Home Anti Heroineஅகானா – 99

அகானா – 99

by Vathani S

அகானா – 99

ஆறு மாதங்கள் கழித்து…

தேனி… வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில்.

அதிகாலை நேரமே கோவில் வளாகம் உறவினர்களின் சந்தோச சாரலில் நிறைந்திருந்தது. கோவிலைச் சுற்றி தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன.

மலர்களின் வாசனையும், மங்கள வாத்தியங்களின் இசையும் காற்றில் கலந்து வர, அங்கிருப்பவர்களுக்கு அது ஒரு நேர்மறையான மகிழ்ச்சியைக் கொடுத்தது எனலாம்.

பல வருடங்களுக்குப் பிறகு அந்த குடும்பம் முழுவதும் ஒரு சந்தோஷ நிகழ்விற்காக ஒன்று கூடியிருந்தது.

ஆம் இன்று நவீன் – மாலினியின் திருமணம் இனிதாக, ஒரு விழாவாக, அனைவரின் சம்மதத்தோடு நடந்தேறிக் கொண்டிருந்தது..

நவீனிற்கு வேலையில் ட்ரான்ஸ்ஃபர் கிடைத்திருக்க, அவனுக்கு புது இடத்தில் ஆறு மாதம் விடுமுறையில்லாமல் வேலை செய்தே ஆகவேண்டிய கட்டாயம். 

அதோடு மகிழினியும் உண்டாகியிருக்க, அவளை உடனே அழைத்து வர முடியாத சூழல் ஆரியனுக்கு. மகிழியின் உடல்நிலை காரணமாக மஞ்சரியும் வர முடியாது என்பதாலும், அகானாவாலும் தொடர்ந்து விடுமுறை எடுக்க முடியாத சூழலாலும், திருமணத்தை ஆறு மாதங்கள் தள்ளி வைத்திருந்தனர்.

அதிலும் கவிதா “நம்ம குடும்பத்துல நல்லபடியா நடக்கப்போற ஒரு விஷேசம், இதுல எந்த தடையும் வந்துடக்கூடாது. மஞ்சுவுக்கும், அம்முவுக்கும் எப்போ வசதிப்படுதோ அப்போ வச்சிக்கலாம்..” என்றுவிட்டார் முடிவாக.

மற்றவர்களுக்கும் அதேதான் எண்ணம் என்பதால், மறுத்துக் கூறவில்லை.

முந்தைய நாள் நிச்சயதார்த்தமும் வரவேற்பும் இனிதாக முடிந்திருந்தது. இன்று முகூர்த்தம்.

திருமணம் முடிந்து தான் சாப்பிட வேண்டும் என்பதால், நவீனிற்கு காபியை எடுத்துக்கொண்டு வேகமாக அந்த அறைக்குள் நுழைந்தார் மஞ்சரி.

தன் கையில் தவழ்ந்த முதல் குழந்தை, இன்று கல்யண கோலத்தில், பார்க்கும் போதே ஆனந்தக் கண்ணீர் நிறைந்து தளும்பியது மஞ்சரிக்கு.

அவரின் நிலை உணர்ந்து “சித்தி!” என்று ஓடிவந்த நவீன், அறை வாசலில் நின்றிருந்த மஞ்சரியை கட்டிக்கொண்டான்.

“என் கண்ணே பட்டுடும் நவீ?” என வேகமாக ஒற்றைக் கையிலேயே திருஷ்டி சுத்தினார்.

“என்ன சித்தி நீ.?” என்று தலை கோதியவனுக்கு, வெட்கம் வந்துவிட்டது.

மகனின் வெட்கம், அந்த தாயின் மனதில் நிம்மதியைக் கொடுக்க, அவன் தலையை மெதுவாக வருடினார்.

