Home Antiheroதளிர் – 06

தளிர் – 06

by Vathani S

தளிர் 6

மறுநாள் வழக்கமான வேலைகளை முடித்து, தன் வழக்கமான வெள்ளை சட்டை, கருப்பு நிற பேண்ட் என வழக்கறிகஞர் உடையுடன் விக்ரம் தயாராகி கீழே வர, அவனுக்கு முன்னே நரேனும் ரெடியாகி காத்திருந்தான்.

“பேபி எங்க?” என்ற விக்ரமைப் பார்த்த நரேன், அங்கு சோபாவில் அமர்ந்திருந்த ரேணுகாவைக் கண்களால் காட்ட, அதற்குப்பிறகு ஒரு வார்த்தைக்கூட பேசாமல் அங்கிருந்து நகர்ந்துவிட்டான் விக்ரம்.

“பாஸ் நிசாவுக்கு இன்னும் மயக்கம் தெளியலன்னு அம்மா சொன்னாங்க.” என்ற நரேனிடம்,

“ம்ம் தெரியும்.” என்ற விக்ரம், “நான்தான் இன்னைக்கு மட்டும் சடேசன்லயே வைக்கச் சொன்னேன்.” என தன் மொபைலை ஆராய, நரேனும் விக்ரமைத் திரும்பி பார்த்தானே தவிர ஒன்றும் சொல்லவில்லை. அவனது பென்ஸ் நீதிமன்றத்தை நோக்கி பறந்தது.

அடுத்த சில நிமிடங்களில் அந்த நீதிமன்றமே பரபரப்பானது. விக்ரம் இதுவரை எந்தக் கேசையும் நேரடியாக எடுத்து நடத்தியதில்லை. அனைத்தும் அவனது ஜூனியர்கள்தான் வாதாடுவது. முதல்முறையாகத் தன் குழந்தைக்காக தானே வழக்கைத் தொடர்ந்து, தானே வாதாடவும் இதோ வந்து கொண்டிருக்கிறான்.

விக்ரமின் பென்ஸ் வருவதற்காக அங்கு பத்திரிக்கையாளர்களின் கூட்டம் அலை மோதியது. கார் உள்ளே வருவதற்கு முன்னே, ‘ஊப்ஸ்’ என்றுத் தன் மூச்சுக்காற்றை வெளியேற்றித் தன்னை சமன் செய்தவன், நரேனைப் பார்த்து, “இந்த ப்ரஸ் மீட் தேவையில்லன்னுதான் நினைச்சேன். பட், இது நமக்கான ஒரு எவிடென்ஸ். இந்த கேஸ்ல என்ன நடந்தாலும் பின் வாங்குற ஐடியா இல்ல.

இதை அந்த முட்டாளுக்குப் புரிய வச்சாலே பேபியை நம்மக்கிட்ட கொடுத்துட்டு போயிடுவா. எப்படியும் நாம ஜெயிக்கப் போறோம். தேவையில்லாம எதுக்கு இவ்வளவு பிரச்சனை அன்ட் டைம் வேஸ்ட். அதோட இந்த பத்திரிக்கைக்காரங்களை வேற சமாளிக்கணும் இரிடேட்டிங் இடியட்ஸ்.” என்று நரேனிடம் கடிந்தவன், முகத்தை நார்மலாக்கி, ஒரு அலட்சியப் புன்னைகையுடன் இறங்கிய விக்ரமைப் பார்த்து, நரேனுக்கு நிசப்தியின் நிலையை நினைத்து கவலையாக இருந்தது.

அவன் இறங்கியதும் பத்திரிக்கையாளர்கள் விக்ரமை சூழ்ந்துவிட, “ஹாய் எவ்ரிபடி…” என்று கூட்டத்தினரைப் பார்த்து புன்னகைத்தான். அவனுக்குப் பின்னே வந்த நரேன் வேகமாக முன்னே சென்று ஒரு மைக்கை வாங்கி அவன் முன்னால் நீட்ட, அதை ஒரு தலையசைப்போடு வாங்கியவன், “இன்று என் வாழ்நாளில் மிக முக்கியமான நாள். எஸ், பல மல்டி மில்லினியர்ஸ்க்கு சட்ட ஆலோசகரா இருந்த விக்ரம், விக்ரம் ராஜாவான நான்…” எனும் போதே அவனது குரலில் வழிந்த கம்பீரத்தில்,

அனைவரும் அயர்ந்து அவனைப் பார்க்க, “எஸ், நான் எவ்வளவோ வெற்றிகளை அலட்சியமாக கடந்து வந்திருந்தாலும், என்னோட வாழ்க்கையின் முக்கியத் திருப்பமான இந்த வழக்கிலும் வெற்றியை அடைந்திடுவேன் என்ற நம்பிக்கை எனக்கு பெருமளவில் உண்டு. வெற்றிக் கனியைப் பறித்துவிட்டு மீண்டும் உங்களிடம் வருகிறேன்.” என நாடகபாணியில் கிண்டலாக பேசி முடிக்க,

“சார் ஒன் கொஸ்டின்…” என்றபடியே ஒரு பத்திரிக்கை நிருபர் முன்னே வர, அவள் வேறு யாருமல்ல, இரண்டு நாட்கள் முன்னே ஏர்போர்ட்டில் பார்த்த உஷா. அவளைப் பார்த்து ஏளனமாகப் புருவத்தை உயர்த்தியவன், “ப்ரசீட்.” எனக் கிண்டலாய் கேட்டான் அவனும்.

“இன்னைக்குத்தான் கேஸ் ஃபைலாகப் போகுது. இனி வர கேஸ் ஹியரிங்க்ல தான் அடுத்து என்ன நடக்கும்னு தெரியும், பட் அதுக்குள்ள நீங்க இப்படி ஸ்டேட்மென்ட் கொடுத்தா, நாங்க என்ன நினைக்கிறது? அன்ட் உங்க எதிர்தரப்பு லாயர் யாருன்னு இன்னும் எங்களுக்குத் தெரியல. ஏன் உங்களுக்கேத் தெரியல, அப்படி இருக்கும்போது எதிராளியைப் பார்த்து தான, உங்களோட பலத்தை தீர்மாணிக்க முடியும். அதுக்குள்ள ஒரு முடிவுக்கு வரக்கூடாது இல்லையா?” என்றவளின் குரலிலும் பார்வையிலும் ஏகத்திற்கும் நக்கல் தாண்டவமாடியது.

அவள் கேள்விகளை உள்வாங்கியவன், உள்ளுக்குள் பொங்கும் கோபத்தை வெளிக்காட்டாமல், நிதானமான புன்னைகையை வெளிப்படுத்தி, “வெய்ட் அன்ட் வாட்ச்.” என்ற பதிலை மட்டும் அவளுக்கு கொடுத்துவிட்டு நரேனை ஒரு பார்வைப் பார்க்க, இப்போது நரேன் அந்தப் பெண்ணை அனல் பார்வைப் பார்த்தான்.

ஆனால் அதற்கெல்லாம் அசைந்து கொடுப்பவள் போல் இல்லை உஷா. நரேனை ஏளனமாக ஒரு பார்வைப் பார்த்து, தன் தோளைக் குலுக்கிவிட்டு நகர்ந்துவிட்டாள்.

“டேமிட்… உன்னைப் பார்த்துக்குறேன்டி.” என்று பல்லைக் கடித்தவன் வேகமாக விக்ரமின் பின்னால் ஓடினான்.

அதற்குள் நீதிமன்ற வளாகத்திலேயே இருக்கும் அவனது அலுவலகத்துக்குள் நுழைந்திருந்தான் விக்ரம். கையில் வைத்திருந்த கேஸ் கட்டைத் தூக்கி டேபிளில் எறிந்தவன், “புல்ஷிட்” என்றபடியே அமர, “சாரி பாஸ், இந்த உஷா என்ன செஞ்சாலும் அடங்குறது இல்ல.” என்றபடியே நரேன் அவன் முன் நிற்க,

“அவ அடங்குற மாதிரி இன்னும் நீ ஸ்ட்ராங்கா எதுவும் செய்யலன்னு அர்த்தம் ரைட்.” எனப் புருவம் உயர்த்தியவன், “செஞ்சிடு.” என்றுவிட்டு எழ, அப்போது சில பல வெள்ளை வேட்டி மனிதர்கள் திபுதிபுவென அந்த அறைக்குள் நுழைந்தனர்.

என்ன சத்தம் என்பது போல் பார்த்தவன், தனக்கு முன்னால் நின்ற மனிதனைப் பார்த்து பல்லைக் கடித்தான். “என்ன மிஸ்டர் ஜிபி. இங்க என்ன வேலை உங்களுக்கு?” என்று நிதானமாகக் கேட்க,

“மன்னிச்சிடுங்க வக்கீல் சார், ஒரு முக்கியமான செய்தி உங்க காதுல போடலாம்னுதான் இவ்வளவு தூரம் வர வேண்டியதா போச்சு. தலைமைல தேர்தல் அறிவிச்சிட்டாங்க தம்பி, அடுத்து எம்பி சீட் கிடைக்குற மாதிரி இருக்கு. அதான் இந்த கேசு கோர்ட்டுனு வந்தா, இந்த பத்திரிக்கைக்காரங்க சும்மா இருக்கமாட்டானுங்களேன்னு நம்ம பசங்க சொன்னாங்க. அதான்…” எனத் தலையை சொறிந்தபடி பேச,

“புரியுது மிஸ்டர் ஜிபி. பட் இந்த டைம் நானும் எதுவும் செய்ய முடியாது. கேஸ் அப்பீல் செய்யும்போது நீங்க கண்டிப்பா இருக்கணும். அடுத்து கேஸ் முடியறவரை நீங்க வரவேண்டாம், நான் பார்த்துக்குறேன். இன்னும் இருபது நிமிசத்துல கால் பண்ணிடுவாங்க, நீங்க அங்க போயிடுங்க. நம்ம ஜூனியர் இருப்பான் பார்த்துப்பான், நான் வந்திடுறேன்.” எனவும்,

“சரி தம்பி, சரி தம்பி நான் கிளம்புறேன்.” என்று ஒரு எட்டு எடுத்து வைக்கும் முன்னே, “மிஸ்டர் ஜிபி நான் ஆல்ரெடி உங்ககிட்ட சொல்லிருக்கேன், இந்த வெள்ள வேட்டிக் கூட்டம் என் ஆஃபிஸ் பக்கமே வரக்கூடாதுனு. இதுதான் லாஸ்ட் வார்னிங்க். இனி வந்தா உங்க கேஸ்ல இருந்து நான் வித்ட்ரா ஆகிடுவேன்.” என அழுத்தமானக் குரலில் விக்ரம் கூறி முடிக்க,

“மன்னிச்சிடுங்க வக்கீல் தம்பி, நம்ம பசங்களை கொஞ்சம் சொல்லி வைக்கிறேன். எம்எல்ஏ பாருங்க, சில விசயங்களைத் தவிர்க்க முடியல.” என்று வாயெல்லாம் பல்லைக் காட்டிவிட்டு கிளம்பிவிட்டார்.

அவர் அகன்றதும், “பாஸ்…” என்றபடியே வேகமாக வந்தான் நரேன். ‘என்ன’ என்பது போல் பார்த்த விக்ரமிடம்,

“நம்ம நிசப்தி மேம் கேஸ்ல ஆஜராகுற லாயர் வந்துட்டாங்க.” என்றான் பதட்டமாக.

“அதுக்கு ஏன் நீ இவ்வளவு பதட்டப்படுற? யார் அது?” என்றவனின் முன்னே வந்து நின்றான் ரவி. வழக்கறிஞர் ரவிசங்கர். விக்ரமின் உயிர் தோழன், ஸ்வாதியின் அண்ணன், கிருத்திகாவின் கணவன்.

தனக்கு வெகு முன்னே பல வருடங்களுக்குப் பிறகு வழக்கறிஞராக வந்து நின்ற நண்பனைப் பார்த்து உள்ளம் பூரித்தது விக்ரமிற்கு. “ரவி…” என வேகமாக அவனை அணைக்க வந்த விக்ரமைத் தடுத்து நிறுத்திய ரவி,

நரேனைப் பார்த்து, “கேஸ் டீடைல்ஸ் இருக்குற ஃபைலை எடுத்துட்டு வா.” என்று உத்தரவிட்டான்.

நரேன், விக்ரமைப் பார்க்க அவனும் தலையசைக்க, அங்கிருந்த மர பீரோவில் வைத்திருந்த ஒரு கேஸ்கட் ஃபைலை அவனிடம் நீட்ட, அதை வாங்கிய ரவி, இருவரையும் கண்டுகொள்ளாமல் பக்கத்தில் இருந்த ஒரு அறைக்குள் நுழைந்துகொண்டான்.

ரவியின் அலட்சியத்தை ஒரு கேலிப் புன்னைகயில் ஒதுக்கித் தள்ளிய விக்ரம், “நிசப்தி இந்த கேஸ்ல ஆஜராவானு நாம நினச்சது தப்பு போல, இவன் இந்த கேஸ்ல எந்த ப்ரேம்லயும் வரலயேன்னு யோசிச்சிட்டு இருந்தேன். ஆக மெயின் ப்ரேம் இவன்தான்.” என நக்கலாகச் சொல்லிவிட்டு தன் இருக்கையில் அமர்ந்தான்.

வெளியே லைவ் நியூசில் உஷா பேசிக் கொண்டிருந்தாள். “இந்த வழக்கில் மோதப் போகும் வழக்கறிஞர்கள் இருவரும் உயிர் நண்பர்கள். இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லையென்று இங்கிருக்கும் அனைவருக்கும் தெரியும். அப்படியிருக்க வழக்கு நடக்கும் ஒவ்வொரு நாளும், நமக்கு சுவாரஸ்யமாகத்தான் இருக்கப் போகிறது. குழந்தை யாருக்குச் சொந்தம் என்றத் தீர்ப்பை எதிர்நோக்கி உங்களைப் போல் நானும் காத்திருக்கிறேன். செந்தமிழ் நியூஸ்க்காக நான் உஷா, மற்றும் ஒளிப்பதிவாளர் மனோ.” என்ற செய்தியை உரைத்துவிட்டு,

தன் துப்பட்டாவைக் கொண்டு முகத்தைத் துடைத்தவளை, யாரின் கவனமும் பெறாமல் அப்படியேத் தூக்கி, பக்கத்தில் இருந்த காருக்குள் தள்ளியிருந்தான் நரேன்.

அன்றைய நாளில் பெரிதாக எந்த வாதாடலும் இல்லை. விக்ரம் தரப்பில் ஃபைல் செய்யப்பட்ட கேஸ் ஒருமுறை வாசிக்கப்பட்டது. இருவரிடமும் இருந்த ஆதாரங்கள் ஒருமுறை பரிசீலிக்கப்பட்டது. பிரதிவாதியான நிசப்தி அன்று வராததால் கேஸ் மீண்டும் ஒரு நாள் ஒத்திவைக்கப்பட்டது.

இருவரும் நேரெதிராக ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு, நீதிபதிக்கு வணக்கம் வைத்துவிட்டு வெளியேற, விக்ரம் தன் பென்ஸை நோக்கி நகர, அவன் தோளைத் தொட்டு தன்புறம் திருப்பிய ரவி, “உஷா மேல ஒரு சின்னக் கீறல்கூட விழக்கூடாது. அப்படி எதாவது ஆச்சுன்னா, நரேனோட உயிர் என் கையாலப் போகும்.” என அழுத்தம் திருத்தமாகச் சொல்லிவிட்டு, விக்ரமைத் தாண்டிச் சென்றிருந்தான்.

ஆனால் ரவியின் எந்தப் பேச்சுக்கும் விக்ரம் பதில் பேசவில்லை. தன் மொபைலை எடுத்து நரேனுக்கு, “டூ இட்” என்ற மெசேஜைத் தட்டிவிட்டு, நக்கல் சிரிப்புடன் கிளம்பிவிட்டான்.

இங்கு மருத்துவமனையில் நிசப்தி விழிப்பதற்காக ரேணுகா குழந்தையுடன் அமர்ந்திருந்தார். அன்று முழுவதும் அவள் விழிக்க மாட்டாள் என்று பாவம் அவருக்குத் தெரியாதே.

தசிராவும் எந்தச் சேட்டையும் செய்யாமல் மிகவும் அமைதியாக அவரின் அருகில் அமர்ந்திருந்தாள். அந்தச் சிறு குழந்தையைப் பார்க்க, பார்க்க அவருக்கு ஸ்வாதியின் மேல் கடுங்கோபம் கிளம்பியது.

தன் இரு பிள்ளைகளும் இந்த வயதில் எப்படி இருந்தார்கள் என்று நினைத்துப் பார்த்தார். விக்ரம் எப்போதும் அழுத்தம்தான். ஆனால் கிருத்திகா வீட்டையே இரண்டு செய்து விடுவாள். வீதியில் இருக்கும் பிள்ளைகளோடு சண்டைப் பிடித்து தினம் ஒரு பஞ்சாயத்து என வீடே அல்லோகலப்படும். எந்த நேரமும் அவரை டென்சனிலேயே வைத்திருப்பாள்.

ஆனால் தசிராவோ தன்னுடைய இந்த வயதிற்கான எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக இருப்பது, அவரது நெஞ்சைப் பிசைந்தது. எப்படி எப்படியெல்லாம் வளர வேண்டிய குழந்தை. தன் சிறுபிள்ளைத் தனத்தை மொத்தமும் தொலைத்து, வாழ்வையே இழந்தவளைப் போல அமர்ந்திருக்கிறாள்.

இந்தச் சிறு பிஞ்சை இந்த நிலைக்கு கொண்டு வந்த மகனையும், அவன் மனைவியையும் ஒருபோதும் அவர் மன்னிப்பதாக இல்லை. அதனால் தான் நிசப்தியின் அனைத்து செயல்களிலும் அவளுக்குத் துணையாக இருந்தார், இனியும் இருப்பார்.

தசிரா மெல்ல அவர் புடவையை இழுக்க, அதில் நினைவு வந்தவர் அவளைத் தூக்கித் தன் மடியில் அமர்த்தி. “என்னத் தங்கம்மா? குட்டிப் பாப்பாவுக்கு பசி எடுத்துடுச்சா? புவ்வா சாப்பிடலாமா?” எனவும், அந்தச் சின்ன வாண்டும் அவரைப் பார்த்துச் சிரித்தது.

உடனே எழுந்தவர் குழந்தையை அள்ளிக் கொண்டே தன் போனை எடுத்து மகனுக்கு அழைத்து, “எங்க இருக்க?” என்றார் அதிகாரமாக.

“ம்ம்… இங்க கோர்ட்லமா, கிளம்பிட்டேன். அங்கதான் வந்துட்டு இருக்கேன்.” என விக்ரம் வேகமாக பதில் சொல்ல, “ரவி கிளம்பியாச்சா?” என்றார் அடுத்தக் கேள்வியாக.

“அவன் கிளம்பி அஞ்சு நிமிசம் இருக்கும்.” என்று பதில் கொடுக்க, “சரி, வை.” என்றவர், உடனே ரவிக்கு அழைத்து, “ரவி நான் வெளியத்தான் நிக்றேன், அப்படியே போகும்போது அழைச்சிட்டு போயிடு.” என்று சொல்ல,

“அத்த விக்கி வந்துட்டு இருக்கானே…” என யோசனையாக இழுக்க, “அவன் ஹாஸ்பிடல்ல நிசாவுக்கு துணைக்கு இருக்கட்டும்.” என்று கண்டிப்பாகச் சொல்ல,

“அத்தை இதெல்லாம் சரிவருமா? யோசிச்சுக்கோங்க, ஏற்கனவே அவ லைப்ஃபை எல்லாரும் கேலிக் கூத்தாக்கிட்டோம். மறுபடியும் முதல்ல இருந்துன்னா அவ தாங்கமாட்டா.” என வருத்தமாகவும், குற்ற உணர்வுடனும் ரவி பேச,

“நீங்க செஞ்ச தப்பை நான் சரி செய்யலாம்னு பார்க்குறேன் ரவி. எனக்கும் என் மகன் மனைவி, குழந்தைன்னு வாழணும்னு ஆசை இருக்காதா? இல்ல இன்னும் உன் தங்கச்சியை நினைச்சு பட்டமரமா இருக்கணும்னு நினைக்கிறியா?” என அடக்கப்பட்டக் கோபத்துடன் கேட்க, ரவியால் பதிலே பேசமுடியவில்லை.

“பக்கத்துல வந்துட்டேன் அத்தை.” என்றவன் போனை அணைத்துவிட்டு, தனக்கு முன்னே தெரிந்த நீண்ட சாலையை வெறித்தபடி வண்டியை செலுத்தினான். மனமோ, ‘ஸ்வாதி உன் தப்புகளை நான் எப்படி சரி செய்யப்போறேன்’ என கதறியது.

இங்கு தாயின் எண்ணம் புரிந்ததோ என்னவோ புயல் வேகத்தில் ரவிக்கு முன்னே மருத்துவமனைக்கு வந்திருந்தான் விக்ரம். அவன் வருகையை அதிர்ந்து பார்த்த ரேணுகா நொடியில் தன்னை சமாளித்து, “நீ இங்க இரு, பாப்பாவுக்கு இங்க இருக்க முடியல. அவளோட நான் வீட்டுக்குப் போறேன்.” எனக் கிளம்ப யத்தனிக்க அவரைத் தீர்க்கமாக ஒரு பார்வை பார்த்தவன், குழந்தைக்காக கையை நீட்ட அதுவோ ரேணுகாவின் மார்பில் பதுங்கியது.

அதில் அவனை ஒரு குற்றம் சாட்டும் பார்வை பார்த்தவர், “குட்டிம்மா… அப்பாடா… அப்பா. போங்க. அப்பாக்கூட போய் அம்மாவைப் பார்த்துட்டு வாங்க. நாம வீட்டுக்குப் போகலாம்.” என மகனுக்கும் சேர்த்து அடுத்து செய்ய வேண்டியதைச் சொல்ல, அம்மா என்ற சொல் மந்திரம் போல் வேலை செய்தது குழந்தையிடம்.

அவனிடம் வேகமாகத் தாவிய குழந்தையை அள்ளி நெஞ்சோடுக் கட்டிக்கொண்டவன் கண்ணில் நீர் திரையிட்டது. ஆனால் அதை வெளிக்காட்டாமல் வேகமாக முகத்தை மறுப்பக்கம் திருப்பி, மனதைக் கல்லாக்கிக்கொண்டு, நிசப்தி அட்மிட் ஆகிருக்கும் அறைக்குள் நுழைந்தான் விக்ரம்.

***

You may also like

1 comment

C.R. Vakulavallika February 3, 2026 - 5:42 pm

அடேய் போடா.. வீணாப் போனவனே..! வந்துட்டான் பெருசா கிழிக்க. எல்லாமே இவனாலேயும், இவனுக்கு வாய்ச்சவலாளேயும் தான் வந்தது.
😀😀😀
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Comment

About Me

Featured