் இதுபற்றி பேசிக் கொள்ளவே இல்லை. தசிரா விழித்ததும் இடையில் நிறுத்தி, அவளுக்கு பாலைக் கொடுத்து, ஆளுக்கொரு காபியோடு சென்னை வந்துவிட்டனர்.

சென்னையில் நிசாவின் வீட்டில் அவர்களை விட்டவன், அடுத்து ரவி சொன்ன மருத்துவமனைக்கு சென்றான். ரவி, முகுந்தன், நரேன் என ஆண்கள் மட்டுமே இருக்க, “எப்ப?” என்றான் நரேனைப் பார்த்து.

“நேத்து நைட் மெடிசின் எடுக்காம ரொம்ப அடம் பிடிச்சிருக்காங்க. அதோட வைலண்டாகி மத்த பேசன்ட்ஸ் எல்லாரையும் அடிச்சு, ரெண்டு நர்ஸையும் கீழத் தள்ளி, அங்க இருந்த இன்ஸ்ட்ருமென்ட்ஸ் எல்லாத்தையும் உடைச்சு, பயங்கர ரகளை. பிடிக்கப் போன ரெண்டு அட்டன்டர்சையும் தள்ளி, அங்க இருந்த ஜன்னல்ல இருந்து கீழே விழுந்து ஸ்பாட் அவுட்.” என்றதும்,

விக்ரம், “ஓ…” என்றதோடு சரி, அடுத்து எதுவும் பேசவில்லை.

மற்ற ஃபார்மாலிடிஸ் எல்லாவற்றையும் நரேனும் ரவியும் முடித்து, நேராக மின்மயானத்திற்கே கொண்டு சென்றுவிட்டனர்.

ரவிதான் விக்னேஷின் வீட்டிற்கு தகவல் கொடுத்தான். விக்னேஷின் பெற்றோரும் மின்மயானத்திற்கே வந்துவிட, விக்னேஷின் தாயிற்குத்தான் மனதே ஆறவில்லை. தன் மகனுக்காக கடைசியில் உயிரையும் விட்டுவிட்டாளே! “இவர்கள் இருவரும் நல்லமுறையில் வாழ்ந்திருக்கக் கூடாதா?” என்று புலம்பியபடியே இருந்தார்.

ஸ்வாதியின் கணவனாக விக்ரம் எதுவும் செய்வானா என்று, யாரும் அங்கு எதிர்பார்க்கவில்லை. அங்குள்ள யாருக்கும் அப்படி ஒரு எண்ணமே இருக்கவில்லை.

அனைத்தும் முடிந்து காரில் ஏறியதும், ரவி அறியாமல் நரேனைப் பார்த்து விக்ரம் புருவத்தை உயர்த்த, அவனும் ஆம் என்பது போல கண்களை மூடித் திறக்க, “ஊப்ஸ்…” என்றபடியே சீட்டில் சாய்ந்துகொண்டான்.

விக்ரம் கூறியதை போலத்தான், ஸ்வாதிக்கு கொடுக்கப்படும் மருந்தில் சிலவற்றை மாற்றியிருந்தனர். அப்படி கொடுக்கப்படும் மருந்துகள், அவர்களின் மூளையை தூங்க வைக்காது. எந்நேரமும் குறிப்பிட்ட ஒன்றை மட்டுமே யோசித்து அதற்குள்ளே பயணிக்கும், கிட்டத்தட்ட போதை மருந்தைப்போல… அப்படித்தான் ஸ்வாதிக்கும் கொடுக்கப்பட்டது.

கடைசி இரண்டு நாட்கள் அந்த மருந்து நிறுத்தப்பட, அதனால் முற்றிலுமாக மாறி, தன்னிலை இழந்து, அனைவரையும் தாக்கி என மிக மிக மோசமாக நடந்துகொண்டு, தன்னையும் அழித்துக்கொண்டாள் ஸ்வாதி.

முதலில் அவளை அப்படியே விட்டுவிடலாம் என்றுதான் நினைத்தான். ஆனால் நிசப்திக்கு அது உறுத்திக் கொண்டே தானே இருக்கும். அவளின் காதலன் விக்ரம்.

