அது ஒரு அமைதிப் பூங்கா! பொதுவாக நடுத்தர வயதினர் முதல் வயது முதிர்ந்த ஆட்களே நடைப்பயிற்சிக்காக வந்து செல்லும் இடம். இந்த பூங்காவிற்கு வாலிபனோ இளம்பெண்ணோ வருவதே அரிது. அதுவும் ஏதோ ஒரு முதியவருக்குத் துணையாக வந்திருப்பவராய் தான் இருப்பர்.
அப்படி இருக்கும் அந்த அமைதிப் பூங்காவின் மத்தியில், ஒரு மாமரம் கம்பீரமாய் நின்றுக்கொண்டிருந்தது. அதற்கடியில், கல்லால் ஆன மேசை ஒன்றைப் போட்டுவைத்தனர் அப்பூங்கா மீது ப்ரியம் வைத்திருந்த பெரிய இடத்து ஆட்கள்.
அந்தக் கல்மேசையில், முழங்காலை நெஞ்சு வரை மடக்கி அதில் தாடைவரை முகம் புதைத்தபடி ஒரு வாலிபன் கண்கள் சிவக்க அமர்ந்திருந்தான்.
அழுதுக்கொண்டிருந்தான் போலும். மூக்கு உரிஞ்சும் சப்தம் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது.
அதுவரை அமைதியாய் இருந்த பூங்கா, காற்று பலமாக வீச... கலவர பூமியானது.
"மழை வரும் அறிகுறி. வாருங்கள்! மழை பெய்வதற்குள் வீட்டிற்கு விரைவோம்" என்று மக்கள் அங்குமிங்குமாய் ஓடிக்கொண்டிருந்தனர்.
காற்று அடித்த வேகத்தில், கீழே கிடந்த குப்பை செத்தைகள் கூட பறக்கத் தொடங்கின. இவ்வளவு கலவரம் நடந்தும் அது எதுவும் அவனைப் பெரிதாய் பாதிக்கவில்லை.
வெகுநேரமாய் அடித்துக்கொண்டிருந்த கைப்பேசியை மெதுவாய் தன் பாக்கெட்டிலிருந்து எடுத்துப்பார்த்தான் அவன்.
"நந்தக்குமார் காலிங்!" என்று அவனது கைப்பேசி திரையில் ஒளிக்க… அந்த அழைப்பை எடுத்தவன், மிக மெதுவாய்…
"ஹலோ!" என்று மட்டும் கூற…
"டேய் ராகேஷ்! எங்கேடா இருந்துத் தொலைக்கிறாய்? இன்று பயங்கர மழை பெய்யும் என்று நேற்றே செய்திகளில் கூறியிருந்தனரே! நீ எங்கே இருக்கிறாய் என்று உன் அம்மா பதட்டமாகி, எனக்கு கால் மேல் கால் அடித்துக்கொண்டே இருக்கிறார்களடா… எங்கே தான் போய் தொலைந்தாய்?" என்று பற்களைக் கடித்துக்கொண்டு அந்த ராகேஷின் நண்பனாகிய நந்தக்குமார் ஏசினான்.
"பயப்பட வேண்டாமென்று சொல்." என்ற பதில் மட்டுமே ராகேஷிடமிருந்து வர… நந்தக்குமாரோ, கோபக்குமாராக மாறினான்.
"வாயைக் கிளறாதே ராகேஷ்! இப்போது நீ எங்கே இருக்கிறாய் என்பதை மட்டும் கூறு. உடனே நான் அங்கே வந்து, உன்னை குண்டுக்கட்டாக தூக்கிக்கொண்டு உன் வீட்டில் விட்டுவிட்டு வருகிறேன்" என்று நந்தக்குமார் கொந்தளிக்க…
"இன்றைய தேதி என்ன, நந்தா?" என்று பதிலுக்கு ராகேஷ் கேட்கவும்… நந்தக்குமாருக்கு தலையே வெடித்துவிடும் போன்றிருந்தது.
