பாவை வெளியே தன் பார்வையை செலுத்திப் பார்த்தாள்.நன்றாக வளர்ச்சியடைந்த நகரமாக திகழ்ந்தது.வானளவு உயர்ந்த கட்டிடங்களும் எங்கும் டிஜிட்டல் மயமாக இருந்தது.அங்கிருந்தவர்களில் பாதிப்பேர் தங்களின் கைப்பேசியில் லயித்து குனிந்தபடியே நடந்துக் கொண்டிருந்தனர்.
பக்கத்தில் இருந்தவர் பாவை ஆச்சரியமாக அங்கிருந்த இடங்களை பார்க்கவும் “இப்போ தான் முதல் தடவையா கொரியாவுக்கு வர்றீங்களா?”
ஆமாம் என்று தலையசைக்கவும் “அப்போ கொரியன் நல்லா பேசுறீங்களே எப்படி?” என்றதும் ஒருநிமிடம் அமைதியானவள் “இந்தியன் கம்பெனில கொரியன்ஸ் நிறைய பேரு இருக்காங்க அவங்க கூட பேசி பழகியதில் தெரியும் அதனால பேசுறது நல்லா புரியும் ஆனால் நான் பேசிறதுக்கு சரியாக வராது” என்றாள் கொரியனும் ஆங்கிலமும் கலந்து பேசினாள்.கொரியன் மொழி பெரிய வார்த்தைகள் பேச தடுமாறினாள்.
அஜ்ஜீமாவிடம் பேச வேண்டுவதை ஏற்கனவே பேசி பார்த்ததால் சரியாக உச்சரிக்க முடிந்தது.அவரும் யோசனையோடு சரி என்று விட்டு அரைமணி நேர பயனத்திற்கு பிறகு நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து கார் நேராக குடியிருப்பு பகுதிற்குள் நுழைந்தது.சியோலின் பகுதிகள் மலைப்புறமாக இருப்பதால் கொஞ்சம் சரிவுப் பாதையாக போன அந்த இடத்தில் இன்னும் பதினைந்து நிமிட பயணத்திற்கு பிறகு கொஞ்சம் தனி வீடாக இருந்த வில்லாவின் வாசலில் நின்றது.
காரிலிருந்து இறங்கிய அஜ்ஜீமா “வாம்மா இது தான் என்னுடைய வீடு உள்ளே வாங்க” என்று பாவையை கைப்பிடித்து அழைத்தார்.உடனே பாவை கைப்பையை எடுத்து மாட்டிக் கொண்டு “அஜ்ஜீமா என்னோட லக்கேஜ்ஜை எடுக்கனும்” என்றாள்.
உடனே அவரோ “அதெல்லாம் என் பையன் எடுத்துட்டு வருவான் நீங்க வாங்க” என்று புன்னகை முகத்தோடு அவளை உள்ளே அழைத்துச் சென்றார்.
வீட்டின் வாயிற்கதவை திறந்ததும் சின்னதாக ஒரு தோட்டம் இருந்தது.அதன் நடுவே இருந்த ஒற்றைப் பாதையின் வழியே நடந்துச் சென்றாள் ஒரு வீடு இருந்தது. அதை ஒட்டி இன்னொரு சிறிய வீடும் இருந்தது.அந்த பெரிய வீட்டின் கதவை திறந்து உள்ளே செல்லும் போதே அவரோ “ஹேனுன் இடோயி சாயோ சானின் மிகினின் பாக்கிலி இசாயோ- ஹீன் எங்கே இருக்கே வெளியே கார்ல இருக்கிற பொருட்களை எடுத்து உள்ளே வா” என்றார்.
உடனே உள்அறையில் இருந்து அவனோ “அதெல்லாம் முடியாது எப்போ வீட்டுக்கு வந்தாலும் வேலை செய்ய சொல்லுறீங்க” என்றான்.
இவரோ பாவையிடம் “ஒருநிமிசம் உட்காருங்க” என்று அங்கிருந்த இருக்கையில் அவளை அமரச் சொல்லி விட்டு சமையலறைக்குச் சென்றார்.
சத்தம் வந்த திசையில் இருந்து வெளியே வந்தான் கொரிய இளைஞன் ஒருவன்.இவள் நிமிர்ந்துப் பார்க்க அவனோ இவளை ஆச்சரியமாக பார்த்தான்.ஆறடி உயரத்தில் கலைந்த கேசத்தோடு அரை டவுசரும் டீசர்ட்டும் அணிந்தபடி கையில் கேம்க்கான சாதனத்தோடு நின்றிருந்தவன் “தங்சேனுன் இந்தோ ஸலாம் இபினிகா-நீங்க இந்தியரா?” என்றதற்கு அவளோ தயக்கத்தோடு “நே ஜைனோன் இந்தோ நியோ-ஆமாம் நான் இந்தியன்” என்று தட்டுத்தடுமாறி பதில் சொன்னாள்.
அதைக்கேட்டு அவன் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு “இங்கிலிஷ் தெரியும்னா என்கிட்ட பேசுங்க நான் நல்லாவே பேசுவேன்” என்றான்.
அதைக்கேட்டு இவளுக்கு சிறிது தர்மசங்கடமாக இருந்தது.சரி என்பது போல் தலையசைத்தாள்.
அங்கே வந்த அஜ்ஜீமா கையில் காபியோடு வந்து அவளுக்கு கொடுத்தார்.“பாவை முதல்ல காபி குடிங்க அடுத்து நாம நீங்க இருக்கப் போற வீட்டுக்கு போகலாம்” என்றார்.
உடனே அவருடைய மகன் அவரை தனியே அழைத்து வெளியே சென்றவன் “ஒம்மா இவங்க தான் நம்ம பக்கத்தில் வீட்டில் வாடகைக்கு வர போறாங்களா?”
என்றதற்கு அவரோ “ஆமாம்” என்று சொல்லி தலையசைத்தார்.
உடனே ஹீன் “ஏன்ம்மா வேற ஆளே இல்லைன்னா யார்னே தெரியாத இந்த மாதிரி வேற நாட்டுக்காரங்களை நம்ம பக்கத்துல தங்க வைக்கிறீங்க?”
என்றான் பிடிக்காமல்…
அதற்கு அஜ்ஜீமா “உனக்கு சேகர் சார் தெரியும்ல உன் அப்பாவோடு வேலை பார்த்தவர் அவர் சொன்னாங்கன்னு தான் நான் இந்தப் பொண்ணை இங்கே தங்க வைக்க ஒத்துக்கிட்டேன் அதுவும் இல்லாமல் அந்தப் பொண்ணு பேரு ஹா..ஹான் பாவைக்கு அம்மா அப்பா யாருமே இல்லையாம் வயிற்றுல வேற குழந்தை இருக்கு அந்த குழந்தைப் பற்றி எதுவும் சொல்ல மாட்டேங்குறான்னு கவலைப்பட்டாரு அதுவும் இல்லாமல் இந்த மாதிரி ஒரு நிலைமையில் ஏன் தன் தாய்நாட்டை விட்டுட்டு இப்படி மொழியே தெரியாத இந்த நாட்டுக்கு வந்து இருக்கான்னு எதுவுமே தெரியலை”என்றார்
சோகத்தோடு…
இதை எல்லாம் கேட்ட ஹீன் அப்படியே அதிர்ச்சியில் நின்றவன் “அப்போ அவ புருஷன் எங்கே?” என்றதற்கு “அதைப் பத்தியும் தெரியலைன்னு தான் சேகர் சார் சொன்னார்” என்றார் அஜ்ஜீமா.
உடனே ஹீன் மெதுவாக அவள் இருக்கும் பக்கம் எட்டிப் பார்த்தான் சுற்றும் முற்றும் வேடிக்கைப் பார்த்தப்படி அவனுடைய அம்மா கொடுத்த கருப்பு காபியை கஷ்டப்பட்டு விழுங்கிக் கொண்டிருந்தாள்.அதை அவளின் முகமாற்றத்தை வைத்தே கண்டுக் கொண்டவன்
“ஒம்மா அந்தப் பொண்ணுக்கு காபி பிடிக்கலை போல என்ன சாப்பிடுவீங்கன்னு கேட்டுட்டு கொடுங்கன்னு எத்தனை தடவை சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறீங்க சரி இனிமேல் இங்கே என்ன நடக்கப் போகுதுன்னு பார்க்கலாம்” என்று அவன் அம்மா சொன்ன வேலையை செய்யப் போனான் ஹீன்.
அஜ்ஜுமா பாவைக்கு அருகில் வந்தவர் “என் பையன் இப்படி கேள்வி கேட்கிறானேன்னு தப்பா நினைக்காதே! அவன்கிட்ட நீங்க வர்றதை நான் முதலிலேயே சொல்லலை அதான் என்னன்னு விவரம் கேட்டு இருப்பான் மற்றபடி நல்ல பையன் வயசு முப்பது ஆகுது இப்போ வேலை இல்லாமல் வீட்ல சும்மா தான் இருக்கான் எனக்கு இன்னும் ஒரு பொண்ணு இருக்கா அவ காலேஜ்
போயிருக்கா இதெல்லாம் சேகர் சார் சொல்லி தான் ஏற்பாடு செய்து இருக்கேன்” என்றார்.
உடனே பாவை எழுந்து “கம்சாயியோ அஜ்ஜீமா- நன்றிகள் ஆண்ட்டி” என்றாள்.
அவரோ அவளின் கையைப் பிடித்து “இருக்கட்டும் பரவாயில்லை நாளைக்கு லீவு அதனால உன் பொருளை எல்லாத்தையும் எடுத்து வை அதற்கு மறுநாள் நாம ஆபிஸிக்கு போகலாம்” என்றவர் “வாங்க நாம வீட்டை பார்க்க போகலாம்” என்றார்.
அதற்கு பாவை “அஜ்ஜீமா என்னைப் பார்த்து வாங்கன்னு மரியாதையாக சொல்ல வேண்டாம் உங்க மகளாட்டும் உரிமையா பெயர் சொல்லி அழைங்க” என்றதற்கு அவரும் புன்னகை ஒன்றை பதிலாக தந்து சரியென்று ஒப்புக் கொண்டார்.
இருவரும் பக்கத்தில் இருந்த அந்த சின்ன வீட்டுக்குள் நுழைந்தனர்.ஒரு சிறிய வரவேற்பறை அடுத்து அதனுள்ளே ஒரு சிறிய அறை மற்றும் அதனோடு கூடிய குளியலறை மேலும் வரவேற்பறையின் இன்னொரு பக்கமாக சமையலறையும் இருந்தது.அந்த இடத்தைப் பார்த்ததும் பாவைக்கு பிடித்து இருந்தது.
வீட்டிற்கு தேவையான எல்லா பொருட்களும் சேர்த்து தான் அங்கே இருந்தது.
பாவை யோசனையோடு “இந்த பொருட்கள் எல்லாம் யூஸ் பண்ணலாமா?” என்றதற்கு அஜ்ஜீமா “சேகர் சார் தான் எல்லாம் பொருளும் வாங்கச் சொல்லி பணம் அனுப்பி இருந்தாரு நானும் தேவையான எல்லாத்தையும் வாங்கிட்டேன் வேற எதாவது தேவைன்னா நீ வாங்கிக்கோ” என்று சொல்லவும் ஹுன் பாவையின் பொருட்களை எல்லாம் எடுத்து வந்து உள்ளே வைத்தான்.
அதைப் பார்த்த பாவை அவனுக்கு உதவிச் செய்யச் செல்ல அவனோ அவளைக் கண்டுக் கொள்ளாமல் எல்லாவற்றையும் எடுத்து வைத்தான்.ஹீன் அருகில் சென்றவள் “ரொம்ப தாங்ஸ்” என்றாள் ஆங்கிலத்தில் அவனும் “இட்ஸ் ஓகே” என்று பதிலுரைத்து விட்டு சென்று விட்டான்.
அஜ்ஜீமாவும் “பாவை நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு எனக்கும் வேலை இருக்கு போய்ட்டு வரேன்” என்று சென்று விட்டார்.
எல்லோரும் சென்று விடவும் அமைதியாக ஒரு நாற்காலியில் அமர்ந்தவள் எல்லாவற்றையும் பார்த்தப்படி அப்படியே கண்ணீர் வடித்தவள் மனதினுள் ‘அப்பா அம்மா கடைசில இப்படி நான் மட்டும் தனியா நிப்பேன்னு நினைச்சுக் கூட பார்க்கலை ஏன் எல்லோரும் என்னை இப்படி பாதியிலே தவிக்க விட்டு போய்ட்டீங்க’ என்று கலங்கியவள் அப்படியே அந்த நாற்காலியின் கைப்பிடியை இறுகப் பற்றியபடி விழிகளை மூடினாள் பாவை.
விழிகளில் இருந்து கண்ணீர் வடிந்துக் கொண்டிருந்தது.அப்பொழுது ஏதேச்சையாக உள்ளே வந்த ஹீன் பாவைக்காக கையில் பழங்களோடு கதவு திறந்து இருக்கவே நேராக உள்ளே வந்தான்.
அங்கே பாவை இருக்கும் நிலைமையைப் பார்த்து அவனுக்கே ஒரு மாதிரியாகி விட்டது.அவன் அப்படியே அமைதியாக நிற்கவும் விழிகளை மூடியிருந்தாலும் தன் முன்னே நிழலாக யாரோ நிற்பதை உணர்ந்து விழிகளை திறந்தவள் எதிரே ஹீன் நிற்பதை பார்த்து பதறியபடி எழுந்தவள் சிவந்திருந்த விழிகளை துடைத்து விட்டு “என்னாச்சு என்ன வேணும்?”என்றாள்.
அவனோ அவள் முகத்தை பார்க்காதவாறு “ஒம்மா இந்த பழங்களை சாப்பிடக் கொடுத்தாங்க சாப்பிடுங்க நைட் டின்னர் வீட்டுக்கு சாப்பிடவாங்க அம்மா சொல்லச் சொன்னாங்க “ என்று தன் கையில் இருந்ததை அவளுக்கு கொடுத்து விட்டு வேகமாக வெளியே சென்று விட்டான்.
பாவை என்னச் செய்வதென்று தெரியாமல் அப்படியே நாற்காலியில் அமர்ந்தவள் எதிரே இருந்த கண்ணாடியில் தன்னை பார்த்தவள் மனதினுள் ‘'யார் முன்னாடியும் இனிமேல் நான் பலவீனமாக இருக்கக் கூடாது’ என்று தனக்குள்ளேச் சொல்லிக் கொண்டாள்.
ஆனால் வெளியே தோட்டத்தில் ஓரமாய் நின்றுக் கொண்டிருந்த ஹீன் பாவையின் நிலைமையைய் பற்றி யோசித்துக் கொண்டிருந்தான்.சற்று முன்பு வரை எந்தவிதமான வருத்தத்தையும் காட்டாமல் புன்னகையோடு வந்திருந்தவளின் முகம் தனியே இருக்கும் போது வேறு ஒரு முகத்தை தான் அவன் பார்த்திருந்தான்.
ஹீன் மனதினுள் ‘எனக்கு எதுக்கு தேவையில்லாத பற்றி யோசனை?’ என்று நினைத்தவாறு தன் அறைக்குள் போய் இருந்துக் கொண்டான்.
இந்தியாவை விட தென் கொரியாவில் மூன்றரை நிமிடம் முன்னோக்கி இருப்பதால் பாவைக்கு நேரமாறுபாடுவினால் ஒருவிதமான அசதியாகவே இருந்தது.அதனால் சிறிது நேரம் ஓய்வு எடுக்கலாம் என்று அறையில் போய் படுத்துக் கொண்டாள்.
கண்களை மூடியவள் அசதியில் தூங்காமல் யாரோ தன்னை கவனிப்பது போல் இருக்க சுற்றும் முற்றும் பார்த்தாள்.ஆனால் திருப்தியாக இல்லாமல் இருக்க வெளியே வந்தவள் தோட்டத்தைச் சுற்றிப் பார்த்தாள்.யாரும் இல்லை வீட்டின் வாயிற்கதவு மூடாமல் இருப்பதை கவனித்தவள் நேராகச் சென்று கதவை தாழிட்டு விட்டு படுக்கையில் போல் தூங்கினாள்.
சிறிது நேரத்தில் எழுந்தவள் குளித்து விட்டு உடையை மாற்றி தலைமுடியை விரித்து விட்டு வரவேற்பறையில் உட்கார்ந்து தான் கொண்டு வந்திருந்த துணிகளை எடுத்து அலமாரியில் வைத்து அடுக்கினாள்.
அடுத்து மற்ற பொருட்களை எடுத்து ஒவ்வொன்றாக பிரித்துப் பார்த்தாள்.அவளுடைய துணிகளை மட்டும் தான் அவள் எடுத்து வைத்திருந்தாள்.ஆனால் மற்றவை எல்லாம் இவள் சென்னையிலிருந்து செல்வதற்கு முன்பாகவே சென்னை விமான நிலையத்திற்கு சேகர் அங்கிள் அனுப்பி வைத்திருப்பது அவளுக்கு அங்கே சென்ற பிறகு தான் தெரிய வந்தது.
அதை எடுத்து பிரித்துப் பார்த்தாள்.மூன்று, நான்கு மாதங்களுக்கு தேவையான மளிகைப் பொருட்கள் எல்லாம் இருந்தது.அதை பார்த்ததும் விழிகளில் கண்ணீர் நிறைந்துப் போய் இருந்தது.
பெற்றவர்களைப் போல் அவளுக்குத் தேவையான எல்லாவற்றையும் வாங்கி வைத்தனர்.எல்லாவற்றையும் எடுத்து ஒவ்வொன்றாக அடுக்கி வைத்தாள்.
மனதினுள் ‘'இன்னும் கொஞ்சநாளைக்கு நல்ல சாப்பாடு சாப்பிடலாம்னு நினைக்கிறேன் முடிஞ்ச வரைக்கும் இந்தியன் பொருட்கள் கிடைக்கிற கடையை கண்டுபிடிக்கனும்’ என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது.
எழுந்து கதவை திறந்ததும் அஜ்ஜீமா தான் நின்றுக் கொண்டிருந்தார்.அவரை உள்ளே அழைத்ததும் அவரோ “பாவை சாப்பிட போகலாம் வாம்மா” என்றார்.
பாவையோ “வேண்டாம் அஜ்ஜீமா நானே சமைச்சுக்கிறேன்” என்றதற்கு கட்டாயப்படுத்தி அவளை தன்னுடன் அழைத்துச் சென்றார்.