அந்தமானின் காதலி – 7
கதவு தாழிட்ட என் அறைஇருளை எனதாக்கிக் கொள்ள ஒரு போர்வை
ஆறுதல் கூற மெல்லிசை
ஓசையில்லாமல் வழியும் கண்ணீர்
கண்ணீரில் கரையும் என் உயிர்
அதில் நனையும் தலையணை
துடிக்கும் என் தேகம்
கதறும் என் இதயம்
வலியுடன் நித்தம் போராடும் நான்!
பவன் வெளியேறும் வரை பொறுத்திருந்த ரகுபதியோ, “என்ன சுவிமா, இப்படி அவசரப்பட்டுட்ட? கொஞ்சம் பொறுமையா எடுத்துச் சொல்லியிருந்தா, மாப்பிள்ளை கேட்டுருப்பார். நீ சொல்ற விதமா சொல்லியிருந்தா, கண்டிப்பா உன்னை மீறி போயிருக்க மாட்டார். தப்பு பண்ணிட்டியே சுவி...” என சொல்ல,
“ஆமா சுவி, இப்போ தேவையில்லாம சும்மா இருந்த மாட்டுக்கு கொம்பு சீவி விட்டமாதிரி ஆகிடுச்சு. பாரு, பவன் தம்பி எப்படி கோவிச்சிட்டு போயிடுச்சின்னு... எனக்கு என்னமோ இதெல்லாம் சரியா படல...” என ரகுபதியின் மனைவி ஜெயந்தியும் ஒத்து ஊதினார்.
“ம்மா, அத்தையே பவன் இப்படி செஞ்சிட்டாருனு அதிர்ச்சியில இருக்காங்க. நீங்க ரெண்டு பேரும் அவங்களை இன்னும் தூண்டிவிட்டு, கோபத்தை அதிகமாக்குறீங்களா? ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் சும்மா இருங்க, நான் பார்த்துக்குறேன்.” என பெற்றவர்களைப் பார்த்து ரகசியமாக கண்ணைச் சிமிட்டியவள்,
சுவிதாவிடம் நெருங்கி அவர் கையைப் பிடித்து, “சாரி அத்தை! எல்லாமே என்னால தான்... நான் கோபமா நடந்துக்கிட்டதுனால தான் இவ்வளவு பிரச்சனையும்... நான் அப்படி நடந்துருக்கக் கூடாது. பவன் என்கிட்ட நக்கலா, என்னை கிண்டல் செய்ற மாதிரி பேசவும், எனக்கும் கோபம் வந்துடுச்சு. அந்த கோபத்துல தான் லாவண்யா எகிறவும், நான் தள்ளி விட்டுட்டேன். அப்படி செய்திருக்கக் கூடாது தான். என்னை மன்னிச்சிடுங்க அத்தை! வேணும்னா நான் இப்பவே போய் லாவண்யா வீட்டுல எல்லார் முன்னாடியும் மன்னிப்பு கேட்குறேன். பவன்கிட்டயும் நீங்க என்னைக் கல்யாணமே செய்துக்க வேணாம், அத்தைக்கூட சண்டையெல்லாம் வேண்டாம், வீட்டுக்கு வாங்கன்னு எப்படியாச்சும் சமாதானம் பண்ணி கூட்டிட்டு வர்றேன்.“ என சோகமாகப் பேசி, பற்றாக்குறைக்கு அழுவது போலவும் நடிக்க,
அந்த நடிப்பில் பெற்றவர்கள் அசந்து போய் விட்டார்கள் என்றால், மகனின் மேல் பொல்லாத கோபத்தில் இருந்த சுவிதாவோ, மொத்தமாக ராகவியின் பேச்சில் விழுந்து விட்டார்.
“வேண்டாம் ராகவி! யாரும் எங்கேயும் போக வேண்டாம். எல்லாரும் எப்படி போனாங்களோ, அப்படியே திரும்பி வருவாங்க. நீங்க எதுவும் செய்யாம இருந்தாலே போதும். நீ பேசினதுல தப்பே இல்ல. அந்த இடத்துல யாரா இருந்தாலும் உன்னை மாதிரிதான் ரியாக்ட் செஞ்சிருப்பாங்க. நீ மனசை குழப்பிக்காத, விடு.” என்று ராகவியிடம் பேசியவர்,
“நான் கொஞ்ச நேரம் தனியா இருக்கேன்.” என பொதுவாக சொல்லிவிட்டு, தன் அறைக்குள் நுழைந்து விட்டார்.