"எரிச்சலைக் கிளப்பாதே, ராகேஷ்! சம்பந்தமில்லாத கேள்வியையெல்லாம் கேட்டு என் பொறுமையை நீ மிகவும் சோதிக்கிறாய்!!!" என்று கடிந்தவனின் மூளையில் ஏதோ ஒன்றுத் தோன்ற… "அமைதி பூங்காவிலா இருக்கிறாய்?" என்று கேட்டவனது குரல் மிக ஆழமாய் ஒலிக்க… அதற்கு பதிலேதும் பேசாமல் பட்டென்று அவனது அழைப்பைத் துண்டித்தான் ராகேஷ்.
கண்களை மூடிக்கொண்டு மூச்சை உள்ளிழுத்தபடி, கால்களைத் தரையில் நீட்டிய நிலையில் தொங்கவிட்டவன்… அப்படியே அந்த மரத்தின் மீது சாய்ந்தான்.
"நிஷ்சிந்தா!!!" என்று அவனது உதடுகள் அவளது பெயரை உச்சரித்த போது, அவனையும் மீறி மூடியிருந்த அவனது கண்களில் கண்ணீர் வழிந்தோடியது.
'என் உயிரின் உயிரானவளே…!' என்று தன் மனதிற்குள் பேசியவனின் நினைவெல்லாம் பத்து வருடங்களுக்கு முன் இதே நாளன்று நடந்த சம்பவத்தை நோக்கிச் சென்றது.
"நிஷா… நிஷா… தெரியாமல் பேசிவிட்டேன் நிஷா. புரிந்துக்கொள்ளடா மா." என்று கெஞ்சியபடி நிஷ்சிந்தாவாகிய தனது காதலியின் பின்னால் கெஞ்சிக்கொண்டு ஓடியது அவனது நினைவலையில் வந்துப்போனது…
"நிஷா.!!" என்று கூறிய அவனது உதடுகள் மனவலி தாங்காமல் பிதுங்க… தாடையெல்லாம் அழுகையில் நடுங்கியது.
"நிஷா…! என்னை நீ கடைசிவரை புரிந்துக்கொள்ளவேயில்லையடா!!!" என்று வாய்விட்டுக் கூறியவன், கண்களைத் திறந்து, தான் சாய்ந்திருக்கும் மாமரத்தைத் தடவிக்கொடுத்தான்.
'இங்கு தான் நானும் என் நிஷாவும் பலமுறை காதலோடு உரையாடியிருக்கிறோம்!!' என்று மனதிற்குள் எண்ணினான்.
அப்போது எங்கோ ஒரு கட்டிடத்தில் ஒலிக்கவிட்ட வானொலியில், அந்த பிரபலமான சினிமா பாடல் ஒலிக்க ஆரம்பித்தது.
"அமர்ந்துப் பேசும் மரங்களின் நிழலும்…
உன்னைக் கேட்கும், எப்படி சொல்வேன்?
உதிர்ந்துப் போன மலரின் மௌனமா?? ஆஆ??"
உன்னைக் கேட்கும், எப்படி சொல்வேன்?
உதிர்ந்துப் போன மலரின் மௌனமா?? ஆஆ??"
இவ்வரிகளில் தனது மனவலி மேலும் அதிகரிக்க… கதறியழ ஆரம்பித்தான் ராகேஷ்.
"தூதுப் பேசும் கொலுசின் ஒலியை…
அறைகள் கேட்கும், எப்படி சொல்வேன்?
உடைந்துப் போன வளையல் பேசுமா...? ஆஆ…???"
அறைகள் கேட்கும், எப்படி சொல்வேன்?
உடைந்துப் போன வளையல் பேசுமா...? ஆஆ…???"
என்று அந்தப் பாடல் ஒலிக்க… அதோடு சேர்ந்து அவனும் 'ஆஆஆ' வென்று இழுத்து உச்சரித்தபடி அழுதான் அவன்.
"உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்… விரல்கள் இன்று எங்கே…????
