• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அ.. ஆ - 17

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,333
546
113
Tirupur
அகானா - 17

கண்ணை திறக்கவே முடியாமல், இமைகள் இரண்டும் பசை போட்டு ஒட்டிக்கொண்டது போல, பிரிக்கவே முடியாமல் மிகவும் அவஸ்தை பட்டு, ஒரு வழியாக இமைகளைப் பிரித்தாள் மகிழினி.

தான் இருக்கும் இடத்தை வேகமாக ஒரு முறை பார்வையால் அளந்தாள். வெண்ணிற படுக்கை கொண்ட மிகவும் சுத்தமான அறை என்று பார்த்ததுமே புரிந்தது.

பின் வேகமாக தன்னை ஆராய்ந்தாள். பிங்க் நிற நைட்டி தன் உடலை மூடி இருக்க, ‘அவ்வ் நைட்டியா.?’ என முகத்தை சுருக்கி விட்டு தலையை தடவினாள்.

நெற்றிக்கும் தலைப்பகுதிக்கும் இடையில் அடிபட்ட காயம் இருக்க, அதில் தையல் போட்டிருக்க வேண்டும். தடவிப் பார்த்து புரிந்து கொண்டாள்.

இது எந்த இடம்? யார் இங்கு இருக்கிறார்கள்? நான் எப்படி இங்கு வந்தேன்? தன் வீட்டில் இன்னுமா தேடி கண்டுபிடிக்காமல் இருக்கிறார்கள்? ஒருவேளை ஊரை விட்டு தூரமாக வைத்திருக்கிறார்களா? என்று யோசித்தவளுக்கு அன்று என்ன நடந்தது என மூளை ஞாபகப்படுத்தியது.

அன்று கல்லூரியில் இருந்து வெளியில் வந்ததுமே, நண்பர்கள் அனைவரும் வைகை அணை போகலாம் என கேட்க, அவளும் சரியென்று விட்டாள்.

கல்லூரி பேருந்தை விட்டுவிட்டு அனைவரும் பஸ்ஸில் பயணம் ஆகினர். வீட்டிற்கு தெரிந்தால் பிரச்சினையாகும் என்று தெரிந்தும் கிளம்பிவிட்டாள். தன் தாயை டென்சன் செய்வதில் அலாதி பிரியம்.

அவரை சமாளிக்க அண்ணனும், அப்பாவும் இருக்க இவளுக்கு என்ன கவலை. அந்த தைரியத்தில் தான் ஊர் சுற்றக் கிளம்பியது. அனைத்தும் அவர்கள் திட்டப்படித்தான் நடந்தது.

வைகை அணையை சுற்றிவிட்டு கிளம்பும் போதுதான் அனைவருக்கும் அங்கிருந்து வீடு பக்கம், இவளுக்கு மட்டும் தேனி வந்து, மீண்டும் ஒரு பஸ் மாற வேண்டும் என்ற எண்ணமே வந்தது.

அய்யோ போச்சு! இப்ப எப்படி நான் போறது? பஸ் இருக்குமா தெரியல? பேசாம நம்ம ஹாஸ்பிடல் போயிடலாம், எப்படியும் ஆகன் இருப்பான்.. அவன் கூட போயிடலாம்னு பிளான் செய்து, பஸ் நிறுத்தத்திற்கு வந்து கொண்டிருக்கும்போதே, எதிரில் வந்த காரை கவனிக்காமல் நடக்க, நேராக காரின் முன்னே விழுந்து விட்டாள்.. அதுவரை மட்டுமே ஞாபகம் இருந்தது பெண்ணுக்கு. அடுத்து என்ன நடந்திருக்கும் என்று யோசனையிலையே கண்களை மூடி சாய்ந்திருந்தாள்.

கமிஷ்னர் ஆஃபிசில் இருந்து வந்து கொண்டிருந்த ஆரியனும் அதைத்தான் யோசித்துக் கொண்டிருந்தான்.

அன்று காரின் முன்னே திடீரென விழ இருந்தவளை, எதிர்பார்க்காத டிரைவர் அவளை தடுக்க என்ன முயன்றும் முடியாமல் அவள் மீது மோதி விட்டான்.

அதில் அடிபட்டு சற்று தூரமாகவே விழுந்தவளுக்கு தலையில் அடியும், கை கால்களில் சிராய்ப்பும் ஏற்பட்டு விட, அதிர்ச்சியில் அப்படியே மயங்கி விட்டாள்.

