• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அத்தியாயம் 19

நித்திலம்NMR

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
231
20
28
Netherlands
"விக்ரமை என்னனு நெனச்சே! ஈவு இரக்கம் இல்லா மிருகம்ன்னா?" என்று தன் குற்றவுணர்வு நீங்கி எதிரில் நிற்பவளை புழுவைப் போல் பார்த்தாள்.

"அப்போ இது என்ன? அவர் ஏன் உன்னை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போகனும்? நீ எப்படி என்கிட்ட சாரி கேட்டே!!" என்று குழப்பமாக விடை தெரிந்து கொள்ளும் ஆவலில் வினவினாள்.

"விக்ரம் நேத்து வந்தான் தான். அவன் இருந்த கோபத்துக்கு இந்த காயம் என் முகத்துல ஏற்பட வேண்டியது... தலைக்கு வந்தது தலைபாகையோடு போன கதையா தப்பிச்சிருக்கேன்."

மலருக்கு மேலும் மேலும் குழப்பம் கூடிக்கொண்டே தான் போனது. அது அவளது முகத்தில் தெரிய, அக்ஸரா அனைத்தையும் கூறத் தொடங்கினாள்.

செண்பகத்தின் வாயிலாக தன்னவளுக்கு நிகழ்ந்த அவமதிப்பை கேட்டறிந்ததும், கோபம் தலைக்கேறிட அக்ஸராவைத் தேடி அவளது இல்லம் வந்தான்.

தடாலடியாக உள்ளே நுழைந்தவன், க்ரீன் டீ தயாரிக்க கொதி தண்ணீரை கெட்டிலில் கொதிக்க வைத்து அதனை அப்போது தான் தேநீர் பை வைத்திருந்த கோப்பையில் ஊற்றிக் கொண்டிருந்தவளின் கையைப் பிடித்து உழுக்கிட தண்ணீர் சிதறி அவளது காலில் சிந்தியது.

ஷூ அணிந்திருந்தவனால் அதனை உணர முடியவில்லை. பெண்ணவளும் தன் எரிச்சலை வெளிக் காண்பிக்க விரும்பாமல் பாதங்களை தரையில் அழுந்த ஊன்றி நின்று, இதழ்களை மடித்து தன் வலியை மறைத்தபடி நின்றிருந்தாள்.

"என் வீட்டுக்கே வந்து என் பனியை அசிங்கப்படுத்துற அளவுக்கு உனக்கு தைரியம் வந்திடுச்சா!!" என்று உருமியவன் அருகில் இருந்த க்ரீன் டீ கப்பை எடுத்த வேகத்தில் நிச்சயம் முகத்தில் வீசியிருப்பான் தான்.

எதிரில் நின்றிருந்த பெண்ணவளோ கொஞ்சமும் நகராமல், சற்றே பயந்து முகத்தை ஒருபுறமாகத் திருப்பி கண்களை மூடிக்கொண்டு நின்றிருக்க, கண்ணீர் துளிகள் கண்ணைவிட்டு இறங்கி கன்னத்தில் தடம் பதித்து வடிந்து கொண்டிருந்தது.

அதனைக் கண்டதும் சட்டென கீழே போட்டு உடைத்தான். அதிலிருந்த கொதி நீரும் அவள் காலிலேயேத் தெரிக்க, அத்தோடு உடைந்த பீங்கான் சில்லில் ஒன்று அவளது மேல் பாதத்தை பதம் பார்த்திருந்தது. சில மணித்துளிகளுக்குப் பிறகே அதனை கவனித்தான் விக்ரம். அதனோடு சேர்த்து ரத்தமென சிவந்திருந்த அவள் கால்களையும்...

"ஏய் லூசு.... சுடு தண்ணி சிந்தி காலே சிவந்து கெடக்கு.... வலிச்சாலும் கத்தாமக் கூட நிப்பேயா!!! இங்கே உக்கார் மொதோ...." என்று தான் இங்கே வந்து நின்ற கோபத்தின் காரணத்தை மறந்து, தான் தான் காயத்தை ஏற்படுத்தினோம் என்பதனையும் மறந்து, தன் வலியை காண்பித்திடாத பெண்ணவளின் மேல், அதற்காகவே கோபம் கொண்டு நின்றான்.

