• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அக நக முகநகையே ... 3

சசிகலா எத்திராஜ்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
17
3
3
Karur
அத்தியாயம்…3

தனலட்சுமி மனமோ அல்லாடியது…. இப்ப இங்கே வந்த காரணத்தைக் கேட்டால் மகன் என்ன சொல்வானோ என எண்ணியவருக்கு எப்படியும் சொல்லித் தான் ஆகணும் என நினைக்கும் போதே தாயின் மடியில் படுத்திருந்தவன் எழுந்து அமர “ஏன் கண்ணு? இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாமலே” எனக் கேட்டவரைப் பரிவுடன் பார்த்தவனோ “எவ்வளவு நேரம் தூங்கிருக்கேன்… குட்டி எழுந்திருப்பாளே இந்நேரம்…. உங்க மடியிலே படுத்தாலே நேரம் போவதே தெரியாது மா… நல்ல தூக்கம்’’... என்றவன்…. ‘’கால் வலிக்கதா மா’’ எனத் தான் படுத்திருந்த காலைப் பிடித்து விட ‘’அதெல்லாம் வலிக்காது கண்ணு. பிள்ளை கணம் வலி தெரியாது…. சிட்டு எழுந்துட்டா…. வைசாலி பால் ஆற்றிக் கொடுத்துவிட்டு கூட விளையாடிக் கிட்டு இருக்கா’’ எனச் சொல்லவும் தலையாட்டியவன் எழுந்து முகம் கழுவி விட்டுத் தனக்கும் அம்மா தங்கைக்கும் காபி போட்டவனைப் பார்த்தபடி அமர்ந்திருந்தார் தனலட்சுமி.

ராஜா மாதிரி உட்கார்ந்து வேலை வாங்கிற அளவுக்குத் திறமை இருந்தாலும் இப்ப இங்கே அவனின் நிலமை மனைவியிடம் கேட்க வேண்டிதாக இருக்கேயெனத் தோன்ற காபி போட்டு எடுத்தவனோ ‘’வைசாலி’’ என அழைத்தபடி தாய்க்கு ஒரு டம்ளரைக் கொடுத்து விட்டுத் தங்கையைத் தேட அவளோ வெளியே இருந்து உள்ளே வந்தவள் ‘’அண்ணே முகி குட்டி தெருவிலே இருக்கிற எல்லாரையும் தெரிந்து வைத்திருக்கிறாள் …. எல்லாரையும் கை நீட்டி ஆ ஊ ஆர்ப்பரிப்பு தான்’’ எனக் குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டபடி அவர்களின் அருகே வந்தாள் வைசாலி.

‘’ஆமாடா … உன்னை மாதிரி அறுந்தவாலு…. ஊரே நீ சுத்துவது போல…. இங்கே முகி செய்றா’’ எனச் சொல்லிச் சிரித்தவனிடம் சிணுங்கிய வைசாலி…. ‘’போ அண்ணே’’ என்றவளிடம் காபி கப்பை நீட்டியவன்.... ‘’நீ காபி குடி’’…. எனக் கொடுத்தான் பாரிவேந்தன்.

சிறிது நேரம் ஊர் கதை பேசியபடி குழந்தையின் மழலை பேச்சிலும் நேரம் போவது தெரியாமல் பேசிக் கொண்டிருக்க….’’அச்சோ… நைட் சிக்கன் வாங்கிட்டு வந்தேன் செய்வதற்கு’’ என்று எழுந்த பாரியைக் கண்ட தனத்திற்கு சுரீர் எனக் கோபம் எகிறியது…

‘’ஏன்டா மூன்று நேரமும் நீயே செய்வாயா…. உன் பொண்டாட்டி ராத்திரி சாப்பாடு கூடச் செய்யமாட்டாளா’’…. எனக் கத்தியவரை அமைதியாகப் பார்த்த பாரி…. ‘’அம்மா அவ வந்துருவா… அவளுக்கு இன்று ஏதோ வேலை அதிகம் சொல்லிட்டு தான் போனாள். போறப்பவே வைசாலிக்குச் சிக்கனும் மீனும் பிடிக்கும். வாங்கிட்டு வாங்க சொல்லிட்டு தான் போனாள்’’…. என்றவன் ‘’உங்களுக்குக் களைப்பாக இருக்கும். கொஞ்ச நேரம் போய்ப் படுங்க. நான் பார்த்துக்கிறேன்’’ எனச் சொல்லிவிட்டு கிச்சனுக்குள் நுழைந்துவிட்டான் பாரிவேந்தன்.

மகன் பேசியதைக் கேட்டவரோ முணுமுணுத்தபடி செல்ல வைசாலிக்கு இதையெல்லாம் பார்த்ததும் மனதிற்கு கஷ்டமாக இருந்தாலும் இடையில் எதுவும் பேசாமல் முகிழினி கூட ஐக்கியமாகிவிட்டாள்.

கிச்சனுக்குள் நுழைந்தவனோ மளமளவென்று இரவு உணவைத் தயார் பண்ணியவன் எல்லாம் டைனிங் டேபிளில் எடுத்து வைத்துவிட்டு நேரம் பார்த்தால் இரவு எட்டு மணி ஆகிவிட்டது.

இன்னும் மனைவி வரவில்லை… போனும் பண்ணவில்லையே… என நினைத்துத் தன் அலைபேசியிலிருந்து குந்தவைக்கு அழைக்க அதுவோ சுவிட்ச் ஆப் என வரவும் என்னாச்சோ என்ற பதட்டம் அவனுள் உருவானாலும் தாய் தங்கை முன் காட்டிக் கொள்ளாமல் மகளுக்கு உணவை ஊட்டி விட்டு மற்ரவர்களை சாப்பிட சொல்லத் தனத்திற்கு அளவுக்கு அதீதமான கோபம் ஏற்பட்டது.

தாங்கள் வருகிறோம் எனத் தெரிந்து தான் மருமகள் இப்படி பண்ணுகிறாளோ என்கிற எண்ணத்தில் ‘’ஏன் இன்னும் குந்தவை வரல பாரி?.. இவ்வளவு நேரமாச்சு. தினமும் இப்படி தான் வராளா’’ எனக் கோபத்தை அடக்கிய குரலில் கேட்டார்…

‘’இல்லம்மா காலையில் போகும் போதே சொல்லிவிட்டுத் தான் சென்றாள் வேலை அதிகம்’’ என்று சொல்லியவன் ‘’நீங்கச் சாப்பிடுங்கள். அவள் வந்திருவாள்’’ எனச் சொல்லியவனோ ‘’வைசாலி நீயும் அம்மாவும் உட்கார்ந்து சாப்பிடுங்க…. நான் பாப்பா கூட வெளி காற்றில் கொஞ்ச நேரம் வைத்திருக்கிறேன்’’ எனச் சொல்லிவிட்டு முகிழினியை தூக்கிக் கொண்டு வெளியே சென்றான் பாரிவேந்தன்.

ஏன் இன்னும் குந்தவை வரல? போன் சுவிட்ச் ஆப்னு வரது. அவனுள் ஒரு நடுக்கம் உருவாக இருந்தாலும் மீண்டும் மீண்டும் மனைவியின் அலைபேசி வேலை செய்யாதா என்ற எண்ணத்தில் அழைத்துக் கொண்டே இருந்தான் பாரிவேந்தன். வர லேட்டாகச் சொல்லிட்டு போனவள் திரும்ப இன்று கூப்பிடவே இல்லை… இவன் மதியம் சாப்பாட்டு நேரம் அழைப்பான் தான் தினமும். அம்மா தங்கை கூட இருக்கும் நேரத்தில் அவர்களோடு பேசிக் கொண்டே இருந்ததில் மறந்து போனான் பாரி.

நான் தான் அழைக்கவில்லை. அவளாவது அழைத்திருக்கலாமலேயெனத் தோன்றாமல் இல்லை. ஆனால் அவளுக்குக் கம்பெனிக்குள் நுழைந்துவிட்டால் போதுமே வேலை தோழிகள் என இருந்துவிடுவாளேயென மனதிற்குள் திட்டியபடியே வெளியே நடந்து கொண்டிருக்க முகிழினியும் அப்பாவின் தோளில் படுத்து உறங்கியும் விட்டாள்.

அவளை உள்ளே படுக்க வைக்கச் சென்றவன் தங்கள் அறையில் படுக்க வைத்து இருபக்கமும் தலையணையை வைத்துவிட்டு வெளியே வர வைசாலியிடம் ‘’நாம வந்தால் தான் உன் அண்ணி இன்னும் வரல போல…. உன் அண்ணுக்காகத் தானே இங்கே வரேன்’’…. என அம்மா முணுமுணுப்பதைக் கண்டு சிறு கோபம் எழுந்தது.

சின்னப் பெண்ணிடம் எதைச் சொல்லணும் சொல்லக் கூடாது தெரியாதா என நினைத்தவன் அவர் பேசுவதை காதில் வாங்காமல் மீண்டும் வெளியே வந்தான் பாரிவேந்தன்.

மேலும் அரைமணிநேரம் கழித்தே குந்தவை தன் வண்டியில் வந்தவளோ மிகவும் சோர்வான மனநிலையும் களைப்புமாக இருந்தவள் வண்டியைப் போர்ட்டிகோ முன் நிறுத்த அங்கே திண்மையான கரங்களை இறுகக் கட்டிக் கொண்டுக் கூர்மையான பார்வையோடு நின்றிருந்த பாரியை கண்டவளுக்கு ‘என்னாச்சு இவருக்கு’ என நினைத்தவளோ வேலை மிகுதியில் மாமியார் நாத்தனார் இன்று வருவதை சுத்தமாக மறந்துவிட்டாள் குந்தவை.

‘’என்ன பாரி பாப்பா தூங்கிட்டளா’… வெளியே நிற்கிறீங்க"... என்றவள் வீட்டினுள் நுழைய அங்கே அறையிலிருந்து வெளியே வந்த தனலட்சுமி ‘’வாம்மா மருமகளே…. வீட்டிலிருந்து நீ தான் வாங்கனு கூப்பிடல. அது தான் நான் உன்னைக் கூப்பிடறேன்''.... என அழைத்தக் குரலில் இருந்த பிடித்தயின்மையை அதிகமாக இருப்பதை உணர்ந்தாலும் ‘’சாரி அத்தை வேலை அதிகம் … அது தான்’’ என்றவள் ‘’வாங்க வாங்க அத்த.... கூட வைசாலியும் வந்திருக்காளா… சாப்பிட்டிங்களா இரண்டு பேரும்’’…. எனக் கேட்க

‘’ம்ம்… அதெல்லாம் என் பிள்ளை எல்லாம் செய்து கொடுத்தான்… தினமும் இப்படி லேட்டா வந்தால் புருசன் புள்ளையை யார் கவனிப்பா’’ எனச் சொல்லியவரை இதற்கு மேலே பேச விட்டால் இங்கே பெரும் பூகம்பம் வெடிக்கும் என உணர்ந்தவளோ எதுவும் பேசாமல் தங்கள் அறைக்குள் நுழைந்து விட்டாள் குந்தவை.

மனைவியும் அம்மா பேசுவதைக் கேட்டாலும் அவர்கள் வந்தது பிடிக்காமல் தான் இவ்வளவு நேரம் கழித்து வருகிறாளா என மனதினுள் ஒரு ஓரத்தில் ஒரு துளி உறுத்துக் கொண்டிருந்தது.

‘’அம்மா நீங்கப் போய்த் தூங்குங்க…. காலையில் எழுந்து பேசிக்கலாம்’’ என அம்மாவை அறைக்கு அனுப்பியவன் தங்கள் அறைக்கு நுழையக் குந்தவையோ சோர்ந்து போய்ப் படுக்கையில் சாய்ந்திருந்தால் குழந்தையின் அருகில்…. உடை கூட மாற்றாமல் களைப்போடு அமர்ந்திருப்பவளை நெருங்கிய பாரியின் முகம் இறுகி இருந்தாலும் மனைவியின் சோர்வு மனத்தைப் பிசைந்தது.

‘’குந்தவை போய் உடையை மாற்றிவிட்டு வா … சாப்பிடலாம்’’ என அழைக்க அவளோ ‘’சாரிங்க இன்னிக்கு அத்தையும் வைசாலியும் வருவதை மறந்து விட்டேன். வேலை அதிகமாக இருந்தால் தான்’’ என்றவளிடம் துண்டை எடுத்து நீட்டியவனோ எதுவும் பேசாமல் குழந்தையின் அருகே அமர்ந்து விட்டான் பாரிவேந்தன்.

‘’சாரிங்க’’ என மீண்டும் அவனின் தோளில் கரங்களை வைத்து ஒரு முறை கேட்டவளை வெறுமையான பார்வையோடு பார்த்தவனோ அவளின் கரத்தை விலக்கிக் கொண்டு ‘’நேரமாச்சு குந்தவை. உனக்கும் பசிக்கும்’’ எனச் சொல்லியவன் எழுந்து வெளியே செல்லக் கணவனின் மௌன கோபம் அவளுக்குப் புரிந்தது.

இன்று கம்பெனியில் தான் எடுத்திருந்த பிரஜெக்ட்டில் மற்றவர்கள் செய்த குளறுபடியால் எல்லாவற்றையும் சரிபண்ண முயன்றாலும் இன்னும் முடிக்க முடியாமல் கோபமும் அதை மற்றவர்களிடம் காட்ட முடியாத நிலையும் இதைச் சரிப் பண்ணியே ஆகணுமேயெனத் திணறியவள் வீட்டில் போய்ப் பார்த்துக் கொள்ளலாம். வீட்டிலிருந்து கான்பிரன்ஸ் மீட்டிங் எல்லாரையும் இணைத்து எங்குத் தவறானது பார்ப்போம் என நினைத்து வந்தவளுக்கு இங்கே கணவனின் மௌன கோபமும் மாமியாரின் வார்த்தைகளும் அவளுக்குள் சிறு அனலை மூட்டியது.

விரைவாகக் குளித்து நைட்டியை மாற்றியவள் மகளுக்குப் போர்வை இழுத்துவிட்டு தலையை வருடி நெற்றியில் முத்தமிட்டு வெளியே வர அங்கே பாரிவேந்தன் தனக்காக டைனிங் டேபிளில் அமர்ந்திருப்பதைக் கண்டு வேகமாக அங்கே சென்றாள் குந்தவை.

‘’வாசமே தூக்குதே! சிக்கன் பிரியாணி செய்தாயா பாரி” எனக் கேட்டபடி அவனுக்கு ஒரு தட்டில் பறிமாறிவிட்டு தனக்கு ஒரு தட்டில் எடுத்துக் கொண்டு அவனின் அருகே அமர்ந்தவள் “அத்தையும் வைசாலியும் சாப்பாட்டாங்களா”… எனக் கேட்டவளை வெற்று பார்வையோடு பார்த்தவன் எதுவும் பேசாமல் சாப்பிட்டுக் கொண்டிருக்க… அது அவளின் மனத்தைத் தைக்க “சாரி பாரி இன்று வேலை அதிமாயிருச்சு அது தான்”…. என்றவளை “நான் எதும் கேட்கல குந்தவை நீ சாப்பிடு…. ரொம்ப நேரமாச்சு” என ஒட்டாத குரலில் பேசியவனிடம் வேறு எதுவும் பேச முடியாமல் வீம்பாகத் திரும்பிக் கொண்டவளோ இத்தனை முறை சாரி கேட்டாலும் ரொம்ப தான் முஞ்சியை மூஞ்சுறு மாதிரி தூக்கி வைத்திருக்கானென மனதிற்குள் கடுகாய் தாளித்தபடியே சாப்பிட்டு முடிக்க அதற்கு முன் உண்டவனோ

எல்லாவற்றையும் ஒதுங்க வைக்க அவளும் சாப்பிட்டு முடித்து எழுந்து அவனுக்கு உதவ வர அவனோ “நீ போய்ப் படு குந்தவை. இந்த வேலையை நான் பார்த்துக்கிறேன்” என அழுத்தமான குரலில் சொல்லியவனை முறைத்தாள் குந்தவை.

“தினமும் சேர்நது தானே செய்வோம் இன்னிக்கு மட்டும் ஏன் வேண்டாம் சொல்லற…. வேலை அதிகம் அதனால் தான் வர லேட்டாயிருச்சு…. அத்தை வருவதை மறந்து விட்டேன்…. அதற்குத் தான் சாரி கேட்டேன்ல திரும்பவும் இப்படி யாரோ போல மூஞ்சியை தூக்கி வைத்துப் பேசிகிட்டு இருக்க” எனச் சொல்லியவளை ஊடுருவிப் பார்த்தவனோ “அவர்கள் வருவதை மறந்து விட்டதா இல்லை அவர்கள் வருவது பிடிக்காமல் லேட்டாக வந்தாயா” எனச் சுருக்கென்று கேட்டவனை கோபத்துடன் முறைத்தவளோ எதுவும் பேசாமல் சட்டென்று தங்கள் அறைக்குள் நுழைந்தவள் அங்கிருந்த மேசையின் அருகே போனவளோ இருக்கையில் அமர்நது தன் லேப்டாப்பை எடுத்து வைத்து மீட்டிங் எல்லாருக்கும் அழைத்தவளின் உள்ளமோ சோறுயின் கொதிநிலை
யாகக் கொதித்தது.

தொடரும்...

மக்களே கதை எப்படி இருக்கு கூறுங்கள்...