விக்ரமின் முன்னாள் காதலி, முன்னாள் மனைவி ஸ்வாதி. அதை எப்படி அவளால் மறந்து, மறுத்து அவனோடு உறுத்தல் இல்லாமல் வாழமுடியும்? என்றாவது ஒருநாள் அவர்களுக்குள் பிரச்சனையாக வெடிக்கும். அதை ஒருநாளும் விக்ரம் எதிர்பார்க்கவில்லை.

அவளோடு மனமொத்து, எந்தவித மனக்கசப்பும் இல்லாமல் ஒரு புது வாழ்க்கையை வாழ வேண்டும் என்று முடிவு செய்திருந்தான். அதனாலே ஸ்வாதிக்கு இப்படி ஒரு முடிவை எழுதி விட்டான் அவனது சட்டப் புத்தகத்தில்.

காதல் நிசப்தியின் மீது வந்துவிட்டதுதான். எப்போது, எப்படி என்றெல்லாம் அவன் யோசிக்க விரும்பவில்லை. ஆனால் அவள் காதலுக்கு ஈடாக அவனின் காதல் இல்லை, அது முழுமையாக தெரியும், புரியும். முதலில் குழந்தையைத்தான் யோசித்தான், நேசித்தான். அதன்பிறகே நிசப்தி என்பவள் அவனின் பார்வை வட்டத்திற்குள் வந்தாள்.

எல்லோரும் கிட்டத்தட்ட அவனைக் கட்டாயப்படுத்தி நிசப்தியின் வாழ்க்கைக்குள் தள்ள முயற்சிக்க, அதை புரிந்து முதலில் விலக நினைத்தாலும் குழந்தைக்காக என மாறி, இப்போது அவளுக்கே அவளுக்காக என தன்னை மாற்றியிருந்தான்.

மொத்தமாக ஸ்வாதியின் எண்ணத்திலிருந்து வெளியில் வந்திருந்தான் விக்ரம். அவளை மறக்க அவன் மெனக்கெடவெல்லாம் இல்லை. ஏனென்றால் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை அப்படித்தானே! பெரிதாக நினைவில் வைத்துக் கொள்ளும் அளவிற்கு எந்த நிகழ்வுகளும் இல்லையே?!

அனைத்தும் வருத்தங்களும் கஷ்டங்களும் இழப்புகளும்தானே! அதை நினைத்து வருத்தப்பட அவன் மட்டுமல்ல, அந்த வீட்டில் உள்ள யாருமே நினைக்கவில்லை.

அதனால் நிசப்தியுடனான திருமணத்தை தன்னைப் போலவே எதிர்பார்த்தான் விக்ரம். அவளிடம் பேசினால் சண்டையும் வாக்குவாதங்களும் அதிகமாகி, தேவையில்லாத டென்சன்தான் ஏறும் என்று, அவளிடம் பேசுவதைக் குறைத்திருந்தான்.

அன்று மின்மயானத்திலிருந்து வீட்டிற்கு வந்ததும், ரேணுகாதான் மற்ற அனைத்தையும் பார்த்தார். ஆனாலும் அவருக்கு உறுத்திக்கொண்டே இருந்தது. அடுத்து நிசாவுடனான மகனின் வாழ்க்கையில் இது ஒரு பாவமாக அமைந்து விடக்கூடாது என்று, தங்கள் குடும்ப ஜோசியரிடம் கேட்டு ஒரு பூஜையை செய்தார். பூஜை முடிந்து ஒரு மாதம் கழித்து, விக்ரமிற்கும் நிசாவிற்கும் திருமணம் வைக்கலாம் என்று தேதியும் குறித்துவிட்டார்.

விக்ரமிடம் இதுபற்றி கூறியதற்கு, நிசா என்ன சொல்வாளோ என்ற தயக்கம் மட்டுமே காரணமாக இருக்க, அவனுக்கு விருப்பம்தான்.

“ம்மா, நீங்களே அவக்கிட்ட பேசி முடிவ கேளுங்க, நான் போய் கேட்டு என் மேல இருக்குற கோபத்துல வேண்டாம்னு சொல்லிட போறா.” என்றான் ரேணுகாவிடம்.