சட்டென அங்கு கூட்டம் கூடிவிட, டிரைவரை அடிக்க ஒரு கூட்டம் வர, அப்போதுதான் அந்த காரின் பின்பக்கம் இருந்து இறங்கினான் ஆரியன்.

பிரச்சனையை உடனே கவனித்தவன், “முதல்ல அவங்களை தூங்குங்க.. ரத்தம் நிறைய போகுது.. கார்ல படுக்க வைங்க ஹாஸ்பிடல் போய்டலாம்..” என கூறியதும், அங்கிருந்தவர்கள் அதை செய்ய, டிரைவரிடம் உடனே மருத்துவமனை செல்ல சொல்லி, அவளை தூக்கி தன் மடியில் வைத்த படி அகானாவிற்கு அழைத்தான்.

ஆரியன் விஷயத்தை சொல்லும் முன்னே, அகானாவே பேசினாள். காரணம் அதற்கு முன்னே மகிழினிக்காக அகானா வைத்திருந்த இன்ஃபார்மர் விஷயத்தை அகானாவிடம் சொல்லி இருந்தார்.

அதனால் “ஆரி அவ நமக்கு தெரிஞ்ச பொண்ணு தான்.. நீ நான் சொல்ற ஹாஸ்பிடலுக்கு கொண்டு போ.. நான் வந்துடுறேன்..” என்று வைத்து விட,

ஆரியனுக்கு பயங்கர குழப்பம்.. அதற்குள் எப்படி தெரியும் என்று யோசித்தப்படியே, அகானா சொன்ன மருத்துவமனைக்கு போக சொன்னான். நெற்றிக்காயம் ஆழமாக இருந்ததில் ரத்தம் வந்து கொண்டே இருந்தது.

அதனால் “ட்ரைவர் அந்த டேஷ்போர்ட்ல டவல் மாதிரி இருந்தா எடுங்க..” என கேட்டு வாங்கி, அவள் காயத்தை அழுந்த பிடித்தபடி வந்தான்.

அடுத்த 20 நிமிடத்தில் அந்த மருத்துவமனை வந்துவிட, மகிழினிக்கு முதல் உதவி கொடுக்கப்பட்டது.

“காயம் ஆழம் டாக்டர்.. ஸ்டிச்சர்ஸ் போட்டுருக்கேன். கால் கை எல்லாம் சிராய்ப்பு.. கண்டிப்பா பாடி பெயின் இருக்கும்.. இன்ஜெக்ஷன் போட்டுருக்கேன்.. அவங்க முழிச்சதும் கூப்பிட்டு போகலாம்..” என டாக்டர் சொல்லி செல்ல, அகானாவிற்காக காத்திருந்தான் ஆரியன்.

அவள் சொன்னது போலவே விரைவாகவே அங்கு வந்து சேர்ந்திருந்தாள். அவள் முகத்தில் தெரிந்த இந்த உணர்வை முதல்முறையாக பார்க்கிறான் ஆரியன். எதையோ சாதித்து விட்டது போல மிகவும் பிரகாசமாக இருந்தது அவள் முகம்.

“என்ன அகி?” என கேட்கும் முன்னே “உன்கிட்ட நிறைய சொல்லணும் ஆரி.. ஆனா வீட்டுக்கு போன பிறகு தான் பேசணும்.. இப்போ அந்த பொண்ணை கூட்டிட்டு கிளம்பலாம்..” எனவும் ஆரியன் புரியாமல் பார்த்தான்.

“ப்ளீஸ் ஆரி முதல்ல இங்க இருந்து கிளம்பலாம்.. என்னை அடையாளம் தெரிஞ்சா பிரச்சனை..” என்றதும் ஆரியன் யோசிக்கவில்லை.

மகிழினிக்கு மயக்கம் தெளியும் முன்னே, டிஸ்சார்ஜ் செய்து ஆம்புலன்ஸில் அழைத்து வந்து விட்டான். அதோடு அகானா காட்டிய வீட்டை பார்த்ததும் யோசனையும், குழப்பமும் வந்தது ஆரியனுக்கு. ஆனால் தங்கை மேல் இருந்த நம்பிக்கையில் எதுவும் கேட்கவில்லை.

சிட்டியில் இருந்து சற்று ஒதுக்குப்புறமாக இருந்த அந்த வீட்டில் மகிழினிக்கு தேவையான அனைத்தையும் ஆல்ரெடி செட் செய்து வைத்திருக்க, படுக்கையில் விட்டவள் ஆரியனின் குழப்பமான முகத்தை பார்த்து “என்ன ஆரி..?” என்றாள்.

“என்ன பிரச்சினை அகி? இந்த பொண்ணு யாரு? இவ எதுவும் பிரச்சனையில் இருக்காளா? இல்ல அக்கியூஸ்ட்டா? இவளுக்கு செக்கியூரிடி கொடுக்கணுமா? அவங்க வீட்டுல யாரும் இல்லையா.?” என வரிசையாக கேட்க,

“நோ.. நோ ஆரி.. எல்லாரும் இருக்காங்க. ஆனா இவ கொஞ்ச நாள் இங்க தான் நம்ம கஷ்டடில தான் இருப்பா..” என இறுக்கமான குரலில் கூற,

“என்ன? என்ன அகி..?” என தங்கையின் குரல் மாறுபாட்டில் பதறிப் போய் கேட்டான் ஆரியன்.

“இவதான் மகிழினி… உங்க சீனியர் ஆகனோட தங்கை..” என வெறுமையான குரலில் கூற, ஆரியனுக்கு அனைத்தும் புரிந்தது.

“அகி..” என தங்கையை கவலையாக பார்க்க “எனக்கு எதுவும் சமாதானம் சொல்லாத ஆரி ப்ளீஸ்.. நீ என்கூட இருப்பேன்னு நம்புறேன்.. என்னால இந்த விசயத்துல நியாயம், தர்மம் எல்லாம் பார்க்க முடியாது.. இதெல்லாம் என்னோட வலிக்கு நான் போட்டுக்கிற மருந்து.. இது யாராலயும் எனக்கு கிடைக்காது.. நானே போட்டுக்கிட்டா தான் உண்டு..” என்றவளின் குரல் கசங்கி போய் இருந்தது.

“ஹேய் அகி… என்ன இது? ஏன் இவ்ளோ அப்செட் ஆகுற? நீ என்ன செஞ்சாலும் எனக்கு ஓகே. என் தங்கை தப்பா எதுவும் செய்ய மாட்டான்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. நீ என்ன செய்தாலும் தைரியமா செய்.. உன் கூட நான் எப்பவும் இருப்பேன், ஓகேவா.. இப்ப சொல்லு நான் என்ன செய்யணும்..” என்றதும் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள் அகானா. சில நொடிகளில் அவனிடமிருந்து பிரிந்தவள் “தேங்க்ஸ் ஆரி..” என்றாள் சிறு சிரிப்புடன்.

பின் அவனிடம் தன் திட்டத்தை கூற “ஒன் வீக் சடேஷன்ல வைக்கிறது ரிஸ்க் அகி… வேற யோசி.. அவகிட்ட பேசி பார்த்தா என்ன.?” என்றான் ஆரியன்.

“இல்ல ஆரி.. அவங்க பேமிலில எல்லாரும் அப்படித்தான்.. இவ அப்போ என்னைவிட சின்ன பொண்ணு, அப்பவே அந்த வார்த்தையை சொன்னா? எல்லாம் அவங்க வளர்ப்பு தானே. இப்ப மட்டும் என்ன மாற்றம் இருக்கப் போகுது.. இன்னும் கூட அதிகமா பேசுவாளா இருக்கும்..” என்றவள், “ஆரி இங்கே இரண்டு பேர் இருப்பாங்க.. அவங்க மகியை பார்த்துப்பாங்க உனக்கு இங்க ஓகேன்னா இரு.. இல்லைன்னா குவார்ட்டர்ஸ் போயிடலாம்..” என்றதும்,

“இல்ல.. இல்ல அகி.. நான் இங்க இருக்கேன்.. நான் பாத்துக்குறேன்.. நீ கவனமா போ..?” என்றான் பதட்டமாக,

அவன் பதட்டத்தை உணர்ந்த அகானா மெல்லிய சிரிப்புடன் “ஆல் த பெஸ்ட் ஆரி..” என்று வாழ்த்தி விட்டு சென்று விட்டாள்.

அதன் பிறகு மகிழினியை பார்த்துக் கொள்வதுதான் ஆரியனின் மிக முக்கியமான வேலை. ஒவ்வொரு முறையும் அவளுக்கு ஊசியை செலுத்தும் போது குற்ற உணர்வு கொல்லும். ஆனாலும் அகானாவிற்காக அதைப் பொறுத்துக் கொண்டான்.

இதோ இன்று அவளுக்கு ஊசியை செலுத்தவில்லை. விழித்ததும் அவளிடம் பேச வேண்டும் என்றுதான் அப்படியே விட்டுவிட்டு கமிஷனர் ஆபீஸ் சென்று விட்டான்.

சரியாக அவன் திரும்பும் நேரம் தான் அவள் விழிப்பாள் என்ற நேர கணக்கை பார்த்தே கிளம்பி இருந்தான். சரியாக அவன் வர மகிழினியும் விழிக்கத் தொடங்கினாள். அவள் முகத்தில் வந்து போன உணர்வுகளை பார்த்து ஆரியன் தான் பல்பு வாங்கினான்.

“பேபிக்கு நைட்டி பிடிக்காது போல” என சிரித்துக் கொண்டான்.

“ஹாய் பேபி கேர்ள்..” என்றபடியே உள்ளே வந்தவனை அரண்டு போய் பார்த்தாள் மகிழினி.

“ஹான்..” என விழித்தவள் “யார் மேன் நீ? எதுக்கு என்னை இங்க வச்சிருக்க..” என கோபமாக கேட்டாள் மகிழினி.

“எத.. உன்ன வச்சிருக்கேனா? எல்லாம் என் நேரம்தான்.. நாலு நாளா தூங்கிட்டு இருக்கியே.. கும்பகர்னன் தான் லேடி கெட்டப்ல வந்துட்டாரோன்னு நானே பயந்து போய் இருக்கேன்.. யார் பெத்த பிள்ளையோ? பாவம் பார்த்து வச்சிருந்தா.. நக்கல் தானே உனக்கு..” என ஆரியனும் கோபமாக கேட்க,

“என்னது நாலு நாளா தூங்கிட்டே இருந்தேனா? கண்டிப்பா இருக்கும் சார்.. ஏன்னா எங்க வீட்டுல என்னை தூங்கவே விட மாட்டாங்க சார்.. சீக்கிரம் எந்திரின்னு என் அம்மா என்னை போட்டு டார்ச்சர் பண்ணுவாங்க.. அதனாலத்தான் டயர்டுல இப்படி தூங்கி இருப்பேன் போல..” என்றாள் சோகமே உருவாக…

“என்ன சொல்ற? தூங்க விட மாட்டாங்களா? படிக்க எழுப்புவாங்களா? படிப்பு முக்கியம்தானே.. காலையில் எழுந்து படிக்கிறதுதான் மூளையில் பதியும். அது நல்ல பழக்கம்தான். அப்படி எத்தனை மணிக்கு எழுப்புவாங்க..” என அவள் மேல் சுரந்த பரிதாபத்தில் கேட்க,

“எய்ட் தேர்டிக்கு காலேஜ் பஸ் வரும் சார்.. எட்டு மணிக்கு எழுப்பி விட்டுடுவாங்க.. எவ்வளவு கஷ்டம் தெரியுமா? என் தூக்கமே போயிடும் ஸார். பஸ்ஸில் போகும்போதும் தூங்க முடியாது… இந்த பிரண்ட்ஸ் எல்லாம் பேசியே டார்ச்சர் பண்ணுவாங்க..” என சோகம் போல சொல்ல, பல்லை கடித்தான் ஆரியன்.

“பைத்தியம்.. ஏதாச்சும் பேசின பின் பக்கம் மண்டை நல்லாத்தான் இருக்கு.. அதை உடைச்சு அங்க நாலு தையல் போட வச்சிடுவேன்..” என எரிச்சலாக பேச, உம்மென்று முகத்தோடு அவனை முறைத்தாள் மகிழினி.

“என்ன டிசைன் நீ..?” என்றான் எரிச்சலாக. பின் “உன்னை எப்படி லைப்லாங் நான் மேனேஜ் பண்ணுவேன்.. என் அம்மா ரொம்ப பாவம்.. எப்படி உன் டார்ச்சரைத் தாங்குவாங்க.. அய்யோ யோசிக்காம கமிட் ஆயிட்டேனோ..” என புலம்பிக் கொண்டே நடக்க, ‘இவன் என்ன லூசா..?’ என்ற பார்வையை கொடுத்தாள் மகிழினி.

அதே நேரம் ஆகனின் அமர்ந்திருந்த வினோத், அவன் சொன்னதை நம்ப முடியாமல் பார்த்திருந்தார்.