தோளில் சாய்ந்து கதைகள் பேச… முகமும் இல்லை இங்கே…"
தோளில் சாய்ந்து கதைகள் பேச… முகமும் இல்லை இங்கே…"
என்று பாடியவன் தன் கைகளை உயர்த்தி, பத்து வருடங்களுக்கு முன் இதே கைகளால், பூப்பொன்ற அவளது முகத்தை ஏந்தி… அவளது கண்களைக் காதாலோடு பார்த்த நாட்கள் நினைவிற்கு வர… அந்த கைகளால் தன் முகத்தை அடித்தபடி அழுதான் ராகேஷ்…
"முதல் கனவு முடிந்திடும் முன்னமே… தூக்கம் கலைந்ததே…!!!"
என்றுப் பாடியபடி அந்த வானொலியின் சப்தம் நின்றுவிட… அந்த வரியில் இருக்கும் வலியைவிட நூறு மடங்கு வலியை தன் மனதில் சுமந்துக்கொண்டிருந்தான் ராகேஷ்.
"ஏன் டி என்னைவிட்டு பிரிந்தாய்?? என்னை நீ புரிந்துக்கொண்டது இவ்வளவு தானா??" என்று கேட்டவனது கண்களில், கண்ணீர் தாரைத் தாரையாக வழிந்துக்கொண்டிருந்தது.
"கையை எடு ராகேஷ்!! போதும் போதும் என்றாகிவிட்டது. உன்னை என்னால் திருத்தவே முடியாது என்பதை உணர்ந்துவிட்டேன். ஆளைவிடு…! இனியும் என்னைத் தொந்தரவு செய்யாதே! இத்தோடு நிறுத்திக்கொள்வோம். உன்னையும் உன் கோபத்தையும் அந்த கடவுள் நினைத்தால் கூட மாற்றமுடியாது." என்று பிரிவதற்குமுன் நிஷ்சிந்தா கூறிய அந்த வார்த்தைகள் தனது மண்டைக்குள் ஒலிக்க…
"அர்ர்ர்ர்க்க்க்க்..!!!" என்று பற்களைக் கடித்துக்கொண்டு கத்தியவன், அழுதபடி தனது வலது கையினால் ஓங்கி அந்த மரத்தைக் குத்த ஆரம்பித்தான்…
'சரட்' என்ற சப்தத்துடன் அங்கே ஒரு கார் வந்து நின்றது… காரிலிருந்து அளவான உயரத்திலிருக்கும் இளைஞன் ஒருவன் இறங்கி வந்தான்.
மாமரத்தை தன் கையால் ஓங்க ஓங்கி குத்திக்கொண்டிருந்த ராகேஷைக் கண்ட நந்தக்குமாராகிய அந்த இளைஞனோ, பதறியடித்துக் கொண்டு அவனிடம் ஓடினான்.
"டேய் முட்டாள், ராகேஷ்!!! புத்தி மழுங்கிவிட்டதா? ஏன் இப்படி பித்துப்பிடித்தவனைப் போல் நடந்துக்கொள்கிறாய்?? நவம்பர் 25 ஆனால் போதுமே!!! இவ்விடத்திற்கு வந்து பைத்தியக்காரனைப் போல் நடந்துக்கொள்கிறாய்…" என்றுக் கேட்டபடி மரத்தைக் குத்திக்கொண்டிருந்த ராகேஷைத் தடுத்து நிறுத்தி…
"இல்லை… தெரியாமல் தான் கேட்கிறேன்…. உனக்கு என்னடா குறை? அழகில்லையா? வசதியில்லையா??? டேய்!!! சொந்தமாய் தொழில் தொடங்கி அதில் வெற்றிப்பாதையில் சென்று பேரும் புகழும் வாங்கிருக்கிறாயடா நீ!!! கைநிறைய சம்பாதிக்கிறாய்… இந்த இளம் வயதில் இதைவிட வேறென்னடா வேண்டும் ராகேஷ் உனக்கு??" என்று வினவியபடி இரத்தம் சொட்டிக்கொண்டிருந்த ராகேஷின் கையை தனது கைக்குட்டையால் கட்டிவிட்டான்.
