• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கண்ணீர் - 25

Zeeraf

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 23, 2025
73
25
18
India
கண்ணீர் - 25

"என்ன நித்திலா எதுக்காக என்னை நீ அவாய்ட் பண்ணுற, சாப்பிடும் போது கூட என் கேள்விக்கு நீ ஆன்சர் பண்ணலையே, என்னாச்சுமா, இந்த அண்ணன் மேல எதுவும் கோபமா உனக்கு" சிறு வருத்தத்துடன் வினவினான் கௌரவ்,...

"ஐயோ அப்படியெல்லாம் இல்லண்ணா, உங்க மேல எனக்கு என்ன கோபம் இருக்க போகுது, சித்ரா மேடத்துக்கு பிறகு என் மேல அன்பு காட்டுன இன்னொரு ஜீவன் நீங்க தான், உங்க மேல நான் கோபப்படுவேனா" நெகிழ்வுடன் சொன்னவள்,.. "அ.. அது என்னன்னா, அவர் தான் உங்க கிட்ட பேசக் கூடாதுன்னு சொன்னாரு, அதான்" என்று இழுத்து தயங்கி தயங்கி சொன்னவளை கண்டு பெரிதாய் சிரித்தவன்,... "அவன் இருக்கானே சரியான பொஸஸிவ்க்கு பிறந்தவன், அது சரி சித்தி கிட்ட நான் கொஞ்சம் நெருக்கமா பேசினாலே முறைச்சிட்டு போவான், நீ அவன் பொண்டாட்டியாச்சே பொஸஸிவ் வராம போகுமா" அவன் சொல்ல
அதை கேட்ட நித்திலா வியப்புடன், "நிஜமாவே என் மேல பொஸஸிவ்வா அண்ணா?" என்றாள், அவளால் நம்பவே முடியவில்லை...

அதற்கு கௌரவ் மெதுவாய் புன்னகைத்துக் கொண்டு, "ஆமாடா, இந்த பொஸஸிவ் எதனால வருதுன்னா அவங்க உள்ளத்துல இருக்கும் பேரன்புனால தான், பேரன்பின் சாட்சி தான் பொஸஸிவ், உன் மேல் ஆரவ்க்கு நிறைய அன்பு இருக்கு நித்திலா, இல்லன்னா அவன் இப்படி ரியாக்ட் பண்ண மாட்டான்," என்றான்...

அந்த வார்த்தைகள் அவளது இதயத்தை மெதுவாய் வருடியது,
கௌரவ் சொன்ன அந்த வார்த்தைகள் தான், நித்திலாவின் மனதில் மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டே இருந்தன...

'அவனுக்கு உன் மேல் நிறைய அன்பு இருக்கு… இல்லன்னா அவன் இப்படி ரியாக்ட் பண்ண மாட்டான்…'

'அன்பா?, அது உண்மையிலேயே அன்பா? அல்லது வெறும் கோபமும் வெறுப்பும் பிடிவாதமும் தானா?' அவள் தன்னையே கேட்டுக் கொண்டாள்...

'அண்ணா சொன்ன மாதிரி அவருக்கு என் மேல் உண்மையிலேயே பொஸஸிவ் இருக்குதா? ஆனா எப்படி சாத்தியம், அவருக்கு என்மேல் கொஞ்சம் கூட பாசம் இல்லைன்னு தான் நான் நினைச்சிட்டிருந்தேன், இதுவரைக்கும் அவருடைய கண்களில் கோபம் தவிர வேற எதையும் நான் பார்க்கலே, சின்ன அன்பின் சுடர் கூட இல்லை,ஆனா அண்ணா என்னடான்னா பேரன்பு, பொஸஸிவ்னு என்னென்னவோ சொல்றாரு, அது உண்மையா? நேத்து என்னாலயும் அவர் கண்ணுல கோபத்தை தாண்டிய ஏதோ ஒரு உணர்வை உணர முடிந்தது, ஆனா அந்த உணர்வு தான் அன்பா? என் மேல கூட அவருக்கு அன்பு மலருமா?'
அவள் மனதிற்க்குள் புயலாக எழுந்த கேள்விகள் ஒன்றின் பின் ஒன்றாக வந்து கொண்டே இருந்தன....

