• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அ.. ஆ.. 36

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,330
541
113
Tirupur
அகானா - 36

“நித்தி நடந்தது ஆக்சிடென்ட், அதுக்கு நீ காரணம்னு புலம்புறதை முதல்ல நிறுத்து. இப்போ போய் நாம அம்முவை பார்க்க முடியாது. அது அவளுக்கு சேஃப் கிடையாது. சொல்றதை புரிஞ்சிக்கோ..” என கத்திக் கொண்டிருந்தார் வினோத்.

“என்ன பேசிட்டு இருக்கீங்க வினோ.. நாங்க அந்த ட்ரிப் போகாம இருந்திருந்தா இந்த ஆக்சிடென்ட் நடந்திருக்காதுல்ல. எல்லாம் எங்களாலத்தான்..” என்று அப்போதும் நித்யா அழுதபடியே திரும்ப திரும்ப சொல்ல, வினோத்திற்கு சலிப்புதான் வந்தது.

இந்த செய்தியை கேட்டதில் இருந்து இப்படித்தான் அழுது புலம்பிக் கொண்டிருக்கிறாள் மனைவி. அதோடு ரஞ்சனி வேறு என்ன பிரச்சினை செய்து வைத்தாளோ சங்கர் அழைத்து ரஞ்சனிக்கு டிவோர்ஸ் கொடுக்கிறேன் என்று பேசுகிறார். எல்லாம் சேர்ந்து வினோவிற்கு பைத்தியம் பிடிக்காத குறைதான்.

“நித்தி ப்ளீஸ்.. நீ இப்படி கத்தி எமொஷ்னல் ஆகாத. கண்ணா போய் பார்த்துட்டு எனக்கு போன் பண்ணிட்டான். கண்ணா ஒரு டாக்டர் அவனையே பார்க்க அளோவ் பண்ணலையாம். அந்த ஆரியன் வந்து தான் அம்மு ரூமுக்கு கண்ணாவை அழைச்சிட்டு போயிருக்கான். கொலை முயற்சின்னு கேஸ் ஃபைல் ஆகிருக்கு. யார் போனாலும் அலோவ் பண்ண மட்டாங்க. இன்னைக்கு நைட் வீட்டுக்கு அனுப்பிடுவாங்க. அவ வீட்டுக்கு போனதும் போய் பார்த்துட்டு வா..” என தன் கோபத்தை விடுத்து, மிகவும் பொறுமையாகவே கூறினார் வினோத்.

ஆனால் நித்யாவால் அதை சாதாரணமாக கடக்க முடியவில்லை. அவருக்கு இன்று அகானா தங்களோடு செலவிட்ட நிமிடங்களை யோசிக்கத் தோன்றியது.

மேகமலையில் தன் வேலையை முடித்துவிட்டு, குழந்தைகளிடம் வந்த அகானாவை பிள்ளைகள் இருவரும் இருபக்கமும் பிடித்துக்கொண்டு குதித்தனர்.

முதல் முறையாக அகானாவின் மனதில் ஏதோ ஒரு உணர்வு உருவாவதை அவளால் உணர முடிந்தது.

ஆரியனிடமோ, நவீன், குமரன், ஏன் காயத்ரியிடமோ கூட இந்த மாதிரியான உணர்வுகளை அவள் உணர்ந்ததில்லை.

ஆகனிடமும் கூட இப்படித்தான் உணர்ந்தாளோ? ஆனால் அது நிஜம் என்று உணரும் முன்னே அனைத்தும் முடிந்து போயிருந்தது.

இந்த உணர்வு இது மிகவும் புதிது. இதுதான் ஒருவேளை ரத்த சொந்தமோ?

இப்படி உள்ளுக்குள் பல யோசனைகள் ஓடினாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சிரித்த முகமாகவே அவர்களுடன் நேரம் செலவழித்தாள்.

ஹரிஷ் மெச்சூர்டாக அவளிடம் பேசினான். தாத்தா பாட்டியின் செய்கயை அவனும் தவறென்று ஒத்துக்கொண்டான்.

அகானாவோடே ஒட்டிக்கொண்டு திரிந்தான்.

