• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அர்ப்பணம் 6

kkp12

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 3, 2023
89
11
43
Tamilnadu
“ஏனுங்க! உங்க மவ என்னக் காரியம் செஞ்சிருக்கா தெரியுமா?”என்று ஆரம்பித்து அவரிடம் விஷயத்தைச் சொல்லி முடித்தார் வள்ளி.

அதைக் கேட்டுக் கோபத்தில் மூக்கில் காற்றடிக்க,”ஏய் புஷ்பா! இங்கே வா”என்று மகளை உரக்க அழைக்கவும்,

அவரது குரலைக் கேட்டுத் திடுக்கிட்டாலும் தந்தையிடம் போனாள் தங்கபுஷ்பம்.

“உங்கம்மா சொன்னது நெசம் தானா?”என்று அவளை அதட்டிக் கேட்டார் காளிமுத்து.

அதில் படபடத்தவளோ,”ஆமாம்ப்பா”என்று உண்மையை ஒப்புக் கொண்டாள்.

“அந்த ராஜனைத் தான் நீ கட்டிக்கப் போற. இனிமேல் அவனை மரியாதைக் குறைவாகப் பேசுறதைப் பார்த்தேன்! செவுளைப் பேத்துப்புடுவேன்!”எனத் தனது நாக்கைச் சுழற்றி அவளை எச்சரிக்கை செய்தார்.

“ஹாங்! அவுக தாம்ப்பா என்ன எகத்தாளமாகப் பேசினாரு! அதைக் கேளுங்க முதல்ல! அப்பறம் எங்கிட்ட வாங்க! நான் பேசினதுக்குப் பதில் சொல்றேன்”என்று அவரிடம் பயமில்லாமல் கூறினாள் தங்கபுஷ்பம்.

“அடிச்சுப் பல்லைக் கழட்டிப் போடுவேன்! இப்படித்தான் ராஜன்கிட்டேயும் பேசினியா?”எனக் கர்ண கொடூரமாக கத்திக் கேட்டார் காளிமுத்து.


“ஆமாப்பா”என்றதும் அவளது கன்னத்தில் பலமான அறையொன்று விழுந்தது.

அதில் அலங்க, மலந்து விழித்தவளோ, கன்னத்தைக் கையால் தாங்கிக் கொண்டு அதிர்ச்சியுடனும், ஆதங்கத்துடனும் தந்தையை வெறித்துப் பார்த்தாள் தங்கபுஷ்பம்.

“இந்த எதுத்துப் பேசுற வேலையெல்லாம் வச்சிக்கிட்ட! அம்புட்டுத்தேன்! ஒழுங்கா இருந்துக்க!”என அவளை மிரட்டி விட்டு,

“பசிக்குது வள்ளி. சோத்தைப் போடு”என்று மனைவியிடம் கூறவும்,

“கையக் கழுவிட்டு வாங்க”என்று அவரை அனுப்பிய வள்ளியோ,

“இங்காருடி! இந்த அடியை நெனப்புல வச்சிக்கிட்டு வாயை மூடிக்கிட்டு இரு!”என மகளை எச்சரித்து விட்டு அகன்றார்.

தனது கன்னத்தைத் தேய்த்து விட்டுக் கொண்டுத் தன் அறைக்குள் சென்று முடங்கி விட்டாள் தங்கபுஷ்பம்.

அவளுக்கு அதை தவிர வேறு வழி தெரிந்திருக்கவில்லை.

தன்னால் முடிந்த அளவிற்குத் தன் தரப்பு நியாயத்தைத் தந்தையிடம் சொல்ல முயன்றாள். ஆனால் அதைக் காது கொடுத்துக் கூடக் கேட்காமல் தன்னிடம் கை நீட்டியவரிடம் இனிமேல் பேசிப் பிரயோஜனம் இல்லை என்று உணர்ந்து பேசாமடந்தை ஆகி விட்டாள் தங்கபுஷ்பம்.

இதே நேரத்தில்,”நீ அந்த இடத்துலயே அவளோட கொரவளையப் புடிச்சு நெறிச்சு விட்ருக்கனும்டா! அவளுக்கு எம்புட்டு தகிரியம் இருந்தா உன்னை எதுத்துப் பேசி இருப்பா?”எனத் தன் மகனிடம் புகைந்து கொண்டிருந்தார் சற்குணம்.

