பகுதி – 25.
அந்த நள்ளிரவில், சிவாவின் துணையோடு, பூமிகாவை ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு செல்கையில், பூமிகாவின் நினைவு தப்பி இருந்தது.
“டாக்டர், நீங்க தினமும் செக் பண்ணியும், பூமிக்கு எப்படி இப்படி ஆகும்? அவளுக்கு இந்த மாதிரி ஆகப் போறதை முதல்லேயே கணிக்க முடியலன்னா நீங்க எல்லாம் என்ன டாக்டர்?” அவரிடம் அத்தனையாக அவன் கோபம் கொள்ள, சிவாவுக்கு பெருத்த ஆச்சரியம்.
நேற்று வரைக்கும் ஆகாஷ் குரலை உயர்த்தி பேசி கூட அவன் பார்த்ததில்லை. அப்படி இருக்கையில், இவ்வளவு உச்சத்தில் கத்தினால் அவனும் ஆச்சரியப்பட மாட்டானா என்ன?
“சார், அவங்க ஹெல்த் மோசமாகுது, ஹாஸ்பிடல் போகலாம்னு நான் சொன்னேன்” அந்த மருத்துவர் பெரும் தயக்கமாக சொல்ல, அவனுக்கு இன்னும் கோபம் பொங்கியது.
“என்ன? யார்கிட்ட சொன்னீங்க? சிஸ்டர், நீங்க சொல்லுங்க... இவர் யார்கிட்டே சொன்னார்?” அங்கிருந்த செவிலியிடம் கேட்டான்.
அவளுக்கோ என்ன சொல்வது? எனத் தெரியாத தடுமாற்றம் ஓட, “அது வந்து...” தயங்கி இழுத்தாள்.
“சொல்லுங்க... எனக்கு இப்போ தெரிஞ்சாகணும்” அவன் விடுவதாக இல்லை.
“அவங்ககிட்டேயே...” மருத்துவருக்கு தான் செய்தது சரியில்லை என்ற எண்ணம் எழ, அவஸ்தையாக நெற்றியை தேய்த்துக் கொண்டார்.
“என்ன? டேய் சிவா, இந்த ஆள் என்னடா சொல்றார்?” தான் சரியாகத்தான் கேட்டோமா?’ என அவனே குழம்பிப் போனான்.
“ஆகாஷ், கொஞ்சம் பொறுமையா இரு... நாம கேட்போம்” நண்பனை சமாதானப்படுத்த முயன்றான்.
“அவளே உடம்புக்கு முடியாதவ... அவகிட்டே போய் சொன்னேன்னு சொல்றார். இவர் என்ன லூசா? அவளுக்கு ஏதாவது ஒண்ணுன்னா, இவரைத்தான் முதல்ல கேட்போம்ன்னு தெரிய வேண்டாம்?” அவனால் நம்பவே முடியாமல் கேட்டான்.
“டாக்டர், என்ன இது? அவளுக்கு சட்டுன்னு இப்படியெல்லாம் ஆயிடக் கூடாதுன்னு தானே, எங்க மாமா உங்களை கூடவே வச்சிருக்கார். இத்தனை வருஷமா கூடவே இருக்கீங்க... இப்படி பொறுப்பில்லாம நடந்திருக்கீங்களே” அவரது செய்கைக்குப் பின்னால் ஏதும் காரணம் இருக்குமோ என சிவா சற்று பொறுமையாகவே கேட்டான்.
“சிவா, இதுதான் நீ விசாரிக்கற லட்சணமா?” நண்பனின் செய்கையில் ஏக கடுப்பானான்.
“இத்தனை வருஷமா அவங்க கூடவே இருக்கறவர்டா, அப்படி எல்லாம் கேர்லெஸ்ஸா இருக்க மாட்டார்” நண்பனிடம் சொன்னவன், அவனிடம் திரும்பினான்.
“நான் சொல்றேன் சார்...” செவிலி அத்தனை நேரமாக பொறுமையாக இருந்தவள், வேகமாக வாயைத் திறந்தாள்.
‘என்ன?’ என்பதுபோல் அவர்கள் பார்க்க,
“பூமி மேடத்தால் முடியலை, அவங்களை ஹாஸ்பிட்டல்ல சேர சொல்லி நாங்க சொன்னோம். இதை உடனே பெரிய சார் கிட்டே சொல்லணும்ன்னு சொன்னப்போ, அதைச் செய்ய வேண்டாம்னு ரொம்ப கெஞ்சி கேட்டுகிட்டாங்க” அவள் கைகளைப் பிசைய, ஆண்கள் இருவரும் அவளையே பார்த்திருந்தார்கள்.
“அவளைக் கேட்டுதான் எல்லாம் செய்வீங்களா?” ஆகாஷ் எகிறினான்.
“அவங்க சந்தோஷத்தை கெடுக்க மனசு வரலை சார்...” இப்பொழுது அவள் கண்ணீர் விட்டே அழத் துவங்கி இருக்க, தகர்ந்து போன ஆகாஷ், பூமிகாவின் கரத்தைப் பிடித்தவாறு அப்படியே அமர்ந்துவிட்டான்.
அவள் சொல்ல வருவது இன்னதென அவனுக்குப் புரிந்தது. குழந்தையில் இருந்தே பூமிகாவை பார்ப்பவர்கள் அவர்கள், அப்படி இருக்கையில் பூமிகா தன் சந்தோஷத்துக்காக ஒன்றைக் கேட்கையில் மறுப்பார்களா என்ன? அது அவனுக்கும் தெளிவாக புரிந்திருக்க, பூமிகாவையே இமைக்காமல் பார்த்தான்.
“என்ன சொல்றீங்க?” சிவா அவளிடம் கேட்க,
“ஆமா சார்... ‘அவரோட இருக்கும்போது நான் சாகணும்... ஹாஸ்பிட்டல்ல, தனியா சாக வேண்டாம்னு’ அவங்க சொன்னப்போ, எங்களால் பதில் சொல்லவே முடியலை.
“அதுவும்... ‘எனக்கு அவரோட இருக்கும்போது சாகறதுக்கு கூட பயமா இல்லை. தனியா சாக பயமா இருக்கு’ன்னு சொல்லி அழுதாங்க. ‘அப்பாகிட்டே சொன்னா, நான் உங்களை எல்லாம் மன்னிக்கவே மாட்டேன்னு’ சொன்னப்போ, அவங்க சந்தோஷத்தை எப்படி கலைக்க?” அவள் கேட்க, சிவா அமைதியானான்.
“டாக்டர்... பூமியோட நிலைமை இப்போ என்ன?” சிவா கேட்க,
அவளைப் பரிசோதித்த ஆம்புலன்ஸ் மருத்துவர், “ஆக்ஸிஜன் லெவல் கொஞ்சம் கொஞ்சமா கம்மி ஆகிட்டே வருது... இவங்களை உடனே வெண்டிலேட்டர்ல மாத்தணும்...” அவளுக்கு பதிலாக, வெளியே ஒரு இதயம் துடித்தால் மட்டுமே அவள் பிழைப்பாள் எனச் சொல்லாமல் சொல்ல, ஆகாஷ் அப்படியே இறுகிப் போய் அமர்ந்திருந்தான்.
“நீங்க முன்னாடியே சொல்லி இருந்தால், இதை அவாய்ட் பண்ணி இருக்கலாமே” ஆகாஷ் வேதனையில் புலம்ப,
“ரெண்டு வாரத்துக்கு முன்னாடியே போயிருந்தாலும், வெண்டிலேட்டர் தான் ஒரே ஆப்ஷன்...” அவர் சொல்ல, ஆகாஷின் பார்வை அவளை விட்டு இம்மியும் அசையவில்லை.
“ரொம்ப கஷ்டப்பட்டிருந்தா தானே... எனக்கு அது நல்லாவே புரிஞ்சது. அவகிட்டே கேட்டப்போ, ‘இல்ல, நான் ஓகே’தான்னு சொல்லி என் வாயை அடைச்சா. நீங்க இருக்கீங்கன்னு ரொம்ப தைரியமா இருந்துட்டேன்... ஆனா அவ இப்படி...?” சொல்லிக் கொண்டிருந்தவனின் கண்ணீர் கடகடவென கன்னத்தில் இறங்க, அங்கே அப்படி ஒரு அமைதி.
அடுத்த பதினைந்தே நிமிடங்களில், பூமிகாவை ஸ்பெஷல் ஐசியூவில் சேர்க்க, வேகமாக வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டது.
கண்ணாடித் கதவுக்குப் பின்னால் நின்றவன், ஒயர்களுக்கு மத்தியில், சுருண்டு கிடந்த அவளை, வேதனை அப்பிய முகத்தோடு பார்த்துக் கொண்டே நின்றான். மனம் முழுக்க ரணம். அந்த வெள்ளை மனம் கொண்டவளின் மரணத்தை தன்னால் எதிர்கொள்ள முடியும் என்றே தோன்றவில்லை.
ஏற்கனவே அந்த மருத்துவமனையில் அவசரத் தேவை ஏதுவாக இருந்தாலும், தன் மகளுக்கு செய்யச் சொல்லி, நித்யானந்தம் எழுதி, ஒப்புதல் அளித்திருந்தார். எனவே சொந்தங்கள் வேண்டும், அவர்களது அனுமதி வேண்டும் என எந்த கேள்வியோ, தாமதமோ அவர்கள் செய்யவில்லை.
உள்ளே நடப்பவை அனைத்தையும், அவன் அங்கே நின்று கவனித்துக் கொண்டே இருக்க, “ஆகாஷ், இப்படி வந்து உக்காரு... எவ்வளவு நேரம்தான் நிப்ப? எல்லாம் அவங்க பார்த்துப்பாங்க...” சிவா நண்பனை அழைத்தான்.
“இல்லடா... என்னால் அங்கே உக்கார முடியாது... அவளுக்கு எதுவும் ஆயிடாது தானே?” எதிர்பார்ப்பும், ஏக்கமுமாக அவன் வினவ, சிவாவுக்கு வருத்தமாக இருந்தது.
“ஆகாஷ், அவளோட நிலைமை உன்னை விட யாருக்குத் தெரியும்?” அவன் கேட்க, அவன் முகத்தில் விரவிய அந்த வேதனையின் அளவை அவனால் வரையறுக்க முடியவில்லை.
நேரம் கடந்துகொண்டே இருக்க, மருத்துவர் அங்கே வரவே, வேகமாக அவர் முன்னால் சென்று நின்றான்.
“டாக்டர், அவளுக்கு எதுவும் இல்லையே...” அவன் படபடக்க, அவனது தோளைத் தட்டிவிட்டு விலகி நடந்தார்.
அவரது செய்கையே அவனுக்கு விஷயம் இன்னதென உணர்த்த, அங்கிருந்த இருக்கையில் தகர்ந்து போய் அமர்ந்தான்.
எதுவும் செய்ய இயலாத ஒரு கையறு நிலை... மருத்துவமே கையை விரிக்கையில், எங்கே சென்று நியாயம் கேட்க முடியும்? ஐசியூ வாயிலே கதியென அவன் கிடக்க, காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லையே.
கூடவே சில நிமிடங்களில், ஆகாஷ் விடாமல் வாந்தி எடுக்கத் துவங்க, சிவா அவனைத் தாங்கிக் கொண்டான். சிவாவின் முகத்தில் அப்பட்டமாக ஒரு பயம் தெரிய, “விடுடா பார்த்துக்கலாம்...” என ஆகாஷ் சொல்ல, இப்படிச் சொன்ன நண்பனை கொலைவெறியில் முறைத்தான்.
“என்ன விளையாடறியா? என்னால இப்படியே விட முடியாது” சொன்னவன் அவனிடம் பேச, ஆகாஷ் அசைந்து கொடுக்கும் வழியைக் காணோம். “நான் டாக்டரைப் பார்த்துட்டு வர்றேன்” சொன்னவன், அவரைத் தேடி ஓட, சிவா அவன் பின்னால் ஓடினான்.
அவரது அறைக்கதவை புயல் வேகத்தில் திறந்து உள்ளே நுழைந்தவன், “டாக்டர்... டாக்டர்... ஏதாவது செய்ங்க, அவளை என்கிட்டே பேச வைங்க... பிளீஸ்” அவரிடம் கெஞ்ச, அவரிடம் பலத்த அமைதியே.
“கொஞ்சம் நிதானமா இருங்க... இப்படி எமோஷனல் ஆகறதால எந்த பிரயோஜனமும் இல்லை. அவங்க இத்தனை வருஷம் இருந்ததே ஆச்சரியம் தான்” அவனுக்குப் புரிய வைக்க முயன்றார்.
“அவ பேசுவாளா மாட்டாளா?” அவள் கண்விழிப்பாளா? இல்லையென்றால் மீளா துயிலில் ஆழ்ந்து விடுவாளா? எனக் கேட்கும் தைரியம் அவனுக்கு இருக்கவில்லை.
“பேசலாம்... பேசாமலும் போகலாம்... ஆனா இனிமேல் அவங்களுக்கு இருக்கறது சில நாட்கள் தான்...” அவர் சொல்ல, விருட்டென இருக்கையைத் தள்ளிவிட்டு எழுந்தான்.
“என்ன? இதைச் சொல்லவா இவ்வளவு படிச்சீங்க?” அவரது மேஜைமேல் இருந்த பெயர் பலகையைத் தூக்கி, அவர் முகத்துக்கு நேராக காட்டி கத்தினான்.
“சாவைத் தடுக்கறதுக்கு மருந்து கொடுக்கறதுக்கு நான் இன்னும் படிக்கலை...” அவர் நிதானமாகவே சொல்ல, தன் கன்னத்தில் வழிந்த கண்ணீரை புறங்கையால் துடைத்து தள்ளினான்.
சோர்ந்த நடையில் வந்தவன், மீண்டுமாக சென்று வாந்தி எடுக்க, “ஆகாஷ், நீ ரெஸ்ட் எடுத்தே ஆகணும்...” சிவா சொல்ல, மறுப்பாக தலை அசைத்தவன், மீண்டுமாக அங்கிருந்த இருக்கையில் வந்து அமர்ந்தான்.
“கொஞ்ச நேரமாவது தூங்குடா...” சொல்லிப் பார்த்தவன், அப்படியே இருக்கையில் சாய்ந்து, இமைகளை மூடிக் கொண்டான். மற்றவர்களுக்கு தகவல் கொடுக்கும் வேலையை, அவர்களது ஆம்புலன்ஸ் மருத்துவரிடம் ஒப்படைத்திருக்க, அவர்கள் எல்லாம் வருகையில் பார்த்துக் கொள்ளலாம் என அமர்ந்தான்.
“எனக்கு பாய் சொல்லாமலே போய்டுவாளாடா?” ஆகாஷ் திடுமென கேட்க, சிவாவுக்கு கோபம்தான் வந்தது.
“நான் உன் பேச்சை கேட்டிருக்கவே கூடாதுடா...” அவன் கத்த, நண்பனை திரும்பிப் பார்த்தான்.
“என்னடா இப்படி சொல்லிட்ட? என்னோட நாட்களை எல்லாம் ரொம்ப அழகாக்கற விஷயத்தை செய்திருக்கடா...” அவன் சொல்ல, சிவாவின் கோபம் அதிகரித்தது.
“இப்போ நீ வாயை மூடலை... என்ன செய்வேன்னே எனக்குத் தெரியாது” அவன் கோபத்தில், வேகமாக தன்னை மீட்டான்.
விடிந்தும் விடியாத நேரத்தில், மொத்த குடும்பமும் அங்கே கிளம்பி வர, அவர்கள் கண்டதோ, தரையில் மண்டியிட்டு அமர்ந்து, தன் தலையைக் கரங்களால் பற்றிக் கொண்டு கதறிய ஆகாஷைத்தான்.
‘என்னவோ ஏதோ? எனப் பதறி, பூமிகா தங்களை விட்டு போய்விட்டாளோ?’ என அவர்கள் எல்லாம் பதறியடித்துக் கொண்டு ஓடி வர, சிவா அவன் அருகே வந்து அமர்ந்து அவன் தோளை அழுத்தினான்.
“என்ன ஆச்சு? என் பொண்ணுக்கு என்ன ஆச்சு?” நித்யானந்தம் பதற,
“அங்கிள்... அவளை வென்டிலேட்டர்ல வச்சிருக்காங்க... நீங்க போய் பாருங்க” அவரிடம் சொன்னவன், “டேய் ஆகாஷ் எந்திரி, நாம இப்போ போயாகணும்” சொன்னவன், அவனது கரத்தைப் பிடித்து எழுப்பினான்.
“இல்ல, நான் எங்கேயும் வர மாட்டேன்...” அவன் கத்தி தீர்க்க, ப்ரதிக் வேகமாக அவர்கள் அருகே வந்தான்.
“என்ன ஆச்சு சிவா? இவர் எதுக்கு இப்படி வயலெண்ட்டா பிஹேவ் பண்றார்?” புரியாத குழப்பத்தில் கேட்டான்.
“எதுவும் இல்லை... நீ போ...” சிவா சொல்ல, தேன்மொழி அவர்கள் அருகே வந்தாள்.
“எப்போ அவளுக்கு இப்படி ஆச்சு? எப்போ வந்தீங்க? ஏன் என்கிட்டே சொல்லலை?” வழக்கமாக அவள்தான் பூமிகாவை கண்கொத்திப் பாம்பாக எப்பொழுதும் கவனித்துக் கொண்டே இருப்பாள் என்பதால், இன்று இப்படி ஆனதை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.