“எனக்கு இந்த மைதிலி பெரிம்மாவை பிடிக்காது க்கா.. ரஞ்சி அத்தை அவங்களுக்குதான் ஜால்ரா.. ஆனா அப்போ மகிக்கா இருந்தா செம்மையா கவுன்டர் கொடுத்து ரெண்டு பேரையும் அலற விடுவாங்க..” என்றாள் ஹரினி.

“ஓ.. மகியை உங்களுக்கு ரொம்ப பிடிக்குமோ..?” லைட்டா பொறாமை இருந்ததோ அந்த குரலில்.

அதை உணர்ந்த நித்யா “பிடிக்காம என்ன? இதுங்க பண்ற முக்கால்வாசி க்ரைம்க்கு அவதான் க்ரைம் பார்ட்னர். மகி மட்டும் வீட்டுக்கு வந்துட்டா எல்லாருக்கும் தாறுமாறா பிபி எகிறிடும். அதுவும் மைதிலி அக்காவுக்கும் அவளுக்கும் செட்டே ஆகாது. அதனாலயே அண்ணி இங்க அழைச்சிட்டு வரமாட்டாங்க.” என்று சிரிக்க,

“ஹ்ம்ம்..” என்றாளே தவிர, அடுத்து எதுவும் பேசவில்லை.

“அக்கா.. எங்க ஸ்கூல்ல எல்லாருக்கும் நீங்க என் அக்கான்னு தெரிஞ்சிடுச்சு. எல்லாரும் நீயும் உங்க அக்கா மாதிரி கலெக்டர் ஆகிடுன்னு சொல்றாங்க..” என்றாள் ஹரினி.

“ஸ்கூலுக்கே தெரியுமா?” என ஆச்சரியப்படுவது போல் கேட்க,

“ஆமா.. ஆனா நான் என் ஃப்ரண்ட்ஸ்க்கு மட்டும் தான் சொன்னேன். எப்படி எல்லாருக்கும் தெரிஞ்சதுனு தெரியல..” என அவளுமே பாவம் போல கூற, அதில் அனைவருமே சிரித்து விட்டனர்.

“இவளைப்பத்தி உங்களுக்கு தெரியாது.. பிடி பீரியட்ல ஹாக்கி விளையாடிட்டு இருக்கும் போது, இவ்ளோட டிசி சார் ஏதோ சொல்லிட்டார்னு ‘என் அக்கா கலெக்டர், நீங்க திட்டினா நான் ஸ்கூலுக்கு கூப்பிட்டு வருவேன்.. அப்புறம் உங்களுக்கு தான் பிரச்சினைனு சொல்லிருக்கா, அவர் அப்பவே என்னை கூப்பிட்டு கேட்குறார். நான் மஞ்சரி பெரிம்மா பேரை சொன்னதுமே, அவருக்கு தெரிஞ்சிருச்சு. மஞ்சரி என்னோட சப் ஜுனியர்தான். அழகான பொண்ணு. உங்க பெரியப்பா அந்த பொண்ணை யாரையும் பார்க்க விடாம பாடிகார்ட் மாதிரி சுத்திட்டு இருப்பார்னு சிரிச்சிட்டே சொல்றார்.” என ஹரிஷ் சொல்ல, அகானாவிற்கு நெஞ்சின் மீது ஒரு பெரிய கல்லை வைத்து அழுத்தியது போலொரு கணம்.

“க்கா.. உங்களுக்கு தெரியுமா? காயத்ரி அக்கா இருக்காங்கல்ல, அவங்ககிட்ட தான் உங்க சின்ன வயசு போட்டோ, பெரிம்மா போட்டோ எல்லாம் பார்த்தோம். நீங்க இப்பவும் ரஞ்சனி அத்தை மாதிரி இருக்கீங்க. சின்ன வயசுலயும் ரஞ்சனி அத்த மாதிரிதான் இருந்தீங்க..” என ஹரினி கூற, அனைவருக்குமே சிரிப்பு.

“அறிவாளி.. அவங்க எப்பவும் அவங்களை மாதிரிதான் இருப்பாங்க. எப்படி மாற முடியும்..” என ஹரிஷ் அவள் தலையில் கொட்டிவிட்டு ஓட,

“ஏய் தலையில் கொட்டாதடா..” என ஹரிஷை விரட்டிக்கொண்டு ஹரினியும் ஓட, இருவரையும் புன்னகை முகமாகவே பார்த்துக் கொண்டிருந்தாள் அகானா. அந்த விழிகளில் இருந்த ஏக்கம். அந்த புன்னகையில் இருந்த வலி அதை நித்யாவிற்கு புரியாமல் போகுமா?

