• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உதிராத மலராய் நானிருப்பேன் அத்தியாயம் -23

shaliha ali

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 24, 2024
110
87
28
Chennai

உதிராத மலராய் நானிருப்பேன் அத்தியாயம் -23


இருவரின் சில நிமிட அமைதியை சிற்பியின் அத்தை பூர்ணா சத்தமாக “சிற்பி என்ன போன் பேசுறியா?” என்று கேட்டதற்கு சிற்பி “ஆமாம் அத்தை” என்றாள்.


“சரிம்மா பேசிட்டு தூங்கும்மா நேரமாகுது” என்று சொல்லி விட்டுச் சென்றார்.


நிரஞ்சன் “ரொம்ப நேரமாயிடுச்சுல்ல நீ ரெஸ்ட் சிற்பி நாம நாளைக்கு பேசலாம்”

அவளோ “ம்ம்… சரி” என்ற பொழுது “ஒரு நிமிஷம் சிற்பி” என்றான்.

“சொல்லுங்க சார்” என்றதும் “ஒரு விஷயம் சொல்லாமல் போனை வைக்க மனசில்லை”


“ம்ம்… சொல்லுங்க” என்றாள் இன்னொரு முறை.


“ரொம்ப அழகா தெளிவாக இருந்துச்சு உன் குரல் சிற்பி உனக்கு முறையா பாடவும் தெரியும் தானே” என்று கேட்டாள்.


அவளிடம் பதிலில்லை.
அமைதியாக இருந்தாள்.

“ஏன் எதுவுமே சொல்ல மாட்டேங்கிறே?”


“இப்போ எதுக்கு இதெல்லாம்?”


“பரவாயில்லை சொல்லு நானாகத் தானே கேட்கிறேன் உன் குரல் அப்படியே லயிக்க வைக்குது சிற்பி” விழிகளை மூடி உணர்ந்தபடிச் சொன்னான்.


அவனின் வார்த்தையின் உணர்வு அவளுக்கும் உணர்த்தியது.

“சார்” என்று ஆரம்பிக்கும் போது ஒருவிதமான தயக்கம் அவளுள்.

அதைப் புரிந்துக் கொண்டவன் “ஒரு ப்ரெண்டா நினைச்சு விருப்பம் இருந்தா சொல்லு முடியலைன்னா பரவாயில்லை இன்னொரு நாள் பார்த்துக்கலாம்” என்றான்.


அவளும் சரியென்று அழைப்பினை துண்டித்தாள்.கைப்பேசியை எடுத்து தன் நெஞ்சோடு வைத்தவளுக்கு ஒரே படபடப்பாக வியர்க்க ஆரம்பித்தது.தொண்டை எல்லாம் வறண்டு போய் இருந்தது.


மனதினுள் ‘'நிரஞ்சன் கேட்டார்னு நான் சாதாரணமாகத் தான் பாடுனேன் ஆனால் அதற்கு பதில் அவன் பாடியது எதற்கு?” என்று தனக்குள்ளே ஆயிரம் முறை கேட்டவளுக்கு ஒருவேளை தொடர்ந்து பாடனும்னு பாடி இருப்பானோ? என்று அந்த கேள்விக்கும் தானே விடையளித்தாள்.


இங்கே நிரஞ்சனின் முகமோ புன்னகையில் நிரம்பி இருந்தது.ஏனோ வாழ்வில் இதுவரை மறுத்தவளின் காதல் நினைவுகள் வரும் போது வலியும் வேதனையும் நிறைந்து இருக்கும். இப்போது அப்படி இல்லை.நிறைவாக இருந்தது மனம்.


அவளிடம் எல்லாவற்றையும் சொல்லவில்லை தான் இருந்தாலும் சொல்லியது போல ஒரு நிறைவு.இனி இதுபோல் வருவதற்கு எண்ணம் இருக்காது.
எனென்றால் வேதனை இருந்தால் தானே தனிமை தேவை.இங்கே புதியதாக வாழ்க்கையின் வரவு எல்லாவற்றையும் மாற்றும் அன்பு அதுவே நிதர்சனம்.



