அகானா – 66
ஆகன் காரோட்டிக் கொண்டே “அத்தை என்னை ஹாஸ்பிடல்ல ட்ராப் பண்ணிட்டு நீங்க கிளம்புங்க. மகி ட்ரைவ் பண்ணுவா.. ரிட்டர்ன் வர உங்களுக்கு கார் வேணும்ல..” என்றான்.
அவன் முகத்தில் இருந்த புன்னகையும், மலர்ச்சியும் கூடவே காலையில் மகள் தன் முகத்தைப் பார்க்காமலே கிளம்பி சென்ற வேகத்தையும் நினைத்தவருக்கு அவர்கள் வாழ்க்கை புலர ஆரம்பித்துவிட்டது என வேகவேகமாக கடவுளுக்கு நன்றி சொல்லிக்கொண்டார்.
ஆகன் தன்னையே பார்ப்பதௌ உணர்ந்து “அதெல்லாம் ஏன் கண்ணா..? நாங்க டாக்ஸி புக் பண்ணிக்கிறோம். இல்லைன்னா ட்ரைவர் சொல்லு, ஆரியோட கார் எடுத்துக்கிறோம்.” என்றார் மஞ்சரி.
“ஏன் த்த.. அப்புறம் உங்க பொண்ணு அதுக்கும் என்கிட்ட வந்து வம்புக்கு நிப்பா.” என சிரிக்க, ம்கள் கண்டிப்பாக செய்வாள் என்பதால் மஞ்சரிக்கும் சிரிப்பு வந்துவிட்டது.
மகி ஏதோ யோசனையிலேயே வர, “என்ன பாப்பா..?” என்றான் தங்கையை உணர்ந்து..
“ஒன்னுமில்ல ண்ணா..” என சலிப்பாக கூற,
“ம்ச் பாப்பா.. அம்மா பேசுறதையெல்லாம் மனசுல வச்சிக்காத. அவங்க அப்படித்தானு முடிவு பண்ணியாச்சுல்ல.. இனி அதை யோசிச்சு டென்சன் ஆகாத. நீ அடுத்து என்ன செய்யப்போற, பிஜி பண்றீயா எப்படின்னு யோசி. ஆரிக்கிட்ட பேசி உங்க ஃபியுச்சர ப்ளான் பண்ணுங்க. அதை விட்டுட்டு அம்மாவை, அங்க வீட்டை எல்லாம் யோசிச்சு உன்னை நீயே ஸ்ட்ரெஸ்ல தள்ளிக்காத..” என்றான் ஆகன்.
அங்கு சென்றால் கண்டிப்பாக ரஞ்சனியும், மைதிலியும் அவள் மனதை மாற்றுவதற்காக பேசிக்கொண்டே இருப்பார்கள்.
அவர்கள் பேச்சைக் கேட்டு எழும் கோபத்தை அடக்கி, அமைதியாக திரும்ப வேண்டும். இல்லையென்றால் தேவையில்லாத பிரச்சினையை தங்கள் வாழ்க்கையில் கொண்டு வருவார்கள் என்று சங்கர் கூறியிருந்தார்.
மகிக்கும் தன் வாழ்க்கை அமைதியாக செல்லவே விருப்பம். திருமண பேச்சை ஆரம்பித்ததில் இருந்தே எப்போதும் பிரச்சினைகளை மட்டும் தான் பார்க்கிறாள். இனியாவது அதைவிட்டு தள்ளி வரவேண்டும் என நினைக்கிறாள்.
இந்த பிரச்சினைகள் தனக்கும் ஆரிக்கும் இடையே இடைவெளியை உண்டாக்குமோ என்ற பயம் ஆரம்பத்தில் இருந்தே அவளுக்குள் இருக்கிறது. அதனால பயந்து பயந்து ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கிறாள்.
“மகி.. நீ ஆரியை நினைச்சு ரொம்ப பயப்படுறன்னு எனக்குத் தோணுது. ஆரி பொதுவாவே ரொம்ப ஜாலியான பையன்தான். அம்மு விசயத்துல மட்டும் கொஞ்சம் கவனமா இருப்பான். நான் ஆரம்பத்துலயே ஆரிக்கிட்ட சொல்லிட்டேம். உங்க திருமண வாழ்க்கையில அம்முவை நீ கொண்டு வரக்கூடாதுனு தெளிவா சொல்லிட்டேன். ஆரியும் தன்னோட பொறுப்பை தட்டிக் கழிக்கிறவன் இல்ல.” என்றார் மஞ்சரியும்.
