• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அத்தியாயம் 05

Dheera

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 17, 2023
234
238
43
SriLanka
அங்கே மதியின் பெற்றோர், மகள் வசதியான நல்வாழ்வு வாழ்கிறாள் என்று நினைத்திருக்க இங்கே மதிநிலாவோ தினம் தினம் வேதனையை அனுபவித்துக் கொண்டிருந்தாள்.

வழமையாக மற்றைய மூவரும் ஆபிஸ் சென்று வர மதிநிலாவோ இடை இடையே எங்கோ சென்று வந்தாள். அவள் எங்கே சென்று வருகிறாள் என இதுவரை ரிஷி கேட்டதுமில்லை. இனி கேட்கப் போவதுமில்லை. அது அவனுக்கு அநாவசியமும் கூட.

வீட்டில் இவள் எப்போதும் இருப்பதால் அந்த அப்பாட்மெண்டின் சாவிக் கொத்து அவள் கையில் தான் இருக்கும்.

இதற்கிடையே தனக்கு நடந்த திருமணம் பற்றி ரிஷி ஆபிஸிலும் சரி, மித்ரன், பவித்ரா தவிர மற்றைய தன் நட்பு வட்டாரத்தினுள் சரி தப்பித் தவறிக் கூட மூச்சு விட்டிருக்கவில்லை.

அப்படிச் செய்தால் அவர்கள் மதியை காண வரலாம். அவளைப் பார்த்து தன்னை கேலி செய்யலாம் எனப் பயந்தே மறைத்திருந்தான். ஆனால் உண்மை பல நாட்களுக்கு மறைந்திருப்பதில்லை. அது உலகிற்கு வெளிச்சமாகும் நாளும் வந்தது.

அன்றொரு நாள் காலையில் ரிஷி மிகவும் படபடப்பாக ஹாலில் அமர்ந்திருந்தான்.

அப்போது தான் தனதறையிலிருந்து வெளியே வந்த மதி ஓரக் கண்ணால் அவனை பார்த்து விட்டு சென்று விட்டாள். மீண்டும் வருகின்ற போதும் அவன் அவ்வாறே அமர்ந்திருக்க அருகில் சென்றவள் வேண்டுமென்றே டம்ளரை தட்டி விட அந்த சத்தத்தில் கலைந்தான் ரிஷி.

அதற்காக அவளை முறைக்கவும் அவன் தவறவில்லை. அவளோ வழமை போல "என்ன சார் யாரை திட்டலாம்லு யோசிச்சிட்டு இருகிங்களா..?" என வாயில் கை வைத்து சிரிக்க ஏற்கனவே கடுப்பில் இருந்தவனுக்கு இன்னும் கடுப்பானது.

பதில் பேசாமல் திரும்பியவனை அவள் அப்படியே விட்டிருக்கலாம்.. ஆனால் விதியோ இந்த அவமானத்தையும் சேர்த்தே அனுபவி என்பது போல அவளே மீண்டும் கதையை வளர்த்தாள்.

"கேள்வி கேட்டது நான் தான். சுவர் இல்லை.." என்றதும் சட்டென எழுந்தவன் "பார்க்குற மாதிரி இருந்தா நான் ஏன் பார்க்காம இருக்கப் போறேன்.." என்றான்.

அவளுக்கு அது வலித்தாலும் முயன்று தன்னை தேற்றிக் கொண்டவள் "இப்படி பொறந்தது என் தப்பா...? இதுக்காக என்னை பெத்தவங்களையும் குறை சொல்ல முடியாது. ஏன்னா அது என் விதி..!" என எதையோ நினைத்து பெருமூச்சு விட்டவளிடம் வல்லென எரிந்து விழுந்தான் வேங்கையவன்.

அவளை கொஞ்சம் ஊன்றி கவனித்து இருக்கலாமோ.. அதில் வந்து போன கலவையான பாவனைகளை கண்டிருப்பானோ..!?

"சீ.. உன் சொந்தக் கதைய கேட்க எனக்கு டைம் இல்லை.. என்ன செய்வியோ ஏது செய்வியோ தெரியாது.. இன்னும் வன் அவர்ல என் ஃப்ரெண்ட்ஸ் இங்க வராங்க.. தயவு செஞ்சு அவங்க கண்ணுல பட்டுறாத..." என பெரிய கும்பிடே போட்டு விட்டான்.

ஏன் இப்படி சொல்கிறான் என அவளுக்குப் புரியவில்லை. அந்தப் பார்வையை கண்டு கொண்டவன் போல சொல்ல முடியாவிட்டாலும் அவளுக்கு எடுத்து சொல்ல வேண்டிய நிலையிலிருந்தான் ரிஷி.

அதில் அவனுக்கு வார்த்தையும் ஏனோ தந்தியடித்தது.

"அ..அது அவங்களுக்கு நான் மேரேஜ் பண்ணிக்கிட்டது தெரியாது..." என்றதும் அவள் அவனை அடிக் கண்ணால் பார்த்துக் கொண்டே "தெரிஞ்சா..?" என்றதும் அதில் திடுக்கிட்டவன் அவளது திமிரில் மீண்டும் வார்த்தைகளில் தவறியிருந்தான்.

"ம்ம் உன்ன மாதிரி பட்டிக்காட்ட கல்யாணம் பண்ணிக்கிட்டேனு தெரிஞ்சுது என் மானம் போய்ரும். அவங்களுக்கு என் மேல நல்ல இமேஞ் ஒன்னு இருக்கு. அது டேமேஜ் ஆகுற மாதிரி நடந்துக்கிட்ட நடக்குறதே வேற..." என்றவன் முறைத்துக் கொண்டே அவ்விடம் விட்டகழ்ந்தான்.

அவன் சென்றதும் அவள் கண்களில் தேங்கியிருந்த கண்ணீர் பூமியை தரிசித்தது. "அந்தளவுக்கா கேவலமாக இருக்கிறோம்..? தாலி கட்டியவனே தன்னை அடுத்தவர் முன் அறிமுகப்படுத்த சங்கடப்படும் நிலையிலா அவனை வைத்துள்ளோம்..?" என நினைத்த மாத்திரத்தில் நெஞ்சு காந்தியது காரிகைக்கு.

உஃபென காற்றை குவித்து ஊதியவளுக்கு தாய் மடி தேவைப்பட்டது. அப்படியே அறைக்குள் சென்று கதவை மூடி விட்டாள்.

அவன் சொன்னது போல அடுத்த மணித்தியாலத்தில் ரிஷியின் நண்பர்களினால் அவனது இல்லமே நிறைந்திருந்தது. மொத்தம் ஆறு பேர் வந்திருந்தனர். வழமையாக சென்னை வந்தால் எல்லோரும் இங்கே தான் தங்கிக் கொள்வது.

இன்றும் அவர்கள் கேட்க, ரிஷி ஏதேதோ காரணங்கள் சொல்லி ஒருவாறு அவர்களை ஹோட்டலில் இரவு தங்க சம்மதம் சொல்ல வைத்து விட்டான். அதன் பின்னரே அவனுக்கு சீராக மூச்சு வந்தது.

ஆளாளுக்கு ரிஷியை வாழ்த்தி மகிழ்ந்த சமயம் தான் மித்ரனும் பவித்ராவும் உள்ளே நுழைந்தனர்.

ரிஷியின் பார்வையோ அடிக்கடி மதியின் அறைக் கதவைப் பார்ப்பதும் மீள்வதுமாக இருந்தது. இதற்கிடையே இவர்கள் வந்த விடயம் உள்ளேயிருக்கின்ற மதிநிலாவிற்கு தெரியாது.

நண்பனை அறிந்தவனாக மித்ரனும் பவித்ராவும் மதியைத் தான் தேடினர்.

யாரும் எதிர்பாராத நேரம் மற்றைய அறைக் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தாள் மதி.

நல்ல வேளையாக யாரும் அவள் அறையிலிருந்து தான் வருகிறாள் என்பதை கவனித்திருக்கவில்லை.

யதார்த்தமாக அந்தப் பக்கம் திரும்பிய மீரா என்ற ரிஷியின் நண்பி, அப்போதிலிருந்து இப்போது வரை ரிஷியை ஒருதலையாக காதலித்து வரும் பெண் மதியைக் கண்டு விட்டாள்.

வித்தியாசமான பெண் அதுவும் இதுவரை இங்கே பார்த்ததில்லை..அப்படியிருக்கு இவள் யார்..அதுவும் ரிஷியின் வீட்டில்? என்ற சந்தேகத்துடன் சட்டென எழுந்து விட்டாள்.

அவள் எழுந்ததும் தான் மற்றவர்களும் அவளை கவனித்தனர். அவளும் அப்போது தான் அவர்களைப் பார்த்தாள். பார்த்தவள் திடுக்கிட்டு ரிஷியைப் பார்க்க அவன் கண்களிலோ அனல் தெறித்தது.

சும்மாவே தன்னைக் குதறுபவன், காலையில் அவன் எடுத்து சொல்லியும் கேட்காமல் வந்து விட்டோமென அவனாக தப்பாக நினைத்து தன்னைத் திட்டுவானே என்று நினைத்துக் கொண்டே அவனைப் பார்க்க அவனும் அதே அர்த்தத்துடனே அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான். அதில் அவளுக்கு பேச்சு வராமல் நா அண்ணத்தில் ஒட்டிக் கொண்டது.

"யாரிவ..?" என்றாள் மீரா.

மித்ரன் நண்பனை அறிந்தவனாக ஏதும் பேசாமல் அமைதியாக இருக்க ரிஷிக்கோ பயப்பந்து வந்து தொண்டையில் உருண்டது.

கேட்பாரின்றி கேள்வியின்றி மதிக்கருகில் வேகமாக வந்த மீரா "கேட்குறேன்ல யாரு நீ.. அதுவும் என் ரிஷி வீட்ல..?" என்றதும் அந்த என் ரிஷி என்பது அவளது மனதில் ஆழமாக பதிந்து விட்டது.

அவளோ ரிஷியைப் பார்க்க, அவள் முன் சொடக்கிட்ட மீரா "ஹே ஐ ஆஸ்க் யூ.. ஹூ ஆர் யூ..?" என்று சத்தமிட அந்த சத்தத்தில் திடுக்கிட்டு கலைந்தாள் மதி.

மித்ரனுக்கும் பவித்ராவிற்கும் அவளைப் பார்க்க பாவமாக இருந்தது. அதேசமயம் ரிஷி மேல் ஆத்திரமும் வந்தது. பேசாமல் இருக்கிறானே கல் நெஞ்சக்காரன் என்ற ரீதியில் மித்ரன் அவனைப் பார்க்க அந்தப் பார்வையை சட்டை செய்யாமல் மதியைத் தான் அவனும் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவளுக்கு என்ன சொல்வதென்று புரியவேயில்லை. இதுவரையில் பொய் சொல்லிப் பழகியிராதவளுக்கு இன்று ஏனோ சட்டென பொய் சொல்ல வரவில்லை.

அவள் வார்த்தைகளை தேடிக் கொண்டிருக்க மீரா கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டாள்.

எங்கே ரிஷியின் மனைவி என்று சொல்லி விடுவாளோ என்று அஞ்சியவளாக "ஏய்..." என்ற கர்சனையுடன் அவளை நெருங்க அதற்கிடையே மதியோ "அ..அ..அது இ..இதோ இந்த பவித்ரா அக்காவோட உறவுக்காரப் பொண்ணு.. அ..அப்படி தானக்கா...?" என்றவளின் பார்வையில் ஆமென சொல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பு டொன் கணக்கில் வழிந்தது.

பவித்ராவிற்கும் மனது கஷ்டமாகிப் போனது. ஆமென சொல்லாவிட்டால் பக்கத்தில் நிற்கும் மீரா என்ற பிசாசு அவளை குதறி விடுமோ என்ற பயத்தில் ஆமென தலையாட்டி வைத்தாள்.

அதன் பின்னரே அங்கிருந்த நான்கு ஜீவன்களுக்கு நின்ற மூச்சு திரும்பி வந்திருந்தது.

"ச்சே இதை சொல்லவா இவ்வளவு நேரம் எடுத்த.. இந்தத் தாலியை பார்த்ததும் எங்கே ரிஷிட வைஃப்னு.." என சொல்லப் போனவள் "ச்சீ ச்சீ உன்ன மாதிரி லோக்லாஸ ரிஷி பக்கத்துல கூட நிற்க விட மாட்டான்.. இதுல எங்கே..?" என்றவள் அவளை மேலும் கீழும் பார்த்த பார்வையில் மதி மரித்து விட்டாள்.

இவளது பேச்சு அதிகபட்சமோ என அங்கிருந்த சில நல்லுள்ளங்களுக்கு தோன்றியது. அதிலும் மித்ரன் பற்களை நறநறுத்தவனாக ரிஷியை முறைத்துப் பார்த்தான்.

ஏனோ இந்த மீராவின் நடையுடை, பாவனை, பேச்சு முதலியன அங்கிருந்த சிலருக்குப் பிடிக்காமல் போய்விட்டது. இருந்தும் வெளியில் காட்டிக் கொண்டதில்லை.

ஏகத்துக்கும் கடுப்பான பவித்ரா தாங்கிக் கொள்ள முடியாமல் "லுக் மீரா.. ஸீ இஸ் மை ரிலேடிவ்.. அவளை இப்படி தப்பா பேசுறது எனக்குப் பிடிக்கல.. இன்பெக்ட் அது என்னை அவமானப்படுத்துறதுக்கு சமன்.." என்றவள் ரிஷிக்கும் சேர்த்தே கொட்டு வைத்திருந்தாள்.

இவள் இப்படிக் கோபப்படுவாள் என எதிர்பார்த்திராத மீரா மதியை விடுத்து பவித்ராவை சமாதானப்படுத்த வந்து விட்டாள்.

ஏனோ பவித்ராவிற்கு மனமாரவில்லை.

அந்த கேப்பில் மதியோ எதிலிருந்தோ தப்பிக்க நாடி கிட்சனினுள் ஓடி விட்டாள்.

இதில் அதிசயம் என்னவென்றால், ரிஷிக்குமே மீரா அவளை தப்பாக பேசுவது பிடிக்கவில்லை. ஏனோ தான் மட்டுமே அவளை வதைக்க, தண்டிக்க தகுதியுடையவன் எனத் தோன்றியது.. சற்று நிதானமாக அவன் அதனை சிந்தித்திருக்கலாமோ.. அவள் மேலுள்ள ஆழமான காதலை உணர்ந்திருப்பானோ..!?

இங்கே வந்த மதி வாயை மூடி ஒரு பொட்டு அழுதே விட்டாள்.. எத்தனை வலிகளைத் தான் தாங்கும் இந்த இதயம்..?

...


இப்படியே நண்பர்கள் சிறிது நேரம் இருந்து விட்டு சென்று விட எழுந்த ரிஷியை பவித்ரா பிடிபிடியென பிடித்து விட்டாள்.

நண்பர்கள் சென்றதும் தனதறைக்குள் தஞ்சமடைந்த மதி தான். வெளியே எட்டிக் கூடப் பார்க்கவில்லை.

...

"உன் மனசுல என்ன நெனச்சிட்டு இருக்க ரிஷி..?" என்றாள் பவித்ரா ஆத்திரம் தாளாமல்.

மித்ரனும் அவளைத் தடுக்கவில்லை.

ரிஷியோ "இதை பத்தி இப்ப பேசத் தேவையில்லை பவி.." என்றான் இயலாமையுடன்.

"இப்போ பேசாதேன்னா வேற எப்போ பேச சொல்லுற..? ஆங்..நீங்க தாலி கட்டினா உங்க இஷ்டத்துக்கு ஆட விடுவிங்களா என்ன..? நீங்க பேசுறதையெல்லாம் கேட்டும் கேட்காத மாதிரி இருக்கனுமா..? பணம் இல்லைனா தூசுக்கும் மதிக்க மாட்டிங்க போல..?" என்றாள்.

அது ரிஷியைச் சுட "பவி..." என சத்தம் போட்டவன் பின் பெருமூச்சுடன் தலையை கோதி விட்டு அவளது நிலையை கருத்திற் கொண்டு "நான் எப்போ இந்த பணம் பத்தி எல்லாம் பேசி இருக்கிறேன்..?" என்றான் எரிச்சலாய்.

பவியோ விடுவதாக இல்லை. "நீ பேசாட்டியும் உன் வாய் தான் தெனம் தெனம் பேசுதே.. அது மேல இருக்கிற எங்களுக்கு தெரியாதுனு நெனச்சியா என்ன..இல்லை அந்த சத்தம் கேட்காதுனு நெனச்சியா? உன்னையும் தெரியும் உன் குணத்தை பத்தியும் எங்களுக்கு நல்லாத் தெரியும் ரிஷி... ஒன்னு மட்டும் புரிஞ்சுக்கோ ரிஷி.. அவளும் உயிரும் மனசும் உள்ள ஒரு சராசரிப் பொண்ணு தான்.." என்பதற்கிடையே அவளுக்கு கண்ணீர் பெருக்கெடுத்து விட்டது.

பெண்களின் கோபமும் ஆதங்கமும் கண்ணீராய் தான் உருவெடுக்கும்.

மித்ரன் மனைவியைத் தாங்க, அவளோ முடியாமல் ரிஷியைப் பார்த்து ச்சே.. என்றுவிட்டு சென்று விட்டாள்.

ஆனால் பவித்ராவின் இறுதிப் பேச்சில் குற்றவுணர்ச்சியில் தலை குனிந்ததோ ரிஷி என்ற ஒரு ஆடவன்.


தொடரும்...


தீரா.
 

Vimala Ashokan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 9, 2021
306
115
43
Tanjur
Ivanai enakkup pidikkave illa
chey..
1685086879187.png
 
  • Like
Reactions: Dheera