• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அத்தியாயம் - 1

Mk26

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 4, 2024
3
3
3
thanjavur
(லாஜிக் இல்லாத கதை.. தயவுசெய்து லாஜிக்கைத் தேடாதீங்க.. கிடைக்கவே கிடைக்காது)


அத்தியாயம்- 1




"எக்கோவ் இங்கன இருக்கீயா.?" என்று சத்தமிட்டபடி ஒருத்தி வர, இவளின் அழைப்பிற்கு காரணமான பெண்ணும் "இங்கனதான்டி கிடக்கேன்.. அதுக்கு ஏன் இம்புட்டு சத்தமிடற.?" என்று சலித்துக் கொண்டாள்.

"நான் எங்கன சத்தபோட்டேன்.? நீயே ஏதாவது சொல்லாதக்கா"

"இப்ப எனத்துக்குடி ஊரை கூட்டிட்டு இருக்க.? என்னனு வெரசா சொல்லு.. தொழிலைப் பாக்கணும்ல.?"

"அப்ப நா மட்டும் வூட்டுலயா கிடக்க போறேன்.?"

"எவடி இவ.? என்னத்தான்டி உம் பிரச்சனை.?" என்று அலுத்துக் கொள்ள, "என்னைய வுட்டுப்புட்டு நீ இங்கன வந்துட்டீயல்ல.? என்னைய கூட்டிட்டு வந்தா உன் காசுல நானும் பங்கு கேட்பேனு நினைச்சுப்புட்ட தானே.?" என்று குறைப்பட்டாள்.

"அப்படியே நீ கேட்டாலும் நான் குடுப்பேனு நினைச்சுருக்க பாரு.. கம்முனு உட்காருடி.. ஆளுக வர ஆரம்பிச்சுட்டாங்க.. நம்ம வேலையைப் பார்க்கணும்ல.?" என்று அதட்டியதும் அவளும் அமர்ந்து விட்டாள்.

அடுத்த நிமிடமே "அம்மா தாயி இன்னும் சாப்படவே இல்ல.. சோறில்லாம வயிரெல்லாம் எரியுதுங்க.. கொஞ்சம் இரக்கம் காட்டுங்களேன்" என்று பிச்சை எடுக்க தொடங்கி விட்டனர் இருவரும். அவர்களின் வேலையே இதுதான்.

என்ன என்ன மூஞ்சி ஒரு மாதிரி போகுது.. நம்ம கதையோட கதாநாயகிகளே இவங்க ரெண்டு பேரும் தான்.. நம்ம வேணா அவங்க வேலையை டீசண்ட்டா பெக்கர்ஸ்னு மாத்திக்கலாம்.

ஒருத்தி வந்து சத்தம் போட்டா பாருங்க அவ பேரு மினுக்கி. இன்னொருத்தி பேரு மேனாமினுக்கி. ரெண்டு பேரும் அக்கா தங்கச்சிக தான். கல்யாணம் எல்லாம் ஆகிருச்சுங்கோ. அவங்க பரம்பரை தொழிலே இதுதான். அவங்க பாட்டன், பூட்டன்ல இருந்து அவங்க தாத்தன், அப்பன் வரைக்கும் பிச்சையெடுக்கற தொழிலைத் தான் செஞ்சுட்டு இருக்காங்க.

கல்யாணம் பண்ணிக் குடுக்கறதும் அது தொழிலைச் செய்யறவங்களுக்கு தான். வேற பக்கம் கல்யாணம் கட்டிக் குடுக்க கூடாதுனு கொள்கை வேற இருக்குதுங்க அங்க. இதுக ரெண்டும் கல்யாணம் பண்ணிருக்கறதும் அண்ணன் தம்பிகளைத் தான். அவங்க ரெண்டு பேரும் வேற பக்கம் எங்கையாவது உட்கார்ந்துருப்பாங்க. முதல்ல இவங்கள பார்த்துட்டு அப்பறம் அங்குட்டும் போலாம் வாங்க.

பிச்சைக்காரி சொன்னதும் பரட்டைத் தலையோட தான் இருப்பாங்கனு நீங்களே நினைச்சுக்காதீங்க.. ஒருநாளைக்கு இவங்க எல்லாம் ஆயிரம் ரூபாய்க்கு சம்பாரிப்பாங்க. அதனால் தலைக்கு தேங்காய் எண்ணெய் எல்லாம் வெச்சு முடியைத் தூக்கி கொண்டையும் போட்டு கொஞ்சம் முகத்தையும் பளிச்சுனு தான் வெச்சுருக்காங்க.

வீட்டுல முகத்துக்கு போடற க்ரீம்ல இருந்து மினுக்கிட்டு போடற துணி வரைக்கும் நிறையவே இருக்குதுங்க. இப்ப அதெல்லாம் தேவையில்லைனு கொஞ்சம் சாயம் போன சேலையைச் சுத்திருக்காங்க அவளோதான்.

அவங்க முன்னாடி வெச்சுப் பார்க்கும் போது நம்ம... நம்ம... தான்ங்க ஒன்னுமில்லாதவங்க. நம்ம தினமும் நாய்பாடு பட்டாலும் ஐநூறுக்கு மேல கிடைக்க மாட்டிங்குதுங்க. ஆனா இவங்க எல்லாம் உட்காந்த இடத்துல இருந்தே தினமும் ஆயிரம் ரூவாவுக்கு மேல சம்பாதிக்கறாங்க. பேசாமல் நம்மளும் அங்கன ஒரு இடத்தைப் புடிச்சுட்டா என்னங்க.? எல்லாம் ஒரு ஆர்வக்கோளாறு தான்ங்க.

மினுக்கி கூறியதைக் கேட்டு அப்படியே தலையைத் திருப்பி அவளைப் பார்த்த மேனாமினுக்கி 'அடிப்பாவி நா உன்ற வூட்டுக்காரன்கிட்ட கேட்கறப்ப குண்டா நிறையா பழைய சோத்தை தின்னுட்டு இருக்கானு சொன்னானே.? இப்ப அப்படியே மாத்தி பேசறா' என்று நினைக்கத் தான் செய்தாள்.

வாய்விட்டு கேட்க முடியாதே. அவர்களின் தொழிலில் இதுதான் முக்கியமான வசனமாயிற்றே. பசிக்கிறது சாப்பிடவில்லை என்றால் இரக்கப்பட்டு பலர் பணமும் தருவார்கள்.. உணவும் வாங்கித் தருவார்கள். ஆனால் தினமும் இந்த வசனத்தை கூறவே மேனாமினுக்கிக்கு சலித்து விட்டது.

அன்று வெள்ளிக்கிழமை என்பதால் கோவிலுக்கு கூட்டமும் அதிகமாக இருக்க, இவர்களுடன் சேர்ந்து பலரும் அமர்ந்திருந்தனர். ஒருவர் பத்து ரூபாயை மினுக்கியின் தட்டில் போட்டு அவளுடன் அமர்ந்திருக்கும் மற்ற நால்வருக்கும் பங்கைத் தர கூறிட, 'கஞ்சபிஸ்னாரி கஞ்சபிஸ்னாரி' என்று முணுமுணுத்தாள்.

அதை அப்படியே இவள் வைத்துக் கொள்ள நினைத்து அமைதியாக இருக்க, "அடியேய் இவளே எங்க பங்கைக் குடுடி.. அப்படியே லவடிட்டு போலாம்னு இருக்கீயா.? தொழில்ல எல்லாம் கரெக்ட்டா இருக்கணும்.. எங்க பங்கைப் பிரி.. பங்கைப் பிரி" என்று மற்றவர்களையும் தன் துணைக்கு அழைத்துப் பேசினாள்.

'ஒரு ரெண்டு ரூவாவுக்கு இந்த ஆக்கப்போரு' என்று மனதில் கருவி அவர்களின் பங்கையும் குடுத்தாள். வேறு வழியும் இல்லையே. இவர்களைப் பகைத்து கொண்டால் இவர்களுடன் சேர்ந்து அமர முடியாமல் போய் விடும். அதனால் ஒருவரை ஒருவர் அனுசரித்துக் கொண்டு போவது தான் எப்போதும் அங்கு நடக்கும்.

தினமும் இப்படி பூசல்கள் எழுந்தாலும் மறுநாள் ஒருவர் வர நேரமானாலும் அவர்களுக்கும் சேர்த்தே இடத்தைப் பிடித்துத் தான் அமர்ந்திருப்பார்கள். அதனால் விட்டுக் குடுத்து தான் போக வேண்டும்.

இவர்களை விட இன்று தான் அதிகமாக சம்பாரிக்க வேண்டும் என்று மனதில் வைராக்கியம் கொண்ட மினுக்கி "ஐயா அம்மா காசு போடுங்கம்மா.. வூட்டுல புள்ள இன்னும் சாப்படாம இருக்கு" என்று வருபவர்களிடம் இரக்கத்தைச் சம்பாரித்து பணத்தையும வாங்கினாள்.

அடிப்பாவி என்று நினைத்த மேனாமினுக்கி இப்போது இவளும் "ஆத்தா மகமாயி எமக்கு சாப்பட வழியைக் குடும்மா.. சாப்புட்டு ரெண்டு நாளாவுது" என்று கேட்டு சில்லறையைப் பெற்றுக் கொள்ள, அவளை முறைக்க ஆரம்பித்து இருந்தாள் மினுக்கி.

'அம்மா ஐயா' என்று இருவரும் மாறி மாறிக் கேட்டு வருபவர்களிடம் இருந்து பணத்தைப் பிடுங்காத குறையாக வாங்கி அழுக்குப் பையுக்குள் சுருட்டி வைத்துக் கொண்டனர்.

இவர்கள் இன்று சம்பாரித்த பணமே ஆயிரத்தைத் தொடும். பன்னிரெண்டு மணி வரை கோவிலில் அமர்ந்திருப்பவர்கள் அதன் பின்பு பிளாட்பாரத்தின் அடியில் அமர்வார்கள். அங்கும் நன்றாகவே பணமும் கிடைக்கும்.

இவர்களின் கணவன்மார்களும் அங்கு தான் இருப்பார்கள். மினுக்கியின் கணவன் பெயர் பரட்டைத்தலையன். மேனாமினுக்கியின் கணவன் குருவிக்கூட்டுத் தலையன். இருவரும் இவர்களைப் பார்த்ததும் 'வந்துப்புட்டாளுக நம்ம உயிரை எடுக்க' என்று அவர்கள் முணுமுணுத்தது பெண்கள் இருவருக்கும் கேட்கவில்லை தான் ஆனால் நமக்கு கேட்டு விட்டதே.

பரட்டையும் குருவிக்கூடும் அவர்கள் பார்க்கும் முன்பே எழுந்து வேறுபக்கம் சென்று விட்டால் என்ன.? என்று நினைத்திருக்க, அதற்குள் அவர்களை நெருங்கி விட்டார்கள் இருவரும்.

மினுக்கி தான் "என்னயா இன்னைக்கு கமிஷன் கம்மி போல.? பொம்பளப்புள்ள நானே இவ்ளோ சம்பாதிக்கறேன் உமக்கு என்னயா கேடு.?" என்று எப்போதும் போல் சண்டையை ஆரம்பிக்க, பரட்டைத் தான் தன் பரட்டைத்தலையைச் சொறிந்து 'இவளிடம் இருந்து இப்போது எப்படி தப்பிப்பது.?' என்ற சிந்தனையில் இருந்தான்.

அதற்குள் குருவிக்கூடு "இங்கன சண்டை ஆரம்பிச்சுப்புட்டியா.? வூட்டுக்கு போவணும்னு உமக்கு தோணலயா.? மொதல்ல ரெண்டு பேரும் நடங்க.. இங்கன நின்னு கத்திப்புட்டு.?" என்று அதட்டியதில் மினுக்கியின் வாயும் அடங்கி விட்டது.

அவர்கள் வசிக்கும் இருப்பிடமும் வந்து சேர்ந்தது. தெரு தொடங்கும் இடத்திலே 'பிச்சைக்காரர் ஏரியா' என்ற பலகை தாங்கி இருக்க, அதைக் கடந்து அவர்கள் வீடு இருக்கும் இடத்திற்கு சென்றனர்.

கிட்டத்தட்ட நூறு குடும்பங்கள் அந்த பகுதியில் வசிக்கிறார்கள். அனைவரும் பிச்சைக்காரர்கள் தான். பெண் குடுத்து பெண் எடுத்துக் கொள்வார்கள். அதனால் உறவு முறையிலே அவர்கள் அனைவரும் அழைத்துக் கொள்வது வழக்கம்.

ஓரிரு பெண்கள் மட்டும் வேறு மதத்தில் இருந்து வந்தவர்கள். படிக்கும் காலத்தில் காதல் என்னும் மந்திரத்தில் கட்டுண்டு படிப்பை முடிக்கும் முன்னரே திருமணம் செய்திருக்க, அவர்களை ஏற்றுக் கொள்ள பலத்த எதிர்ப்பு ஏற்பட்டு பின்பு ஒரு மனதாக அனைவரும் ஏற்றும் கொண்டிருந்தனர்.

"அண்ணோவ் என் வூட்டைக்காரனைப் பாத்தீங்களா.?" என்று கேட்டபடி வந்தாள் சங்கவி. இவளும் காதல் என்ற பெயரில் ஏமாந்து இங்கு வந்தவள் தான். சங்கவி என்ற பெயரும் அவளிடம் இருந்து மறைந்து சக்கம்மா என்ற பெயருடன் வலம் வருபவள். இப்போது இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் இருக்கிறார்கள்.

"தெரியலயே தாயி.. நாங்க வேற பக்கம் போய்ட்டோம்.. அவன் எங்குட்டு போனானு தெரியல.. அவன் அப்பன்கிட்ட கேட்க வேண்டியது தானே.?" என்று பரட்டை கூறிட, "கேட்டுப்புட்டேன் அண்ணோவ்.. அவன் எங்குட்டு போய் தொலைஞ்சானு தெரியல எங்கையாவது குடிச்சுப்புட்டு கிடப்பான் வந்ததும் விளக்குமாத்துலயே போடுனு சொல்லிப்புட்டு அவரும் மட்டையாகி போய்ட்டாரு" என்று விளக்கமளித்தாள்.

"தெனமும் நீ அவனைத் தேடிப்புட்டே தான் இருக்க.. அவனை எப்படி காதலிச்சு தொலைஞ்சீயோ.? எமக்கு எல்லாம் வூட்டுல பாத்து கண்ணாலம் பண்ணி வெச்சவளையே சமாளிக்க முடியாம திண்டாடிட்டு கிடக்கேன்" என்று புலம்பினான் மேனாமினுக்கியின் கணவனான குருவிக்கூடு.

இதை தூரத்தில் இருந்து பார்த்த மினுக்கி வேகமாக வீட்டினுள் சென்று மேனாமினுக்கியை இழுத்து வந்து "அக்கோவ் நமக்கு தெரியாம அதுக ரெண்டும் அந்த சக்கம்மா புள்ளைக்கு எனத்தையோ குடுத்துப்புட்டு இருக்குதுக.. இப்படித்தான் ரெண்டு நாளைக்கு முன்னாடியும் நான் பாத்தேன்.. எம்மைய பாத்ததும் ஆடு திருடுனவக மாதிரி அந்த முழி முழிச்சு நின்னாவுக.. இப்ப நீங்களே பாருங்களேன்" என்று ஏத்தி விட்டாள்.

ஆம் அப்போது குருவிக்கூடு எதையோ சக்கம்மாவிடம் காட்டிக் கேட்டுக் கொண்டிருந்து. அந்த தெருவில் அவள் தான் கொஞ்சம் படித்தவள் விவரம் தெரிந்தவள் என்பதால் அவளிடம் தான் தெரியாததை என்னவென்று கேட்பார்கள்.

அது மினுக்கிக்கும் மேனாமினுக்கிக்கும் அறவே பிடிக்காது. அவள் இப்போது தான் வந்தவள் அவளை ஏன் அனைவரும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள் என்ற பொறாமை. அது அவ்வப்போது சக்கம்மாவிடமே வெளிப்படவும் செய்யும்.

அவள் அதை எல்லாம் பெரியதாக எடுத்துக் கொள்ள மாட்டாள். பிறந்தகத்தை தான் இழந்து விட்டாள் புகுந்தகத்தையாவது தன்னுடன் இருத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம். யார் என்ன கேட்டாலும் மறுப்பேதுமின்றி உதவி செய்வாள். அது அவளின் கணவனுக்கு பிடிக்காமல் போகும். அதற்கும் அவனிடம் அடியும் உதையும் வாங்குவாள்.

என்னத்தான் ஒன்றாக இருந்தாலும் அடுத்தவர் வீட்டுப் பிரச்சினையில் மற்ற யாரும் தலையிட மாட்டார்கள். அங்கிருக்கும் பாதி ஆண்கள் குடியிலே வாழ்பவர்கள். பாவம் பார்த்து குடுக்கும் பணத்தைக் குடிக்காக தான் செலவளிக்கவும் செய்கிறார்கள்.

"இன்னைக்கு ஒரு முடிவு கட்டுவோம் வாடி.. எனத்தையாவது அங்கன கொண்டு போய் குடுத்துப்புட்டே இருக்குதுக.. அவன் புருசன் எனத்தை தான் புடுங்கிட்டு இருக்கான்.?" என்று கோவத்துடன் அவர்களை நெருங்கியவர்கள் சிக்கம்மாவின் கையில் இருந்த கடிகாரம் போன்ற ஒரு பேழையை வெடுக்கென்று பிடுங்கினார்கள் இருவரும்.

யார் அதை முதலில் பார்ப்பது என்ற போட்டியில் எதையோ அழுத்தி வைக்க, அந்நிமிடமே மினுக்கியும் மேனாமினுக்கியும் அவ்விடத்தில் இருந்து மாயமாக மறைந்தும் இருந்தனர்.

அவர்களின் கணவர்மார்கள் சுற்றியும் திரும்பி திரும்பிப் பார்த்து தங்கள் மனைவியைத் தேடிட, சிக்கம்மாவோ பேய் முழி முழித்து நிற்காமல் இருந்தால் தான் அதிசயம்.





தொடரும்..

 
  • Haha
Reactions: Kameswari

MK20

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 30, 2023
90
29
18
Tamil nadu
தலைப்புக்காகவே கதையைப் படிக்க வந்தேன்மா ... ஆனா வேற லெவல் 🤣🤣🤭🤣

மினுக்கியும் மேனா மினுக்கியும் என் மைன்ட் ல இருந்த ப்ரெஷரை அப்படியே குறைச்சுடுச்சு.

ரொம்ப என்ஜாய் பண்ணுறேன் 😍😍
 

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
கதையோட தலைப்பே வித்தியாசமா இருக்கேன்னு நினைச்சேன்🤩

ஆனா ரெண்டு நாயகிகள் நாயகன்கள் பேரும் படுவித்தியாசம் தான்🤣🤣🤣🤣

ஆரம்பமே கல்லா கட்டிருச்சு🤣🤣🤣🤣🤣

இனி இந்த மினுக்கியும் மேனாமினுக்கியும் என்னென்ன அலப்பறைகள் பண்ணப் போறாளுங்களோ 🤣🤣🤣🤣

அவங்களைத் தேடி பரட்டைத் தலையனும், குருவிக்கூட்டுத் தலையனும் என்னென்ன அட்ராசிட்டிஸ் பண்ணப் போறாங்களோ 🤣🤣🤣🤣

சூப்பரா இருக்கு 👌❤️🤩

அடுத்த எபிக்காக வெயிட்டிங் ❤️