“அதானே! அதென்ன பொட்டப் புள்ளைக்கு அவ்வளவு தகிரியம்? நீ ஒரு காட்டுக் காட்டிட்டு வந்திருக்கனும்டா”என்று தன் பங்கிற்குக் கூறினார் வளையாபதி.

“அதான் என்னைக் கட்டிக்கிட்டு இங்க தான வரப் போறாள்! அப்போ அவளைக் கவனிச்சிக்கிறேன்”என்று கோபத்தில் பற்களை நறநறவென்று கடித்தான் ராஜன்.

“ம்ஹ்ம். அதுக்கான ஏற்பாட்டை உடனே ஆரம்பிக்கிறேன்” என ஒரு முடிவிற்கு வந்து விட்டிருந்தார் சற்குணம்.

ஆனால் தந்தையின் அதட்டலில் ராஜனின் பக்கமே போகாமல் இருந்தவளோ, தன் தோழிகளுடன் சேர்ந்து தனக்குப் பிடித்ததை செய்து கொண்டுத் தனது வலிக்கு மருந்திட்டுக் கொண்டாள் தங்கபுஷ்பம்.

அப்போதும் கூட அவளைச் சீண்டும் வேலையை விடவில்லை ராஜன். தான் ஒதுங்கிப் போனாலும் அருகில் வந்து வம்பிழுக்கும் அவனைப் பார்க்கையில் கடுப்புத் தான் வரும் அவளுக்கு. ஆனால் அவனுக்குத் தக்கப் பதிலடி கொடுக்க முடியவில்லையே என்று பொருமவும் தவறவில்லை.

அந்த ஊரிலிருந்த சில நாட்களில் அடிக்கடி தங்கபுஷ்பத்தைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது வீரபத்திரனுக்கு.

அதேபோல் அவளுடைய ஒவ்வொரு அசைவுகளும் அவனுக்கு அத்துப்படி.

அவன் ஒரு நாள் தன்னுடைய நண்பனுடன் பேசிக் கொண்டு இருந்த போது,”இப்படி வழியை மறைச்சிக்கிட்டு நின்னா நாங்க எப்படி போறதாம்? கொஞ்சம் கூடக் கூறு வேணாம்?”என்று பொரிந்தவளின் குரலைக் கேட்டுத் திரும்பினார்கள் வீரபத்திரன் மற்றும் சித்தன்.

அவளைப் பார்த்ததும்,“யாருடா அது நம்மளையே மிரட்டுறது?”என்று வேண்டுமென்றே நக்கலாக கேட்டான் வீரபத்திரன்.

அவன் அப்படி மொழிந்ததும் ஏற்கனவே ராஜனின் வார்த்தைகள், அதற்குத் தன் மறுமொழி மற்றும் அதனால் தனக்குத் தந்தையிடம் கிடைத்த மண்டகப்படி அனைத்தும் அவளது நினைவில் வந்து போய் விட,

அதனால் ஆத்திரம் எழவும்,”நீ யாருய்யா புது உருப்படியாக இருக்கிற? ஊருக்குப் புதுசா?”என்று வீரபத்திரனிடம் வினவினாள் தங்கபுஷ்பம்.

அவனோ,“ஆமாம். அதுக்கு என்னவாம் இப்போ?”என அவளுடன் வாயாடினான்.

அதைக் கேட்டு அவனுக்கு அருகில் இருந்த சித்தனைப் பார்த்து,”ஓஹ்! உங்க வீட்டுக்கு வந்திருக்கிற விருந்தாளியா?”என்று அவனிடம் கேட்க,

“ஆமாம்மா. இவன் என் நண்பன்”என்றுரைத்தான்.

“யாரா வேணும்னாலும் இருந்துட்டுப் போகட்டும். இப்படி சாலையை அடைச்சிட்டு நின்னுட்டு இருந்தால் நாங்க எப்படி போறது? வழியை விட்டு நின்னு வாயாடுங்க!”என்று சொல்லி விட்டுச் சென்றாள் தங்கபுஷ்பம்.

“எப்படி பட்டாசா பொரிஞ்சிட்டுப் போறா பாரு!”என்று கூறிச் சிரித்தான் சித்தன்.

“எனக்கு நெதமும் அந்தப் பட்டாசுப் பேச்சைக் கேட்கனும்னு ஆசையாக இருக்குடா மாப்பிள்ளை!”என்ற நண்பனை அதிர்ச்சியாகப் பார்த்தவனிடம்,

“ஏன்டா இப்படி தெகைச்சுப் போய் நிற்கிற?”எனக் கேட்டான் வீரபத்திரன்.

“வேற என்னடா பண்ண சொல்ற? நீ என்ன நெனைப்புல இருக்கிற? நான் அவளைப் பத்தி தெள்ளத் தெளிவாக சொன்னதுக்கு அப்பறமும் நீ இப்படி பேசுறதைப் பார்த்தா இங்கே ஒரு கலவரத்தைப் பண்ணாமல் போக மாட்ட அப்படின்னு நினைக்கிறேன். இந்த வீண் வம்பே வேண்டாம்!”என அவனை எச்சரித்தான் சித்தன்.

“ம்ஹூம். நான் அடுத்த தடவை இங்கே வரும் போது அவளைப் பொண்ணுக் கேட்கப் போறேன்”என்றதும் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு,

“அடேய்! அப்படி எதையும் செஞ்சி வச்சிடாதே! அப்பறம் ஊரே சேர்ந்து நம்ளைக் கும்மிப்போடும்”என்றவனிடம்,

“நீ என்னடா உங்க ஊர் ஆளுங்களுக்கு ரொம்ப விளம்பரம் பண்ணிட்டு இருக்கிறவ? அவளை எப்படி கல்யாணம் பண்றதுன்னு எனக்குத் தெரியும்! நீ அமைதியாக இரு”எனக் கூறி விட்டான் வீரபத்திரன்.

அதற்குப் பிறகு அவனது விருப்பத்தை தன் தந்தையிடம் பகிர்ந்து கொண்டான் சித்தன்.

“அவனுக்கு விருப்பம் இருந்தால் பொண்ணுக் கேட்டுக் கட்டிக்கட்டும்டா. நீ ஏன் அவனைத் தடுக்கிற? ஆனால் அந்த தங்கபுஷ்பத்தோட அத்தை ஒரு ராங்கி! அவங்களோட மயனுக்குத் தான் அவளைக் கட்டி வைக்கிற முடிவோட இருக்காங்க! அதனால் அவனை யோசிச்சுப், பொறுமையாக முடிவு எடுக்கச் சொல்லு”என்று மகனிடம் சொன்னார் வேங்கையன்.

“அதையெல்லாம் அவன் ஏன் கேட்கப் போறான்ப்பா? அவனுக்கு என்னத் தோனுதோ, அதைத் தான் செய்வான்”என்று சலித்துக் கொண்டான் அவரது மகன்.

அடுத்த நாள், அந்த ஊர்ப் பஞ்சாயத்துக் கூட்டப்பட்டு அங்கே ஒரு அபலைப் பெண் அழுது கொண்டிருந்தாள்.

அங்கே கூடியிருந்த மக்களுள் தங்கபுஷ்பமும், அவளது தோழி லோகேஸ்வரியும் நின்றிருக்க,

தங்கபுஷ்பத்தின் தாய், தந்தை மட்டுமின்றி, ராஜனும் அவனது பெற்றோரும் கூடக் காணக் கிடைத்தனர்.

அவர்களுக்குச் சற்று தள்ளி சித்தன், வீரபத்திரன் மற்றும் அவனது தந்தை தர்மராஜூம் நின்றிருந்தனர்.

“ஏய்! என்னம்மா பிராது கொடுத்துட்டு நீ பாட்டுக்கு அழுதுட்டு இருக்கிற? என்ன நடந்ததுன்னு சொல்லு?”என்று பிராது கொடுத்த பெண்ணிடம் வினவினார் பஞ்சாயத்து தலைவர்.

அவளுடைய தந்தையோ,”பாவி மக அவ என்னத்தை சொல்லுவா ஐயா? இந்தப் படுபாவி அவளைக் கெடுத்துட்டானுங்க!”என்று தங்களுக்கு எதிரில் இருந்தவனைக் காட்டிச் சொல்ல,

அவனோ அதைக் கேட்டுத் திமிராகச் சிரித்தான்.

தன்னருகே இருந்த தோழியிடம்,”அங்கே பார்றீ! அவன் தப்புப் பண்ணிட்டுத் தோரணையா நிக்கிறான்!”என்று மூக்கு விடைக்க கோபத்துடன் மொழிந்தாள் தங்கபுஷ்பம்.

“க்கும்டி! இவனுக்கு ஒரு சாவு வர மாட்டேங்குது! எப்படி தெனாவட்டா இருக்கான் பாரு!”என லோகேஸ்வரியும் அவனுக்கு வசவுகளை வழங்க,

அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தான் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்பதை உணராமல் இறுமாப்புடன் நின்று கொண்டிருந்தவனிடம்,

“ஏலேய் சிவநேசா! கூறு கெட்டவனே! ஒரு பொண்ணைக் கெடுத்துட்டு இப்படி நெஞ்சை நிமித்திட்டு நிக்குறியே! உனக்கு வெக்கமாக இல்லையா?”என்று அவனை அதட்டினார் பஞ்சாயத்து தலைவர்.

“ஐயா! நான் அவளைக் கெடுத்தது உண்மை தானுங்க! அவ என்னோட மாமன் பொண்ணு தானே? பொறவென்ன? நானே அவளைக் கட்டிக்கிறேன்!”என்று அவரிடம் பவ்யமாக உரைத்தான் அந்த சிவநேசன்.

“ச்சீ! வெக்கங்கெட்ட நாயே!”என்று வாய்க்குள் வசை பாடினாள் தங்கபுஷ்பம்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த வீரபத்திரனுக்குள் அந்தச் சிவநேசன் என்பவனை வெட்டிக் கூறு போடும் அளவிற்கு வெறித்தனமாக கோபம் மூண்டது.

அவனைப் போலவே தான் தங்கபுஷ்பமும் எண்ணிக் கொண்டிருந்தாள்.

அவளுக்கு இந்தப் பஞ்சாயத்தில் நிற்கவே பிடிக்கவில்லை. உடலெங்கும் கூசியது.

அதனாலேயே,”இதைப் பார்க்க எனக்குப் பிடிக்கலை லோகு. நான் வீட்டுக்கு நடையைக் கட்றேன்”என்றவளது கரத்தைப் பிடித்து,

“அப்படியெல்லாம் போயிடக் கூடாது புள்ளே! அப்பறம் உம் மேலே பிராது விழுந்துரும்”என்றாள் லோகேஸ்வரி.

“ப்ச்!”என்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு நின்று விட்டாள் தங்கபுஷ்பம்.

அதையே தான் சித்தனும் தன் நண்பன் வீரபத்திரனிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.

“என்னடா இதெல்லாம் ஒரு பஞ்சாயத்தா? எங்க ஊருல என் அப்பா ஒவ்வொரு பிராதுக்கும் எப்படி நியாயம் சொல்றாருன்னுப் பார்த்து தெரிஞ்சிக்கோ!”எனச் சித்தனிடம் கோபமாக மொழிய,

“அடங்குடா! உன் அப்பாவே இங்கே அமைதியாகத் தான் நின்னுட்டு இருக்காரு! நீயும் வாயை மூடிட்டு இரு!”என்று அவனிடம் சொல்ல,

உடனே தன்னுடைய தந்தையைப் பார்த்து,’ஏதாவது பண்ணுங்கப்பா'என்று கண்ணாலேயே சைகை செய்தான் வீரபத்திரன்.

அதற்கு அவரோ,’நம்மளால ஒன்னும் பண்ண முடியாது!’என்று தானும் சைகையின் மூலம் அவனை அடக்கினார் தர்மராஜ்.

“அப்படி கல்யாணம் பண்ணி வச்சா நான் நாண்டுக்கிட்டுச் செத்துருவேனுங்க!”எனக் கதறினாள் அந்தப் பாதிக்கப்பட்ட பெண்.

“ஓஹோ! சாவுடி! அது எனக்கு நல்லது தான்!”என்று திமிராக உரைத்தான் சிவநேசன்.

“வாயை மூடுடி ஆக்கங்கெட்டக் கூவ!”என்று மகளை அதட்டி விட்டு,

“அவனையே இவளுக்குக் கட்டி வச்சிடலாம்ங்க ஐயா!”என்று கூறியது வேறு யாருமில்லை அவளைப் பத்து மாதம் சுமந்து பெற்ற அன்னையே தான்!

அதைக் கேட்டு வெகுண்டு எழுந்த வீரபத்திரனோ, அவன் எகிற முனையும் முன்,”ஏம்மா! நீயெல்லாம் ஒரு பெத்த தாயா? உன் பொண்ணைக் கெடுத்தவனுக்கே அவளைக் கல்யாணம் பண்ணிக் குடுக்குறேன்னு சொல்றியே? கூறோட தான் பேசுறியா?”என்று தன் குரலை உயர்த்தி அந்தப் பெண்மணியைக் கடிந்தாள் தங்கபுஷ்பம்.

“ஏய்! இன்னொரு வார்த்தைப் பேசின, வாயை இழுத்து வச்சு அறுத்துப் போடுவேன்!”என்று அவளின் கையைப் பிடித்து அழுத்தினார் வள்ளி.

“ம்மா! என்னை விடு! அந்தம்மா பேசினதைக் கேட்டு உனக்குக் கோபம் வரலை?”என்று அவரிடம் கத்த,

“வரலைடி. நீ பேசாமல் சும்மா இருக்கியா? இல்லை, வீட்டுக்குப் போறியா?”என்றவுடன்,

“இந்தக் கொடுமையைப் பார்க்கிறதுக்கு நான் வீட்டுக்கே போவேன்”என்றவளோ, உடனே அங்கேயிருந்து அகன்று தனது இல்லத்தை நோக்கி நடந்தாள் தங்கபுஷ்பம்.

அவளை விடுங்க! நீங்க தீர்ப்பு சொல்லுங்க”என்று பஞ்சாயத்து தலைவரை ஊக்கினார் காளிமுத்து.

“சிவநேசன் சொன்ன மாதிரி அவனே அந்தப் புள்ளைய கல்யாணம் செஞ்சிக் கண் கலங்காமல் பார்த்துக்கனும்! இது தான் இந்தப் பஞ்சாயத்தோட தீர்ப்பு!”என்ற தலைவரைப் பார்த்து முறைத்துக் கொண்டே அவ்விடத்தில் இருந்து சென்று விட்டான் வீரபத்திரன்.

இங்கே தீர்ப்பு வழங்கிய பின்னர் தன்னுடைய கண்களில் வழிந்து கொண்டிருந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு இலக்கின்றி நடக்கத் தொடங்கி விட்டாள் அந்தப் பாதிக்கப்பட்ட பெண்ணான செவ்வழகி.

அவளைப் பின் தொடர்ந்து சென்ற அவளது பெற்றோரோ மகளின் மனதை மாற்ற முயற்சி செய்யும் வேலையில் இறங்கினர்.

“என்னக் கருமம் புடிச்ச தீர்ப்புடா இது? எனக்கு அப்படியே மண்டையில் ஏறுது! இவனுங்க மூஞ்சியை எல்லாம் என்னால் பார்க்க முடியலை!”என்று சித்தனிடம் சொல்லி விட்டுத் தன்னுடைய தந்தையைப் பற்றிய நினைவே இல்லாமல் அங்கேயிருந்து சென்று விட்டான் வீரபத்திரன்.

அந்தப் பஞ்சாயத்தில் எகிறி, எகிறித் தைரியமாகப் பேசிய தங்கபுஷ்பமோ இப்போது தன்னுடைய கணவன் ராஜன் மற்றும் அவனது பெற்றோரின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு, அவர்களது கொடுமைக்குத் தன்னைப் பழக்கப்படுத்திக் கொண்டு உயிர்ப்பில்லாத வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறாள் என்றால் யாராலும் நம்பவே முடியாது!

ஆனால் அவளை இந்த நிலைக்குத் தள்ளியதே அவளது பெற்றோர் தான்!

என்ன தான், தங்கள் மகளை ஒரு வேலை செய்ய விடாமல் வளர்த்து இருந்தாலும் கூடத் தங்களது இரத்தத்தில் ஊறிப் போயிருந்த தங்களுக்கு வழி வழியாகச் சொல்லப்பட்டிருந்த போதனைகளை மதித்து, அதை மகளுக்கும் கொஞ்சம், கொஞ்சமாகப் புகட்டி அவளை முதுகெலும்பு இல்லாத கோழையாக மாற்றி விட்டனர் தங்கபுஷ்பத்தின் தாயும், தந்தையும்.


- தொடரும்
 
Last edited: