பகுதி – 19.
வைஷாலி தன் அறையில் அமர்ந்து தீவிரமாக எதையோ யோசித்துக் கொண்டே இருந்தாள். அவளுக்கு அப்பொழுதும் முத்துப்பாண்டி அவளை அங்கேயே விட்டுச் சென்ற ரகசியம் மட்டும் புரியவே இல்லை.
அதைத் தெரிந்து கொள்ளவில்லை என்றால் தலையே வெடித்துவிடும் என்ற நிலை. ஆனால் ஒரு வாரமாக சர்வஜித் சென்னையில் இல்லை என்பதால், உடனடியாக அவனிடம் பேசி, விஷயம் என்ன என அவளால் தெரிந்துகொள்ள முடியவில்லை. அவனிடம் கேட்டால் அவன் விஷயத்தைச் சொல்வான் என்ற நம்பிக்கையும் அவளுக்கு சுத்தமாக இல்லைதான்.
முத்துப்பாண்டி கொடுத்த தவணையில் ஒரு மாதம் கடந்திருக்க, இன்னும் இரண்டு மாதங்கள்தான் கையில் இருந்தது. ‘அதற்குப் பிறகு என்ன ஆகும்?’ என யோசிக்க கூட அவளுக்குப் பிடிக்கவில்லை.
ஒரு மாதிரி மன உளைச்சலில் இருந்தாள். அதை யாரிடமும் அவளால் சொல்லவும் முடியவில்லை. ரூபிக்கு இப்பொழுது ஒரு மாதிரி விஷயம் தெரியும் என்றாலும் அவளால் மட்டும் என்ன செய்துவிட முடியும்?
முத்துப்பாண்டியின் கரத்தை சர்வஜித் உடைத்த பிறகு வெறிபிடித்த மனநிலையில்தான் அவன் இருந்தான். எப்பொழுது சர்வஜித்திடம் விடுத்த சவாலில் ஜெயிப்போம், அவனை எப்பொழுது இங்கே இருந்து விரட்டி அடிப்போம் என காத்துக் கொண்டிருந்தான்.
சர்வஜித் வைஷாலியை மூன்று மாதங்களுக்குப் பிறகு ஊருக்கே அனுப்பி வைத்து விடுகிறேன் எனச் சொல்லியிருக்க, தான் சவாலில் ஜெயிப்பது உறுதி என எண்ணினான். நிலைமை இப்படி இருக்க, அன்று சர்வஜித் அலுவலகம் வந்திருந்தான்.
அவளால் காத்துக்கொண்டிருக்க முடியாமல் போகவே, உடனே அவனைக் காணச் சென்றாள். அவள் அவனது அறைக்கதவை தட்டிக்கொண்டு அங்கே வந்து நிற்க, சர்வஜித் ஹரீஷைப் பார்க்க, உடனே அவன் அங்கிருந்து வெளியேறினான்.
அவளைப் பார்த்தவாறே சிகரெட்டை எடுத்து அவன் பற்ற வைத்துக் கொண்டான். ஆழ்ந்து அதைப் புகைக்க, “எனக்கு உங்ககிட்டே கொஞ்சம் பேசணும்” அவள் சொல்லவே, அவன் சலனமே இன்றி அவளைப் பார்த்தான்.
‘இவ்வளவு கஷ்டப்படுத்தியும் இன்னும் என்கிட்டே பேச நினைக்கறாளா? ஆச்சரியம்தான்...’ மனதுக்குள் எண்ணிக் கொண்டான். ஆனால் அதை வெளியில் அவன் காட்டிக் கொள்ளவில்லை.
“நீங்க முத்துப்பாண்டிகிட்டே என்ன பேசினீங்க? என்னைப்பற்றியா? அப்படி என்ன பேசினீங்க? என்னை எப்படி இங்கேயே விட்டுப் போக சம்மதித்தான்? நீங்க அவன் கையை உடைச்சு இருக்கீங்க... உங்களை அவங்க சும்மா விட மாட்டாங்க” கொஞ்சம் பயந்தபடியே சொன்னாள்.
“உன் முன்னாடி நான் இன்னும் முழுசா உட்கார்ந்துதான் இருக்கேன். என் தலையில்... இல்ல, என் உடம்பில் இருக்கும் ஒரு சின்ன ரோமத்தைக் கூட அவனால் தொடக்கூட முடியாது” அவன் குரலில் அத்தனை உறுதி.
“ஓகே... ஓகே... அப்போ என்ன பேசினீங்க?” அவள் கேட்க, ஆழ்ந்து புகைத்தவன், புகையை நிதானமாகவே வெளியேற்றினான்.
“அது ரகசியம்... எதுவும் சொல்றதுக்கு இல்லை. நீ போகலாம்...” என்றான்.
“அப்போ... அப்போ... என்னை அங்கேயே திருப்பி அனுப்பிடுவீங்களா?” அதைக் கேட்கையிலே தொண்டையை அடைத்தது.
அவள் கேட்டதற்கு அவன் அசையாமல் போக, “நான் இப்படில்லாம் யார்கிட்டேயும் கேட்டதே இல்லை. உங்ககிட்டேத்தான் நான் இப்படி...? ஏன் இப்படி இருக்கேன்னும் எனக்குத் தெரியலை” நிஜத்தில் கொஞ்சம் அவமானமாக கூட இருந்தது.
அவன் யார் அவளுக்கு? அவனிடம்போய் தன்னைக் காப்பாற்றச் சொல்லி கெஞ்சிக் கொண்டிருக்கிறாள். அவன் முன்னால் அழுதுவிடக் கூடாது என அவள் தன்னைக் கட்டுப்படுத்தப் போராடி தோற்றுப் போனாள். இறுதியில் அவள் கன்னத்தில் கண்ணீர் வழிந்தே விட்டது.
அவனிடம் தன் மனதை வெளிப்படுத்தவும் முடியாமல், தன்னைக் கட்டுப்படுத்தவும் முடியாமல் தனக்குள் போராடினாள். அவளது அந்த போராட்டம் அவனுக்கும் புரிய, மனதை என்னவோ செய்தது. அந்த தன் மனநிலை அவனுக்குப் பிடிக்காமல் போக, வெகு நிதானமாக அவளைப் பார்த்து, “கெட்... அவுட்...” என்றான்.
“ஏன்...? ஏன்...? நீங்க ஏன் இப்படி இருக்கறீங்க?” ஆற்றாமையாகக் கேட்டாள். மனம் அவன் பக்கமே நின்று சாதிக்க, அவன் துரும்பைக் கூட அசைக்க மாட்டேன் எனச் சொல்ல, அவளும் என்ன செய்ய?
“நான் இப்படித்தான்... உனக்கு உதவி செய்யணும்னு எனக்கு எந்த அவசியமும் கிடையாது” முகத்தில் அடித்தாற்போல் சொன்னான். அதற்கு மேலே அவன் முன்னால் நிற்க தன்மானம் இடம் கொடுக்காமல் போகவே, வேகமாக அங்கே இருந்து வெளியேறினாள்.
வைஷாலியோடு பேசிக் கொண்டிருந்தாலும், சர்வஜித்தின் கவனம் வைஷாலியின் அறையில் இருந்த சிசிடிவியிலேயே நிலைத்து இருந்தது. அங்கே ஹரீஷ் ரூபியோடு எதையோ பேச முயல்வதும், அதற்கு அவள் கோபமாக பதில் கொடுப்பதும் புரிய, புருவம் நெரித்தான்.
இவள் இங்கே இவனிடம் பேசிக் கொண்டிருக்க, ஹரீஷ் ரூபியைப் பார்க்கப் போனான். வைஷாலி சர்வஜித்தைப் பார்க்கப் போயிருக்க, ‘அங்கே என்ன ஆகுமோ? மேலே என்ன இழுத்து விட்டுக்கொள்ளப் போகிறாளோ?’ என எண்ணியவாறு நகத்தைக் கடித்துக் கொண்டு இருந்தாள் ரூபி.
அவள் தன் யோசனையிலேயே இருக்க, அங்கே ஹரீஷ் வந்ததை அவள் பார்க்கவே இல்லை. “ரூபி... ரூபி...” இரண்டு மூன்றுமுறை அவளது பயரைச் சொல்லி அழைத்த பிறகே அவனைப் பார்த்தாள்.
“என்ன? நீங்க எப்போ வந்தீங்க? இப்போ எதுக்காக இங்கே வந்திருக்கீங்க? எனக்கு உங்ககிட்டே பேச எதுவுமே இல்லை. இங்கே இருந்து போய்டுங்க. நீங்க இப்போ போகலைன்னா, நான் சார் கிட்டே கம்ப்ளெயின்ட் பண்ண வேண்டி இருக்கும்” படபடவெனச் சொன்னாள்.
அவனைக் காணாத வரைக்கும் எப்படியோ? அவனைக் கண்ட பிறகு மனம் ஒரு மாதிரி அலைபாய்ந்து கொண்டிருந்தது. அப்படி இருக்கையில் அவன் எதையாவது சொல்லிவிட்டு சென்றுவிட்டால் மனம் இன்னும் ரணப்படுமே என்ற கவலை அவளுக்கு.
“ஒரு ரெண்டே நிமிஷம்... நான் பேசிட்டு போய்டறேன்” அவன் இப்படிச் சொல்ல, அது இன்னும் அவளை கோபப்படுத்தியது.
“எனக்கு எதுவும் கேட்க வேண்டாம்” தன் காதைப் பொத்திக் கொண்டாள்.
“எனக்கு உன்கிட்டே மன்னிப்பு கேட்கணும். என் அம்மா ஆறுமாசமா உன்கிட்டே தொடர்ந்து பேசினது எனக்குத் தெரியாது. உன் மனசில் நம்பிக்கையை விதைச்சது எனக்கு தெரியாது. உன் மனசுக்குள் ஆசையை, எதிர்பார்ப்பை வளர்த்தது எனக்கு சுத்தமாவே தெரியாது” அவன் சொல்லிக் கொண்டே போக, கொதித்துப் போனாள்.
“ஷட் அப்... போய்டுங்க... இங்கே இருந்து போய்டுங்க... எனக்கு எதையும் கேட்கவும் வேண்டாம், தெரிஞ்சுக்கவும் வேண்டாம்” கிட்டத்தட்ட கத்தினாள். அந்த நேரம் அவளது குரலைக் கேட்டு அங்கே ஓடி வந்தாள் வைஷாலி.
“ரூபி... என்னடி ஆச்சு? சார்... என்ன? எதுக்காக அவ இப்படிக் கோபப்பட்டு கத்தறா?” அவன்தான் இதற்குக் காரணமாக இருக்கும் எனப் புரியவே கேட்டாள்.
“சாரி ரூபி... நான் போய்டறேன்...” என்றவன் வைஷாலியின் கேள்விக்கு எந்த பதிலையும் சொல்லவில்லை.
அவன் செல்லவே, ரூபி வாய்விட்டே கதறியவளின் தேகம் மொத்தமாக நடுங்கிக் கொண்டு இருந்தது. “ரூபி... என்னடி ஆச்சு? எதுக்கு இப்படி அழற?” தோழியை தோளோடு அணைத்துக் கொண்டாள்.
வெளியே சொல்ல முடியாத துக்கங்கள் எல்லாம் வெடித்து வெளியேற, அவள் தோள் சாய்ந்து அழுது தீர்த்தாள். அவன் தன் பலவீனத்தை தொட்டுவிட்ட உணர்வு. ஆறிவிட்ட ரணத்தில் சூடான கத்தியை விட்டுத் திருகினால் எப்படி வலிக்குமோ அப்படி ஒரு வலியை உணர்ந்தாள்.
அவளை சில பல நிமிடங்கள் அழ விட்டவள், “ரூபி... உங்களுக்குள்ளே என்னதான்டி நடக்குது? என்கிட்டே சொன்னால்தானே தெரியும்? அழுதது போதும். என்னன்னு சொல்லு...” அவளைப் பிடித்து உலுக்கினாள்.
இதற்கு மேலே அவளால் விஷயத்தை தனக்குள் வைத்திருக்க முடியாமல், தோழியிடம் சொல்லி அழுதாள். அதைக் கேட்ட வைஷாலி, “என்னடி சொல்ற? இது எப்போ நடந்தது? இத்தனை வருஷமா நீ என்கிட்டே சொன்னதே இல்லையே?” அவளிடம் கேட்டாள்.
“முதல் வருஷம் செமஸ்டர் லீவ்ல நடந்தது இது. அதனால் உனக்கு தெரியாமலே போய்டுச்சு. அதோட... அதையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா நானே மறந்துட்டேன்னு நினைச்சேன். அதை கடந்துட்டேன்னு நம்பினேன்.
“ஆனா எப்போ அவரைப் பார்த்தேனோ, அந்த நிமிஷம் எனக்குள்ளே என்னவோ மறுபடியும் உடைஞ்ச மாதிரி இருந்தது. அவரை என் கண் முன்னாடி பார்க்கும்போது அப்படியே பலவீனமா ஆயிடறேன். என் தோல்வி, வலி எல்லாம் என் கண் முன்னாடி தெரியுது” என்றவள் கலங்கித் தவிக்க, வைஷாலியால் அவளைத் தேற்றவே முடியவில்லை.
“ஓ... அதனால்தான் அவரைப் பார்த்த அன்னையில் இருந்து அவர்மேலே எரிஞ்சு விழறியா? இப்போ அவர் என்ன சொல்ல வர்றான்னு கேட்டியா?” தயக்கமாகவே கேட்டாள்.
“எனக்கு எதையும் கேட்க வேண்டாம்... ஆனா... என்கிட்டே மன்னிப்பு கேட்கறார். அந்த மன்னிப்பு யாருக்கு வேணும்? எனக்கு இப்படி இருக்கறதே ஒரு மாதிரி அவமானமா, அசிங்கமா இருக்கு. என் பலவீனத்தை வெளியே காட்டறது எனக்குப் பிடிக்கலை” அவள் சொல்லச் சொல்ல, தன் நிலையும் அதற்குக் குறைந்தது இல்லை என்றே தோன்றியது.
“ரூபி... சொல்றேன்னு தப்பா நினைக்காதே. விடாமல் உன்னைச் சுற்றி வந்து பேச நினைக்கறார். அட்லீஸ்ட்... அவர் என்ன நினைக்கறார்? என்ன பேசறார் என்பதையாவது நீ கேட்கலாம். அதற்குப் பிறகு நீ என்ன முடிவை எடுக்கணுமோ எடு” அவள் இவ்வளவு துன்பப்படுகையில் அவன்மீதான நினைப்பு இன்னும் அவளுக்குள் இருப்பது தெரிகிறதே.
எனவே வீண் பிடிவாதத்தில் அவள் எதையும் இழந்துவிட வேண்டாமே என்று இருந்தது. ஆனால் அவளோ, “எனக்கு எதையும் கேட்க வேண்டாம் ஷாலு. அவர் என்னைப்பார்த்து சிரிக்கற மாதிரி இருக்கு. எனக்கு அது வேண்டாம்...” ஒரு மாதிரி முறுக்கிக் கொண்டாள்.
அவன் வேண்டும், ஆனால் வேண்டாம் என்னும் நிலை. மீண்டும் ஒரு முறை எதிர்பார்த்து ஏமாந்துபோக மனதில் தெம்பில்லை. ஒருவேளை அவன் தன்னிடம் காதலைச் சொல்ல வேண்டும் என அவள் அதைத்தான் அவள் எதிர்பார்த்ததாளோ? அது இல்லாமல், அவன் மன்னிப்பை கேட்டதில் அவளுக்கு ஏமாற்றமோ? அது அவளுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.
“சரி விடு... இப்படி இருக்காதே... வா...” என அவளை அழைத்துக் கொண்டு டீ குடிக்கச் சென்றாள். இருவரும் அமர்ந்து டீயைக் குடித்து முடிக்கவே, திடுமென ஒரு அலாரம் ஒலித்து அவர்களைக் கலைத்தது.
“ரூபி... ஏதோ ஆக்சிடென்ட்... நீ பேக்கிங் போ... நான் ப்ரொடக்ஷன் பக்கம் போறேன்...” என்றவள், அவசரமாக கதவைத் திறந்து அங்கே ஓடினாள்.
அவள் உள்ளே செல்ல முயல்கையிலேயே சிலர் வேகமாக உள்ளே இருந்து வெளியே ஓடிவந்து கொண்டிருந்தார்கள்.
“என்ன ஆச்சு?” வந்தவர்களிடம் கேட்டாள்.
“மேம் பேரல் கிரேக் ஆயிடுச்சு... ஆசிட் லீக் ஆகுது. அது எப்போ வேணா வெடிக்கலாம்” அவன் சொல்ல, தயாரிப்பில் எங்கேயோ பிழை ஏற்பட்டிருப்பது புரிந்தது. மொத்த யூனிட்டையும் உடனே நிறுத்தவில்லை என்றால், அடுத்தடுத்து ஆபத்து வரும் எனப் புரிய, வேகமாக செயல்பட முயன்றாள்.