“இன்னுமாடா நீ அவளை சமாதானம் செய்யல?” என மகனை கேவலமாக கலாய்த்து “ம்மா…!” என அவனை பல்லைக் கடிக்கவிட்டு, அவரே நிசப்தியிடம் பேசி சம்மதமும் வாங்கிவிட்டார்.

இன்று காலைதான் முகூர்த்தம். விக்ரம் வழக்கம் போல் டெல்லியில். இரண்டு நாட்களாக ப்ரோ கபடி ஏலம் நடக்க, அதில் தமிழ் தலைவா டீமிற்காக லீகல் அட்வைசராக சென்றிருக்க, வழக்கம் போல் ரேணும்மாவும் ரவியும் டென்சனில் சுத்த, நிசப்தியோ, ‘என்னமோ நடக்குது’ என்பது போல் சுத்திக் கொண்டிருந்தாள்.

இதோ இருவருக்கும் பிபியை இருநூறுக்கு ஏற்றி, நடுஇரவில் விமானம் ஏறிவிட்டான்.

இங்கு ரித்தியோ ரஞ்சியிடம் செல்ல, அவளோ சுமதி கொடுத்த காபியோடு போராடிக் கொண்டிருந்தாள்.

“என்னாச்சு அத்த, வழக்கம் போலவா?” என்றபடியே வர,

“ஆமா ரித்திமா, இந்த குட்டி இப்பவே என் பொண்ணை என்ன பாடு படுத்துது பாரு. எதுவுமே எடுத்துக்க முடியல, உடனே வாமிட்தான். அதுக்கே சாப்பிட மாட்டேங்குறா ரஞ்சி.” என சந்தோச சலிப்பாக சுமதி சொல்ல, எல்லோருக்கும் சிரிப்பு வந்தது.

ரஞ்சிக்கு இப்போது மூன்று மாதம். அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த தருணம். என்னதான் மருத்துவர் என்றாலும் அவர்களுக்கும் குழந்தையைப் பற்றிய ஆசை இருக்கும்தானே?! சில நேரம் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து ஏமாந்து போயிருக்க, ரஞ்சனியின் வருத்தத்தைப் பார்த்து முகுந்தன் அதைப்பற்றி அவளிடம் பேசுவதே இல்லை.

ஆனால் அவள் கருத்தரித்த நாளில் இருந்து, கையில் வைத்து தாங்கினான் என்றுதான் சொல்ல வேண்டும். அதிலேயே கணவனின் எண்ணம் புரிந்திருக்க, மேலும் மேலும் அவன்பால் காதல் பெருகியது ரஞ்சனிக்கு.

அதோடு சுமதி, ரேணும்மா, ரித்தி, நிசா, விக்ரம் என எல்லாருமே அவளை அன்பாக, அதட்டலாக பார்த்துக்கொள்ள, தாய்மையில் மிளிர்ந்து கொண்டிருக்கிறாள் பெண்.

“சரித்த, நான் ஹார்லிக்ஸ் எடுத்துட்டு வரேன். அதை கொஞ்சம் கொஞ்சமா குடிக்க வைங்க.” என வெளியில் செல்லப்போக,

“விக்ரம் வந்துட்டானா ரித்தி?” என சுமதி கேட்க,

“கிளம்பிட்டானாம், இங்க வர்ற வரை அவனை நம்ப முடியாதுனு அம்மா புலம்பிட்டு, எல்லாரையும் ஒருவழி செய்துட்டு இருக்காங்க.” என்றாள் சிரித்தபடி.

“ஓ… அதான் முகுந்த் இன்னும் ஹாஸ்பிடல்ல இருந்தே வரலையா? கேட்டதுக்கு, நான் இங்க இருந்தே கிளம்பி வர்றேன்னு சொன்னார். எல்லாம் அத்தைக்கு பயந்தா? என ரஞ்சியும் சிரிக்க,

“பாரு, எல்லாரையும் எவ்ளோ டென்சன் பண்ணிட்டு இருக்கான்னு… உஷா வந்துட்டாளா?” என்றார் சுமதி.

“அவங்க அண்ணாவும் அம்மாவும் வர்றாங்களாம், அவங்ககூட வருவானு சொன்னா நிசா.” என்றாள் ரித்தி.

“நிசா என்ன பண்றா? ரெடியாகிட்டாளா?”

“குட்டீஸ் மூணும் அவக்கிட்டதான் இருக்கு. அவங்களை ரெடியாக்கிட்டு அவ ரெடியாகுறாளாம். நான் போய் சொன்னதுக்கு, முதல்ல உன் அண்ணன் வரட்டும், அப்புறம் வந்து என்னை கேளுங்கன்னு முகத்தில அடிச்ச மாதிரி சொல்லிட்டா, திமிர்பிடிச்சவ…” என ரித்தி பல்லைக் கடிக்க,

“அவ சொல்றதுல என்னம்மா தப்பு? மாப்பிள்ளையே இல்ல, பொண்ணை கிளம்புனு சொன்னா, கடிக்காம என்ன செய்வா? விடு, அவனே வந்து சமாதானம் செஞ்சி ரெடியாக்கி கூட்டிட்டு வரட்டும்.” என்று சுமதி கூறியதும்,

“அப்போ இன்னைக்கு ஒரு ஆக்சன் சீகுவன்ஸ் இருக்கு.” என மற்றவர்கள் சிரிக்க, சுமதியும் சிரித்துவிட்டார்.

திருமணம் என்று வீட்டில் பேச ஆரம்பித்ததிலிருந்து விக்ரம், நிசாவிடம் பேசுவதை நிறுத்தியிருக்க, அதுவே பெண்ணுக்கு மீண்டும் குழப்பத்தைக் கொடுத்திருந்தது.

அவனைக் கட்டாயப்படுத்துகிறோமோ என்று யோசிக்க வைத்திருந்தது. ஆனாலும் அவனுடனான திருமணத்தை வெகுவாக எதிர்பார்க்கத்தான் செய்தது.

திருமணம் பற்றியெல்லாம் அவள் யோசித்ததில்லை. அதிலும் விக்ரமோடு என்பது அவள் நினைத்தே பார்த்திராதது. அது தானாக நடக்கவும் கொஞ்சம் பயமாகவும் கொஞ்சம் தயக்கமாகவும் இருந்தது. ஆனால் உள்ளுக்குள் சில மத்தாப்பு பூக்கள் மகிழ்வாய் பூக்கத்தான் செய்தது.

அவள் வாழ்க்கையில் ஒரு மறக்க முடியாத ஒரு நிகழ்வு. அந்த நேரம் நிசப்தியின் மனம் அவள் தந்தையின் அணைப்பை வெகுவாக எதிர்பார்த்து ஏமாந்து போனது.

குழந்தைகள் மூவரும் அவளை விட்டு வெளியில் சென்றிருக்க, இந்த சத்தமில்லாத அமைதி அவளை யோசிக்க வைத்தது. தன்மனதை திறக்க வைத்தது. அவ்வறைக்குள் மாட்டியிருந்த பெற்றோரின் படத்திற்கு முன் வந்து நின்றிருந்தாள்.

தனக்கு எது என்றாலும் தந்தையை தேடும் அவள் மனம், இப்போதும் அவரைத்தான் தேடியது. அவரின் முகத்தையேப் பார்த்தவள், “ப்பா, எனக்கு கல்யாணம் ப்பா. உங்களுக்கு நான் சொல்லவே இல்லப்பா, எனக்கு பயமா இருக்குப்பா. இது சரியாப்பா? நான் தப்பு பண்ணல தானேப்பா? என்கூட இருப்பீங்க தானேப்பா? என்னைப் பார்த்துக்குவீங்க தானேப்பா?

எனக்கு விக்ரமைத்தான் பிடிச்சதுப்பா. நான் உங்ககிட்ட இதுவரை சொல்லவேயில்ல. சொல்லிருந்தா இதெல்லாம் நடந்திருக்காது தானேப்பா? நான் சொல்லிருந்தா நீங்க என்னை கைட் பண்ணிருப்பீங்க. நமக்கு இப்படியெல்லாம் நடந்திருக்காது. உங்களை நான் விட்டுருக்க மாட்டேன். இது, இந்த குற்றவுணர்ச்சி என்னை கொல்லுதுப்பா. உங்களை விட்டுட்டேன், நானே கொன்னுட்டேன். என்ன செய்யட்டும் நான்? என்னை என்னாலயே மன்னிக்க முடியலப்பா.

