• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அ.. ஆ.. -14

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,333
546
113
Tirupur
அ.. ஆ.. - 14

“அம்மு என்ன செஞ்சிருக்க நீ? அந்த பொண்ணு ரொம்ப நல்லவன்னு சொல்றாங்க..?” என்ற மஞ்சரியைப் பார்த்து,

“ம்மா இது என்னோட வேலை… இதுல நீங்க தலையிடக்கூடாது… அவங்க நல்லவங்களோ கெட்டவங்களோ, அது எனக்கு பிரச்சனை கிடையாது. கம்ப்ளைன்ட் அவங்க மேல தான் இருக்கு.. அப்போ அவங்களைத்தான் அரெஸ்ட் பண்ண முடியும்.. அந்த இடத்துல நீங்க இருந்திருந்தாலும் அதைத்தான் செய்திருப்பேன்.. ப்ளீஸ்ம்மா.. இனி இதுல நீங்க தலையிடாதீங்க..” என கோபமாக பேச,

“அம்மு… அது இல்லடா… நான் என்ன சொல்ல வரேன்னு புரியாம பேசாதே..” என்ற மஞ்சரியிடம்,

“போதும்மா.. என் பதவியை இவங்கள பழிவாங்க பயன்படுத்துவேன்னு நினைக்கிறீங்களா?” என்று அழுத்தமாக கேட்க,

‘இல்லை’ என்ற தலையசைப்பை மஞ்சரி தர,

“தேங்க்ஸ் இந்த அளவுக்கு என் மேல நம்பிக்கை இருக்கே..” என்றவள், நவீனிடம் திரும்பி “அண்ணா இந்த ஊர் நாட்டாமை, பெரியாளுங்க இருப்பாங்கல்ல, அவங்கள உடனே அந்த சத்திரத்தில அசெம்பிள் பண்ணுங்க. டென் மினிட்ஸ் போதுமா..? எனக்கு 11:30 க்கு மீட்டிங் இருக்கு..” என அவசரமா கேட்க,

“எல்லாம் இங்கதான் வெட்டியா சுத்திட்டு இருப்பானுங்க.. இரு நான் சொல்லிட்டு வரேன்..” என நவீன் செல்ல, குமரனும் பின்னே செல்ல,

தன்னையே பார்த்திருந்த கவிதாவிடம் “பெரியம்மா சீக்கிரம் சாப்பாட்டை கொடுங்க..” என அவசரப்படுத்த, அவரும் உடனே புரிந்துக் கொண்டு வந்து கொடுக்க, “தேங்க்ஸ்..” சொன்னவள் “பெரிம்மா கண்ணன் அங்கிளுக்கும், அந்த போலீஸ் கான்ஸ்டபிள்ஸ் ரெண்டு பேருக்கும், காப்பி கொடுத்துடுங்க..” என சொல்லி வேகமாக சாப்பிட்டாள்.

சாப்பிட்டு முடித்ததும், காயத்ரியிடம் “அக்கா இனி எனக்கு இங்க வர டைம் இருக்காது.. நீங்க அம்மா கூட அங்க வந்துடுங்க.. பாத்துக்கலாம்! எல்லாரையும் கூட்டிட்டு வாங்க..” என வேகமாக கூறிவிட்டு, அவசரமாக தன் காரில் ஏறி இருந்தாள்.

பக்கத்து வீட்டில் சரஸ்வதியின் சத்தம் வீதிக்கே கேட்டது. கூடவே மைதிலி ரவியிடம் ஏதோ சண்டை போடுவதும் கேட்டது. அது அனைத்தும் காதில் விழுந்தாலும் கண்டு கொள்ளாமல் கிளம்பியிருந்தாள் அகானா.

“என்ன மஞ்சு இப்படி?” என்ற கவிதாவிடம்,

“இப்ப என்ன உங்களுக்கு? பாப்பா என்ன செஞ்சாலும் சரிதான்! இரண்டு பேரும் குழம்பாமல் போய், இத்தனை நாள் விட்ட கதையை பேசுங்க..” என இருவரையும் அதட்டிவிட்டு சத்திரத்தை நோக்கி ஓடினாள் காயத்ரி.

‘கலெக்டர் வர சொல்லி இருக்கிறார்’ என்றதுமே, ஊராட்கள் அனைவருமே அங்கு கூட, அதற்குள் அங்கு ஓரளவிற்கு அகானாவைப் பற்றி தெரிந்திட, ‘ஓ நம்ம ரவியோட பொண்ணா? பரவாயில்லை இந்த மஞ்சு பொண்ணு புள்ளய நல்லாத்தான் வளர்த்துருக்கு’ என ஒவ்வொருவரும் ஒவ்வொன்றாக பேசிக் கொண்டனர்.

நிதானமான நடையுடன் அங்கு வந்தவள் அனைவருக்கும் பொதுவாக ஒரு வணக்கத்தை வைத்துவிட்டு, “நான்தான் இந்த மாவட்ட கலெக்டர். நிறைய பேருக்கு தெரிந்திருக்கும்..” என நிறுத்தி, நவீனின் அருகில் நின்ற பெண்ணை பார்க்க, அவளும் அகானாவை பார்த்தாள்.

நவீனோடு உரிமையாக நிற்பதை பார்த்தே, அதுதான் தாரணி என புரிந்து கொண்டாள். அதனால் அவளை பார்த்து புன்னகைக்க, தாரணியும் புன்னகைத்தாள்.

பின் கூட்டத்தைப் பார்த்து “நான் இப்போது எதுக்கு இந்த கூட்டத்தை கூட்டிருக்கேன்னு தெரியுமா? உங்க ஊரில் இருக்கும் குறைகளை கேட்பதற்காக? உங்களோட குறைகளை சொன்னால், என்னால் முடிந்தவரை சீக்கிரமே சரி செய்ய முயற்சி எடுப்பேன்..” என்று மீண்டும் தாரணியை பார்க்க அவளோ நவீனை பார்த்துவிட்டு, அகானாவிடம் வந்து நின்றாள்.

“ஏய் தாரு என்ன பண்ற..?” என மகள் என்ன செய்ய போகிறாள் என்பதை உணர்ந்து, தாரிணியின் அப்பா வந்து இடையில் நிற்க, அதற்குள் அந்த காவலர்கள் இருவரும் தாரிணியின் தந்தையை பிடித்து தனியாக நிறுத்திவிட்டனர்.

“என்ன பிரச்சினை? எதுக்கு அவங்களை சொல்லவிடாம தடுக்குறீங்க? அப்போ அவங்க சொல்ல போற பிரச்சினைக்கும் உங்களுக்கும் சம்மந்தம் இருக்கா?” என அழுத்தமாக அகானா கேட்க,

“இல்ல.. இல்ல அது என் பொண்ணோட வாழ்க்கை தான் எனக்கு முக்கியம். அவ சொல்றது எதையும் நம்பாதீங்க..” என அவர் பதட்டமாக கூற,

“நம்புறதும் நம்பாம போறதும் அவங்க சொல்ற நியூசைப் பொறுத்து..” என்ற அகானா ‘சொல்’ என்பது போல் தாரணியைப் பார்த்தாள்.

“என் பெயர் தாரணி மேடம்.. இங்க இருக்கிற ஸ்கூல்ல டீச்சர். இந்த ஊர்ல சட்டவிரோதமா மது விற்பனை நடக்குது. டாஸ்மார்க்ல குறைஞ்ச விலைக்கு, வாங்கிட்டு வந்து இங்கு அதிக விலைக்கு விக்கிறதும் இல்லாம, படிக்கிற பசங்களுக்கும் கொடுக்குறாங்க. அது மட்டும் இல்லாம கஞ்சாவும் பழக்கி விடுறாங்க. இதனால பசங்க யாரும் ஸ்கூலுக்கு வர்றது இல்ல. குடிச்சிட்டு ரோட்டில் விழுந்து கிடக்குறாங்க. இதை பத்தி நான் பல தடவை பெட்டிஷன் போட்டுட்டேன்.. யாரும் இதுவரை வந்து விசாரித்தது கூட இல்லை..” என படபடவென்று பேச, ஊரில் உள்ள ஆண்கள் அனைவரும் அகானாவையே அதிர்வுடன் பார்த்திருந்தனர்.

தாரணியின் பேச்சை பொறுமையாக கேட்டு கொண்ட அகானா, தனக்கு பின்னே நின்ற கண்ணனை பார்த்து, “இந்த ஊர் எந்த போலீஸ் ஸ்டேஷன் கண்ட்ரோல்ல வருது..” என முடிக்கு முன்னே, அகானாவின் காவலுக்கு வந்த இரண்டு காவலர்களில் ஒருவர், “எங்க ஸ்டேஷன் தான் மேம்..” என ஊர் பெயரை சொல்ல,

“ஓ..” என்றவள் “அந்த இன்ஸ்பெக்டரை உடனே இங்க வர சொல்லுங்க.. டென் மினிட்ஸ்ல இருக்கணும்..” என்று விட்டு கூட்டத்தை பார்க்க,

“படிக்கும்போதே பாதியில் நிறுத்தி கல்யாணம் பண்ணி வச்சிடுறாங்க மேடம்.. எனக்கு உங்களை மாதிரி கலெக்டராக ஆசை.. ஆனா எனக்கு இன்னும் ரெண்டு நாள்ல கல்யாணம்..” என ஒரு சிறு பெண் அழுது கொண்டே பேச,

“ஏய் வாய மூடு! கழுதை!” என ஒரு பெண்மணி அந்த சிறு பெண்ணை அடக்குவது தெரிந்தது.

அதை கவனித்து அங்கிருந்த காவலரை அகானா ஒரு பார்வை பார்க்க, அதை உணர்ந்தவர் “ஏன்மா என்ன பண்ற? அமைதியா இந்த பொண்ணை பேச விடுறியா? இல்ல குழந்தை திருமணம் பண்ணி வைக்க முயற்சி பண்றேன்னு, கேஸ் போட்டு உள்ள வைக்கவா..?” என மிரட்ட கப்சிப் என்று ஆகிவிட்டது அந்த இடம்.

இப்போது அந்தப் பெண்ணை தன்னிடம் அழைத்த அகானாவும் “பேர் என்ன? என்ன படிக்கிறீங்க.?” என பொறுமையாக கேட்க,

“என் பேர் துர்கா, பதினொண்ணாவது படிக்கிறேன், தாரணி மிஸ் தான் எங்க கிளாஸ் டீச்சர்..” என தாரணியை காட்ட,

“ஓ அப்போ உங்க தாரணி மிஸ் கிட்ட சொல்லி இருக்கலாமே! அவங்க தான் சிங்கப்பெண்ணாச்சே..!” என்றதும் நவீனுக்கும், குமரனுக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை.

அகானாவின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த தாரணி, அவளின் கடைசி வார்த்தையில், வேகமாக திரும்பி நவீனை பார்க்க, அவனோ சிரிப்பை அடக்குவதைப் பார்த்து, தன்னை பற்றி அனைத்தையும் அவளிடம் சொல்லி விட்டான் எனப் புரிந்து, நவீனை முறைத்து பார்த்து பல்லைக் கடித்தாள்.

“தாரணி மிஸ் கிட்ட தான் முதல்ல சொன்னேன்.. அவங்க எங்க வீட்டுல வந்து சண்டை கூட போட்டாங்க.. ஆனா எங்க அப்பா அதெல்லாம் கேட்க மாட்டார்.. எங்க மாமாவுக்கு வயசு ஆகுதாம். அதனால என்னை அவருக்கு கல்யாணம் பண்ணி வச்சே ஆகணும்னு முடிவா சொல்லிட்டாரு..” என கவலையாக கூற,

“ஓ.. நீ நல்லா படிப்பியா?” என்ற அகானாவிடம்,

“ரொம்ப நல்லா படிப்பேன்.. தாரணி மிஸ் தான் எனக்கு எல்லாமே சொல்லிக் கொடுப்பாங்க.. பாவம் என்னால அவங்களுக்கும் கஷ்டம்..” என்றதும்,

“சரி நீ படிக்க நான் ஹெல்ப் பண்றேன்… நீ எனக்கு என்ன பண்ணுவ..” என பேரம் பேச,

“நிஜமாவா? நான் படிக்கலாமா? கல்யாணம் இல்லையா? கல்யாணம் பண்ணிட்டு படின்னு சொல்ல மாட்டீங்கல்ல? உங்களுக்கு என்ன வேணும் சொல்லுங்க..? நான் கண்டிப்பா செய்வேன்..” என மகிழ்ச்சியில் பரபரப்பாக பேசினாள் அந்த பெண்.

“எனக்கா? எனக்கு என்ன வேணும்னா ப்ளஸ்டூல நீங்க ஸ்கூல் ஃபர்ஸ்ட் வந்தா போதும்..” என அகானா நிறுத்த,

“அவ்வளவுதானா? நான் டிஸ்ட்ரிக்ட் ஃபஸ்டே வாங்கிடுவேன்.” என சந்தோசமாக சொன்ன அந்த பெண்ணை அனைத்து,

“ஓகே… இனி உன் கவனம் படிப்புல மட்டும்தான் இருக்கணும் ரைட்.” என தோள் தட்டி கூற,

“நன்றி.. நன்றி மேடம்.. நான் நிஜமாகவே டிஸ்ட்ரிக்ட் ஃபர்ஸ்ட் வந்து காட்டுவேன்..” என்றவள், அங்கிருந்து ஓடி வந்து தாரணியைக் கட்டிக் கொண்டாள்.

பின் அந்த சிறு பெண்ணின் தந்தையிடம் “சைல்ட் மேரேஜ் எவ்வளவு பெரிய குற்றம் தெரியுமா? ஜெயிலுக்கு போக ஆசையா உங்களுக்கு.?” என்றவள் “உங்க பொண்ணை தொந்தரவு பண்ணாம படிக்க விட்டா, அவ இங்க இருக்குற ஸ்கூல்ல படிப்பா.. இல்ல கல்யாணம் பண்ணனும்னு அவளை டார்ச்சர் பண்ணா, சென்னையில ஹாஸ்டல்ல படிப்பா.. எது உங்க முடிவுன்னு நாளைக்கு தாரணி டீச்சர் கிட்ட சொல்லுங்க.. இல்ல எங்களுக்கு தெரியாம கல்யாணம் முடிக்கணும்னு நினைச்சா, இவ்வளவு பொறுமையா எல்லாம் பேச மாட்டேன் புரியுதா.?” என அழுத்தமாக பேச, அந்த மனிதருக்கு பேச்சே வரவில்லை.

அதற்குள் இன்ஸ்பெக்டர் வந்துவிட, கலெக்டரை பார்த்ததும் சல்யூட் வைத்துவிட்டு, “வரச் சொன்னிங்கன்னு சொன்னாங்க மேடம்..” என்றார் படபடப்புடன்.

“எஸ் இன்ஸ்பெக்டர் உதய்..” என்றவள், தாரணியின் பெட்டிசன் பற்றி கூற, வெல வெலத்து போனார் இன்ஸ்பெக்டர்.

“என்ன பண்ணலாம் இன்ஸ்பெக்டர்.? என்றவள், “இப்ப இந்த செகன்ட், இங்கே எல்லாம் கிளியர் ஆகணும்.. முடிச்சுட்டு என்னை ஆபீஸ்ல வந்து பாருங்க..” என்றதோடு, கூட்டத்தை பார்த்து “உங்களுக்கு என்ன தேவை என்றாலும், மிஸ் தாரணிகிட்ட சொல்லிடுங்க, அவங்க உடனே எனக்கு பெட்டிஷன் போட்டுடுவாங்க.. நானும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் விசாரிச்சு சரி செய்ய பார்க்கிறேன். இப்போ எனக்கு ஒரு மீட்டிங் இருக்கு.. இன்னொரு நாள் பார்க்கலாம்..” எனக் கிளம்பிவிட விட, தாரணி தான் “பேவேன” விழித்திருந்தாள்.

தன் காரில் ஏறியதுமே கண்ணன்தான் “பாப்பா டாக்டர் போன் பண்ணிட்டே இருக்கார். உங்ககிட்ட உடனே பேசனுமாம்.. என்ன சொல்ல.?” என அவர் தயக்கமாக கேட்க,

“டாக்டரா..?” என வாய்விட்டே கேட்க,

“டாக்டர் தம்பி… ஆகன் டாக்டர்..” என அவர் இழுக்க,

“ஓ.. நான் சொல்றேன் அங்கிள்.. இப்போ கமிஸ்னர் ஆஃபிஸ் போங்க. எப்படியும் எல்லாரும் அங்கதான் இருப்பாங்க..” என முடித்தவள், அடுத்த வேலைகளைப் பற்றி பேச ஆரம்பித்தாள்.

அதே நேரம் ஆரியனிடமிருந்து அகானாவிற்கு போன் வர, அப்போது அவள் முகத்தில் வந்து போன உணர்விற்கு என்ன பெயர் என்றேத் தெரியவில்லை.

போனை எடுத்ததுமே “அகி.. அகி அந்த பொண்ணு மயக்கம் தெளிஞ்சிட்டா..?” என்று கூற,

“ஓக்கே.. அங்க செக்யூரிடி டைட் பண்ணிட்டு கமிஸ்னர் ஆஃபிஸ் வந்துடு.. ஈவ்னிங்க் ரெண்டு பேரும் அங்க போயிடலாம்…” என்று வைத்துவிட, கண்ணனுக்கோ என்ன நடக்கிறது என்று தெரியாமல் தலை வெடித்தது.

ஆனாலும் அதை தெரிந்து கொள்ள விரும்பவில்லை. சொல்ல வேண்டிய செய்தியாக இருந்தால் இன்னேரம் அகானாவே சொல்லியிருப்பாளே என்று நினைத்து அமைதியாகவே காரை செலுத்தினார்.