சுவிதா நகர்ந்ததும் ராகவியைப் போட்டு உலுக்கி எடுத்து விட்டார் ஜெயந்தி. “ஏன்டி, உனக்கு எத்தனை தடவை சொல்லி கூப்பிட்டு வந்தேன். அறிவு இருக்கா, இல்லையா? என்ன நடந்தாலும் அமைதியா இரு, நான் பேசிக்குறேன்னு சொன்னேன்ல? காரியம் பெருசா? வீரியம் பெருசா? அப்பனுக்கும் புள்ளைக்கும் கொஞ்சம் கூட புத்தி வேலை செய்யாதா? இப்போ என்ன நடந்துச்சு, பார்த்தியா? ஆளுக்கு ஒருபக்கம் முறுக்கிட்டு போயிட்டாங்க. இதுல வீட்டுக்குள்ள வர முன்னாடியே, குடும்பத்தை பிரிச்சிட்டானு பேச வச்சுட்ட.
இந்த வீட்டுக்குள்ள வந்த பிறகு என்ன வேணும்னாலும் செய்யலாம். ஆனா வர முன்னாடி இதெல்லாம் சரியில்ல. இப்போ என்ன செய்றது?” என வறுத்தெடுக்க,
“ம்மா, நீ சும்ம இரு... அவன் எல்லார் முன்னாடியும் எவ்வளவு திமிரா பேசுறான் பார்த்தியா? இவன் கூட எப்படி என்னால வாழ முடியும்? உங்களுக்காக மட்டும் தான் நான் இவ்வளவு பொறுமையா இருக்கேன். இனி நீங்க யாரும் பேச வேண்டாம், நான் பார்த்துக்குறேன். இன்னைக்கு வரைக்கும் எனக்கு அவனை மேரேஜ் செய்துக்கணும்னு ஆசை இல்லை. பட் அவன் என்னை அவாய்ட் செய்ததுக்கு அவனை பழிவாங்கணும்னு தோனுது. அதுக்காக அந்த பவனை மேரேஜ் செய்து, தினம் தினம் அவனுக்கு நரகத்தைக் காட்டணும்னு வெறியே வருது.” எனக் கடுப்பாகக் கத்தியவள்,
“இனிதான் இருக்கு, அந்த பவனுக்கும், அவனோட தங்கச்சிங்களுக்கும்...” எனக் கறுவியவள், “ம்மா, நீயும் அப்பாவும் கிளம்புங்க, நான் இங்க இருக்கேன். சீக்கிரம் நீங்களும் இங்கேயே வரமாதிரி எல்லாம் ப்ளான் பண்றேன். அதுக்கு ரெடியா இருங்க. என்னை பத்தி யோசிக்காம கிளம்புங்க.” என்றாள் ராகவி.
“இப்போ தான் என் பொண்ணுன்னு நிரூபிக்கிற, என் கண்ணே பட்டுடும் போல... தினமும் நானும் அப்பாவும் வந்து பார்த்துட்டு போறோம். சுவிதாவுக்கு பவன் மேல இருக்குற கோபத்தை மட்டும் குறைய விட்டுடாத. முக்கியமா தனியா விட்டுடாத, அவளைப் பத்தி உனக்குத் தெரியாது. தனியா இருந்து யோசிக்க ஆரம்பிச்சா, அவ செய்தது தப்புன்னு புரிஞ்சி, பிள்ளைங்களைத் தேடிப் போயிடுவா. அது மட்டும் நடக்கவே கூடாது, பார்த்துக்கோ.” என ஜெயந்தியும் ராகவிக்கு புத்தியில் ஏற்ற வேண்டியவற்றை ஏற்றிவிட்டு, கணவரோடு கிளம்பி விட்டார்.
அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற திட்டத்தோடு, மனதில் தோன்றிய வெற்றிக் களிப்பை முகத்தில் காட்டாதபடி, “அத்தை!” என்றபடியே சுவிதாவின் அறைக்குள் நுழைந்தாள் ராகவி.
***
நர்ஸ் அழைத்து கூறிய செய்தியில், பதட்டத்துடன் அதிவேகமாக தன் வாகனத்தைச் செலுத்தினான் பவன். அவன் மூளையை உழப்பியது எல்லாம் சைந்தரியை எப்படி சமாளிப்பது என்று தான். ரத்தப்போக்கு அதிகாமாகியிருந்தால் கோமாவிற்கு செல்லவும் வாய்ப்பு இருக்கலாமென்று, சூரஜ் சொன்னது வேறு அவன் மனதில் ஊசியாய் இறங்க மனம் வேதனையில் துடித்தது.
எத்தனை வேகத்தில் வந்தானோ தெரியாது, அடுத்த பத்து நிமிடத்தில் சைந்தரியின் அருகில் இருந்தான். அவன் அந்த அறைக்குள் நுழைவதற்கு முன்னே சைந்தரி மயங்கி கீழே விழுந்திருந்தாள். சரியாக அந்நேரம் அவன் வரவும் உடனே முதலுதவி கொடுக்கப்பட்டது.
வெளுத்துப் பசையில்லாத அந்த முகத்தைப் பார்த்தது பார்த்தபடி அமர்ந்திருந்தான் பவன். இன்னும் என்னென்ன தான் பார்க்க வேண்டியிருக்கு என் வாழ்க்கையில்? இருபத்து எட்டு வருடங்கள் இன்பத்திலும் துன்பத்திலும் கூடவே இருந்த அம்மா, இன்று அவனை நம்பாமல், துளியும் மதிக்காமல் நடந்து கொண்டது, பவனை விரக்தியின் உச்சத்தில் கொண்டு வந்து நிறுத்தியிருந்தது.
சூரஜ் வந்து அவனை அழைத்துப் பேச, “சீஃப்...” என்றவனுக்கு அடுத்த வார்த்தை வரவில்லை. ஏதேதோ பேசவேண்டும் என எண்ணினாலும், தொண்டையைத் தாண்டி வார்த்தைகள் வெளிப்படவில்லை. ராகவியின் செயலில் உள்ளம் எரிமலையாக குமுறினாலும், தாயின் செயலில் விரக்திதான் உண்டானது.
தன் சிஷ்யனின் நிலையை ஓரளவுக்கு கணித்தவர், “ஹி மேன், ஜஸ்ட் ரிலாக்ஸ்! டோண்ட் தின்க் எனிதிங் நவ். அப்படி யோசிச்சா அது தீர்க்கவே முடியாத பெரிய பிரச்சனையா தோனும். ஸோ ஜஸ்ட் ரிலாக்ஸ்!” என அவனை தட்டிக் கொடுத்து, வெகுவாகப் பேசி அவன் மனதை சமநிலைப்படுத்தினார்.
கொஞ்சம் சரியானதும் பவன், வீட்டில் நடந்த நாடகத்தை சொல்ல, சூரஜுக்கு சுவிதாவின் மேல்தான் கோபம் வந்தது. யாரோ ஒருவருக்காக தன் சொந்தப் பிள்ளைகளை ஒதுக்கி விட்டாரே?! இவருக்கு என்னதான் பிரச்சனை என்று யோசித்தவர், பவனை சமாதானம் செய்துவிட்டு நேராகச் சென்றது சுவிதாவின் வீட்டிற்குத்தான்.
ஆனால் அங்கு போயும் அவரால் சுவிதாவைப் பார்க்க முடியவில்லை, பார்க்க விடவில்லை ராகவி. “மாத்திரை போட்டுத் தூங்குகிறார், இன்னொரு நாள் வாங்க,” என்று கொஞ்சமும் மதிக்கமால் வாசலோடு அனுப்பியிருந்தாள்.
அடுத்து பவனிடம் வந்தவர் “உன்னோட முடிவு என்ன பவன்? உனக்காக, நீ என்ன முடிவு எடுத்தாலும் உன் கூட இருப்பேன். உனக்கு என்ன ஹெல்ப் வேணும் சொல்லு, கண்டிப்பா செய்றேன்.” என்றார்.
எந்த முடிவாக இருந்தாலும் அதை பவன்தான் தீர்மானிக்க வேண்டும். யாரும் எதையும் திணிக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் சூரஜ்.
“சீஃப்...” என்றவன், ஒரு பெருமூச்சை இழுத்துவிட்டு தன்னை நிலைப்படுத்தி, “நான் ஆல்ரெடி சொன்னது தான் சீஃப். எனக்கு சைந்தரியை பிடிச்சிருக்கு. அவதான் என்னோட லைஃப் பாட்னருன்னு நான் முடிவு செய்துட்டேன். அதுக்கு என்ன செய்யணுமோ அதை செய்யலாம். உங்க ஹெல்ப் எனக்கு கண்டிப்பா வேணும் சீஃப். எனக்கு இங்க இருக்க முடியாது. எங்கையோ தூரமா, ரொம்ப தூரமா, யாருமே இல்லாத ஒரு இடத்துக்கு எங்களை அனுப்பிடுங்க சீஃப். ப்ளீஸ்...” என்றவனின் வார்த்தைகளில் முழுக்க முழுக்க விரக்தி மட்டும் தான்.
அவருக்கும் அது புரிந்தது தான். அதனால் அவனை பெரிதும் யோசிக்க விடாமல், “ஓகே மேன், இனி நான் பார்த்துக்குறேன். எங்க வேக்கன்ட் இருக்குன்னு பார்த்து, உனக்கு உடனே ட்ரான்ஸ்ஃபர் இஸ்யூ பண்றேன். அதுக்கு கண்டிப்பா ஒன் வீக் ஆகும். அதுவரைக்கும் நீ லீவ் அப்ளை செய்துக்கோ.” என்றவர்,
அவன் தோளை தட்டி, “உன்னோட இந்த முடிவுல மாற்றம் இல்லையே? நாளைக்கே இதுக்காக இப்படி ஒரு தப்பான முடிவெடுத்துட்டேனோனு நீ வருந்தக் கூடாது. நான் எதுக்கு சொல்றேன்னா, சைந்தரியை பத்தி உனக்கு எல்லாம் தெரியும். அவளால ஒரு நார்மல் லைஃப் இப்போ வாழ முடியாது, பட் சீக்கிரம் நடக்கலாம். அதுவரைக்கும் வெயிட் செய்யணும்.” என்றவரின் கைகளைப் பிடித்துக் கொண்ட பவன்,
“எஸ் சீஃப், ஐ நோ! என்னோட இந்த முடிவுல ஒரு ட்ராப் கூட மாற்றம் இல்லை, என்னை நம்பலாம்.” என்றவன் அங்கிருந்து வெளியேறி விட்டான்.
அடுத்து அவன் செய்ய வேண்டிய வேலைகள் வரிசைக்கட்டி நின்றது. சைந்தரி விழிக்கும் முன் அந்த வேலைகளைப் பார்த்திட வேண்டும் என்று முடிவெடுத்தவன், முதலில் சுவிதாவை தான் பார்க்கச் சென்றான்.
அவர் வீட்டுக்குள்ளே நுழையாதே என்று சொல்லியும், அடித்து அவமானப்படுத்தியும் தாயைத் தேடும் கன்றைப் போல, அவரைத் தேடிதான் ஓடினான். பொறுமையாக, நிதானமாக தன் எண்ணத்தை அவருக்கு புரிய வைக்கலாம் என்று நினைத்தான்.
வீட்டிற்குள் நுழைந்த மறுநொடி சுவிதா மகனை ஆராயும் விதமாகப் பார்த்தார். அவன் முகத்தில் தெரிந்த வலியும் சோர்வும், அவருக்கும் வலியைக் கொடுத்ததுதான். ஆனால் அதற்காக எல்லாம் தன் எண்ணத்தை மாற்றிக்கொள்ள அவர் தயாராக இல்லை.
தான் பேசுவது மகனுக்கு அதீத வலியயைக் கொடுக்கும் என்று தெரியும்தான். சீழ் பிடித்த காயத்தை வலிக்க வலிக்க சுத்தம் செய்வது போல், என் மகன் வாழ்க்கையைக் காப்பாற்றுகிறேன் என அவருக்கு அவரே ஒரு சமாதானமும் சொல்லிக் கொண்டார்.
‘உன் மகன் தானே? உன் பொண்ணுங்களுக்கு மட்டும் அவங்களுக்குப் பிடிச்ச வாழ்க்கையை அமைச்சுக் கொடுத்த, ஆனா உன்னோட ஒவ்வொரு கஷ்டத்துலயும், உன் கூட இருந்து, உன்னைத் தாங்கி, உனக்காகவே வாழ்ந்துட்டு இருந்த பையனோட வாழ்க்கையை வேண்டாம்னு சொல்ற, என்ன அம்மா நீ?’ என்று ஏகத்துக்கும் திட்டிய மனசாட்சியைக் கூட கண்டுகொள்ளாது பவனை நோக்கி வார்த்தை எனும் சொல்லம்புகளை எய்தார்.
“அவளை மொத்தமும் தலை முழுகிட்டு, நான் சொல்ற பொண்ணை கல்யாணம் செய்துக்குறேன்னு சொல்லிட்டு, இந்த வீட்டுக்குள் வருவதாக இருந்தால் வா. அப்படி இல்லை, அவள்தான் முக்கியம்னு நீ நினைச்சா என்னை மறந்துடு, இந்த வீட்டை மறந்துடு. உனக்கு அம்மா இல்லை, கூடப் பிறந்தவங்க இல்லை. எல்லாத்தையும் மொத்தமா மறந்துடு. என் முகத்துலயே முழிக்காம வந்த வழியே திரும்பி போயிடு.” என அவனைப் பார்த்து நிதானமாகச் சொல்ல,
அதன்பிறகு பவன் எதற்கும் யோசிக்கவில்லை. அங்கிருந்து கிளம்பியவன் நேராகச் சென்றது தங்கைகளின் கணவர்களிடம் தான். அவர்களிடம் இதைப் பற்றி பேசினான், அவர்களும் பெரிதாக எந்த எதிர்ப்பும் காட்டவில்லை. தனியாக இருந்தால் தான் சுவிதாவும் யோசிப்பார் என்று நினைத்தார்களோ என்னவோ, பவனின் முடிவுக்கு ஒரு மனதாகவே சரியென்று விட்டார்கள். வீட்டுல நாங்களே பேசுறோம் என்றும் சொல்லி விட்டார்கள்.
“உங்க தங்கசிங்களை மட்டும் நீங்க சமாளிச்சிடுங்க பவன். மத்ததெல்லாம் நாங்க பார்த்துக்குறோம். உங்களுக்கு எப்போ திரும்பி வர தோனுதோ, அப்போ வாங்க. அத்தையை நாங்க பார்த்துக்குறோம்.” என்று சுரேன் சொல்ல, ஜெகனும் அதை ஆமோதிக்க, பவனுக்கு அதுவரை இருந்த சோர்வெல்லாம் காணாமல் போனது போல் தோன்றியது.
தன்னுடைய தங்கைகளை அவனால் சுலபமாக சமாளிக்க முடியும். அதனால் மனம் லேசாக அவர்களிடம் விடைபெற்று, அடுத்த நாள் லாவண்யா, கலை இருவரையும் ஒரு கோவிலுக்கு வரச்சொல்லி, அவர்களைச் சந்திக்க சென்றான். அவர்களிடம் பவன் தன் மனதில் உள்ளவற்றை எடுத்துச் சொல்ல, லாவண்யா ஓரளவுக்கு ஒத்துக்கொள்ள, கலைதான் முரண்டு பிடிக்க ஆரம்பித்தாள்.
‘அதெப்படி அம்மாவை விட்டுத் தனியா போவ?’ என்பது போல்.
“ஏன் அம்மா தனியா இருந்ததே இல்லையா? அண்ணா ஐஎன்எஸ்ல ஜாயின் செய்த பிறகு இப்படி ட்ரான்ஸ்ஃபர் ஆகி வெளியூர் போறது சகஜம் தானே? எதுக்கு இவ்ளோ முரண்டு பிடிக்கிற? நீயும் அம்மா மாதிரி பிடிவாதம் பிடிச்சு அண்ணாவோட லைஃப்பை வேஸ்ட் பண்ணிடாத...” எனக் காட்டமாக பதில் சொன்னது லாவண்யா தான்.
லாவண்யா சொல்வது சரிதான் என்பது போல கலையும் அதற்கு பிறகு எதுவும் பேசவில்லை. ஆனால் மனதில் அதற்கான கவலை பேயாட்டம் போட்டது. பவனின் பொருட்டு அதை வெளிக்காட்டவும் இல்லை.
பல தைரியங்கள், பல திட்டங்கள், சைந்தரியை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என பல யோசனைகள் என அண்ணனை திக்குமுக்காட வைத்து வழியனுப்பி இருந்தனர்.
அதன்பிறகு பவன் சிறிதும் தாமதிக்கவில்லை. சூரஜிடம் அவன் கேட்டது போலவே அந்தமானில் உள்ள ஐஎன்எஸ்இல் ட்ரான்ஸ்ஃபர் கிடைக்க, சைந்தரியை அழைத்துக் கொண்டு அடுத்த மூன்றாம் நாள் அந்தாமான் வந்திருந்தான்.
சூரஜின் தோழி தான் கிரன் என்பதால், இங்கு அவனால் சுலபமாக சமாளிக்க முடிந்தது. இந்தியாவில் இருந்து வரும் போதே சைந்தரியை பார்த்துக்கொள்ள என ஒரு பெண்ணை அழைத்து வந்திருக்க, சைந்தரியைப் பற்றிய கவலை இல்லாமல் அவனது வாழ்க்கை இலகுவாகப் போனது, நிரதியைக் கண்ணில் பார்க்கும் வரை.
***