“அம்மு..” என தோளைத் தொட,

“அவங்களை மாதிரி இருக்குறதுனாலயோ, இல்ல அவங்க ஜீன் எங்கிட்ட இருக்குறதுனாலயோ தான் நான் இப்படி கிரிமினலா யோசிச்சு, பழிவாங்குறேன் போல. என் அம்மாவோட ஜீன் கொஞ்சம் கூட எனக்கில்ல.” என கசப்பாய் சிரிக்க,

“ம்ச் என்ன அம்மு நீ..” என நித்யா அதட்ட,

“அம்மாவுக்கு நான் இங்க வந்தது, இப்படியெல்லாம் பண்றது எதுலையும் விருப்பமில்ல. முடிஞ்சது முடிஞ்சதாவே இருக்கட்டும்னு சொன்னாங்க. ஆனா நான்தான்.. எனக்குத்தான் அப்படி விட மனசில்ல.” என்றவளுக்கு குரல் உடைந்துவிடும் போல இருந்தது.

“அவர் அம்மாக்கிட்ட உக்காந்து பேசியிருந்தா கண்டிப்பா அம்மாவே அவரை அனுப்பி வச்சிருப்பாங்க. ஏனா அவர் என்ன சொன்னாலும் அம்மா கேட்பாங்க. எனக்கு அங்க போறது தான் நிம்மதின்னு அவர் சொல்லியிருந்தா அம்மாவே அனுப்பி வச்சிருப்பாங்க. உண்மை.. அம்மாவோட காதல் அப்படி.. ஆரம்பத்துல கஷ்டமா இருந்தாலும், இதோ இப்ப இல்லையா, அதே மாதிரி பழகிருப்போம். ஆனா அவர் செஞ்சது..” என நிறுத்தியவளுக்கு உடல் இறுகிப் போனது. குரலும் கூட இறுக்கமாக வந்தது.. “அவர் செஞ்சது துரோகம். பச்ச துரோகம். முதுகுல குத்திட்டு போன துரோகம்..” என்றாள் வெறியோடு.

“யாருமே வேண்டாம்னு மொத்த குடும்பத்தையும் பகைச்சிட்டு, இவருக்காக மட்டுமே அம்மா வந்தாங்க. ஆனா அவர் என் அம்மாவை நம்ப வச்சு ஏமாத்திட்டு போயிட்டார். அவருக்காக மூனு தடவை சாக துணிஞ்சிருக்காங்க. அதை கூட அவர் யோசிக்கவே இல்ல.”

“அவர் விட்டுட்டு போற முதல்நாள் வரை அவர் தோள்ல தான் என்னை தூக்கி வச்சிட்டு இருந்தார். அவருக்கு எங்களை விட்டு போயிருவோம்னு முன்னாடியே தெரிஞ்சிருக்குதானே அப்புறம் ஏன் எங்க மேல அன்பா இருக்குற மாதிரி நடிக்கனும். இன்னும் என்னால அதையெல்லாம் ஜீரணிக்ககூட முடியல..” என்றவளுக்கு மூச்சு சீரற்று வந்தது.

“அம்மு போதும்.. எனக்கு எல்லாம் தெரியும்.. நீ இவ்ளோ கஷ்டப்படாத..” என நித்யா அவள் முதுகை வருடி சமாதானம் செய்ய,

“இல்ல.. இல்ல எனக்கு இதெல்லாம் அப்படியே உள்ளுக்குள்ள அழுத்தி அழுத்தி ஏதோ பண்ணுது. என்னால இதை யாருக்கிட்டயும் ஷேர் பண்ண முடியாது. அப்படியே சொன்னாலும் என்னை அவங்க பார்க்கிற பார்வையில் வித்தியாசம் வரும். அது எனக்கு வேண்டாம்..” என்றாள் முகத்தை துடைத்து.

பஞ்சு பொதிகளாய் பறந்து விரிந்து கிடந்த வானத்தில் மிதந்து கொண்டிருந்த மேகங்கள், சற்று நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக இருள் பூசி கார்மேகமாக வழுவடைய தொடங்கியது.

மேகமலையின் காலநிலை அப்படி.. வெயில் அடிக்கும், சற்று நேரத்தில் இடியோடு மழை பெய்யும். அதன்பிறகு வெயில்.. என கணிக்க முடியாத காலநிலை தான் அங்கு காணப்படும்.

அந்த வானத்தையே பார்த்துக் கொண்டிருந்த அகானா “அந்த வானம் மாதிரி தான் எங்க வாழ்க்கையும் இருளடைஞ்சு போச்சு..” என்றாள் விரக்தியான குரலில்.

“அம்மு நீ இப்படி பேசுறது மஞ்சு அக்காவுக்கு தெரிஞ்சா எவ்ளோ கஷ்டப்படுவாங்கனு யோசி.. நீ தைரியமான பொண்ணுடா.. அவருக்குத்தான் உங்க கூட வாழ கொடுத்து வைக்கல. அவர்தான் ஒரு அழகான வாழ்க்கையைத் தொலைச்சிருக்கார். நீங்க இல்ல..” என நித்யா சமாதானம் செய்ய,

“ம்ம்.. விஜிம்மாவும் அப்படித்தான் சொல்வாங்க. ஒருநாள்..” என்று ஒரு பெருமூச்செடுத்து தன்னை சமன் செய்தவள் “நான் அப்போ நைந்த் படிச்சிட்டு இருந்தேன். அம்மாவுக்கு ரொம்ப முடியாம ஹாஸ்பிடல் கூப்பிட்டு போனோம். யூட்ரஸ் ஃபுல்லா இன்ஃபெக்ஷன் ஆகிருக்கு, பெட்டர் ரிமூவ் பண்ணிடலாம் சொன்னாங்க. விஜிம்மாவும் சரின்னு சொல்லிட்டாங்க. அப்போ டாக்டர்ஸ் கொஸ்டீன் கேட்கும் போது என்னை வெளியே அனுப்பிட்டாங்க. ஆனா கதவை சரியா மூடல. உள்ளே பேசினது எனக்கு அப்படியே கேட்டது..” என நிறுத்த,

நித்யாவிற்கோ அகானா இதையெல்லாம் பேச வேண்டாமே என்று இருந்தது. ஏதோ பெரிதாக அந்த இடத்தில் அகானா காயப்பட்டிருக்கிறாள் என்று மட்டும் புரிந்தது.

“அம்மு..” என நிறுத்த,

“ம்ம்.. கணவன் மனைவி உறவு பத்திதான் பேசினாங்க. லாஸ்டா எப்போன்னு கேட்டப்ப அம்மா சொன்ன அந்த நாள், அது.. அது..” என திணறி “அந்தாள் எங்களை விட்டு போறதுக்கு முதல்நாள்..” என்றவளுக்கு முகமெல்லாம் கோபத்தில் விகாரமாக மாறிப்போனது.

கேட்ட நித்யாவிற்கே ரவியை கொல்லும் அளவிற்கு கோபம் வரும் போது, அகானாவின் கோபத்தை தப்பென்று சொல்ல முடியுமா?

“எனக்கு ஒரே கேள்விதான்.. அவருக்கு எங்களை விட்டு போறோம்னு முன்னாடியே தெரியும்ல, அப்புறம் எதுக்காக இப்படி அவங்க மனசையும் உடம்பையும் அவருக்காக ஏங்க வச்சிட்டு போனார். அவருக்கு இன்னொரு பொண்டாட்டி கிடைச்சாங்க. அவரோட பசி தீர்ந்து போச்சு. ஆனா என் அம்மா, அவங்க என்ன செய்வாங்க. தன்னோட ஆசை, ஏக்கம் எல்லாத்தையும் ஒழிச்சு, மறைச்சு அவங்களை இப்படி சன்னியாசி வாழ்க்கை வாழ வச்ச அந்தாளை நான் மன்னிக்கனுமா? சொல்லுங்க நான் மன்னிக்கனுமா? இன்னைக்கு வந்து என் மகள்ன்னு சொல்ற அந்தாள், அவருக்கு ஒரு குழந்தை இருந்தா என்னை திரும்பி பார்த்திருப்பாரா?” என ஆவேசமாக கேட்க, நித்யாவிடம் பதிலே இல்லை.