அவள் கைபிடித்து நகர்த்தி உணவு மேசையின் இருக்கையில் அமர வைக்க முயற்சித்தான். அதற்குள் சுல்லென்ற வலியோடு கால்களை மடக்கி தரையில் அமர்ந்திருந்தாள் அக்ஸரா.

அவள் அருகில் தன் கணுக்காலின் மேல் அமர்ந்தபடி "வலிக்கிதா?" என்றான்.

அக்ஸரா ஆம் என மேலும் கீழும் தலையசைக்க, "சரி வா ஹாஸ்பிட்டல் போலாம்" என்றான். எழமுயன்றவளில் பாதமோ இரண்டடி எடுத்து வைத்தாலே தோல் கிழிந்து ரத்தம் வெளியேறும் அளவிற்கு சிவந்திருக்க, மீண்டும் அவளது கண்கள் கண்ணீர் சிந்தியது.

உச்சிக்கொட்டிவிட்டு முகத்தை சுரித்துக்கொண்டு "நான் உன்னை தூக்கிட்டு போகட்டுமா?" என்றான் விக்ரம். அதற்கு அவனை வினோதமாகப் பார்த்தாள் அக்ஸரா. 'திட்ட வந்தவன் எப்படி இப்படி கருணை காட்டுகிறான்!' என்ற ஆச்சரியம் அவளுக்கு...

"எனக்கு கோபம் இருக்கிற அளவுக்கு மனிதாபிமானமும் இருக்கு" என்றவன் அவள் சரி என தலையசைக்கவும் தூக்கிச் சென்றான்.

விக்ரமின் உடலும், கைகளும் விரைத்து கல்லென இறுகி இருப்பதை உணர்ந்தவள், "உன் பனிமலரை இப்படி தூக்கிட்டு போயிருக்கேயா விக்கி?" என்று அவன் கைகளில் இருந்தபடி வினவினாள்.

விக்ரமின் உடல் மேலும் விரைத்தது, ஆனாலும் பதில் கூறினான். "பல தடவை.."

"இப்போ என்னை நீ தூக்கிட்டு போகும்போது உன் கையில் என் மேல இருக்குற கோபம் மட்டும் தான் தெரியுது... உன் வைஃப்-அ தூக்கும் போது காதலோட தூக்கியிருப்பேல!!! அது ஏன் எனக்கு கிடைக்கலே விக்கி?" என்றாள்.

விக்ரமின் கைகள் மேலும் முறுக்கேறிட, இந்த பேச்சு அவனுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை என்பதை அறிந்து கொண்டவள், அவனது பதிலை எதிர்பார்க்காமல் அமைதி அடைந்தாள்.

விக்ரமும் வேறுவழி இல்லாமல் தான் தூக்கி வந்தான். மருத்துவமனை வரவும், மகிழுந்திலிருந்து இறங்கி சக்கர நாற்காலியுடன் உதவியாளரை அழைத்துவந்து அவர் உதவியுடன் உள்ளே அழைத்துச் சென்றான்.

முதலுதவி செய்து, அவளது காயத்திற்கு மருந்திட்டு பஞ்சு வைத்து மெல்லிய துணி கொண்டு கட்டிவிட்டு, நீர்பட்டு வெந்து கொப்பளித்திருந்த இடங்களுக்கு மருந்து போட்டிருந்தனர்.

"நடந்து வருவ தானே!!!" என்ற அவனது கேள்வியே இனி உன்னை தூக்கிச் செல்ல நான் தயார் இல்லை என்ற செய்தியை தாங்கி நின்றிருந்தது.

அதனை புரிந்து கொண்டவள், "ம்ம்ம்" என்றாள். இருந்தும் அவள் தானாகவே நடக்க முடியாததால் பிடித்துக்கொள்ள தன் கையை நீட்டினான் விக்ரம். அந்த காட்சி தான் சிலரின் கண்ணில் பட்டதோடு அவர்களது கைபேசித் திரையிலும் நிழலாகி, படத்தொகுப்பு செயலியில் பதிவாகி இப்போது வலைதளத்தில் சுற்றி வருகிறது.

இல்லம் அழைத்து வந்தவன், அக்ஸராவை நீள்சாய்விருக்கையில் அமர்த்தி, உடனடி குழம்பி கலந்து எடுத்து வந்து கொடுத்தான்.

"டூ இயர்ஸ் பேக், நான் உன்னை விரும்புறேன்... நீ என்னையே மேரேஜ் செய்துக்கோனு சொல்லிருந்தா என்ன பதில் சொல்லியிருப்ப விக்கி?" என்று காஃபி கப்பை கையில் வைத்து உருட்டியபடி வினவினாள்.

விக்ரமைப் பிரிந்து செல்லும்போது அவனை இழந்ததாக அவள் ஒருநொடி கூட நினைத்ததில்லை. ஆனால் இப்போது அவன் தன்னை விரும்பவில்லை என்பதை விட, பனியின் மேல் இருக்கும் காதலைக் கண்டு தான் பொறாமை கொண்டாள். நான் விக்ரமிடம் தன் விருப்பத்தைக் கூறி முடிந்த மட்டும் போராடி இருந்தால் இந்நேரம் பனிக்கு பதிலாக தனக்கு அவனது ஒட்டுமொத்த காதலும் கிடைத்திருக்குமே என்ற ஏக்கம்...

"இப்போ எதுக்கு இந்த தேவையில்லாத பேச்சு... இருக்குற கோபத்துல உன்னை கொல்ற வெறில வந்தேன்..." என்று பல்லை கடித்தபடி கூறிவிட்டு, அவளது பாதத்தைப் பார்த்தான். 'இதனால் நீ தப்பிச்சே!' என்று அவன் சொல்லாமல் விட்ட வார்த்தைகளை நினைத்து சிறு கீறலாய் விரிந்தது பெண்ணவளின் இதழ்கள்.

"நீ என்னை ஒரு செகண்ட் கூட லவ் பண்றதா நெனச்சது இல்லேயா? அட்லீஸ்ட் சேம் ஃபீல்ட்ல இருக்கிறோம் மேரேஜ் செய்துகிட்டா லைஃப் ஸ்மூத்தா இருக்கும்னு கூட என்னை யோசிச்சு பார்த்தது இல்லேயா?" என்று ஏக்கமாக வினவினாள்.

இந்த கேள்விக்கு ஆடவனால் தலை நிமிர்ந்து பதில் சொல்ல முடியவில்லை... ஆனால் அவள் தன் மனதில் என்ன மாதிரி தோன்றி மறைந்தாள் என்று நினைவில் வர தன்னையும் அறியாமல் புன்னகைத்தபடி கூறினான்,

"தெரியாத தேவதைக்கு தெரிந்த பேய் பரவாயில்லேனு நெனச்சிருக்கேன்..." என்றான்.

அக்ஸராவை பேய் என்றதில் அவள் வாய் திறந்து சத்தமாக சிரித்தாள்...

மேலும் அவனே தொடர்ந்தான் "ஆனா இப்போ அந்த தேவதை தான் எனக்கு எல்லாமேன்ற அளவுக்கு என்னை எப்பவோ மாத்திட்டா.. அவ இல்லேனா நான் இல்லவே இல்லனு நெனைக்க வெச்சுட்டா..." என்றிட அக்ஸராவின் சிரிப்பு நின்றது.

"நான் உன் கூட பழகின மத்த பொண்ணுங்க மாதிரி இல்லேனு சொல்லுவேயே.... இப்போ அதைவிட கேவலமா நெனச்சிருப்பேல!!!" என்று அக்ஸரா குரல் உடைந்து வினவினாள்.

சட்டென நிமிர்ந்து பார்த்தவன் "பின்னே நீ பண்றதுக்கு பேர் லவ்-னு நெனச்சிட்டு இருக்கேயா!!!" என்று அவனும் அந்த குரலுக்காகக் கூட பரிதாபப் படாமல் உச்சகட்ட கோபத்தில் வினவினான்.

"என்னை பிடிக்கலேனா மொதவே ஸ்ட்ராங்க அவாய்ட் பண்ணிருக்கலாமே விக்ரம்... ஏன் என்னை என்கரேஜ் பண்ணின?"

"நம்மலோட ஃபஸ்ட் ஆட் ஷூட் நியாபகம் இருக்கா?"

எப்படி மறக்க முடியும் என்பது போன்ற கசப்பான புன்னகையை சிந்தியபடி "ம்ம்ம்.... நீயா தான் வந்து பேசின... அந்த ஆட்ல நான் உன் பேர்(pair) கிடையாது... அதனால உன்னோட பேர் மெய்ன் மாடலிங் கூட என்னை பொறாமையா பாத்தா.... அன்னைக்கி நீ என்கிட்ட பேசாமலேயே இருந்திருக்கலாம்..." என்றாள்.

"நானா வந்து பேசினதுக்குக் காரணம், அந்த டிரைக்டரை நீ அட்ஜஸ்ட் பண்ணிருந்தா அந்த ஆட்க்கு நீ தான் மெய்ன் ஹீரோயின்... ஆனா நீ டிரைக்டருக்கு நோ சொல்லிட்டேனு கேள்விபட்டேன்... அதனால தான் எனக்கு நீ தனியா தெரிஞ்சே... அதே மாதிரி மத்த பொண்ணுங்க எல்லாம் என்கிட்ட பேசுறதுக்கு இன்ட்ரஸ்ட் காண்பிக்கும் போதும், என் கூட ஷூட்டிங் வரதுக்கு ஆசைப்படும் போதும் நீ மட்டும் என்னை அவாய்ட் பண்ணினே.... அந்த டிரைக்டர் மாதிரி தான் என்னையும் நெனச்சிட்டேனு புரிஞ்சது... என்னை விலக்கி வெச்ச அந்த குணம் தான் உன்னை நல்லவளா காட்டுச்சு... அது தான் உன்கிட்ட ஒரு ஃப்ரெண்ட்லியா பேசச் சொல்லி தூண்டுச்சி... நான் அன்னைக்கு பார்த்த அக்ஷூ நீ இல்லே... சொல்ல போன அந்த அக்ஷூ காணாம போயிட்டா...." என்று வருத்தமும், வெறுப்புமாகக் கூறினான்.

அக்ஸராவிற்கும் அது புரியத்தான் செய்தது. தான் கண்ட மாயை நிறைந்த உலகம் தன்னை மாற்றிவிட்டதாக நினைத்தாள். அவள் எதுவும் பேசாமல் தலைகவிழ்ந்து அமர்ந்திருக்க, மேலும் தொடர்ந்தான்.

"நானா தான் உன்னை அப்ரோச் பண்ணி பேசினேன் அதனாலத் தான் நீ என்கிட்ட பேசினே... அப்படிங்கற விஷயம் என் மேல தான் தப்புனு எனக்கு ஒவ்வொரு முறையும் உறுத்தலா இருக்கும்...

சரி நான் விலகிப் போனா நீ புரிஞ்சிப்பேனு நெனச்சேன்... அதுவும் உனக்குப் புரியலே... கல்யாணம்னு சொன்னதுக்கு அப்பறமாவது ஒதுங்கிப் போயிடுவேனு நெனச்சேன்... 'நீ எப்பவும் என் வீட்டுக்கு வரலாம்'னு சொன்னது கூட நான் பார்த்த பழைய அக்ஸராவை எதிர்பார்த்து தான் சொன்னேன். ஆனா நீ தாங்க் யூ னு சொன்ன போது இப்போ நீ ஏமாந்து நிக்கிறதை விட பல மடங்கு ஏமாற்றம் எனக்குத் தான்...." என்று அவளை சாடும் பார்வை பார்த்தான்.

அதில் மாற்றாள் கணவனை அடைய நினைக்கும் அளவிற்கு கீழ்தரமாக மாறிப்போன தன் புத்தியை நினைத்து வெட்கி தலைகுனிந்தாள். இன்று அவளிடம் முழுவதையும் பேசி இன்றே முற்றுப்புள்ளி வைத்திடும் நோக்கில் மீண்டும் பேசத் தொடங்கினான் விக்ரம்.

"நீ கனடா போறதுக்கு முன்னாடி கூட உன் கெரியரை மொதோ கவனினு உனக்கு சொன்னேன் தானே!" என்று அவன் நிறுத்திட, தலைகுனிந்து "ம்ம்ம்" என்றாள்.

"ஆனா எனக்காகத் தான் திரும்ப இந்தியா வந்தேனு சொன்னதும் மறுபடியும் அதே ஏமாற்றம்... இப்பவும் நீ ஃபோன் பண்ணும் போதெல்லாம் வேலை இருக்குனு சொல்லி அவாய்ட் பண்ண தான் செய்தேன்... அது உனக்கு இன்னமும் புரியலே... இன்னைக்கு நீ செய்த காரியம்.... எப்பவும் என்னால மறக்க முடியாது... இனி நாம மீட் பண்ணாம இருக்குறது தான் உனக்கு நல்லது..." என்று கூறி நிறுத்தினான்.

அக்ஸரா அவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் கூனி குறுகி அமர்ந்திருந்தாள். விடைபெறுகிறேன் என்று கூட சொல்லாம் வெளியேறிச் சென்றான் விக்ரம்.

விக்ரம் தன் இல்லம் வந்ததில் இருந்து வெளியேறிச் சென்றது வரை அனைத்தையும் மலரிடம் கூறி முடித்தாள் அக்ஸரா.

அக்ஸராவின் கூற்றில் தனக்குத் தேவையான பல கேள்விகளின் விடை கிடைத்திடவே, உண்மை தெரிந்த அதிர்ச்சியில் அப்படியே உறைந்து நின்றிருந்தாள் மலர்.

"இனி உங்க லைஃப்ல வரமாட்டேன் மலர். நெக்ஸ்ட் வீக் யூரோப் போறேன்... இனி இந்தியா பக்கம் வரக் கூடாதுன்ற முடிவுல தான் போறேன்.... அதுக்கு முன்னாடி உன்கிட்ட மன்னிப்பு கேட்கனும்னு தோனுச்சி... அதான் உனக்கு கால் செய்தேன்.

உன் ஹஸ்பண்ட் பத்தி நான் உனக்கு சொல்ல தேவையில்லே தான்... விக்ரம் தனக்கு உரிமையானவங்ககிட்ட மட்டும் தான் தன்னோட கோபத்தை காண்பிப்பான்னு இப்போ நான் நல்லாவே புரிஞ்சிகிட்டேன்.

இந்த காயம் அவன் தெரிஞ்சே செய்திருந்தாலும் உனக்காக உன்னை மனசளவுல அசிங்கப் படுத்திடேன்றதுக்காக எனக்கு தண்டனையா நெனச்சு தான் செய்திருப்பான். ஆனா நீ அவனை வெறிகொண்ட மிருகமா நெனச்சி அவன் மேல கோபப்பட்டு கேட்ட...

ஒரு பொண்ணுக்கிட்ட எந்த அளவு கோபத்தைக் காட்டனும், எந்த அளவு உரிமைகாட்டனும்னு விக்ரமுக்கு நல்லாவே தெரியும்... எந்த சூழ்நிலையிலேயும் விக்ரம் தன்னோட நிதானம் இழக்கமாட்டான்... உன் ஹஸ்பண்ட் எந்த தப்பும் செய்யலே... இப்பவும் எப்பவும்..." என்று முடித்தாள்.

அக்ஸராவிடம் பேசிவிட்டு இல்லம் திரும்பிய மலர், அமைதியாகவே சுற்றித் திரிந்தாள். செண்பகமும் பெண்ணவள் யோசிக்கிறாள் என்று உணர்ந்து இடையூறு இல்லாமல் விலகிக் கொண்டார்.

மாலை நேரம் செம்பியன் வர, அவனது முகம் சற்று சோர்ந்திருப்பதைக் கண்ட மலர், இந்த வீடியோ தான் காரணம் என்று ஊகித்து, தனக்குள் சிரித்துக் கொண்டு அவனை இயல்புக்குக் கொண்டு வர பெரும் பிரயத்தனப்பட்டாள்.

கொஞ்சம் கொஞ்சமாக இயல்புக்கு வந்தவன் கூட விக்ரமைக் கண்டதும் மீண்டும் சோர்ந்து போனான். விக்ரமைப் பார்த்து முகத்தை திருப்பிக்கொள்ள, விக்ரமோ கையை முறுக்கிக் கொண்டு செம்பியனை நெருங்கினான்.



-தொடரும்.​