அப்போது அருகில் நின்று இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த குமரனும், ஆரியனும் “இதெல்லாம் ஓவர்..” என சண்டைக்கு வர,

“டேய் கொஞ்சம் சும்மா இருங்க.. நேத்து இருந்து பையனைப் போட்டு அந்தப்பாடு படுத்துறீங்க..” என அவர்களை அதட்டிவிட்டு “நீ காஃபியைக் குடி மா..” என நவீனிடம் கொடுத்துவிட்டு வெளியில் செல்ல,

“நவீ ண்ணா கல்யாணம் முடிஞ்சதும் எங்களை எல்லாம் மறந்துட மாட்டீங்களே..” என ஆரியன் ஆரம்பிக்க,

“ஆரி என்ன நினைச்சிட்டு இருக்க, தாலியைக் கட்டினதும் முதல் வேலை நம்ம நம்பர் எல்லாத்தையும் ப்ளாக் பன்றதுதான் அவனோட வேலையே..” என குமரனும் கலாய்க்க,

“உங்க மொக்கை ஜோக்குக்கு எல்லாம் பொறுமையா ஒருநாள் சிரிக்கிறேன். இப்ப கண்டிப்பா முடியாது..” என நவீனும் கிண்டலில் இறங்க, அந்த அறையே சிரிப்பில் நிறைந்திருந்தது.

அதே நேரம்…

மணமகள் அறையில்…

மாலினி கண்ணாடி முன் அமர்ந்திருந்தாள். பச்சை நிற பட்டுப்புடவையில் தேவதையைப் போல இருந்தாள்.

அவள் கைகளில் நடுக்கம் இருந்தது. அதை கவனித்த ராகினி அவளருகே அமர்ந்தாள்.

“என்னக்கா?”

மாலினி மெதுவாக சிரித்தாள்.

“ஒன்னுமில்ல.”

“அக்கா.”

“இவ்வளவு நாள் காத்திருந்ததெல்லாம் நினைவுக்கு வருது.” அவள் குரல் லேசாக உடைந்தது. “பல நேரம் இந்த கல்யாணமே நடக்காதோன்னு பயந்தேன்.” என்றாள் கலங்கிப் போன குரலில்.

ராகினி அவளது கையை பிடித்தாள். “இதுக்கு நானும் ஒரு காரணம் இல்ல. நாங்க கல்யாணம் செய்யாம இருந்திருந்தா, இன்னும் கொஞ்சம் முன்னமே உங்க கல்யாணம் நடந்திருக்கும்…?” என்ற மாலினியின் கண்கள் கலங்கின.

“ம்ச்.. முடிஞ்சதைப் பேசாதே, அப்போ உங்களுக்கு வேற ஆப்சனும் இல்லதானே.. இனி எப்பவும் அதைப்பத்தி பேசக்கூடாது ராகி.” என தங்கையின் கையைப் பிடித்து தட்டிக்கொடுக்க, மகியும் அகானாவும், காயத்ரியும் உள்ளே வந்தனர். 

அவர்களைப் பார்த்ததும் பெண்கள் இருவரும் வேகமாக தன் கண்களைத் துடைத்துக்கொள்ள,

“இதோ அடுத்த தெருவுல வீட்டை வச்சிக்கிட்டு, இவளுங்க தொல்லை தாங்க முடியல, காயத்ரி க்கா.. அப்போ நானெல்லாம் எவ்ளோ பாவம் யோசிங்க. சிங்கப்பூர்ல கொண்டு போய் என்னை விட்டுருக்காங்க..” என மகிழினி நீட்டி முழக்க,

“அம்மா தாயே பார்த்து கொஞ்சம் மூச்சு விட்டுப்பேசு, உள்ள இருக்குற என் மருமகனுக்கு மூச்சு வாங்கப் போகுது..” என அகானா மகியை கிண்டல் செய்ய,

“உங்களுக்கு என்னப்பா.. எல்லாரும் இங்கேயே இருக்கீங்க? நான் மட்டும் தனியா அங்க இருக்கேன்..’” என மீண்டும் சோக கீதம் வாசிக்க,

“அப்போ எங்க அம்மா அங்க இருக்குறது வேஸ்டுனு சொல்றியா? என அகானா மீண்டும் வம்பிழுக்க,

“ஆத்தி.. நான் சொன்னதுக்கு இப்படி ஒரு அர்த்தம் இருக்கா?” என மகிழினி நெஞ்சில் கைவைக்க, அந்த செய்கையில் அனைவரும் சிரித்துவிட்டனர்.

“அம்மு உனக்குத் தெரியாதுல்ல.. மகி இருந்தா எங்க தெருவே ஒரே ஜாலியா இருக்கும்.. இருக்குற குட்டி பசங்கள கூப்பிட்டுட்டு ரோடு ரோடா சுத்திட்டு, கிழவிங்க கூட வம்பிழுத்துட்டுன்னு ஜாலியா சுத்திட்டு இருப்பா.. இப்போ அங்க தனியா இருக்கால்ல, அதான் கஷ்டமா இருக்கு போல..” என காயத்ரி கூற, மற்றவர்களுக்கும் அது தெரியும் என்பதால், மகியை ஆதரவாக அனைத்துக் கொண்டனர்.