எல்லாருக்கும் சொன்ன நான், உங்ககிட்ட சொல்லல. தப்பு தானேப்பா…?” என்றவள், அப்படியே மடிந்தமர்ந்து வாயை மூடிக் கதறினாள்.

ஆற்றுவார் தேற்றுவார் இன்றி அழுது முடிந்து, சுவரில் சாய்ந்தமர்ந்தவளின் மனதுக்குள் ஒரு குரல், ‘அம்மும்மா… அப்பாடா! ஏன்டா, உன் வாழ்க்கையை இவ்வளவு சிக்கலாக்கிக்கிற? ஏன், உன்னை நீயே இவ்வளவு வருத்திக்கிற? என் பொண்ணு தெளிவாத்தானே இருப்பா, இப்போ என்ன குழப்பம் அவளுக்கு?

நிசாம்மா, நம்ம வாழ்க்கை எப்பவும் இப்படியே இருக்காதுடா. இழப்புகள், மன வருத்தங்கள், கஷ்டங்கள் எல்லாம் இருக்கும். அதையெல்லாம் கடந்து வந்தா, நமக்கே நமக்கான வாழ்க்கை பூ போட்டு வரவேற்கும். அந்த வாழ்க்கை உனக்கு இப்போ வந்திருக்கு. அதை நினைச்சு சந்தோசப்படு கண்ணா. அப்பாவும் அம்மாவும் உங்கூட எப்போவும் இருப்போம். இனிதான் என் பொண்ணு சந்தோசமா வாழப்போறா. உன் அம்மா உனக்கு குழந்தையா பிறந்த மாதிரி நானும் உனக்கு பையனா வந்து பிறப்பேன்டா. உன் அம்மாவை கவனிக்காத மாதிரி, என்னையும் விட்டுடாத. அப்பாவுக்கு அப்போதான் வருத்தம் வரும்.’ என அந்தக்குரல் காந்தமாய், கட்டளையாய், ஆசையாய், அன்பாய், கடைசியில் கிண்டலாய் முடிய மெல்லிய சிரிப்பு பெண்ணுக்கு.

‘ஆம், அம்மாதான்! என் அம்மாதான்! என்னை விட்டுடல, எங்கிட்ட வந்துட்டாங்க. நான்தான் இதுவரை புரிஞ்சிக்கல. எப்படி கவனிக்காம விட்டேன்? அம்மா பாவம்! நான் அவங்களை கவனிக்கலனு அப்பாக்கூட சண்டை போட்டுருப்பாங்களோ? அதான் அப்பா என்னை கவனிக்க சொல்றார்.’ மெல்லிய சிரிப்பு இப்போது உதடு விரிந்த புன்னகையானது.

சரி பண்ணிடுவான், எல்லாத்தையும் சரி பண்ணிடுவான், என்னையும் சேர்த்து என அவள் மனம் அவளிடமே சண்டையிட்டு சமாதானமும் ஆனது.

அந்த நேரம் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தான் விக்ரம். மிகவும் களைப்பாக இருந்தான், முகமும் பதட்டத்தில்தான் இருந்தது.

அவள் அமர்ந்திருந்த விதம், அழுது கலங்கிப் போயிருந்த முகம் வேறு மனதைப் பிசைய, வேகமாக அவளை அப்படியே அள்ளிக்கொண்டான்.

“என்னாச்சு? என்னாச்சு?” என்றபடியே இறுக்கி அணைத்திருக்க, பதிலேதும் சொல்லாமல் அவளும் விக்ரமை இடையோடு கட்டிக்கொண்டாள்.

இருவருக்குமே இந்த அணைப்பு தேவைப்பட்டதோ?! சில நிமிடங்கள் நீண்ட அணைப்பில், முதலில் சுதாரித்த விக்ரம், தன்னிலிருந்து அவளை விலக்கி, “என்னாச்சு? ஏன் இப்படி அழுது முகம் வீங்கி இருக்கு? உன் அப்பா ஞாபகமா?” என்றான் மென்மையாக.

