• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அத்தியாயம் 04

Dheera

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 17, 2023
234
238
43
SriLanka
அத்தியாயம் 04

"அம்மா ஏன் மா இப்படில்லாம் பேசுற..?" என கசந்து வெளிவந்தன மதிநிலாவின் வார்த்தைகள்.

"பின்ன எப்படி பேச சொல்லுற..? காலாகாலத்துல கல்யாணம் பண்ணினா தானே உண்டு. அத விட்டுட்டு வர்ர வரன் எல்லாத்தையும் வேண்டாம்னு சொன்னா என்ன அர்த்தம்?" என ஆதங்கமாய் அவளது தாய் பத்மாவதி பேச்சில் காரத்தை அள்ளித் தெளித்திருந்தார்.

பரிதாபமாக தந்தையை திரும்பிப் பார்த்த மதியின் முகத்தை காண சகிக்காத அவளது தந்தையும் எழுந்து அறைக்குள் சென்று விட தனித்து விடப்பட்ட நிலை அவளது. கண்களும் அதன்பாட்டில் கலங்க தாயிடம் ஏதோ சொல்ல வாயெடுக்க அதற்குள் பத்மாவதி "இந்தப் பையன கல்யாணம் கட்டிக்க ஒத்துக்கிறதுன்டா இங்க என் மகளா இரு. இல்லன்னா இன்னைக்கே உன்னை தலை முழுகிறோம்..." என இடியைத் தூக்கி தலையில் இறக்க செய்வதறியாது தவித்தவளின் பார்வையில் விழுந்தனர் அவளது தங்கையும் தம்பியும். அவர்களோ வீட்டில் நடப்பது புரியாது பரிதாபமாக பார்த்துக் கொண்டிருக்க கண்களில் இவ்வளவு நேரமும் தேக்கி வைத்திருந்த கண்ணீர் மதியின் கன்னத்தை தொட்டது.

முயன்று உள்ளிழுத்துக் கொண்டவள் வழமை போல தன் உணர்வுகளை கட்டுப்படுத்த போராடி அதில் வெற்றியும் கண்டு விட்டாள். மனதில் என்ன நினைத்தாளோ தன்னையே கோபமாக பார்த்துக் கொண்டிருந்த பத்மாவதியிடம் "நான் இந்தக் கல்யாணத்துக்கு ஒ..ஒத்துக்கிறேன்.." என்றதுடன் தன் நடையைக் கட்டியிருந்தாள். சந்தோசத்தில் அவளருகில் ஓரெட்டு வைத்த பத்மாவதியை அவள் கணக்கில் எடுத்த மாதிரி தெரியவில்லை. போகும் அவளையே வாயில் கை வைத்து பார்த்துக் கொண்டிருந்தவர் "என்னாச்சு இவளுக்கு..?" என்றவாறு தன் வேலைகளை கவனிக்கத் தொடங்கி விட்டார்.

தன் கூரிய வார்த்தைகளால் தன் மகள் செத்து விட்டாள் என்ற நிதர்சனம் மட்டும் அவருக்கு புரியவேயில்லை.

சுமார் இரண்டு வருடங்களாக அவளுக்கு வரன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். வருபவர்கள் எல்லாம் அவளது நிறத்தையும் படிப்பையும் காரணம் காட்டி வேண்டாமென்று மறுத்து விட்டனர்.

அதில் மன உளைச்சலுக்கு ஆளாகினார் அவளது தந்தை. இருதய நோயாளியும் கூட.

தாய் பத்மாவதி மகளை நினைத்து வருத்தம் கொண்டதெல்லாம் ஒரு வருடம். அடுத்த வருடமே இளைய மகளின் வாழ்க்கையை நினைத்து மூத்த மகளை வார்த்தைகளால் சாடத் தொடங்கினார்.

அவளோ தாய் ஏதோ மனக் கஷ்டத்தில் அப்படியெல்லாம் பேசுகிறார் என நினைத்தவளுக்கு காலம் செல்லச் செல்லச் தான் தெரிந்தது அவர் தன்னையே வெறுக்க ஆரம்பித்து விட்டார் என்பதை. அதற்காக வரும் நொட்டல் சொட்டல் எல்லாவற்றையும் திருமணம் செய்து கொள்ள முடியுமா..?

ஏதோ இப்போது தான் மதியின் தைரியத்தில் கவரப்பட்டு ராஜேந்திரன் பெண் கேட்டு வந்துள்ளார். அதுவும் அவராகவே மனமுவந்து வாசல்படியேறி வந்திருக்கிறார். அந்த வரனை விட பத்மாவதிக்கு மனதில்லை. அதுவே மதியின் தந்தையினதும் எண்ணம். இருந்தும் மகளிடம் பாசத்தை மட்டும் கொட்டி வளர்த்திருந்தவருக்கு அவள் மறுப்பதில் திட்டவும் மனமில்லை. எனவே எழுந்து சென்று விட்டார்.

...

அப்போது அறைக்குள் தஞ்சமடைந்தவள் தான். அதன் பின்னர் வெளியில் எட்டிக் கூடப் பார்க்கவில்லை. அது பெற்றவர்களை பாதிக்காவிட்டாலும் கூடப்பிறந்தவர்களை நன்கு பாதித்திருந்தது.

மதிநிலா அவர்களுக்கு சகோதரி மட்டுமல்ல அவர்களின் இன்னொரு தாயுமானவள். தான் அனுபவிக்காமல் விட்ட சின்னச் சின்ன சந்தோஷங்களையும் அவர்கள் பெற வேண்டும் என தன்னை வருத்திக் கொள்பவளாயிற்றே. மனதில் ஆயிரம் கவலைகளும் ரணங்களும் இருந்தாலும் சிரிப்பையே பரிசாக தருபவளை இந்த வாழ்க்கை மிகவும் ஒடித்திருந்தது.

அப்படிப்பட்டவள் இன்று அறையே கதியென கிடக்க இருவரும் தங்கள் முகத்தை மாறி மாறி பார்த்துக் கொள்வதைத் தவிர வேறொன்றும் செய்து விட முடியாத நிலை..

அதன் பின்னர் திருமண ஏற்பாடுகள் வெகு விமர்சையாக நடந்து கொண்டிருக்க ஒன்றிலும் ஒட்டாமல் இருந்தது என்னவோ மணமக்கள் தான்.

இதற்கிடையில் மதியவளோ ரிஷியின் புகைப்படத்தைப் பார்த்து விட்டு ஆயிரம் தடவை தன்னுள்ளே கேட்டு விட்டாள் "இவ்வளவு அழகா இருக்கிறவரு எப்படி என்னை மணந்து கொள்ள சம்மதித்தார்...?"

அவளுக்குத் தெரியாதே அங்கே ரிஷி அகங்காரம் பிடித்து ஆட்டம் காட்டும் மேட்டர். அதே சமயம் அங்கே ரிஷி "யூ பட்டிக்காடு.. என்ன தகுதி இருக்குனு என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொன்ன.. நீ வேண்டாம்னு சொல்லி இருந்திக்க என்ன விட சந்தோஷமா இந்த உலகத்துல எவனும் இருந்திருக்க மாட்டான். சீப் ஃபெலோ.." என்றவன் அவளின் புகைப்படத்தை நார் நாராக கிழித்து எறிந்தான்.

இதோ திருமணமும் முடிந்து விட்டது. நாம் என்ன மறுப்பது..! விதியே நமக்கெதிராக சதித்திட்டங்கள் தீட்டும் போது அதிலிருந்து தப்பிக்க முடியுமா..?

ரிஷியின் ஆணவத்தை மதிநிலா அடக்குவாளா..? இல்லை ரிஷி கர்வத்தால் அவளது மனதை உடைப்பானா..? பொறுத்திருந்து பார்ப்போம்...

...


சிந்தனையிலிருந்தவள் எப்போதோ உறங்கி விட்டிருந்தாள்.

மனதில் எழத் தெம்பில்லாமல் இருந்தாலும் அதிகாலையிலே எழுந்து விட்டாள் மதிநிலா.

தலைக்கு குளித்து விட்டு வந்தவள் திருமணத்திற்காக வாங்கிய பட்டில், ஒன்றை எடுத்து உடுத்திக் கொண்டு தலையில் மல்லிகை சரத்தை சூடிக் கொண்டே வெளியே வர அங்கே அவளுக்கு முன்பாக எழுந்து காஃபி கப்புடன் அமர்ந்திருந்தான் ரிஷி.

அவனைப் பார்த்ததும் நேற்று நடந்தவைகள் நினைவில் வர முயன்று அந்த சிந்தனையை உதறித் தள்ளியவள் சமயலறைக்குள் நுழையப் போக அப்போது தான் ரிஷியும் நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.

அவளின் அந்த மங்கிய நிறத்துக்குள்ளும் ஓர் அழகி பொதிந்து தான் இருந்தாள். இன்று ஏனோ அந்த அழகு கொஞ்சமே கொஞ்சம் அவளில் வெளிப்பட அவளைப் பார்த்துக் கொண்டிருந்த ரிஷியின் கண்களிலும் ஓர் கணம் ரசனை குடியேடியிருந்ததோ..!!

பின் சுயசிந்தனைக்கு வந்தவன் அதிர்ந்து விட்டான்.
"டேய் ரிஷி இந்த பட்டிக்காட்ட ரசிக்கிற அளவுக்கு காஞ்சி போயாடா கிடந்த...?" என நேரம் காலம் தெரியாமல் மனசாட்சி அவனை காரித் துப்ப, இறங்கி இருந்த சனி மீண்டும் உச்சந்தலையில் வந்து ஒய்யாரமாய் அமர்ந்து விட்டது.

அவளை காயப்படுத்த நினைத்தவன் "புதுப் பொண்ணுங்க தான் இப்படி பட்டு எல்லாம் உடுத்துவாங்க.. நீங்க எப்போ புதுப் பொண்ணானிங்க..?" என்றதும் அவளது நடை சட்டென நின்று விட்டது.

ஆனால் அவன் பக்கம் அவள் திரும்பவில்லை. அதில் கோணச் சிரிப்புடன் அவனே மீண்டும் "நீ எப்படி தான் அழகா அழங்கரிச்சுகிட்டாலும் எனக்கு அழகா தெரியப் போறதில்லை.. பின்ன என்னத்துக்கு இந்த கோமாளி வேஷம்..?" என்றான்.

ஏற்கனவே அவனது பேச்சில் பற்களை கடித்துக் கொண்டு நின்றிருந்தவளுக்கு இந்தப் பேச்சு ஏனோ சுருக்கென மனதை தைத்தது.

தான் பேசப் பேச சிலைமாதிரி நிற்பவளில் கோபம் கொண்டவன் வார்த்தைகளை தெறிக்க விட்டான்.

"ஓஓ ஒருவேளை நான் இதுக்கொல்லாம் மயங்குவேனு நெனச்சியோ..? உன்ன மாதிரி பொண்ணெல்லாம் அரைகுறையா ட்ரெஸ் பண்ணிட்டு வந்தாலே நான் திரும்பிப் பார்க்க மாட்டேன். இதுல இந்த சாரி...?? " என்றதும் அதற்கு மேல் அவளுக்கு அவனது கேவலமான பேச்சுக்களை காது கொடுத்து கேட்க முடியவில்லை.

விறுவிறுவென திரும்பி தனதறைக்குள்ளே சென்றவள் அறைந்து கதவை சாற்றி இருந்தாள்.

அதுவே அவளது கோபத்தின் எல்லையை சுட்டிக் காட்ட ரிஷியின் வாயோ பசை போல் ஒட்டிக் கொண்டது. அதற்கும் "இதுக்கொன்னும் கொறச்சல் இல்லை.." என்றுவிட்டு மீண்டும் பத்திரிகையினுள் தலையை நுழைத்து விட்டான்.

...


சிறிது நேரத்தில் மித்ரன் வந்தான் ரிஷியைத் தேடி. அன்று விடுமுறையென்பதால் அனைவரும் வீட்டிலே இருந்தனர்.

வந்தவன் "குட் மார்னிங் மச்சி.." என்று விட்டு அவனருகில் அமர "மார்னிங் டா.." என்று புன்னகைத்தான் ரிஷி.

அவனது அந்த சிரிப்பே வீட்டில் ஏடாகூடமாக ஏதோ நடந்திருப்பதை உணர்த்தியது மித்ரனுக்கு.

சுற்றும் முற்றும் மதியை தேட அவளோ அவனது கண்களில் படவில்லை.

"என்ன தேடுற மச்சான்..?" என்றான் ரிஷி.

அந்த சத்தத்தில் கலைந்தவன் "அதொன்னுமில்லை, உன் பொண்டாட்டி பொண்டாட்டினு ஒருத்தி இந்த வீட்டுக்கு நேத்து வந்தாள்ல.. அவளைத் தான் தேடுறேன்.." என்றான் அவனை ஓரக் கண்ணால் அளந்தபடி.

அதில் வெகுண்டெழுந்தவன் "பொண்டாட்டினு சொல்லாதடா இரிடேட் ஆகுது.." என்றான் பேப்பரை மேசையில் விட்டெறிந்தவனாக.

"நீ ஏத்துக் கொள்ளாட்டியும் அது தான் நிதர்சனம்.." என்றான் எப்படியாவது அவனுக்கு புரிய வைக்கும் நோக்கில்.

ரிஷியோ "இதே வசனத்தை மூனு மாசத்துக்கு பிறகு நீ சொல்லுறியானு பார்க்கலாம்.." என்றான் தன் அக்மார்க் சிரிப்புடன்.

ஏதோ புரிபட சட்டென எழுந்த மித்ரன் "என்னடா ஒலர்ர..?" என்றான். இப்போது அவனை நக்கலாக பார்த்த ரிஷியிடம் "மூனு மாசத்துக்கு பிறகு என்ன..?" என்று ஒருமாதிரி அவனைப் பார்த்தவன் கொஞ்சம் இடைவெளி விட்டு "உன் பிள்ளையை வயித்துல சுமப்பானு சொல்ல வரியா என்ன..?அதுவும் சரி தான்.." என்றவன் வாய்விட்டு சிரித்தான்.

பொண்டாட்டி என்பதையே அவனுக்கு காது கொடுத்து கேட்க முடியவில்லை. இதில் அவனது குழந்தை..நினைக்கும் போது அருவெறுப்பில் முகம் சுழித்தான் ரிஷி. இதனை மித்ரன் காணாவிட்டாலும் இவ்வளவு நேரமும் இவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த மதி கவனித்திருந்தாள்.

தன்னை எந்தவளுக்கு மட்டமாக அவன் நினைக்கிறான் என்பதை தினம் தினம் அவளுக்கு காட்டிக் கொண்டிருந்தான் ரிஷி.

அவனது முகம் போன போக்கில் அவளுக்கு அவமானமாக இருந்தது. கண்களும் அதன்பாட்டில் கண்ணீரைச் சொரிய ஏன் இப்படி ஒரு பிறவி எடுத்தோம் என தன்னை நொந்து கொண்டாள் பேதையவள்.

பின் கண்ணீரை துடைத்தவள் ஏதும் நடவாதது போல செல்ல எத்தணிக்க, சிரித்துக் கொண்டிருந்த மித்ரன் அப்போது தான் அவளைக் கண்டான். உடனே சிரிப்பதை கைவிட்டவன் "குட் மார்னிங் மதிம்மா..." என்கவும் மித்ரனை அடிக்க கை ஓங்கிய ரிஷியும் அப்போது தான் அவளைப் பார்த்தான்.

வேறு நார்மல் சாரி மாற்றி இருப்பாள் போலும். தலையிலிருந்த மல்லிகைப்பூ காணாமல் போயிருந்தது. வெறும் தாலியுடன் மீண்டும் வெளியே வந்திருந்தாள். அவளை அப்படிப் பார்த்ததும் ஏனோ மனதில் குற்றவுணர்ச்சி பெருக்கெடுத்தது.

தலையை உலுக்கி தன்னை சமன் செய்தவன் அவளை விடுத்து மித்ரனை பார்த்தான்.

மதியும் அவனது குரலில் அவன் பக்கம் திரும்பி லேசாக தலையாட்டி ஏற்றுக் கொண்டாள். அவளுக்கு சிரிப்பை பதிலளித்த மித்ரன் அவளிடம் "என்ன மதி..!! புது பொண்ணு புது சாரி கட்டி ஜொலிக்காம இப்படி நோர்மலா வந்து நிற்குற..." என்றதும் அவளோ ரிஷியைப் வெற்றுப் பார்வை பார்வை பார்த்து வைத்தாள். அவனோ அந்தப் பார்வையில் அவளையே பார்த்துக் கொண்டிருக்க இருவரையும் மாறி மாறி பார்த்திருந்த மித்ரனுக்கு ஏதோ புரிவது போல் இருந்தது.

அவனுக்குத் தான் தன் நண்பனின் வாயைப் பற்றித் தெரியுமே.

பின் நிலைமையை சரி செய்யும் பொருட்டு "மதி கொஞ்சம் காஃபி கெடைக்குமா..? உன் அண்ணி இன்னும் எழுந்திருக்கல.." என்றதும் ரிஷியிடமிருந்த பார்வையை திருப்பியவள், சரியெனும் விதமாக தலையாட்டி விட்டு உள்ளே நுழைந்தாள்.

அவள் சென்றும் ரிஷியின் பார்வை அங்கேயே நிலைத்திருக்க
மித்ரன் "க்கும். அவ போய் அரை மணி நேரமாச்சு.. மாறினாலும் மாறின இப்படி ஒரே நாள்ல நீ மாறி இருக்க கூடாது.." என வேண்டுமென்றே அவனை கிண்டலடிக்க, அவனது முதுகில் மொத்தொன்றை கொடுத்த ரிஷி "வாயை மூடிட்டு இருக்கல, கேட்ட காஃபியாலயே அபிசேகம் பண்ணி அனுப்பி வைப்பேன்.." என்றான் மூக்கு விடைக்க.

அதன் பிறகும் மித்ரன் வாய் திறப்பானா..


தொடரும்...


தீரா.
 
Last edited: