• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ராக நந்தனம்-1

Meenakshi Rajendran

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 22, 2024
170
56
28
Tiruppur
அத்தியாயம்-1

“அய்யோ.. இப்ப மறுபடியும் இப்படி தப்பாகிடுச்சே”
கணினி வைத்திருக்கும் மேசையில் இரு கைகளைப் பாலமாக வைத்து தலையைத் தாங்கிக் கொண்டாள். அருகில் இருந்தவன், அவள் தோளில் தட்டினான்.

“நமக்கென்ன இது முதல் தடவையாக ராக்ஸ்.”

“கையை எடுறா பக்கி, நானே டென்சனில் இருக்கேன். எப்பப் பார்த்தாலும் எனக்கு மட்டும் தப்பாகுது. லேட்டா முடிச்சுட்டுத்தான் வீட்டுக்குப் போக வேண்டி இருக்கு.”

“சரிடி. வா தட்டு வடை செட் வாங்கித் தரேன்.”

தட்டு வடை என்றதில் தலையை நிமிர்த்தாள் ராக்ஸ் என செல்லமாக அழைக்கப்படும் ராகவர்ஷினி. பாதாம் வடிவ விழிகள், அழகாக திருத்தப்பட்ட புருவங்கள், இதய வடிவத்தில் முகம், நெற்றியில் ஒரு சிறிய பொட்டு, முகமே செதுக்கி வைத்தது போன்றிருந்தது.

அழகான மாநிறம் அவளை இன்னும் வசீகரமாகக் காட்டியது. கூந்தலை வகிடெடுத்து இரு பக்கமும், கொஞ்சம் முடியை முன்னிருந்து பின்னி, பின்னால் சேர்த்து ஒரு ஹேர்பாண்டில் சிறிய குதிரை வாலைப் போட்டிருக்க, மீதமிருந்த முடி இரு பக்கமும் தோள்களில் அழகாக புரண்டு கொண்டிருந்தது.

“ம்கூம்.” என அவள் மறுக்க அது இன்னும் அசைந்து புரண்டது.

“சரி கூட பானி பூரியும் வாங்கிக்கலாம்.”

“பானிபூரியா? சரிடா. இப்பவே எப்படி முடிக்கறேன் பாரு.”

அடுத்த பத்து நிமிடங்களில் அவள் விட்ட பிழையினைக் கண்டறிந்திருக்க, கணக்கு டேலி ஆகி இருந்தது.

“ஹே.. முடிச்சுட்டேன்.” இரு கைகளையும் உயர்த்தியபடி நாற்காலியில் இருந்து எழுந்தாள். முடித்தப்பின் கணினியை அணைத்துவிட்டு அவளுடைய பேக்கை எடுத்து தோளில் மாட்டியபடி வெளியே வந்தாள்.

அலுவலகக் கட்டிடத்தின் வெளியே நின்று கொண்டிருந்தான் சரவணன்.

“சரோ நான் முடிச்சுட்டேன்.”
துள்ளிக் குதித்தப்படியே வெளியே வந்தாள் ராக்ஸ்.


ஐந்தடிக்கு இரண்டு இன்சுகள் குறைவான உயரம். எதிரில் நெடு நெடுவென நின்று கொண்டிருக்கும் சரவணனைப் பார்த்தாள். இருவரும் சிறு வயதில் இருந்தே நண்பர்கள். ராக்ஸ் வசிக்கும் தெருவிற்குப் பக்கத்துத் தெருதான் வீடு. இருவரும் ஒரே பள்ளியில் தான் படித்தனர். அப்போது உருவான நட்பு, கல்லூரியிலும் தொடர்ந்தது. ஒரே பிரிவில் படித்தனர். பின்பு ஒரே ஆடிட்டரிடம் வேலைக்குச் சேர்ந்தனர். இரண்டு வருடங்களாகப் பணி புரிந்து கொண்டிருக்கின்றனர்.

ராகாவும் புத்திசாலி என்றாலும் அவ்வப்போது டேலியில் சொதப்பி விடுவாள்.

இருவரும் ஒன்றாகப் பணிக்குச் சென்று ஒன்றாகத் திரும்புவர். மிகவும் ஜாலியான டைப் ராகா. சுலபத்தில் அனைவரிடமும் பழகி விடும் சேட்டைக்காரி. அவள் துரு துருவென சுற்றி அனைவரையும் தன் பக்கம் இழுத்து விடுவாள்.

அவளுக்கு மிகவும் பிடித்த உணவு வகை, தட்டு வடை செட்டும், பானி பூரியும். அவளுடைய நண்பன் சரவணன் வாரத்திற்கு ஒரு முறைதான் அவளைச் சாப்பிட விடுவான்.

“சரி கிளம்பலாம்.”

சரவணன் வண்டியை எடுக்கச் செல்ல, “இன்னிக்கு நான் தான் ஓட்டுவேண்டா.”

அவனுக்கு முந்திச் சென்று வாகனத்தில் அமர்ந்து கொண்டாள்.

சரவணன் சாவியை அவளிடம் கொடுக்க, வாங்கிக் கொண்டு அதற்கு உயிர்க் கொடுத்தாள்.


சரவணன் அவள் பின்னே அமர ஸ்டார்ட் ஆகியது அந்த பைக். ஜீன்ஸூம், டீசர்ட்டும் அவளுக்கு வாகனம் ஓட்டுவதை சுலபமாக்கியது. தலைக்கவசத்தை அணிந்தவள், அவனுக்கும் கொடுக்க இருவரும் போக்குவரத்தில் கலந்தனர்.

அவர்கள் வழக்கமாகச் சாப்பிடும் கடை இருக்கும் தெருவிற்குள் திருப்பும் போது சரியாக ஆடி கார் ஒன்று எந்த அறிவிப்பும் இன்றி வர, தன் இரு சக்கர வாகனத்தை அங்கும் இங்கும் ஆட்டி ஒரு வழியாக நிறுத்திவிட்டு இறங்கினாள் ராகவர்சனி.


தலைக்கவசத்திற்குள் அவள் முகம் ஆங்கிரி பேர்ட் போல் மாறி இருந்தது. காரிலிருந்தவனும் கோர்ட் பட்டனைக் கழற்றியபடி இறங்கினான்.

“வாட் தி ஹெல் ஈஸ் ராங்க் வித் யூ?” அவனைப் பார்த்து ஒரு சில நொடிகள் மூச்சு விட மறந்தாள் ராகவர்ஷினி.

மஞ்சள் நிற கலையான முகம், அடர்ந்த புருவங்கள். லேசாக பிங்க் நிறத்தில் இமைகள் தாமரை போல் கருப்பு நிற விழிகளை மறைத்திருந்தன. கொஞ்சம் வளைந்த மூக்கு. உதடுகள் ரோஸ் நிறத்தில் இருந்தன. தாடி டிரிம் செய்திருக்க, அவனின் சதுர வடிவ தாடைக்கு அது இன்னும் அழகாக இருந்தது. தலை முடி வாரி இருக்க இடது பக்கம் நெற்றியின் பாதி வரை தொட்டிருந்தது. அவள் ஆழ்மனம் தானாக, ‘வாவ். இவன் பொண்ணுங்களை விட எவ்வளவு அழகாக இருக்கான்’ எனக் கூறியது.

“கண்ணு தெரியலை. இப்படித்தான் வண்டியை ஓட்டறதா? சென்ஸ் இல்லை. அரை குறையாக பைக் ஓட்டக் கத்துக்கிட்டு அடுத்தவங்க உயிரை வாங்க வரது?”

பார்க்கத்தான் அழகன், ஆனால் ஆணவம் பிடித்தவன் என்பது அவன் பேச்சில் தெரிய உடனே அவன் அழகு பின்னுக்குச் சென்று விட்டது.

“இறங்கு சரோ.”

“ராக்ஸ். பிரச்சினை வேண்டாம். கிளம்பிடலாம்.”

“நீ இறங்குடா.”

‘இன்று கதகளிதான்’ என நினைத்த சரோ அமைதியாக இறங்க, பைக்கிலிருந்து வேகமாக இறங்கினாள் ராகவர்ஷினி.

“ஏய் என்னடா மரியாதையாப் பேசு. நீ ஒரு ஹார்ன் கூட முக்குல கொடுக்காமல் வந்துட்டு என்னோட டிரைவிங்க் அரைகுறைனு சொல்றியா?” எடுத்த எடுப்பில் எகிறாள் நம் ரவுடி பேபி. அநியாயம் எங்கு நடந்தாலும் நம் ரவுடி பேபி தட்டிக் கேட்கும் போது அவளுக்கே நடக்க சும்மா விடுவாளா?

அதில் எதிரில் இருப்பவன் விழிகள் விரிந்தாலும் மீண்டும் கோபம் சூழ்ந்தது.

“என்ன முழிக்கற? ஆடிக் காரு வச்சுருந்தா நீ பெரிய அப்பா டக்கரா? நீ பேசுனதுக்கு சாரி கேட்டுட்டு கிளம்பு.”

“வாட்? சாரியா?” இதுவரை அவன் யாரிடமும் சாரி கேட்டு பழக்கமில்லாதவன். அப்படித்தான் அவன் வளர்க்கப்பட்டிருந்தான்.

“இல்லை சேரி. பேசிக் மேனர்ஸ், டிரைவிங்க் தெரியாத நீ எல்லாம் என்னைப் பத்தி பேச என்ன இருக்கு?” விரலை நீட்டிப் பேசினாள்.

“ஹே கொஞ்சம் அமைதியா வாடி. சாரி சார். நீங்க கிளம்புங்க.”

“டேய் சரோ. நீ குறுக்க வராதே.”

அவளின் நீட்டிய விரலைத் தன் ஆள் காட்டி விரலால் தட்டி விட்டவனின் முகமே கோபத்தில் சிவந்து விட்டது.


அதற்குள் அவன் அலைபேசி வேறு அடிக்க ஆரம்பிக்க, அதில் தெரிந்த பெயரை நோக்கியதும் அவன் முகம் மாறியது.

“எனக்கு உன்ன மாதிரி இடியட் கூட பேச எல்லாம் டைம் இல்லை.”


என்றவன் கார் கதவை நீக்கிக் கொண்டு டிரைவிங்க் சீட்டில் அமர்ந்து கைப்பேசியைக் காதில் வைத்தான்.

“இடியட்? யாரைப் பார்த்து இடியட்டுனு சொல்ற?”
அதற்குள் தன் பேக்கில் இருந்த ஜூஸ் டப்பாவில் இருந்த ராகிக் கூழை எடுத்து அவன் காரின் முன் பக்கத்தில் கவிழ்த்து இருந்தாள் ராகவர்சனி.

“ஏய் என்னடி இப்படி பண்ணிட்ட?”
ஏற்கனவே சரவணன் பைக்கை ஸ்டார்ட் செய்திருக்க, ராகா பைக்கில் அமர்ந்தவாறு இந்த வேலையைப் பார்த்திருந்தாள்.

“ஷிட்.” என்றபடி வேகமாக இறங்கினான் அவன்.

“ஹே யாரைப் பார்த்து இடியட்டுனு சொல்ற? இன்னொரு தடவை என் கண்ணில் பட்றாத. இல்லை அடுத்து டிரைனேஜ் வாட்டர்தான். காருக்கு இல்லை உனக்கு. பைக் நம்பர் பார்க்கிறியா? வேஸ்ட். இது ஃபேக் நம்பர். போடா கோட் சூட் போட்ட கொரங்கு” என்று அவள் பின்னால் திரும்பி கத்த, அவளுடையை கையில் இருந்த, ‘I always rock.’ என்ற டேட்டூவும் அருகில் வரையப்பட்டிருந்த கீரிடமும் அவன் விழிகளுக்குத் தவறாமல் பட்டது.

“இடியட்” என முனு முனுத்தவன், உச்ச கட்ட கோபத்தில் காரில் ஏற அதற்குள் சரவணன் பைக்கை அடுத்த தெருவிற்குள் விட்டு மறைந்திருந்தான்.

“ஏண்டி இப்படி செஞ்சு வைக்கிற? ஒரு சாரியில் பிராபளம் சால்வ் ஆகி இருக்கும்.”

“அவன் எல்லாம் பணக்கார திமிரு பிடிச்சவன். எப்படி பேசுனான் பார்த்தில்லை. ரோட்டில் அவன் தப்பா வந்துட்டு நம்மளை எப்படிப் பேசறான் பார்த்தியா? இந்த மாதிரி ஆட்களை கேட்களைனா அவங்களுக்கு இன்னும் திமிரு அதிகமாகிடும்.”

“சரி சரி கூலாகு.” அவர்கள் சாப்பிடும் கடையில் வந்து வண்டியை நிறுத்தினான்.

“வாம்மா வர்ஷினி. வாப்பா.” என இருவரையும் வரவேற்றார் அந்த முதியவர்.

“தாத்தா எனக்கு தட்டு வடை ஒரு செட், பானி பூரி இரண்டு பிளேட். ஒரு தஹி பூரி” என ஆர்டர் கொடுத்து விட்டு அமர்ந்தாள்.

“எனக்கு பானி பூரி ஒன்னு தாத்தா.”

“என்னம்மா கோபமாக இருக்க போல. இத்தனை ஆர்டர் செய்யற?”

“ஆமா தாத்தா வழியில் ஒரு இடியட் டென்சன் பண்ணிட்டான். அந்தக் கோபத்தை இதைச் சாப்பிட்டு ஆத்தனும்.”

“அப்ப இருமா. இன்னும் இரண்டு பானி பூரி எக்ஸ்ட்ரா வச்சுத் தரேன். உன்னோட கோபம் எல்லாம் குறைஞ்சு போயிடும்.”

இன்னும் அதிகம் பானி பூரி கிடைக்கும் என்பதால் அவள் கோபம் சற்று இறங்கியது.

“சரி ராக்ஸ். இன்னிக்குக் கோட்டாவுக்கு ஒருத்தனைப் பிடிச்சு வம்பிழுத்துட்ட. பானி பூரி சாப்பிட்டு நாளை பேஷா முடிச்சுக்கலாம்.”

தன் நண்பனின் தோளில் ஒரு மொத்து மொத்தியவள் பானி பூரி வரவும் கவனத்தை மாற்றினாள்.
அவளின் கோபத்திற்குக் காரணமானவனோ காரை வேகமாக அந்த மாளிகைப் போன்ற வீட்டிற்குள் செலுத்தினான்.


கோயம்புத்தூரில் பிரதான பணக்காரர்கள் வசிக்கும் பகுதி அது. காரின் வேகத்திலேயே அவன் கோபத்தையும் காட்டிட அந்த வீட்டின் பணியாளர்கள் அனைவரும் எச்சரிக்கை ஆகினர்.

“சின்னய்யா வந்துட்டாரு.” எனத் தகவல் வாக்கி டாக்கியில் பறந்தது. வீட்டுக்குள் ஷூ கால்கள் தட தடக்க உள்ளே நுழைந்தான்.

“இதோ வர்மன் வந்துட்டான்.”
குரல் கொடுத்தார் அவனுடைய பாட்டி.

“பாட்டி தாத்தா எங்க? எங்கிட்ட ஏன் நீங்க மயங்கி விழுந்ததைச் சொல்லவே இல்லை.”

“டே வயசான இதெல்லாம் சாதாரணம். இதைப் போய்.”

“எங்க அந்த கேர் டேக்கர். இப்பவே பையர் பண்றேன்.”

“ரகு நந்த வர்மன்.”
பாட்டி அழுத்தமாகக் கூப்பிட்டார்.

“கோபத்தைக் குறை முதல்ல. நான் தான் சொல்லிட்டு இருக்கேன்ல. எவ்வளவு தடவை சொல்றது? நான் சொல்றதைக் கேட்க மாட்டியா?”

“கேட்கறேன்.” என தண்ணீரை எடுத்துக் குடித்து விட்டு சோபாவில் அமர்ந்தான்.

அப்போது கிட்சனில் இருந்து பழரசம் நிரம்பிய கண்ணாடிக் குவளையுடன் வந்தார் ரகு நந்த வர்மனின் அத்தை பிரியவதனி.

“ரகுப்பா எதுக்கு இவ்வளவு கோபம்? நாங்கல்லா இருக்கோம்ல.”

“இல்லை அத்தை தாத்தாவுக்கு?”

“தாத்தாவுக்கு எதுவும் இல்லை. நீ இந்த ஜூஸ் குடிப்பா.”

அன்னையை இழந்தவனை பாராட்டி சீராட்டி வளர்த்த பிரியவதனியின் குரலுக்கு கட்டுப்பட்டவன் அமைதியாக பழரசத்தைப் பருகினான்.

“முதல்ல உனக்கு ஒரு கல்யாணத்தை செஞ்சு வைக்கனும்டா. அப்பத்தான் இந்தக் கோபம் எல்லாம் குறையும்.”

அவர் கூறியதில் புரையேறும் போலிருந்தது. அங்கு சுத்தி, இங்கு சுத்தி திருமணத்தில் நின்றது வழக்கம் போல்.

-ராகமிசைக்கும்..
 
Last edited:
  • Like
Reactions: Sampavi