• இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.
  • வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.
  • வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏

முதலும் முடிவுமாய்-16

Pandiselvi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 30, 2021
122
96
28
Chennai
அத்தியாயம் 16

இன்னமும் நிலா வாய் திறந்து காதலை சொல்லவில்லை. வாய்மொழி வார்த்தையை விட அவள் மனமொழி சொல்லும் வார்த்தைகள் மேல் நம்பிக்கை வைத்தான் மாறன். தொலைபேசி வழியே கதைப்பதும் சிரிப்பதும் பகிர்வதுமாக நாட்களை கடத்திக் கொண்டும் வாரத்தில் ஒருநாள் அவளைக் காண்பதுமாக காதலை வளர்க்கிறான். எல்லா நேரமும் காரிலே செல்வதில்லை. சில நேரம் ட்ரெயின் பேருந்து பயணங்களும் உண்டு‌. சில நேரம் அவன் வேலைக்காக, பல நேரம் அவளுக்காக சென்னை பயணம் மேற்கொண்டான்.

அன்று ஸ்ரீவியிலே மிகப்பெரிய திருமண மண்டபத்தில் கல்யாண கான்ட்ராக்ட் கிடைக்க.. டெக்கரேஷனில் இருந்து கார் வாடகை வரை அனைத்தும் அவனுக்கு கான்ட்ராக்ட் கிடைத்தது. பெரிய திருமணம் என்பதால் அவனுக்கு கிடைக்கும் லாபமும் அதிகம். இதையும் சேர்த்து வைத்து அக்காவுக்கு குடுத்துட்டா அவளுக்கு அவங்க வீட்ல கொஞ்சமாவது மரியாதை கிடைக்கும் என்று முழுமூச்சாக அந்த வேலையில் கவனம் செலுத்தினான். எந்த அளவுக்கு நன்றாக வேலையை முடித்துக் கொடுக்கிறோமோ அதைப் பொறுத்து தான் கஸ்டமர்களும் பெருகும் என்று ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்தான்.

அவன் வேலையில் இருக்கும் போதே நிலானியிடம் இருந்து அழைப்பு வர அதுவரை இருந்த அலுப்பு இருந்த இடம் தெரியாமல் மாயமாக, "சொல்லுமா.. என்ன பண்ற?" என்றான்.

"இப்போ தான் காலேஜ் விட்டு வந்தேன். அம்மா ஸ்நாக்ஸ் குடுத்தாங்க. சாப்பிட்டு இருக்கேன்"

"என்ன இந்த நேரத்துக்கு போன் பண்ணிருக்க?. நைட் தான கால் பண்ணுவ?". வழக்கமாக இரவு தான் அழைப்பு வரும். காலையில் இருந்து மாலை வரை அவன் வேலையில் இருப்பான் என்பதால்.

"சும்மா பேசனும் போல இருந்துச்சு அதான். நிறைய வேலை இருக்கா?. டயர்டா இருக்கேங்களா". ஏனோ அவன் உடல் வலி அவளுக்கு வலித்தது போல் மனமெல்லாம் வலித்தது.

அவன் தனியே வந்து, "ஆமா வேலைல இருக்கேன் மா. நேத்து சொன்னேன்ல. பெரிய காண்ட்ராக்ட் அதான் வேலை அதிகமா இருக்கு. இவ்வளவு நேரம் ரொம்ப அலுப்பாக இருந்துச்சு. உன்கிட்ட பேசுனப்புறம் ப்ரெஷ்ஷா பீல் பண்றேன். தேங்க்ஸ். நைட் கால் பண்றேன்"

"சாரி வேலைல இருக்கேங்களா?. டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?. நான் நைட் கால் பண்றேன்" என்று இணைப்பைத் துண்டிக்க போக.

"சரி" என்று சிரித்துக் கொண்டே பதில் தந்தான்.

அவன் இதழில் உறைந்த புன்னகையோடு வருவதைக் கண்ட அவன் நண்பன் குமரேசன், "என்னடா வர‌ வர தனியா சிரிக்குற. தனியா போயி பேசிட்டு வார. சென்னைப் பக்கம் வேற அடிக்கடி போயிட்டு வார. என்ன சங்கதி?"

யாராவது ஒருவரிடத்திலாவது பகிரத்தானே செய்ய வேண்டும் என்று நடந்த கதையனைத்தும் அவனிடம் பகிர்ந்து, "அவதான் வாழ்க்கைனு முடிவு பண்ணிட்டேன். வாழனும்னு ஆசையே இப்போ தான் வந்துருக்கு. அதுவும் அவளுக்காக வாழனும். என் வாழ்க்கைல எனக்குப் பிடிச்ச மாதிரி கிடைச்ச விஷயம்னா அது என் நிலா மட்டும் தான்" என்று நெகிழ்ந்து சொல்ல.

அவன் முகத்தின் பாவனையிலே எவ்வளவு தீவிரமாக அவளை விரும்புகிறான் என்பது புரிந்து போனது குமரேசனுக்கு. "நம்மூரு பொண்ணுங்களே நம்ப முடியாது. அப்பன் ஆத்தா கண்ணைக் கசக்குனாலே கலட்டி விட்டுருவாலுக. இதுல சென்னைப் பொண்ணு வேற. மாடர்னா தான் இருப்பாலுக. அதுக்கும் நமக்கும் செட்டாகுமா மாறா. அவ வந்து இங்க வாழ்வாளா?. இவ்வளவு ஆழமா மனசுல ஆசையை வளர்த்துட்டு நாளபின்ன உங்க ஊரு எனக்கு செட்டாகாது. ஊரு சரியில்லை உறவு சரியில்லை சொத்து பத்து இல்லன்னு உன்னை வேண்டாம்னு சொல்லிட்டா என்ன பண்ணுவ?. போன்லயே பேசி காதலை வளர்த்துக்கிட்டு வார வாரம் சென்னை வரை போயிட்டு வந்து இருக்குறதெல்லாம் அதிகம் டா. நீ சொல்றதை பார்த்தா நல்லா சொகுசாக வாழுற பொண்ணா இருக்கும் போல. அவ இன்னும் காதலை சொல்லனு சொல்ற. கடைசில டைம் பாஸ்க்கு சும்மா ப்ரண்ட்டா தான் பழகுனேனு சொல்லிடப் போறா. பார்த்து இருந்துக்கோ. காதல் பரத் மாதிரி அலைய விட்டுறப் போறா"

"ப்ச் குமரேசா.. அவ அந்த மாதிரி பொண்ணு இல்ல. ரொம்ப நல்ல பொண்ணு. அவகிட்ட பிடிச்சதே அவ வெகுளித்தனமும் வெளிப்படையான பேச்சும் தான். அவ மேல எனக்கு முழு நம்பிக்கை இருக்கு. அவ இல்லாமல் என்னால வாழ முடியாதுடா"

"காதலுக்கு கண்ணு இல்லன்னு சொல்றது உண்மை தான். ஏற்கனவே அந்தப் பொண்ணு மேல பைத்திமாகிட்ட. இனி நான் சொல்றது எங்க மண்டையில ஏறப்போகுது. நல்லதா நடந்தா சரி" என்று அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு வேலையைத் தொடர்ந்தனர்.

'இன்னும் இரண்டு வாரத்தில் நிலாவுக்கு பிறந்தநாள் என்ன வாங்கிக் கொடுக்கலாம். என்ன பண்ணலாம்?. ப்ரத்டே வேற வார கடைசி வராம இடையில வருது. நமக்கு வேலை இருக்குமே. போக முடியுமா?. அவ கண்டிப்பா வரனும்னு சொல்லிருக்கா. என்ன பண்றது?' என்று யோசனையில் இருந்தான்.

'போவோமோ இல்லையோ அவளுக்கு ஏதாவது வாங்கனும். என்ன வாங்கலாம்?. பேசாம சேலை எடுத்துக் கொடுக்கலாமா?' என்று யோசித்தவன் அதையே வாங்கிக் கொடுக்க முடிவு செய்து கடைக்குச் சென்றான்.

துணிக் கடையையே சுற்றி வந்தவனுக்கு எந்த சேலை எடுப்பது எது நன்றாக இருக்கும் என்று எந்த ஐடியாவும் இல்லை. இதைத் தவிர்த்து என்ன வாங்குவது என்றும் தெரியவில்லை. இதுவரை பரிசுப் பொருள், பூங்கொத்து என்பது போன்று யாருக்கும் வாங்கிக் கொடுத்ததில்லை. உள்ளூரில் ஏதாவது பங்கஷனுக்கு அழைப்பு வந்தால் பணம் தான் மொய்யாக செய்வான். அவன் பிறந்தநாளைக் கொண்டாடியதும் இல்லை. கொண்டாட ஆளும் இல்லை. அதனால் அவனுக்கு வேற என்ன வாங்குவது என்று கூட தெரியவில்லை.

சேல்ஸ் பெண்ணும் ஒவ்வொரு சேலையாக எடுத்துக் காண்பிக்க, பிரித்துக் காண்பிக்காமலே, 'இது வேண்டாம். இல்ல வேண்டாம் வேண்டாம்' என்று இருபதுக்கும் மேற்பட்ட சேலைகளை ஒதுக்கியவன் கண்ணில் ஒரு சேலை மின்னியது.‌

"அக்கா அதை எடுத்துக் குடுங்க" என்க.. அந்தப் பெண்ணும் எடுத்து விரித்துக் காண்மித்தாள். பட்டுரோஸ் கலரில் அங்கங்கே சின்ன புட்டாக்கள் போட்டு குட்டி பார்டர் வைத்து அழகாக இருந்தது. 'இந்தக் கலர் அவளுக்கு அழகா இருக்கும்' என்று நினைத்தவன் அதையே எடுத்துக் கொண்டான். அவனுக்கே அவனை நினைத்துக் கூச்சமாக இருந்தது. இதுவரை பைரவிக்கு கூட சேலை எடுத்து தந்ததில்லை. தீபாவளி பொங்கல் திருவிழா என்று வரும் போது பணத்தைக் கையில் கொடுத்து, 'உனக்கும் மாமாவுக்கும் பிடிச்சதை எடுத்துக்கோங்க' என்று சொல்லி விடுவான். ஏதோ மனைவியின் முதல் பிறந்தநாளுக்கு சர்பிரைஸாக எடுத்து வருவது போல் அத்தனை நாணம் வந்து ஒட்டிக் கொண்டது.

அவன் கையில் கவரோடு வீட்டை அடையும் போது பைரவி வாசலில் நின்று கொண்டிருந்தாள். அவளைப் பார்த்து திடுக்கிட்டவன், "அக்கா எப்போ வந்த?. சொல்லாம வந்துருக்க?. என்னாச்சு? அப்போவே வந்துட்டியா? எனக்கு கால் பண்ணிருக்கலாம்ல" என்று அவசரமாய் வந்து வீட்டைத் திறந்தான்.

"ஏன்டா இவ்ளோ பதறுற?. இப்போ தான் வந்தேன். உனக்கு போன் பண்ணலாம்னு நினைக்குறதுக்குள்ள நீயே வந்துட்ட. சாப்டியா வேலை முடிஞ்சதா"

"இல்லக்கா இன்னைக்கு வீட்லயே சாப்பாடு செஞ்சுருந்தேன். அதேன் சாப்பிட வீட்டுக்கு வந்தேன். வா உட்காரு. நீயும் சாப்டு. நீயென்ன மத்தியான வெயிலுல ஒத்தையில வந்துருக்க?. அங்க ஒன்னும் பிரச்சினை இல்லையே" என்று கேட்டபடி கையில் இருந்த துணிக் கவரை ஓரமாக வைத்தான்.

"அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லடா. இன்னைக்கு மாமா வீட்ல இருந்தாரு. அதான் பாப்பா ஸ்கூல் விட்டு வந்தா அவரை பாத்துக்கச் சொல்லிட்டு தம்பியை பாத்துட்டு வாரேனு வந்தேன்"

"சரி சரி. இந்தா சாப்பிடு" என்று தட்டில் சாதத்தைப் போட்டு, அவனுக்குத் தெரிந்த வகையில் வைத்த கத்தரிக்கா புளிக் குழம்பையும் ஊற்றிக் கொடுத்தான். கூட்டு பொறியல் எல்லாம் எப்போதும் வைப்பதில்லை. முடிந்தால் வைப்பான். இல்லையேல் இருக்கவே இருக்கிறது முட்டை. ஒரு ஆம்லேட்டைப் போட்டு சாப்பிட்டு முடித்து விடுவான்.

"நீ உட்காருடா. நான் ஏதாவது செய்யட்டுமா?"

"நீ உட்கார்ந்து சாப்டுக்கா. அங்கயும் நீதான செய்ற. அம்மா இருந்தா வகையா செஞ்சு போடும். நான் செஞ்சது சுமாராத்தான் இருக்கும் சாப்டு பாரு" என்றவன் அடுத்த இரண்டு நிமிடத்தில் இரண்டு முட்டைகளைக் கலக்கிப் போட்டு செய்த ஆம்லேட்டைக் கொண்டு வந்து அவள் தட்டில் வைத்தான்.

அவளுக்கு கண்ணெல்லாம் கலங்கி விட்டது. திருமணம் ஆனவர்களே வீட்டில் பெண்கள் இல்லையென்றால் சாப்பாடுக்கு அல்லாடிக் கொண்டு ஹோட்டலில் சாப்பிட்டு நாட்களைக் கடத்தும் போது இந்த வயதில் தானே சமைத்து உண்ணும் தம்பியின் நிலையை எண்ணி கண்ணீர் வடித்தாள். இதில் தான் வேறு அவனுக்கு பாரம் என்று நினைக்கையில் அவள் மனதில் தீயாய் சுட்டது. பெற்றவர்கள் இல்லையென்றால் பிறந்த வீட்டை அடியோடு மறந்து விடுவது தான் புகுந்த வீடு சென்ற பல பெண்களின் நிலை. ஆனா இங்கோ உனக்கு நானிருக்கிறேன் என்று இதுவரை நிரூபித்துக் கொண்டிருக்கிறான் மாறன்.

மாறன் வந்து அருகில் அமரவும் கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டே அவனுடன் சாப்பிட்டு முடித்தாள். எத்தனை நாள் ஏக்கம். அவனுக்கு வாய்க்கு ருசியாக சமைத்துப் போடும் பாக்கியம் தான் கிடைக்கவில்லை‌. அவனுடன் சேர்ந்து சாப்பிடும் பாக்கியமாவது அவ்வப்போது கிடைக்கிறதே என்று பெருமூச்சு விட்டாள்.

"வேலைலாம் எப்படி போகுது மாறா? நிறைய வேலையை இழுத்துப் போட்டு செய்யாதடா. உடம்பு கெட்டுப் போகப் போது. அடிக்கடி சென்னை டிரிப் போயிட்டு வர்றியாமே. வாடகைக்கு கார் ஓட்டுற டிரைவர் யாரயாது அனுப்ப வேண்டியது தான. நீ ஏன் வார வாரம் போயிட்டு வந்து அலைஞ்சுக்கிட்டு இருக்க?" என்று வினவ.

அவனுக்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த சோறு புரையேறியது. 'இவளுக்கு எப்டி நான் வார வாரம் சென்னை போறது தெரியும்' என்று அவளிடம் என்ன பதில் சொல்வது என்று அதிர்ந்து முழித்தான்.


தொடரும்.