“சரி.. சரி வந்த வேலையை மறந்துட்டேன் பாருங்க.. வாங்க நாம கிளம்பலாம், நவீ அண்ணா அண்ணிக்கிட்ட பேசனுமாம்..” என்றதும் மாலினிக்கு திக்கென்றாக, ‘எத..’ என அதிர்ச்சியில் எழுந்து நின்றுவிட்டாள்.

மாலினியின் செய்கையில் மீண்டும் மூவரும் சிரித்துவிட, மாலினியின் முகம் குங்குமாமாய் சிவந்து விட்டது. 

பெண்ணவளின் எண்ணம் தன்னைப்போல் முதல் நாள் இரவுக்கு சென்றது.

முதல்நாள் நிச்சயம் முடிந்து அப்படியே ரிசப்சனும், அடுத்தநாள் தாலிக்கட்டு என்றுதான் முடிவாகியிருந்ததால், முதலில் நிச்சயத்தை முடித்து, மீண்டும் அலங்காரம் செய்து மணமக்களை ரிசப்சனில் நிறுத்தியிருந்தனர்.

அகானாவின் நிமிர்வும், அழகும் அவளுக்கு பேரழகைக் கொடுத்தது. குறையே இல்லையே என எல்லாவற்றையும் நிறுத்தி நிதானமாக செய்து.. மணமக்களை வாழ்த்தி.. மாலினிக்கு அனைத்தும் செய்து.. தன் தாயோடும் கணவனோடும் நின்று முதலில் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டாள், அகானா.

அடுத்து குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவராக வர, யாருமே அகானாவை கீழே இறங்கவிடவில்லை. கவிதா குடும்பம், ரஞ்சனி குடும்பம், வினோத் குடும்பம், விஜயா குடும்பம் என அனைத்திலுமே இன்றியமையாதவள் ஆகிப்போனாள் அகானா.

ரவியை யாரும் பேருக்கு கூட மேடைக்கு அழைக்கவில்லை. வேண்டுமென்று யாரும் செய்யவில்லை, அவரவர் குடும்பம் முதலில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமே.. அகானா மேடையில் இருந்தாலும், இதை கவனிக்காமல் இல்லை.

ஆகனும் இரண்டு முறை சென்று அழைத்தும் பார்க்க, “எல்லாரும் எடுக்கட்டும் கண்ணா, கடைசியா எடுத்துக்குறோம்..” என்றுவிட்டார்.

அவருக்கும் கொள்ளை கொள்ளையாய் ஆசை மகளோடு ஒரு புகைப்படம் எடுத்துவிட வேண்டும் என்று. 

எந்தளவிற்கு ஆசை இருந்ததோ, அதே அளவிற்கு பயமும் இருந்தது. இவர்கள் மேடையேற, அவள் இறங்கிவிடுவாளோ என்று. அதனால் கீழே இருந்தே மகளை ஆசையாசையாய் பார்த்து, கண்களில் நிரப்பிக் கொண்டிருந்தார்.

இனி தாமதிக்க முடியாது எனும் பட்சத்தில் அவர் எழ, அகானா கீழே இறங்கப் பார்க்க, மனைவியின் கையை இறுக்கமாகப் பிடித்து, கெஞ்சலாக தன் பார்வையை பதித்தான் மனையாளிடம்.

ஆழமாக மூச்சிழுத்து தன்னை சரி செய்து கொண்டு நவீனுக்கு அருகில் நின்று, தனக்கருகில் கணவனை நிறுத்திக்கொண்டாள் பெண்.

இதுவே போதும் என்று நினைத்தாரோ ரவி, முகமெல்லாம் மலர்ந்து, மலர்ந்த புன்னகையுடன் மாலினியின் அருகில் நிற்க, அவருக்கு அருகில் மைதிலி..

மேடையில் இருந்தாலும் அகானாவிற்கு பார்வை மொத்தமும் மஞ்சரியிடம் மட்டும் தான். 

அவர் விழிகளில் ஏதேனும் ஒரு உணர்வு தென்படுகிறதா? என தேட, அவரோ அப்படி ஒன்று நடந்து கொண்டிருக்கிறது என்று கூட கண்டுகொள்ளாமல் தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

தன் தாய் முகத்தில் வலி இல்லை என்பதை உறுதி செய்த பிறகே, அவளால் நிம்மதியாக சிரிக்க முடிந்தது. 

அதன்பிறகே அகானாவிற்கு நிம்மதி வந்தது. இழுத்து வைத்த மூச்சைவிட்டு மெலிதாக புன்னகைத்தாள் போட்டோவிற்கு.

அடுத்த மூன்று மணி நேரம்.. நவீனும் மாலினியும் சேர்ந்தே எல்லோரையும் எதிர்கொண்டனர். அவ்வபோது தன்னவளின் கைகளை பற்றுவது.. தன்னவளின் சிரித்த முகத்தின் வழியே.. கண்களின் நிறையும் அந்த காதலை கண்டுக் கொள்வது என நவீன் அந்த நிமிடங்களை ரசித்தான்.

என்னதான் ஆறு வருடங்கள் காதலித்திருந்தாலும், பெரும்பாலும் தனிமையே கிடைத்திருந்தாலும் வார்த்தைகளில் கூட எல்லை மீறியது கிடையாது இருவரும்.

இன்று அந்த எல்லையை கடந்து இருவரும் அடுத்த அடியை எடுத்து வைத்திருந்தனர். 

விழா இனிதாக முடிந்தது. மாலினி “கால் வலிக்குது” என்றாள் ராகினியிடம். பக்கத்தில் இருந்த மஞ்சரியோ “சாப்பிட்டு மேலே ரூமுக்கு போய்டலாம்டா.. வா” என கூட்டி சென்றார்.

இரவு பத்து மணிக்கு மேல்.. உறவுகள் எல்லாம் சென்றிருந்தது.

முக்கிய உறவுகளும் உள்ளூர் என்பதால்.. வீடு கிளம்பிவிட்டனர். நெருங்கிய உறவுகள் மட்டுமே மண்டபத்தில்.

அகானாவும் ஆகனும் மருத்துவமனைக்கு சென்றுவிட்டனர். அகானா தன் வீட்டிற்கு வரமாட்டள் என்று புரிந்து கொண்ட ஆகன், தன் மருத்துவமனையிலேயே ஒரு லக்சுரி சூட் போல ஒரு வீட்டைக் கட்டியிருந்தான்.

தேனிக்கு வந்தால் இவர்களின் வசிப்பிடம் இங்குதான்.

ஆரியனும் மகிழினியும் சங்கரின் வீட்டிற்கு கிளம்ப, விஜயா குடும்பம் நித்யாவின் வீட்டிற்கு சென்றுவிட்டனர்.

சங்கரின் பங்காளி மகள்தான் மாலினி என்பதால், சொந்தங்களில் பாதி பேர் சங்கரின் வீட்டில்தான். 

புகைப்படம் எடுத்ததுமே ரவி மனைவியோடு சாப்பிட்டுவிட்டு கிளம்பிவிட்டார். இருந்து மகளுக்கும், அவளின் அம்மாவிற்கும் தர்ம சங்கடத்தைக் கொடுக்க அவர் விரும்பவில்லை.

நவீன் உடைமாற்ற அறைக்கு சென்றுவிட, மாலினி அசதியில், ஏதோ கொறிக்க, மஞ்சரியோ மருமகளை நன்றாக சாப்பிட வைத்தே அனுப்பினார்.

அவளோ அன்னையிடம் சொல்லிக் கொண்டு தன்னறைக்கு வந்துவிட்டாள். பாவம் மாலினி சோர்ந்து போயிருந்தாள்.. ‘அம்மாடி இந்த கல்யாணம் எல்லாம் இவ்ளோ கஷ்டம்னு தெரிஞ்சிரிந்தா, ராகி மாதிரி நானும் ஓடிப்போயே கல்யாணம் பண்ணிருப்பேன்.. அவ்வ் எவ்ளோ வெயிட் அந்த லெஹங்கா.. அதுலயும் நின்னு நின்னு கால் வலி, எல்லார் கால்ல விழுந்து இடுப்பு வலி.. முடிலடா பரமா..’ என பொறுமையாக அந்த உடையைத் தூக்கிக் கொண்டு நடந்து போக, அவளைப் பின்னிருந்து காதல் தளும்ப பார்த்துக் கொண்டிருந்தான் நவீன். 

மாலினிக்கு கால்கள் எல்லாம் அசந்து போனது. “அச்சோ ஏன் இப்படி வலிக்குது? ஆகன் அண்ணாக்கிட்ட சொல்லி ஒரு டேப்ளட்டாச்சும் வாங்கி வச்சிருக்கலாம்.. அம்மா இந்த ஹேர்ஷ்டைல் அதுக்கும் மேல வெய்ட்டு.. முதல்ல இந்த இடுப்பை சாய்க்கனும், அப்புறம்தான் இந்த கழட்டுறது மாட்டுறது எல்லாம்..” என புலம்பிக் கொண்டே.. கைகளை விரித்துக் கொண்டு.. அப்படியே சாய்ந்தாள் அந்த கட்டிலில்.

கண்கள் தாமாக மூடும் நேரம்.. கதவு திறந்தது. ராகினியோ, காயத்ரியோ யாராவது இருக்கும் என எண்ணிக் கொண்டே கண்களை மூடிக் கொண்டாள்..

“மாலினி” தேனாக வந்து விழுந்தது நவீனின் குரல் ..

லேசாக அசதியாக விழித்தாள் பெண்.. நவீனின் பிம்பம் கண்ணில் விழவும் நன்றாக விழித்தாள்.. ஆனாலும் எழவில்லை.. கனவா நினைவோ என ஆராயத் தொடங்கினாள்.

தன் கையிலிருந்த டேப்ளட்டை அவளுக்கு அருகில் வைத்தபடியே “என்ன ஆச்சு..” என அருகில் அமர்ந்தான். 

இப்போதுதான் மாலினிக்கு நிஜம் என புரிய.. “சார் நீங்க இங்க எப்படி வந்தீங்க..?” என்றாள் புன்னகையோடு. 

“கீழையே உனக்கு ரொம்ப முடியாம இருந்தது, அதான் ஆரிக்கிட்ட கேட்டு டேப்ளட் வாங்கிட்டு வந்தேன்.. எழுந்து போட்டுக்கோ” என அங்கிருந்த தண்ணீரையும், மாத்திரையையும் கொடுக்க, மென்புன்னகையுடன் வாங்கி போட்டுக்கொண்டாள்.

இல்லையென்றால் நிச்சயம் நாளைக்கு அவளால் எதுவுமே முடியாது.

“அவ்ளோ பெயினா?” என அவளின் நெற்றியை வருட, மாலினி அதற்கு பதிலளிக்கவில்லை.. 

தன் கழுத்தில் இருந்த நகையைக் காட்டி “இதை கழட்ட ஹெல்ப் பண்ணுங்க ப்ளீஸ்..” என அவள் கழட்ட ஆரம்பிக்க, நவீனும் அவளுக்கு உதவ ஒருவழியாக நகைகள் மொத்தத்தையும் கழட்டி முடிக்கவும் தான் ‘ஷப்பா..’ என்றாள் பின்னால் கைகள் ஊன்றி சாய்ந்து கொண்டு.. 

“இப்போதான் ஃப்ரீயா இருக்கு..” என்று அவனைப் பார்க்க, அவனின் பார்வை அவளின் மேல் ரசனையாக விழுந்திருந்தது.

நவீன் அவளின் வலது கையை எடுக்க… மாலினியின் தேகம் சிலிர்த்தது அவனின் தீண்டலில். நிமிர்ந்து அமர்ந்தாள்..

“சார் உங்க பார்வையே சரியில்லையே” என்றாள் அலங்காரங்கள் தாண்டி மின்னிய பார்வையோடு.

“நாளைக்கு எப்படியும் இதெல்லாம் நான் தானே செய்யனும், அதான் இப்பவே ட்ரெயினிங்க்..” என்றவனின் கண்கள் கள்ளம் பேசியது பெண்ணவளிடம்..

இந்த நிலை ஏனோ மாலினியை நிலையிழக்கச் செய்ய ஏதும் சொல்லாமல் அவனின் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டாள்.. தன்னில் சாய்ந்தவளை மென்மையாக அணைத்து கொண்டான் நவீன்..

பெண்ணும் தன் கைகளை சேர்த்து.. தன்னவனை அணைத்துக் கொண்டது இறுக்கமாக.

அந்த நிலை அவளை மேலும் ஈர்க்க, தன்னவனை நிமிர்ந்து பார்த்து.. அவன் இதழ்களை மெதுவாக முத்தமிட தொடங்கினாள்..