தன் அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்தான் நிரஞ்சன்.அவனுக்காக காத்திருந்த காந்தன் அவனையேப் பார்த்தான்.எப்போதும் இருக்கும் சோர்வு இல்லை மாறாக புத்துணர்வு தெரிந்தது.


நிரஞ்சன் காந்தனிடம் “நீ இன்னும் தூங்க போகலையா?”


“இல்லை உனக்காகத் வெயிட் பண்றேன்”


“எல்லோரும் சாப்பிட்டீங்களா?”

“ம்ம்… சாப்பிட்டோம் எனக்கு சாப்பாடு எங்கே?” என்று கேட்டான் நிரஞ்சன்.


அதைப் பார்த்து அதிர்ச்சியான காந்தன் “புதுசா இருக்கு எப்பவும் நான் தான் சாப்பிடச் சொல்லி கட்டாயப்படுத்துவேன் இன்றைக்கு நீயாகவே கேட்கிறே? வித்தியாசமாக இருக்கு” என்றான்.


நிரஞ்சன் சிரித்துக் கொண்டே “பசிக்குதுடா எனக்காக நீ எப்பவும் சாப்பாடு வாங்கி வைப்பேன்னு தெரியும் அதனாலத் தான் கேட்டேன் எடுத்துட்டு வா” என்று உடையை மாற்றுவதற்கு சென்றான்.


காந்தன் யோசனையோடு அவனுக்கான சாப்பாட்டை எடுத்து வைத்தான்.நிரஞ்சன் வந்து சாப்பிட ஆரம்பித்தவன் “அவனுங்க ரெண்டுபேரும் எங்கே?”


“தூங்கப் போறேன்னு ரூம்க்கு போய்ட்டாங்க”


“அப்படியா! ஓரமா நின்னு நாம ரெண்டுபேரும் என்ன பேசுறோம்னு ஒட்டு கேட்டுட்டு இருப்பானுங்க” என்றான்.


அதைக் கேட்டு காந்தன் சிரித்துக் கொண்டு “ரொம்ப மாற்றமே இருக்கே சரியில்லையே”


அவனோ “ஏன் என்னை இப்படி பார்த்தால் நல்லா இல்லையா?”


அவனோ நிரஞ்சனைப் பார்த்து “ஒருநாளைக்கு ஒரு ஷாக் போதும்டா அடுத்தடுத்து வந்தா நெஞ்சம் தாங்காது” என்றான்.


அவன் சொன்ன பதிலைக் கேட்டு “சாம்பவி கிட்ட பேசி எல்லாம் உண்மையும் கேட்டு தெரிஞ்சுக்கிட்டீங்க போல” என்று நேராக உண்மையாக கேட்டான்.

காந்தனோ ஆமாம் என்பது போல் தலையசைத்தான்.

நிரஞ்சன் “இந்த வேலையை பார்த்தது யார்னு தெரிஞ்சுக்கலாமா?” என்று கேட்க ஓரமாக இவர்கள் இருவரும் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த பார்த்திபனும் சஹாவும் வெளியே வந்தனர்.


பார்த்தி “ஷ்ப்பா போதும்பா எங்களை நீ கழுவி ஊத்துனது நாங்க தான் கேட்டோம் என்ன நடந்துச்சுன்னு தெஞ்சுக்கலாமேன்னு ஆனால் என்றைக்கும் இல்லாத அதிசயமா சாரே எங்களை கலாய்க்கனும் என்கிற முடிவோட வந்து இருக்கிற விஷயம் தெரியாமல் போச்சு எப்படியோ நீ நல்லா இருந்தா சரிதான்” என்றான்.


சஹா நிரஞ்சன் தோளில் மேல் கைப்போட்டுக் கொண்டு “நாங்க செய்து இருப்போம்னு தெரிஞ்சே கேட்கிற பத்தியா அங்கே இருக்கே” என்றதற்கு நிரஞ்சன் “நான் அங்கே இல்லை இதோ இங்கே தான் இருக்கேன்” என்றான்.


