• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வண்ண நிழல்கள் - 16.

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,106
438
113
Chennai

பகுதி – 16.

ஆகாஷ் வெளியே குளத்துக்கு கிளம்புவதாகச் சொல்லவே, அவளது பார்வை அவனையே சுற்றி வர, அவனுக்கு அவள் மனதின் ஏக்கம் புரிந்தது.

“ஹாய் ப்ரண்ட்... நீ குளம் பாத்திருக்க?” அவளிடம் கேட்க, அவளது விழிகள் ஒளிர்ந்தால், தேன்மொழியோ ‘அவனை என்ன செய்வது?’ என்ற பார்வை பார்த்தாள்.

“ஆகாஷ்... மழை வேற வர்ற மாதிரி இருக்கு... நீ எங்கே அவளை அழைச்சுட்டு போகப் போற? எதுவும் வேண்டாம்...” காவேரி அவனைத் தடுக்க முயன்றார்.

“அத்த... பிளீஸ்...” அவர் மறு வார்த்தை பேசும் முன்பு, பூமிகாவின் கெஞ்சல் குரல் அவரை தடுத்து நிறுத்தியது.

“அதுக்கில்லம்மா...” அவர் துவங்க,

“காவேரி... நான்தான் கூடவே போறேன்ல... பிறகு என்ன?”.

“நீ சாச்சுகிட்டு நடந்து போகாமல் இருக்கணும்... அப்படின்னா எனக்கு ஓகே” அவர் சொல்ல,

“எனக்கு மறந்திருந்ததை ஞாபகப்படுத்தற பாத்தியா? இப்போ நான் என்ன செய்ய? சரி... ப்ரண்டு என்னோட வர்றதால நார்மலா நடக்கறேன்...” சொன்னவன் செல்ல, ஆசுவாசமாக மூச்சு விட்டார்.

“நானும் வரவா...?” தேன்மொழி பூமிகாவிடம் கேட்க,

“எது... இந்த சிலிண்டரை தூக்கிட்டு அலையிறதுக்கு தான? அதையும் நாங்களே பார்த்துக்கறோம்...” சொன்னவன், பூமிகா அப்பொழுதுதான் கழட்டி வைத்திருந்த ஆக்ஸிஜன் சிலிண்டரை கையில் எடுத்துக் கொண்டான்.

“ஆகாஷ்... கார்ல தானே போறீங்க?” திடுமென தேன்மொழி கேட்க,

“அதான... வேண்ணா அந்த மீன்பாடி வண்டியில போகவா? பின்னாடி படுத்துகிட்டே வேற போலாம்...” அவன் ஆம்புலன்ஸை சுட்டிக்காட்டி நக்கலாக கேட்க, பூமிகா சிரித்துவிட்டாள்.

“அந்த வண்டியைப் பாத்தாலே பத்திகிட்டு வருது... கண்ணுக்கு மறைவா நிறுத்தி வைக்கணும்...” சொன்னவன்...

“ப்ரண்டு... நீ கார்ல போய் உக்காரு... நான் ட்ரஸ் மாத்திட்டு வர்றேன்” சொன்னவன் வேகமாக வீட்டை விட்டு வெளியேறி, பின்கட்டு படிகளில் ஓடினான்.

அவன் செல்லவே... “பூமி... பார்த்து பத்திரமா இருக்கணும்... நானும் வேண்ணா வரவா? உன்னை நான் இப்படி அனுப்பினதே இல்லையே...” தேன்மொழி கவலையாக கேட்க, பூமிகா மறுப்பாக தலை அசைத்தாள்.

“தனியா போற த்ரில்ல நான் இருக்கேன்... எனக்கு அந்த துப்பட்டாவை மட்டும் எடுத்துக் கொடு...” அவள் கேட்கவே, பூமிகா கேட்டதைக் கொண்டுவந்து கொடுத்தாள்.

பூமிகா காருக்கு செல்ல, தேன்மொழி உள் படிக்கட்டு வழியாக மேலே செல்ல, அங்கிருந்த அறைக்குள் இருந்து ஆகாஷின் ஓங்காரிப்பு சத்தம் வீட்டுக்கு வெளியே வரைக்கும் கேட்டது.

‘என்ன...? வாந்தி எடுக்கறாரா?’ எண்ணியவள், உள்ளே செல்வதா? வேண்டாமா? எனத் தடுமாறி நிற்க, அறைக்குள் இருந்து அவனே வெளியே வந்தான்.

அவளைப் பார்த்தவன்... “அட எனிமி... இங்கே என்ன பண்றீங்க?” கேட்டவன் கொடியில் கிடந்த டவ்வலை எடுத்து முகம் துடைத்தான்.

“வாமிட் பண்ணீங்களா? என்ன ஆச்சு?” அவனை ஆராய்ச்சியாக பார்த்தவாறே கேட்டாள்.

“ஓ... அதுவா... நான் கர்ப்பமா இருக்கேனா அதான்...” சொன்னவன் படிகளில் இறங்கத் துவங்க, அவன் பின்னால் ஓடினாள்.