தொடங்கியது வேண்டுமானால்.. அவளாக இருக்கலாம்.. அதனை வழிநடத்தி.. அவளின் தெள்ளமுதை ரசித்து ருசித்து.. அவளை ஆனந்த மூர்ச்சையாக்கி.. தன் காற்றையும் அவளுள் கொடுத்து.. தன் நேசத்தை அதில் கலந்து.. தனக்கான உரிமையை அவளிடம் சொல்லி.. அதன் தடத்தையும் புரிய வைத்தே நிமிர்ந்தான் நவீன்.

மாலினியின் விழிகள் இமைக்க மறந்தது.. காதலின் வேகமும் நேசமும்.. வார்த்தையில் சொல்லாத காதலும்.. புது ரத்தம் பாய்ந்த உடலும் சிலிர்த்து அடங்கிய தேகமும்.. அவன் நேசத்தை மீளமுடியா மனமும்.. அவனுள் கலந்த உதடுகளும்.. தொலைந்த பார்வையும்.. என இமைக்க மறந்து தன்னவனையே பார்த்திருந்தாள் பெண்.

“இந்த நினைப்போடவே தூங்கினா நாளைக்கு ப்ரெஷாகிடுவ..” என சிரித்தபடியே, மீண்டும் இதழில் முத்தம் பதித்து அறையைவிட்டு வெளியேற, தன் கைகளில் முகத்தைப் புதைத்தபடியே வெகுநேரம் அமர்ந்திருந்தாள் மாலினி.

அவன் சொல்லிச் சென்ற போலவே மறுநாள்.. அழகாக விடிந்தது அடுத்தநாள் அவளுக்கு.

கோவில் வெளியில்… 

பெண் வீட்டார் சார்பில் ரஞ்சனியும் சங்கரும், மாப்பிள்ளை வீட்டார் சார்பில் கவிதாவின் தம்பியும் தம்பி மனைவியும் வரவேற்பில் நின்றிருந்தனர். 

அப்போது வந்து நின்ற காரிலிருந்து இறங்கியவர்களைப் பார்த்த பலரும் ஆச்சரியப்பட்டனர். இவர்கள் இன்றும் வருவார்கள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. 

இருவரையும் பார்த்து கவிதாவின் தம்பி முகத்தை திருப்பிக் கொள்ள, அவரின் மனைவியும் ரஞ்சனியும் வாயெல்லாம் பல்லாக வரவேற்றனர்.

முன்பிருந்த பதற்றம் இருவரின் முகத்திலும் இல்லை. நீண்ட நாட்களுக்குப் பிறகு அமைதியாகத் தெரிந்தனர். அவர்களைப் பார்த்த மஞ்சரி சட்டென்று அங்கிருந்து நகர்ந்துவிட, இதையெல்லாம் எதிர்பார்த்தே வந்ததால், அமைதியாக அந்த நொடியைக் கடந்து சென்றனர்..

இதெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தாலும், எதிலும் அகானா கலந்துகொள்ளவில்லை. அவளுக்கு நவீனின் திருமணத்தை கொண்டாட வேண்டும். அவனின் காத்திருப்பு அந்த கொண்டாட்டத்திற்கு உகந்தது தானே

அப்போது… “பாப்பா!” என்ற குரல் கேட்க, திரும்பிப் பார்த்த அகானா முகம் மலர்ந்தது.

“கண்ணன் அங்கிள்!” என மலர்ந்து புன்னகைக்க,

“எப்படி இருக்கீங்க பாப்பா?” என்றார் புன்னகையுடன்.

“ரொம்ப நல்லா இருக்கேன் அங்கிள். எங்க நீங்க மட்டும் தான் வந்துருக்கீங்க. ஆன்டியை காணோம்..” என அவருக்கு பின்னால் பார்க்க, 

“அங்க மஞ்சரி அம்மா கூட பேசிட்டு இருக்காங்க பாப்பா.. துரைப்பாண்டி அண்ணன் பேசுனாரா?

“ஹான் ஆமா அங்கிள்.. இப்போதானே கனடா போனார்.. அதனால வர முடியலன்னு சொன்னார். கொஞ்ச ஃபீல் பண்ணார்..”

“ஆபீஸ் இப்போ ரொம்ப அமைதியா இருக்கு பாப்பா.” என்று அவர் சிரிக்க,

“அங்கிள்..” என அவரைப் பார்த்து முறைக்க முயன்று அழகாக சிரித்தாள். 

