• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அள்ளிக் கொண்ட தென்றல் - 22.

Infaa

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 7, 2022
Messages
878
பகுதி – 22.

தன் வீட்டுக்குச் சென்ற தென்றல், தாயின் மடியில் படுத்துக் கண்ணீர் விட, அவருக்கு முதல்முறையாக பிரபஞ்சனின் மீது கோபம் துளிர்த்தது. அவனுக்கு என தன் மகள் இங்கே போராடிக் கிடப்பதும், அவனிடம் சென்று அழுது திரும்புவதுமாக இருக்க,

‘இப்படி புரிந்துகொள்ள மறுக்கும் அவனது உறவு அவசியமா?’ என்னும் அளவுக்கு அவர் யோசித்தார்.

ஆனால் இங்கே முடிவு செய்ய வேண்டியது மகள் என்பதால் அமைதி காத்தவர், மகளது தலையை கோதிக் கொடுத்தார்.

“என்னம்மா...? எதுக்கு அழற? நேத்தும் அழுத, இன்னைக்கும் அழற... நாளைக்கும் இப்படியே அழுவியா? தைரியமா இருக்கத் தெரியாதா?” சற்று கண்டிப்பான குரலிலேயே பேசினார்.

மகளைக் கொஞ்சினால், அவள் இன்னுமே அழுது கரைவாளோ? எனத் தோன்ற, தன் முறையை மாற்றினார்.

“என்னைத் திட்றாங்கம்மா... என்னைத் திட்டிட்டாங்கம்மா” பள்ளிக்குச் சென்று, முதல்முறை ஆசிரியரிடம் அடிவாங்கிவிட்ட அதிர்வை வெளிப்படுத்தும் குழந்தையென அவள் தேம்ப, அவருக்கு உருகிப் போயிற்று.

அதை மறைத்தவர்... “திட்ற அளவுக்கு என் பொண்ணு என்ன பண்ணா? என் பொண்ணு சமத்தாச்சே...” கைக்குழந்தையை விசாரிக்கும் பாங்கு அவரிடம்.

சின்னக்குரலில் தியாகு அவன் முன்பாகவே அவளிடம் பேசியதையும், அவன் கோபத்தையும் சொல்லி, இன்று நடந்ததையும் சொல்ல, பிரபஞ்சனின் கோபம் அவருக்குப் புரிந்தது.

“இந்த ஆம்பளைங்களுக்கு பொண்டாட்டின்னு ஒருத்தி வந்துட்டாலே, அவ அவங்க உடைமைன்னு மனசுக்குள்ளே பதிஞ்சு போய்டும். அவளும் ஒரு தனி மனுஷி, அவளுக்குன்னு சில உரிமைகள், ஆசைகள்... அவ பிரச்னையை அவளாலும் தனியா சம்மாளிக்க முடியும்னே யோசிக்க மாட்டாங்க.

“அவ நம்ம பொண்ணு, அவளை நாமதான் பார்த்துக்கணும். அவளுக்கு உலகமே தெரியாதுன்னு அவங்களுக்கு அவங்களே யோசிச்சு பேசறது ஒரு வகைன்னா... சுத்தி நடக்கறதை கவனிக்காமல் இருக்காளேன்னு கோபப்படறது இன்னொரு வகை.

“இப்போ உன் புருஷன் என்ன வகைன்னு கொஞ்சம் யோசி...” அவர் சொல்ல, தன் அழுகையை நிறுத்தியவள், எதையோ யோசிப்பது தெரிந்தது.

அந்த அலுவலகத்தில், கிட்டத்தட்ட ஒரு மாதமாக அவனோடு இருக்கிறாள். அலுவலகத்தில் இருக்கும் மற்ற ஆண்களோடும் சரி, பெண்களோடும் சரி... யாரிடம் பேசினாலும் அவன் அப்படி ஒன்றும் அவளைத் தடுத்ததோ, கண்காணித்ததோ இல்லை.

தியாகுவின் பிரச்சனையில் கூட, அவன் தலையிடாமல் விலகித்தான் நின்றான். ‘அவளே சொல்லட்டும்...’ என்பதுதான் அவனது நிலைப்பாடாக இருந்தது.

ஒரு பக்கம் அவனுக்கு கோபமாகவும், தான் இப்படி தன்னைச்சுற்றி நடப்பதை அறியாமலும் இருந்ததுதான் அவனது முதல் கோபத்துக்கான காரணம் என்பது புரிய சற்று தெளிந்தாள்.

“அவங்க ரெண்டாவது ரகம்தான்... அதுக்காக என்னைத் திட்டுவாங்களா? என்னைத் திட்றாங்க...” அப்பப்பா... முன்னர் என்னை ‘போ’ எனச் சொல்லிவிட்டார் என அழுதால், இப்பொழுது திட்டிவிட்டான் என அழுதாள்.

“இது... நீங்க பிரிஞ்சு இருக்கறதால வர்ற பிரச்சனை தென்றல்... நீ அவர் கூடவே இருக்கும்போது இதெல்லாம் சரியா போய்டும். நீயும் அவரை நல்லா திட்டிடு” அவர் சொல்ல,

“அவரையா? திட்டவா?” என்னவோ புதிதாக வாழ்க்கைப் பாடம் படிக்கும் உணர்வு.

“ஆமா... குடும்பம்னு வந்துட்டா அப்படித்தான்... நானும் உங்க அப்பாவும் போடாத சண்டையா? உங்க அப்பா என்னைத் திட்டினதே இல்லையா?” அவர் கேட்க, அமைதியானாள்.

“அப்படின்னா என்னையும் திட்டுவாங்களா? என்னை திட்ட வேண்டாம்” அவள் மீண்டும் கண்ணீர் வடிக்க, அவருக்கு ‘ஐயோ’ வென இருந்தது.