“ஒரு இடத்துல இருக்க மாட்டீங்களா?” பேசிக் கொண்டிருக்கையிலேயே நடக்கிறானே எனக் கேட்டாள்.

“அப்படி இருந்தா தூக்கிட்டு போய் எரிச்சிட மாட்டீங்க? அதான்... இப்போ என்ன... உங்க ப்ரண்ட்டை நான் நல்லா பார்த்துக்கணும், எதுன்னாலும் உடனே தகவல் கொடுக்கணும் அதான?” படிகளில் நின்று அவளைத் திரும்பிப் பார்த்தான்.

“எதையுமே சீரியஸா எடுத்துக்க மாட்டீங்களா? ஒரு சின்ன தப்பு நடந்தா கூட...” சொல்லத் துவங்கியவளுக்கு, மேலே என்ன சொல்வது எனத் தெரியவில்லை.

“அவங்க கிட்டே ஏற்படற மாற்றம் உங்களுக்குத் தெரியுதா இல்லையா? இங்கே வந்ததில் இருந்து இன்னுமே உடம்பு மெலிஞ்சு போயிட்டே இருக்காங்க... அவங்களோட மொத்த எனர்ஜியும் ஒரு நாள் வத்திட்டா, படுக்கைதான் அவங்க கடைசி வாய்ப்பு.

“அப்படி ஆக முன்னாடி... அட்லீஸ்ட்... அவங்க சந்தோஷமா இருக்கற மாதிரி, நினைச்சு சந்தோஷப்படற மாதிரி சில நினைவுகளையாவது கொடுக்கலாமே” அவன் சொல்ல, தேன்மொழி அழுதுவிட்டாள்.

“இப்போ எதுக்கு அழறீங்க? இது உண்மை... அதுக்கு முன்னாடி நாம ஓட முடியாது. நீங்க இவ்வளவு அவங்க மேல அட்டாச் ஆகறது நல்லதில்லை. உங்க மனசை ப்ரதிக் பக்கம் திருப்புங்க... உங்க நல்லதுக்குதான் சொல்றேன்” சொன்னவன் சென்றுவிட்டான்.

அவன் காருக்கு அருகில் வருகையில், காவேரி வெளியே நிற்க, பூமிகா பின்னிருக்கையில் அமர்ந்திருந்தாள்.

அதைப் பார்த்தவன், “ப்ரண்ட்... என்ன பின்னாடி உக்காந்துட்ட? முன்னாடி வா...” அவன் அழைக்க, சற்று தயங்கி வந்து அமர்ந்தாள்.

“ஆகாஷ்... பார்த்து... நிதானமா போ...” காவேரி பத்திரம் சொல்ல, தேன்மொழி அமைதியாக வந்து நின்று கை காட்டினாள்.

காரை மெதுவாக கிளப்பி... வீட்டுக்கு வெளியே வந்தவன், “என்ன இது...? குர்தாவுக்கு துப்பட்டா எல்லாம் போட்டுக்கிட்டு... அதை போடலன்னாலும் பெருசா எந்த வித்தியாசமும் தெரியாது” அவளைப் பார்த்து கண்ணைச் சிமிட்டி அவன் சொல்ல, அவன் சொன்னது புரிந்ததை விட, அவன் கண்ணை சிமிட்டியது அவளுக்கு விஷயத்தை புரிய வைத்தது.

“ஏய்... ச்சீ... இதென்ன பேச்சு...?” முகத்தை திருப்பிக் கொண்டாள்.

“ஒரு ஆணும் பொண்ணும் ப்ரண்ட்ஸ்ஸா இருக்கறதில் ஒரு வசதி, ஒரு சங்கடம் இதுதான்... ஒரு ஆணைப்பத்தி, அவன் மனநிலை பத்தி எல்லாம் ஈஸியா ஒரு பொண்ணு புரிஞ்சுக்கலாம்... ஒரு ஆணுக்கும் அப்படித்தான்.

“கூடவே... அந்த ஆண் யோசிக்காமல் பேசிடற விஷயத்தால், பொண்ணுக்கு ஒரு சங்கடம் வந்துடும். ஆணுக்கும் அப்படியே... அதுவே பழகிட்டா... ‘கருமம் புடிச்சவனே... உன் புத்தி இருக்கே... கிரகம் புடிச்சவனே’ இப்படி செல்லமா திட்டிடலாம்.

“ஒரு ஆம்பளைக்கு அது ரொம்ப புடிச்ச விஷயமும் கூட... இப்போ கூட நீ சொன்னியே ‘ச்சீ...’ன்னு ஐ லைக் இட்...” அவன் சொல்லச் சொல்ல, அதென்னவோ அவனை இன்னும் பிடித்தது.

அவளுக்கு நட்பே புதிது என்கையில்... ஒரு ஆண் நட்பு கிடைக்காதது கிடைக்கப்பெற்ற பிரமிப்புதான். அவளைப் பார்த்தாலே, பேயைப் பார்த்த தினுசில் விலகிச் சென்றவர்கள்தான் அதிகம்.

‘இவகிட்டே பேசி, இவ பாடி ஆயிட்டா, அந்தப்பழி நம்ம மேல விழுந்துடும்ப்பா... வேண்டாம்...’ உடன் பயின்ற பெண்களே இப்படிப் பேசி கேட்டிருக்கிறாள்.

அப்படி இருக்கையில்... ஆண் நட்பு எல்லாம் கனவில் கூட வாய்க்கப்பெறாத ஒன்று.

அவள் திடுமென அமைதியாகிவிட, “ஹல்லோ ப்ரண்ட், என்ன திடீர்ன்னு அமைதி ஆகிட்ட?” அவள் ஏதோ யோசனையில் இருக்கவே, அவளைக் கலைத்தான்.

“நீங்க லவ் பண்றீங்களா?” அவள் திடுமென கேட்க, சாலையில் கவனமாக இருந்தவன், அவளைத் திரும்பிப் பார்த்தான்.

“பாஸ்ட்டென்ஸ்ல சொல்லணும்... பண்ணேன்...”.

“அவங்களை ரொம்ப புடிக்குமா?”.

“ரொம்ப புடிக்குமான்னா... ஆமா... லவ் பண்றப்போ அந்த கிறுக்குத்தனம் இல்லாமல் இருந்தால்தான் ஆச்சரியம்... ஏன்...?” அவள் முகத்தை ஆராய்ந்தவாறே கேட்டான்.

அவள் முகத்தில் பொறாமையோ, வருத்தமோ வேறு எதுவுமோ தெரியவில்லை. மாறாக... ஒரு ஆர்வம்... அவனது காதலைப் பற்றி தெரிந்துகொள்ள, அறிந்துகொள்ள அவள் விரும்புவது அவனுக்குத் தெரிந்தது.

அது அவனுக்கு பெருத்த நிம்மதியைக் கொடுக்க, அவளை விடுத்து சாலையில் பார்வையைப் பதித்தான்.

“நீங்க அவங்களை இப்போ மிஸ் பண்றீங்களா?”.

அதற்கு பதிலைச் சொல்ல சில நொடிகள் அவன் எடுத்துக் கொள்ளவே, “பதில் சொல்லணும்னு கட்டாயம் எல்லாம் இல்லை” அவள் சொல்ல, மறுப்பாக தலை அசைத்தான்.

“இல்ல... நான் அவளை மிஸ் பண்றனான்னு யோசிச்சுப் பாத்தேன். அவளுக்கு நான் ஒரு சாய்ஸா இருந்தேன்... அதாவது, அவ வச்சிருந்த லிஸ்ட்ல நானும் ஒரு ஆள் அவ்வளவுதான்.

“அது எப்போ தெரிய வந்ததோ... அப்போவே அவகிட்டே இருந்து நான் விலகிட்டேன். சோ... நான் பெருசா மிஸ் பண்ணலை... அவளும் அப்படித்தான்னு எனக்குத் தெரியும்” சாதாரணமாகவே அவன் சொல்ல, அவளிடம் ஒரு கதை கேட்கும் பாவனைதான்.

“யார் முதல்ல காதலைச் சொன்னது?” அவள் கேட்க,

“உண்மையைச் சொன்னா... நாங்க ரெண்டுபேரும், காதலை சொல்லிகிட்டதா எனக்கு ஞாபகமே இல்லை... அது அப்படியே... எனக்கும் ஒரு ஆள் இருக்காடா... அப்படின்னு போச்சு...” அதே பழைய கெத்து குரலில் அவன் சொல்ல, அவனையே பார்த்திருந்தாள்.

“ஒரு நிமிஷம் இரு... இங்கே ஒரு கருப்பட்டி தேன்குழல் கிடைக்கும், ரொம்ப டேஸ்ட்டா இருக்கும், கொஞ்சம் வாங்கிட்டு வர்றேன்... நீயும் வர்றியா?” அவளிடம் கேட்க, அவளும் காரில் இருந்து இறங்கினாள்.

அவளது வாழ்நாளிலேயே முதல் முறையாக கடைக்குப் போகிறாள்... தயக்கமாக அந்த பேக்கரிக்குள் அவள் நுழைய, “நீ இந்த சேர்ல உக்காரு... நான் வாங்கிட்டு வர்றேன்” அவன் இருக்கையை கைகாட்ட, அதில் சென்று அமர்ந்து கொண்டாள்.

புதிதாக அவள் வந்திருப்பதால், கடைக்காரர் அவளையும் அவனையும் பார்க்க, “சேட்டா...” விரல் நீட்டி அவன் பத்திரம் காட்டவே, அவனைப் பார்த்து சிரித்தார்.

“எந்து வேணும்...?” மலையாளம் கலந்த தமிழில் அவர் கேட்க, அவள் சற்று சுவாரசியமாகப் பார்த்தாள்.

“அது...” இழுத்தவாறே அவன் தேட, கடைப் பையனோ அவரது முதுகுக்குப் பின்னால், ‘கீழே இருக்கு...’ என கை காட்ட, அவளது சுவாரசியம் அதிகரித்தது.

“சேட்டா... அது... அதோ அங்கே இருக்கு...” எட்டிப் பார்த்தவன், அவரது காலுக்கு அருகே இருந்ததை சுட்டிக் காட்ட,

“அது பழையதா... நினக்கு வேண்டாம்...” அவர் மறுக்க,

“எனக்கு அதுதான் வேணும்...”.

“கால் கிலோ நூற்றம்பது ரூபா...” அவர் சொல்ல,

“பத்து ரூபாவுக்கு என்ன வரும்?” சட்டைப் பையில் இருந்து எடுத்து அவர் முகத்துக்கு முன்னால் நீட்ட,

“ம்... கோபம் வரும்... எனக்கு...” அவர் சொன்ன விதத்தில், பக்கென சிரித்துவிட்டாள்.

அங்கே இருந்த மூவரின் பார்வையும் அங்கே செல்ல, “சேட்டா... பிளீஸ்... பிளீஸ்...” அவர் கன்னம் பற்றி அவன் கெஞ்ச,

“வேண்டா... வேண்டா...” துள்ளி துள்ளி மறுத்தவர், இறுதியில் கடைப் பையனிடம், “எடுத்து கொடுக்கடா...” எனச் சொல்ல, சின்ன பீஸ் ஒடித்து, பேப்பர் பிளேட்டில் வைத்து கொடுக்க,

“தேங்க்ஸ் சேட்டா...” சொன்னவன் கடைப் பையனிடம் கண்ணைச் சிமிட்டிவிட்டு, அவள் எதிரில் சென்று அமர்ந்தான்.

“டேஸ்ட் பண்ணு...” ஒரு சின்ன பீஸ் கொடுக்க, அதை வாங்கி வாயில் போட்டுக் கொண்டாள். அந்த கருப்பட்டியின் சுவையும், அந்த மாவின் சிறு புளிப்பு கலந்த தித்திப்பு அவள் தொண்டைக்குள் இறங்க, அதன் சுவையில் கிறங்கினாள்.

“சூப்பரா இருக்குல்ல... இன்னும் ஒரு பத்து ரூபாய்க்கு வாங்கிட்டு வரவா?” அவன் கேட்க, எங்கே அவன் மீண்டுமாக சென்றுவிடுவானோ? என அஞ்சியவள், வேகமாக அவனது கரத்தைப் பிடித்து தடுத்தாள்.

‘வேண்டாம் சாமி...’ அவளது கண்கள் அவனிடம் கெஞ்ச,

“உனக்கு எக்ஸ்ப்ரசிவ் ஐஸ்... ரொம்ப அழகா இருக்கு” அவன் சொல்ல, அவளது இமைகள் படபடத்தது.

அவளிடம் சாதாரணமாகவே வெளி ஆட்கள் யாரும் பேசியது இல்லை. இவன் என்னவென்றால் இப்படிப் பேசினால்... அவளும் என்னதான் செய்வாள்?

“இதுக்கு முன்னாடி உன்கிட்ட யாராவது சொல்லி இருக்காங்களா?” அவன் கேட்க, அவன் கேட்க வருவது அவளுக்குப் புரியவே இல்லை.

“என்ன?” அவள் தடுமாறி கேட்க,

“உன் கண்களைப் பத்தி கேட்டேன்”.

“யாரும் பேசினதே இல்லை... இதில் கமெண்ட் எல்லாம் சொல்வாங்களா? இல்லை” சொன்னவள் வேடிக்கை பார்க்கும் சாக்கில் திரும்பிக் கொண்டாள்.

“ஓஹ்... அந்த பாக்கியம் எல்லாம் அடியேனுக்குதான் கிடைச்சிருக்கு போல?” அவன் சீண்ட, அவளுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.
 

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,106
438
113
Chennai
முன்ன பின்ன பதில் சொல்லி பழக்கமும் இல்லையே... ஒரு மாதிரி தடுமாறிப் போனாள்.

“சரி வா போலாம்...” சொன்னவன் எழுந்துகொள்ள, ஒரு விடுதலை உணர்வோடு அவனைப் பின்தொடர்ந்தாள்.

“சேட்டா... நாளைக்கு வரேன்...” அவரிடம் விடைபெற, ‘என்ன நாளைக்குமா?’ அவர் அவனை முறைப்போடு அனுப்பி வைத்தார்.

அவன் வண்டியை குளக்கரைக்கு செலுத்த, காரில் இருந்து இறங்கியவள், நிச்சயம் அவ்வளவு பெரிய குளத்தை எதிர்பார்த்திருக்கவில்லை. ஏதோ ஸ்விம்மிங் பூல் அளவுக்கு இருக்கும் எனப் பார்த்தால்... அதுவோ அத்தனை பெரிதாக இருந்தது.

இரண்டு கரையிலும் படித்துறைகள் இருக்க, அதில் ஆண்கள் ஒரு பக்கமும், பெண்கள் ஒரு பக்கமும் அமர்ந்து துவைத்துக் கொண்டும், குளித்துக் கொண்டும் இருந்தார்கள்.

“தண்ணிக்குள்ளே கால் நனைக்கலாமா?” அவன் கேட்க,

‘எப்படி?’ என்பதுபோல் அவனைப் பார்த்தாள்.

இந்த ரெண்டு பக்கமும் தான் ஆட்கள் குளிப்பாங்க. மற்ற இரண்டு பக்கமும் சும்மாத்தான் இருக்கும். அங்கே படி எல்லாம் கிடையாது. ஒரு சட்டர் இருக்கும், அது மேல உக்காந்து காலை உள்ளே வச்சுக்க வேண்டியதுதான்... வா...” அவளை அழைத்துச் சென்றவன், அந்தப்பக்கம் இறங்க சற்று மணல் சரிவாக இருக்க, அவளது கரத்தை கெட்டியாக பற்றிக் கொண்டான்.

“செருப்பை கழட்டி கையில் வச்சுக்கோ... இல்லன்னா மணல் சறுக்கி விட்டுடும்” அவன் சொல்ல, அவன் சொன்னதைச் செய்தாள்.

எல்லாமே அவளுக்கு புது அனுபவமாக இருக்க, எந்த நேரத்திலும் உணர்ச்சிவசப்பட்டு மயக்கம்போட்டுவிழக் கூடாது என்ற முடிவோடு இருந்தாள்.

அவளை அமர்த்தியவன், தானும் அவள் அருகில் அமர்ந்துகொண்டு, தன் டிஷர்ட் பாக்கெட்டில் இருந்து நைலான் கையிற்றை எடுத்தவன், அதன் ஒரு முனையில் சிறு தூண்டிலும், மறு முனையில் அருகே இருந்த நீள கம்பிலும் கட்டினான்.

“மீனுக்கு ஃபுட் வேணுமே... இல்லன்னா தூண்டிலை கொத்தாதே...” தனக்குத் தானே பேசியவன்,

“ஒரு ரெண்டு நிமிஷம் தனியா இருப்பியா?” அவன் கேட்க, அவள் கண்களில் கலவரத்தைப் பார்த்தவன்,

“ஓகே... ஓகே... கூல்...” சொன்னவன், கண்களைச் சுழற்ற, குளத்தில் குளிக்க வந்த சில சிறுவர்கள், அவர்கள் இருக்கும் பக்கம் வந்தார்கள்.

“ஐயோ... இங்கேயும் ஆள் இருக்குடா...” வந்த கும்பலில் ஒரு சிறுவன் ஏமாற்றமாக குரல் கொடுக்க, அவனது கவனம் அவர்கள் பக்கம் சென்றது.

“என்னங்கடா...?” அவன் கேட்க,

“அண்ணே... குளத்துல குளிக்க வந்தா, குளத்தை கலக்க போறோம்னு ரெண்டு பக்கமும் விட மாட்டேங்கறாங்க. சரின்னு இங்கே வந்தா, நீங்க இருக்கீங்க அதான்...” அவர்கள் பதில் சொல்ல, அவர்கள் முகங்களில் ஏமாற்றம் தெரிந்தது.

“அதுக்கென்ன... தாராளமா இங்கே குளிங்க... ஆனா அதுக்கு முன்ன... ஆளுக்கு ஒரு மண் புழு எனக்கு எடுத்துவந்து தரணும்” அவன் டீல் பேச, அவர்களது முகங்கள் ஒளிர்ந்தது.

“அவ்வளவுதான... இப்போ பாருங்க, நொடியில எடுத்து வர்றோம்...” சொன்னவர்கள் ஆளுக்கு ஒரு பக்கம் தெறித்து ஓட, அடுத்த ஐந்தே நிமிடங்களில் கைகளில் மண்புழுக்களை சேகரித்துக்கொண்டு ஓடி வந்தார்கள்.

“இப்போ என்ன...? நீச்சல் போட்டியா? பந்தயம் என்ன?” அங்கே அவன் அடிக்கடி வருபவன் என்பதால் அவர்களிடம் கேட்டான்.

“ஜெயிக்கிறவனுக்கு நாங்க எல்லாம் மாங்காவும், கொல்லாம்பழமும் (முந்திரி பழம்) கொடுக்கணும்...” அவர்கள் சொல்ல,

“பந்தையத்துக்கு நானும் வரலாமா?” அவனும் சற்று ஆர்வமானான்.

“நீந்த தெரியுமா?” ஒரு துடுக்குத்தனமான சிறுவன் கேட்க, பூமிகா சிரித்துவிட, அவனோ முறைத்தான்.

“லேய்... எனக்குதான் அந்த கொல்லாம்பழமும், மாங்காவும் கிடைக்கப்போகுது பார்...” அவன் சவால்விட, அவர்களிடம் ஒரு நக்கல் புன்னகை.

“போனமுறை எங்ககிட்ட தோத்தது ஞாபகம் இல்லையோ...” ஒரு சிறுவன் கேட்க, அவர்களுக்குள் அப்படி ஒரு சிரிப்பு.

“டேய்... அது வேற பந்தையம்... இதில் நான்தான் ஜெயிப்பேன்” அவன் சவால்விட, பூமிகாவுக்கு சுவாரசியம் பிறந்தது.

“பாப்போம்... பாப்போம்...” அவர்கள் சொல்ல,

“என்ன போட்டி அது...?” அவள் கேட்க, அவர்களிடம் இப்பொழுது ஒரு உள் பூசல்போல் பேச்சு நடந்தது.

“அதெல்லாம் லேடிஸ் தெரிஞ்சுக்க கூடாது... டேய்... நீங்க குளிக்க வாங்கடா” ஆகாஷ் அவர்களைக் கலைக்க, அவளுக்கோ இன்னும் ஒரு குறுகுறுப்பு.

“மானப்பிரச்சனை... ம்...ம்...” அவனை நக்கல் செய்த சிறுவர்கள், முக்கால்வாசிபேர் உடைகளைக் களைந்து நிர்வாணமாக குளத்துக்குள் குதிக்க, அவர்களையே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பூமிகா திகைத்தாள்.

அவள் கலவரமாக அவனைப் பார்க்க, “ஐ... ஆச... நான் உள்ள... கால் ஜட்டி தான் போட்டிருக்கேன்...” அவன் சொல்ல, அவன்மேல் கோபம் வருவதற்கு பதில், சிரிப்புதான் வந்தது.

“பூமி... உனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லையே...?” அவள் கொஞ்சம் சிரமப்படுவது அவனுக்குத் தெரியவே கேட்டான்.

‘இல்லை...’ என தலை அசைத்தவள், “இதெல்லாம் புதுசா இருக்கு” அவள் சொல்ல,

“கொஞ்சம் கண்ணை மூடிக்கோ... நான் சொன்ன பிறகு கண்ணைத் தொறக்கலாம்” அவன் சொல்ல, படக்கென கண்களை மூடிக் கொண்டாள்.

அதைப் பார்த்தவன், வாய்விட்டே சிரித்தாலும், அவன் கண்கள் அவளை அத்தனை இரக்கமாகப் பார்த்தது. அது அவளுக்கு தெரியாதவாறு மறைத்தவன், வேகமாக குளத்துக்குள் இறங்கினான்.

“இப்போ நீ கண்ணைத் தொறக்கலாம்...” அவன் சொல்ல, இமைகளைத் திறந்தவளுக்கு, நீருக்கு நடுவில் நின்ற அவன் மட்டுமே கண்களுக்குத் தெரிந்தான்.

“அக்கா... நீங்கதான் ஜட்ஜ் ஓகேயா?” சிறுவன் ஒருவன் கேட்க, ஆகாஷ் வேகமாக மறுத்தான்.

“இல்ல... இல்ல... அக்காவை நாம தொல்லை பண்ணக் கூடாது. யாராவது ஒருத்தன் மேலே போ...” அவன் சொல்ல,

“அதுக்குத்தான நம்ம மாக்கானை கூட்டி வந்திருக்கோம்... அவனுக்கு தத்தக்கா, பித்தக்கான்னு தான் நீச்சல் தெரியும்” அவர்கள் சொல்ல, அவனோ ஏற்கனவே பூமிகாவுக்கு அருகில்தான் இருந்தான்.

“உனக்கு நீச்சல் தெரியாதா?” அவள் கேட்க,

“கொறச்சு தெரியும்” அவன் மலையாளம் கலந்த தமிழில் சொல்ல, அவனது பேச்சே வித்தியாசமாக இருந்தது.

“சரி வந்து உக்காரு... நாம மீன் பிடிக்கலாம்” அவள் அழைக்க,

“இவங்க குளத்தை கலக்குனா மீன் பேடிச்சு (பயந்து) வராது. பொறவு பிடிங்க...” சொன்னவன், அவளைவிட்டு தள்ளிச் சென்று, அவர்கள் வரும் இடத்துக்கு அருகே சென்று நின்றுகொண்டான்.

அடுத்த அரைமணி நேரம்... பேச்சும், நீச்சல் போட்டியும், சிறு சண்டையும்... முக்குளித்து நீச்சல், மல்லாக்க நீச்சல் என அத்தனை சுவாரசியமாக செல்ல, ஆகாஷ் சொன்னதுபோல் அனைத்திலும் அவன்தான் வெற்றிபெற்றான்.

அதில் இருந்தே அவனுக்கு ‘முறையான நீச்சல் பயிற்சி உண்டோ?’ என அவளை நினைக்க வைக்க, அதை அவனிடம் கேட்ட பொழுது, சிறுவனாக இருந்தபொழுது இப்படி பல போட்டிகளில் விளையாடி இருக்கிறான் என்ற பதில் கிடைத்தது.

அடுத்த அரைமணி நேரம் முடிந்து, ஆகாஷ் கிளம்பி வெளியே வர, பூமிகா மீண்டுமாக இமைகளை மூடிக் கொள்ள, “சில திருட்டுத்தனம் எல்லாம் பண்ணலாம் தப்பில்லை...” உடை மாற்றிவிட்டு அவள் அருகே அமர்ந்தவன் சொல்ல, அப்பொழுதும் அவளால் இமை திறக்க முடியவில்லை.

“இப்போ நான் மயக்கம்போட்டா... கேட்கறவங்களுக்கு ரீசன் கூட சொல்ல முடியாது” சொன்னவள், ஆக்ஸிஜன் மாஸ்கை அணிந்துகொள்ள, அவனோ அப்படி ஒரு சிரிப்பு சிரித்தான்.

அவன் சிரிப்பு அவளை என்னவோ செய்ய, “நாம போலாம்...” அவள் முனகினாள்.

சிறுவர்களிடம் திரும்பியவன், “நாங்க கிளம்பறோம்... அந்த மாங்கா, கொல்லாம்பழம் எல்லாம் நீங்களே சாப்பிடுங்க” கத்திச் சொல்லிவிட்டு, அவளோடு நடந்தான்.

சில நிமிடங்கள் அமைதியில் கடக்க, “அதென்ன போட்டி?” அவள் திடுமென கேட்க, அவனோ புரியாமல் பார்த்தான்.

“எதைக் கேட்கற?” என்றான்.

“அதான்... அந்த பசங்க இதுக்கு முன்னாடி ஒரு போட்டி நடந்ததைப் பற்றி சொன்னாங்களே?” அவள் ஞாபகப்படுத்த அவளை குறுகுறுவென பார்த்து வைத்தான்.

‘இவர் என்ன இப்படி பார்க்கறார்?’ அவள் யோசிக்க,

“நான் சொல்லிடுவேன்... பிறகு என்னை திட்டக் கூடாது” அவன் முன்னெச்சரிக்கையாக கோரிக்கை வைக்க, அதுவே அவளது ஆர்வத்தை அதிகரித்தது.

“ம்...” அவள் முனக...

“புதுசா வெள்ளையடிச்ச சுவர் எங்கேயாச்சும் தெரிஞ்சா, உடனே அந்த சுவத்தை யார் ரொம்ப நேரம் நனைக்கறதுன்னு போட்டி வைப்பாங்களாம். அன்னைக்கு விதிமுறை சரியா தெரியாமல் ஜம்பமா நானும் வர்றேன்னு சொல்லிட்டேன்.

“போட்டி ஆரம்பிச்ச அடுத்த நிமிஷமே அவுட்டானது நான்தான். இந்த பயக்க எல்லாம் இதுக்குன்னே காலையில் இருந்து ஒண்ணு*** போகாமலே இருந்திருப்பாங்க போல, ஒரே அசிங்கமா போச்சு...” அவன் சொல்லி முடிக்கையில், அவளது சிரிப்பு வெடித்து கிளம்ப, எவ்வளவு கட்டுப்படுத்தியும் முடியாமல் போனது.

வாய்விட்டு அப்படி ஒரு சத்தத்தில் சிரித்தவள், மறு நொடியே மூச்சு விட முடியாமல் சிரமப்பட, பயந்து போனான். அதே நேரம், திடுமென மழைத்தூறல் வேறு துவங்க, அவள் மழையில் நனைந்துவிடவே கூடாது என காவேரி சொன்னது நினைவுக்கு வர,

“பூமி... பயப்படாத...” சொன்னவன், அவளை தூக்கிக்கொண்டு ஓடி காருக்கு வந்து சேர்ந்தவன், அவளை பின்னிருக்கையில் அமர வைத்து, தானும் அவசரமாக ஏறிக் கொண்டான்.

அவளுக்கு ஆக்ஸிஜன் மாஸ்க்கை அணிவித்தவன், அவள் பெரும் சிரமமாக மூச்சு வாங்க, சில பல நிமிடங்கள் அவளையே அசையாமல் பார்த்திருக்க, அந்த சில நிமிடங்களுக்குள் அவளது இதழ் நீலம் பூத்து, கொஞ்சம் கொஞ்சமாக இயல்புக்குத் திரும்புவதைப் பார்த்தவனுக்கு அவன் உயிர் அவனிடம் இருக்கவில்லை.

‘இது நடக்கும்தான்... ஓகே...’ என்னும் விதமாக அவள் கண்ணைக் காட்ட, அதெல்லாம் அவன் பார்வையில் விழுந்தாலும், கருத்தில் ஏற மறுத்தது.

அவ்வளவு தடுத்தும், அவன் கண்களில் பயம் தெரிந்துவிட, அவளது கண்கள் கலங்கிவிட்டது. கிட்டத்தட்ட ஒருமணி நேரம் கடந்த பிறகே அவள் கொஞ்சமாக இயல்பாக, வெளியிலோ மழை பிடித்துக் கொண்டது.

“பூமி... ஓகேயா? இப்போ வீட்டுக்குப் போய்டலாம்” அவன் சொல்ல, அவன் கரத்தை அழுத்தமாக பற்றிக் கொண்டாள்.

“என்ன...? ஏதாவது பண்ணுதா? ஹாஸ்பிடல் போகணுமா?” அவன் படபடக்க,

“என்...னை இப்...படி பாக்காதீங்களேன்...” அவள் அழுகையில் திணறி உரைக்க, அவனுக்கு அத்தனை பாவமாக இருந்தது.

“என்னை வெளியே அழைச்சுட்டு போனா, அவங்களால் என்ஜாய் பண்ண முடியாதுன்னு என்னை எங்கேயுமே கூட்டி போக மாட்டாங்க. இப்போ உங்களையும் நான் கஷ்டப்படுத்தறேன்... சாரி...” விருப்பத்துக்கும், இயலாமைக்கும் நடுவே அவள் போராட, அவனால் தாங்க முடியவில்லை.

“ஹேய்... அதெல்லாம் ஒரு கஷ்டமும் இல்லை... கொஞ்சம் பயந்துட்டேன், அவ்வளவுதான்... இனிமேல் பயப்படலை” சொன்னவன், அவள் முகத்தில் பூத்திருந்த வியர்வையை டவ்வலால் ஒற்றி எடுக்க, இருக்கையில் அப்படியே சாய்ந்துவிட்டாள்.

“நாம போலாம்...” அவன் கிளம்ப முயல,

“லவ் பண்றோம்ன்னா எப்படித் தெரியும்? அதாவது சிம்ப்டம்ஸ் என்ன?” அவள் கேட்க, அவள் அங்கே தாமதிக்க விரும்புவது அவனுக்குப் புரிந்தது.

“அதென்ன வியாதியா? சிம்ப்டம்ஸ் எல்லாம் தெரிய?” சொன்னவன் வாய்விட்டே சிரிக்க, சிணுங்கலாக அவனைப் பார்த்தாள்.

“எனக்குத் தெரியாம தானே கேட்கறேன்...” அவனிடம் சலுகையாக கேட்டாள்.

“அதான் ஒருத்தி கூடவே இருக்காளே... அவங்க என்ன சிம்ப்டம்ஸ் காட்டினாங்களாம்?” அவளிடம் திருப்பிக் கேட்டான்.

“நீங்க சொல்ற வரைக்கும் எனக்குத் தெரியவே செய்யாதே...” சொன்னவள், சோர்வாக அவனைப் பார்த்தாள்.

“அதேதான்... ரொம்ப அமுக்கமா வச்சுப்போம்... உள்ளுக்குள்ளேயே அவங்களை ரசிப்போம். அவங்க என்ன கிறுக்குத்தனம் பண்ணாலும் நமக்கு புடிக்கும்... அவங்க கூடவே இருக்கணும், அவங்களுக்கு நாம மட்டுமே புடிச்சவங்களா, ஸ்பெஷலா இருக்கணும்... இப்படியெல்லாம் தோணும்” அவன் சொல்லச் சொல்ல... அந்த மங்கும் விழிகளில் ஒரு ஒளி.

“அப்படின்னா... நான் உங்களை லவ் பண்றேன் போல...” அவள் கொஞ்சம் கூட தயங்காமல் சொல்ல, இப்பொழுது அவனுக்கு மூச்சுவிட அத்தனை சிரமமாக இருந்தது.

தொடரும்........
 

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,726
617
113
45
Ariyalur
சூப்பர் சூப்பர் சகி 🩵🩵🩵🩵🩵🩵🩵விஷ்வா, ஆகாஷ் ரெண்டு பேருக்கும் ஏதோ தொடர்பு இருக்குற மாதிரி இருக்கே 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔இருக்குமோ
 
  • Like
Reactions: Infaa

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,106
438
113
Chennai
சூப்பர் சூப்பர் சகி 🩵🩵🩵🩵🩵🩵🩵விஷ்வா, ஆகாஷ் ரெண்டு பேருக்கும் ஏதோ தொடர்பு இருக்குற மாதிரி இருக்கே 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔இருக்குமோ

நன்றி!

ஏன் அப்படி சொல்றீங்க?
 

Thani

Vaigai - Avid Readers (Novel Explorer)
Feb 2, 2023
88
40
18
Deutschland
எனககும் கூட விஷ்வா தான் ஆகாஷ் என்று தோணுது ஆத்தரே.
அவனின் காதலை பற்றி கூறும் போது கூட நிக்கியுடன் ஒத்துப்போகுதே.