“அத்தை.. எனக்கு ஆரி மேல எந்த வருத்தமும் இல்ல. அவர் என்னை எதுக்காகவும் கட்டுப்படுத்தவும் இல்ல. ஆனா அம்மாவும், அத்தையும் பேசுறதை கேட்கும் போது, தேவையில்லாம ஆரி வாழ்க்கையை கெடுத்துட்டேனோன்னு பயமா இருக்கு த்த..” என்றாள் மகிழினியும்.
“ம்ச் மகி.. நீ முதல்ல இப்படி யோசிக்கிறதை நிறுத்து. நீ இப்படியெல்லாம் யோசிக்கிறது தெரிஞ்சாலே ஆரி கோபப்படுவான். அம்முக்காகவோ, இல்ல உன் அண்ணனுக்காகவோ நீ ஆரியை கல்யாணம் செய்திருந்தாலும், ஆரி உனக்காக மட்டும் தான் உன்னை கல்யாணம் செஞ்சான். நீ இப்படியெல்லாம் நினைச்சிட்டு இருக்கிறது தெரிஞ்சா ஆரி ரொம்பவே கவலைப்படுவான். அது உனக்கு புரியுதா? இதுதான் நீ இப்படி பேசுறது கடைசியா இருக்கனும். இன்னொரு முறை நீ இப்படி பேசிறது என்ன, யோசிக்கக்கூட கூடாது..” என அழுத்தம் திருத்தமாக கண்டிப்பான குரலில் மஞ்சரி கூற, மகியின் தலை சம்மதமாக ஆடியது.
“அத்த, மகி இருக்குற மைண்ட் செட்ல அவளால ட்ரைவ் பண்ணமுடியாது. நான் ட்ரைவர் அரேஞ்ச் பண்றேன்..” என ஆகன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவர்களுக்கு பின்னால் இருந்து ஒரு மணல் லாரி அதிவேகமாக வந்து கொண்டிருந்ததை ஆகன் கவனித்தான்.
தேனி பெரியகுளம் பைபாஸ் ரோட் என்பதால் வாகனங்கள் வேகமாக வர வாய்ப்பிருக்கிறதுதான். ஆனால் இந்த லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை தாண்டி வருவது போல் இருக்க, தன்னுடைய காரை ஸ்லோவ் செய்து, சற்று சாலையைத் தாண்டி வெளியில் நிறுத்த முயலும் போது, அந்த லாரியும் சாலையைத் தாண்டி இவர்கள் காரை நோக்கியே வருவது போல் இருக்க, ஆகன் சற்றும் யோசிக்கவில்லை.
“அத்த, மகி இறங்குங்க.. அந்த லாரி இங்க தான் வருது. கார்க்குள்ள இருக்குறது சேஃப் இல்ல..” என சொல்லிக்கொண்டே இறங்க, மற்றப்பக்கம் இருந்து மகியும் வேகமாய் இறங்கிட, சற்று உள்ளேத் தள்ளி அமர்ந்திருந்த மஞ்சரியால் வேகமாக இறங்க முடியவில்லை.
“அத்த.. அத்த சீக்கிரம்.. சீக்கிரம்..” என இருவரும் பதறி அழைக்க, மகியோ பயத்தில் அழவே ஆரம்பித்துவிட்டாள்.
இவர்களின் பயத்திலும், பதட்டத்திலும் மஞ்சரிக்கும் பதட்டம் உண்டாகி, கை கால்கள் எல்லாம் உதறல் எடுக்க ஆரம்பிக்க, அவரால் வேகமாகவே இறங்க முடியவில்லை.
அதற்குள் அதிவேகமாக வந்த லாரி இவர்களின் காரை இடித்துவிட்டு அதே வேகத்தில் சென்றுவிட,
இடித்த வேகத்தில் கார் முன்னே சென்று அங்கிருந்த மரத்தில் மோதி நிற்க, கார் சென்ற வேகத்தில் கதவோரத்தில் நின்றிருந்த ஆகனும், மகியும் தூரமாய் சென்று விழ, காரோ சாலோயோரத்தில் இருந்த ஒரு புளிய மரத்தில் மோதி நின்றது.
விழுந்த வேகத்தில் மகிக்கு தலையின் பின்புறத்தில் அடிபட்டு ரத்தப்போக்கு அதிகமாகி அங்கேயே மயங்கிவிட, ஆகனுக்கோ கைகளிலும், மார்பிலும் பலத்த அடி. அந்த வலியிலும் அவன் எழுந்து ‘அய்யோ அத்தை.. அத்த..” என்றவனின் ஆக்ரோசமான அழுகை சத்தத்தில் அக்கம்பக்கம் இருப்பவர்கள் எல்லாம் ஓடோடி வந்திருந்தனர்.