அந்தக் கேள்விகளுக்கு விடை சொல்ல தான் யாருமில்லை,
ஆனால் ஒரு விஷயம் மட்டும் நிச்சயம் ஆரவ்வின் ஒவ்வொரு செயலிலும், ஒவ்வொரு பார்வையிலும், சாதாரண கோபத்தைக் கடந்து ஏதோ ஆழமான உணர்வு இருப்பதை சமீப நாட்களாக அவள் உணர்ந்தாள்,..

நித்திலாவிற்க்கு அந்த உணர்ச்சி என்ன என்று தான் புரியவில்லை.
ஆனா அவள் உள்ளம் மெதுவாக ஒரு உண்மையை ஒப்புக்கொள்ள ஆரம்பித்தது, அவன் மீது அவளுக்கும் ஏதோ விசித்திரமான ஈர்ப்பு உண்டு....

அதை அன்பு என்று சொல்லலாமா? பயம் என்று சொல்லலாமா? இல்லை… ஒரு இனிமையான கட்டுப்பாடு, அவளை அவனோடு கட்டிப் பிணைக்கும் அடையாளம் போல இருந்தது....

'இந்த புதிர் ஒருநாள் தீரும்… ஆனா அந்த நாள் வரைக்கும், அவரோட கண்களில் என்ன உணர்வு இருக்குன்னு புரிஞ்சுக்கணும், அது தான் என் மனசுக்கு சமாதானம் தரும் ஒரே பதில்' என்று தன்னுடன் பேசிக் கொண்டாள்....

அன்று கௌரவ் ஊருக்கு கிளம்ப வேண்டிய நாள், தன் உடமைகள் அடங்கிய பெட்டியோடு தயாராக நின்றான், அவன் கிளம்ப போவதை கேள்விபட்ட ஆரவ் தான் பெரிதாக சந்தோசம் கொண்டான், அதனை அவன் முகத்திலேயே அறிந்த கௌரவ்,.. "என்ன ஆரவ் நான் கிளம்புறேன்னு சந்தோசமா இருக்குமே" என்று கிண்டலாக தான் கேட்டான்,...

ஆரவ் அமைதியாக சின்ன புன்னகையுடன் சமாளிக்க, சித்ராவோ,... "அவன் ஏன்டா சந்தோச பட போறான், சும்மா உளறாத கௌரவ்" என்றார்,...

"உங்களுக்கு ஒன்னும் தெரியாது சித்தி" என்றவனோ,.. ஆரவ்வின் அருகில் வந்து,... "நித்திலாவை பத்திரமா பார்த்துக்க, அவ உனக்கு கிடைச்ச பொக்கிஷம், கொஞ்ச நாள் பழகின எனக்கே அவளை விட்டு போக மனசில்லை, என்னோட சிஸ்டரை நான் ரொம்ப மிஸ் பண்ண போறேன்" என்று சொல்ல,... "சிஸ்டரா" என்று அதிர்ச்சியில் வாய்விட்டே கேட்டிருந்தான்,...

"ஆமாடா… நித்திலா எனக்கு சிஸ்டர் மாதிரி, அவ நல்ல மனசுக்கும் அவளோட அன்புக்கும் நிஜமாவே நான் அடிக்ட் ஆகிட்டேன், தங்கை இல்லா குறையை அவ எனக்கு போக்கி இருக்கா, அவளை கவனமா பார்த்துக்கடா, அவளோட புன்னகை தான் உன் வாழ்க்கையை நிறைவு செய்யும்" அந்த வார்த்தைகள் ஆரவ்வின் இதயத்துக்குள் மின்னல் போல விழுந்தது, அவன் கொண்டிருந்த சந்தேகங்களின் சுவர்கள், பொறாமையின் கோட்டைகள் எல்லாம் ஒரு கணத்தில் இடிந்து விழுந்த உணர்வு,..

உள்ளுக்குள் ஒரு பெரும் நிம்மதி அவனை ஆட்கொண்டது, இதுவரை மனதைச் சுரண்டி கொண்டிருந்த குழப்பம், தங்கை என்ற அந்த ஒரு வார்த்தையில் மெதுவாகக் கரைந்தது போல, அவன் சுவாசமே சீரானது.,.. நித்திலாவை நோக்கி அவன் பார்வை நகர, அவளோ அமைதியாக சித்ராவின் அருகில் நின்று கொண்டிருந்தாள்,....

அவன் முகத்தின் மூலமே அவன் மனதின் நிம்மதியை உணர்ந்த கௌரவ், சிறு புன்னகையுடன் "ஓகே கைஸ் ஐம் லீவிங்" அவர்களிடமிருந்து விடப்பெற்று அயல்நாட்டை நோக்கி பயணப்பட்டான்,...

கௌரவ் சென்ற பின்னர், வீடு வெறிச்சோடி போனது போல தோன்றியது பெண்களுக்கு,
எப்போதும் சிரிப்பும் கிண்டலும் கலந்து, கலகலப்போடு வீட்டையே உயிரோட்டமாக வைத்திருந்தான் கௌரவ், அவன் இல்லாமல் போன அந்த சில மணி நேரங்கள், வீட்டின் சுவர்களே மௌனமாக நின்றது போல இருந்தது, அவனின் குரலும், சிரிப்பும், அக்கறையும் இல்லாமல் அந்த இடம் ஒரு மாதிரி வெறுமையை கொடுத்தது,...

நாட்கள் நகர நகர, அந்த வெறுமையை மெதுவாக சமாளித்து, மீண்டும் வழக்கமான வாழ்க்கைக்குத் திரும்பினார்கள், ஆனால் அவர்களின் உள்ளங்களில், அவன் விட்டுச்சென்ற நினைவுகளின் சின்னச்சின்ன தடங்கள், சிரிப்புகள் இதெல்லாம் நினைவூட்டிக் கொண்டும் இருந்தது...

ஆரவ்வின் அலுவலகத்தில்...

தன் கையிலிருந்த பத்திரிகையை தான் வெகுநேரமாக யோசனையாக பார்த்துக் கொண்டிருந்தான் ஆரவ், அவன் எதிரில் அமர்ந்திருந்த அவன் நண்பன் தீபனோ,... "என்னடா ஓவர் திங்கிங்கா இருக்க" என்று வினவ, அவனை தொடர்ந்து தீபனின் அருகில் அமர்ந்திருந்த தனிஷாவோ,... "அதானே, இன்விடேஷன் பிடிச்சிருக்காடா, நான் தான் செலக்ட் பண்ணேன்" என்றாள் அனைத்து பற்களையும் காட்டியபடி..

"நீ வேற ஏன்டி, அவனே ஏதோ கண்ஃபியுஷன்ல இருக்க மாதிரி இருக்கு" மனைவியை அதட்டிய தீபனோ,... நண்பனிடம் திரும்பி, "என்னடா?" என்று வினவ,... "பார்ட்டிக்கு என்னால மட்டும் தான் வர முடியும்" என்று சொல்லை, அந்த கணமே,.. "முடியவே முடியாது" உடனடியாக மறுத்த தனிஷா,... மேலும்,... "நீ உன்னோட வைஃபோட தான் வரணும்" என்றாள் உறுதியாக,..

தீபன் மட்டும் இல்லாது தனிஷாவும் அவனின் தோழி தான், அவர்கள் மொத்தம் ஐந்து நண்பர்கள், ஆனால் ஆரவ் நெருக்கமாக பேசிக் கொள்வது தீபன் மற்றும் தனிஷாவிடம் மட்டும் தான், தீபனும் தனிஷாவும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள், அவர்களின் மகனான வினித்'க்கு முதல் பிறந்தநாளை விமர்சையாக நடத்த ஏற்பாடு செய்திருந்தனர், அந்த விழாவிற்கு நண்பனை அழைக்க தான் இப்போது வந்திருந்தனர், அவனோ தனியாக தான் வருவேன் என்று சொல்லவும் கோபம் தான் தனிஷாவிற்கு, தீபனின் முகத்திலும் அந்த கோபம் தெரிய, மனைவி பேசிக் கொள்ளட்டும் என்று அமைதியாக இருந்தான்,...

நெற்றியை நீவியவனோ,... "அவளை அழைச்சிட்டு வரது எனக்கு சரியா இருக்கும்னு தோணல தனிஷா, அங்கே நம்ம ஃபிரண்ட்ஸ் எல்லாரும் வருவாங்க" என்றான்,...

"வரட்டுமே,... வந்தா என்னடா பிரட்சனை உனக்கு" என்று சற்று கடுப்புடன் கேட்டாள் தனிஷா...

"பிரச்சனை எதுவும் இல்ல, ஆனா... அவ பார்ட்டிக்கெல்லாம் வருவாளான்னு எனக்கே தெரியல, கூட்டம், கேளிக்கை, புது முகங்கள் இவங்களுக்குள்ள அவ தனியா தான் நிற்பா" என்றான் சமாளிக்க முயன்று..

அந்த வார்த்தைகளை கேட்டு தீபன் சற்றே சிரித்தான்... "அடப்பாவி, நீ எப்போவும் அவளை தனியா தான் வைக்குறியா? நீ அவ பக்கத்துல இருக்கும்போது அவளுக்கு எப்படிடா சங்கடம் வரும், உன் மனைவிக்கு நீ ஒழுங்கா கம்பெனி குடுத்தா, அவளும் சந்தோஷமா கலந்துக்குவாளே!" என்று சொல்ல, தனிஷாவும் கூடுதல் உறுதியுடன், "ஆரவ், நீ உன்னோட பொண்டாட்டி கூட தான் வரணும், இல்லைனா எங்க கிட்ட பேசாத" என்றாள்,..

"ப்ச்.. உங்களுக்கே தெரியும்… அவளை விருப்பப்பட்டு நான் கல்யாணம் பண்ணிக்கல," என்று மெதுவாகக் குரல் தாழ்த்தி சொன்னான்...

அதைக் கேட்டவுடன் தனிஷாவின் முகத்தில் சற்றே கடுமை தெரிந்தது,
"நீ சொல்றது சுத்த நான்சென்ஸ்ஸா இருக்கு ஆரவ்! அது எல்லாம் முடிஞ்சு போன கதை, இப்போ உங்களுக்கு கல்யாணமாகி மாதம் கடந்தாச்சு, இன்னும் நீ அவளை அக்சப்ட் பண்ணிக்கல'ன்னு சொன்னா, நான் நேரடியாகவே கேவலமா திட்டிடுவேன்!" என்று சாடினாள்....

தீபனும் அவளது பக்கம் சற்றே சாய்ந்து, "ஆமா டா, நீ இப்படி பேசுறது கொஞ்சமும் சரியில்ல, உன்கிட்டருந்து இதை நாங்க எதிர்பார்க்கவும் இல்ல" என்றான் ஆதங்கத்துடன்,..

தனிஷாவோ மீண்டும் "விருப்பம் இல்லாம கல்யாணம் பண்ணிகிட்டதுக்காக அவளை டச் பண்ணாம இருந்தியா? இல்லைல, அவ தான் உன் மனைவி, உன் வாழ்க்கை, அதனால நீ எங்கே போனாலும் அவளோட தான் போகனும், எங்க பையனோட பிறந்தநாள் விழாவுக்கு நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து தான் வரணும், தனியா வர்றத பத்தி கூட யோசிக்காதே," என்றாள்...

ஆரவ் அவளது வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டே அமைதியாக இருந்தான், மனதில் ஏதோ பாரம் ஏறிய உணர்வு, அமைதியாக யோசித்தான், அவனது நண்பர்கள் அவனை தான் ஆழமாக பார்த்துக் கொண்டிருந்தார்கள்,..ம்

நெற்றியைத் தடவி மெதுவாக அவர்களை ஏறிட்டவன், "சரி… நான் அவளை அழைச்சிட்டு வரேன்," என்று ஒப்புக்கொள்ள, அந்த வார்த்தையை கேட்டவுடன் தான் இருவரின் முகத்திலும் சிரிப்பு மிளிர, மனநிறைவுடன் எழுந்து கிளம்பினர்...
 
  • Like
Reactions: shasri