• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அந்தமான் காதலி - 17

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
920
481
93
Tirupur

அந்தமானின் காதலி – 17

காலைச் சூரியனின் பொன் கிரகணங்களால் ஆக்கிரமிக்கப்பட்ட கீழ்வானம், தனது சிவந்த நிறத்திலிருந்து மாறி இளம் மஞ்சள் வெயிலாக உருவெடுத்து, இன்னும் கொஞ்ச நேரத்தில் தனது உக்கிரத்தால் சுட்டெரிக்கும் வெயிலாக மாறப்போகும் ஒரு இனிய விடியற்காலைப் பொழுது.

புது விடியல் யாருக்காகவும் காத்திருக்கவில்லை. அனைத்தும் வழக்கம்போல நடக்க, மருந்தின் வீரியமோ, அல்லது தனக்கே தனக்கென்று ஒரு உறவு கிடைத்த நிம்மதியிலோ, விடிந்து வெகு நேரமாகியும் எழாமலே இருந்தாள் நிரதி.

தன் கைவளைவுக்குள் இருந்தவளின் கலைந்த கூந்தலை வருடியபடியே, இரவின் மிச்சங்களையும் அது கொடுத்த வலிகளையும் யோசித்துக் கொண்டிருந்தான் சித்தார்த்.

இரவில் பவனிடம் பேசிவிட்டு, அவன் அனுப்பிய மெயிலில் இருந்த ரிப்போர்ட்டை படித்த சித்தார்த்துக்கு, நெஞ்சமெல்லாம் சுக்கு நூறாக நொறுங்கித்தான் போனது. கையில் கிடைத்த சொர்க்கம் கானலாகவே போய் விடுமோ என்ற பயம், உள்ளத்தை அரித்து மூளையை மழுங்கடித்தது.

பிழைக்க வைப்பதற்கான வாய்ப்புகள் அந்த ரிப்போர்ட்டில் எந்த மூலையிலாவது இருக்கும் என்ற நம்பிக்கையில், மீண்டும் மீண்டும் படித்தான் அந்த ரிப்போர்ட்டை. ஆனால் பவன் சொன்னது தான், நூறில் இருபது சதவீதம் தான் வாய்ப்பிருந்தது.

அப்படியே விட்டால் எட்டோ, பத்தோ மாதங்கள் உயிரோடு இருக்கலாம். அதிலும் மாத்திரைகளும் ஊசிகளும் தொடர்ந்து எடுக்க வேண்டும். அப்போதுதான் அதுவும் சாத்தியம். இல்லை, சர்ஜரி என்று போய்விட்டால் எல்லாவற்றிற்கும், குறிப்பாக கோமாவிற்கு செல்லவோ, மூளைச்சாவு ஏற்படவோ வாய்ப்புகள் அதிகம். நூற்றில் ஒரு பங்கு சர்ஜரி சக்சஸ் ஆகலாம் என மருத்துவர் சொல்லியிருக்க,

அந்த நூற்றில் ஒரு பங்காக சர்ஜரியில் அவள் உயிர் பிழைக்கும் வாய்ப்பிருந்தால் என்று யோசித்து, சர்ஜரி செய்யலாம் என பவன் வற்புறுத்தியும் கூட வேண்டவே வேண்டாம் என மறுத்து விட்டாள்.

மீதம் இருக்கப் போகும் இந்த சில நாட்களாவது, தன் தந்தையின் விருப்பப்படி, சித்தார்த்தை திருமணம் செய்து வாழ்ந்து விடலாம் என்ற சுயநலமான முடிவுக்கு வந்திருந்தாள்.

அதனால் தான் அவள் உடனே இந்தியா வந்தது, யாருக்கும் எதற்கும் யோசிக்க நேரம் கொடுக்காமல், திருமணத்தை நடத்திக் கொண்டது என எல்லாம்.

இதில் பவன் சொல்லாத சிலவற்றையும் சித்தார்த்தால் உணர்ந்து கொள்ள முடிந்தது. அவள் பழிவாங்கவும் தான் இந்த திருமணம் என்று. திருமணத்திற்கு முன்பே அவள்தான் மனைவி என்று வாழ்ந்தவன், மனைவியான பிறகு விட்டு விடுவானா? அவளை உயிருக்கு உயிராக நேசித்த கணவனை விட்டுச் சென்றால், மனைவியை நினைத்தே அவன் வாழ்க்கையும் முடிந்துவிடும். இவன் இப்படியிருப்பதைப் பார்த்து வீட்டில் பெரியவர்களும், காலம் முழுக்க வருந்தி கண்ணீர் விட வேண்டும் என்பதுதான் அவளது திட்டம்.

அதை சித்தார்த் இந்த நொடி சரியாகக் கணித்திருந்தான். மனைவியின் திட்டத்தை நினைத்து அவனது உதட்டில் விரக்தியான புன்னகை ஒன்று உதயமானது. இப்போதாவது என்னைத் தேடி வந்தாளே என மனதை தேற்றிக் கொண்டவனுக்கு, அவள் வாய் திறந்து தன் நோய் பற்றி எதையும் சொல்லவில்லையே என்ற ஆதங்கம், சொல்லவே மாட்டாள் என்ற அவளின் பிடிவாதம் தெரிந்து காணாமல் போனது. எப்படியெல்லாம் கஷ்டப்பட்டாளோ, எத்தனை வலிகளை எல்லாம் தாங்கினோளோலோ என மனைவியை நினைத்து, ஒரு தாயின் தவிப்புடன் அவளை வருடிக் கொடுத்தாலும், இப்போது ஆறுதல் தேடும் குழந்தையாக அவன்தான் தவித்துப் போனான்.

என்ன செய்யலாம்? என்ன செய்யலாம் என்று யோசித்தவனுக்கு, இந்த விஷயத்தை இன்னும் விஷாலிடம் சொல்லவில்லை என்பது அப்போதுதான் நினைவில் வர, உடனே நேரம் காலம் பார்க்காமல் விஷாலுக்கு அழைத்துவிட்டான். அப்போது மணி விடியற்காலை மூன்று.

விஷாலும் அப்போதுதான் அவனது கேசை முடித்துக்கொண்டு, அவனது தனிப்பட்ட அறையில் வந்தமர்ந்திருந்தான். சித்தார்த்தின் எண்ணை பார்த்ததும் குழப்பத்துடன் போனை காதில் கொடுத்து, “சொல்லுங்க சித்தார்த், நிதிக்கு ஒன்னும் இல்லையே? என்ன இந்த நேரத்துல போன்...?” என யோசனையாகவே கேட்க,

அதற்கு சித்தார்த், “அப்போ நித்தியோட ஹெல்த் இஸ்ஸூஸ் உங்களுக்கு முன்னமே தெரியுமா?” என இறுகிய குரலில் கேட்க,

“வாட்?! என்ன உளறுறீங்க? அவளுக்கு என்ன ஆச்சு? என்ன ஹெல்த் இஸ்ஸூ? நான் உங்க பாட்டி எதுவும் பேசி பிரச்சனையாகிடுச்சோ, அதனால அவ எதுவும் கிறுக்குத்தனம் பண்ணிட்டாளோனு கேட்டேன்...” என அவனை விட இறுகிய குரலில் கேட்க,

சித்தார்த்திற்கு பவன் சொன்னது போல இவனுக்கு ஒன்றும் தெரியாது என்ற முடிவுக்கு வந்துவிட்டான்.

சித்தார்த் இப்படி யோசித்துக் கொண்டிருக்கும் போதே எதிர்பக்கத்தில் பலமுறை, “சித்தார்த்... சித்தார்த்... ஆர் யூ தேர்?” என பலமுறை விஷால் கத்தி விட்டான்.

ஒருவாறு தன்னிலைக்கு திரும்பியவன், “சாரி விஷால்!” என்றுவிட்டு, நிதியின் மொபைலை பார்த்தது, பவனிடம் பேசியது, பவன் நிதியைப் பற்றி சொன்னது என எல்லாவற்றையும் ஒரு உணர்ச்சியற்ற குரலில் கூற,

“வாட்!?” என அதிர்ந்து, தான் இருந்த இருக்கையில் இருந்து எழுந்தே விட்டான் விஷால்.

“என்ன சொல்றீங்க சித்தார்த்?” என படபடக்கும் இதயத்துடன் கேட்க,

“ம்ம்...” என்று ஆழ்ந்த பெருமூச்சு ஒன்றை விட்டு, சற்று முன் நடந்த அனைத்தையும் சொல்லி, பவனிடம் பேசியதையும் சொல்லிவிட்டு, இரண்டு நாட்களில் அந்தமான் கிளம்புவதாகவும் சொல்ல, விஷாலுக்கும் தன் உலகம் இருண்டு போன உணர்வு.

ஆனால் நிமிடத்தில் தன்னை நிலைப்படுத்தியவன், சித்தார்த்திடம் உடனே தானும் வருவதாக சொல்லிவிட்டான். அடுத்து என்ன செய்ய, நிதியை யார் பொறுப்பில் விட என பலதையும் பேசிவிட்டு வைத்தவனுக்கு, தன் வாழ்வில் வந்த இந்த தேவதையை எப்படி காப்பாற்றிக் கொள்வது என, மனதுக்குள் நடந்த போராட்டத்தை நினைத்தபடியே அவள் அருகில் வந்தவன், தன்னவளை இழுத்து தன்மேல் போட்டு இறுக்கிக் கொண்டான், அவளை யாரிடமும் எதற்காகவும் தரமாட்டேன் என்பது போல.

விழிப்பின் யோசனையில் இருந்தவனுக்கு சற்று நேரத்தில் எல்லாம் அறைக்கதவு தட்டப்படும் ஓசை கேட்க, மனைவியை விலக்கி எழுந்தவன் கதவைத் திறக்க, பவித்ராதான் நின்று கொண்டிருந்தார்.

அந்த நேரம் அவர் வந்தது பெரும் பலம் போல அவனுக்கு, “வாங்கம்மா!” என அழைக்க,

“இல்ல கண்ணா, நேரமாகிடுச்சு பார்... நிதி இன்னும் எழுந்துக்கலையா? கோவிலுக்குப் போகணும்னு நைட்டே சொல்லி விட்டேனே... பூஜைக்கு வேற சொல்லிருக்கு, நீங்க கிளம்பிட்டா நான் பூசாரிக்கு சொல்லிடுவேன்.” என படபடவென பேச,

“ம்மா, முதல்ல உள்ள வாங்க.” என அழுத்தமாக அழைக்க, மகனின் குரலில் இருந்த பேதத்தை உணர்ந்தவர், குழப்பமாக உள்ளே வர, கதவைச் சாற்றியவன் அதன் மீதே நின்று பார்வையை எங்கோ வெறித்திருந்தான்.

மகனின் குழப்பமான முகமும் அதில் தெரிந்த வேதனையும் அந்த தாயையும் கலங்க வைத்தது. “என்ன கண்ணா... ஏன் ஒரு மாதிரி இருக்க? ஒருவேளை நித்திக்கு எதுவும் பிடிக்காம...” என அதற்கு மேல் மகனிடம் என்ன கேட்பது என்று தெரியாமல் தவிக்க,

“ம்ச்...” என சலித்தவன், “எனக்கு எதுவும் சாஸ்வதமில்லைன்னு உங்க மருமக புரிய வச்சிட்டா. அவளுக்கு அவ அப்பான்னா எவ்வளவு பிடிக்கும்னு உங்களுக்குத் தெரியுமா? தெரியாது... ஆனா எனக்குத் தெரியும். அதுதான் பிடிச்சவங்ககிட்டயே போறேன்னு முடிவு பண்ணிட்டா போல...” என விரக்தியாக சொன்ன மகனின் கூற்று ஒன்றும் புரியவில்லை தான், ஆனால் நிதியைப் பற்றி என்றும் மட்டும் தெரிந்தது.

“என்ன கண்ணா...?” என இப்போது கலக்கமும் பயமுமாக பவித்ரா கேட்க, அவருக்குப் புரிந்து போனது, இந்தக் குடும்பமே வெடித்து சிதறும் அளவிற்கான ஒரு வெடிகுண்டை தூக்கி, தன் தலையில் போடப் போகிறான் மகன் என்று. அவனது முகத்தையே பார்க்க,

“ம்மா...” என்றவன் வார்த்தைகளுக்கு முன்னே தறிகெட்டு ஓடிவந்த அழுகையை அடக்கி, மனைவியின் நிலையைப் பற்றி சொல்ல,

கேட்ட பவித்ரவோ, “அய்யோ கடவுளே...!” என நெஞ்சில் அடித்தபடி அந்த அறையே அதிரும்படி அழ ஆரம்பித்து விட்டார். இத்தனை சத்தத்திற்கும் கூட நிரதியிடம் சிறு அசைவு கூட இல்லை.

ஏதேதோ சொல்லி அழுதவரை என்ன சொல்லித் தேற்ற? ஆனாலும் தேற்றினான். அடுத்து என்ன செய்ய வேண்டும் என அவரிடம் தான், அவனால் மனம் விட்டுப் பேச முடியும். அதனால் அவரை சரி செய்து, தான் நினைத்ததை, அடுத்து செய்யப் போவதை சொன்னான் சித்தார்த்.

“கண்ணா!” என அவர் அதிர,

“ம்மா, இந்த விஷயம் நம்ம வீட்டுல வேற யாருக்கும் தெரியாது, தெரியவும் கூடாது.” என கண்டிப்பான குரலில் சொன்னவன், “அவளுக்குத் தெரியாமலே அவளைப் பத்திரமா பார்த்துக்கணும். நமக்கு தெரிஞ்சிடுச்சுனு கொஞ்சம் அவளுக்கு தெரிஞ்சாலும் என்ன செய்வா, எங்க போவா எதுவும் தெரியாது.

அவ இனி பெரிய வீட்டுக்கு போக வேண்டாம். நீங்க இங்க இருங்க. கீர்த்தியை கூட இருக்க சொல்லுங்க. நாளைக்கு மார்னிங் நான் சென்னை போயிட்டு, அங்க என் ஃப்ரண்ட் இருக்கான், அவனை பில்ராத்ல விசாரிக்க சொல்லிருக்கேன். அங்க ஒரு டாக்டர்ட்ட அப்பாய்ன்மென்ட் இருக்கு. அதை என்னனு பார்த்துட்டு, விஷால் வரவும் அந்தமான் போகணும். பவனை பார்த்து எல்லாம் விசாரிச்சிட்டு வந்துடுறேன். த்ரீ டேஸ்... மேக்சிமம் த்ரீ டேஸ்ல நான் வந்துடுவேன். அதுவரைக்கும் எந்த பிரச்சினையும் இல்லாம பார்த்துக்கோங்க. இப்போ அவ விழிக்குற வரைக்கும் வீட்டுல சமாளிங்க.” எனவும்,

பவித்ராவிற்கு ஒரு பக்கம் நிரதியை நினைத்து மலைப்பாகவும் பயமாகவும் இருந்தது. சித்தார்த் இல்லாமல் எப்படி அவளை சமாளிக்க என புரியவே இல்லை, ஆனாலும் சரியென்றார்.

அவரை கீழே அனுப்பியவன் மனைவியை எழுப்ப ஆரம்பித்தான். நல்ல தூக்கத்தில் இருந்து விழிப்பது போல விழித்தாள் பெண். தன் வலியை தொண்டைக்கு கீழேயே புதைத்தவன், வழக்கமான புன்னகையை தவழவிட்டவன், “மகாராணிக்கு மஞ்சம் எழ பாசுரம் வேண்டுமாக்கும்?” என குறும்பாய் கேட்க, அவர்களின் கூடலுக்குப் பிறகு நடந்த எதுதான் ஞாபகத்தில் இருந்தது?

“நல்லா தூங்கிட்டேன் மாமா. என்னை எழுப்பிருக்கலாம்ல? மணி என்ன? அத்தை நைட் வரும்போதே சொல்லி விட்டாங்க. நேரமா எழுந்துக்கணும், கோவிலுக்கு போகணும்னு. இப்ப பாருங்க என்னை என்ன நினைப்பாங்க? நான் சொல் பேச்சு கேட்காத பொண்ணுன்னு நினைக்க மாட்டாங்க?” என போர்வையைத் தலையில் போட்டுக் கொண்டு, கன்னத்தில் கை வைத்து பாவம் போல் சொல்ல, அதைப் பார்த்தவனுக்கு எப்படி இருக்கிறதாம்?!

தன் அன்னத்தை அள்ளிக் கொண்டான் கைகளில். அவள் மூக்கோடு மூக்குரசி, “சரியான குப்பச்சிடி நீ...!” என செல்லம் கொஞ்சியபடியே குளியலறையில் விட, அவன் கழுத்தில் கரங்களை மாலையாக இட்டவள்,

“நைட் உடனே தூங்கிட்டேன்னு உங்களுக்கு கோபம் இல்லையே?” என உள்ளே போன குரலில் கேட்டாள்.

“ஹேய் லூசி... என்ன நீ, இப்படி மெண்டல் போல எல்லாம் யோசிச்சிட்டு இருக்க? இந்த நாள் இல்லைன்னா, இன்னொரு நாள் நடக்க போகுது. உனக்கு ஒன்னு தெரியுமா? நீ தூங்கலன்னா நான் தூங்கிருப்பேன். அவ்வளவு டையர்ட் எனக்கு. அதோட நேத்து ஒரு எய்ட்டி கேஜியை மேனேஜ் பண்ணதுல, இன்னும் டயர்டாகிட்டேன்.” என கண்ணைச் சிமிட்டி சிரிக்க,

முதலில் கணவன் சொன்னது புரியமால் விழித்தவள், அவன் கண்ணைச் சிமிட்டவும் தான் புரிந்தது, நேற்றைய கூடலையும் தன் உடல் எடையையும் குறிக்கிறான் என்று.

அவன் கையில் இருந்து எதிர்பாராத நேரத்தில் குதித்தவள், “டேய், நான் எண்பது கிலோ வெயிட்டா...?” என அவன் முடியைப் பிடிக்க வர, தன் சோகத்தை தற்காலிகமாக மறந்து அவளுக்கு பிடி கொடுக்காமல் ஓடினான்.

“டேய் நில்லுடா...” என விரட்டியவள் அவனைப் பிடிக்க முடியாமல் கட்டிலின் மறுபக்கம் மூச்சு வாங்க நிற்க, அதைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே அவளிடம் வந்து விரும்பியே சிக்கிக் கொண்டான்.

அடிக்கத் துரத்தியவளின் கை அணைப்பைக் கொடுக்க, அந்த அணைப்பில் அவனும் வாகாகப் பொருந்திக் கொள்ள, இருவரிடமும் பேச்சுகளற்ற அமைதி.

‘ஒரு மூச்சு இரு தேகம்

வாழ்வது நாம் இன்றி வேறாரோ

நாம் காதல் வெள்ளத்தில்

நடுவே இருந்தாலும்

என் நெஞ்சம் தாகம் கொள்ளுதே ஓ

நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது

கண்மணியே ஓ கண்மணியே...’

 

Sampavi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 21, 2022
251
158
43
Theni
சித்தார்த்தை நினைக்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு
 

CRVS2797

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 11, 2023
39
7
8
Ullagaram
அந்தமான் காதலி..!
எழுத்தாளர்: வதனி S
(அத்தியாயம் - 17)


ஓ மை காட்..! என்ன இப்படி அழுகாச்சியா கொண்டு போயிட்டிங்க...? சித்து ஆசையாசையா கட்டிக்கிட்டது இதுக்காகத்தானா...? போகட்டும் நிரதி ஆசையா கட்டிக்கிட்டதும் இப்படி அவனை பாதியிலயே விட்டுட்டு போகத்தானா...? சித்துவோட துக்கம் அவளுக்கு அத்தனை சந்தோஷத்தை உண்மையிலயே கொடுத்துடுமா என்ன..? இது காதலின் வலியை விட இந்த இழப்பின் வலி அவனைத்தான் ரொம்பவே பாதிக்கும்ன்னு உண்மையிலேயே அவளுக்கு புரியலையா...? அவளோட அப்பா அவளை விட்டு போனப்ப எத்தனை வலியை அடைஞ்சாலோ, அதைவிட அதிகமான வலியை சித்து தாங்க வேண்டியிருக்கும்ன்னு அவளுக்கு தெரியலையா...? ஆனாலும் இந்த நிரதி டூ பேட்...!
😪😪😪
CRVS (or) CRVS 2797
 

saru

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 24, 2022
168
5
28
Hosur
Nice update vani