• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அத்தியாயம் -1

shaliha ali

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 24, 2024
10
7
3
Chennai
உருகாதே உயிரே விலகாதே மலரே
அத்தியாயம் -1


முகத்தை காட்டும் கண்ணாடி போன்ற பளப்பளப்பான தரைகளில் விரைவாக நடந்தவள் நவீன மயமாக்கப்பட்ட விமான நிலையத்தில் தங்களின் பயணத்தை ஆரம்பிக்க சிலரும் முடித்துக் கொண்ட சில மக்கள் என எல்லோரும் தத்தமது தேவைக்காக ஓடிக் கொண்டிருந்தனர்.


அதுவரை அழுத்தியிருந்த பாரம் ஒன்று கொஞ்சம் லேசாக ஆரம்பித்து இருந்தது.பாதங்கள் கொஞ்சம் வேகத்தை தளர்த்தி இருந்தன.சுற்றி எங்கிலும் மனிதத் தலைகள் நிரம்பி இருந்தாலும் யாராவது தன்னை கவனிக்கிறார்களா? என்ற பார்வையை முடிந்தவரை தன்னை சுற்றி நோட்டமிட்டவள் கொஞ்சம் விரைவாக நடந்து ஆகாயப் பறவையின் உள்ளே தஞ்சம் புகுந்துக் கொள்வதற்காக அங்கு செல்வதற்கு ஏற்பாடு செய்திருந்த பேருந்தில் ஏறினாள்.



அவளுடன் பயணிக்கும் மற்ற பயணிகளும் வந்து அமர்ந்ததும் பேருந்து மெதுவாக விமானத்தை நோக்கி சென்றது.பக்கத்தில் யாரும் அமராததால் கொஞ்சம் வசதியாக அமர்ந்திருந்தாள்.மெதுவாக தான் அணிந்திருந்த பர்தாவில் உள்ள முகத்திரையை எடுத்து விட்டு சீராக மூச்சு விட்டாள்.



எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த பெண் இவளையே பார்த்துக் கொண்டிருந்தாள்.மெதுவாக அவளுக்கு பக்கத்தில் இருந்தவனிடம் ஏதோ கிசுகிசுத்தாள்.
அதை எல்லாம் கவனித்தாலும் எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளும் எண்ணம் எல்லாம் இல்லை.விமானத்தின் உள்ளே ஏறுவதற்கான படிக்கட்டில் தான் அணிந்திருந்த கைப்பையை சரிசெய்து விட்டு மெதுவாக ஏறினாள்.



இருக்கையை சரிபார்த்து எல்லையில்லா வானத்தில் ஆகாயப் பறவை பறக்க எத்தனிக்க தன் பயணத்தை ஆரம்பிக்கவும் இருக்கையில் சாய்வாக அமர்ந்தாள்.முதல் விமானப் பயணமாக இருந்தாலும் மனதில் தோன்றிய கலக்கத்தை ஒதுக்கி விட்டு தன் கரங்களை ஆதரவாக மேடிட்ட வயிற்றின் மேல் வைத்து பத்திரப்படுத்திக் கொண்டாள்.கண்களை இறுக மூடிக் கொண்டாள்.


விமானம் மேலேறியதும் ஆர்ப்பாட்டமில்லாத பயணம் தொடர அதுவரை தள்ளிப் போட்டிருந்த தூக்கம் இப்பொழுது முழுமையாக தன்னை ஆக்கிரமித்துக் கொள்ள இமைகளை மூடி நித்திரையில் ஆழ்ந்தாள்.


எவ்வளவு நேரமாக தூங்கினாள் என்று அவளுக்கே தெரியாமல் தூங்கியவள் உடல் அசதி நீங்கவும் விழிகளைத் திறந்தாள்.ஏதோ பெரிய பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்த உணர்வு வரவும் தன்னையும் மீறி தூங்கி இருந்தாள்.


எல்லோரையும் அமைதியாக பார்த்து விட்டு நேராக ஓய்வு அறைக்குச் சென்றவள் தான் அணிந்திருந்த பர்தாவை கழற்றினாள்.அப்பொழுது தான் கவனித்தாள் தன் நெற்றியில் பொட்டு இருப்பதை கவனித்தவள்
அதை எடுத்து விட்டு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ முகமும் குளிர மனதும் லேசாக குளிர்ந்தது.


தலைமூடியையும் சீர் செய்து விட்டு பர்தாவை மடக்கி தான் அணிந்திருந்த சல்வாரையும் துப்பட்டாவையும் சரி செய்து விட்டு தன்னை கண்ணாடியில் கண்டவள் தூக்கமின்மையால் கண்களில் கருவளையமாக மாறி இருந்தது.அடுத்து தன் வயிற்றை பார்த்தாள்.இப்பொழுது வயிறு வெளியே தெரிய ஆரம்பித்து இருந்தது.இத்தனை நாட்களாக அவளின் மெலிதான தேகத்தால் தெரியாமல் இருக்க இப்போது கொஞ்சம் வயிறு வெளியே தள்ள ஆரம்பித்து இருந்தது.விரைவில் எல்லாம் சரியாகும் என்ற எண்ணத்தோடு கொஞ்சம் தன்னம்பிக்கையோடு வெளியே வந்து உட்கார்ந்தாள்.



புன்னகை முகத்தோடு வந்த விமானப் பணிப்பெண் இவளுக்கு தேவையான உணவுகளைத் தர அதையும் இப்போது நீண்ட பெரூமூச்சோடு நிதானமாய் சாப்பிட்டு விட்டு இப்போது கொஞ்சம் திருப்தியாக தன்னைச் சுற்றி இருப்பவர்களை பற்றிய அறிய பார்வையை சுழலவிட்டாள்.


எல்லாம் புதிய நபர்களாகவே இருந்தனர்.பயணத்தில் பாதிக்கு மேல் எல்லோரும் அயல் நாட்டைச் சார்ந்தவர்களாகவே இருந்தனர்.மற்றவர்கள் இந்தியர்களாக இருந்தனர்.


கிட்டத்தட்ட எத்தனையோ மாதங்களுக்கு பிறகு அவளுக்கு
நிம்மதியான தூக்கம் கிடைத்து இருக்கிறது.‘இனிமேல் வாழ்வு உன்னோடு தான்’ என்ற எண்ணத்தோடு கூடிய அன்போடு தன் மேடிட்ட வயிற்றை தடவி விட்டாள்.



இவளுக்கு அருகில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த இவளை விட சிறுவயது பெண்ணொருத்தி ஆவலாய் “ஹாய்” என்று கையசைத்தாள்.
இவளும் புன்னகை முகமாய் சிரிப்பை ஒன்றை பதிலாக தரவும் “கொரியாக்கு சுத்திப் பார்க்க போறீங்களா?” என்றாள் ஆங்கிலத்தில்…



இவளோ ஒருநொடி சட்டென்று யோசித்தவள் ஆமாம் என்று தலையசைத்ததும் அந்தப் பெண்ணோ “நானும் அதுக்கு தான் போறேன் என்ஜாய்” என்றாள் ஆர்வமாக…


இவளோ அதற்கு ஆமோதிப்பது போல் தலையசைக்கவும் விமானப் பணிப்பெண் எல்லோரையும் விமானம் தரையிறங்குவதற்கான அறிவிப்பை சொன்னவள் இருக்கையின் பெல்டை சரி செய்யச் சொன்னார்.

தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையிலிருந்து புறப்பட்ட ஆகாயப் பறவை பாங்காக்கில் வந்து இறங்கியது. கிட்டத்தட்ட ஐந்து மணிநேர காத்திருப்பிற்குப் பின் பத்து மணிநேரத்திற்கு மேலான பயணத்தை தொடர்ந்து இப்போது தென்கொரியாவின் தலைநகரமான சியோலுக்கு வந்தடைந்தது விமானம்.



எல்லோரும் ஒருவித ஆவலில் தங்கள் பொருட்களை எடுத்துக் கொண்டு நடக்க இவளோ தன்னை இனிமேல் பாதுகாக்க போகும் கூடாக இந்த நகரத்தை நினைத்து நம்பிக்கையோடு தென்கொரியாவிற்குள் நுழைந்தாள்.


அங்கே எல்லோருமே புது முகங்களாகவும்,புது மனிதர்களாகவும்,புது கலாச்சாரமாகவும் புது இடமாகவும் தான் அவள் கண்ணிற்கு தெரிந்தது.இதை எல்லாம் நினைத்து மனதில் ஒருவிதமான கலக்கத்தோடு கூடிய பயம் உருவானாலும் எல்லாம் நல்ல விதமாகவே நடக்கும் என்ற நம்பிக்கையோடு இருந்தாள்.


தன்னுடைய பொருட்கள் வந்ததும் அதை தூக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் பொழுது அருகில் நின்றிருந்த ஒரு கொரியாவின் பாதுகாவலர் வந்து தலையை குனிந்து “அன்னியாங்சியோ -வணக்கம்”
என்ற சொல்லி விட்டு அவளுக்கு அந்த பொருளை தூக்க உதவினார்.


இவளும் உடனிருந்து உதவி செய்ய எத்தனிக்க அவரோ அவளின் வயிற்றைக் காட்டி
“இமினிசியாசிங் அன்ஆசூயி முன்சியாங்க் முன்ஹாங்குல் துஜி மாசியோ - கர்ப்பமாக இருக்கீங்கல்ல அதனால வெயிட் தூக்காதீங்க” என்று கொரியன் மொழியில் சொல்லி விட்டு எல்லாவற்றையும் எடுத்து வைக்க உதவினார்.அவரின் செயல்பாட்டைக் கண்டதும் அவனின் நினைவு சட்டென்று வந்தாலும் அதை தூரமாக ஒதுக்கி விட்டு நிதர்சனத்திற்கு வந்தாள்.


கடைசியில் இவள் “தாங்க்யூ” என்றதற்கு அவரும் தலை வணங்கி அவர்களின் நாட்டு வழக்கப்படி ஏற்றுக் கொண்டார்.இவளும் சிறு தலையசைப்போடு இதழோரம் சிறு புன்னகையை தவழ விட்டாள். அவளுடைய பொருட்களை மெதுவாக தள்ளிக் கொண்டு நுழைவாயிலில் வந்தாள்.


எங்கு நோக்கினாலும் செக்கச் சிவந்த மெலிந்த தேகத்தோடு நவீன உடையில் பெண்கள் தேவதைகளாக தென்பட்டனர்.பெண்களுக்கு நிகராக ஆண்களும் அப்படியே தனித்தன்மையில் இருந்தனர்.


அங்கே இவளின் பெயர் பலகையைத் தாங்கியபடி ஐம்பது வயது மதிக்கத்தக்க கொரியப் பெண்மணி ஒருவர் யாரென்ற ஆவலோடு அங்கும் இங்கும் பார்த்தப்படி நின்றுக் கொண்டிருந்தார்.


நேராக அவருக்கு அருகில் செல்லவும் “அன்னியாங்ஸியோ இலுமியி பவையாங்கியோ- வணக்கம் உங்க பெயர் பவையா?” என்றார் கொரியன் மொழியில்….


அவளோ பதிலுக்கு “ஹாய் என் பெயர் பவை இல்லை பாவை” என்றாள் ஆங்கிலத்தில் ….


அவரும் சிரித்துக் கொண்டே பாவை சரி தானே என்று கொரியனும் ஆங்கிலமும் கலந்து பதில் சொன்னார்.


உடனே பாவை சிரித்துக் கொண்டே “அஜீம்மா நன் பாவை- ஆன்ட்டி நான் பாவை” என்றவள் “உங்க பேரு க்வான் தானே” என்றாள் கொரியன் மொழியில்….



அவரோ அவளை அதிர்ச்சியாக பார்த்தப்படி தலையை அசைத்ததும் பாவையோ “எனக்கு கொஞ்சம் கொரியன் தெரியும்” என்றாள்.


அவரோ சரி என்பது போல் தலையசைக்கவும் அவளது மேடிட்ட வயிற்றைப் பார்த்து யோசனையாய் “எத்தனை மாசம் ஆச்சு?”


அவளோ ஐந்து மாதம் என்று கையை விரித்து காட்டினாள்.அதைப் பார்த்தவர் “என்கிட்ட சேகர் சார் எல்லாத்தையும் சொன்னார் வாங்க வீட்டுக்கு போகலாம்” என்று அவளை தான் ஓட்டிக் கொண்டு வந்த காரில் அவளுடைய பொருட்களை எடுத்து வைத்து இருவருமாக பயணித்தனர்.
 

Attachments

  • IMG-20241108-WA0025.jpg
    IMG-20241108-WA0025.jpg
    67.1 KB · Views: 10

Anusha Senthil

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 1, 2024
73
25
18
Coimbatore
ஆரம்பம் சூப்பர் சிஸ்..
ரொம்ப முன்னாடி உங்க கதைகள் வாசிச்சிருக்கேன். பிரதிலிபில..
இங்க பார்க்கிறதுல ஹேப்பி சிஸ்
 
  • Wow
Reactions: shaliha ali

shaliha ali

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 24, 2024
10
7
3
Chennai
ரொம்ப நன்றி சிஸ் இன்னும் நினைவாக வைச்சு இருப்பதற்கு 😍😍
 

shaliha ali

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 24, 2024
10
7
3
Chennai
ஆரம்பம் சூப்பர் சிஸ்..
ரொம்ப முன்னாடி உங்க கதைகள் வாசிச்சிருக்கேன். பிரதிலிபில..
இங்க பார்க்கிறதுல ஹேப்பி சிஸ்
இன்னும் என்னை நினைவாக வைச்சு இருக்கிறதுக்கு ரொம்ப நன்றிகள் 😍😍