• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அர்ப்பணம் 3

kkp12

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 3, 2023
82
10
43
Tamilnadu
மறுநாள் அதிகாலையிலேயே தங்கபுஷ்பத்திற்கு விழிப்புத் தட்டி விட்டது.

தன் கண்களைத் திறந்தவளுக்கோ தன்னுடலில் உடைகள் இல்லாது இருப்பதைக் கண்டதும் வேகவேகமாக எழுந்து அவற்றைத் தேடி எடுத்து அணிந்து கொண்டாள்.

பக்கவாட்டில் திரும்பித் தனது கணவனைப் பார்த்தாள்.

அவன் இன்னும் விடியவில்லை என்பது போல் உறங்கிக் கொண்டிருந்தான்.

தானும் ஆணாகப் பிறந்திருந்தால் இப்படி சௌகரியமாக இருந்து இருக்கலாமே! என்று எண்ணியவள்,

முதலில் குளித்து விட்டு மாட்டுக் கொட்டகைக்குச் சென்று கறந்த பாலை வாங்கிக் கொண்டு வந்து அடுப்பில் சூடுபடுத்திக் காப்பித் தயாரிக்க ஆரம்பித்தாள் தங்கபுஷ்பம்.

அவளைப் போலவே அந்த வீட்டில் விரைவாக விழித்து விடும் மற்றொரு ஜீவன் சற்குணம் தான்.

ஆனால் அப்போதும் கூட அவர் சமையலறைக்கு வர மாட்டார்.

தான் இருக்கும் இடத்திலிருந்தே மருமகளுக்குக் கட்டளைகளைப் பிறப்பித்துக் கொண்டிருப்பார்.

இன்றும் அதேபோல், அவளிடம் கொட்டை வடிநீரைக் கொண்டு வரச் சொல்லவும், உடனே எடுத்துக் கொண்டு போய் அவரிடம் கொடுத்தாள் தங்கபுஷ்பம்.

அப்போது வளையாபதியும் வந்து விட அவருக்கும் அந்தப் பானத்தை தந்து விட்டு இட்லி சுட்டுச் சாம்பாரும் வைத்தாள்.

அதைத் தன் மாமனார் மற்றும் மாமியாருக்குப் பரிமாறிக் கொண்டிருக்கும் போது, அறையில் இருந்து வெளிப்பட்டான் ராஜன்.

அவன்,“புஷ்பா!”என்றதுமே, அடுக்களைக்குச் சென்று சூடான பானத்தைக் கொண்டு வந்து அவனிடம் தந்தாள் மனைவி.

அதைப் பருகிக் கொண்டே,”காலைக்கே இட்லியா? அப்போ மதியத்துக்கு?”என்றான் தாயிடம்.

“குடல் குழம்புடா. உங்கப்பா போய் வாங்கிட்டு வருவாரு”என்று அவனிடம் கூறினார் சற்குணம்.

“சரிம்மா”என்று கூறி விட்டுக் குளிக்கப் போய் விட்டான் ராஜன்.

சிறிது நேரத்திற்குப் பின் அவன் வந்ததும் அவனுக்கும் உணவைப் பரிமாறியவளை உண்ணச் சொல்வதற்கு அங்கே யாருமே இல்லை.

ஆனாலும் தன் பசித்த வயிறுக்கு அன்னமிட்டால் தான் அன்றைய நாள் முழுவதுமான வேலையை அவள் செய்ய முடியும் அல்லவா?

எனவே, தனக்கான உணவைத் துரிதமாக உண்டு முழுங்கி எழுந்தாள் தங்கபுஷ்பம்.

“ஏனுங்க! இந்தக் காசைப் பிடிங்க. நம்ம எடுபிடி ஆளுங்களை அனுப்பினால் காமாசோமான்னு வாங்கிட்டு வருவானுங்க! நீங்க நல்லா பார்த்து வாங்கிட்டு வருவீங்கன்னு தான் உங்களைக் கறிக்கடைக்கு அனுப்புறேன்! சரியா?”என்றார் சற்குணம்.

உடனே,”சரிம்மா. நான் போய் வாங்கிட்டு வந்துட்றேன்”என்று கூறி விட்டு அவர் வெளியேறியதைக் கண்டு,

இவர்களுக்கு இருக்கும் வசதிக்கு இந்த வீட்டின் அனைத்து வேலைகளைச் செய்யவும் தாராளமாக ஆள் போடலாம். ஆனால் அதைச் செய்யாமல் அனைத்தையும் அவர்களே செய்வது மட்டுமின்றி தன்னையும் இவர்களது மகனுக்குத் திருமணம் செய்து வைத்துக் கூட்டி வந்து வேலையாளாக மாற்றி வைத்திருப்பதை நினைத்துக் கசந்த புன்னகை உதிர்த்தாள் தங்கபுஷ்பம்.

“அதான் உன் மாமனார் கறி எடுத்துட்டு வரப் போறாகள்ல? நீ ஏன் மசமசன்னு நின்னுட்டு இருக்க? வேலையைப் போய்ப் பாரு”என்று கூறி அவளை அனுப்பி வைத்தார் சற்குணம்.

அவளும் மறு பேச்சுப் பேசாமல் அமைதியாக சென்று விட்டாள்.

தங்கபுஷ்பத்தின் அன்றாட வேலைகளே, தன்னுடைய கணவன், மாமனார் மற்றும் மாமியாருக்கு வேண்டியதைச் சமைத்துப் போடுவதும், தினசரி வேலைகளைச் செய்வதும் தான்!

அவள் தனது பெற்றோரைச் சந்திப்பது கூட அரிதாகத் தான் நடக்கும்.

ஏனெனில் இங்கே முழு நேர வேலையாளாக வலம் வருபவளை ஒரு நாளேனும் ஓய்வெடுக்க விட்டு விடுவார்களா அவளது புகுந்த வீட்டினர்?

அதனாலேயே தங்கபுஷ்பத்தை உள்ளூரில் இருக்கும் அவளது பிறந்த வீட்டிற்கு அவ்வளவாக அனுப்பி வைக்க மாட்டார்கள்.

இப்படியாகத் தான் தன் திருமண வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு இருக்கிறாள் தங்கபுஷ்பம்.

வீரபத்திரனின் அளவிற்கு இல்லையென்றாலும் கூடத் தனக்குச் சொந்தமாகச் சில, பல நில, புலன்களைக் கொண்டிருந்த சிலம்பனுக்குச் சிறு வயதிலிருந்தே ஈஸ்வரியின் மீது அளவில்லாத காதல் இருந்தது. அது இப்போது வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

ஆனால் அதை அவன் அவளிடம் இதுவரை வெளிக் காட்டிக் கொள்ளவே இல்லை. அது தான் தற்போது சிலம்பன் உடைந்து போக காரணமாக அமைந்தது.

அவனுக்கு ஈஸ்வரியைக் கனவில் கூட இன்னொருவனுடன் சேர்த்து வைத்துப் பார்க்க முடியவே இல்லை. அது நிஜத்தில் நிகழ்ந்தால் கண்டிப்பாகத் தன்னையே மாய்த்துக் கொள்வான்.

ஆகவே, இப்போது தான், தனது காதலைப் பற்றி வீரபத்திரனுக்குத் தெரிந்து விட்டதே? அதனால் அவனிடமே உதவி கேட்கலாம் என்று முடிவெடுத்தான் சிலம்பன்.

இதே சமயம் தன்னுடைய திருமணத்தைப் பற்றித் தனது தாயும், தந்தையும் நடத்திய பேச்சு வார்த்தையைக் கேட்டிருந்த ஈஸ்வரிக்கு மனம் வெறுத்துப் போயிற்று.

ஏனெனில், தன் அன்னையின் பேராசை அவளுக்குத் தெரிந்த விஷயம் தான்!

ஆனாலும் தனது திருமண விஷயத்திலும் கூட அவர் இவ்வாறான யோசனையைக் கொண்டிருப்பார் என்பதை எண்ணுகையில் அவளுக்கு ரத்தக் கண்ணீர் வருவதைப் போலிருந்தது.

தன்னுடைய தாய் தன் மேல் வைத்திருக்கும் பாசத்தின் அளவு இவ்வளவு தானா? என்று நினைத்தவளுக்குத் தனது திருமணத்தை எண்ணிக் கலக்கம் ஏற்பட்டது ஈஸ்வரிக்குள்.

அவளையும் அவ்வளவாகப் படிக்க வைக்கவில்லை அவளது பெற்றோர். பன்னிரெண்டாம் வகுப்போடு நிறுத்தி விட்டனர்.

எனவே அவளுக்கு வெளி உலகத்தைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பு அமையவே இல்லை.

இப்போதும் கூடத், தான் கல்லூரிப் படிப்பைப் படித்து இருக்கலாம் என்று ஈஸ்வரிக்குத் தோன்றியது.

ஆனால் அதற்குக் காலம் கடந்து விட்டதை உணர்ந்து தனது எதிர்கால வாழ்க்கையைத் தாயின் பேராசை முடிவு செய்யக் கூடாது என்பதில் திண்ணமாக இருந்தாள்.

தன்னுடைய இந்த நோக்கத்தை தன் ஆருயிர்த் தோழியான செங்கமலத்திடம் பகிர்ந்து கொண்டாள் ஈஸ்வரி.

அதற்கு அவளோ,”உங்கம்மாவோட பேராசையைப் பத்தி உனக்கு மட்டுமில்லை, இந்த ஊருக்கே தெரியுமேடி! ஆனால் அதை உங்கல்யாணத்திலேயும் காட்டுவாங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை! இதைக் கேட்டதும் எனக்குக் கெதக்குன்னு இருக்குடி!”என்று கூறித் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினாள்.

“ஆமாம். இப்போ என்னப் பண்றது?”என்று தோழியிடம் கேட்க,

செங்கமலம்,“உங்க அண்ணன் கிட்டே பேசிப் பாருடி! அவர் தான் இந்த ஊருக்குள்ளே எந்தப் பஞ்சாயத்து நடந்தாலும் அதுக்குத் தீர்ப்பு சொல்றவராச்சே? உனக்கு ஒரு அநியாயம் நடந்தால் அதைப் பார்த்துட்டுச் சும்மாவா இருப்பாரு? இதில் இறங்கிப் பேசுவார்டி!”என்று அவளுக்கு யோசனை அளித்தாள்.

“க்கும்! அவருக்கு எங்கம்மாவைக் கண்டாலே ஆகாதுடி! அதே மாதிரி நானும், அவரும் பேசிறதைப் பார்த்தாலே எங்கம்மாவுக்குக் கடுகடுன்னு இருக்கும். அதனாலேயே அவர் எங்கிட்ட அதிகமாக மூஞ்சிக் கொடுத்துப் பேச மாட்டாரு. அப்பறம் எப்படி அவர் கிட்ட இதைப் பேச முடியும்?”என்று சோகத்துடன் உரைத்தாள் ஈஸ்வரி.

“ப்ச்! இதுவும் உபயோகம் இல்லைன்னா என்ன தான் பண்றது?”என்றாள் சலிப்புடன்.

“வேற ஏதாவது யோசனை சொல்லுடி!”என்று அவளை முடுக்கி விடவும்,

“போடி அங்குட்டு! நீ எங்கிட்ட இதைப் பத்திப் பேசுனேன்னு மட்டும் உங்கம்மாவுக்குத் தெரிஞ்சுது. என்னப் பிடிச்சு ஆய்ஞ்சுப் போடுவாங்க! இதுக்கு ஒரே வழி தான். உங்கண்ணண் கிட்டே போய்ப் பேசு. இல்லையா, ஆளை விடு”என்றவளை இயலாமையுடன் பார்த்தாள் ஈஸ்வரி.

உடனே அவளிடம்,“என்னடி?”எனக் கேட்டாள் செங்கமலம்.

“ஒன்னும் இல்ல. விடு. இது என் தலையெழுத்து! அவ்வளவு தான்!”என்று கூறியவளைப் பரிவுடன் பார்த்த தோழியோ,

“நான் சொன்னதை ஒரு தடவை தான் முயற்சி செஞ்சிப் பாரேன்! என்னக் கெட்டுப் போயிடப் போகுது? உங்கண்ணன் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கு”என்றவளிடம்,

“அவர் மேலே உனக்கு நம்பிக்கை இருக்கும் தான்டி!”என்று பீடிகையுடன் கூறினாள் ஈஸ்வரி.

செங்கமலம்,“ஏய்! சும்மா இரு புள்ள!”என்றாள் நாணத்துடன்.

“அடியேய்! நான் என்னோட வாழ்க்கையைப் பத்தி யோசனை கேட்டு உங்கிட்ட வந்தால் நீ என்னமோ எங்கண்ணனைப் பத்திப் பேசினாலே வெட்கப்பட்ற கருமம்!”என்று அவளைக் கடிந்து கொள்ளவும்,

“நான் அதுக்கு உனக்கு எப்பவோ யோசனையைச் சொல்லிட்டேனேடி!”என்று அவளிடம் கூற,

“ஆமாம். நல்ல யோசனையைக் கொடுத்த பாரு! நான் கைத் தட்டிப் பாராட்டி, உனக்கு முத்தம் கொடுக்கனுமாக்கும்? போடி இவளே!”என அவளது முகவாயில் இடித்தாள் ஈஸ்வரி.

செங்கமலம்,“ஆஹ்!! நான் வீட்டுக்குப் போறேன். போடி!”என்று அவளிடமிருந்து சற்றுத் தள்ளிச் சென்றதும்,

“ஏய் ஈஸூ! உங்க அண்ணனைக் கேட்டதாக சொல்லுடி”என்று கூவினாள்.

அதைக் கேட்டதும்,”வெளுத்துப் போடுவேன் பாத்துக்கோ!”என்று தன் முட்டைக் கண்களைப் பெரிதாக்கிக் கூறி அவளைத் துரத்தி விட்டாள் ஈஸ்வரி.

அதற்குப் பிறகு அன்றைய இரவு உணவின் போது தன்னுடைய தமையனின் முகத்தை ஆராய்ந்தவாறே உணவுண்டு கொண்டிருந்தாள்.

அதைக் கண்டு கொண்டாலும், தாய் மற்றும் சின்னம்மாவின் முன்னிலையில் அதைப் பற்றி அவளிடம் எதுவும் கேட்க வேண்டாம் என்று முடிவெடுத்து உணவை உண்டான் வீரபத்திரன்.

அவனுக்குத் தங்கபுஷ்பத்தின் ஞாபகம் தோன்றிக் கொண்டே இருக்கவே, தன்னுடைய நண்பனின் பரிந்துரையைப் பரிசீலனை செய்து பார்க்க முடிவு செய்து விட்டான்.

அதனாலேயே, சாப்பிட்டு முடித்ததும்,”நாளைக்கு நான் வெள்ளனவே எழுந்துப் பக்கத்து ஊருக்குப் போகனும்ப்பா”என்று தந்தையிடம் தெரிவித்தான் வீரபத்திரன்.

“ஏன்? அங்கே உனக்கு என்ன சோலி வேண்டிக் கெடக்கு?”எனக் கேட்டார் தர்மராஜ்.

“அந்த ஊரில் எனக்கு ஒரு நண்பன் இருக்கான். அவனைப் பார்க்கப் போகனும்ப்பா”என்றுரைத்தான் மகன்.

“ஆனால் அங்கே தானே நீ ஒரு பொண்ணை விரும்பி அவ வீட்டுக்குக் கல்யாணத்துக்குப் போய்க் கேட்ட அப்போ அவங்க வீட்டாளுங்க வேண்டாம்னு மறுத்துட்டாங்க? அங்கேயா போகப் போறப்பா?”என்று ஒன்றுமே அறியாதவரைப் போல் பேசி அவனுக்கு இறந்த காலத்தில் ஏற்பட்ட மனக் காயத்தை மறுபடியும் தூண்டி விட்டார் முனீஸ்வரி.

அது அவனைச் சரியாகத் தாக்கினாலும் கூட அழுத்தக்காரன் அவனோ,”ஆமாம். அவளுக்கு வேற ஒருத்தன் கூடக் கல்யாணம் ஆயிடுச்சு. அதுக்கு என்ன இப்போ?”என்று அவரது முகத்திற்கு நேராகப் பார்த்து வினவினான் வீரபத்திரன்.

உடனே தனது முக பாவனையை மாற்றிக் கொண்டு,”அதுக்கு ஒன்னும் இல்லைப்பா. நீ திரும்பவும் அந்த ஊருக்கு ஏன் போகப் போறன்னு தான் கேட்க வந்தேன்”என்று அசடு வழிந்தவாறே கூறியவரிடம்,

“அதை உங்களுக்கு நேரடியாக கேட்கத் தெரியாது போலவே? இந்தச் சுத்தி வளைச்சுப் பேசுற வேலையெல்லாம் எங்கிட்ட வச்சுக்காதீங்க! அதே சமயம், நான் எங்கே, ஏன் போகனும்ன்ற காரணத்தை உங்ககிட்ட சொல்லும்னு எனக்கு அவசியம் இல்லை”என்று அவரிடம் முகத்தில் அறைந்தாற் போலக் கூறவும்,

அதில் தனது வதனம் சுருங்கிப் போய்க் கணவரைப் பார்த்தார் முனீஸ்வரி.

அவரோ,”வீரா! அவங்க உன் சின்னம்மா! அவங்களுக்குக் கொஞ்சமாவது மரியாதை கொடு”என்றார் தர்மராஜ்.

உடனே,”அப்படி மரியாதை கொடுக்கிற அளவுக்கு அவங்களையும் எங்கிட்ட நடந்துக்க சொல்லுங்கப்பா. அவங்க எப்படி எங்கிட்ட பேசுறாங்களோ, அப்படித் தான் நானும் அவங்களுக்குப் பதில் சொல்லுவேன்!”என்று அவரிடம் உறுதியாக உரைத்தான் வீரபத்திரன்.

இவர்களது சம்பாஷணையைக் கேட்டு வெலவெலத்துப் போய் விட்டாள் ஈஸ்வரி.

தன்னுடைய திருமண விஷயமாகத் தமையனிடம் பேச நினைத்து இருந்தவளோ, தற்போது இருக்கும் சூழலில் அது சாத்தியமில்லை என்பதை உணர்ந்து அமைதியாகி விட்டாள்.

தான் தன் வீட்டாரிடம் சொன்னதைப் போலவே தன்னுடைய நண்பனிடமும் விஷயத்தைப் பகிர்ந்து கொண்டு விடியற்காலையிலேயே பக்கத்து ஊருக்குக் கிளம்பிச் சென்று விட்டான் வீரபத்திரன்.

- தொடரும்