அவர்தான் அகானா கூறிய அந்த செய்தியிலேயே உறைந்து போயிருந்தாரே…

இருவரும் அருகருகில் நின்றாலும், முகத்தில் இருந்த கவலை பிள்ளைகளை யோசிக்க வைக்க, அதுவரை கண்ணனிடம் விளையாடிக் கொண்டிருந்த இருவரும் அவர்களை நோக்கி ஓடி வந்தனர்.

அவர்களைப் பார்த்ததும், முகத்தை சரி செய்து அவர்களுக்காக வாங்கி வைத்த அனைத்தையும் கொடுத்து, “நீங்க இதெல்லாம் சொல்லி ஹரிஷ் அப்பாக்கிட்ட சண்டை போடாதீங்க ப்ளீஸ்..” என்றதோடு அனுப்பியும் வைத்தாள்.

கிளம்பி விட்டாலும் நித்யாவிற்கு மனதே ஆறவில்லை. அவர் இன்னுமே அந்த செய்தியில் இருந்து வெளியிலும் வரவில்லை. ரவியின் மேலிருந்த நல்ல எண்ணங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக சரிய தொடங்கியது.

அதோடு அவரை அப்பா என்று அழைக்கக்கூட பிடிக்காமல் ‘அவர், அந்தாளு’ என்று அகானா அழைப்பதை கவனித்தார். மேலும் பிள்ளைகளோடு ஒட்டிக்கொண்ட மனம் பெரியவர்களோடு ஒட்ட மறுக்கிறது என்றும் புரிந்தது.

‘சித்தி சித்தப்பா’ என்று அழைக்காமல் இதோ தன்னை ‘வாங்க போங்க’ என்பதும், வினோத்தை ‘ஹரிஷ் அப்பா’ என்பதும் நித்யாவிற்கு புரியாமல் இல்லை.

அப்படி கூப்பிடு என கட்டாயப்படுத்தவும் அவருக்கு விருப்பமில்லை. தானாக மனம் உவந்து தங்களை ஏற்க வேண்டும் என்றே அவர் மனம் விரும்பியது.

சீக்கிரம் அப்படியொரு சூழல் அமைய வேண்டும் என்று அவசரமாக கடவுளுக்கு ஒரு வேண்டுதலையும் வைத்துக்கொண்டார்.

இப்படி பிள்ளைகளுடன் துவேசம் காட்டாமல், அன்புடன் நடந்து அவர்களோடு தன்னை இணைத்து மகிழ்ந்தவளுக்கு, அவர்கள் விட்டு வந்த சில மணி நேரங்களில் விபத்து என்றால் எப்படி நித்யாவால் ஏற்றுக் கொள்ள முடியும்.

“நான் எதுக்கும் அம்முவுக்கு கால் பண்றேன்..” என நித்யா போனை எடுத்த நேரம், அவளே நித்யாவிற்கு அழைத்தாள்.

“அம்மு தான்..” என வாயசைச்சு “என்ன அம்மு நீ.. எப்படி இருக்க.?” என்ற நித்யாவின் குரல் உடைந்தே போனது.

“நான்.. நான் நல்லா இருக்கேன். நவீன் அண்ணாவும், மாலினி அண்ணியும் இருக்காங்க. அம்மா வந்துட்டு இருக்காங்க.. இது சின்ன காயம்தான். நான் கூப்பிட்டது வேற ஒரு முக்கியமான வேலையா.?” என நிறுத்த,

“என்ன அம்மு..?” என நித்யா யோசனையாக கேட்க

“அது.. அவர்.. ஹரிஷ் அப்பா இருக்காரா?” என கேட்கும் போதே நித்யாவின் பார்வை கணவனைத் தொட்டு நிற்க, அதை புரிந்த வினோத் மனைவியிடமிருந்து வேகமாக போனை வாங்கி “என்ன அம்மு? அங்க எதுவும் பிரச்சினையா? நான் வரனுமா?” என படபடவென கேட்க, அந்த குரல்.. அந்த குரலைக் கேட்டு கண்ணை மூடி தன்னை சமாளிக்க முயன்றாள் அகானா.