மரத்தில் மோதி நின்ற காரின் பின்புறம் தீ பிடிக்க ஆரம்பித்திருந்தது.
***
“டேய் அந்த பொம்பள பேச்சைக் கேட்டு பிரச்சினையில மாட்டிக்காதீங்க.”
“நீ சும்மா இரு மச்சான்.. அந்த கலெக்டர் இந்த ஊருக்கு வந்ததுல இருந்து நம்மளால நிம்மதியா தொழில் பண்ண முடில. அவளுக்கு அவங்கம்மான்னா உயிராமே.. உயிர எடுத்துட்டா கொஞ்சம் அடக்கி வாசிப்பாள்ல..”
“ஏய் கூறுக்கெட்ட முட்டா மூதி மாதிரி பேசாதடா.. அந்த அம்மா மேல கை வச்சா.. அடுத்து நம்ம நிலமையை யோசிச்சுக்கூட பார்க்க முடியாது. ஏற்கனவே அந்த கலெக்டரம்மா நம்மளை வார்ன் பண்ணித்தான் விட்டுச்சு.. இதை நாம செஞ்சோம்னு தெரிஞ்சது.. காலம் முழுசும் ஜெயில்ல களி திங்க வேண்டியதுதான்..”
“தொழில் செய்ய வந்த பிறகு இவ்ளோ பயம் ஆகாது மச்சான். டவுசர்ல ஒன்னுக்கு போறவனையெல்லாம் நான் கூட வச்சிக்க விரும்பல. உனக்கு பயமா இருந்தா இப்படியே விலகிக்கோ.. தேவையில்லாம எனக்கு அட்வைஸ் பண்றேன்னு டென்ஸன் பண்ணாத..”
“இப்போ நான் என்ன சொன்னாலும் உனக்கு மண்டைல ஏறாது. ஆனா கடைசியா ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோ. துரைப்பாண்டி அண்ணனப் பார்த்தே அந்த கலெக்டர் பயப்படலையாம். அதோட அவரும் அவங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க சொல்லி, அவரோட ஆளுங்களுக்கு சொல்லிருக்காராம். இதுக்கு மேல உன் இஷ்டம்..”
“என்ன மச்சான் சொல்ற..?”
“பின்ன நான் வேண்டாம்னு சொன்னா அதுக்கு காரணம் இருக்கும்னு யோசிக்க மாட்டியா.. அந்த மைதிலி பொம்பள, அவங்க குடும்ப பகையை தீர்த்துக்க நம்மளை யூஸ் பண்ணுது. அதுகிட்ட கொஞ்சம் கவனமா இரு அம்புட்டுதான் சொல்லுவேன்..”
“எனக்கு ஒன்னும் புரியல மச்சான்.. கொஞ்சம் விலாவாரியா சொல்லு..” என்று கேட்ட முனியாண்டி, கள்ளச்சாராயம் காய்த்து, அதை அரசுக்கு தெரியாமலே டாஸ்மார்கில் இருப்பவர்களை கையில் வைத்துக்கொண்டு விற்பவன், அகானா வந்த சில வாரங்களிலேயே இதைக் கண்டுபிடித்து, அவர்களை கைது செய்திருந்தாள்.
பின் அவன் தொழிலே செய்யாதபடிக்கு முடக்கியுமிருந்தாள். அவனும் வேறுவழியில்லாமல் அடங்கியிருந்தான்.
மைதிலி அவனை கண்டுபிடித்து, அவனிடம் பேரம் பேசுவாள் என அகானாவுக்குத் தெரியுமா?
“அப்போ உனக்கு எதுவும் தெரியாதா?” என்று கேட்ட சென்றாயன் மைதிலிக்கும் அகானாவிற்கும் என்ன பிரச்சினை, யாரால் எப்படி ஆரம்பித்தது என எல்லாவற்றையும் சொல்லி முடிக்க, முனியாண்டிக்கு மைதிலியை நினைத்து ஆத்திரம் கிளம்பியது.
“பணத்தை கட்டு கட்டா தூக்கி எரியும் போதே நான் யோசிச்சிருக்கனும் மச்சான்..” என்ற முனியாண்டியின் போன் அலற, அதை எடுத்துப் பார்த்தவனோ ‘அய்யோ’ என தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டான்.