"நிஷ்சிந்தா வேண்டும். தரமுடியுமா?" என்று அமைதியாய் ராகேஷ் கேட்க… அதனைக் கேட்ட நந்தக்குமார் எரிமலையாய் வெடித்தான்.
"நிஷ்சிந்தா… நிஷ்சிந்தா… நிஷ்சிந்தா…!!! இன்னும் ஏனடா அவளையே பிடித்துக்கொண்டு தொங்குகிறாய்? அவள் என்ன அப்படியொரு பேரழகியா? ஏதோ சுமாரான பெண் தானேடா அவள்? உன் பின்னே சற்றும் பெண்களில் நிறைய பேர் அவளைவிட அழகாய் இருக்கிறார்களே டா!!! அவர்களில் எவரேனும் ஒருவரைப் பிடித்துக்கொண்டு காதலித்துத் தொலைக்கவேண்டியது தானே? இன்னும் ஏன் நிஷ்சிந்தாவிலேயே இருக்கிறாய்?"
"ஆயிரம் பெண்கள் இருந்தாலும் அவளாகிவிடாது டா." என்றான் ராகேஷ் பொறுமையாய்.
"ஆமாம்! அவளாகிவிடாது தான்… காதலன், கோபத்தில் ஏதோ பேசிவிட்டான். அந்தக் கோபத்தைக் கூட புரிந்துக்கொள்ளாமல், விட்டு ஓடியவளைப் போல எந்த பெண்ணாச்சும் கிடைக்குமா??? கிடைக்காது தான்" தலையை வேறு பக்கம் திருப்பி முணுமுணத்தபடி புலம்பினான் நந்தக்குமார்.
"என்ன இருந்தாலும் நானும் அப்படி பேசியிருக்கூடாது தானே டா?!" கண்கள் கலங்க ராகேஷ் கேட்கவும் அவனைத் திரும்பிப் பார்த்த நந்தக்குமார், அவனது கண்களைத் துடைத்தபடி மெதுவாய் பேச ஆரம்பித்தான்.
நன்றாகக் கவனி டா. நிஷ்சிந்தாவை எண்ணி நீ இப்படி காலம்காலமாய் அழுதாலும் ப்ரயோஜனம் இல்லை டா. அவள் உன்னைவிட்டுச் சென்று இன்றோடு பத்து வருடங்கள் ஆகிவிட்டது. உன் வயது இருபத்தி எட்டு ஆகிறது. அவளுக்கோ இருபத்தி ஏழாகவாவது இருக்கும்…" என்று நந்தக்குமார் பேசிக்கொண்டிருந்த போதே, இடையில் குறுக்கிட்டு பேசினான் ராகேஷ்.
"இருபத்தியேழு இல்லை. இருபத்தெட்டு தான். ஒரே வயது தான் எங்களுக்கு"
"ஹ! இதற்கொன்றும் குறையில்லை. வாயை மூடிக்கொண்டு நான் கூறவருவதைக் கேள்." என்று கடுப்படித்த நந்தக்குமார், மெல்ல நகர்ந்து ராகேஷிற்கு அருகில் அமர்ந்தான். அவனது தோளில் ஆறுதலாய் கைவைத்து தன் பேச்சைத் தொடர்ந்தான் நந்தக்குமார்.
"நம் நாட்டுக் கலாச்சாரத்தின்படி, ஒந்த ஒரு பெண்ணும் இருபத்தி எட்டு வயது வரை திருமணம் செய்யாமல் இருந்ததே இல்லை. அவளே நினைத்தாலும், அந்தப் பெண்ணை எவன் தலையிலாவது கட்டிவைத்து விடுவர். எப்படிப் பார்த்தாலும் நிஷ்சிந்தாவிற்கு இந்நேரம் திருமணமாகி இரண்டு குழந்தைகளாவது இருக்கும், ராகேஷ். அடுத்தவன் மனைவியை எண்ணி நீ அழலாமா?" என்று நந்தக்குமார் கேட்க… அவனது வார்த்தைகளைப் பொறுக்கமுடியாது தன் காதுகளைப் பொத்திக்கொண்ட ராகேஷோ,
"இல்லே… இல்லை… இல்லை… அவள் என்னுடைய நிஷா…! என் நிஷ்சிந்தா டா அவள்…… என்னை அவ்வளவு எளிதில் அவளால் மறந்துவிட்டு கடந்து சென்றிருக்க முடியாது.
நான் கோபத்தில் பேசிவிட்டேன் தான். ஆனால், அவளுக்குத் தெரியும் டா… .அவள் மீது நான் எவவ்ளவு கண்மூடித்தனமான பாசமும் காதலும் வைத்திருக்கிறேன் என்று.
முன்னர் ஒருமுறை அவளே கூறினாள் தெரியுமா? 'என்னை இதுநாள்வரை எவருமே உன்னைப் போல் பாசமாக யாரும் பார்த்துக்கொண்டதேயில்லை. இவ்வளவு பாசமும் காதலும் என்மீது நீ ஆட்டுமளவிற்கு நான் எதுவும் செய்யவில்லையே!' என்று கூறியிருக்கிறாள் டா அவள்.
என்னுடைய ஒட்டுமொத்தக் காதலையும் முழுதாய் உணர்ந்தவளடா அவள். அப்படிப்பட்ட அவளால் என்னை எப்படியடா மறக்க இயலும்?" என்று அப்பாவியாகக் கேட்ட ராகேஷைக் கண்ட நந்தக்குமாரின் இதயம் வலித்தது.
"இவ்வளவு காதல் நீ அவள்மீது காட்டியும், அதனைப் பற்றி யோசிக்கக்கூட இல்லாமல், நீ கோபத்தில் பேசிய வார்த்தையை மட்டுமே கருத்தில் கொண்டு உன்னைவிட்டு சென்றவளை எண்ணி ஏனடா அழுகிறாய்? உன் அம்மா தினந்தினம் உன்னை எண்ணியே கவலைப்படுகிறாரடா!!! பெற்றவளையும் நோகடித்து, உன்னையும் நோகத்திக்கொண்டு… இதெல்லாம் தேவையாடா? அவளை மறந்துவிட்டு வேறு ஒர பெண்ணை மணந்துக்கொள், ராகேஷ். கோபத்தில் பேசும் வார்த்தைகளுக்கு அர்த்தம் எடுத்துக்கொண்டு பிரிந்து சென்றுவிட்டளைத் திருமணம் செய்து என்னடா சாதிக்கப் போகிறாய்? திருமணமான பிறகு, ஏதோ சண்டையில் நீ, அவளை சண்டையில் ஏசிவிட்டால்… உன்னை அப்படியே 'அம்போவென' விட்டுவிட்டு ஓடிவிடுவாள்.
கல்யாணமான பிறகு இது நடந்தால், அப்போது வலிக்கும் வலிக்கு ஆறுதல் அளிக்க யாரும் இருக்கமாட்டார்கள், ராகேஷ். இப்போவே போய்விட்டாள், தப்பிவிட்டாய் என்று நினைத்துக்கொள்" என்று சமாதனப்படுத்த எண்ணி பேசினான் நந்தக்குமார்.
"நானும் சாதாரணமான வார்த்தையை விடவில்லையடா…" என்று ராகேஷ் கூறவும்…
"அப்படி என்னதான் டா பேசி வைத்தாய்? பத்து வருடங்களாய் கேட்கிறேன். இந்தக் கேள்விக்கு மட்டும் பதில் கூறமாட்டேங்கிறாய்" என்று நொந்துக்கொண்டான் நந்தக்குமார். அவன் இவ்வாறு கேட்கவும், அவனது முகத்தைப் பார்த்த ராகேஷின் நினைவலைகள், பத்து வருடங்களுக்கு முன்னர்… இதே நாளான நவம்பர் 25ம் தேதிக்குச் சென்றது.
----------------
Attachments
Last edited: