உருகாதே உயிரே விலகாதே மலரே அத்தியாயம் -13
பாவை தன் வீட்டிற்குச் சென்றாள்.அங்கு தன் அறையில் போய் இருக்கவும் அவளுடைய கைப்பேசியில் குறுஞ்செய்தி வந்திருக்க யாரென்றுப் பார்த்தாள்.கிம் தான் அனுப்பி இருந்தான்.
என்னவென்று பார்க்க அதில்
“வீட்டுக்கு வந்துட்டியா?” என்று இருக்க அவளுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாகத் தான் இருந்தது.
இருந்தாலும் “வந்துட்டேன் சார்”
“நீங்க”
“ம்ம்… வந்துட்டேன் குட் நைட்” என்று முடித்து வைத்தான்.ஏதோ அவனுடன் வெளியே வந்ததால் வந்த அக்கறையாக இருக்கும் என்று எண்ணிக் கொண்டாள்.
இப்படியே நாட்கள் எப்போதும் போல் நகர ஆரம்பித்தது.ஆனால் அவனின் அக்கறை சில விஷயங்களில் தனியாக பாவைக்கு தெரிய ஆரம்பித்தது.இப்போது கிம்முடன் சேர்ந்து வேலைகள் அவளுக்கு அதிகமாக இருந்தன.
மற்றவர்கள் எல்லாம் அவனிடம் ஏற்கனவே சரியான முறையில் இல்லாததால் இவளையே போட்டு வேலை வாங்கிக் கொண்டிருந்தான்.ஒரு மாதம் கழிந்த நிலையில் திரும்பவும் அவர்கள் இன்னொரு தொழிற்சாலைக்கு செல்ல வேண்டி இருந்தது.
இதனால் கிம் இம்முறை முதலிலேயே அங்கே செல்வதைப் பற்றிச் சொல்லி இருந்தான்.இதனால் பாவை அம்மாவிடம் சொல்லி செல்வி அவளுக்கான உணவை முன்னரே தயாரித்து கொடுத்து அனுப்பினார்.
கையில் ஒரு பையோடு வருபவளைக் கண்ட கிம் பாவையிடம் “என்னது இது?”
பாவை “அம்மா மதியத்திற்கு சாப்பாடும் கொஞ்சம் ஸ்நாக்ஸ் கொடுத்தாங்க” என்றதும் வேண்டுமென்றே சிரித்தவன் “கொரியாவுல பிக்னிக் போறதாக இருந்தால் தான் இந்த மாதிரி சாப்பாடு எடுத்துட்டு போவாங்க ஆனால் நாம இப்போ மீட்டிங் விஷயமா போறோம் கையில் இப்படி எடுத்துட்டா போவாங்க” என்றான் கிண்டலாக…
அவ்வளவு தான் பாவையின் முகமோ கோபத்தில் மொத்தமாக ₹மாறிப் போனது.மனதினுள் ‘'அடேய் சப்பை மூக்கா என்னைப் பார்த்து பிக்னிக் போறியான்னு கலாய்க்கிறியா? இன்னைக்கு இருக்கு உனக்கு’ என்று மனதினுள் அவனைத் திட்டிக் கொண்டிருந்தாள்.
அவனோ மாறாக கொரியாவில் காதலர்கள் ஒன்றாக சுற்றுலா (க்வாங்வான் யோறேன்ங்) செல்வது போல் நாமும் செல்கிறோம் என்று சொன்னால் அவளுக்கு எதாவது தன் விருப்பத்தைப் பற்றி தெரிய வரும் என்று நினைத்து பேசினான்.
அதற்கு மாறாக பாவையோ ‘'சிறுபிள்ளை போல் தான் சாப்பாட்டுப் பையை தூக்கிக் கொண்டு செல்வதாக தன்னை அவன் பேசுகிறான்’ என்று நினைத்துக் கொண்டாள்.
அவளின் முகம் சிவந்து இருப்பதைக் கண்டவனோ வெட்கத்தில் சிவந்திருக்க இவன் நினைத்திருக்க அவளின் முகமோ கோபத்தில் சிவந்து இருக்க காதிலிருந்து புகை வராத குறையாக அமைதியாக அமர்ந்திருந்தாள்.
கிம் “கொரியாவைப் பற்றி உனக்கு எதாவது தெரியுமா?” என்று அவன் பொதுவாக கேட்டான்.
அவளோ இது தான் சரியான நேரம் என்று “எனக்கு அவ்வளவா இதுல ஆர்வம் இல்லை சார் விமலா இருக்கால்ல அவ தான் ரொம்ப விருப்பமாக பார்ப்பாள் உங்க கல்ச்சுரல், டிராமான்னு என்னவெல்லாமோ சொல்லுவா ஆனால் எனக்கு அழகா தாடி வைச்சு மீசையை முறுக்கி விட்டு அப்படியே எங்க தமிழ்நாட்டு டிராடிஷன் பட்டுவேஷ்டி சட்டைப் போட்டுப் பார்க்க அப்படியே ப்ப்ப்பா வேற லெவல்ல இருக்கும் ம்ம்ம்…. நினைக்கும் போதே அப்படியே ஒரு கிறக்கமே வந்திடும் சார்” என்று அவள் விழிகளை மூடி இரசித்து சொல்லும் போது இவனோ தன் பக்கமாக இருந்த காரின் கண்ணாடி வழியே தன் முகத்தைப் பார்த்து கரங்களால் கன்னத்தை தடவி விட்டவன் “வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை உனக்கு நினைக்கவே முடியாது” என்று தனக்குள்ளே புலம்பிக் கொண்டான்.
விழிகளைத் திறந்தவளோ அவனைப் பார்த்து சிரித்தப்படி “நான் சொல்றது உங்களுக்கு வித்தியாசமா தெரியலாம் ஆனால் அவங்க அவங்களுக்கு வாழுறதுக்கு ஏத்தது போலத் தானே பிடிக்கும். இப்போ ஒரு எக்ஸாப்பிளுக்கு உங்களையே வைச்சுக்கலாம் என்னத் தான் நீங்க இங்கே இந்தியாவிற்கு வந்தாலும் உங்க நாட்டு உணவைத் தானே விரும்புறீங்க? அதேப் போலத் தான் மிஸ்டர் கிம் என்னத் தான் நீங்க எங்களோடு பழகினாலும் உங்க டிரெடிஷன்ல பொண்ணைத் தானே நீங்க விரும்புவீங்க” என்று அவள் பொதுவாக கேட்கவும் சட்டென்று தன் மகிழுந்தை சடன் பிரேக் போட்டவன் அப்படியே நிறுத்தி அவளையேப் பார்த்தான்.
அவனின் இந்த சட்டென்று நிறுத்திய செயலில் கொஞ்சம் தயக்கத்தோடு அவனைப் பார்க்க அவனோ இமைகளை மூடாமல் அவளையேப் பார்த்தான்.
பாவை “என்னாச்சு சார்?” தயக்கத்தோடு கேட்க அவனோ இதழின் ஓரம் சின்னதாய் புன்னகையை மறைத்தப்படி “அப்படி எல்லாம் யார் சொன்னது பாவை? எனக்கு எங்க நாட்டு பொண்ணை தான் பிடிக்கும் இல்லை உங்களையும் தான் பிடிக்கும் என்னோட மனசுக்கு கல்ச்சர் பார்த்து தான் பிடிக்கும் இல்லை அவங்க குணமே பிடிச்சிடும் உங்களை மாதிரி” என்று அவன் அவளிடம் நேராக சொல்லி விட்டான்.
அவன் சொன்னதை எல்லாம் கேட்ட அவளுடைய நிலைமை தான் ரொம்ப மோசமாக இருந்தது.தன்னுடைய காதில் விழுந்தது சரி தானா? என்ற யோசனையில் அமைதியாக இருக்க அவனோ விடாமல் அதே புன்னகையோடு “ப்ச் ரொம்ப யோசிக்காதீங்க பாவை ஜோஹாயோ - எனக்கு உன்னை பிடித்து இருக்கிறது” என்று சொல்லவும் அவளின் இதயம் தாறுமாறாக துடிக்க ஆரம்பித்தது.
இப்படி யாரும் அவளிடம் வந்து நேரிடையாக உன்னை பிடித்திருக்கிறது என்று சொன்னதில்லை.
கல்லூரியில் படிக்கும் போது கூட நண்பர்களுக்குள் பேசிக் கொள்வார்கள் அவ்வளவு தான். ஆனால் இப்படி தனியாக அதுவும் நேருக்கு நேராக கிம் சொல்வான் என்று அவள் நினைத்திருக்கவில்லை.
பாவை தலையை குனிந்தபடியே அமர்ந்திருக்க அவனோ அவளின் அமைதியை பார்த்து “பாவை என்னை தப்பா நினைக்காதீங்க என்னடா இவன் இப்படி நேராக சொல்றேன்னு எனக்கு இத்தனை நாளா இந்த விஷயம் எப்படி சொல்லன்னு யோசிட்டு இருந்தேன்.இப்போ சொல்லிட்டேன் உங்களோட முடிவு அதுவாகத் தான் இருக்கனும்னு இல்லை டைம் எடுத்து பதில் சொல்லுங்க ஆனால் நான் காத்திருக்கிறேன்” என்றான்.
அவனின் இந்த எதிர்பாரா காதல் தாக்குதலில் கொஞ்சம் நிலைக் குனிந்து போய் இருந்தாள்.அவளிடம் பதிலில்லை.அவள் மனதில் ஆயிரம் கேள்விகளும் ஆச்சரியங்களும் நிறைந்து இருந்தன.
இருவரின் அமைதியையும் கிம்மின் கைப்பேசி அழைத்து கலைக்க அதில் கொஞ்சம் கவனம் சென்றது.அழைப்பை எடுத்து பேசி முடித்தவன் தன் வாகனத்தை வேகமாக ஓட்டிக் கொண்டிருந்தான்.
என்னவென்று கேட்கலாம் என்று நினைக்க அவனே “நாம போற வழியில் இன்னொரு கம்பெனி இருக்கிறது நம்முடைய இன்வஸ்டரை அங்கே பார்த்துட்டு போகலாம்” என்றான்.
அடுத்த இருபது நிமிடங்களில் இருவரும் அங்கே இருந்தனர்.கிம்மும் அந்த நபரிடம் பேசுவது கொஞ்ச நேரம் அதிகமாகவே சென்றது.
பாவைக்கு இப்போது தான் கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது.அவன் பிடித்து இருக்கிறது என்று சொன்னதிலிருந்து அவனருகில் அமர்ந்து இருப்பது ஏனோ கடினமாக இருந்தது.
நடந்ததை ஒரு முறை எண்ணியவள் ‘'எவ்வளவு தைரியம் இந்த சப்பை மூக்கனுக்கு சட்டுனு பிடிச்சு இருக்குனு சட்டுனு சொல்லிட்டான் ஏதோ கொஞ்சம் நான் தைரியமான ஆளாக இருக்கப் போய் எப்படியோ சமாளிச்சேன்’ என்று தனக்குள்ளே பேசிக் கொண்டிருந்தவள் ஒரு மரத்தின் ஓரமாக இருந்த இருப்பிடத்தில் உட்கார்ந்து இருந்தாள்.
‘ஆமாம் எனக்கு உங்களை பிடிக்கலை அப்பொழுதே முகத்திற்கு நேராகவே சொல்லி இருக்கலாமே! நான் ஏன் அமைதியா இருந்தேன்? என்று தனக்குள்ளே கேள்வி கேட்டவள் பேசாமல் இப்போ மீட்டிங் முடிஞ்சு வந்த உடன் சார் எனக்கு உங்களை பிடிக்கலைன்னு சொல்ல வேண்டியது இந்த வெள்ளையான சப்பை மூக்கனை யாருக்கு தான் பிடிக்கும்?’ என்று தனக்குள்ளே ஒரு யுத்தத்தை நடத்திக் கொண்டிருந்தாள்.
அப்பொழுது அங்கே வேகமாக மழைத் தூறல் போட ஆரம்பிக்க இவள் எழுந்துக் கொள்ள நினைக்கும் போது யாரோ ஒருவர் அவளுடைய தலையில் மழைத்துளி படாமல் பிடித்துக் கொள்வதை திரும்பிப் பார்க்க அங்கே கிம் தன் கையில் இருந்த பையை எடுத்து அவளுக்கு நேராக பிடித்துக் கொண்டவன் “பாவை அங்கே போகலாம் வாங்க” என்று ஓரமாக ஒதுங்குவதற்கான இடத்தைச் சொல்ல அங்கே இவள் முன்னால் செல்ல பின்னாலேயே அவளுடைய தலையில் ஈரம் படாத மாதிரி அழைத்து வந்தான்.
அவனின் இந்த திடீர் அக்கறை சற்று அவளை வாயடைக்க வைத்தது.மழை கொஞ்சம் வேகமெடுக்க ஆரம்பித்தது.எப்போதும் மழையை இரசிப்பவளுக்கு இன்று ஏதோ ஒன்று தடுப்பது போல் அமைதியாக எதிரே பார்த்துக் கொண்டிருந்தாள்.
மழையின் சாரல் அவளின் பஞ்சு போன்ற கன்னங்களில் பட்டுத் தெறிக்க அந்த உணர்வை சிரித்தப்படியே இரசித்துக் கொண்டிருந்தாள்.
பக்கத்தில் நின்றிருந்தவனோ அவளை கவனித்தவாறே நிற்பதைப் பார்த்து தன் பார்வையை வேறு பக்கமாக திருப்பிக் கொண்டாள்.
கிம் “பாவை உனக்கு மழை பிடிக்கும் தானே! அப்புறம் ஏன் எனக்காக இப்படி உம்மென்று நிற்கிறே?” என்றதும் இவளோ ஆச்சரியதோடு தயங்கியபடி “அ..து எப்படி உங்களுக்கு?” என்ற போது “எல்லோருக்கும் பிடிக்கும் தானே மழை.ஆனால் எனக்கு அவ்வளவாக பிடிக்காது சாலை எல்லாம் தண்ணியா இருக்கும் நடந்து போறது கஷ்டம்,அப்புறம் டிரஸ் ஈரமாகிடும் ஸ்கூல்ல பசங்க இருந்தால் அவங்க வீட்டுக்கு போகுறது சிரமம் அதோடு ரோட்டுல கடை வைச்சு இருக்கிறவங்களுக்கு அன்னைக்கு வியாபாரம் நடக்காது பஞ்சு மிட்டாய்,துணி வண்டியில விற்கிறவங்களுக்கு சிரமம் வீட்டோட தளம் சரியில்லைன்னா தண்ணீர் வடியும் இறக்கமான பகுதியில் வீடு இருக்கிறவங்களுக்கு தண்ணீர் உள்ளே வந்திடும் ரோட்டுல தூங்கிறவங்களுக்கு முடியாது நிறைய சொல்லலாம் அதுக்காக மழை இல்லைன்னா பஞ்சம்,பசி,தண்ணீர் இல்லாமல் கஷ்டமாக இருக்கும் அதனால எல்லாமே இங்கே சேர்ந்தே இருக்கும் ஒரு பக்கம் நல்லது இன்னொரு பக்கம் கெட்டது மாறி மாறித் தான் இருக்கும் நானும் அப்படித் தான் பாவை எப்பவும் எல்லா நேரமும் ஒரே மாதிரியா நான் இருக்க மாட்டேன் என்கிட்டயும் சில கெட்ட குணங்கள் இருக்கும் உங்களுக்கும் அப்படித் தான் ஆனால் பேசி புரிஞ்சுக்கலாம் இல்லையா?” என்றான்.
அவன் பேசியதைக் கேட்டு இவளோ தலைச்சுற்றிப் போய் இருந்தாள்.’ஒரு மழையை வைத்து இவன் என்ன ஒரு பெரிய பாடமே எடுத்துட்டான் இப்போ இவன் நல்லவனா? இல்லை கெட்டவனா? கடைசில இப்படி நாயகன் பட டைலாக் மாதிரி யோசிக்க வைச்சுட்டான் முடியலை சாமி முடியலை காப்பாத்து என்னை யாராவது காப்பாத்துங்க’ என்று மனதில் புலம்பிக் கொண்டிருப்பதைக் கேட்டு மழை நிற்கவும் கிம் “வாங்க பாவை போகலாம்” என்று திரும்பவும் இவர்கள் மகிழுந்தில் ஏறி பயணம் ஒரு பத்து நிமிடத்தில் முடிந்து தொழிற்சாலைக்குள் சென்றனர்.