• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அச்சம் தவிர் அனிச்ச மலரே 🌷 31

சக்திமீனா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 27, 2021
92
62
18
Tamilnadu

e9f0ee43992ba4e57fd1776a3fa05b44.jpg



அத்தியாயம் 31

பாஸ், ஒரு பைக் வருது”, அவன் சொல்ல, இருக்கையில் நிமிர்ந்து அமர்ந்து, கொலை செய்ய தயாரானவன்,

பைக் நம்பர பார்றா”, என்றபடி பைக்கை உற்று நோக்கினான்.

அதே நம்பர் தா பாஸ். வர்றது செழியன் பைக் தா”, அவன் சொல்ல, தன் கையிலிருந்த எஃப்.என் ஃபைவ் செவென் துப்பாக்கியில் சைலன்சரை மாட்டி திருகினான் மற்றையவன்.

சைலன்சரின் முனை பைக் ஓட்டி வந்த செழியனை குறி பார்த்த போது, காரின் முன் பக்க கண்ணாடியில், சூரியக் கதிர்களை போல் விரிசல் வரைந்து, அதன் நடுவில் துளையிட்டு வந்த துப்பாக்கி குண்டு, துப்பாக்கி ஏந்தியவனின் நெற்றியில் பாய்ந்தது.

ஆ”, என்ற ஒற்றை அலறலோடு இருக்கையில் சாய்ந்தவனின் நெற்றிப் பொட்டிலிருந்து ரத்தம் பீறிட்டு வழிய, குண்டு வெடித்த சத்தம் கேட்டு, திடுக்கிட்டு, காருக்கு அருகே, பைக்கை நிறுத்தினான் செழியன்.

அடுத்த இரண்டே விநாடிகளில் செம்பனின் பைக், செழியனின் பைக்கருகே வந்து நின்றது.
எதிர்த் திசையிலிருந்து வந்து நின்ற பைக்கில்லிருந்த, வாலிபன் விரலுயர்த்தி தம்ஸப் காட்ட, செம்பன் தன் கையிலிருந்த கைத்துப்பாக்கியை உயர்த்தி காட்டினார்.

இருவரும் சிரித்துக் கொள்ள செழியனும் சாரதியும் புரியாமல் பார்த்தனர்.

அப்துல்”, பைக்கிலிருந்து இறங்கிய சுவாதி சொல்ல, அந்த புதிய வாலிபன் சிரித்தான். சாரதி இறங்கினான்.

இறந்து போனவனின் அருகில் இருந்தவன் கார்க் கதவை திறந்து ஓடினான். பைக்கை அப்படியே போட்டு விட்டு அவனை துரத்திக் கொண்டு ஓடினான் அப்துல்.

என்ன சார் நடக்குது?”, சாரதி புரியாமல் கேட்டான்.

சுவாதி நடந்ததை விளக்கி சொன்னாள். செழியன் அதிர்ந்தான், மதிவாணன் தன்னை கொலை செய்ய முயன்றதால் அல்ல!! சுவாதியின் காதலை கேள்வியுற்று.

சாரிடா, என்னாலதா ஒனக்கிந்த கஷ்டம்”, சுவாதி சொல்லி அழுதாள்.

இப்போ பேசிட்டுருக்க டைமில்ல ஸ்வாதி. சந்த்யா வாஸ் மிஸ்ஸிங்க். நா அவள தேடி கண்டுபிடிக்கணும்”, என்ற செழியன் பைக்கின் கிக்கரை உதைத்தான்.

சாரதி பின்னால் தொற்றிக் கொள்ள,

சாரி சார், சந்த்யாவ பாத்துட்டு நேரா போலிஸ் ஸ்டேஷனுக்கு வந்துர்றேன்”, செழியன் சொல்லி முடிக்கும் போது அவனது பைக், பறக்க தொடங்கியிருந்தது.

சுவாதி புரியாமல் பார்த்தாள்.

சில நிமிடங்களுக்கு பிறகு அப்துல், இருள் நிறைந்த காட்டுப் பகுதிக்குள் இருந்து வெளி வந்தான். மூச்சுகளை வாங்கினான், விட்டான். தன்னிரு கைகளால் தன் முட்டிகளை பிடித்து மூச்சிறைக்க நின்றான்.

எஸ்கேப் ஆயிட்டான் சார்”, என்றான்.

எப்டி சார் இது? உங்க கையில இருக்ற துப்பாக்கி யாரோடது?”, சுவாதி செம்பனிடம் கேட்டாள்.

நீ செழியனுக்கு ஆபத்துன்னு சொன்னதுமே, நா அப்துல்கிட்ட ஆஃபீஸ சுத்தி சந்தேகப்படுற மாதிரி யாராவது, நடமாட்டம் இருக்கான்னு செக் பண்ண சொன்னேன். அப்துல் தா இவனுங்கள பத்தி தகவல் சொன்னான். இவன் ஒரு புரொஃபெஷனல் கில்லர். ரொம்ப காஸ்ட்லி கில்லர். இவன கொன்னா கேஸ்ஸில்ல, அவார்டு குடுப்பாங்க. பல நாட்டு கவர்ன்மென்ட் இவன வலை விரிச்சு தேடிட்டுருக்கு”, செத்து கிடந்தவனை காட்டி சொன்னார் செம்பன்.

இந்த கன்?”, செம்பனின் கையிலிருக்கும் துப்பாக்கியை பார்த்து கேட்டாள்.

டோண்ட் வொர்ரி சுவாதி, இது என்னோட கன், லைசன்ஸ்டு கன். இவன் என்னை கொல்ல வந்தான், என் தற்காப்புக்காக சுட்டேன்னு போலிஸ்கிட்ட சொல்லுவேன். நீ கெளம்பு”, சுவாதியிடம் சொன்னார் செம்பன்.

சுவாதி புரியாமல் பார்த்தாள்.

போலிஸ் இங்க வரும் போது, நீ இங்க இருந்தா, நீ ஏன் எங்கூட பைக்ல வந்தன்னு கேள்வி வரும். செழியன் பத்தி, ஒங்கப்பா பத்தி சொல்ல வேண்டி வரும்”, செம்பன் சொல்ல,

வரட்டும் சார், சொல்லுவோம், எங்கப்பா மேல கேஸ் போடுவோம்”,

கேஸ் ஒங்கப்பா மேலயில்ல, எங்க மேலதா போடுவாங்க”, சொன்னான் அப்துல்.

சுவாதி கண்கள் சுருக்கி பார்த்தாள்.

என்ன பாக்குற? லோக்கல் போலிஸ் ஸ்டேஷனுக்கு கால் பண்ணி, செழியன கொலை பண்ண ட்ரை பண்றாங்கன்னு சொன்னேன். ஒடனே கால் கட்டாகுது. அடுத்து ட்ரை பண்ணா, ஃபோன் எங்கேஜ்டுன்னு வருது. ஐ ஜிக்கு கால் பண்ணா கால் எடுக்க மாட்டேங்குறாரு. நடந்த உண்மைய சொன்னா போலிஸ் கேஸ் எழுதுவாங்கன்னு நெனைக்குறியா? வாய்ப்பே இல்ல”, அப்துலின் கேள்வி சுவாதிக்குள் அதிர்வலைகளை உருவாக்கியது.

நடந்த விஷயத்த நடந்த மாதிரி போலிஸ்கிட்ட சொன்னா, சட்டத்த கையில எடுக்க நீங்க யார்னு செம்பன் சார்கிட்ட கேப்பாங்க. ஹூம்”, ஏளனமாக சிரித்த அப்துல் தொடர்ந்து சொன்னான்,

ஒனக்கும் இந்த கொலைகாரனுக்கும் என்ன சம்மந்தம்? நீ எந்த டெர்ரரிஸ்ட் இயக்கத்த சேந்தவன்னு என்னைய கேப்பாங்க?”,

அவள் புரியாமல் பார்த்தாள்.

எம்பேரு அப்துல் மா. போலிஸ் என்னை டெரரிஸ்ட்டாதா பாக்கும்”, அப்துல் சொன்னான்.

அவள் அதிர்ந்து உறைந்தாள்.

இன்னும் நெறைய இருக்கு சுவாதி, ஒனக்கு தெரியாத முரண்கள் இங்க நெறைய இருக்கு. இப்போ நீ கெளம்பு, அது தா எங்களுக்கு நல்லது”, செம்பன் சொல்ல சரியென்று தலையசைத்தாள்.

பைக் ஓட்டுவல்ல?”, அப்துல் கேட்டான்.

ஆம் என்று தலையசைத்தாள்.

தன் பைக்கை நிமிர்த்தி கொடுத்தான். சுவாதி பைக்கில் ஏறி கிக்கரை உதைத்தாள். பைக் கிளம்பியது.






காரை இயக்கியபடி சாலைகளின் இரு மருங்கிலும் பார்வையை சுழற்றிய தனசேகரின் முகத்தில் வலி நிறைந்திருந்தது. அவ்வப்போது நெற்றியை அழுந்த துடைத்துக் கொண்டான். காரின் ஸ்டியரிங்கை திருப்பும் போது அலைபேசி ஒலித்தது. ஏதோ ஒரு புதிய எண்ணிலிருந்து அழைப்பு வந்திருந்தது. நொடியும் தாமதிக்காமல் பச்சை பட்டனை தட்டி விட்டு காதில் வைத்தான்.

சார், நா செழியன், சந்தியா பத்தி எதாது தெரிஞ்சுதா?", செழியன் பைக் ஓட்டிய படியே கேட்டான்.

செழியன்..., இல்ல செழியன்,... தேனி ஃபுல்லா சுத்திட்டேன். எங்கியும் இல்ல. அவ ஃப்ரெண்ட்ஸ் யார் வீட்டுக்காது போயிருக்கலாமல்ல?!", தனா குரலிலும் பதட்டம் தெரிந்தது.

இல்ல சார், அவ அப்படி எங்கியும் போக மாட்டா. போகல, நா விசாரிச்சிட்டேன். ஆஃபீஸ்லருந்து எப்போ கெளம்புனா?", செழியன் கேள்வியோடு முடித்தான்.

நைன் தர்ட்டிக்கெல்லாம் வொர்க் முடிஞ்சிருச்சு. நானே டிராப் பண்றேன்னு சொன்னேன். பட், அவ கேக்கல. நானே போய்க்கிறேன்னு சொல்லிட்டு கெளம்பிட்டா. நா மெயில் அனுப்பிட்டு ஆஃபீஸ் கேட்டுக்கு வரும் போது, சந்தியா ஸ்கூட்டி அங்க இல்ல", தனா பதில் சொன்னான்.

நீங்க இப்போ எங்க இருக்கீங்க சார்?",

தனா செழியனின் கேள்விக்கு இடத்தை பகிர்ந்தான்.





பசு மாடு ஒன்று, கதறிக் கொண்டிருந்தது.

என்ன புள்ள இது இப்படி கதறுது?! பயமாருக்குதுடி", மாட்டின் கதறலை கேட்டு கவலையோடு ஒரு பெண் சொன்னாள்.

ஏ கோதை, என்னடி ஆச்சு ஒனக்கு?! எங்குட்டு வலிக்குதுன்னு சொன்னால்லடி எனக்கு தெரியும்?! இப்படி கதறி அழுவுறியே!! நா என்னடி செய்வேன்", இன்னொரு பெண், நின்ற படி கத்திக் கொண்டிருந்த பசுவின் வயிற்றை தடவிக் கொண்டே, அதற்கு முத்தமிட்டு கதறினாள்.

இந்தாடி வள்ளி, இன்னமும் இப்படியே பொலம்பிட்டு கெடந்தா சரியா வராது. நாம்போயி நாச்சிய கூட்டியாரேன். அதுந்தட்டும் கோதைய பாத்துக்க", என்ற அந்த பெண் ஓடினாள்.

கொஞ்சம் பொறுத்துக்க ராசாத்தி. இப்போ பொறந்துரும், பொறவு வலியே இருக்காது, செத்த நேரம் பொறுத்துக்க", கோதையை கட்டிப் பிடித்த படி, அதனிடம் பேசிக் கொண்டிருந்தாள் வள்ளி.

கோதை கதறி துடித்தது.

ம்மா ம்மா", என்று கோதை கத்தும் ஒலி அந்த பண்ணை முழுவதும் எதிரொலித்தது.

அந்த ராத்திரி வேளையில் படுத்து உறங்கி கொண்டிருக்க வேண்டிய மற்ற மாடுகள், உறங்காமல் நின்று கொண்டிருந்தன.

சில நிமிட நேரத்தில் அந்த பெண், மாடுகளுக்கு பிரசவம் பார்ப்பதில் கைதேர்ந்த நாச்சியை, அழைத்துக் கொண்டு அவ்விடம் வந்தாள். நாச்சி கோதையை கவனித்தாள்.

மெறளாதீகடி!! ஒண்ணும் பிரச்சனை இல்ல. இன்னும் செத்த நேரத்துல பொறந்துரும்", சொன்ன நாச்சி கோதையின் வாய்க்குள் சில இலைகளை தின்ன கொடுத்தாள்.

சுடு கஞ்சி இருக்கா?", கேட்டாள். மூவரும் கோதைக்கு கஞ்சியை ஊட்டினர்.

சில நிமிடங்களில் கோதை தன் வாலை உயர்த்தினாள். வாலுக்கு கீழே, உன்னத துவாரம் அகல வாய் திறந்து, ஒரு புது உயிரின் தலை வெளி வந்தது.

வள்ளி சிரித்தாள்.

அய்யா கருப்பா ஒனக்கு கொடை நடக்கும் போது, பொறக்குற உசுர நல்ல படியா பெத்து குடுத்துரு சாமி", கைகள் தூக்கி வணங்கினாள்.

ஏ கோத, முக்குடி, முக்கு, நல்லா முக்குடி", என்று கோதையுடன் தானும் கதறினாள் வள்ளி.

சற்று நேரத்தில் கன்று குட்டி, ஆரோக்கியம் நிரம்பி, பூமியின் மடியில் விழுந்தது. நாச்சி சிரித்தாள்.

எய்யா, கருப்பா, காப்பாத்திட்டய்யா, இன்னைக்கே, இப்பவே ஓ கோயிலுக்கு வந்து, நேச்சை காசை செலுத்திபுடுறேய்யா", தன்னை மறந்து சத்தமாகவ வேண்டிக் கொண்டாள் வள்ளி.

ஏண்டி கூறு கெட்டவள! எவன் மாடோ கண்ணு ஈன நீ வேண்டுதல் வைப்பியாக்கு?", கன்று குட்டியின் கசடுகளை அகற்றிக் கொண்டிருந்த பசுவை தடவிய படியே கேட்டாள் நாச்சி.

அதத்தே ஆத்தா நானுஞ்சொல்றேன். அவ காதுல எங்கிட்டு ஏறுது?", வள்ளியுடன் இருந்த பெண் சலித்துக் கொண்டாள்.

இந்தா இப்போ ரெண்டு நிமிசத்துக்கு முன்னாடி, கோதை கதறும் போது நீ அழல?", வள்ளி அந்த பெண்ணிடம் கேட்டாள்.

அழுதேந்தா, அதுக்காக மதிவாணய்யா மாட்டு மேல நா பாசம் வைக்க முடியுமாக்கு?! தெரிஞ்சா என்னய வெட்டி பொதைச்சுப்புட மாட்டாக!!",

என்னவோ, கோதைய பெத்த புள்ளையாட்டம் வளத்துட்டேன். அதேன் இதெல்லாம் புத்திக்கு ஒறைச்சாலும் மனசு கேக்க மாட்டேங்குது. ஆருக்கு சொந்தமா இருந்தா என்ன? என் கோதை நல்லாயிருந்தா போதும்.", வள்ளி பெருமூச்சு விட்டாள்.

மூவரும் புலம்பல் பேச்சுக்களுக்கு நடுவே கன்றின் அழுக்குகள் அகற்றி, பசுவின் மடுவில் பால் அருந்த வைத்தனர்.

பொட்டை பொறந்துருக்குது, யோகந்தா போ", அந்த பெண் சொன்னாள்.

ஆமா, மாடு பொட்டையா பொறந்தா யோகம், மனுஷ எனம் பொட்டையா பொறந்தா கேடு", சலிப்பு பெருமூச்சை உதிர்த்தாள் நாச்சி.

திடீரென்று கேட்ட கார் சத்தத்தில் மூவரும் அரண்டு திரும்பினர். நாச்சி பால் பண்ணையின் வாசலை எட்டி பார்த்தாள்.

மதிவாணன் தன் வெண்ணிற ஆடை படைகள் புடை சூழ நடந்து வந்து கொண்டிருந்தார்.

ஆத்தே, அய்யா வாராக", நாச்சி சொல்ல,

அதேன் பசுவும் கண்ணும் நல்லா இருக்குதல்ல?!, நாம கெளம்பிருவோம் டி", வள்ளியின் சிநேகிதி சொன்னாள்.

மூவரும் புறப்பட தயாராகும் போது, மதிவாணன் அவர்களை நெருங்கி வந்தார். நவீன் உடன் வந்தான்.

இந்நேரத்துல இங்கிட்டு என்ன செய்றீக?", மிரட்டும் தொனியில் கேட்டார்.

நம்ம மாடு கண்ணு ஈனிருக்குதுங்க், அதே இவுக இங்க இருக்காக", பால்பண்ணை வாட்ச் மேன் சொன்னார். பெண்கள் மூவரும் மிரண்டு நின்றனர்.

ஒருமுறை பசுவையும் கன்றையும் பார்த்த மதிவாணன், சகுனம் தனக்கு நேர்மறையாக இருப்பதாக நினைத்துக் கொண்டார்.

வேலையெல்லாம் முடிஞ்சி போச்சல்ல!! இன்னுமென்ன சோலி?", மதிவாணன் அதிகாரமாக கேட்டார்.

பொறப்புட்டோமுங்க்!!", நாச்சி பவ்யமாக சொல்ல, மூன்று இரண்டாயிரம் ரூபாய் தாள்களை எடுத்து நீட்டினார் மதிவாணன். பெண்கள் சிரித்த முகத்தோடு வாங்கி கொண்டனர்.

மதிவாணன் அவர்களை தாண்டி உள்ளே செல்ல, மூவரும் வெளியே சென்றனர்.

நம்ம பையலுகள வர சொன்னேனே!! என்னல ஆச்சு?!", மதிவாணன் எரிச்சலோடு வினவ,

இந்தா இப்போ வந்துருவானுங்க", கீழ்ப்படிந்து சொன்னான் ஒருவன்.

திடகாத்திரமான உடல் கட்டுடன், ஏழெட்டு ஆண்கள் அங்கு வந்தனர்.

ஐயா", அவர்களில் ஒருவன் சொன்னான்.

எங்க வச்சி தொலைச்சேன்?", தனக்குள் புலம்பிக் கொண்டே தரையில் எதையோ தேடிக் கொண்டு கோதை நிற்கும் இடத்துக்கு வந்தாள் வள்ளி.,

அம்புட்டு பணம் குடுத்து வர வச்சேன். அந்த பொச கெட்ட கில்லர் பைய, செழியன் பையல கொலை பண்ணாமலே செத்து தொலைஞ்சுட்டான்",

மதிவாணனின் எரிச்சலான பேச்சை கேட்டு உறைந்து நின்றாள் வள்ளி.

என்ன மாமா சொல்றீக? எப்புடி? என்ன நடந்துச்சு?!", நவீன் விவரம் அறிந்து கொள்ள கேட்டான்.

செம்பன்,..... அவந்தே உள்ளார புகுந்து செழியன காப்பாத்திருக்கான். நா அனுப்புன ஆளையும் கொன்னுருக்கான். அவன்கிட்டருந்து தப்பிச்சு போன, கில்லரோட கையாளு இப்போதே, நடந்தத எனக்கு ஃபோன் பண்ணி சொன்னான்", மதிவாணன் சொல்ல, நவீன் உள்ளுக்குள் மகிழ்ந்தான்.

கவலைப்படாதீகய்யா, ரெண்டு நாள் டைம் குடுங்க.. அவன் சோலிய நா முடிக்கிறேன்", அடியாள்களில் ஒருவன் மிடுக்கான குரலில் சொன்னான்.

இன்னும் ரெண்டு நாள் அவன் உயிரோட இருக்றதா?! ச்சே!! அது எனக்கு அசிங்கம்ல... நாளை விடியிறதுக்குள்ளார அவன் செத்தான்னு என் காதுக்கு கேக்கணும். எங்கால நக்கி வாங்கி திங்கிறவனுக்கு பொறந்தவன் மேல எம்பொண்ணு ஆசைப்பட்டாங்குற சேதி இல்லாம போகணும். அதுக்கு அவன் சாகணும்", மதிவாணன் கர்ஜித்தார்.

மாமா பிளீஸ், கொஞ்சம் யோசிங்க!! பாண்டியன் சித்தப்பா, எம்புட்டோ வருஷமா, ஒங்களுக்காக ஒழைச்சிருக்காக", நவீன் சொல்ல,

அதுக்கான கூலில நா பாக்கி வைக்கல", மதிவாணன் திட்டவட்டமான குரலில் சொன்னார்.

நவீன் வாயடைத்து போனான்.

நம்ம ஆளுக அல்லாரும் போங்கலே. விடியிறதுக்குள்ளார என் வூட்டு காவக்கார நாயி பாண்டியன் பெத்த மொவன் பொணத்து மேல, பாண்டியன் பொஞ்சாதி வுழுந்து அழுவுறத நா பாக்கணும். போங்கலே", மதிவாணன் கத்தும் போது, வள்ளி ஓடி மறைந்திருந்தாள்.

வெள்ளை வேட்டியும், வெள்ளை சட்டையும் அணிந்த கூட்டம் வேகமாக சென்று இரு கார்களை நிரப்பியது. கார் வேகமெடுத்தது.

மாட்டு பண்ணைக்கு வலப்புறம் இருந்த, விரிந்த வேப்ப மரத்துக்கு பின்னால், மறைந்திருந்த வள்ளி, உயிர் பிழைத்த பெருமூச்சு விட்டாள்.

மதிவாணன் நின்ற இடத்திலிருந்து சற்று தூரம் விலகி சென்ற நவீன், மறைவிடத்தில் நின்று, சுவாதியின் எண்ணை தன் கைபேசியில் டயல் செய்தான்.

அலைபேசியின் எதிர்முனையில் சுவாதியின் அலைபேசி ஸ்விட்ச் ஆஃப் என்றது கணினி குரல்.

அதிர்ந்து பயந்த நவீன் ஏதோ, அலைபேசி சிணுங்கும் சத்தம் கேட்டு திரும்ப, அங்கிருந்த திண்டு ஒன்றில் கர கரத்துக் கொண்டிருந்தது வள்ளி தேடிய அலைபேசி. கையில் எடுத்தான்.

தர்மன் காலிங்", என்ற ஆங்கிலப் பதம் அந்த தொடு அலைபேசியில் தெரிந்தது.

அழைப்பை ஏற்று காதில் வைத்தான் நவீன்.



வெங்கையன் சி.சி.டி.வி ஒளிப்பதிவு அறையில் நின்றான். கிருஷ்ணன் கணினிக்கு எதிரில் அமர்ந்து குறிப்பிட்ட, காட்சிகளை தேடினான்.

ஏல இதுதாமுல, நிறுத்து", வெங்கையா சொல்ல, கிருஷ்ணன் பாஸ் பட்டனை அழுத்தினான்.

பிளே பண்ணு",

காணொளி இயங்கியது.

அலுவலகத்தில் தனாவின் அறையை விட்டு வெளியே வந்த சந்தியாவின் எதிரில், தேநீர் கோப்பையோடு வந்த வெங்கையா, இடப்புறமும் வலப்புறமும் தடுமாற, சந்தியாவும் தடுமாறினாள்.

தேநீர் சந்தியாவின் புடவையில் கொட்டியது. கொட்டும் படி வெங்கையா தடுமாறினான்.

சாரி மேடம்", வெங்கையா வாயசைப்பது காணொளியில் தெளிவாக தெரிந்தது.

பரவால்லண்ணா", சந்தியா இதைத் தான் சொல்லியிருக்க வேண்டும். சொன்னவள் கடந்து சென்று, கழிவறைக்குள் புகுந்து கொண்டாள்.

வேக வேகமாக தேநீர் கோப்பைகளை அப்புறப்படுத்திய வெங்கையா, சந்தியா மேசை மீது வைத்து விட்டு சென்ற கைப்பையை மறைத்து வைத்து விட்டு, வாசலுக்கு ஓடினான்.

தனா அலுவலகத்தை விட்டு வெளியே வந்து வெங்கையாவிடம் ஏதோ பேசினான்.

உன்கிட்ட என்னல கேக்குறாரு?", கிருஷ்ணன் கேட்டான்.

சந்தியா போயாச்சான்னு கேட்டாரு. நா அவ போயிட்டான்னு சொன்னேன்",

பிறகு தனா சந்தியாவின் ஸ்கூட்டி நின்ற இடத்தை பார்த்தான்.

ஸ்கூட்டியத்தா நா ஒளிச்சு வச்சிட்டனல்ல!!", காணொளிக்கு வெளியே, சொல்லி சிரித்தான் கிருஷ்ணா.

காணொளிக்குள், தனா காரை ஸ்டார்ட் செய்து சென்றான்.

எங்கோ மறைவில் காத்திருந்த கோபால், அலுவலகத்துக்குள் நுழைந்த பிறகு, அலுவலக கதவுகளை பூட்டினான் வெங்கையா.

ஸ்டாப் ஸ்டாப்", வெங்கையா சொல்ல,

என்னல?", கிருஷ்ணன் கேட்டான்.

ஆஃபீஸ்குள்ள இருக்குற கேமராவ பாரு", வெங்கையா சொல்ல, அந்த கேமரா பதிவு செய்த காணொளியை இயக்கினான் கிருஷ்ணன்.

கழிவறையிலிருந்து அலுவலகத்துக்குள் வந்த சந்தியா, கோபால் நிற்பதை கண்டு அதிர்ந்தாள்.

கோபால் சிரித்தான்.

சந்தியா கோபாலை ஏதோ திட்டி பேசி விட்டு, தனா அறைக்கு சென்று பார்க்க, அங்கு தனா இல்லாமல் இருப்பதை பார்த்து அதிர்ந்தாள். பயந்தாள். நடுங்கினாள்.

கோபால் அண்ணாந்து, அண்ணாந்து சிரித்தான்.

ஏலே, இந்த சிரிப்புதே கேட் வரைக்கும் கேட்டுச்சோ?", வெங்கையா கேட்க,

ம்ம்", என்றான் கிருஷ்ணன்.

சந்தியா கை விரல் நீட்டி ஏதோ சொன்னாள்.

கோபால் சிரித்துக் கொண்டும், முகத்தில் கோபம் காட்டியும், வன்மமாக பற்களை கடித்தும் ஏதேதோ பேசினான்.

சந்தியா அவனை கடந்து ஓடி வந்து கண்ணாடியால் செய்யப்பட்ட கதவை தட்டினாள். பயந்தாள், மிரண்டாள், அழுதாள்.

கோபால் சிரித்துக் கொண்டே இருந்தான்.

அவனை நோக்கி கைகள் கூப்பி கெஞ்சினாள்.

அவன் இன்னும் அதி வேகமாக சிரித்தான்.

ஏதேதோ பேசி கெஞ்சினாள்.

அவன் இரக்கம் காட்டுவதை போல் சாவியை நீட்டினான். அவள் வாங்க முயன்ற போது சாவியை பின்னிழுத்துக் கொண்டான்.

சந்தியா தன் கைப்பையை தேடினாள்.

கோபால், அவளது கைப்பையை காட்டினான்.

பறிக்க முயன்று தோற்றாள். சந்தியாவின் கைப்பைக்குள் கை விட்டு அலைபேசியை வெளியே எடுத்து தரையில் போட்டு நொறுக்கினான் கோபால்.

அதிர்ந்து பயந்து நடுங்கி ஒடுங்கி நின்றவள் அருகில் சென்றான். தொட முயன்ற போது அவனை உதறி, தள்ளி விட்டு ஓடினாள். எட்டிப் பிடித்தவனின் கையில் அவள் சிக்கவில்லை. புடவையின் தலைப்பு சிக்கியது.

வெறி பிடித்தவனாக பிடித்து இழுத்தான்.

புடவையை சந்தியாவின் உடலில் நிறுத்தி வைத்திருந்த ஊக்குகள் பிளந்து தெறித்தது. சில ஊக்குகள் சந்தியா உடலை காயப்படுத்தியது.

புடவை முழுவதையும் கைப்பற்றினான் கோபால். பயந்து பார்த்தவள், மீண்டும் அவன் அடுத்த அடி எடுத்து வைக்கும் முன், அங்கிருந்த ஓர் அறைக்குள் சென்று கதவடைத்து தாழிட்டுக் கொண்டாள்.

புடவையை வீசி எறிந்தான் கோபால்.

ஏ ஸ்டாப்", வெங்கையா சொல்ல, காணொளி நின்றது.

இப்போ நாம பாத்த எல்லாத்தையும் காப்பி பண்ணு", வெங்கையா சொன்னான்.

ஏலே, கோபால் சார் இத டெலிட் பண்ணதே சொல்லிருக்காரு. அதோட, இதுல நாமளும் இருக்கோம்", கிருஷ்ணன் சொன்னான்.

கோபால் சார்ரு!! அந்த நாயிக்கு சார் ஒரு கேடா?", கேட்டு முகத்தை சுழித்து வெங்கையா,

இங்க பாரு, நாளைக்கே இது பிரச்சினையானா, டியூட்டில இருந்த வாட்ச் மேன் ரெண்டு பேருக்கும் தெரியாம இது நடந்திருக்க வாய்ப்பே இல்லன்னு ஒரு பேச்சு வரும். அப்போ, இந்த கோபால் நானும் நீயும் சேந்து சந்தியாவ ரேப் பண்ணோம்னு சொன்னாலும் சொல்லுவான்", என்றான்.

அய்யய்யோ றேப்பா?", பயந்தான் கிருஷ்ணன்.

ம்ம், அது மட்டுமில்ல, நாம பணம் திருடுன வீடியோவ காட்டி தான கோவால் நம்மள மெரட்டுனான். இப்போ அவன் அயோக்கியத்தனம் செஞ்ச வீடியோ நம்ம கையில. அந்த சந்தியா புள்ளை தப்பான பொண்ணுன்னு சொல்லி அசிங்கப்படுத்தணும்னுதே அவன் இதெல்லாம் செய்றான். சந்தியா தப்பான பொண்ணு இல்ல, அவந்த்தே தப்பானவன்னு நிரூபிக்கிற வீடியோ இப்போ நம்ம கையில",

அதாவது அவன் குடுமி நம்ம கையில", சொல்லி சிரித்தான் கிருஷ்ணன்.

வெங்கையாவும் சிரித்தான்.

காணொளியை நகலெடுத்த பின், கணினியின் நினைவகத்தில் இருந்த காணொளி முழுவதையும் அழித்த கிருஷ்ணன். இதற்கு மேல் கேமரா இயங்காதவாறு அதன் இயக்கத்தை நிறுத்தினான்.

கோவால் சாயங்காலமே கேமராவ ஆஃப் பண்ண சொல்லியும், நீ ஆஃப் பண்ண வேணாம்னு சொன்னப்போ, என்னவோன்னு நினைச்சேன் வெங்கையா. ஆனா, நீ உஷாரான ஆளுதாய்யா", சொல்லி சிரித்தான் கிருஷ்ணன். வெங்கையாவும் சிரித்தான்.

பென் டிரைவை தன் பாக்கெட்டில் மறைத்துக் கொண்டான் வெங்கையா. இருவரும் அலுவலகத்தின் பின் வாசல் வழியே வெளியேறினர்.

சந்தியா தன்னை பூட்டிக் கொண்ட அறையை பார்த்த படி, வெறி பிடித்தவன் போல் நாற்காலியில் அமர்ந்திருந்தான் கோபால்.

காகித கட்டுக்கள் நிறைந்த அலமாரிகளுக்கு நடுவில், அறையின் ஓர் மூலையில், கால்கள் மடக்கி, அமர்ந்திருந்த சந்தியா,

சீக்ரம் வா செழியா", என்று அனத்திக் கொண்டிருந்தாள்.

கருப்பசாமி கோயிலில் வெட்டப்பட்ட கிடாக்களின் முன் நின்று கொண்டிருந்த துரையரசனிடம்,

வாங்க மாப்ள, தரமான சரக்கு, கிர்ருன்னு ஏறும்", என்று சொல்லி அழைத்தான் சரவணன்.

வேணாங்க், நமக்கு பழக்கமில்லீங்க்", துரை சொன்னான்.

அட வாங்க மாப்ள, வெக்கப்படாதீக", சொல்லி தோளில் கை போட்டான் சரவணன்.

துரைக்கு புரிந்தது, சரவணனுக்குள் இறங்கியிருக்கும் போதை தான், தோளில் கை போட்டு பழகும் சோசலிசத்திற்கான காரணம் என்று. சிரித்தான்.

சரவணனுடன் நடந்தான்.

ஏலே, சாக்ரத?", சரவணனை சத்தமாக அழைத்து சொன்னார் பாண்டியன்.

நாம்பாத்துக்குறேண்ணே", சொல்லி துரையை அழைத்து சென்றான் சரவணன்.

அவர்கள் சற்றே விலகி சென்றதும் தன் அலைபேசியை எடுத்தார் பாண்டியன். அவர் எண்களை அழுத்தும் முன், அலைபேசி ஒலித்தது.

நவீன்", சொன்னவர் கண்கள் சுருக்கினார்.





விடியலை தேடும்
இருளின் போராட்டம்,.....

தொடரும்.......

சக்தி மீனா,.....











 
  • Like
Reactions: Maheswari

vinodha mohan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 29, 2023
29
20
3
Plano , tx
பரபரப்பா இப்படி எழுத உன்னாலதான் முடியும் மீனா!!!! ❤️

பேசாம ஆக்ஷன் சீக்வென்ஸ் எழுது சினிமாக்கு....
எல்லா ஸ்டோரிலயும் நானும் பார்த்துட்டேன்....
👏👏👏

அப்துல்.... இந்த பேரே
பிரச்சினை தான்மா!!!
மதிவாணன் பாண்டியன் மாதிரி ஆட்கள் இருந்தா...
இன்னும் மத்த மனுஷங்க நடமாடவே முடியாது.....
எத்தனுக்கு‌ எத்தனும் உலகத்துல இருப்பான்ல....
பார்ப்போம்...
ஆனாலும் நீ இப்படி சஸ்பென்ஸ்ல சீரியல் மாதிரி தொடரும் போடக்கூடாது...
இப்போ என் மைன்ட் இத விட்டு வராது தெரியுமா!!!!
🤔🤔🤔🤔
👏👏👏👏👏
 

சக்திமீனா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 27, 2021
92
62
18
Tamilnadu
பரபரப்பா இப்படி எழுத உன்னாலதான் முடியும் மீனா!!!! ❤️

பேசாம ஆக்ஷன் சீக்வென்ஸ் எழுது சினிமாக்கு....
எல்லா ஸ்டோரிலயும் நானும் பார்த்துட்டேன்....
👏👏👏

அப்துல்.... இந்த பேரே
பிரச்சினை தான்மா!!!
மதிவாணன் பாண்டியன் மாதிரி ஆட்கள் இருந்தா...
இன்னும் மத்த மனுஷங்க நடமாடவே முடியாது.....
எத்தனுக்கு‌ எத்தனும் உலகத்துல இருப்பான்ல....
பார்ப்போம்...
ஆனாலும் நீ இப்படி சஸ்பென்ஸ்ல சீரியல் மாதிரி தொடரும் போடக்கூடாது...
இப்போ என் மைன்ட் இத விட்டு வராது தெரியுமா!!!!
🤔🤔🤔🤔
👏👏👏👏👏
நானும் சட்டு புட்டுன்னு எழுதி முடிக்கணும்னுதாப்பா நெனைக்கிறேன். ஆனா பாரு, எழுத எழுத மைன்ட்ல இருக்குற கன்டென்ட் முடிய மாட்டேங்குது. சீக்கிரம் அடுத்த யூ.டி குடுக்குறேன். நன்றி டி பெஸ்டீ....... 🤝❤️