அடுத்த சில நிமிடங்களில்…

மங்கள வாத்யங்கள் ஒலிக்க மணமக்கள் மேடைக்கு அழைக்கப்பட்டனர்.

ராகினியின் துணையோடு மனமேடைக்கு வந்த மாலினியின் மீதே தன் பார்வையை நிலைத்திருந்தான் நவீன்.

மாலினியோ வெட்கத்தில் தலை குனிந்திருந்தாலும், அவனை ஓரப்பார்வையால் தீண்டிக் கொண்டே தான் வந்தாள். 

நேற்றைய நிகழ்வுகள் அவளை மேலும் சிவக்க வைத்திருந்தது.

ஐயர் மந்திரங்களை ஓத ஆரம்பிக்க “கெட்டிமேளம்… கெட்டிமேளம்…” என்ற குரல் ஒலிக்க, நவீனின் கைகள் லேசாக நடுங்கின.

மாலினியின் கண்களில் கண்ணீர் திரண்டது.

அடுத்த நொடி…

மங்களநாண் அவள் கழுத்தில். முதல் முடிச்சை நவீன் இட,  மற்ற இரண்டையும் அகானா போட்டு முடித்தாள்.

கோவில் முழுவதும் கரவொலி எழுந்தது. அத்தனை பேரின் விழிகளும் நிறைந்து தளும்பியிருந்தது.

மற்ற சடங்குகள் முடிய, பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கி முடிய, மணமக்கள் பெண் வீட்டிற்கு சென்றனர்.

மாலை…

பெரியவர்கள் சற்றே ஆசுவாசமாக அமர, அகானாவும் அமைதியாக அமர்ந்திருந்தாள்.

“அம்மு… இன்னும் கோபம் போகலையா உனக்கு?” என ஆகன் அருகில் வந்து அமர்ந்தான்.

“கோபமா ஏன்? அதெல்லாம் இல்ல..”

“அப்போ ஏன் கொஞ்ச நேரமா ஒரு மாதிரி இருக்க.”

“தெரியல.” அவள் நெற்றியை பிடித்தாள். “தலை சுத்துற மாதிரி இருக்கு.” என்றாள் முடியாத குரலில்.

ஆகனின் முகம் மாறியது. “எப்போ இருந்து?” பதட்டமானது அவனுக்கு.

“காலையில இருந்தே.”

“ஏன் முன்னாடி சொல்லல?” என்றதும் அவள் முறைக்க, 

“நீ வா..?” என அவளை அறைக்கு இழுத்து வந்துவிட்டான்.

சில நிமிடங்கள் கழித்து… அந்த அறைக்குள் அமைதி.

ஆகன் மனைவியையேப் பார்த்துக்கொண்டிருந்தான்.

அவன் முகத்தில் மெதுவாக ஒரு புன்னகை மலர ஆரம்பித்தது.

அதைப் பார்த்த அகானா புருவம் சுருக்கினாள்.

“என்ன?”

அவளது கையைப் பிடித்தவன். “அம்மு…” என்றான் காற்றான குரலில்.

“ம்ம் என்னாச்சு.”

“நீ ஏன் கெஸ் பண்ணல..”அவன் கண்கள் லேசாக கலங்கின.

“ம்ம்ம்.. ஆமாவா..?” பெண்ணின் விழிகள் விரிந்து கொண்டே போனது.

“நம்ம வாழ்க்கையில இன்னொருத்தர் வரப்போறாங்க.” என்றான் மனைவியை இறுக அனைத்து.

“சீனியர்…” என்றவளுக்கு மகிழ்ச்சியில் பேச்சே வரவில்லை.

“ஆம்..” என அவன் தலையசைத்தான்.

அடுத்த நொடி… அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது.

கணவனின் அனைப்பு இறுகிக் கொண்டே போனது. 

அதே நேரம் அந்த அறைக்கு வெளியே…

குடும்பத்தினரின் சிரிப்புச் சத்தம் சங்கீதமாய் கேட்டுக்கொண்டிருந்தது.

உள்ளே… இரண்டு இதயங்கள் தங்களது புதிய வரவை, முத்தங்களால் இனிதாக வரவேற்றுக் கொண்டிருந்தன.

தொடரும்…  ❤️

You may also like

Leave a Comment

About Me

Featured