தங்கள் பிள்ளையை ஒரு சொல் கூட திட்டி வளர்க்காமல் விட்டுவிட்டு, அவள் அடுத்த குடும்பத்துப் பெண்ணாக மாறுகையில், அங்கே அவளை அனைவரும் சீராட்டுவார்களா என்ன? ஒரு சொல் கூடத் தாங்காமல் சுணங்கிப் போகும் மகளைப் பார்க்க வருத்தம் மட்டுமே பட முடிந்தது.

“இதையெல்லாம் தாங்கி, தாண்டித்தான் வரணும் தென்றல்...” மகளுக்கு புரிய வைக்க முயன்றார்.

“என் தன்மானத்துக்கு ஒரு இழுக்குன்னா, அதையெல்லாம் தாங்கிட்டு எனக்கு இருக்க வேண்டாம்” அவள் பட்டென சொல்ல, இந்த தென்றல் அவருக்குப் புதியவளே.

“சரி வேண்டாம்... ஆனா அப்படியெல்லாம் ஆகாதும்மா...” சொன்னவர் அவளை அமைதிப்படுத்த முயன்றார். ஆனால் தேறிக்கொள்ள வேண்டியவள் அவள் என்கையில் என்ன செய்ய முடியும்?

இங்கே இவள் இப்படியென்றால்... தன் வீட்டுக்கு வந்த பிரபஞ்சனால் நிம்மதியாக இருக்கவே முடியவில்லை. தென்றல் அப்படி ஒரு அழுகை அழுதிருக்க, அழுதுகொண்டே வேறு சென்றிருக்க, அவள் சமாதானமாகிவிட்டாளா எனத் தெரியாமல் தூங்க முடியும் என்றே தோன்றவில்லை.

அவன் அதையே எண்ணிக்கொண்டு அமர்ந்திருக்க, அவனது அலைபேசி இசைக்கவே, ஒரு வேளை தென்றல்தான் அழைக்கின்றாளோ என எண்ணியவன், வேகமாக அழைப்பை பார்த்தான்.

அவனது அக்கா அழைத்திருக்க, “சொல்லுக்கா...” அவன் குரல் கொடுக்கவே, அவன் குரலில் இருந்த மாறுபாட்டை அவள் உணர்ந்துகொண்டாள்.

“ரஞ்சா... என்னப்பா குரலே சரியில்லை? தென்றல்கூட மறுபடியும் ஏதும் பிரச்சனையா? ஏதாவது சொல்லிட்டாளா?” அவனுக்கு வேறு கவலைகள் இருக்காது என்பதால் கேட்டாள்.

“அவ என்ன சொல்ல? நான்தான்...” தான் கொஞ்சம் அதிகமாக பேசிவிட்டோமோ என வருந்தினான்.

“என்ன ரஞ்சா இது? அவ என்ன நினைக்கறான்னு பேசி புரிஞ்சுகிட்டு, அடுத்த விஷயத்தைப் பாருன்னு சொன்ன பிறகும், இப்போ என்ன புதுசா?” சிறு கண்டிப்பாகவே கேட்டார்.

“அவளைக் கொஞ்சம் திட்டிட்டேன்...” சொன்னவன் காரணத்தை சொல்லாமல் விடுக்கையிலேயே, தவறு அவன்மேல் இருப்பது அவளுக்குப் புரிந்தது.

“திட்டிட்டியா? அதெல்லாம் அவ தாங்கிக்க மாட்டாளே... அவளை அப்படி செல்லமா வளத்து வச்சிருக்காங்கடா. வெளியில் எப்படியோ, வீட்டு ஆட்கள் கிட்டே அவ ரொம்ப சென்சிட்டிவ்ன்னு உனக்குத் தெரியாதா?” அவளைப்பற்றித் தெரிந்தும் இப்படி செய்துவைத்தால், அவளும் என்னதான் செய்வாள்?

“ம்ச்... தெரியும்க்கா... என்னென்னவோ சொல்லிட்டேனா... ஒரே அழுகை அவ... அழுதுட்டே வீட்டுக்குப் போனா... சாப்பிட வேற இல்லையாம்” அவளை அப்படி அனுப்பியது அவன் மனதைப் போட்டு பிசைந்தது.

“சாப்பிடலை, அழுதுட்டே போயிருக்கா... நீ அவளை அப்படியே அனுப்பினியா? எப்படி ரஞ்சா உன்னால் முடியுது? என் தம்பியும், அவ புருஷனும் வேறதான் இல்ல...” அவள் சொல்ல, அவனுக்கு மனதில் பாரம் ஏறியது.

“நானே கஷ்டபட்டுட்டு இருக்கேன்... நீ வேற ஏன்க்கா...?” வருத்தமாக கேட்டான்.

“தென்றல் குணத்துக்கு என்னால் உன்னைத்தான் கண்டிக்க வருது ரஞ்சா. உனக்கு வேற ஏதோ பொண்ணைக் கட்டி வச்சிருந்து, அது எப்படி ஆகி இருக்குமோ? ஆனா தென்றலைப் பொறுத்த வரைக்கும், அவளை தட்டிக்கொடுத்து கொண்டு போகணுமே தவிர, திட்டி இல்லை” அவள் சொல்லச் சொல்ல, அவனுக்கு இன்னுமே கடினமாக இருந்தது.

“இப்போ அவ ரொம்ப மாறிட்டா தெரியுமா” அவன் குரலில் ஒரு சிலாகிப்பு திடுமென கலக்க, அவள் சுவாரசியமானாள்.

“அப்படியா? என்னன்னு சொல்லு, நானும் தெரிஞ்சுக்கறேன்” அவன் குரல் மறுபாட்டில் அவனிடம் கேட்டாள்.

“நான் திட்டிட்டேன்னு அழறாளேன்னு ஆறுதல் சொல்ல ட்ரை பண்ணா, எனக்கு உங்க மேல சாஞ்சுக்கணும் தான்... ஆனா நீங்க என்னைத் திட்றீங்க, எனக்கு வேண்டாம்னு விலகிப் போய் நிக்கறா” அவளது அந்த தன்மானம் அவனுக்குப் பிடித்திருக்க, அந்த நேரத்திலும் அவன் அதை ரசித்தான்.

“அவ்வளவு பிடிவாதக்காரி தான்... பார்த்துக்கடா... ‘உங்களை ஹேட் பண்றேன்’ன்னு சொல்லி சோலியை முடிச்சுடப் போறா...” அவள் கேலியாகச் சொன்னாலும், அதில் இருந்த உண்மை அவனைக் கொஞ்சம் அசைத்துப் பார்த்தது.

“என்னை வெறுத்துடுவாளாக்கா? நிஜமாவா? ஏற்கனவே ஒரு சொல்லு சொல்லிட்டேன்னு அதையே மனசுக்குள் போட்டு குழப்பிக்கறா போல” அவன் சொல்ல, நிவேதிதா அதிர்ந்தார்.

“என்னடா சொல்லி வச்ச?” அதை மறைக்க முடியாமல் கேட்டாள்.

“என்னைக்கோ அவகிட்டே கோபத்தில் பேசறப்போ, ‘எப்போ உன் அப்பன் வந்து கூப்ட்டு, நீ போய்டுவியோன்னு நான் பயந்துட்டே இருக்கணுமா?’ன்னு கேட்டுட்டேன்... அதை வச்சுகிட்டு என்கிட்டே வராம இருக்கறா போல.

“அதை விட ‘நான் என்ன செஞ்சா, நீங்க அப்படி பயப்படாம இருப்பீங்கன்னு எனக்குத் தெரியலை. அதே கேள்வியை நீங்க மறுபடியும் என்னைப்பார்த்து கேட்டா, நான் செத்துடுவேன்’ன்னு அவ சொல்லிட்டு போனப்போ...” அவன் அப்படியே நிறுத்திவிட, அங்கே அப்படி ஒரு அமைதி நிலவியது.

“ரஞ்சா... வேணாம்டா... என்ன செய்வியோ தெரியாது... முதல்ல அவகிட்டே பேசு... அவ இப்படியே இருந்தான்னா அது நல்லதில்லை” அவள் சொல்ல, அவன் கொஞ்சம் பயந்தான்.

“அக்கா, என்னக்கா சொல்ற?” அவன் தன் பயத்தை குரலில் வெளிப்படுத்த,

“ஏற்கனவே ஜன்னி வந்து சுயநினைவே இல்லாமல் கிடந்தவ அவ, நீ அதை மறந்துட்டியா? நீ அவளை ஏதாவது சொன்னா, அதோட இம்பேக்ட் அவகிட்டே பலமடங்கு இருக்கும்... அதை எப்போதும் மறந்துடாதே. முதல்ல அவளை சமாதானப்படுத்து... இப்போ நான் வைக்கறேன்” சொன்னவள் அழைப்பை துண்டிக்க முயன்றாள்.

“என்னக்கா பயம் காட்டற?” நிஜமான பயத்தோடு கேட்டான்.

“உன்னோட இப்படியான செய்கையால, அவ உன்னை வெறுக்க ஆரம்பிச்சுட்டா அதைத் தடுக்கவே முடியாது ரஞ்சா. நான் சொல்வது உண்மை. இதை நீ உன் மனசில் வச்சுக்கோ... ஒரு சொல் கேட்காமல் வளர்ந்த பொண்ணுடா.

“அவங்க அப்பாவைத் தாண்டி, உன்னைத் தேடி வந்திருக்கா. அதுவே அவ அளவுக்கு பெரிய விஷயம் தான்... இப்போ நீ கோபப்பட்டுட்டே இருந்தா, அவளுக்கு அதையெல்லாம் சம்மாளிக்கத் தெரியுமான்னு யோசிச்சியா?” அத்தனை கோபமாக கேட்க, அவனுக்கு இதயம் நின்று துடித்தது.

“அக்கா...” அதிர்வாக அழைத்தான்.

“வெண்ணெய் திரண்டு வர்றப்போ தாழியை உடைச்ச கதையா எதையும் செஞ்சுடாதே ரஞ்சா, கவனம்... தென்றல் இதையெல்லாம் தாங்க மாட்டா, அதை எப்போதும் உன் மனசில் ஆழமா பதிய வச்சுக்கோ. அவளைப் போய் பாரு...” என்றவள் அழைப்பை துண்டிக்கப் போக,

“அக்கா... அக்கா... இந்த நேரம் கூப்ட்டிருக்க, ஏதும் முக்கியமான விஷயமா?” அவள் சாதாரணமாக அழைத்துப் பேசுவாள் என்றாலும், தெரிந்துகொள்ளக் கேட்டான்.

“ரெண்டு நாள்ல பட்டுவோட பெர்த்டே வருது... அதைச் சொல்லத்தான் கூப்ட்டேன்” சொன்னவள் அலைபேசியை வைத்துவிட, தன் தலையிலேயே கை வைத்துக் கொண்டான்.

போன வருடம் இருந்த டென்ஷனில் அவன் நைனிகாவின் பிறந்தநாளையே மறந்து போயிருக்க, இரவுக்குள் அழைத்து விஷ் செய்துவிட்டாலும், அவள் ஒரு மாதம் வரைக்கும் அவனிடம் பேசவே இல்லை.

அதை எண்ணியவன், மனதுக்குள் அதைக் குறித்துக் கொண்டாலும், தன்னவளைக் குறித்து அறிந்துகொள்வதே இப்பொழுது முக்கியம் எனத் தோன்ற, அவளது அலைபேசிக்கு அழைப்பு விடுத்தான்.

அதுவோ அணைத்து வைக்கப்பட்டிருப்பதாக சொல்ல, சற்று பயந்து போனான். போனமுறை இப்படி ஆனதாகத்தான் அவனது நினைவு. எனவே வேகமாக பார்வதிக்கு அழைத்துவிட்டு, அவர் எடுக்கக் காத்திருந்தான்.

அவனைக் கொஞ்சம் அதிகம் சோதித்துவிட்டு, அழைப்பு நிற்கப் போகையில்தான் அவர் அதை எடுக்க, “சொல்லுங்க மாப்ள...” அவர் குரல் கொடுக்கவே, அவனுக்குள் ஒரு பெருத்த தயக்கம் வந்து ஒட்டிக் கொண்டது.

“அத்த... தென்றல்... தூங்கிட்டாளா? சாப்ட்டாளா?” என்னவோ பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டும் உணர்வு.

“சாப்ட்டாளான்னு கேட்டா... கஷ்டப்பட்டு ரெண்டு இட்லி சாப்பிட வச்சேன். தூங்கிட்டாளான்னா... தூக்கமாத்திரை கொடுத்தும் தூங்காமல் கிடக்கா” அவர் வேதனையாகச் சொல்ல, அவனுக்கு பேசவே முடியவில்லை.

“நான் உங்ககிட்டே கொஞ்சம் பேசலாமா மாப்ள?” அவர் குரலில் இருந்த மாறுபாட்டில், கொஞ்சம் துணுக்குற்றான்.

“சொல்லுங்க அத்த...”.

“இதுவரைக்கும் நடந்த எதைப்பத்தியும் நான் பேசலை. ஆனா இப்போ நடக்கறது... ஒரே ஒரு விஷயம்தான்... உங்களுக்கு என் பொண்ணோட வாழ வேண்டாம்ன்னா, அவகிட்டே அதைப்பத்தி தெளிவா பேசி முடிச்சுடுங்க.

“வேணும்ன்னா... அதில் உறுதியா இருந்தீங்கன்னா, அவளை இப்படி காயப்படுத்தாதீங்க. என் பொண்ணை நீங்க கொஞ்சிகிட்டே இருக்கணும்னு நான் சொல்ல வரலை... உங்க பொண்டாட்டின்னு வர்றப்போ உங்களுக்கு உரிமை இருக்குதான், அதையும் நான் மறுக்கலை.

“ஆனா, அவ இப்படி காயப்பட்டு அழுதுட்டு வர்றதைப் பார்க்கற சக்தி எனக்குமே இல்ல மாப்ள. அவங்க அப்பா இன்னைக்கு இன்னும் வீட்டுக்கு வரலை, வர கொஞ்சம் லேட் ஆகும், நீலாங்கரைக்கு ஏதோ வேலை விஷயமா போறேன்னு சொல்லிட்டு போனார்” சொன்னவர், அவனது பதிலைக் கூட எதிர்பாராமல் வைத்துவிட, அப்படியே அமர்ந்துவிட்டான்.

‘அவளோட வாழ வேண்டாம்ன்னா இப்படி தவம் இருக்கேன்?’ எண்ணியவன் கொஞ்சம் சோர்ந்து போனான்.

‘அப்போ எதுக்குடா அவளை கஷ்டப்படுத்தற?’ மனசாட்சி அவனிடம் கேள்வி கேட்க, அதற்கு மேலே அவனால் அங்கே இருக்க முடியவில்லை.

‘அதான் அவ அப்பன் அவ வீட்ல இல்லையே, வர நேரமாகும்னு வேற சொல்றாங்க, போய்ட்டு வந்தா என்ன?’ எண்ணியவன் அதற்கு மேலே அங்கே தாமதிக்கவில்லை.

தன் காரைக் கிளப்பியவன், அடுத்த கால்மணி நேரத்தில் அவள் வீட்டின் தெருவில் நிற்க, அவர்கள் வீட்டு கேட் கதவும், வாசல் கதவும் திறந்திருப்பது அவனுக்குத் தெரிந்தது.

‘இதென்ன இப்படி திறந்தே வச்சிருக்காங்க? நான் வருவேன்னா?’ எண்ணியவன் தன் காரை மெதுவாக, தயக்கமாக காம்பவுண்டுக்குள் நுழைத்து, வீட்டின் முன்னால் நிறுத்தியவன், காரில் இருந்து இறங்கினான்.

‘உள்ளே செல்வதா? எப்படி? பார்வதியை எங்கே?’ என எண்ணமிட்டவாறே அவன் தயங்கி நிற்க, பார்வதி வேகமாக வெளியே வந்தார்.

“வாங்க மாப்ள...” அவர் முகத்தில் வருத்தத்தையும் மீறிய ஒரு மலர்ச்சி தெரிய, தயக்கமாக அவரைப் பார்த்தான்.

“சாரி அத்த நான்...” என்னவென விளக்கம் கொடுக்கவென அவன் தடுமாற,

“எனக்கு எந்த விளக்கமும் வேண்டாம் மாப்ள, நீங்க வந்ததே எனக்குப் போதும்” சொன்னவர், ‘மீதியை என் மகளிடம் பேசு...’ என்பதுபோல் அவனைப் பார்க்க, அவர் முன்னால் செல்லவே, அவர் பின்னால் சென்றான்.

“டிபன் எடுக்கவா மாப்ள? சாப்பிடுங்களேன்...” அவர் சொல்ல, மறுப்பாக தலை அசைத்தான்.
 

Infaa

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 7, 2022
Messages
878
உள்ளுக்குள் மனம் தென்றலைக் காண துடித்துக் கொண்டிருக்க, மற்றவை எல்லாம் அவனுக்கு வேண்டவே வேண்டாம் என்னும் நிலைதான்.

“அவ ரூம்லதான் இருக்கா... வாங்க...” இதுவரைக்கும் அவன் அவளது அறைக்குச் சென்றதில்லை என்பதால் அழைத்துச் சென்றார்.

அறைக்கதவைத் திறந்துகொண்டு உள்ளே செல்ல, அறையோ அரை வெளிச்சத்தில் ஒளிர்ந்து கொண்டிருக்க, படுக்கையில் படுத்திருந்த தென்றல், அரை உறக்கத்தில் இருப்பது தெரிந்தது.

கூடவே அவள் தூக்கத்திலும் மெல்லியதாக விசும்ப, சற்று திடுக்கிட்டுத்தான் போனான்.

“அழறாளா?” தன்னை மீறி அவன் கேட்டிருக்க,

“நாம சமாதானப்படுத்தற வரைக்கும், அவ சமாதானம் ஆகற வரைக்கும் இப்படித்தான் விசும்பிகிட்டே இருப்பா. நீங்க பாருங்க...” சொன்னவர், அவனுக்கு தனிமை கொடுத்து, கதவை சாற்றிவிட்டு வெளியேறினார்.

அவர் செல்லவே, வேகமாக அவளை நெருங்கியவன், தனக்கு முதுகுகாட்டி படுத்திருந்த அவளை நெருங்கி, அவள் அருகே அமர்ந்தான்.

“ம்... ம்...” அவள் உறக்கத்திலேயே, மூக்கை உறிந்து விசும்ப, “ஷ்... ஷ்... மோனா...” அழைத்தவன், அவளைத் தன் பக்கம் திருப்பி, அவளது முதுகில் கைபோட்டு அள்ளி, தன் நெஞ்சோடு மென்மையாக அணைத்துக் கொண்டான்.

சில நொடிகள் அவன் அப்படியே இருக்க, அவள் அமைதியாக இருக்கவே, அவனும் அப்படியே அமர்ந்திருந்தான். சில நொடிகளில் மீண்டுமாக அவள் தேம்ப,

“ஹப்பா... அநியாயம் பண்றடி மோனா... சாரி... சாரி... இனிமேல் உன்னைத் திட்ட மாட்டேன்... இப்படி அழாத... ஷ்... ஷ்...” அவன் பேச்சும், குரலும், அருகாமையும் அவளை எட்டியதோ என்னவோ, அவன் கழுத்தில் உரசி, அவனோடு இன்னுமே ஒட்டிக்கொள்ள, தானும் அவளை இறுக அணைத்துக் கொண்டான்.

சில பல நிமிடங்கள் கடக்க, அடிக்கடி தேம்பியவளின் தேம்பல், இடைவெளிகள் அதிகரித்து, சற்று நேரத்தில் நின்றுவிட, அதன் பிறகே சற்று நிம்மதியானான்.

“இப்படியா அழுவ மோனா? உன்னை திட்டவே கூடாதாமா?” அவள் அழுகை நின்றுவிட்டது என அவன் பேச, அவளோ தேம்பி அவனை சோதித்தாள்.

“தூக்கத்தில கூட நான் திட்டுனா தெரியுமா? அப்போ கொஞ்சினா?” தன் கைகளுக்குள் இருப்பவள், தன் மனைவி என்ற உரிமை அவனுக்குள் திடுமென சிறு அனலைப் பரப்ப, அவள் கன்னத்தில் அழுத்தமாக முத்தம் வைத்தான்.

“நான் வந்துட்டு போனது எப்படி உனக்குத் தெரியும்?” கேட்டவன், அவள் கன்னத்தை பதம் பார்க்கப் போனவன், நிமிடத்தில் தெளிந்தான்.

கரங்களோ அவளை அத்தனை ஆதூரமாக, சிறு ஆசையாக, பெரும் ஏக்கமாக தொட்டு உணரத்துவங்கி இருக்க, ‘அவ தூக்கத்தில் இருக்காடா, அவளை விடு...’ மனம் குரல்கொடுக்க, கணவனோ அவளோடு அந்த போர்வைக்குள் புகுந்துகொள்ள தவித்தான்.

போர்வைக்குள் மட்டுமா? அவள் கழுத்தில் முகம் புதைத்து இதழ் பதித்தவன், அதற்கு மேலே முடியாமல், அவளைப் படுக்கையில் சரித்து, அவள் தேகத்தில் தன் இதழ்களை இறக்க, அவளை உலுக்கி எழுப்பி, தன் இத்தனை வருட தவத்தை கலைத்துவிடும் வேட்கை அவனிடம்.

இருக்கும் சூழலும், இடமும் அவனை வெகுவாகத் தேக்கினாலும், அவனுக்குள் உறைந்துபோயிருந்த கணவனோ, தன்னவளை உணர்ந்துகொள்ள தவித்தான்.

“ஏய்... மோனா... சத்தியமா முடியலடி...” அவள் காதுக்குள் முனகியவன், அவள் கன்னத்தில் முத்தமிட்டு, கழுத்தை கவ்வி சுவைத்து, அவள் தேகத்தில் மெதுவாக இறங்கி, அவள் வாசனையை நுகர்ந்து கிறங்க, அவள் தேகம் சிலிர்ப்பது அவனுக்குத் தெரிந்தது.

“என்னங்க...” கொஞ்சமாக உறக்கம் கலைய, அவள் முனக,

“மோனா...” அவள் தேகத்தில் தன் மூக்கை உரசி, அவள் அழகிடங்களில் மெல்லிய முத்தம் பதித்து, கவ்வி இழுத்து சுவைக்கப் போராட, அதற்கு மேலே அங்கே இருந்தால், அவளைக் கொள்ளை கொள்ளாமல் விலக மாட்டோம் எனப் புரிய, அவளை அவசர முத்தமிட்டவன், அவளை விட்டு விலகி அமர்ந்தான்.

“மோனா...” அவளை அழைத்தவன், கணவனாக அவள் காதுக்குள் அனல் மூச்சுவிட்டு, தன் தேவையை வெளிப்படையாகவே சொல்லி, திணறித் தவிக்க, தென்றலின் உறக்கம் கொஞ்சம் கலைந்தது. நேரமாவதை உணர்ந்து, பரமேஸ்வரன் வந்துவிட்டால் பெரிய பிரச்சனையாகும் என புத்தி இடித்துரைக்க, மனமே இன்றி விலகினான்.

அவள் கண் விழிக்கும் முன்பே, சட்டென விலகி எழுந்தவன், “நல்லா தூங்கு, எதையும் நினைக்காதே... ஐ லவ் யூ மோனா...” சொன்னவன், அவள் இதழில் முத்தமிட்டு அங்கிருந்து வெளியேறினான்.

“பார்த்துக்கோங்க அத்த...” அவர் முகம் பார்க்க முடியாமல் தடுமாறி, அவன் விலகிச் செல்ல, அவன் மனநிலை அவருக்குப் புரிந்தது.

தென்றலுக்கோ, அவனது அருகாமை, பேச்சு, ஸ்பரிசம் அனைத்தும் நனவா? கனவா? எனப் புரியாத குழப்பத்தில் உறக்கத்துக்கும் விழிப்புக்கும் நடுவே ஊசலாடியவள், அவள் உண்ட தூக்க மாத்திரையின் விளைவால் ஆழ்ந்த உறக்கத்தில் அமிழ்ந்தாள்.

காலையில் சற்று சோம்பலாக கண் விழித்தவளை, திடுமென அவன் நினைவும், ஸ்பரிசமும் ஆக்கிரமிக்க, தன் அறையில் இருந்த கண்ணாடியின் முன்னால் சென்று நின்றாள்.

தன் கன்னத்தை ஆராய்ந்தவள், அங்கே தன்னவனின் முத்திரையின் தடம் இல்லாமல் போக, ‘நான் கனவு தான் கண்டேனா? ஆனா அது நனவு மாதிரி அத்தனை தத்ரூபமா இருந்ததே’ எண்ணியவள், சற்று சோர்ந்து போனாள்.

அவனது குரலும், அந்தரங்க பேச்சும் கூட நினைவுக்கு வர, அவள் தேகம் சூடேறியது.

அறைக்கு வெளியே வந்து, தாயிடம் டீயை வாங்கிக் குடித்தவள், ‘அவங்க வந்தாங்களாம்மா?’ கேட்க நினைத்ததை அப்படியே நிறுத்திக் கொண்டாள்.

‘அவர் எப்படி இங்கே வருவார்? வர மாட்டார்...’ தனக்குத் தானே சொல்லிக் கொண்டவள், எழுந்து குளிக்கச் செல்ல, தன் மகளின் முகம் தெளிவின்றி இருப்பதைப் பார்த்து கவலையானார்.

‘ஒரு வேளை தூக்கத்தில் தெரியலையோ? சரி நாமளே சொல்லலாம்... அவ வரட்டும்...’ எண்ணியவர் தன் சமையலைத் தொடர்ந்தார்.

குளிக்கப் போனவளோ, உடைகளைக் களைந்துவிட்டு, கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்த்தவள், முழுதாக அதிர்ந்து, பிறகு தெளிந்தவளின் முகத்தில் ஒரு வெட்கப் புன்னகையும், நிம்மதியும், கோடி சந்தோஷமும் ஒருங்கே பூத்தது.

‘அவங்கதான்... வந்தது நிஜம்தான்...’ அவன் தன்னைத் தேடி வந்தது அப்படி ஒரு நிம்மதியைக் கொடுத்தது. அது அவன்மீதான அத்தனை மனத்தாங்கலையும் அகற்றிவிட, அவளுக்கு அது மட்டுமே போதுமானதாக இருந்தது.

தன் தேகத்தில் ஆங்காங்கே சிவப்பு வர்ண வட்டங்கள் பதிந்திருக்க, அது எப்படி வந்திருக்கும் எனக் கண்டுகொண்டவளுக்கு தேகத்தில் மெல்லிய அலையடிக்கும் உணர்வு.

அதைவிட, அந்த நேரம் அவன் மனநிலை என்னவாக இருந்திருக்கும் என யோசிக்க, அவன் குரல் திடுமென காதுக்குள் ஒலிக்கும் உணர்வு. அவன் சொன்ன வார்த்தைகளும், அவனது அனல் மூச்சும் காதைச் சுட, அப்படியே நின்றுவிட்டாள்.

அவளுக்குள்ளும் அவனுக்கான தேடல் கொட்டிக் கிடக்க, அவன் தன்னைத் தேடுவதை உணர்கையில், ஒரு கையறு நிலையில் தவிப்பதுபோல் உணர்ந்தாள்.

‘திருமணம் முடித்து கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் நிறைவடையப் போகிறது. இன்னும் அவன் விரதம் காக்கவேண்டும் என என்ன அவசியம் வந்ததாம்? வேறு யாரையாவது அவன் திருமணம் செய்திருந்தால், இப்படி தவித்திருக்க வேண்டி இருக்காது’ என எண்ணுகையிலேயே கண்ணீர் வழிந்தது.

ஒருவாறு தன்னை மீட்டுக் கொண்டவள், குளித்து உடைமாற்றி வெளியே வர, “என்னம்மா டிபன் எடுத்து வைக்கவா?” தாய் அவளிடம் கேட்டார்.

“ம்... ஆமாம்மா... இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரமே கிளம்பணும்...” சொன்னவள், அன்று அலுவலகத்துக்கு சீக்கிரம் வருவதாக அவனுக்கு குறுந்தகவல் ஒன்றை அனுப்பிவிட்டு உண்ண அமர்ந்தாள். அவளது அந்த செய்தியைப் படித்தவனுக்கு, அப்படி ஒரு நிம்மதியாக இருந்தது.

‘என் மோனா என்னை வெறுக்கலை... வெறுக்க மாட்டா’ தனக்குள் சொல்லிக் கொண்டான். கூடவே ஒரு பக்கம் மெல்லிய பயம் எழுந்ததும் உண்மை.

‘என்னை அழ வைக்கறீங்க, நீங்க எனக்கு வேண்டாம்னு அவ சொல்லிட்டா?’ அந்த நினைப்பில் ஆடிப்போய் நின்றிருந்தான் பிரபஞ்சன்.

‘எதா இருந்தாலும் அவகிட்டே பேசிடணும்... அவளுக்கு புரிய வச்சுடணும்’ எண்ணியவன் உண்ண கூடப் பிடிக்காமல் உடனே கிளம்பிவிட்டான்.

அவளுக்கு அருகே வந்து அமர்ந்த பரமேஸ்வரன், “MBA படிக்கறதைப் பத்தி என்ன முடிவு பண்ணி இருக்க?” அவர் அவளிடம் கேட்க,

“படிக்கறேன்... மெட்ராஸ் யூனிவர்சிட்டியில் போஸ்டல்ல இருக்கான்னு பார்க்கறேன்” சொன்னவள் உணவைத் தொடர, அவர் முகமோ விகசித்துப் போனது.

“எனக்குத் தெரியும்மா... நீ என் பொண்ணாச்சே...” அவர் சிலாகிக்க, தென்றல் அதற்கு எந்த பதிலையும் சொல்லவில்லை.

‘தன் வாழ்க்கையை விட, தான் அவருடனே இருப்பதும், அவர் சொல்வதைச் செய்வதும் அவருக்குப் போதுமா?’ எண்ணியவளுக்கு அவளது தகப்பனைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

‘இதைப்பத்தி, மேலே படிக்கப் போறதைப் பற்றி அவர்கிட்டே பேசணும்...’ பிரபஞ்சனின் மனநிலை புரியாமல் எண்ணிக் கொண்டாள். அவன் நினைத்தவாறு அவளால் அவனை வெறுக்க முடியாது. அவன்மேல் பித்தாகிப் போயிருந்தாள். அப்படி இருக்கையில் எப்படி வெறுக்க?

அவனது கோபத்தை தன்னால் கையாள முடியவில்லையே என்ற தவிப்பும், அவன் கோபத்தை எப்படிக் குறைக்க எனத் தெரியாத போராட்டமுமாக அவள் நாளைக் கடத்த, அவன் நேற்று தன்னைப் பார்க்க, தன் வீட்டுப் படியேறி வந்திருக்கிறான் என்ற நினைப்பே அவளுக்குப் போதுமானதாக இருந்தது.

அவன்மேல் இருக்கும் கோபத்தை, வருத்தத்தைக் கூட அவளுக்கு பிடித்து வைக்கத் தெரியவில்லை என்பதுதான் உண்மை.

அவள் அலுவலகத்துக்குச் செல்கையில், பிரபஞ்சன் அவளுக்காக காத்திருந்தான்.

அவள் வரவே, அவளைப் பார்த்தவன், அவளுக்கு தன்மேல் கோபமோ? வெறுப்போ இருக்கிறதா? என்றுதான் பார்த்திருந்தான். அவளது முகம் சாதாரணமாக இருக்கவே, “மேலே போய் பேசிக்கலாம் வா...” அவளை அழைத்துச் செல்ல, சில பல நிமிடங்கள் இருவரும் ஒருவரை மற்றவர் பார்த்தவாறு அப்படியே நின்றுவிட்டார்கள்.

“மோனா...” அவன் எதையோ சொல்ல முயல, அடுத்த நொடி அவன் இதழ்களை அழுத்தமாகப் பூட்டி, அவன் வார்த்தைகளை அவள் விழுங்கி இருந்தாள். அவன் எதை எதிர்பார்த்தாலும், இப்படி ஒரு செய்கையை அவளிடமிருந்து அவன் எதிர்பார்க்கவே இல்லை.

நேற்றைப்போல் கோபப்படுவாள், திட்டுவாள், அழுவாள், இல்லையா என்னை விட்டு விலகிச் செல்லப் போவதாக சொல்லப் போகிறாள் என அவன் பயந்திருக்க, அவளுக்கு தன்மேல் அத்தனை காதல் என்று அவளது இந்த ஒற்றை முத்தம் சொன்னது.

அப்படி அழ வைத்த என்னை இவ மன்னிச்சுட்டாளா? என்மேலே கோபம் இல்லையா? வருத்தம் இல்லையா?’ அவனுக்குள் அந்த நினைப்பே என்னவோ செய்தது.

‘சின்னப் பிள்ளைடா அவ, நம்ம நைனி கூட பிழைச்சுப்பா, இவளை தனியே விட்டா தாங்கவே மாட்டா’ அக்கா சொன்ன வார்த்தைகள் காதில் எதிரொலிக்க, இவளை இனி அழவே விடக் கூடாது என முடிவெடுத்தான்.

அழுத்தமாக ஒட்டவைத்த இதழ்களைப் பிரிக்காமல் அவள் நிற்க, அவள் இடையை வளைத்தவன், அவள் செய்கைக்கு கட்டுப்பட்டு அப்படியே இருந்தான்.

அவள் கொஞ்சம் விலக, “நான்...” அவன் பேச முயல, மீண்டுமாக அவன் இதழ்களில் அழுத்தமாக முத்தமிட்டாள்.

“நான் மோனான்னு இப்போதான் தெரிஞ்சதா?” அவன் இதழ்களை உரசியவாறே, கலங்கிய குரலில் அவள் கேட்க, இப்பொழுது அவள் இதழ்கள் அவனுக்குச் சொந்தமாகி இருந்தது.

“இப்போமட்டும் உனக்கு என்னோட தனியா இருக்க தைரியம் வந்ததா?” கேட்டவன், அவள் இதழ்களை அத்தனையாக இம்சித்து தண்டிக்க, அவனுக்கு தன் இதழ்களை விட்டுக் கொடுத்தவள், அவனோடு ஒட்டிக் கொண்டாள்.

சிலபல நிமிடங்கள் கடக்க அவன் வேகம் தணியவே, “அந்த பயம் உங்களைப்பத்தி இல்லை... என்னைப்பத்தியே எனக்கு பயம்” சொன்னவள் அவனைவிட்டு விலக முயல, அதற்கு அவன் அனுமதிக்கவில்லை.

“என்னன்னு சொல்லு...” ‘நீ சொல்லித்தான் ஆகவேண்டும்’ என அவன் நிற்க, அவன் கண்களை ஏறிடத் தடுமாறினாள்.

“நீங்க என்னைத் தேடினதை விட, நான் உங்களை அதிகமா தேடினேன். வெக்கத்தை விட்டு சொல்றதுன்னா, எனக்கு உங்களோட இருக்கணும்னு ஆசையா இருந்தது. ஆசைன்னா...” எங்கே அவன் தன்னைத் தவறாக நினைப்பானோ என அவள் தடுமாற,

“எனக்குப் புரியுது மோனா... அதை விடு...” அவள் கஷ்டப்படுவது பிடிக்காமல் வேகமாகச் சொன்னான்.

“நாம தனியா இருந்தா, உங்களை நான் டெம்ப்ட் பண்ற அளவுக்கு பிஹேவ் பண்ணிடுவேன்னு எனக்கே பயம். அதாவது... எனக்கு உங்களை அவ்வளவு புடிக்கும், ஏன் புடிக்கும்? எதுக்கு புடிக்கும்னு காரணம் கேட்டீங்கன்னா எனக்கு சொல்லத் தெரியாது, அவ்வளவு பிடிக்கும்.

“பிறகு ஏன் இப்படி விலகி இருந்தன்னு நீங்க கேட்கலாம். எங்க அப்பா எனக்கு ஒன்னை செய்யறேன்னு சொன்னாங்கன்னா, அதைக் கண்டிப்பா செய்வாங்க. உங்களோட தனியா இருக்க கூடாது, செய்யக் கூடாதுன்னு சொன்னார்.

“அப்படி அவங்க செய்யாதேன்னு சொன்னதை நான் செஞ்சா, அந்த கோபத்தில், உங்களை மறுத்துடுவாங்களோன்னு எனக்கு பயம். அதனால்தான் அப்படியெல்லாம்...” அவள் சொல்லிவிட்டு அழ, அவளது ஏமாற்றம் கண்ணீராய் வழிந்தது.

“எங்க அப்பாவுக்கு ஏன் உங்களை இந்த அளவுக்கு பிடிக்காம போச்சுன்னு எனக்குத் தெரியலை... இந்த அஞ்சு வருஷமா, உங்களை மனசுக்குள் சுமந்துட்டு கஷ்டம் மட்டும்தான் படறேன்...

“அன்னைக்கு பட்டுவை அங்கே இருக்க சொன்னதுக்கு கூட அதுதான் காரணம். மத்தபடி... நீங்க நினைக்கற மாதிரி இல்லை. அம்மா அப்பா விளையாட்டு சொல்லித் தரேன்னு சொன்னீங்களே...

“சொல்லித் தர்றீங்களா? நீங்க கத்துக்கொடுக்க நினைச்சப்போ, நான் பயத்தில் சரியா கவனிக்கலை...” சொன்னவள், அவனை வேகமாகத் தள்ளிவிட்டு, கண்ணீர் வழிய அங்கிருந்து செல்ல, தன்னுடன் அவள் வாழ விரும்புவதை இதற்கு மேலே வெளிப்படையாகச் சொல்ல முடியாது என அவனுக்குப் புரிந்தது.

பேசித் தெளிய, மன்னிப்பு வேண்ட, சமாதானப்படுத்த என எத்தனையோ இருக்க, அவள் அதையெல்லாம் கடந்து தன்னோடு வாழ வேண்டும் எனச் சொன்னதே அவனுக்கு அவளை உணர்த்த, அவளுக்கு தன்மேல் கோபம் இல்லை என புரிய வைக்க, எப்படி உணர்ந்தான் என்றே சொல்வதற்கு இல்லை.

அவள் அப்படி வெளிப்படையாக தன்னோடு வாழ விரும்புவதைச் சொல்லிச் சென்றிருக்க, ‘சொல்லிட்டு ஏன் போய்ட்டா? இப்போவே இங்கேயே’ எண்ணியவனால் அதற்கு மேலே அங்கே நிற்க முடியவில்லை.
தென்றல் வீசும்...
 

ஆனந்த ஜோதி

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Feb 14, 2022
Messages
137
அருமையான எபி,

அக்காவும், மாமியாரும் பேசிய இடம் சூப்பர்.

ஒரு வழியா ரெண்டும் தெளிஞ்சிடுச்சு.

ஓடிப் போய் அவளை இழுத்துட்டு வந்து குடும்பம் நடத்துற வழியைப் பாரு பிரபஞ்சா.

வெயிட்டிங்....
 

Kothai Suresh

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
113
அப்பாடா, அக்காவும், மாமியாரும் புண்ணியம் கட்டிண்டாங்க, இரண்டும் ஓரளவுக்கு தெளிஞ்சிருக்கு, இதே வேகத்தோட குடும்பம் நடத்த ஆரம்பிங்கடா, திரும்ப அந்த லூசு அப்பன் ஏதாவது பண்ணப் போறான்
 

Infaa

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 7, 2022
Messages
878
அருமையான எபி,

அக்காவும், மாமியாரும் பேசிய இடம் சூப்பர்.

ஒரு வழியா ரெண்டும் தெளிஞ்சிடுச்சு.

ஓடிப் போய் அவளை இழுத்துட்டு வந்து குடும்பம் நடத்துற வழியைப் பாரு பிரபஞ்சா.

வெயிட்டிங்....

அவன் அதைச் செய்ய தேவையே இல்லை. தென்றலே அவனைத் தேடி வருவாள்.

நன்றி!
 
Top