• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

துளி துளியாய் துரோகம் 12

kkp5

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
125
99
28
Thanavur
துளி துளியாய் துரோகம் 12

வர்ஷா காலையில் நிதானமாக எழுந்தாள். கூர்கின் தட்பவெப்பநிலை இதமாக இருந்தது. துஷ்யந்த் இருக்கும் ரிசார்டிற்குச் செல்ல வேண்டும் என்று துடித்த மனதை அடக்கி மற்ற வேலைகளில் கவனம் செலுத்தினாள்.

எத்தனை தான் பார்த்துப் பார்த்துச் செய்தாலும் துஷ்யந்த் அவன் போக்கில் தான் நடந்து கொள்கிறான் என அவன் மீது வருத்தம் இருந்தது.

ஆனால் அவள் மனசாட்சி “ அடியே .. துஷ்யந்த் வெண்பாவை காதல் தெரிந்தும் அவன் காதலியைக் கொலை செய்துட்டு இப்ப அவனுக்கு நல்லது செய்யும் தியாகி மாதிரி நடிக்காத … இந்நேரத்துக்கு உண்மை வெளியில் வந்தால் நீயும் உன் அம்மாவும் சிறையில் களி திங்கணும்” எனக் குற்றம் சாட்டியது.

பழைய குப்பைகளைக் கிளறியதில் மனம் சோர்வடைந்தது. நாராயணனின் வேலையாள் சூடான தேநீர் கொடுத்தார். அதை அருந்திய பின்னர் இதமான வெந்நீரில் குளித்தாள் மனதிற்கும் உடலுக்கும் புத்துணர்ச்சியாக இருந்தது.

மோகனின் நெருங்கிய நண்பர் தான் நாராயணன். அதனால் தான் வர்ஷா தன் பங்களாவில் தங்க வேண்டும் என்று முதலில் இருந்தே கேட்டுக் கொண்டு இருந்தார்.

அதுவும் அவர் இந்தியாவை விட்டு தன் மனைவியுடன் வெளிநாட்டில் வசிக்க போவதால் அவரின் ஆசையைத் தட்ட முடியவில்லை. இனிமே நாம பார்க்கப் போகிறோமோ இல்லையோ? என வேதாந்தம் பேசியவர் வார்த்தை கட்டிப் போட்டது.

வர்ஷா முதல் இரண்டு நாட்கள் அங்கிருந்துவிட்டு பின் ஊர் சுற்ற வேண்டும் என்று போய்விடலாம் என எண்ணியிருந்தாள்.

நாராயணன் அன்பு கட்டளையிடாமல் இருந்திருந்தால் அனைவரும் ஒன்றாக ரிசாட்டில் தங்கியிருக்கலாம் என உள்ளத்தில் ஓயாத எண்ண அலைகள் அலைக்கழித்தன.

காலை பதினோர் மணியளவில் காபி எஸ்டேட்டை பார்க்க நாராயணன் உடன் செல்ல வேண்டும். சிந்து மற்றும் பைரவி எப்போதும் போல உடன் இருத்தல் வேண்டும். பைரவியிடம் கடுமையாகப் பேசியதை ஒரு பொருட்டாகவே கருதாமல் மறந்து போனாள் வர்ஷா.

சிந்துவிற்கு போன் செய்தாள் …

சிந்து துஷ்யந்த் இருக்கும் ரிசாட்டில் ஒரு தனியறை எடுத்துத் தங்கியிருப்பதையும். இரவு துஷ்யந்தை ஒருமுறை சந்தித்துத் தான் இங்கு வர்ஷா அனுப்பி வந்துள்ளதையும். எதாவது உதவி வேண்டுமெனில் தன்னை அணுகலாம் என சிக்கனமாகப் பேசிவிட்டு வந்ததைக் கூறினாள்.

துஷ்யந்த் ஒரு தலையசைப்பை மட்டுமே அவளுக்கான பதிலாகினான் என்பதையும் சேர்த்துக் கூறினாள் வர்ஷாவிடம்.

“துஷ்யந்தை பார்த்துக்கும் மனுஷன் இன்றைக்காவது வருவாரா?” சற்றே கடுப்புடன்தான் கேட்டாள் வர்ஷா.

சிந்து “இன்னும் பத்து நிமிஷத்தில் இங்க வரேன்னு சொல்லி இருக்காங்க. நீ இருக்கும் இடத்துக்கு வரச் சொல்லவா? ”.

“வேண்டாம் அவனை நீயே பார்த்துப் பேசு சிந்து .. அவன் வந்ததும் நீயும் பைரவியும் இங்க வந்திடுங்க. எஸ்டேட் பார்க்க போகணும்”

“ம்ம சரி வர்ஷா” என போனை கட் செய்தாள் சிந்து

துஷ்யந்த் இரவு குழப்பமாக இருந்தான். நண்பர்களுடன் ஒரு சுற்றுலா என்னும் வகையில்தான் இதை அவன் எண்ணியிருந்தான்.

ஆனால் ஏன் வர்ஷா தனக்காக இத்தனை செய்கிறாள்? எதற்கு இத்தனை அக்கறை? மனம் குடைந்து கொண்டே இருந்தது. அவள் காதல் என்று சொல்லாமல் இருக்க வேண்டும் கடவுளே என அச்சப்பட்டான்.

வெகு நாட்களுக்குப் பின்னர் பயணம் செய்ததால் களைப்பாக இருந்ததால் உறங்கிவிட்டான்.

மறுநாள் காலை துஷ்யந்தின் ஆழ்ந்த உறக்கத்தை அவனின் செல்போனிலிருந்து இனிமையான பாட்டு கலைத்தது. கண்ணை திறந்தவனுக்கு ஒரு நொடி தான் எங்கு இருக்கிறோம் என்றே புரியவில்லை. பின்புதான் நேற்றைய நிகழ்வுகள் நினைவிற்கு வந்தது.

செல்போனைப் பார்க்க அதில் சிந்து என்ற பெயர் மிளிர்ந்தது. செல்போனை உயிர்ப்பித்து “ஹலோ” என்றான்.

போன் சத்தம் கேட்டுத்தான் அவன் உறக்கத்திலிருந்து விழித்துள்ளான் என்பதை அவனின் கரகரப்பான குரலே பறைசாற்றியது.

“குட் மார்னிங் நான் சிந்து பேசறேன்” என்றாள்.

“குட் மார்னிங் .. சொல்லுங்க சிந்து” என்றபடி எழுந்து அமர்ந்தான். சிரமத்துடன் கொட்டாவியை அடக்கினான்.

“பத்து நிமிஷத்தில் உங்க ரூம்க்கு நாங்க வரலாமா?” கேட்டாள்.

தான் வெகு நேரம் உறங்கிவிட்டதை உணர்ந்தவனாக “ஓ யெஸ் வாங்க” என்றான்.

“ஓகே சீயு இன் 10 மினிட்ஸ்” என போனை அணைத்தாள்.

துஷ்யந்த் அவசரமாக எழுந்து குளியலறைக்குள் புகுந்தான். வெளி வந்தவன் நேற்றைய இரவு ஆங்காங்கே போட்டு வைத்த துணிகளைக் கிடைத்த இடத்தில் மறைத்தான்.

டிங் டான் என்ற அழைப்பு மணி கேட்கவும் கதவை திறந்தான்.

“உள்ள வாங்க” எனச் சிந்து, பைரவி மற்றும் விகாசை அழைத்தான்.

அனைவரும் அமர்ந்ததும்

“இவர் விகாஸ் … இவர் துஷ்யந்த்” என இருவருக்கும் ஒருவரை ஒருவர் சிந்து அறிமுகப்படுத்தினாள்.

சிறு புன்னகையுடன் “ஹாய்” என இருவரும் கைக் குலுக்கிக் கொண்டனர்.

துஷ்யந்திடம் “விகாஸ் உங்களை பார்த்துக்க இருப்பார் .. உங்களுக்கு என்ன ஹெல்ப் வேணாலும் கேட்கலாம்” என்றாள்

துஷ்யந்துக்கு சரேலென்று கோபம் வந்தது. முடிந்தவரை மறைத்து “லுக் சிந்து நான் பெட்ரிடனா (bedridden) இல்ல .. எனக்கு இவர் உதவி தேவை இல்லை” என முகத்தில் அறைந்தார் போலக் கூறினான்.

“நாங்க இன்னிக்கு நாளைக்கு இரண்டு நாளும் பிசி துஷ்யந்த். காபி எஸ்டேட் பார்க்கணும் ரிஜிஸ்ட்ரேஷன் வேலை இருக்கு. நீங்கத் தனியா இருக்க வேண்டி இருக்கும் …” என இழுத்தாள்.

துஷ்யந்த் பதில் சொல்ல எத்தனிக்க

”நான் கொஞ்சம் பேசலாமா?” என இடைமறித்தான் விகாஸ்

மூவரும் அவனைப் பார்க்க

“நான் இன்னிக்கு அபே பால்ஸ் போறேன் … எனக்கு கம்பெனி கொடுக்க முடியுமா துஷ்யந்த் .. நான் டாக்டர் எல்லாம் இல்ல … அட கம்பவுண்டர் கூட இல்லங்க .. சாதாரண எடுபிடி .. எனக்கு இன்னிக்கு லீவ் அதான் ஊர் சுத்தலாம்னு பாக்குறேன். அவ்வளவுதான் விஷயம்” என்றான்.

அபே பால்ஸ் என்னும் மந்திர வார்த்தை துஷ்யந்த் வாயை அடைத்தது. அதைவிட விகாசின் அணுகுமுறை மிகவும் பிடித்துப் போனது. தான் உனக்கு நண்பன் போலத்தான் என்னும் வகையில் பேசியது துஷ்யந்தை கவர்ந்தது.

ஆனாலும் துஷ்யந்த் உம்மென்று “ ஒரு கண்டிஷன்” என்றான்.

”கடவுளே அடுத்து என்ன குண்டு போட போரானோ” என சிந்து மற்றும் பைரவி மனதில் ஓட

“சொல்லுங்க துஷ்யந்த்” விகாஸ் கூறினான்

“என்னை பேஷண்ட் மாதிரி நடத்தக் கூடாது. உட்கார் .. எந்திரி … மாத்திரை சாப்பிடுனு கண்டிஷன் போடக் கூடாது. நான் எல்லாத்தையும் மறக்கத்தான் இங்க வந்திருக்கேன்” எனச் சிடுமூஞ்சி முகத்துடன் சீரியராகக் கூற

“நீங்களும் என்னை எடுபிடி மாதிரி நடத்தக் கூடாது” என விகாஸ் அதே பாணியில் பதிலளித்தான். இதைக் கேட்டு சிந்து பைரவிக்கும் சிரிப்பு வந்தது. ஆனால் சிரித்து துஷ்யந்த் தவறாக எண்ணிவிடுவான் என சிரிப்பை அடக்கினர்.

விகாசின் வார்த்தைகள் துஷ்யந்துக்கு பிடித்துவிட்டது சிறு புன்னகையுடன் “ யூ ஆர் அப்பாயிண்டட் ஏஸ் மை பிரெண்ட் .” என்றவன். அப்படியே “எப்படியோ என்னை எல்லாரும் சேர்ந்து ஏமாத்திட்டீங்க” என அனைவரையும் குற்றம் சாட்டும் பார்வை பார்த்து சிரித்தும் வைத்தான்.

சிந்து பார்வையால் விகாசிடம் நன்றி கூறினாள். மனதால் அவன் திறமையை மெச்சினாள்.

பைரவிக்கும் அப்பாடா என்றிருந்தது. இல்லையேல் தன் எஜமானியம்மா தன்னை உண்டு இல்லை என்று செய்திருப்பாள் என நினைத்துக் கொண்டாள்.

“நான் ரெடி ஆகிட்டு வந்திடுறேன் விகாஸ்” என துஷ்யந்த் கூறியதும்

“சரி துஷ்யந்த் நாங்க வெளியில வெயிட் பண்றோம். நீங்க வாங்க” என்றபடி துஷ்யந்தின் செல்போன் நம்பரை வாங்கி ஒரு மிஸ்டு காலையும் கொடுத்தான் விகாஸ்.

சிந்து அவசரமாக வர்ஷாவிற்கு போன் செய்யத் தொடங்கினாள்.

அதைக் கண்ட பைரவிக்குச் சிரிப்புதான் வந்தது “ரன்னிங் கமண்டரி கொடுக்க தயாராயிட்டா” என நினைத்துக் கொண்டாள்.

“நீ ஏன் டல்லா இருக்க?” விகாஸ் பைரவியை ஊடுருவிப் பார்த்தபடி கேட்டான். இருவரும் அருகருகே அங்கிருந்த ரிசப்ஷென் ஏரியாவில் அமர்ந்தனர்.

“ம்ச் ஒண்ணுமில்ல” என்றாள்.

ஒருவித சோகம் பைரவி முகத்தில் இழையோடியது. நேற்று இருந்த உற்சாகம் துருதுரு பார்வை என்றில்லாமல் இன்று சோக கீதமாய் வதனம் கசங்கிக் காணப்பட்டது.

முன்தினம் பைரவி கேட்டதற்கு மறுத்த காரணத்தால் விகாஸ் அவளைக் காண அதிகாலையே வந்துவிட்டான். பைரவிக்கு வர்ஷாவுடன் போனில் பேச விருப்பம் இல்லை. அதனால் சிந்துக்கு மட்டும் தகவல் சொல்லிவிட்டு விகாசை துஷ்யந்த் இருக்கும் இடத்திற்கு அழைத்து வந்துவிட்டாள்.

“எதாவது பிரச்சனையா?” விகாஸ் கேட்க

மூச்சை உள்ளிழுத்து இல்லையெனத் தலையசைப்புடன் “உங்க வீட்ல எத்தனை பேர்?” என்று கேட்டாள்.

அவளின் நோக்கம் புரிந்தவனாக “அம்மா தங்கை நான்?” என்றான்.

“காதலி?” அவளின் அடுத்த கேள்வி

“ம்ம் இருக்காங்க” என்றான்

தூணாக சமைந்தவள் “ என்ன காதலி இருக்காங்களா?” மொத்தமாக ஸ்ருதி குறைந்து போனது அவளிடம்.

“ஆனா உறுதியா சொல்ல முடியாது. நேத்து காலையில் தான் முதல் முறையா பார்த்தேன். இன்னும் என் காதலைக்கூட அவகிட்ட சொல்லலை” என்றவன் குரலில் ஒருவித குழைவு.

பைரவிக்குப் புரிந்துவிட்டது. இருப்பினும் அதற்கு உடனே எதிர்வினை ஆற்றாமல் பொறுமை காத்தாள்.

விகாசைப் பற்றி முழுவதும் அறிந்த பின்னரே முடிவு எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் பிரச்சனை வந்தால் தனக்கென்று பேச யாரும் இல்லை.

அதோடு முதலில் ஒரு வேலை தேடிக் கொள்ள வேண்டும் என மனம் பட்டியலிட்டது.

“வர்ஷா நான் எப்படி துஷ்யந்த்கிட்ட சொல்ல முடியும்?” எனச் சிந்துவின் பதட்ட குரல் இருவரையும் திசைதிருப்பியது.

பதிலுக்கு வர்ஷாவின் கோபக் குரல் கேட்டது. பைரவி எழுந்து சிந்து அருகில் போய் என்னவென்பது போலச் செய்கை செய்ய .. “இரு” என்ற சிந்து “ சரி நான் பேசி பாக்குறேன்” என்றபடி போனை அணைத்தாள்.

“இப்ப என்ன பிரச்சனை?” பைரவி கேட்க

“துஷ்யந்த் அபே பால்ஸ் போகக் கூடாதாம். வர்ஷா ஆர்டர்” சிந்து சலிப்புடன் கூறினாள்.

“ஏன்? அபே பால்சை வர்ஷா வாங்க போறாளா?” பைரவி எள்ளலும் கோபமுமாகக் கேட்டாள்.

அன்று துஷ்யந்த் போனில் பேசி வர்ஷா கோபத்தில் போனை உடைத்த கதையைச் சிந்து கூறினாள். “வெண்பாக்கு பிடிச்ச இடம்ல அதனால் அங்க துஷ்ய்ந்த் போகக் கூடாதாம். இதை நான் துஷ்யந்த் கிட்ட சொல்லணுமாம்” என்றாள்.

விகாஸ் “என்ன பிரச்சனை?” எனக் கேட்கச்

சுருக்கமாக வெண்பா துஷ்யந்த் காதல். வெண்பா விபத்தில் மரணம் அடைந்தது. வர்ஷா துஷ்யந்த் மனதை மாற்றி திருமணம் செய்ய விரும்புகிறாள் என்பதைப் பைரவி கூறினாள்.

அப்போது துஷ்யந்த் அங்கே வந்து “கிளம்பலாமா விகாஸ்?” எனக் கேட்டான். இவர்கள் பேசியது எதுவும் அவனை அடையவில்லை.

“யா ஷ்யூர் வாங்க .. சீயூ கேல்ஸ்” என விகாஸ் கிளம்பத் தயாரானான்.

பைரவியைப் பார்த்துக் கண்ணடித்துத் தான் சமாளிப்பதாகக் கூறினான்.“அபே பால்ஸ்ல தண்ணி அதிகமா இருந்தா பொதுமக்களை அனுமதிக்க மாட்டாங்க .. கேட்டுப் போகலாம்” என துஷ்யந்திடம் கூறியபடி இருவரும் வெளியேறினார்கள்.

இரு பெண்களும் தப்பித்தோம் என எண்ணினார்கள்.

மீண்டும் வர்ஷாவிற்கு போன் செய்து சிந்து செய்தியைக் கூற அவளும் மலை இறங்கினாள்.

சிந்து “சரி வா பைரவி நாம வர்ஷாவ பார்க்கப் போகலாம்” என்றாள்.

“எத்தனை மணிக்கு எஸ்டேட் பாக்க போகணும்?”

“ 11 மணிக்கு”

“நான் நேரத்துக்கு வந்துடுவேன். நீ போ” என்றாள்

சிந்து பைரவியை உற்று நோக்கினாள். பைரவி ஒருமுறை அவள் மெல்ல அணைத்து பின்னர் திரும்பிப் பார்க்காமல் போய்விட்டாள்.

பைரவி நேராக விகாஸ் வேலை செய்யும் மருத்துவர் வீட்டிற்குச் சென்றாள். இப்படிச் சட்டென வந்ததால் கடிந்து கொள்வாரோ எனத் தயக்கமாக இருந்தது.

மருத்துவர் வெளியே கிளம்பிக் கொண்டிருந்தார் பைரவியைப் பார்த்ததும் “வாமா” என்றார் கனிவாக

எப்படித் தொடங்குவது எனத் தெரியாமல் “குட் மார்னிங் டாக்டர்” என்றாள்.

“குட் மார்னிங் மா .. விகாஸ் அங்க வந்துட்டான் தானே?” அவர் சந்தேகமாகக் கேட்கவும்

“ம்ம வந்துட்டான். நான் வேற விஷயமா வந்தேன்.”எனத் தயங்கினாள்.

“என்ன?” என்பதாய் அவர் உள்ளே வந்து அமரச் சொன்னார்.

இருவரும் அமர்ந்ததும்.

பைரவி நேராக விஷயத்தைத் தொட்டாள் “ எனக்கு விகாசை பிடிச்சிருக்கு .. ஆனா இன்னும் அவன்கிட்ட என் விருப்பத்தைச் சொல்லலை .. விகாஸ் எப்படி?”

மருத்துவர் முகத்தில் புன்னகை அரும்ப “ விகாஸ் நல்ல பையன் . ரெண்டு வருஷமா இங்க வேலை செய்றான். எந்த வம்பு வழக்குக்கு போக மாட்டான். லேடி பேஷண்ட் கிட்ட ரொம்ப மரியாதையா நடந்துப்பான். அவன் அம்மா பாத்திருக்கேன். அவனுக்குத் தம்பியா இல்ல தங்கையோ ஒருத்தர் இருக்காங்க?”

“ தேங்க்ஸ் டாக்டர் இதைப் பத்தி..”

” கண்டிப்பா அவன்கிட்ட சொல்ல மாட்டேன்” என்றார்.

“எனக்கு எதாவது வேலை கிடைக்குமா? அதாவது கல்யாணத்துக்கு அப்புறமா இங்க தானே இருக்கப் போறேன். வேலை செஞ்சா பேமிலிக்கு ஆதரவா இருக்கும்” என்று மழுப்பினாள்.

“சரி உன்னுடைய சர்டிபிகேட்ஸ் குடு மா .. நான் பார்க்கிறேன்” என்றார்.

“சென்னையில் ஒரிஜினல் இருக்கு. சாப்ட் காபிஸ் இப்பவே தரேன்” என தன் கூகுள் டிரைவில் இருந்த தன் சான்றிதழ்களை வாட்சப்பில் அனுப்பினாள்.

அவரும் அதைப் பார்த்துவிட்டு “சரி மா” என்றார்.

பைரவி மருத்துவருக்கு நன்றி கூறி கிளம்பினாள். பசி வயிற்றைக் கிள்ளியது. நாராயணன் வீட்டில் சாப்பிடக் கிடைக்கும் இருந்தாலும் ஏனோ சாப்பிடப் பிடிக்கவில்லை. ஒரு உணவகத்தில் காலை உணவை முடித்துக் கொண்டாள்.

வர்ஷாவை காணச் சென்றாள். சிந்து அவளைக் கண்டதும் வாஞ்சையுடன் “பைரவி சாப்பிடு .. இன்னும் கொஞ்ச நேரத்தில் கிளம்பணும்”

“நான் சாப்டாச்சி” என முடித்துக் கொண்டாள்.

எப்பொழுதும் பைரவி வந்தால் அந்த இடமே அதிரும் வகையில் லொட லொடவென பேசுவாள். ஆனால் இன்று ஒரு வார்த்தை வரவில்லை.

வேலையை கவனித்தாள். சிந்து வைத்திருந்த பத்திரங்களை சரி பார்த்தாள். வர்ஷாவை நேருக்கு நேர் பார்க்கவில்லை. முள்ளில் நிற்பது போல உணர்ந்தாள்.

“என்ன பைரவி ஒரு மாதிரி இருக்க?” வர்ஷா சோபாவில் அமர்ந்து கால் மேல் கால் போட்டபடி கேட்டாள். வர்ஷாவின் தோரணையில் நன்றாகவே மாற்றம் தெரிந்தது.

பைரவி நின்று கொண்டிருந்தாள். “அமர்ந்து கொள்” என வர்ஷா சொல்லவில்லை.

இதற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியாது என நினைத்தவளாய் “நான் ராஜினாமா செய்றேன்” எனக் காகிதத்தை நீட்டினாள்.

அதை வாங்கிப் படித்த வர்ஷா “சிந்து இவளுக்கு இரண்டு மாசம் சம்பளம் கொடுத்திடு. இனிமே நீ தங்கி இருக்கும் வீட்டில் இவ இருக்கக் கூடாது.” என்றபடித் தாளைச் சிந்துவிடம் நீட்டினாள்.

சிந்து எதுவும் சொல்லாமல் “சரி வர்ஷா” எனக் கடிதத்தை வாங்கி வைத்துக் கொண்டாள்.

“நீ போகலாம் பைரவி” என்ற வர்ஷா சிந்துவைப் பார்த்து “நீயும் போகணுமா .. தாராளமா போகலாம்” என்றாள்.

“வந்திடு சிந்து” என்னும்படியாக பைரவி பார்த்தாள்.

சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு “இல்லை நான் உன்னோடு தான் இருப்பேன் வர்ஷா. சுந்தரி மேடம்கிட்ட வாக்கு கொடுத்திருக்கேன்” என்றாள்.

வர்ஷா போ என்று சொல்லாமல் சிந்துவைச் சொல்கிறாள் இருந்தும் ஏன் இப்படி இருக்கிறாள் எனப் பைரவி குழம்பினாள். அனைத்திற்கும் ஒரு எல்லை உண்டு என ஏன் இவளுக்குப் புரியவில்லை.

“நான் உனக்கு அப்புறமா போன் பண்றேன் நீ கிளம்பு” எனச் சிந்து கண்ணீர் ததும்ப பைரவியைக் கட்டி அணைத்து விடை கொடுத்தாள்.

“குட் பை வர்ஷா” என்றாள். பதிலுக்கு வர்ஷா எதுவும் பேசாமல் தன் செல்போனை நோண்டியபடி இருந்தாள். பைரவி வெளியேறினாள்.

வர்ஷா மற்றும் பைரவியின் பல வருட நட்பு முடிவுக்கு வந்தது.

சுதந்திர காற்றைச் சுவாசித்த பைரவிக்குச் சலனமில்லாமல் ஓடும் நீரோடை போல மனம் அமைதியாய் இருந்தது.

விகாசிற்கு போன் செய்தாள் “எங்க இருக்கீங்க?” எனக் கேட்டாள்.

விகாஸ் “அபே பால்ஸ்” எனப் பதிலளித்தான்.

பைரவி திரும்பி வர்ஷா இருக்கும் நாராயணன் பங்களாவைப் பார்த்து தனக்குள் சிரித்தபடி “ அடுத்த சம்பவம் ரெடி” என நினைத்துக் கொண்டாள்.

துளிகள் தெறிக்கும் …

 
  • Like
  • Love
Reactions: ADC and jai_2000

jai_2000

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 18, 2025
19
19
3
Theni
Interesting update.
Dushyant move ennavag irukkum if he comes to know about Varsha.. eagerly waiting for next update.
 
  • Love
Reactions: kkp5

ADC

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 5, 2024
22
22
3
Bangalore
Nice update sis 👏🏼👏🏼👏🏼👏🏼 bairavi great escape 😍😍 hats off to sindhu's loyalty 👍🏼 but worth illaye 🤦🏼 Bairavi is super fast parpom Vikas oda reaction.
 
  • Love
Reactions: kkp5