• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அச்சம் தவிர் அனிச்ச மலரே 🌷 36

சக்திமீனா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 27, 2021
92
62
18
Tamilnadu
Screenshot_20230721_230818.jpg


அத்தியாயம் 36



கேண்டீனில் காயத்ரி அமர்ந்திருந்த மேஜையில் தேநீர் கோப்பையுடன் வந்தமர்ந்தான் தினேஷ். காயத்ரி எழுந்தாள்.

“காயத்ரி”, அழைத்தான். நின்றாள்.

“நா ஒங்கிட்ட பேசணும், டென் மினிட்ஸ்”,என்றான்.

ஓரிரு நொடிகள் யோசித்து உட்கார்ந்தாள்.

கிராமத்தில் பாண்டியன் போலிஸில் சரணடைந்ததையும், மதிவாணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதையும், அதை தொடர்ந்து கிராமத்தில் நடக்கும் கலவரங்களையும் விவரித்தான். அதிர்ச்சியாகி பின் நிம்மதி பெருமூச்சு விட்டாள். பாண்டியனின் மகன் செழியன் தினேஷின் நண்பன் என்றறிந்த போது மறுபடியும் அதிர்ச்சியாகி நிதானமடைந்தாள். சொல்லி முடித்தவனும், கேட்டு முடித்தவளும் சில நொடிகள் மௌனத்தில் ஆழ்ந்தனர்.

“ஆன்ட்,... நா அன்னைக்கு உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னது கோபத்துலயில்ல. நல்லா யோசிச்சு முடிவு பண்ணிட்டு தா சொன்னேன்”, தினேஷ் மௌனம் கலைத்தான்.

“இப்டி பேச ஒங்களுக்கு வெக்கமால்ல?”, சட்டென கேட்டாள் காயத்ரி.

அவன் கண்கள் சுருக்கினான்.

“நீங்க ஒரு பொண்ண லவ் பண்ணி, அவ ஒங்கள பிரிஞ்சு போயி முழுசா ரெண்டு மாசங்கூட முடியல. அதுக்குள்ள எங்கிட்ட ப்ரப்போஸ் பண்றீங்க. வெக்கமால்ல?”, கோபமாக கேட்டாள். தினேஷ் சிரித்தான். அவளுக்கு எரிச்சலாக இருந்தது.

நா கொடிய மறக்கல, மறக்கவும் முடியாது”, என்றான். அவள் பார்த்தாள்.

“கொடிய,.... கொடிய நா இப்போவும் லவ் பண்றேன், எப்பவும் லவ் பண்ணுவேன்”, என்ற தினேஷ் லேசாக சிரித்து சொன்னான்,

“நீ மணிகண்டனை லவ் பண்ணிட்டு இருக்கற மாதிரி”,

அவளுக்கு சுளீரென்று இருந்தது.

“அன்பு செத்து போகாது காயத்ரி. ஒரு தடவ பொறந்துட்டா அதுக்கு சாவேயில்ல”, என்றான். அவளுக்கு புரிந்தது.

“கொடி லைஃப், இப்போ அவளுக்கு மட்டும் சொந்தமில்ல. அதுல துரை சார் இருக்காரு. உன் லைஃப்ல மோனி பாப்பா”, தினேஷ் சொன்னான். பார்த்தாள்.

“என்னால ஒன்னை புரிஞ்சிக்க முடியும். ஐ நோ, ஒன்னால என்னை புரிஞ்சிக்க முடியும். மோனி பாப்பாவுக்கும் என்னை புடிக்கும், எனக்கும் மோனி பாப்பாவ புடிக்கும். ஏன் நாம மூணு பேரும் ஒண்ணா வாழக்கூடாது?”, தினேஷ் கேட்டான்.

சில நொடிகள் உறைந்தவள்,

“இல்ல, எனக்கு இன்னொரு லைஃப் வேண்டாம்”, என்றாள்.

“புரியல, ஒங்கிட்ட இருக்குறது ஒரு லைஃப் தா. அது ஒங்கிட்டயே தா இருக்கு. அதுலயென்ன இன்னொரு லைஃப்?”, அவன் அவளை மடக்கினான்.

“என்னை கன்ஃபியூஸ் பண்ணாதீங்க தினேஷ்”,

“கன்ஃபியூஷனே இல்ல காயத்ரி, இருக்றது ஒரு லைஃப் தா. அதை வாழ்ந்து தீர்க்கணும். அந்த லைஃப்ல இனியிருக்ற காலத்தை, நாம சேர்ந்து வாழ்ந்து தீர்க்கலாம்னு நா ஆசைப்படுறேன்”, என்றான். காயத்ரி சிந்தித்தாள்.

“ஐ லவ் மோனி பாப்பா, அதான் ஒங்கிட்ட ப்ரொபோஸ் பண்ணிட்டுருக்கேன்”, சொல்லி சிரித்தான். அவள் உணர்வேதும் காட்டவில்லை.

மதிவாணன் உயிர் பிழைப்பதே பெரிது என்ற நிலையில் அவரது வலது கையும், வலது காலும் விளங்காமல் போனது கௌசல்யாவுக்கு பெரிய கவலையாக படவில்லை. கடவுளுக்கு நன்றி சொன்னாள்.

சுவாதி தகப்பனுக்காக வருந்தவில்லை. காய்கறி விற்கும் பாட்டி கொடுத்த வாக்குமூலத்தை, செம்பன் மூலம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தாள். பாண்டியன் கொடுத்த வாக்குமூலத்தையும், செம்பன் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த ஆதாரத்தையும் கருத்தில் கொண்டு, மணிகண்டன் வழக்கின் முதல் குற்றவாளியான மதிவாணனுக்கு ஆயுள் தண்டனையும், குற்றத்தை ஒத்துக் கொண்டு காவல்துறையில் சரணடைந்ததை கருத்தில் கொண்டு, பாண்டியனுக்கு பத்து வருட கடுங்காவல் தண்டனையும் உறுதியானது.


மதிவாணனை கைது செய்ய முடியாததால், அவர் அரசு மருத்துவனைக்கு மாற்றப்பட்டார். அங்கும் அவருக்கு வசதியில் குறை ஏதுமில்லை.


மதிவாணன் தாக்கப்பட்ட வழக்கில், போலீஸ்காரர்கள் குடியிருந்தவர்கள் குடியிருப்பில் இருந்து மூன்று இளைஞர்களையும், சேரியிலிருந்து மூன்று இளைஞர்களையும் கைது செய்து ரிமாண்டில் வைத்தனர். ஊருக்குள் கலவரம் அடங்கியிருந்தது. மக்கள் மத்தியில் மதிவாணனின் செல்வாக்கு குறைந்து விட்டிருந்தது, கலவரம் மட்டுப்பட ஒரு காரணம்.


இந்நிலையில், சமூக நீதியை கொள்கையாக கொண்டு செயல்படும் கட்சியின் மேலிடம் மதிவாணனை கட்சியை விட்டு, நீக்கி விட்டதாக அறிவித்தது.

செய்யாத குற்றத்தை ஒப்புக் கொண்டு மணிகண்டனின் கொலை வழக்கில் கைதாகியிருந்த கேசவன், எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டான். அவனது ஜாதிக்காரர்கள் அவனை ஏளனமாக பேசுவதாக கேள்வி. காயத்ரியின் பெற்றோர் அவனை ஒதுக்கியே விட்டனராம். நாட்கள் வேகமாக நகர்ந்தது.


கௌசல்யாவின் நச்சரிப்பால் சுவாதி மதிவாணன் ஜாமீனுக்கு முயற்சி செய்தாள். செழியன் பாண்டியனின் ஜாமீனுக்கு ஏற்பாடு செய்தான்.


“மருவாதியா வெளிய போயிராமா, இனிமே ஃப்ரெண்டுன்னு சொல்லிட்டு வூட்டு பக்கம் வந்துராத”, கதிரேசன் கத்தனார். சமையலறையில் காவேரியும், சந்தியாவும் நின்றிருந்தனர்.

தனாவின் தகப்பனார் வெள்ளையனும், தாய் செல்லியும், கதிரேசனின் முன் தலை குனிந்து நின்றனர்.

“பொண்ணு பார்க்க வர்றதுக்கு முன்னாடியே ஒம்பையனுக்கு விருப்பமான்னு கேக்கணும்னு அறிவிலியாக்கு?! எம்பொண்ணு மனசுல ஆசைய வளர்த்துபோட்டு இப்போ வந்து எம்பையன் வேற ஒருத்திய லவ் பண்றான்னு சொல்றியே, என்னல மனுஷன் நீயி? மருவாதிக்கு வெளிய போல”, கதிரேசன் கத்த, இருவரும் சென்று விட்டனர்.

தனா காரை இயக்க, பின்னிருக்கையில் வெள்ளையனும் அவருடைய மனைவியும் அமர்ந்திருந்தனர். புளியமரத்துக்கு அருகே நின்று கொண்டிருந்த கல்யாணியின் அருகே கார் நின்றது.

“என்னாச்சு சார்?”, அவசரமாக கேட்டாள் கல்யாணி.

"நீ சொன்ன மாதிரியே பேசி கல்யாணத்த நிறுத்திப்போட்டோந்தாயி", வெள்ளையன் சொன்னார். கல்யாணி அவரை கும்பிட்டாள். அவர் சிரித்தார்.

முல்லையாறு நிரம்பி வழிந்தது. வழக்கத்துக்கு மாறாக செழியனுக்கு முன்னதாகவே வந்திருந்தாள் சந்தியா. செழியன் தன் பைக்கில் வந்தான். பைக் சத்தம் கேட்டும் திரும்பாமல் நின்றவளை,

“ஓய்”, என்றழைத்தான். அவள் அப்போதும் திரும்பவில்லை.

“என்னை வர சொல்லிட்டு நீ திரும்பாம நின்னா என்னடி அர்த்தம்?”, செழியன் கேட்டான்.

“ஒங்கண்ணை பார்த்து பேச தைரியமில்லன்னு அர்த்தம்”,
அவன் சிரித்தான்.

“நல்லது, ஆத்து தண்ணிய பார்த்து பேசிட்டுரு. நாம்போறேன்”,

“செழியா”, என்றவள் அவசரமாக திரும்பினாள். அவன் அசையாமல் சிரித்துக் கொண்டு நின்றான்.

தலை குனிந்தாள். முகம் வாடியது.

“லைஃப் லாங்க் செக்ஸ்ல எனக்கு இன்ட்ரெஸ்ட் வர்லீன்னா?”, தயங்கியபடியே கேட்டாள்.

“எம்மேல இன்ட்ரெஸ்ட் இருக்குதல்ல?”, அவன் பதிலுக்கு கேட்டான். நிமிர்ந்து பார்த்தாள்.

“இருக்குதா இல்லியா?”, கேட்டு முறுவலித்தான்.

தலை குனிந்து, புன்முறுவலோடு, ஆமென்பதாக தலையசைத்தாள்.

“அது போதும், பூனேக்கு போயிட்டு வந்ததும் கல்யாணத்த வச்சுக்கலாம்”, செழியன் சொன்னான்.

“பூனேக்கா? எதுக்கு?”,

“தினேஷ பார்க்க...., கொடியும் துரையும் கூட வர்றாக.”,

“கொடியா?”, அவள் சந்தேகப் பார்வையுடன் கேட்க அவன் ஆமென்பதாக தலையசைத்தான்.

“அப்போ, துரை சாருக்கு தெரிஞ்சுருச்சா?”,

“ம்ம்ம், சரவணன் போதையில கக்கிட்டான்”,

சந்தியா அதிர்ந்தாள்.

“துரை சார்,… என்ன சொல்றாக?”, பயத்தோடு கேட்டாள்.

“தினேஷ பார்த்து பேசணுங்கறாக. கொடிதா முடிவ எடுக்கணுங்கறாக”, என்றான் செழியன்.

சந்தியாவுக்கு கொடியை நினைத்து கவலையாக இருந்தது.

"நாள மறுநாள் டிக்கெட் போட்டுருக்கு. ரெடியா இரு. நாம பூனே போறோம்", செழியன் சொல்ல,

“நா எதுக்கு? என்னையல்லாம் வூட்ல வுட மாட்டாக”, என்றாள் விருப்பமில்லாத குரலில்.

“அதெல்லாம் வுடுவாக! ஏற்பாடு பண்ணியாச்சு”, என்றான்.

அவள் கண்கள் சுருக்கினாள்.

வுடு சித்தப்பா, இவந்தே ஆம்பளையாக்கு? ஊரு நாட்ல வேற ஆம்பளையே இல்லியாமா? எம்புள்ள சந்தியாக்கு நா ராசா மாதிரி மாப்ள பார்த்து கட்டி வப்பேனாக்கு”, நடு வீட்டில் கூட்டி வைத்திருந்த புளியிலிருந்து விதையை, ஊசியால் குத்தி பிரித்தபடி கல்யாணி சொல்ல, அவளுக்கு முதுகு காட்டியபடி, சோகமாக வீட்டு நடையில் அமர்ந்திருந்தார் கதிரேசன்.

கல்யாணி அருகிலிருந்து காவேரி கண் ஜாடை காட்டினாள்.

“இரு நா பேசுகிறேன்”, கல்யாணி காவேரியிடம் கிசு கிசுப்பாக சொன்னாள்.

“வூடே களையெழந்து கெடக்குது! ஏஞ்சித்தி? மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு போயிட்டு வந்தா, நல்லது நடக்கும்னு சொல்றாக. மேலத்தெரு அனிதா போயிட்டு வந்தாளாமா. அடுத்த மாசமே கண்ணாளம் ஆயிருச்சல்ல!?", சொல்லி கதிரேசனை ஆராய்ந்தாள் கல்யாணி. அவரிடம் அசைவில்லை.

நா வேண்ணா நம்ம சந்தியாவ ஒரெட்டு கூட்டிட்டு போயிட்டு வர்ட்டுமா?”, கல்யாணி கேட்டாள்.

“ஆத்தீ, அம்புட்டு தூரம் புள்ளைய தனியா எப்டிறி அனுப்புறது?”, காவேரி கேட்க, பேச்சில் கவனம் செலுத்தினார் கதிரேசன்.

“இந்தா, தனியாவா அனுப்புற? நானல்ல கூட்டிட்டு போறேங்குறேன். என்னென்னமோ ஆயி போச்சு. புள்ள சோர்ந்து போயிருக்குது! எங்குட்டாது ப்ரயாணம் போயிட்டு வந்தா, செத்த மனசுக்கு லகுவாருக்குமல்ல?”, காவேரியிடம் கேட்பது போல், கேட்ட கல்யாணி,

ஏஞ்சித்தப்பா நாஞ்சொல்றது சரிதானா?”, என்று கதிரேசனிடம் கேட்டாள்.

இரண்டொரு நொடிகள் மௌனமாக இருந்தார்.

“என்னடி?”, காவேரி கிசு கிசுக்க “இரு” என்று கையால் சைகை செய்தாள் கல்யாணி.

"ம்ம்ம், நீ சொல்றதுஞ்சரிதே, அந்த வெளங்காத்த பைய, வூட்ட வுட்டு ஓடுனதுலருந்து இண்ணு வரை, சிலுவை சொமக்றாப்ல குடும்ப சொமைய சொமந்த்ட்டுருக்றா எம்புள்ள. நல்லது கெட்டதுன்னு எங்கயும் போனதில்ல. அவ வயசு புள்ளைக, புருசன் புள்ளக்குட்டின்னு செட்டிலாயிருச்சுக. சினிமா, கடை வீதின்னு சுத்துதுக. . எம்புள்ள ஊடு வுட்டா ஆஃபீசு, ஆஃபீசு வுட்டா வூடுன்னு சந்நியாசி மாதிரி வாழ்ந்துருச்சு.நாலு எடம் கூட்டிட்டு போக வக்கத்து போயி இருப்புலயே இருந்துட்டேன். நாலஞ்சு நாளு வெளிய சுத்தீட்டு வந்தா அவ மனசுக்கும் எதமாருக்கும்”, புலம்பல் போல பேசியவரின் கண்கள் கசிந்தது.

“சூதானமா கூட்டிட்டு போயிட்டு வா”, சொல்லி விட்டு திரும்பி பார்க்காமல் தெருவில் இறங்கி நடந்தார்.

காவேரியும் கல்யாணியும் சிரித்துக் கொண்டனர்.

துரை மனைவியுடன் தேன் நிலவு செல்லப் போவதாக தாயிடம் தகவல் சொன்னான். கொடியின் விசாவை காரணம் காட்டி ஆகாயவிமானத்தை தவிர்த்து, ரயிலில் செல்லப் போவதாக கூறினான். தாய் புவனாவுக்கு மிகுந்த சந்தோஷம். புறப்பாடு ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்றது.

மேல் மருவத்தூருக்கு செல்வதாக கூறி, தன் மகன் கவினுடன் சந்தியாவையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு புறப்படும் கல்யாணி, ரயில் நிலையத்தில் செழியனுடன் சேர்ந்து கொள்வதாக திட்டம். அவர்களுடன் கொடியும் துரையும் சேர்ந்து கொள்வதாக இன்னொரு திட்டம்.

நான்கு நாட்களுக்கு மட்டும், தாய் அபிராமியை சுவாதி வீட்டில், கௌசல்யா பொறுப்பில் விட்டான் செழியன். சுவாதிக்கு மட்டும் நிதர்சனத்தை சொன்னான். அவள் நட்போடு வழியனுப்பினாள்.


மும்முனை திட்டத்தின் படி எல்லோரும் ரயில் நிலையத்துக்கு வந்தார்கள். ரயில் கிளம்பியது.

மணிகண்டன் புகைப்படத்தை தனது அலைபேசியில் பார்த்துக் கொண்டிருந்தாள் காயத்ரி. குழந்தை தூங்கிக் கொண்டிருந்தாள்.

“தினேஷும் உன்னை மாதிரிதா மணி. நா...., நா என்ன செய்யட்டும்?. எனக்கு குழப்பமாயிருக்கு”, காயத்ரி புகைப்படத்திடம் சொன்னாள். புகைப்படம் சிரித்தது. சில நிமிடங்கள் சிந்தனைக்கு பிறகு காயத்ரியும் சிரித்தாள்.


தொடரும்,….
 
Last edited:
  • Like
Reactions: Maheswari