• இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.
  • வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.
  • வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏

காதலில் விதிகள் ஏதடி 9

Malar Bala

Staff member
Jul 31, 2021
67
50
18
Thanjavur
அத்தியாயம் 9

நீண்ட நேரமாக ஆதிரை அறையிலிருந்து எந்தவித சத்தமும் இல்லாமல் வீட்டில் அனைவரின் முகத்திலும் பயம் குடிகொண்டிருந்தது. அடுத்து என்ன செய்யப் போகிறாளோ என்ற பதற்றம் அங்கு நின்றவர்கள் மட்டுமின்றி அந்த வீட்டின் வேலை ஆட்களிடமும் தெரிந்தது.

என்னதான் ஆதிரை வந்த புதிதில் அவளைப் பார்த்து அனைவரும் பயந்தாலும் இந்த இரண்டு மாதங்களில் அவளது குணத்தை அங்கிருந்த அனைவரும் புரிந்துகொண்டனர். அவளுடன் நன்றாக அனைவரும் பேசிப் பழகவில்லை என்றாலும் கூட அவள்மீது இருந்த பயம் காணாமல் போய் இருந்தது. எனவே ஆதிரையின் இந்தக் கோபம் அனைவரையும் பதற்றமாக்கி இருந்தது.

நீண்ட நேரம் ஆகியும் ஆதிரை வெளி வராததால் கயல் அவளது அறைக் கதவைத் தட்டத் தொடங்கினாள்.

“ஆதிரை. எதுவானாலும் பேசிக் கொள்ளலாம் ஆதிரை. இப்படிப் பேசாமல் இருந்தால் என்னவென்று எப்படித் தெரியும்?” என்றாள்.

அதற்கும் ஆதிரையிடம் இருந்தது எந்த விதப் பதிலும் வராமல் போகவும் கயல் மீண்டும்

“ஆதிரை... இது என்ன பழக்கம்? நீ கூறியதை போல அனைவரும் வந்து விட்டார்கள். இன்னும் கதவை” என்று அவள் கூறும் பொழுதே ஆதிரை கதவை வேகமாகத் திறந்து கொண்டு வெளியில் வந்தாள்.

வெளியில் வந்த ஆதிரையின் பார்வை தன் தாய்க்கும் தமையனுக்கும் பின் நின்று கொண்டிருந்த அவளது கணவனின் மீது பாய்ந்தது. அவள் தேவை வெறித்துப் பார்ப்பதைப் பார்த்த மீனாட்சி ஆதிரையிடம்

“ஆதிரை. தவறு என்மீது தான்மா” என்று வேகமாகப் பழியை தன்மீது போட்டுக் கொண்டார்.

ஆனால் ஆதிரை அதையெல்லாம் காதில் வாங்கும் மனநிலையில் இல்லை. அவள் கவனம் முழுதும் தேவாவிடமே இருந்தது. அது அவளது பார்வை அளவில் முடிந்து விடாமல் அவளது வார்த்தையிலும் தொடர்ந்தது. ஆதிரை தேவாவைப் பார்த்து மிகவும் அமைதியான குரலில்

“இவ்வளவு தான் பொய்களா? இல்லை இன்னும் மிச்சம் இருக்கின்றதா?” என்றாள்.

அவளது அமைதியே அவள் எந்த அளவு கோபமாக இருக்கிறாள் என்று அனைவருக்கும் உணர்த்தியது.

‘இப்போது தான் ஓரளவு அனைத்தும் சரியாகி வருவதைப் போல் இருந்தது அதற்குள் இப்படி ஆகிவிட்டதே’ என்று மீனாட்சிக்கும் மிகவும் வருத்தமாக இருந்தது.

ஆதிரையின் கேள்விக்குத் தேவாவிடமிருந்து எந்தவித பதிலும் வராமல் போகவும் அவளே மீண்டும் தொடர்ந்தாள்

“என்ன? கேள்விக்கும் பதில் வரவில்லையா? அல்லது இன்னும் எத்தனை பொய்கள் என்று கணக்கு வரவில்லையா?” என்றாள்.

மீனாட்சி வேகமாக “ஆதிரை இதில் தேவாவிற்கு எந்தச் சம்பந்தமும் இல்லைமா” என்றவரை இடைமறித்து ஆதிரை

“உங்கள் வயல் வீடு வெளி ஊரிலிருந்தது என்று எனக்கு இத்தனை நாட்கள் தெரியாதே! அதிலும் அது மல்லியிடம் செய்தி சொல்லிவிடும் அளவு தூரத்தில் இருக்கும் என்று நான் நினைத்துக் கூடப் பார்த்தது இல்லை” என்றாள்.

சில காலங்களாக வார்த்தைக்கு வார்த்தை வரும் அத்தை எனும் சொல் இப்போது வரவில்லை தான். அதையும் யாரும் கவனிக்கத் தவறவில்லை. ஆதிரை கத்தி ஆர்ப்பாட்டம் செய்யவில்லை தான், ஆனால் அவள் எத்தனை கோபமாக இருக்கிறாள் என்று அங்கிருந்த அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் சமாதானம் செய்யத்தான் யாராலும் முடியவில்லை. அவர்கள் அனைவரும் முழித்துக் கொண்டிருக்கும் பொழுதே அங்கே ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கியவர் வேறு யாரும் இல்லை, அந்த வீட்டின் தலைவர் சதாசிவம் தான்.

வெள்ளை வேஷ்டி சட்டையுடன் வீட்டின் உள்ளே மிகவும் கம்பீரமாக நடந்து வந்துகொண்டிருந்தார்.கொண்டிருந்தார். என்னதான் வீட்டின் தலைவர் மற்றும் ஊரில் பெரிய மனிதராக இருந்தாலும் அவையெல்லாம் நம் ஆதிரையின் கருத்தில் படுமா என்ன? அவரிடமும் தன் வார்த்தை போரைத் தொடர்ந்தாள்.

“வாருங்கள் மாமா… வெளி ஊர் பயணம் எல்லாம் நன்றாக அமைந்ததா?” என்றாள்.

ஆதிரை இன்று யாரையுமே விடும் எண்ணத்தில் இல்லைதான். ஆனால் சதாசிவம் இதை எதிர்நோக்கியே வந்தார் போல!

“ஐயோ! அம்மாடி ஆதிரை. நானும் உன் கட்சிதான் மா. அதனால் அம்பை என்மீது திருப்பாதே. எதுவானாலும் பேசித் தீர்த்துக் கொள்வோம்” என்றார்.

ஆதிரை அதற்கு எதுவும் சொல்லாமல் அமைதியாக நிற்கவும் சதாசிவமே தொடர்ந்து

”வேண்டுமானால் வெள்ளைக் கொடி கூடக் காட்டி விடுகிறேன்மா.” என்றார்.

இப்படிக் கூறுபவரிடம் என்னவென்று சண்டையிடுவது என்றே ஆதிரைக்குப் புரியவில்லை. அவள் புரியாமல் முழிக்கவும் அவரே தொடர்ந்து

“பேசித் தீர்க்க முடியாதது என்று எதுவும் இல்லையம்மா” என்றார்.

ஆதிரையும் விடுவதாக இல்லை “பேசினால் தான் பொய்யாக வருகிறதே!” என்றாள்.

அவரும் பதிலுக்கு “அதுசரி. உன்னிடம் வார்த்தை போரில் தோற்று விட்டேன். இப்பொழுதாவது என் வெள்ளைக் கொடியை ஏற்றுக் கொள்கிறாயா?” என்றார்.

அவர் கூறிய தொனியில் ஆதிரைக்குச் சிரிப்பு வந்துவிட்டது. இதற்கு மேல் இவரிடம் என்னவென்று மல்லுக்கட்டுவது என்று நினைத்துக் கொண்டாள். ஆனால் வீட்டில் கயல் உட்பட யாரிடமும் அவள் பேசத் தயாராக இல்லை.

ஆதிரையின் மனவோட்டத்தைச் சதாசிவமும் புரிந்து கொண்டார்.

“வாமா. நீண்ட நாட்கள் கழித்து வீட்டுக்கு வந்து உள்ளேன். சேர்த்துச் சாப்பிடுவோம்.” என்று அவளை அழைத்தார்.

ஆதிரை இந்த இரண்டு மாதங்களில் அங்கு நன்றாகப் பழகி இருந்தாலும் கூட அவளிடம் மாறாத குணமாக இருந்தது தன் அறைக்குள்ளே சாப்பிடுவதும், தன் அறையைத் தவிர அந்த வீட்டிற்குள் வேறு எங்கும் போகாததும் தான். ஆனால் இன்று சதாசிவம் கூப்பிடவும் இதை எப்படி அவரிடம் கூறுவது என்று புரியாமல் நின்றுகொண்டிருந்தாள்.

என்னதான் சதாசிவம் அந்த வீட்டில் தங்கவில்லை என்றாலும்கூட ஒரு வீட்டின் தலைவராக அந்த வீட்டில் நடப்பவை அனைத்தையும் தன் மனைவி மூலமாகவும் தன் மூர்த்த மகன் மூலமாகவும் தினமும் கேட்டுத் தெரிந்து கொண்டுதான் இருந்தார். அப்படி உள்ளவர் ஆதிரையைச் சாப்பிட அழைக்கவும் அதுவும் மாலை வேலையில் அழைக்கவும் யாருக்கும் எதுவும் புரியவில்லைதான். இருப்பினும் அவரது செயலுக்குப் பின் எந்த ஒரு பின் நோக்கும் இல்லாமல் இருக்காது என்று அந்தக் குடும்பத்தினருக்குத் தெரிந்திருந்ததால் யாரும் எதுவும் பேசாமல் நின்று கொண்டிருந்தனர்.

சதாசிவம் தொடர்ந்து “மதியம் வேறு சாப்பிடவில்லை பசிக்கிறது” என்று கூறவும் ஆதிரை அவருடன் உணவு உண்ணச் சம்மதித்தாள்.

பிறகு ஆதிரையை அவர் அந்த வீட்டிற்குள் அழைத்துச் சென்றார். இந்த இரண்டு மாதங்களில் ஆதிரை அவளது அறையைத் தான்டி வீட்டிற்குள் செல்வது இதுவே முதல்முறை. அவளது உணவு அவளது அறைக்கு வந்துவிடும் என்பதாலும் அவளது அறைக்குள்ளேயே அனைத்து வசதிகளும் இருந்ததாலும் அவள் இதுவரை எந்தத் தேவைக்காவும் அந்த வீட்டினுள் சென்றது இல்லை. அதற்கு ஏற்றவாறு அவளது அறையும் முதலாவதாகவே இருந்தது. கயலுடன் சேர்ந்து அங்கிருந்த தென்னை தோப்பில் நேரம் செலவிடுவதைப் போக மீதி நேரத்தில் எல்லாம் அவளது அறையினுள் தான் இருந்து வந்தாள்.

இன்று சதாசிவம் அழைக்கவும் வேறு வழியின்றி உள்ளே செல்ல வேண்டியதாகி விட்டது. முதல்முறையாக அந்த வீட்டினுள் செல்வதைப் போலவே ஆதிரைக்குத் தோன்றவில்லை ஏற்கனவே அவளுக்கு மிகவும் பழக்கப்பட்ட இடம்போல் தோன்றியது அவளுக்கு. வீடு மிகவும் பெரியதாகவும் அழகாகவும் இருந்தது. அதற்கு ஏற்றவாறு வீட்டை மிகவும் சுத்தமாக வைத்திருந்தனர்.

‘நேராக வீட்டினுள் சென்றாள் இரண்டு அறைகள் தான்டி வலது புறமாகத் திரும்பினால் சமையல் அறையும் இடது புறமாகத் திரும்பினால் சாப்பிடும் அறையும் வரும் தானே!’ என ஆதிரை நினைப்பதைப் போலவே அந்த வீடு இருந்தது ஆதிரைக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

இதுவரை பார்த்திராத ஒரு வீடு எப்படி அச்சு அசலாக அவளது நினைவில் இருக்கிறது என்றே அவளுக்குப் புரியவில்லை.

“ஆதிரை! அப்படி என்னம்மா சிந்தனையில் இருக்கிறாய்?” என்ற சதாசிவத்தின் குரல் ஆதிரையைச் சிந்தனை உலகத்திலிருந்து நிகழ்வுலகத்திற்குக் கொண்டு வந்தது.

சதாசிவத்தின் கேள்வி அவளது கருத்தில் படவும் தனது சிந்தனையை அவரிடம் கூறாமல் மறைத்து விட்டாள். அவளுக்கே புரியாத விசயத்தை யாரிடமும் கூற அவள் மனம் வரவில்லை. அதற்கு மாறாக

“நீங்கள் ஏன் வீட்டிற்கு வரவில்லை என்று யோசித்துக் கொண்டிருந்தேன்” என்றாள்.

“நிச்சயம் கூறுகிறேன்மா. பதில் கூறாமல் ஓடும் அளவு கூட உடம்பில் சக்தி இல்லை. பாவம் நான், வயதாகி விட்டது அல்லவா?” என்றார்.

ஆதிரை அதற்கும் எந்தவித பதிலும் கூறாமல் பார்த்துக் கொண்டே இருக்கவும் சதாசிவமும் விடாமல் தொடர்ந்து

“என்ன ஆதிரை அப்படிப் பார்க்கிறாயே! அவ்வளவு மோசமாகவா நகைச்சுவை செய்கிறேன்?” என்றார்.

ஆதிரையும் பதிலுக்கு “நகைச்சுவை மட்டும் தானே வருகிறது, எனது கேள்விக்கான பதில் வரவில்லையே! அதைத்தான் பார்க்கிறேன். எப்பொழுது வரும் என்று” என்றாள்.

“அதானே பார்த்தேன். உன் தாயைப் போல அதே பிடிவாதம்.” என்றவர் அவரே தொடர்ந்து

“என்னுடன் அமர்ந்து உணவு உண்டால் கூறுகிறேன்” எனக் கூறி அவளையும் அவருடன் சேர்த்துக் கொண்டார். இருவரும் உணவு உண்ண அமர்ந்தபின் மீனாட்சி அவர்களுக்கு உணவு பரிமாறத் தொடங்கினார். மீனாட்சி பரிமாறி முடிக்கவும் சதாசிவம் அங்கு நின்று அடுத்து என்ன நடக்க இருக்கின்றது என்று ஆவலாகப் பார்த்துக் கொண்டிருந்த குடும்பத்தினர்களிடம் திரும்பி

“எனக்குத் தெரிந்து நாங்கள் இருவரும் உணவு தான் உண்ணப் போகிறோம். வேறு எதுவும் இங்குக் கண்காட்சி நடத்தும் எண்ணம் இல்லை. அதற்காகக் காத்திருந்தீர்கள் என்றாள் மன்னிக்கவும்” என்றவுடன் அங்கிருந்த அனைவரும் செல்வதற்கு மனமின்றி அங்கிருந்து சென்றனர்.

என்னதான் சதாசிவம் நகைச்சுவை கலந்து கூறினாலும் கூட அது அவர்களுக்கு வைத்த குட்டுதான் என்று ஆதிரையும் புரிந்து கொண்டாள். அதற்குள் மீனாட்சியும் பரிமாறி முடிக்கவும் சதாசிவம் அவரையும் அனுப்பி விட்டார். தன் கணவன் மருமகளுடன் தனியாகப் பேச விரும்புகிறாரென அறிந்ததும் மீனாட்சியும் அமைதியாக விலகிவிட்டார்.

இத்தனை ஆண்டுக் கால திருமண வாழ்க்கையில் மீனாட்சி தன் கணவனைப் பற்றி நங்கு புரிந்து வைத்திருந்தார். அவர் ஆதிரையிடம் பேசுகிறார் என்றால் நிச்சயம் இந்தப் பிரச்சனை தீர்ந்து விடும் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்ததால் மீனாட்சி சிறிது அமைதியானார். தேவாவும் சதாசிவம் மீண்டும் வீட்டிற்கு வந்ததுமே இந்தப் பிரச்சனையை அவர் சுலபமாகத் தீர்த்து விடுவர் என்ற நம்பிக்கையிலிருந்தான்.

ஆனால் ஆதிரையோ சதாசிவம் என்னதான் கூறப் போகிறார் என்று பார்ப்போம் என்ற மனநிலையில் தான் இருந்தாள். அனைவரும் போனபிறகு ஆதிரையைச் சாப்பிடக் கூறியவர், அவரும் அவளுடன் உண்டுகொண்டே

"ஆதிரை நான் சென்றதை உன்னிடம் யாரும் கூறவில்லை என்றுதான் கோபமாக இருக்கிறாய் என்று கேள்விப்பட்டேன்" என்று அவர் கூறவும் ஆதிரை, தான் உண்டு கொண்டிருந்ததை நிறுத்திவிட்டு அவரைப் பார்த்தாள்.

"சாப்பிடும்போது சாப்பாட்டைப் பாதியில் நிருத்த கூடாது. அதே போல அதை வீணாக்கவும் கூடாது. அது இரண்டும் எனக்குப் பிடிக்காதுமா." என்றார். அவரது பேச்சில் அதிகப்படியான கண்டிப்பும் அதில் கலந்திருக்கவும் ஆதிரை புரியாமல் முழித்தாள். எனவே அவரே தொடர்ந்து

"நமது தொழில் விவசாயம் தானேமா… ஒரு நெல்லை சாதமாக மாற்றித் தட்டில் சேருவதற்கு எவ்வளவு கஷ்டத்தை ஒரு விவசாயி கடக்க வேண்டும் தெரியுமா?" என்றார்.

ஆதிரை எதுவும் கூறாமல் அவரை ஆச்சரியமாகப் பார்க்கவும் சதாசிவம் "என்னமா? அப்படி என்ன ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறாய்?" என்றார்.

ஆதிரை "இல்லை. சாப்பாட்டை நானோ அல்லது விக்ரமோ மீதி வைத்தால் அம்மா இதே வார்த்தைகள் தான் கூறுவார்கள். இதே கோபத்துடனும் கூட… அதைத்தான் பார்த்தேன். ஆனால் நான் இப்போது சாப்பாட்டை வைக்கப் பார்க்கவில்லையே" என்றாள்.

"நான் பேசத் தொடங்கவும் சாப்பிடுவதை நிறுத்தி விட்டு என்னைப் பார்த்தாய். அதே போல் மேலே பேசப் போவதையும் கேட்டுப் பாதியில் எழுந்துவிடக் கூடாது அல்லவா? அதனால்தான் முன்பாகவே கூறிவிட்டேன்" என்றவர் அவரே தொடர்ந்து

"ஆதிரை. நான் கூறுவதைப் பொறுமையாகக் கேட்பாய் என்று நம்புகிறேன்.” என்றார்.
தொடரும்...
 

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,612
668
113
44
Ariyalur
ஆஹா ஆதிரை சதாசிவம் பேச்சை கேட்கிறாள், அப்படின்னா ஏற்கனவே அவர ஆதிரைக்கு நல்லா தெரியுமோ 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
இருக்கலாம் இருக்கலாம் பாப்போம் அடுத்த epi ல 🙄🙄🙄🙄🙄🙄🙄
 
  • Love
Reactions: Malar Bala

Malar Bala

Staff member
Jul 31, 2021
67
50
18
Thanjavur
ஆஹா ஆதிரை சதாசிவம் பேச்சை கேட்கிறாள், அப்படின்னா ஏற்கனவே அவர ஆதிரைக்கு நல்லா தெரியுமோ 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
இருக்கலாம் இருக்கலாம் பாப்போம் அடுத்த epi ல 🙄🙄🙄🙄🙄🙄🙄
❤️❤️❤️❤️