• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அ.. ஆ.. - 47

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,392
445
113
Tirupur
அகானா - 47

அகானாவை தன்னுடைய மருத்துவமனைக்கே கொண்டு வந்திருந்தான் ஆகன். அவளுக்கு முதலுதவி கொடுக்கப்பட்டிருக்க, மயக்கத்தில் இருந்தாள் பெண்.

அந்த ஸ்பெஷல் வார்டின் முன் அழுது அழுது ஓய்ந்து போய் அமர்ந்திருந்தார் மஞ்சரி. அவருக்கு இருபக்கமும் காயத்ரியும் கவிதாவும் இருக்க, எதிரில் நவீனும், குமரனும் நின்று கொண்டிருந்தனர்.

“மஞ்சு ம்மா.. முதல்ல இந்த காஃபியைக் குடிங்க..” என ஆரியன் நீட்ட, தளும்பும் விழிகளுடன் அவனையேப் பார்த்தார் மஞ்சரி.

“அவ இங்க வேணாம் ஆரி. நான் அவளைக் கூப்பிட்டு போறேன். எங்கையாவது, யார் கண்ணுலயும் படாம போயிடுறேன். எனக்கு அவளாவது வேணும் ஆரி. எப்படியாவது அவளைக் காப்பாத்திக் கொடுத்துடு கண்ணா..” என அவனின் கையைப் பிடித்துக் கொண்டு கதற, அத்தனை பேர் கண்களிலும் நீர் வழிந்தது.

தன் அறையிலிருந்து சிசிடிவி வழியாக பார்த்துக் கொண்டிருந்த ரவீந்திரனும் தேம்பி அழ ஆரம்பித்தார்.

அவர் அருகில் இருந்த ஆகன் “மாமா.. என்ன மாமா நீங்க.?” என அவர் தோளைத் தட்ட,

“என் பொண்ணு சொன்னது சரிதான். அன்னைக்கு நான் ரிஸ்க் எடுத்திருந்தா இன்னைக்கு என் குடும்பத்துக்கு இப்படியொரு நிலமை வந்திருக்காதுல்ல.. நானே என் குடும்பத்தை குழைச்சிட்டேன்..” என ஆகனின் கையைப் பிடித்துக் கொண்டு சிறு குழந்தை போல அழுதார் ரவி.

“மாமா.. இப்போ பழசை நினைச்சோ, பேசியோ பிரயோஜனம் இல்ல.. ஆர்த்தோ சர்ஜன் இப்போ வந்துடுவார். அவர் பார்த்துட்டு ஒபினியன் கொடுக்கட்டும்.. நாம சர்ஜரிக்கு டைம் ஃபிக்ஸ் பண்ணிடலாம். ஜிஏ நீங்க கொடுக்குறீங்களா? இல்ல அனஸ்தீசியா டாக்டருக்கு சொல்லட்டுமா? நானும் ஆரியும் அசிஸ் பண்ணிப்போம். நீங்க ஜஸ்ட் அங்க இருந்தா போதும்..” என்றவனிடம்

“ஹான்.. நானே ஜிஏ கொடுத்துடுறேன். அப்படியாவது என் பொண்ணை தொடுற பாக்கியம் எனக்கு கிடைக்கட்டும்..” என்றார் வேதனை தழும்பிய குரலில்.

“ம்ச் மாமா.. அம்முவை ஒரு பேசன்டா பாருங்க. அப்போதான் நார்மலா திங்க் பண்ண முடியும்..” என்றவன், “நான் போய் அத்தையை பார்த்துட்டு வரேன்.. ரொம்ப அழறாங்க..” என்றான் மெல்ல..

“ம்ம்..” என்றவர் நிமிர்ந்தும் கூட ஆகனை பார்க்கவில்லை.

“சித்தி.. இப்போ எதுக்கு இப்படி அழுதுட்டு இருக்கீங்க.. நம்ம அம்முவுக்கு ஒன்னும் ஆகாது, அவ நல்லது தான் பண்ணிருக்கா. அப்படியெல்லாம் கடவுள் நம்மளை ஏமாத்த மாட்டார். நீங்க அழறதை நிறுத்திட்டு அமைதியா இருங்க..” என நவீன் அதட்ட,

“சித்தி நவீன் சொல்றது தான், நானும் சொல்றேன். அதுதான் சர்ஜரி முடிஞ்சதும் சரியாகிடுவான்னு சொல்றாங்கள்ள.. விடு நீ பயந்து அவளையும் பயமுறுத்தாத..” என குமரனும் சத்தம் போட்டான்.

“குடிங்க மஞ்சு ம்மா.. நீங்க இப்படி அழறதை அகி பார்த்தா உங்ககிட்ட தான் கோச்சிப்பா.. பேசக்கூட மாட்டா..” என ஆரியும் சொல்ல, மகளதிகாரம் அதை வாங்க வைத்தது. அந்த சூடான காபியை வாங்கி மெல்ல அருந்த ஆரம்பித்தாள்.

அவருக்கு ஆரம்ப நாட்களில் மகளின் சர்ஜரிக்கென பணத்திற்கு அலைந்தது,. ரவியின் வீட்டார்கள் அவளை அழைத்து, மிரட்டி கையெழுத்து வாங்கியது என அனைத்தும் கண் முன்னே படமாக ஓட, கவிதாவின் மேல் சாய்ந்து “ஓ”வென கதறியழ ஆரம்பித்தார்..

“நான் தான் தப்பு பண்ணேன். நான் தான திமிறெடுத்து போய் காதலிச்சேன். உங்க பேச்சை கேட்காம கல்யாணம் பண்ணேன். எனக்குத் தான தண்டனை கிடைக்கனும். என் பொண்ணுக்கு ஏன் இவ்ளோ பெரிய தண்டனை. அவ எப்போதான் நிம்மதியா இருப்பா. என் வயித்துல பிறந்ததை தவிர வேற என்ன தப்பு பண்ணா.. ஒன்னுமில்லையே.. அவ ஒன்னுமே பண்ணலையே. அவளை ஏன் இந்த விதி இப்படி துரத்துது. உயிர் தான் வேணும்னா என் உயிர எடுத்துக்க சொல்லேன் கவி க்கா.. என் பொண்ணை விட்டுட சொல்லு. அவ இன்னும் அவளுக்காக வாழவே இல்ல கவி க்கா..” என கதறியழ, கவிதாவும் தங்கையைக் கட்டிக்கொண்டு அப்படி அழுதார்.

நித்யாவும் வினோத்தும் அப்போதுதான் விசயம் கேள்விப்பட்டு வந்தனர். மஞ்சரியின் அழுகையைப் பார்த்து நித்யா துடித்துப் போனாள்.

“சின்ன குழந்தை அவ.. அந்த வயசுல அவளுக்கு என்ன தெரியும். ஆனா அந்த பிஞ்சு உடம்புல கத்தி வச்சோம். அந்த ஆபரேசன் பண்ணதுல இருந்து பூ மாதிரி பாதுகாப்பா வச்சிருக்கேன் என் பொண்ணை. இன்னைக்கு கால் உடைஞ்சி, அய்யோ.. இப்படியா என் பொண்ணை பார்க்கனும்.. ஏன் எங்களுக்கு மட்டும் இவ்ளோ வலியும், வேதனையும். நாங்க மனசார கூட யாரையும் சபிச்சது இல்லையே. எங்களைத் தூக்கிப் போட்டு போனவங்க கூட நல்லா இருக்கனும்னு தான நினைச்சோம். அப்புறம் ஏன் இப்படி.. யருக்காகவோ ஏன் என் பொண்ணு சிலுவை சுமக்கனும். அவ சந்தோசமாவே இருக்கக்கூடாதா? அவளுக்கு நிம்மதியே கிடைக்காதா? இந்த பாவி வயித்துல பிறக்காமலே போயிருக்கலாம். நான் மலடியா கூட இருந்துருக்கலாம் கவி க்கா.. எல்லா கஷ்டமும் என்னோட போயிருக்கும். இன்னைக்கு என் பொண்ணு படுற வேதனையை என்னால பார்க்க முடியல கவி க்கா.. அவ இன்னும் எத்தனை நாள் இப்படி வலியும், வேதனையுமா காலத்தை கடத்துவா சொல்லுங்க.. நீங்க சொல்லுங்க..” என ஏதேதோ சொல்லி அழ, நித்யா அப்படியே சிலையாகிவிட்டார்.

வினோத்தின் நிலையை சொல்லவே வேண்டாம். குற்றவுணர்ச்சியில் தலையை நிமிர்த்தவே இல்லை.

“எனக்கு யாரும் வேண்டாம். என் பொண்ணுக்கு நான், அவளுக்கு நான். நாங்க நிம்மதியா இருப்போம். இருந்தோம். இனியும் அப்படியே இருந்துக்கிறோம். இந்த ஊரும் உறவும் எதுவும் வேண்டாம். என் பொண்ணு போதும்.. எங்களை விட்டுட சொல்லு கவி க்கா.. அவளுக்குன்னு ஒரு வாழ்க்கையை அவ வாழ வேணாமா.. எனக்கு பிறந்ததுனால, கடைசி வரை இப்படி போராடியேத்தான் வாழனுமா? சொல்லு கவி க்கா.. எத்தனையோ தடவை சாக துணிஞ்சேன், அப்படி ஒரு தடவை செத்திருந்தா கூட நிம்மதியா போயிருக்கும். என் பொண்ணுக்கு இந்த நிலமை வந்துருக்கவே வந்துருக்காது. பிறந்ததுல இருந்து கஷ்டத்த தவிர வேற எதையும் பார்க்கல என் பொண்ணு. என்னை மாதிரி ஒரு அதிர்ஸ்டம் இல்லாதவளுக்கு பிறந்ததால தான் இவ்ளோ கஷ்டம்..” என தன் போல புலம்பி, கதறினார் மஞ்சரி.

அதே நேரம் ஆகனும் அங்கு வந்துவிட, “ஆரி.. அத்தையை ரூமுக்கு கூப்பிட்டு போ.. ரெஸ்ட் எடுக்கட்டும். இப்படி அழுதுட்டே இருந்தா அவங்க ஹெல்த்தும் ஸ்பாயில் ஆகிடும்.” என்றவன்,

“அத்தை.. நீங்க இப்படி அழறது அம்முவுக்கு தெரிஞ்சா ரொம்பவே கஷ்டப்படுவா.. அவ எழுந்து நடக்க ஒரு மாசத்துக்கு மேல ஆகும். அப்போ அந்த ஒரு மாசமும் நீங்கதான் அவளைப் பார்த்துக்கனும். அதுக்கு நீங்க தெம்பா, நல்லா இருக்கனும்.. முதல்ல அழுகையை நிப்பாட்டுங்க..” என ஆகன் அதட்ட, சட்டென முகத்தைத் துடைத்துக் கொண்டார் மஞ்சரி.

இது ஆகன் அதட்டியதால் அல்ல.. அடுத்து தன் மகளைப் பார்த்துக் கொள்ள வேண்டுமே. அதற்கு அவர் நன்றாக இருக்க வேண்டுமே.. அதனால் தன் அழுகையை அடக்கி, மனதை இறுக்கிக் கொண்டார்.

காயத்ரியின் துணையோடு அறைக்கு அழைத்து வந்த ஆரியன், அவருக்கு தூங்குவதற்காக ஊசியை செலுத்தி உறங்க வைத்துவிட்டு வெளியில் வந்தான்.

நித்யா தான் “என்ன கண்ணா ஆச்சு.. ஏன் இப்படி?” என அழுகையை அடக்கியபடி கேட்டார்.

“அத்த.. நம்ம வீரபாண்டி ஹைவேல தான் ஆக்சிடென்ட். நல்ல வேலை ஜிஎச் பக்கமே நடந்ததால.. எல்லாரையும் சடனா ஹாஸ்பிடல் ஷிஃப்ட் பண்ண முடிஞ்சது. குமுளில இருந்து வந்த லாரியும், மில் பஸ்ஸூம் நேருக்கு நேரா மோதிருக்கு. ரெண்டு டிரைவரும், பஸ்ல முன்னாடி ரெண்டு சீட்டுல இருந்த பொண்ணுங்களும் ஸ்பாட் அவுட்.. ரெண்டு வண்டியும் மோதி தள்ளும் போது நம்ம அம்முவோட கார் இடைல வந்திருக்கு. நல்ல வேலை கண்ணன் அங்கிள் சுதாரிச்சு காரை சடனா லெஃப்ட்ல திருப்பிருக்கார். இல்லைன்னா நினைச்சுக் கூட பார்க்க முடியல..” என்றவனுக்குமே குரல் அடைத்துப் போனது.

“அவர் எப்படி இருக்கார்..?” என்றான் வினோத்.

“அவருக்கு கையில தான் அடி மாமா. இவளுக்கு கால்ல நல்ல அடி.. ஆரம்பத்துல தெரியல. இறங்கி போய் ஹெல்ப் பண்ணிருக்கா. ஒரு பையனை உள்ள இருந்து இழுக்கும் போது, கீழே விழுந்துருக்கா, அப்போ தான் போன் பிராக்சராகி, ஸ்கின்னுக்கு வெளிய வந்து ஓவர் ப்ளீடிங்க். நான் பார்க்கும் போது மயக்கத்துல கீழ விழறா..” என்றான் தான் பார்த்ததை.

“ம்ம்.. என்று அவர் அமைதியாகிட, ஆரியன் தான் “ஆன்டி.. வீட்டுல மகி தனியா இருப்பா. நீங்க உங்க வீட்டுக்கு அழைச்சிட்டு போறீங்களா? அகிக்கு செகன்ட் டைம் ஆக்சிடென்ட் ஆனதுனால, இப்போ குவார்ட்டஸ் ஃபுல்லா செகியூரிடி டைட் பண்ணிட்டாங்க. நீங்க அங்க ஸ்டே பண்ண முடியாது..” என்றான்.

“சரி சரிப்பா.. நான் பாத்துக்குறேன்..” என்றதும்,

“நானும் வரேன் தம்பி.. மகியை நான் பிக்கப் பண்ணி வீட்டுல விட்டுடுறேன். நீங்க ஹாஸ்பிடலுக்கு வந்துடுங்க..” என்றார் வினோத்.

ஆரியன் யோசிக்க, “நம்ம வீட்டுக்கு அண்ணி வர மாட்டாங்க. அன்ட் அத்தை இருக்கும் போது கவலைப்பட வேண்டாம்..” என வினோத் கூற,

“ம்ம் சரி..” என்ற ஆரியன் வினோத்துடன் கிளம்பினான்.

“நான் கொண்டு வந்து உங்க வீட்டுல விட்டுடுறேன்.” என்றவன் ஆகனிடம் திரும்பி, “டைம் அப்டேட் பண்ணுங்க சீனியர். நான் வீட்டுக்கு போய்ட்டு மஞ்சு ம்மாவுக்கு தேவையனதை எடுத்துட்டு, மகியை அழைச்சிட்டு வரேன்..” என யார் பதிலுக்கும் காத்திராமல் கிளம்பிவிட்டான்.

இங்கு வீட்டில், “ரஞ்சி கிளம்பு.. நாம போய் அம்முவைப் பார்த்துட்டு வந்துடலாம். எல்லாரும் அங்கதான் இருக்காங்க. நாம போகலன்னா சரியா இருக்காது..” என மனைவியை அழைக்க,

“நான்.. நானா மாமா.. நான் எதுக்கு அங்க?” என மென்று விழுங்க..

“என்னடி பேசுற?” என கர்ஜித்தவர், “ச்சீ உன்னையெல்லாம் திருத்தவே முடியாது.. திருந்தாத ஜென்மம் நீங்க எல்லாம். நீ வராம, உன் மூச்சுக்காத்து அந்த பொண்ணு மேல படாம இருக்கிறதே நல்லது. உன் மூச்சுக்காத்துல கூட விசம் இருக்கும். அது அந்த பொண்ணை கொன்னாலும் கொண்ணுடும்..” என மனைவியை முறைத்தவர் கிளம்பி சென்றுவிட, ரஞ்சனிக்கு மனதெல்லாம் நடுங்கியது.

அதே நேரம் அவளுக்கு மைதிலியிடமிருந்து அழைப்பு வர, பயந்து கொண்டே தான் எடுத்தார் ரஞ்சனி.

“என்ன சம்மந்தியம்மா.. உங்க மருமகளுக்கு ஆக்சிடென்ட் ஆகிடுச்சாம்..” என நக்கல் குரலில் கேட்க,

“அண்ணி.. நீங்களா?” என ரஞ்சனி அதிர்ந்து போய் கேட்க.. அந்தப் பக்கம் மைதிலி சத்தம் போட்டு சிரிப்பது, இங்கு ரஞ்சனிக்கு ஈரக்கொலையையே நடுங்க வைத்தது.