அதைக்கேட்டு காந்தன் “காமெடிடா சிரிங்க சிரி” என்று சொல்ல அவர்களுக்குள் நிறைய பேசினர்.ஒருவருக்கு துக்கம் என்றால் இன்னொருவர் அணைத்துக் கொள்வதில் தான் அவர்களின் நட்பின் ஆழம் இன்னும் இன்னுமாய் சென்றது.


நிரஞ்சனைப் பற்றி யோசித்துக் கொண்டே தூங்கிப் போனாள் சிற்பி.அவனுக்கோ அவளைப் பற்றிய ஒரு நல்ல நினைவுகளோடு தூங்கிப் போனான்.


மறுநாள் எழுந்தவள் கண்களைத் திறக்க எதிரே செழியன் அமர்ந்திருந்தான்.அவனை யோசனையாக பார்த்தவள் “என்ன இங்கே உட்கார்ந்து இருக்கீங்க?”


“இன்னைக்காவது குளிக்கிற ஐடியா இருக்கா? இல்லையா?”


“ஏன் என்னாச்சு?”


“ஏன் என்னாச்சுன்னு கேள்வியைப் பாரு கீழே விழுந்து இன்னையோடு மூன்றாவது நாளு குளிப்போம் டிரெஸ் மாத்துவோம் ஒன்னும் கிடையாது அப்படியே அழுக்கு மூட்டை மாதிரி படுத்துட்டு இருக்கே வேளா வேளைக்கு சாப்பாடு அதுவும் படுத்துகிட்டே எல்லாம் வந்தால் நல்லா இருக்கும் கொஞ்சம் நடக்க டிரை பண்ணலாம் அதெல்லாம் கிடையாது எப்போ பார்த்தாலும் போனும் கையுமாக இருப்பது இதே வேலையாக போச்சு” என்று அவளை வசைப்பாடிக் கொண்டிருந்தான் செழியன்.


அவன் சொன்னதை எல்லாம் கேட்ட சிற்பி “அத்தை இவனை இங்கிருந்து போகச் சொல்லுங்க இப்போ யார் இவன்கிட்டே ஹெல்ப் கேட்டாங்களாம் கிளம்ப சொல்லுங்க” என்று கத்தினாள்.


உடனே செழியன் “இப்போ நான் வேண்டாம் என்னைப் பார்த்தால் கோவம் வரும் ஆனால் அன்னைக்கு என்னைப் பார்த்த உடனே ஓஓஓன்னு ஒரே அழுகை அப்போ மட்டும் நான் வேணுமா?” என்று வேண்டுமென்றே அவள் மனதில் தன்னைப் பற்றிய எண்ணம் அவளிடத்தில் என்ன உள்ளது? என்று அறிய அவன் பேசினான்.


இரண்டு நாட்களாக நடப்பதை எல்லா பூர்ணா செழியனிடம் சொல்லிக் கொண்டுத் தான் இருக்கிறார்.நிரஞ்சன் சாப்பாட்டை ஊட்டி விட்டது அதை அவள் தடுக்காமல் அமைதியாக. சாப்பிட்டது, இரவு முழுவதும் அவனோடு பேசி சிரிப்பது எல்லாமே அவர் கவனித்துக் கொண்டுத் தான் இருக்கிறார்.



மகனுக்கு சிற்பியின் மேல் விருப்பம் இருப்பது தெரியும் இருந்தாலும் சிற்பிக்கும் அவன் மேல் இருப்பதை அறிந்துக் கொள்ளவே இவருக்கு விருப்பம்.


காரணம் தன் மகனைப் போலவே அவர் சிற்பியை நினைப்பதால் அவரால் வித்தியாசம் பார்க்க முடியவில்லை.


சிற்பியோ முகத்தை கோணலாக வைத்துக் கொண்டு “இப்போ என்ன அன்னைக்கு உன்னை கட்டிப்பிடிச்சு அழுதுட்டேன் அதானே பிரச்சினை இப்போ கொஞ்ச கிட்டே வாயேன்”

“எதுக்கு?” என்று இவன் அதிகாரமாக கேட்டான்.


அவளோ உடனே முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு “ப்ளீஸ் அத்தான் இங்கே வாங்களேன்” என்றதும் இவனும் அருகில் சென்றான்.இது தான் சரியான வாய்ப்பு என்று எண்ணியவள் அவனைப் பிடித்து இழுத்தவள் “அன்னைக்கு இப்படி கிட்டே வந்து இருந்தால் முதுகுமேல சாய்ந்து இருந்து அழுது இருப்பேன்” என்று அவன் மீது தன் உடலின் மொத்த பாரத்தையும் இறக்கினாள்.


இதைப் பார்த்த பூர்ணா “ஹய்யோ நானே தங்கமாட்டும் ஒரே ஒரு பிள்ளையை பெத்து வைச்சு இருக்கேன் அவனைப் போட்டு படுத்துற போதும்” என்றார் சிரித்துக் கொண்டே….


அவனோ “அம்மா இந்த ராட்சசிகிட்டே இருந்து என்னை காப்பாத்துங்க அம்மா” என்று கதறினான்.


அதற்கு சிற்பி “வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை எங்க பிடி உடும்புப் பிடி” என்ற போது இவனோ மெதுவாக அவளுடைய முதுகுபக்கமாக கை வைக்கவும் “ஆஆஆ…. அம்மா வலிக்குது” என்று கத்தி அவனிடமிருந்து நகர்ந்தாள்.

அவனோ “ஷ்ப்பா ஒரு குளிக்கச் சொன்னதுக்கு அக்கப்போராக இருக்கு” என்று சலித்துக் கொண்டான்.


அதைப் பார்த்த சிற்பி “ஹோ… நான் அந்தளவுக்கு ஆகிட்டேனா? பரவாயில்லை நானே எழுந்து கொள்ள முயற்சிக்கிறேன்” என்று அவள் தன்னைத் தானே முயன்று பார்த்ததில் முதலில் இருந்ததுக்கு இப்போது கொஞ்சம் வலி குறைந்து இருப்பதால் நடக்க கொஞ்சம் தடுமாறினாள் அதைப் பார்த்து பதறிய செழியன் அவளைப் பிடித்துக் கொண்டான்.


கடைசியில் அவனைப் பிடித்தவள் “என்ன நடக்க வைக்கனும்னு என்னவெல்லாம் பேசுறே? இதனாலத் தான் மனசுக்கு நெருக்கமான உறவை உன்னைத் தவிர வேற யாரையும் நினைக்க முடியலை” என்றாள்.


அவனோ புன்னகை மட்டும் சிந்தியவாறு அவளை பிடித்துக் கொண்டு குளியலறையில் விட்டான்.அங்கே அவளுக்கு ஒரு நாற்காலியும் ஏற்கனவே போடப்பட்டு இருந்தது.


அதைப் பார்த்து அவனைப் பார்த்து சிரித்தவள் “எல்லாம் நீதான் எனக்காக ரெடி பண்ணி வைச்சியா?” என்றதற்கு ஆமாம் என்று தலையசைத்தான்.


எல்லாவற்றையும் அவள் எட்டும் தூரத்திலே எடுத்து வைத்து வைத்திருந்தான்.

“ரொம்ப தாங்ஸ்” என்று சொன்னாள்.உடனே அவனோ “தாங்ஸ் எல்லாம் வேண்டாம் நீயே உன்னை பார்த்து கொண்டால் அது போதும்” என்றான்.அதைக் கேட்டதும் அவள் முகத்திலும் புன்னகை நிறைந்து இருந்தது.


அவளை உள்ளே அனுப்பி விட்டு வெளியே வந்தான் செழியன்.அவனைப் பார்த்து பூர்ணா கவலையோடு “செழியன் இப்பவும் சொல்றேன் ரொம்ப எதிர்பார்ப்பு வைக்காதே எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குது கண்ணு” என்றார்.


அவரும் ஒரு பெண் தானே. பெண்ணின் மனம் எப்போது எங்கே எவ்விதம் மாறும் என்று அவரும் அந்த வயதினை தாண்டி வந்தவர் அல்லவா! அதனால் ஒருவித பயமும் அவரிடம் இருந்தது.


“அம்மா சிற்பிக்கு என்னை ஒரு காதலான பிடிக்காமல் போனாலும் ஒரு தோழனாக எப்பவும் அவ மனசுல நான் நிறைஞ்சு இருப்பேன் அது போதும் ஏன்னா அந்த உறவுல எப்போ வேண்டுமானாலும் பிரிவும் கோபமும் வெறுப்பும் நிறைந்து போகலாம் ஆனால் அவளுக்காக எப்பவும் வெறுத்துப் போகாத உறவா நான் இருப்பேன்ல அது போதும் அதனால அவளோட முடிவு எதுவாக இருந்தாலும் எனக்கு ஓகே தான்ம்மா” என்றான் முடிவாக…


அதைக் கேட்டு அதிர்ச்சியான பூர்ணா “என்ன சொல்ற செழியன்? அப்போ நீ வாழ்க்கை முழுவதும் இப்படியே இருந்து விடுவியா?” கவலையும் ஆதங்கமுமாக கேட்டான்.


அவனோ சிரித்துக் கொண்டே “இல்லை சரியாக கொஞ்சம் நாட்கள் ஆகலாம் ஆனால் அப்படியே இருந்து விடப் போவதில்லை காலம் தான் காயத்தை ஆற்றும் சிற்பியை விரும்புற மாதிரி என்னையும் விரும்பும் அன்பு கிடைக்குதான்னு பார்க்கலாம்” என்றான்.


பூர்ணாவால் அதற்கு மேல் எதுவும் பேச முடியவில்லை.காரணம் அவனும் கொஞ்சம் நேரம் கேட்கத் தானே செய்கிறான்.அதனால் யோசனையில் அப்படியே இருந்து விட்டார்.



செழியனுக்கு சிற்பியிடம் கேட்க விருப்பமில்லை.
எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் இருக்கின்ற அன்பை அதை ஒரு பெயர் சொல்லி கெடுத்து விடும் எண்ணம் அவனுக்கு இல்லை.அதனால் அதனை அதன் போக்கிலேயே விட்டு விட்டான்.


இங்கே நிறைய காதலும் அன்பும் சொல்லாமல் தானே இருக்கிறது.அப்படித் தான் அவனுடையதும்.அதன் முடிவை ஏற்பவர்கள் எதிர்த்து சொல்லி விடுகிறார்கள்.ஏற்றுக் கொள்ள மனம் இல்லாதவர்கள் அதன் போக்கிலே விட்டுவிடுறார்கள்.
இதில் செழியன்
இரண்டாவது ரகம்.


சிற்பி குளித்து முடித்து வரும் வரை காத்திருந்தவன் அவளுக்கு உதவி அவனும் அவளோடு சாப்பிட்டு முடித்தவன் தன் வேலையைப் பார்க்க கிளம்பி இருந்தான்.


சிற்பி தன்னுடைய கைப்பேசியைப் பார்த்தாள்.அதில் நிரஞ்சன் அவளுக்கு காலை வணக்கம் அனுப்பி இருந்தான்.எல்லாம் அவளுக்கு புதிதாக இருந்தது.இப்படியே நாட்கள் நகர்ந்தது.அவளாக இன்னும் நன்றாக நடப்பதற்கு கூடுதலாக நான்கு நாட்கள் ஆனது.இதில் சாம்பவியும் வந்து அவளை சந்தித்து விசாரித்து விட்டு அவளுக்கு உடல்நிலையினால் இன்னும் சில நாட்கள் விடுப்பு கொடுத்தாள்.


இதற்கிடையில் ஊரில் உள்ள தன் பெற்றோரிடம் கைப்பேசியில் பேசி இருந்தாள்.தனது அக்காவான கனிகா தன் கணவனோடு பெங்களூரைச் சுற்றிப் பார்ப்பதற்காக வர எண்ணம் இருப்பதாகச் சொன்னாள்.


ஆனால் அவள் அதை உறுதிப்படுத்தவில்லை.இதற்கிடையில் சிற்பி ஓரளவு குணமாகவும் முதலில் நேராக சாம்பவியை சந்தித்து பேசினாள்.திரும்பவும் அவள் வேலையில் சேருவதற்காகக் கேட்டாள்.அவளும் ஒத்துக் கொண்டாள்.அதனால் இவர்கள் நால்வருக்கும் எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல் அவர்களை சந்திக்க அடுக்குமாடி குடியிருப்புச் சென்றாள் சிற்பிகா.


அங்கே எப்போதும் அலார மணியை அழுத்தச் சென்றவளுக்கு கதவு லேசாக திறந்து இருந்தது தெரிய வந்தது.அதனால் அலார மணியை அழுத்தாமல் நேராக உள்ளேச் சென்றாள்.

அங்கே சமையறையில் சென்றவளுக்கு யாரும் இல்லை.மெதுவாக முதலில் நிரஞ்சனின் அறையை எட்டிப் பார்க்க அங்கே அவனும் இல்லை.

‘எல்லோரும் எங்கே போய்ட்டாங்க?’ என்று யோசித்தவள் அங்கே ஓரமாக நிரஞ்சனுடைய கைப்பேசி இருந்தது.அதைப் பார்த்தவளுக்கு ஒரு எண்ணம் தன்னுடைய பெயரை எப்படி அவனுடைய கைப்பேசியில் வைத்திருக்கிறான் என்று பார்க்கும் ஆவலில் அவள் எடுக்கவும் அப்போது குளியலரையில் சரியாக வெளியே வந்தான் நிரஞ்சன்.


அவன் உள்ளே இருக்கிறானா? என்று அவள் பார்க்காமல் இருந்து விட இவனும் அப்பொழுது தான் குழாயை வேற மூடியதால் தண்ணீர் சத்தமும் கேட்கவில்லை.


இவள் திரும்பி நின்றவள் சரியாக திரும்பும் நேரம் இவன் தலையில் டவலைப் போட்டு மூடியபடி வரவும் இருவருமாக முட்டிக் கொள்ள கால் பிடறி சிற்பியின் மேல் விழுந்தான் நிரஞ்சன்.அவன் வேகமாக முகத்தில் இருந்த துணியை விலக்கவும் இருவரின் விழிகளும் ரொம்ப நெருக்கமாக இருந்தது.

சிற்பியின் மனது வேகமாக துடிக்க ஆரம்பித்தது.ஒருவித பதற்றமும் பயமும் தொற்றிக் கொண்டது.நிரஞ்சனும் அந்த நிலைமையில் தான் இருந்தான்.


அப்படியே சில வினாடிகள் தொடரவும் அப்பொழுது சரியாக உள்ளே வந்த சஹா இவர்கள் இருவரும் இருக்கும் நிலைமையை பார்த்து “இங்கே என்ன நடக்குது?” என்று கத்தவும் நிரஞ்சன் சுதாகரித்து எழுந்து நின்றான்.


அவன் தலைமுடியில் இருந்த நீர்ச்சொட்டு எல்லாம் இப்போது சிற்பியின் முகத்திலும் அவள் துணியிலும் பட்டு இருந்தது.அங்கே நிரஞ்சன் ஏதோ ஒருவரின் மேல் இருப்பதாக நினைத்தவனுக்கு அங்கே சிற்பியை காணவும் இதை மறந்து “சிற்பி வந்துட்டியா?” என்று அவனையும் மறந்து மகிழ்ச்சியின் மிகுதியில் கைகளை விரித்தப்படி அவளை அணைத்துக் கொள்ள போனான்.



 
  • Love
Reactions: shasri