துளி துளியாய் துரோகம் 11
வர்ஷா செல்போனை உடைத்த சில மணி நேரத்தில் சிந்து வர்ஷாவிற்காக புது செல்போன் வாங்கி அதில் பழைய போனில் உள்ள சிம் கார்ட் மற்றும் அனைவர் அலைபேசி எண்கள் வாட்ஸ்அப் என முடிந்தவரை அனைத்தையும் பதிவேற்றம் செய்திருந்தாள்.
வர்ஷாவிடம் அதை நீட்டவும் “தேங்க்ஸ் சிந்து” என்றாள். அதை ஆராய்ந்தபடி. வர்ஷாவிற்குத் தான் செய்த செயலில் சிறிதும் குற்ற உணர்வு இல்லை.
சிந்து தன் இருகரங்களால் வர்ஷாவின் கைகளை இறுகப் பற்றி “நீ எப்பவும் சந்தோஷமா இருக்கணும் வர்ஷா” என்று சொன்னதும்.
வர்ஷாவிற்கு தன் அன்னை நினைவு வந்துவிட்டது. ஏனனெில் அவர்தான் தன் மகள் நலனில் அதிக அக்கறை கொண்டவர்.
சிந்துவை அனைத்து தன் துக்கம் தீரும் வரையில் அழுதாள். பின்பு துஷ்யந்த் சொன்னதை விசும்பலுடன் சொன்னாள்.
“நீ கல்யாணம் செய்துக இந்த உலகத்துல அவனைத் தவிர வேறு யாருமே இல்லையா?” பொறுக்க இயலாமல் கேட்டுவிட்டாள்.
“கல்யாணம் வெறும் ஒரு நாள் விஷயம் இல்ல … இது வாழ்க்கை” தன் தோழிக்குப் புரிய வைக்க முயன்றாள் சிந்து.
“ஒரு உண்மையைச் சொல்லவா .. உன்னை அழ வைக்கும் அந்த துஷ்யந்தை எனக்குக் கொஞ்சம் கூட பிடிக்கலை” என மனதில் உள்ளதை பட்டெனக் கூறிவிட்டாள் சிந்து.
வர்ஷா “அந்த வெண்பாவை நான் தோர்க்கடிக்கணும்” எனக் கூற வந்தவள் அப்படியே வார்த்தைகளை மென்று முழங்கினாள். தன் தோழிகள் தன்னை மிகவும் நல்லவள் என்று நினைத்துக் கொண்டுள்ளனர். அதைக் காப்பாற்ற வேண்டும்.
“என்னால துஷ்யந்தை மறக்க முடியலை” எனப் பழையப் பல்லவியைப் பாடினாள்.
இந்த பதிலைக் கேட்டுச் சலித்துப் போன சிந்து “உன் விருப்பம்” என்றபடி தன் வேலைகளைப் பார்க்கச் சென்றுவிட்டாள்.
மறுநாள் காலை கூர்க் பயணம் செல்ல துஷ்யந்தை அழைத்துப் போக வர்ஷாவும் சிந்துவும் அவன் வீட்டிற்குச் சென்றனர். துஷ்யந்த் ஜீன் மற்றும் டீஷர்ட் அணிந்திருந்தான். கல்லூரி நாட்களில் எப்படி இளமையாகப் பெண்களைக் கவரும் தோற்றத்தில் இருந்தானோ இன்றும் அப்படியே இருந்தான்.
துஷ்யந்த் முன்தினம் தீட்டிய அவனும் வெண்பாவும் சேர்ந்தார் போல் இருந்த ஓவியத்தை இருபெண்களிடமும் காட்டினான்.
வர்ஷாவிற்கு அதைக் காண்கையில் ஆத்திரமாக வந்தது. இருப்பினும் தன் முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல் “அருமை துஷ்யந்த் ரொம்ப அழகா இருக்கு” என்றாள்.
சிந்து அளவான புன்னகையுடன் “நல்லா இருக்கு” என்றாள். கல்லூரியில் தன்னுடன் படித்த மற்ற மாணவர்களைப் போல துஷ்யந்தும் ஒருவன்.
சிந்து அந்த அளவில் அவனைத் தள்ளியே வைத்திருந்தாள். அதிலும் வர்ஷா காதலை ஏற்காமல் போனதிலிருந்து துஷ்யந்த் என்ற பெயரே அவளுக்கு எரிச்சல் ஊட்டியது.
துஷ்யந்தின் அன்னை தன் மகனின் மிடுக்கான தோற்றத்தைக் கண்டதும் இன்ப அதிர்ச்சிக்கு உள்ளானார். கண் திருஷ்டிப் படக் கூடாதெனத் திருஷ்டிக் கழித்தார். தாய் உள்ளம் ஆனந்தத்தில் பொங்கி வழிந்தது.
“வர்ஷா என் பையன் வாழ்க்கை இந்த ரூம்லயே முடிஞ்சிடும்னு கவலைப்பட்டேன். நீதான் அவனை மீட்டுக் கொண்டு வந்திருக்க .. உனக்கு என்ன கைமாறு செய்வேன்? உனக்கு என்ன வேண்டுமோ கேள் வர்ஷா” என வர்ஷாவிடம் நா தழுதழுக்க நெகிழ்ந்து போனபடிக் கூறினார்.
“என்ன ஆன்ட்டி துஷ்யந்தை பார்த்துக்க வேண்டியது என் கடமை .. இதற்குப் போய் பெரிய பெரிய வார்த்தை சொல்லிட்டு” என வர்ஷா பொறுப்பாகப் பதிலளித்தாள்.
வர்ஷாவிற்கு முன்தினம் துஷ்யந்த் மேல் கோபம் இருந்தது. மனதளவில் துவண்டு தான்ப் போனாள். ஆனால் துஷ்யந்தை தன் பக்கம் இழுக்கத் தானே இத்தனை போராட்டம். பல இடர்கள் வரத்தான் செய்யும். அதையும் மீறி துஷ்யந்தை திருமணம் முடிக்க வேண்டும். வெண்பா மேல் லோகத்திலிருந்ததாவது இதைப் பார்த்து துயரப் பட வேண்டும்.
துஷ்யந்தின் தற்போதைய நிலை தூணிலும் வெண்பா துரும்பிலும் வெண்பா. அதை அடியோடு மாற்ற வேண்டும். மாற்றிக் காட்டுவேன் என தனக்குள் சூளுரைத்தாள்.
துஷ்யந்த் வர்ஷா மற்றும் சிந்து பிரைவேட் ஜெட் மூலம் முதலில் கூர்க் பயணம் தொடங்கினர். உலகமே தனக்குக் கீழ்தான் என்று தோன்ற வைக்கும் படி மலைகள் கூட பொம்மை போல சிறியதாகக் காட்சியளித்தது.
கூர்க்கின் காபி தேயிலைத் தோட்டங்கள் மேகத்தின் இடை இடையே கண்ணாமூச்சி ஆடியது. மூவருக்கும் புது அனுபவமாக இருந்தது. பலமுறை விமானத்தில் பயணம் சென்றுள்ளனர். ஆனால் மற்ற இடங்கள் காட்டிலும் கூர்க் போன்ற இயற்கை எழில் மிக்க இடத்தை காண்பது மிகவும் அபூர்வம் என்பதால் இத்தனை பிரமிப்பு. மூவரும் பேசவில்லை. கண்ணை இமைக்காமல் அழகை ரசித்தனர்.
வாழ்க்கையில் சிலவற்றை அனுபவிக்கும் போதுதான் அதன் அழகை ஆராதிக்கத் தோன்றும். துஷ்யந்த் தான் கண்ட அற்புத காட்சிகளைச் சித்திரங்களாக வரைய அவற்றை மனதில் நிறுத்தினான்.
ரிசார்ட்டில் உள்ள ஹெலிபேட்டில் தரையிறங்கினர். இன்னும் சற்று நேரம் பயணம் நீடிக்கக் கூடாதா என்றே தோன்றியது.
மதிய உணவை ரிசாட்டில் உள்ள உணவகத்தில் முடித்தனர்.
அதன் பிறகு அங்கிருந்து நாராயணன் வீடு இரண்டு மணி நேரக் கார் பயணம்.
கார் பயணத்தில் துஷ்யந்த் அனைத்தையும் வியந்தபடி பார்த்தான். அவன் பார்வையில் தீர்க்கம் இருந்தது. அவனின் செயல் பல வருடங்கள் சிறை வாசத்தில் இருந்தவன் உலகை ரசிப்பது போல இருந்தது .
இத்தனை நாட்களாக வெண்பா இல்லாத உலகம் தனக்குத் தேவையில்லை என்றிருந்தான். ஆனால் எல்லா இடத்திலும் வெண்பா வியாபித்திருக்கிறாள் என வர்ஷா புரிய வைத்திருப்பதாகவே அவன் நம்பினான்.
அவன் முகத்தில் மகிழ்ச்சியும் துக்கமும் மாறி மாறி வந்து போயின. அருகில் அமர்ந்திருந்த வர்ஷா அவனை அணு அணுவாக தன் பார்வைக் கொண்டு அவன் உணர்வுகளைக் கூர் ஆய்வு செய்தபடி இருந்தாள்.
துஷ்யந்த் எப்பொழுதேனும் வர்ஷாவிடம் ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசினான். அவள் பக்கம் அதிகமாக திரும்பக் கூட இல்லை.
வர்ஷா அவனிடம் வலுக்கட்டாயமாகப் பேசினாள் சிரித்தாள். சிந்துவிற்கு வர்ஷாவின் எண்ணங்கள் புரியாமல் இல்லை.
வர்ஷா தன் புது செல்போனில் பாட்டுக் கேட்கத் தொடங்கினாள். அவள் விரல்கள் மென்மையாக தாளம் போட “என்ன பாட்டு?” துஷ்யந்த் கேட்டான்.
காதில் அணிந்திருந்த ப்ளூடூத் இயர்போனின் ஒரு பாகத்தை அணியுமாறு சைகை செய்தபடி வர்ஷா கொடுத்தாள். அவனும் காதில் பொருத்திக் கொண்டான்.
வர்ஷா பாட்டை மீண்டும் முதலிலிருந்து ஒலிக்க வைத்தாள்.
நினைத்து நினைத்து பார்த்தால்…
நெருங்கி அருகில் வருவேன்…
உன்னால் தானே நானே வாழ்கிறேன்… ஹோ ஓ ஓ…
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்…
நெருங்கி அருகில் வருவேன்…
உன்னால் தானே நானே வாழ்கிறேன்… ஹோ ஓ ஓ…
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்…
எடுத்து படித்து முடிக்கும் முன்னே…
எரியும் கடிதம் உனக்கு கண்ணே…
உன்னால் தானே நானே வாழ்கிறேன்… ஹோ ஓ ஓ…
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்…
எரியும் கடிதம் உனக்கு கண்ணே…
உன்னால் தானே நானே வாழ்கிறேன்… ஹோ ஓ ஓ…
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்…
அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்…
நமது கதையை காலமும் சொல்லும்…
உதிர்ந்து போன மலரின் வாசமா… ஆஆ… ஆ…
நமது கதையை காலமும் சொல்லும்…
உதிர்ந்து போன மலரின் வாசமா… ஆஆ… ஆ…
தூது பேசும் கொலுசின் ஒளியை…
அறைகள் முழுதும் ஆண்டுகள் சொல்லும்…
உடைந்து போன வளையலின் வண்ணமா… ஆஆ… ஆ… ஆ…
அறைகள் முழுதும் ஆண்டுகள் சொல்லும்…
உடைந்து போன வளையலின் வண்ணமா… ஆஆ… ஆ… ஆ…
உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்…
விரல்கள் உந்தன் கையில்…
தோளில் சாய்ந்து கதைகள் பேச…
நமது விதியில் இல்லை…
முதல் கனவு போதுமே காதலா…
கண்கள் திறந்திடு…
விரல்கள் உந்தன் கையில்…
தோளில் சாய்ந்து கதைகள் பேச…
நமது விதியில் இல்லை…
முதல் கனவு போதுமே காதலா…
கண்கள் திறந்திடு…
“தோளில் சாய்ந்து கதைகள் பேச…நமது விதியில் இல்லை…” இந்த வரிகள் கேட்டதும் துஷ்யந்த் கண்கள் கலங்கிவிட்டன.
வெண்பாவுடன் சேர்ந்து கண்ட கனவுகள் தான் எத்தனை எத்தனை அனைத்தும் கனவாகவே போய்விட்டன. மனச்சுமை அதிகமானது.
வர்ஷா வேண்டுமென்றே தான் இந்த பாட்டை கேட்க வைத்தாள். துஷ்யந்த் அழுது மனதில் இருக்கும் வெண்பாவை துடைத்துத் துர எரிந்துவிட வேண்டும் என்பதற்காக இப்பாடல்களை தோவுச் செய்தாள்.
ஆனால் துஷ்யந்த் தன் உணர்வுகளை மிகவும் கட்டுப்படுத்திக் கொண்டான்.
அடுத்தடுத்த பாடல்களின் சில வரிகளும் மனதை ரணமாக்கியது.
‘ஓ மனமே ஓ மனமே
உள்ளிருந்து அழுவது ஏன்?
ஓ மனமே ஓ மனமே
சில்லுசில்லாய் உடைந்தது ஏன்?
மழையைத்தானே யாசித்தோம்
கண்ணீர்த்துளிகளை தந்தது யார்
பூக்கள் தானே யாசித்தோம்
கூழாங்கற்களை எறிந்தது யார்?’
உள்ளிருந்து அழுவது ஏன்?
ஓ மனமே ஓ மனமே
சில்லுசில்லாய் உடைந்தது ஏன்?
மழையைத்தானே யாசித்தோம்
கண்ணீர்த்துளிகளை தந்தது யார்
பூக்கள் தானே யாசித்தோம்
கூழாங்கற்களை எறிந்தது யார்?’
உற்சாகத்தில் மனம் துள்ளிக் குதிக்கையில் பாடலில் மட்டுமே மனம் லயிக்கும்.
அதுவே மனம் சோர்ந்து போகையில் பாடல் வரிகளை உன்னிப்பாகக் கவனிப்பார்கள். ஏதோ பாடல் ஆசிரியர் நமக்காகவே எழுதியதைப் போலத் தோன்றும்.
துஷ்யந்த் அதே மனநிலையில் தான் இருந்தான். பாடல் வரிகளில் வெண்பாவை தேடித் தன்னையே தொலைத்தான்.
வர்ஷாவின் பக்கம் திரும்பவே இல்லை. எதுவும் பேசவில்லை. இறுதியாகப் பயணம் முடிவுக்கு வந்தது. நாராயணன் வீட்டின் முன் கார் நின்றது.
பைரவி நாராயணன் வீட்டிற்குள் செல்லாமல் அருகே இருந்த பூங்காவில் காத்திருந்தாள். சிந்துவிடம் போனில் தகவல் அளித்திருந்தாள்.
கார் நின்றதும் பைரவி பார்த்துவிட்டு அவசரமாக வந்தாள். வர்ஷா துஷ்யந்த் மற்றும் சிந்து மூவரும் அவளைக் கூர்மையாக ஓரிரு நொடிகள் பார்த்தனர்.
பைரவிக்கு “ஏன் இப்படி பாக்குறாங்க? அழகு நிலைய பெண் எதுனா சேட்டை செய்துடுச்சா?” என கார் கண்ணாடியில் தன்னை மீண்டும் பார்த்துக் கொண்டாள்.
“இல்லையே எல்லா நல்லாதானே இருக்கு? ஒருவேளை மனசில் இருக்கிற விகாஸ் முகத்துல தெரியரானா?” என தன் பதட்டத்தை அடக்கிக் கொண்டாள்.
“ஹாய் பைரவி” என வர்ஷா அருகில் வந்து அவளை அணைத்தாள். “என்ன ஆளே மாறிட்ட?” என்றவுடன்
வர்ஷாவிடம் தான் அழகு நிலையம் சென்று வந்ததைக் கூறினாள். என்றுமே சிந்து மற்றும் பைரவி தங்களுக்காக அதிகம் எதுவும் செய்து கொள்ள மாட்டார்கள். அப்படி இருக்க இவளுக்கு என்ன ஆனது எனச் சிந்து சிந்தக்கலானாள்.
துஷ்யந்த் கூட இரண்டு நொடிகள் உற்றுப் பார்த்தான். “அன்று வீட்டுக்கு வந்த பொன்னா?” எனச்
சிந்து ஆராய்ச்சிப் பார்வை பார்த்து வைத்தாள். “பாவிப் புள்ள கண்ணாலேயே போஸ்ட் மாட்டம் செய்றாளே” என நினைத்த பைரவி
இதற்கு மேல் யாரையும் சிந்திக்க விடக் கூடாதென “நாராயணன் சார் வீட்ல இருக்கார்” என அவர்களைத் திசைதிருப்பினாள்.
அதற்குள் நாராயணன் வெளியே வந்தார் “வா வர்ஷா .. அப்பா எப்படி இருக்கிறார்?” என வரவேற்று உபசரித்தார்.
மற்ற மூவரையும் அவ்வாறே உபசரித்தார்.
“நீங்க எப்படி இருக்கீங்க அங்கிள்?” என வர்ஷாவும் மரியாதை நிமித்தமாகப் பேசினாள்.
அடுத்த பத்து நிமிடங்கள் சம்பிரதாய பேச்சு வார்த்தைகள் நடந்தன மற்றும் அறிமுகப் படலமும் நடந்தேறியது.
பிறகு நாராயணன் ”உங்களுக்கு மாடியில் ரூம் தயாரா இருக்கு? நீங்க ரெபிரஷ் ஆகிட்டு வாங்கச் சாப்பிடலாம்” என்றார்.
அனைவரும் மாடியில் தங்களுக்கு ஒதுக்கியிருக்கும் அறைகளுக்கு வந்தனர்.
”வர்ஷா நான் ரிசார்ட்ல ஸ்டே செய்துக்கிறேன்” என துஷ்யந்த் சொல்ல
“ஏன் எதற்கு?” எனக் குழப்பமாக வர்ஷா வினவ
“நான் முன்னமே ரிசர்வ் செய்துட்டேன். இவங்க உன் அப்பா பிரெண்ட் இங்க நான் இருக்கிறது கம்பர்டபிளா இல்ல. வந்த உடனே சொன்னா மரியாதையா இருக்காது அதான் அப்ப சொல்லலை ” என தன் நிலையைத் தெரிவித்தான்.
வர்ஷா சிந்திக்கும் முன்னே அவன் கிளம்பப் படிகள் இறங்கிவிட்டான்.
“பைரவி துஷ்யந்தை பார்த்துக்க ஆள் ஏற்பாடு செய்தல .. அவனை இப்பவே வரச் சொல்லு” வர்ஷா கட்டளையிட
பைரவி முழித்தாள்.
வர்ஷா கேள்வியோடு பார்க்க
“இல்லை நாளைக்கு காலைல தான்”
“எத்தனை பணம் வேணா தரேன் .. அவன் இந்த நிமிஷம் இங்க வரனும்” எனக் கட்டளையிட்டாள் வர்ஷா.
துஷ்யந்த் உடன் செல்ல வர்ஷா முனைய “வர்ஷா நான் சின்ன பையன் கிடையாது. எனக்கு பிரைவசி வேணும் ப்ளீஸ்” என துஷ்யந்த் கூறினான்.
மேலும் “உனக்கு என் ரிசார்ட் அண்ட் ரூம் டீடிலைஸ் மெசேஜ் பண்றேன்” எனச் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டான்.
வர்ஷா துஷ்யந்துடன் பேசிக் கொண்டிருக்கையில் ..
பைரவி விகாசிடம் பேசினாள் ஆனால் “என்னால இப்ப வர முடியாது” விகாஸ் பதட்டமாகப் பதிலளித்தான்.
“அது பேஷண்ட் வந்துட்டாங்க விகாஸ் .. பணம் அதிகமானாலும் பரவாயில்லை” எனப் பைரவி கூற
“பணப் பிரச்சனை இல்ல .. இப்ப நான் க்ளீனிக்ல இருக்கேன் … பேஷண்ட் நிறையப் பேர் இருக்காங்க .. பாதில வர முடியாது. டிரை டு அண்டர்ஸ்டாண்ட். முதல்லயே சொல்லி இருந்தால் அரேஞ்ச் செய்திருக்கலாம்” எனத் தன்னிலை புரிய வைத்துக் கொண்டிருந்தான்.
துஷ்யந்த் இப்படிச் செய்வான் என வர்ஷா எதிர்பார்க்கவில்லை. அவனை ஓரேடியாக அடைத்து வைக்கவும் முடியாது. நாளை பிரச்சனை என்று வந்தால் என்ன செய்வது என்று சிந்தித்தபடி அவன் செல்வதயே பார்த்தாள் பின்பு தன் கார் டிரைவரை துஷ்யந்துக்கு துணையாக அனுப்பினாள். துஷ்யந்த் இஷ்டமில்லாமல் ஏற்றான்.
வர்ஷா “எப்ப வருவாங்க பைரவி?” எனக் கேட்க
“அது இப்ப முடியாதாம்” என விகாஸ் சொன்னதைக் கூற
“ச்சே உன்னால ஒரு வேலை சரியா செய்ய முடியலை .. பியூட்டி பார்லர் மட்டும் போக தெரியுது?” என விடுவிடுவென பேசியபடி அறைக்குள் சென்று வேறு ஏதேனும் செய்ய முடியுமா? எனச் சிந்தித்தபடி குழப்பத்தில் ஆழ்ந்தாள்.
ஆனால் வர்ஷா பேசிய வார்த்தை சிந்து பைரவியைப் பெரிதும் காயப்படுத்தியது. இத்தனை வருடங்களாக அவளுக்காக எத்தனை தியாகங்கள் செய்தும் ஒரே வார்த்தையில் இப்படித் தூக்கி எரிந்துவிடுவாள் என நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.
பைரவியால் இதைச் சற்றும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கண்ணீரை உள்ளிழுத்து கோபத்தை அடக்கி சிந்துவிடம் “ நான் இன்னும் லாட்ஜ் வெக்கேட் பண்ணலை .. நான் அங்கேயே போறேன். அதுக்கு பணம் நானே கட்டிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு வர்ஷாவிடம் சொல்லிக் கொள்ளாமல் கிளம்பிவிட்டாள்.
பைரவி மற்றும் வர்ஷா இடையே விரிசல் விழுந்துவிட்டது.
சிந்து தடுக்கவில்லை. பைரவி மனம் எந்தளவு காயப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொண்டாள். வர்ஷா மேல் சிந்துவுக்கும் கோபம் இல்லாமல் இல்லை. ஆனால் சிந்து சட்டெனச் செயல் படமாட்டாள். ஆர அமர சிந்திப்பது அவளது வழக்கம்.
“வர்ஷா” எனச் சிந்து அழைக்க
“என்ன?” எனச் சீற்றமாகக் கேள்வி வந்தது. தன்னிடம் ஏன் இத்தனை கோபம் எனச் சிந்துவுக்கு புரியவில்லை.
இருப்பினும் “நான் துஷ்யந்த் ஸ்டே செய்திருக்கிற ரிசார்ட்க்கு போறேன். எதாவது பிரச்சைனைனா நான் பார்த்துக்கிறேன்” என்றாள் சிந்து.
“சரி சிந்து அப்படியே செய்” நொடியில் வர்ஷா முகம் மாறியது.
“சரி பை” எனத் திரும்பியவளிடம்
“பைரவி எங்க? வர்ஷா கேட்க
அவளோட ஹோட்டலுக்கு போயிட்டா என்றவள் அதற்குமேல் எதுவும் பேசாமல் கிளம்பிவிட்டாள்.
தான் சொல்லிய வார்த்தையின் தாக்கம் என வர்ஷாவிற்குப் புரிந்தது. இருந்தும் அவள் தனக்குக் கீழே பணி புரிபவள் தானே என்று அதை பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை.
சுந்தரி வர்ஷாவிற்காக உருவாக்கிய அரணில் துவாரம் ஏற்பட்டுவிட்டது. அது இன்னும் பெரிதாவதும் அப்படியே இருப்பதும் வர்ஷாவின் கையில் மட்டுமே உள்ளது என்பதை இன்னும் வர்ஷா புரிந்து கொள்ளவில்லை.
நாராயணன் இரவு விருந்துக்கு அழைத்தார். யாரும் இல்லாமல் வர்ஷா மட்டுமே உண்டாள். நாராயணன் மற்றவரைக் கேட்க “வேலை உள்ளது” எனச் சமாளித்தாள்.
இரவில் உறக்கம் வராமல் தவித்தாள் வர்ஷா. தாய் தந்தை தோழிகள் காதலன் என இத்தனை பேர் சுற்றி இருந்தும் இன்று ஏனோ தான் அனாதையாகிவிட்ட உணர்வு மனதை வதைத்தது.
பைரவி கண்ணீருடன் கட்டிலில் சாய்ந்து படுத்திருந்தாள். வர்ஷா பலமுறை கடிந்துள்ளாள். அது வேலை விஷயமாக இருக்கும். தான் சரியாக வேலை செய்யவில்லை என்றால் கடிந்து கொள்வது பிரச்சனை இல்லை.
ஆனால் தான் பியூட்டி பார்லர் செல்வதற்கும் இதற்கும் என்ன தொடர்பு?
வர்ஷா மேல் ஆத்திரமாக வந்தது. வேலையை ராஜினாமா செய்வது என்னும் முடிவை எடுத்தாள். இம்முறை சிந்துவிடம் இதைப் பற்றிப் பேசக் கூடாது. அவள் உடனே சமாதானம் செய்ய முயல்வாள்.
முன்பு தான் சிறு பெண் இப்போது எனக்கு என்னைப் பார்த்துக் கொள்ளத் தெரியும். தன் முடிவுக்கு பின்தான் நிம்மதியாக உறக்கம் வந்தது.
ஆனால் சிந்து பைரவி இப்படிச் செய்வாள் என எதிர்பார்த்தாள். பைரவி செயலில் தலையிட வேண்டாம் என எண்ணினாள். அவளாவது சிறையிலிருந்து விடுதலையாகி மகிழ்ச்சியாக இருக்கட்டும் என்றே தோன்றியது.
துளிகள் தெறிக்கும் …