• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அத்தியாயம் -6

shaliha ali

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 24, 2024
79
67
18
Chennai
உருகாதே உயிரே விலகாதே மலரே அத்தியாயம் - 6


நவீன வசதிகளையுடைய அடுக்குமாடி குடியிருப்பில் ஏழாவது மாடியில் உள்ள அந்த கதவினை திறப்பதற்கான கடவுச்சொல்லை ஐம்பது வயது மதிப்புத்தக்க பெண்மணி ஒருவர் கதவின் எண்களை அழுத்த அது திறக்காமல் போனது.


இன்னொரு முறை யோசித்து சரிபார்த்து அழுத்துவதற்கு செல்வதற்கு முன்னர் உள்ளிருந்து கதவு திறக்கப்பட்டது.இந்த பெண்மணியோ கோபத்தோடு கூடிய சிரித்த முகமாக உள்ளே வந்தார்.


அங்கே ஆறடி உயரத்தில் கட்டுக்கோப்பான உடல்வாகோடு கொரிய ஆண்களுக்கே உரித்தான அதே பளீர் வெள்ளை நிறத்தோடு சிறிய கண்களும் சிவப்பு நிற உதட்டோடு மேல்சட்டையின் பட்டன்களை போட்டுக் கொண்டிருந்தான் அவன்.



அவனைப் பார்த்து முறைத்தப்படி அந்த பெண்மணியோ “கிம் திரும்பவும் கதவோட பாஸ்வோர்ட் நம்பர் மாத்திட்டியா?”


அவனோ சிரித்துக் கொண்டே ஆமாம் என்று தலையசைத்தான்.


அந்தப் பெண்மணி கொஞ்சம் கோபமாக “இன்னைக்கு நேரா ஹாஸ்பிட்டல் போய் உன்னோட அஜ்ஜீமாவை பார்த்துட்டு வா ப்ளீஸ்” என்றார்.

அவனோ போகலாமா? வேண்டாமா? என்ற யோசனையோடு தன் தாயை பார்க்க அவரோ அவனை முறைத்துக் கொண்டிருந்தார்.அவரின் இந்த பார்வையில் ஓரளவு புரிந்துக் கொண்டவன் “ஒம்மா இன்னைக்கு ஆபிஸ்ல வொர்க் இருக்கு” என்றான்.


அவரோ “எல்லாம் நான் அப்பாகிட்ட பேசிக்கிறேன் நீ கிளம்பு கிம்” என்று கையில் வைத்திருந்த ஒரு பையை அவனிடம் நீட்டினார்.



அதை வாங்கிக் கொண்டவன் கூலர் கண்ணாடியை அணிந்துக் கொண்டு தன் காரில் ஏறி பயணப்பட்டான்.


பாவை இந்த முறை தனியாகவே மருத்துவமனைக்குச் செல்ல முற்பட்டாள்.அதனால் அஜ்ஜீமாவிடம் பொதுவாக வெளியே செல்வதாக சொல்லி விட்டு வீட்டின் வாயிலில் நின்றவள் கைப்பேசியில் மூலமாக வாடகைக் காரை பதிவு செய்துக் கொண்டிருந்தாள்.


ஆனால் அது சரியாக பதிவாகாமல் இருந்தது.அதனால் மெதுவாக பேருந்து நிலையத்தை நோக்கி நடக்கத் துவங்கினாள்.அப்பொழுது அவளருகே ஒரு கார் இவளருகே வந்து நின்றது.இவளோ யோசனையாக பார்க்க… உள்ளே காரின் கண்ணாடிக் கதவை இறக்கி விட்டால் ஹுன் அங்கே அமர்ந்திருந்தான்.


பாவையை பார்த்து புன்னகையை சிந்தியவன் “தூரமாக வெளியே போறீங்களா?”

ஆமாம் என்று தலையாட்டி விட்டு திரும்பவும் நடக்க ஆரம்பித்தாள்.ஹுன் பாவையிடம் “பாவை ரொம்ப ஸ்டெயின் பண்ணாதீங்க வாங்க வந்து கார்ல ஏறுங்க”



அவளோ “வேண்டாம் ஹுன் நான் நடந்து போறேன்” என்றாள்.


அவனோ அவளை விடாப்பிடியாக “எனக்கு தெரியும் நீங்க ஹாஸ்பிட்டல் போறீங்கன்னு என்னோட ப்ரெண்ட் அந்த இடத்தில் தான் அட்மிட் ஆகி இருக்கான் அவனை பார்க்க நானும் அங்கே தான் போறேன் அதனாலத் தான் உங்களை கூப்பிடுறேன்.உங்களுக்கு வர வேண்டாம் டாக்ஸிக்கான பணத்தை கொடுங்க” என்றான்.


இவளும் வேறு வழியில்லாமல் சரியென்று காரில் ஏறினாள்.ஹுன் முதலில் பேச்சை ஆரம்பித்தான்.


“சமுன்பினோன் ஒட்டோகி ஜிஹின்ஒத்தோகி இஸ்னாயோ? -ஆபிஸ் வொர்க் எப்படி போகுது?”


“பரவாயில்லை இப்போத் தானே போக ஆரம்பிச்சு இருக்கேன் சரியாகி விடும்” என்றாள்.


“கிளோஸீபினிகா-அப்படியா?” என்றவனிடம் “உங்க ப்ரெண்ட்டுக்கு என்னாச்சு?”


“நேத்து சின்னதாக ஒரு ஆக்ஸிடென்ட் ஆயிடுச்சு முழங்காலுல நல்ல அடி அதான் பார்க்க போறேன்” என்றான்.


இருவரும் பொதுவாக பேசிக் கொண்டே வரவும் அவர்கள் செல்ல வேண்டிய மருத்துவ வளாகமும் வந்தது.பாவை தன்னுடைய பிரிவின் பக்கம் செல்ல ஹீன் தன் நண்பனைப் பார்க்க சென்றான்.


முதலில் பரிசோதனைகள் எடுத்து முடித்தார்கள்.அடுத்து மருத்துவரிடம் காட்டி விட்டு தடுப்பூசி போடுவதற்காக வெளியே இருக்கையில் காத்திருந்தாள் பாவை.


கிம் தன் அம்மா சொன்னதற்காக கையில் சில வகை பழங்களோடு கூடிய பையைக் கொண்டு வந்து அவரிடம் கொடுத்து விட்டு உடல்நிலையைப் பற்றி விசாரித்து விட்டு பேசியபடி தன் அஜ்ஜீமாவின் அறையில் உட்கார்ந்திருந்தான்.அவனுக்கு பிடித்திருந்த நபர்.ஆனால் சில மாதங்களாக அவனை திருமணம் செய்துக் கொள்ள வற்புறுத்துவதால் அவரை சந்திப்பதை தவிர்த்து இருந்தான்.


யாரையும் திருமணம் செய்துக் கொள்ளும் எண்ணம் எல்லாம் தற்போது இல்லை.ஏற்கனவே பட்ட வலிகள் இன்னும் ஆறாத ரணங்களாக நெஞ்சில் இருந்தது.


அதனால் அவரின் மனதை வருத்தப்பட வைக்காமல் இருக்கவே பார்ப்பதை தவிர்த்து இருந்தான்.இப்பொழுது அவருக்கு கொஞ்சம் உடல்நிலை சரியில்லாமல் போகவே பார்க்க வந்திருந்தான்.


ஆனால் இம்முறை அவனிடம் திருமணத்தைப் பற்றி பேசாமல் பொதுவாக பேசினார்.திடீரென்று யாரோ கதவை திறக்கும் சத்தம் கேட்டு திரும்பிப் பார்க்க அங்கே அவனின் யூஜா ஜிங்கு -பெண் தோழி க்வாங் வந்தாள்.கொரிய பெண்களுக்குரிய ஒல்லியான மினுமினுப்பான தேகத்தோடு கூந்தலை விரித்து விட்டப்படி நவீன உடை அணிந்து வந்தாள்.


அவளும் அவனின் குடும்பத்தைச் சார்ந்தவள் தான்.அவனைப் பார்த்து புன்னகைத்து கையசைத்தப்படி வந்தவள் கிம் அருகில் உட்கார்ந்தாள்.அவரின் உடல்நிலைப் பற்றி விசாரித்தாள்.


கிம் அவளைப் பார்த்து “க்வாங் நீயும் அஜ்ஜீமாவை பார்க்க வந்தியா?”


“ம்ம்… அஜ்ஜீமா சொன்னாங்க நீ வரேன்னு அதான் உடனே வந்துட்டேன் கிம் நீ சியோலை விட்டு பூசான் போன பிறகு பார்க்கவே முடியறது இல்லை கால் பண்ணாலும் எடுக்க மாட்டேங்கிற?”


“வொர்க் கொஞ்சம் ஜாஸ்தியா இருந்துச்சு அதனாலத் தான் பேச முடியலை”என்றான்.



“இங்கே சியோல்ல இருப்பே தானே”



“ஒரு வாரம் இருப்பேன் இங்கே உள்ள கம்பெனியை பார்க்க வந்திருக்கிறேன் திரும்பவும் பூசானுக்கு போயிடுவேன்” என்றான்.


உடனே க்வாங் “இன்னைக்கு நைட் டின்னருக்கு போகலாமா?”


“ம்ம்… போகலாம்” என்றான்.


அப்பொழுது அஜ்ஜீமாவோ “கிம் நான் சொல்றதை கேளு உனக்கு எந்த பொண்ணையும் பிடிக்கலைன்னா என்ன நம்ம க்வாங் இருக்காளே உன்னோட சிறுவயது தோழி உனக்கு பொருத்தமானவளா இருப்பாள் அவளையாவது கல்யாணம் செய்துக்கோ” என்றார்.



அவர் அப்படி சொன்னதும் க்வாங்கின் முகமோ புன்னகையில் நிறைந்திருந்தது.அதைக் கேட்டவன் தற்சமயம் இருவரின் மனமும் நோகாமல் இருப்பதற்காக “நான் யோசிச்சு பதில் சொல்றேன்” என்றான்.


அதைக் கேட்டதும் அஜ்ஜீமாவும் க்வாங்கும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.அப்பொழுது கிம்முடைய கைப்பேசி அழைக்க பேசுவதற்காக வெளியே வந்தான்.


சரியாக பேசுவது கேட்காமல் போக… கொஞ்சம் முன்னால் வந்து பேச வந்தவன் பேசியபடியே சுற்றி ஒரு நோட்டம் விட்டான்.அப்பொழுது ஒருத்தியைப் பார்க்க…. அங்கே அமர்ந்திருந்தவளைக் கண்டு அப்படியே அதிர்ச்சியில் நின்றான்.


கையில் இருந்த கைப்பேசி நழுவிப் போனது.கண்களை கொஞ்சம் உற்று நோக்கியபடி அமர்ந்திருந்தவளை பார்க்க நம்ப முடியாமல் இருந்தான்.அதுவும் மேடிட்ட வயிறோடு அமர்ந்திருந்த பாவை மதியை பார்க்க தலையே சுற்றிப் போனது அவனுக்கு.


அப்பொழுது ஹுன் தன் நண்பனை பார்த்து விட்டு பாவைக்கு அருகில் வந்தான்.அவளோ எழுந்துக் கொள்ள சிரமப்படும் பொழுது தன் கரங்களை நீட்டி அவளுக்கு உதவினான்.அருகினில் இருவரையும் ஒன்றாகப் பார்த்த கிம் பாவை தன்னை ஏமாற்றி இன்னொருவனுடன் அதுவும் வயிற்றில் குழந்தையை வைத்துக் கொண்டு நிற்பவளைப் பார்க்க அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.



ஒன்றரை வருடங்களுக்கு முன்னால் அவள் சிரித்துப் பேசிய நினைவுகள் அவளின் முகம் ஒருநொடி கண் முன்னால் வந்து போனது.ஆனால் இப்பொழுது இன்னொருவனின் கரங்களை உரிமையாக பிடித்துச் செல்பவளைப் பார்க்க அவனுக்கு கோபமாக வந்தது.


பாவை ஹுனிடம் “எனக்கு இன்னும் செக்அப் முடியலை நீங்க கிளம்புங்க நான் தனியா வந்துக்கிறேன்” என்றாள்.


அவனோ மறுத்தவனாய் “பரவாயில்லை பாவை நான் வெயிட் பண்றேன்” என்றான்.


மருத்துவர் பாவையின் குழந்தையை பரிசோதனை செய்தவர் நன்றாக இருப்பதாகச் சொன்னார்.அதோடு அவளை தடுப்பூசி போடுவதற்காக அழைத்துச் சென்றனர்.


கிம் அவர்களை மறைந்து இருந்தவாறு கண்காணிக்கத் துவங்கினான்.அவன் உயிராக நேசித்தவளை அதுவும் இப்படி பார்க்க அவனால் முடியவில்லை.


எல்லாம் மறந்து எப்படி இவளால் இன்னொருவனுடன் வாழ முடிகிறது? என்று அவன் நினைக்க நினைக்க ஏற்றுக் கொள்ள முடியவில்லை.


இருவரையும் அவர்களுக்குத் தெரியாமல் பின்னால் தொடர்ந்துச் சென்றான்.தடுப்பூசி போடுவதற்காக பாவை உள்ளே செல்ல இம்முறை ஹுனும் உடன் சென்றிருந்தான்.


பாவைக்கு தடுப்பூசி போடுவதற்கு இருக்கும் பொழுதே பயத்தினால் அவள் கைகள் நடுங்க ஆரம்பித்தது.இதைக் கவனித்த ஹுன் உடன் சென்று தடுப்பூசி போடும் பொழுது ஆதரவாக அவள் கைகளைப் பிடித்திருந்தான்.


பாவை என்னத் தான் தனியாக இருந்துக் கொள்வேன் என்றாலும் உண்மையாக சில நேரங்களில் தடுமாறிப் போனாள்.அதனால் ஹுனின் அந்த அக்கறை அவளுக்கு தேவைப்பட கரங்களை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்.


இதை எல்லாம் பார்த்த கிம் மனதளவில் இன்னும் காயப்பட்டு போனான்.இருவரும் ஒன்றாக வெளிவரும் போது பனிக்காலம் ஆரம்பம் ஆனது.அதனால் அப்பொழுது தான் பனி மழை லேசாக பெய்ய ஆரம்பித்து இருந்தது.



பாவை தன் வாழ்க்கையிலேயே முதன்முறையாக பனிமழையை பார்க்க அதன் அழகில் லயித்தவள் வானத்திலிருந்து விழுந்த பனித்துளியை கரங்களை நேராக நீட்டி கையில் ஏந்தியவள் அதன் குளிர்ச்சியை உணர்ந்து கண்மூடி சிரித்தாள்.


அவளின் புன்னகையை அருகினில் நின்றவனோ பாவையை முழுவதும் இரசித்தான்.


மெதுவாக அவளிடம் ஹீன் “பாவை இங்கே ஒரு நம்பிக்கை இருக்கு முதல்ல ஆரம்பிக்கிற பனிமழையில் நின்னு நம்ம கடவுள்கிட்ட விஷ் கேட்டால் விருப்பமானது கிடைக்கும்” என்றான்.


அதைக் கேட்டதும் உடனே தன் கைகளைக் கோர்த்து மேலே தன் தலையை நிமிர்த்தி தேவைகளை கேட்டாள்.


நடப்பதை எல்லாம் ஓரமாக நின்றுப் பார்த்துக் கொண்டிருந்த கிம் அப்படியே பழைய நினைவுக்குள் சென்றான். பாவை அவனிடம் பேசியது,
சிரித்தது,சண்டையிட்டது,கோபப்பட்டது என பழகியவை எல்லாம் அவனை இன்னுமாய் நினைவுப்படுத்தி கொன்றது.


அதற்கு மேல் பார்க்க முடியாமல் அங்கிருந்து சென்று விட்டான் கிம்.பாவையை பார்த்ததும் நிகழ்காலத்தை மறந்தவன் கடந்த காலத்தில் தன்னை தொலைத்திட எண்ணினான்.


நேராக தன் வண்டியில் போய் அமர்ந்தான்.வெளியில் இருந்த குளுமை அவனை உள்ளுக்குள் தீயாகச் சுட்டது.அதுவும் பாவைக்கு அருகில் இருப்பவன் அவளை இரசித்த விதம் அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.தன் வீட்டினுள் போய் அடைந்துக் கொண்டான்.


அவனின் அறையில் பாதுகாப்பாக வைத்திருந்த இருவரும் ஒன்றாக எடுத்த புகைப்படங்களைப் பார்த்து இன்னும் தன்னை வருத்திக் கொண்டான்.


அவளின் புன்னகையை கண்டவன் “இந்த சிரிப்பினில் தானே என்னை மறந்தேன் பாவை இப்போ எல்லாமே பொய் என்பது போல் ஆகிட்டியே பாவை ஏன் என்னை இப்படி ஏமாத்திட்டே? நான் என்ன தவறு செய்தேன்னு எனக்கு இப்படி ஒரு தண்டனை?” என்று அவளின்
புகைப்படங்களை எடுத்து தன் நெஞ்சினில் சாய்த்து வைத்தவன் அப்படியே படுத்தான்.


இருந்தும் அவனுக்கு இன்றைய நிகழ்வே வந்துப் போக நேராக தன் குளிர்சாதனப் பெட்டியை திறந்து “சோஜீ - அரிசியை காய்ச்சி வடிகட்டிய மதுபானமாகும்.இது கொரிய மக்களால் பெரிதும்காரினுள் விரும்பப்படும் பானமாகும்”
அதை எடுத்து ஒரு கவளம் குடித்தவன் அப்படியே மயங்கி சரிந்தான்.


இங்கே இருவரும் ஏறி தங்களின் இருப்பிடத்தை நோக்கி பயணித்தனர்.பாவைக்கு ரொம்ப குளிராக இருந்தது.அதனால் அவளுக்கு காபி வாங்கிக் கொடுத்தான்.அதை வாங்கிக் கொடுத்தவளிடம் “ரொம்ப நேரமாக கண்ணை மூடி இருந்தீங்களே பெரிய விஷ்ஷா?”


அவளோ சிரித்துக் கொண்டே “வெளியே சொன்னால் நான் கேட்ட விஷ் எப்படி நடக்கும்? அந்த விஷ் எனக்கு கிடைச்ச பிறகு சொல்றேன்” என்று ஆவலாகச் சொன்னாள்.


இருவரும் ஒன்றாக வீட்டினுள் போய் இறங்கினார்கள்.இதை எல்லாம் பார்த்த ஏராவிற்கு பாவை அவர்களின் குடும்பத்தோடு ஒன்றி இருப்பது பிடிக்கவில்லை.அதுவும் ஹுன் அவளிடம் காட்டாத ஒரு தன்மையான பேச்சு பாவையிடம் பேசுவது பிடிக்காமல் போனது.
 

shaliha ali

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 24, 2024
79
67
18
Chennai
என்னாச்சு சிஸ்டர் அடுத்த எபி போடலையே
இதோ வந்துட்டேன் சிஸ் ஹாலிடே ல அதான் போட முடியலை மனமார்ந்த நன்றிகள் நன்றிகள் 😍