“என்ன.. என்னாச்சு மச்சான்..?” என சென்றாயனும் பதற,
“அந்த கலெக்டரோட அம்மாவை போட சொல்லிருந்தேன், அவன்கிட்ட இருந்து தான் போன்..” என பயத்தில் முணுமுணுக்க,
“டேய் என்னடா பண்ணி வச்சிருக்க..?” என அதட்டிய சென்றாயன், முனியாண்டியின் முகத்தில் தெரிந்த பயத்தைப் பார்த்து, “முதல்ல போனை எடுத்து பேசு.. அவன் கை வைக்க முன்னாடி கன்ஃபார்ம் பண்ணக்கூட உனக்கு போன் போட்டிருக்கலாம்..” என சமாதானப்படுத்தவும், போன் மீண்டும் அடிக்கவும் சரியாக இருந்தது.
இப்போது போனை எடுத்த முனியாண்டி “டேய் கருப்பு என்னடா..?” என்றான் பதட்டமாக.
“அண்ணே.. நீங்க சொன்ன அந்த அம்மா கூட எனக்கு தெரிஞ்ச டாக்டர் வரார்ணே.. கூட இன்னொரு பொண்ணும் இருக்கு. அந்த டாக்டர் கொஞ்சம் நல்லமாதிரினு கேள்விப்பட்டிருக்கேன். என் மாமா புள்ளைக்கு கூட அந்த டாக்டர்தான் ஆபரேசன் பண்ணாருனு சொல்லி கேள்விப்பட்டிருக்கேன். என்ன செய்றதுண்ணே..” என கருப்பு என்ற கருப்பசாமி கேட்க,
“டேய் ஒன்னும் பண்ண வேணாம்டா.. நம்ம சென்றாயன் மச்சான் வேற என்னென்னமோ கதையெல்லாம் சொல்றார். அந்த பொம்பளைய தொட்டா, நமக்கு சாவுறவரைக்கும் ஜெயில்தான். பேசமா திரும்பி வந்துடுங்க.” என்று முனியாண்டி கூறிக் கொண்டிருக்கும் போதே “அய்யோ அண்ணே..” என்ற கருப்பின் குரல் உச்சக்கட்ட அதிர்வில் செவியில் கேட்க, முனியாண்டிக்கோ எல்லாம் முடிந்து விட்டதோ என பயமே வந்துவிட்டது.
“அண்ணே.. அண்ணே.. அந்த டாக்டர் வந்த காரை ஒரு லாரி இடிச்சிட்டு போயிடுச்சுண்ணே.. கார்.. காரு ஒரு மரத்துல மோதி பின்னாடி தீ பிடிக்கிதுண்ணே..” என பதறிக்கொண்டே அந்த காரை நோக்கி ஓடினான் கருப்பசாமி.
“டேய். டேய்.. கருப்பு ஆம்புலன்ஸுக்கு கூப்பிட்டு சொல்லுடா..” என அந்த அவசரத்திலும் மறக்காமல் சொல்லிவிட்டு “மச்சான்.. அந்த மைதிலி நம்மகிட்ட மட்டும் பேரம் பேசின மாதிரி தெரியலடா.. நம்மக்கிட்ட தப்பிச்சா, வேற ஆள வச்சி போட்டுடலாம்னு முடிவு பண்ணிருக்கும் போல.. வேற ஆளையும் செட் பண்ணிருக்கு..” என ஆத்திரத்துடன் கத்திய சென்றாயன், தன் வண்டியில் முனியாண்டியை ஏற்றிக்கொண்டு விபத்து நடந்த இடத்தை நோக்கி பறந்தான்.
“கண்ணன் அங்கிள்.. இன்னைக்கு ஈவ்னிங்க் எந்த அப்பாய்ன்மென்டும் இல்லையே.. இருந்தாலும் போஸ்ட்பான் பண்ண முடியுமா பாருங்க. அம்மா ஊருக்கு போயிருக்காங்க. நாம போய் கூப்பிட்டு வரனும். அப்புறம் நித்யா சித்தி வேற அங்க வர சொல்லியிருக்காங்க..” என்ற அகானாவின் குரலுக்கு,
“பெரிய அப்பாயின்மென்ட்ஸ் ஒன்னும் இல்ல பாப்பா. நான் எதுக்கும் செக் பண்ணிக்கிறேன்..” என்றார் கண்ணன்.
“ம்ம்.. பார்த்துக்கோங்க..” என்று அவர்களின் உரையாடலுக்கு நடுவே அவளின் அலைபேசி ஒலிக்க, ஆரியன் எண்..
யோசனையாகவே எடுத்து காதுக்கு கொடுத்தவளின் செவியில் விழுந்த செய்தியில் அதிர்ந்து பின் மயங்கி அப்படியே சரிந்திருந்தாள் அகானா.
1 comment
நினைச்சேன், மைதிலி தான் எல்லாத்துக்கும் காரணம்ன்னு…
இப்ப யாருக்கு என்னாச்சுன்னு தெரியலையே..?
😴😴😴
CRVS (or) CRVS 2797