“ம்ம்…” என்றாள். இல்லையென்று மறைக்கவெல்லாம் இல்லை. சற்றுமுன் தனக்குள் நடந்ததை கூறியபடியே அவன் மார்பில் சாய, அவன் ஆசுவாசமாக மூச்சு விட்டதை நிசப்தியால் உணர முடிந்தது.

விக்ரம் உள்ளுக்குள் பயந்து அவளை ஒதுங்கியிருக்க இதுவும் ஒரு காரணம்தானே! தனக்கு வேலை வைக்காமல் அவளே யோசித்து தெளிந்து வந்ததில், விக்ரம் நிதானமானான், நிம்மதியானான்.

“அப்பாவும் அம்மாவும் எங்கூடவே தான் இருப்பாங்க?” என நிசப்தி அவளுக்கும் சொல்லிக்கொள்ள, “கண்டிப்பா அவங்க உங்கூடத்தான் இருப்பாங்க. உன்னைச் சுத்தியே தான் இருப்பாங்க. உங்க அம்மாவை நீயும் உன் அப்பாவும் எவ்வளவு வம்பு பண்ணீங்களோ, அதை நானும் என் பொண்ணும் உனக்கு பண்ணுவோம். அப்போதான் உன் அம்மா, என் அத்தை இன்னும் இன்னும் சந்தோசப்படுவாங்க.” என அவளை வம்பிழுக்க,

பதில் பேசுவாள் என்று எதிர்பார்க்க சிரித்தபடியே, “சந்தோசம்! சிறப்பா செய்யுங்க.” என்றாள், முகம் விகசித்தது.

“என்னமோ ஆச்சு உனக்கு? சரி சீக்கிரம் ரெடியாகு, மீதியை அப்புறம் பேசலாம். உள்ளே வரும்போதே உன் ரேணும்மா அப்பளமா பொரிஞ்சிட்டு இருந்தாங்க.” என்றான் ரேணுகா அவனை விரட்டியதை எண்ணி.

“ம்ம்… ம்ம்ம்…” என்றவள் அவனைவிட்டு விலகாமல் நிமிர்ந்து பார்த்தாள்.

சில உறவுகளுக்கு மறுவாய்ப்பு கொடுத்துதான் பாருங்களேன், பட்ட காயத்திற்கு அவர்களே கூட மருந்தாகலாம்.

பெண்ணவளின் விழிகளில் வழிந்த காதலில் தன்னிலை மறந்து, “ஐ ஆம் சாரி சபி… சாரி…” என்றபடியே அவள் இதழில் இதழ் சேர்க்க, பெண்ணவளும் ஆவலோடு அதை வரவேற்க, அழகாய் ஒரு இதழ் சங்கமம்.

முதலில் தயங்கி, மயங்கி, பின் அவளாக அவனை தள்ளிவிட்டு மூச்சு வாங்கியபடியே, “நான் ரெடியாகணும்.” என முணுமுணுக்க, மீண்டும் அவளை இழுத்து இதழ் பதித்தவன், “சீக்கிரம் வா.” என்று சிரித்தபடியே வெளியேறினான்.

வீட்டிலேயே திருமணம் என்றிருக்க, “பெண்ணை அழைச்சிட்டு வாங்க…” என்ற ஐயரின் வார்த்தைக்கு உஷா, நிசப்தியை அழைத்து வந்தாள்.

மரகத பச்சை புடவை, தங்க நிற தாமரைப்பூக்கள் ஜரிகையில் மின்ன, உஷாவுடன் நடந்து வந்தவளை விழியெடுக்காமல் பார்த்தான் விக்ரம்.

மடியில் மகளை வைத்து அமர்ந்திருந்தவனின் பார்வை, அவளைத் தாண்டி எங்கும் செல்லவில்லை. “விக்ரம் விக்ரம்னு ஒரு நல்லவன், விறைப்பா சுத்திட்டு இருந்தான், அவனை பார்த்த? நீ பார்த்த?” என முகுந்தனும் ரவியும் கிண்டல் செய்ய, நரேனுக்கோ நிசப்தியைப் பார்த்து மனம் நிறைந்து போயிருந்தது.

அந்த கிண்டலையெல்லாம் கண்டுகொள்ளாமல், தன்னவளையே விழியெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

“எதுக்கு இப்படி பார்க்குறீங்க? எல்லாரும் ஒருமாதிரி பார்க்குறாங்க…” என முணுமுணுக்க,

“அட்ஜஸ் பண்ணிக்கோ, வேற வழி இல்ல.” என்றவன் பார்வையை மாற்றவே இல்லை.

“ஓஹோ…” என்று பின்னாடி நின்றிருந்த உஷாவும் ரித்தியும் கத்த, அதைப் பார்த்து மற்றவர்களும் கத்த, நிசப்தியால் அமரவே முடியவில்லை. நெளிந்து கொண்டே இருக்க விக்ரமோ, “ஹேய் சும்மா இருங்கப்பா, எழுந்து ஓடிர போறா…” என்று அவனும் கிண்டலடிக்க, பெரியவர்களின் கண்களும் மனமும் நிறைந்து போனது.

அனைவரையும் சரி செய்து ஐயர் கொடுத்த மாங்கல்யத்தை தன்னவளின் கழுத்திலிட்டு, தன்னில் சரிபாதியாக்கிக் கொண்டான்.

நிசப்திக்கு என்ன முயன்றும் கடகடவென கண்ணில் நீர் வழிந்தது. இதழ் பிரித்து புன்னகைத்தாலும், அந்த நிமிடத்திற்காக அவள் கடந்து வந்த கஷ்டங்கள் நொடியில் படமாய் ஓடி மறைந்தது.

அவளது மனவோட்டத்தைப் புரிந்த அனைவருக்குமே, அந்த நிமிடம் விழிகள் கலங்கத்தான் செய்தது. ஆனால் அதை வெளிக்காட்டாமல் அடுத்தடுத்து சம்பிரதாயங்களை செய்ய வைத்தனர்.

அடுத்து உறவுகளின் வாழ்த்துகளோடு அந்த நிமிடங்கள் கரைய, காலை உணவும் முடிந்து, உறவுகளும் கலைய, மகளும் உறக்கத்திற்கு அழுக, “நீங்க பாப்பாவை தூங்க வைங்க, அப்படியே நீங்களும் ரெஸ்ட் எடுங்க.” என நிசப்தி, விக்ரமை உள்ளே அனுப்பிவிட்டு நரேனையும் உஷாவையும் வழியனுப்ப வெளியில் சென்றாள்.

விக்ரமிற்கும் இந்த மூன்று நாள் ஓட்டம், சற்று படுக்கத்தான் சொன்னது. அதனால் மறுத்து பேசாமல், அவளை எடுத்துக்கொண்டு அறைக்கு செல்ல, பதில் பேசாமல் செல்லும் மகனையேப் பார்த்திருந்தார் ரேணுகா.

அவர் எதிர்பார்த்தது இதைத்தானே?! குடும்பம், குழந்தை என தன்மகன் வாழவேண்டும் என்றுதானே ஆசைப்பட்டார். அது கண் முன்னே நடக்க, ஆனந்தக் கண்ணீர்தான் அவர் விழிகளில்.

நரேனுடன் பேசிக் கொண்டிருக்கும் நிசப்தியைப் பார்த்த ரேணும்மா, “இனியாச்சும் ரெண்டு பேரும் சந்தோசமா இருக்கணும், அதுதான் எனக்கு வேணும்.” என்றார் கண்களைத் துடைத்தபடி.

“விக்ரம் இந்த லைஃப்பை மிஸ் பண்ண மாட்டான்மா. நீங்க வேணும்னா பாருங்க, நாமளே வியந்து போற அளவுக்கு ரெண்டு பேரும் வாழப் போறாங்க. இவங்க பட்ட கஷ்டமெல்லாம் அதுக்குத் தான்னு நினைச்சிக்கோங்க. பாருங்க அவ வர்றா, நீங்க அழறதைப் பார்த்தா கன்ஃபியூஸ் ஆகப்போறா.” என்றதும், சட்டென்று முகத்தில் புன்னகையைத் தவழவிட்டார்.

“ரேணும்மா உங்களுக்கு காஃபி எடுத்துட்டு வரவா? உங்களுக்கு?” என ரேணுவிடம் கேட்டுவிட்டு, ரித்தியையும் பார்த்து கேட்க,

“ம்ம் வேண்டாம், நீங்க இருங்க. நான் உங்க ரெண்டு பேருக்கும் கொண்டு வர்றேன்.” என ரித்தி அங்கிருந்து நகர,

“ரேணும்மா, அது… நான் அவங்களை எப்படி கூப்பிட? எனக்கு கொஞ்சம் டைம் தரீங்களா? அவங்க என்னை தப்பா நினைச்சிட்டாங்களா?” என திணற,

“அதெல்லாம் இல்லடா, அவளுக்கு உன்னைப் புரியும். சீக்கிரம் ரெண்டு பேரும் ராசியாகிடுவீங்க. அதனால இன்னைக்கு மூளையை சூடாக்காம காஃபியை குடிச்சிட்டு நீயும் கொஞ்ச நேரம் படு. லன்ச் ரெடியானதும் எழுப்புறேன்.” என்றதும் அவரைக் கட்டிக்கொண்டாள்.

மகனே ஆனாலும் அவன் செய்தது தப்புதான் என தட்டிக் கேட்டு, தன்னோடு கூடவே இருந்தவரை அவளால் எப்போதும் மறக்கமுடியாது.

ரித்தி காஃபியோடு வர, அதை வாங்கியபடியே அறையை நோக்கி நடந்தாள்.

“என்னம்மா?” என்ற ரித்தியிடம், “இன்னைக்கு சுத்தி போடணும் ரெண்டு பேருக்கும், என் கண்ணே பட்டுருக்கும்.” என்று ஆனந்தமாக சலித்தபடி வேலையைப் பார்த்தார்.

இங்கு உறங்கியிருப்பான் என்று நினைத்து அறைக்குள் வர, அவனோ மகளை மார்பில் போட்டு தட்டிக் கொடுத்தபடி படுத்திருந்தான்.

“இன்னும் தூங்கல?” என்றபடியே அருகில் அமர,

“ம்ம்ம்… தூக்கம் வரல, பட் படுக்கணும் போல இருந்தது அவ்ளோதான்.” என்றவன், குழந்தையை பெட்டில் பாதுகாப்பாக படுக்கவைத்து, சாய்ந்து அமர்ந்தபடியே அவளை நோக்கி கையை நீட்ட, அவளும் பெரிதாக பிகு எல்லாம் செய்யவில்லை.

காஃபியோடு அவனிடம் வந்தமர, அந்த காபியை வாங்கி பருகியபடியே அவளையும் பருக,

நெளிய ஆரம்பித்தவளோ, “ஆஹான் இது சரியில்ல…” என முறைக்க முயன்று முடியாமல் அவனிடமே சாய, கர்வப் புன்னைகையுடன் காஃபி கப்பை ஓரமாக வைத்துவிட்டு, வாகாக அணைத்துக் கொண்டான் சட்ட நிபுனன்.

எத்தனை கஷ்டம், எத்தனை அழுகை, அவமானம், இழப்பு. அனைத்தையும் கடந்து இதோ தன் கைகளுக்குள் எந்தவித வெறுப்பும் மறுப்பும் இல்லாமல், தழுவிக்கொண்டாள் அவனை. பார்த்துக்கொள்வான் பத்திரமாக, அவனது பொக்கிசத்தை.

அவனைத் தழுவிக்கொண்டாள் அவனது இளந்தளிர். இனி அவர்கள் வாழ்க்கையில் என்றும் வசந்தமே!

உள்ளம் எனும் வீடெங்கும்

உன்னழகை நான் தானே

சித்திரத்தை போல் என்றும்

ஒட்டி வைத்து பார்த்தேனே

எனைத் தழுவும் இளந்தளிரே

உனக்கென நான் வாழ்கிறேன்

***  

You may also like

1 comment

M. Sarathi Rio May 3, 2026 - 7:16 pm

அப்பாடா..! ஒருவழியா கல்யாணமும் நடந்திடுச்சா
ஹேப்பி.

😀😀😀

CRVS (or) CRVS 2797

Reply

Leave a Comment

About Me

Featured