• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அ.. ஆ.. -48

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,392
445
113
Tirupur
அகானா - 48

அண்ணி நீங்களா? என்ற ரஞ்சனியின் குரலில் பெருங்குரலெடுத்து சிரித்தார் மைதிலி..

“நானா.. ஹான் நானா? அப்படியா எல்லாரும் நினைச்சிட்டு இருக்கீங்க. அப்படி நடந்திருந்தா ரொம்ப சந்தோசப்பட்டிருப்பேன். ஆனா நான் இல்ல. நான் இதை பண்ணல. எனக்காக இதை கடவுளே பண்ணிருக்கார் போல. ஆனாலும் நான் சந்தோசமாத்தான் இருக்கேன். அவ கொட்டம் இப்போ அடங்கிருக்குமே..” என ஆங்காரமாக பேச, திகைத்துப் போனார் ரஞ்சனி.

“அண்ணி.. எனக்கும் அவங்களை பிடிக்காது தான். ஆனா இந்த வன்மம் கூடாது அண்ணி. அது உங்களையே அழிச்சிருமோன்னு பயமா இருக்கு அண்ணி..” என உண்மைக்குமே பயந்துதான் பேசினார் ரஞ்சனி.

“ஹான் நீ என்ன சொன்னாலும் நம்ப நான் என்ன முட்டாளா? அப்படி பிடிக்காதவ தான் அங்க போய் சம்மந்தம் பண்ணிட்டு வந்தியா? இன்னும் என்னை முட்டாள்னு மொத்த குடும்பமும் நம்பிட்டு இருக்கீங்களா என்ன?” என கத்த,

“அண்ணி.. அண்ணி நான் சொல்றதை கேளுங்க. எனக்கு இதுல விருப்பம் இல்லதான். ஆனா மகிக்கு அவரைத்தான் பிடிச்சிருக்கு. அவருக்கும் மகி மேல விருப்பம் இருக்கு. நம்ம அந்தஸ்துக்கு ஏத்த மாப்பிள்ளையாதான் இருக்கார். இதுக்கு மேல வேற என்ன வேணும்.” என ரஞ்சனி தயங்கி தயங்கி கூற,

“ஹான்.. அவர்.. ஹ்ம்ம் அந்த அளவுக்கு போயாச்சோ.. அதோட அந்தஸ்து பத்தியும் பேசுற.. ஹ்ம்ம் இந்த அந்தஸ்து, தகுதி எல்லாம் உங்களுக்கு எப்படி வந்ததுனு மறந்து போயிடுச்சு போல. அதை மறுபடியும் நியாபகப்படுத்தலாமா? ஹ்ம்ம் மறுபடியும் உங்களை நடுத்தெருவுல நிக்க வச்சா எல்லாம் நியாபகத்துக்கு வந்துடும். நிக்க வச்சிடுவோமோ..” என நக்கல் குரலில் மைதிலி கேட்க,

“அண்ணி.. எதுக்கு இப்படியெல்லாம் பேசுறீங்க. இதுவரைக்க்கும் உங்களுக்கு பிடிச்ச மாதிரி தானே நாங்க நடந்துக்கிட்டோம். இது எங்களையும் மீறி நடந்த விசயம். இல்லைன்னா நீங்க கை காட்டுற இடத்துல தான் மகிக்கு கல்யாணம் செஞ்சிருப்போம். புரிஞ்சிக்கோங்க அண்ணி.. எங்களை நீங்க வெறுக்க ஆரம்பிச்சிடாதீங்க..” என ரஞ்சனி கெஞ்ச,

“ஹான்.. உங்களை மீறி நடந்த ஒன்னுதான் இங்க பிரச்சினையே.. இனி இதோட முடியாது. அடுத்து உன் பையன் அவ பின்னாடி போவான். அடுத்து உன் அண்ணன் அவ பின்னாடி போவான். அப்புறம் உன் குடும்பமே அவ பின்னாடி போகும். இதை பார்த்துட்டு நான் அமைதியா இருக்கனும் அப்படித்தானே.”

“அண்ணி.. அதெல்லாம் இல்ல அண்ணி.. ஆகனே இறங்கிப் போய் கல்யாணம் செஞ்சிக்கிறேன்னு சொன்னாலும், அவ கண்டிப்பா ஒத்துக்கமாட்டா. அப்படி இருக்கும் போது நீங்க ஆகனை தப்பா நினைக்காதீங்க. அவன் வாழ்க்கை என் கையை மீறி போய்டாது..”

“இதெல்லாம் நம்ப நான் ஒன்னும் முட்டாள் இல்ல.. எனக்கு குழந்தை இல்லன்ற ஒரு காரணம் போதும். உன் மொத்த குடும்பமும் அவ பின்னாடி போக.. அப்படி மட்டும் நடந்தது, இந்த மைதிலி எல்லாரையும் உசுரோட கொழுத்திட்டு ஜெயிலுக்கு போய்டுவா..”

“அண்ணி.. இந்த கல்யாணம் முடியுற வரைக்கும் கொஞ்ச நாள் அமைதியா இருங்க. கல்யாணம் முடிஞ்சதும், மகிக்கிட்ட பேசுற விதத்துல பேசி, மாப்பிள்ளையையும் அவர் குடும்பத்தையும் நம்ம பக்கம் இழுத்துடலாம். அந்த நாய்ங்களை இவங்க பக்கமே சேராம பார்த்துக்கலாம், அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வராதீங்க அண்ணி.. கொஞ்சம் பொறுமையா இருங்க..” என கெஞ்சலுக்கும் கீழிறங்கியதுமில்லாமல், தன் மனதில் இத்தனை நாட்கள் வைத்திருந்த திட்டத்தையும் மைதிலியிடம் சொல்லியிருந்தார் ரஞ்சனி.

“நீ சொல்ற எதையும் என்னால நம்ப முடியாது. நீ சொல்ற மாதிரி அந்த குடும்பம் கிடையாது. இனி இந்த பேச்சே வேண்டாம்.. உங்களை ஒன்னுமில்லாம ஆக்குறது தான் என்னோட முதல் வேலையே..” என போனை வைத்துவிட்டாள் மைதிலி.

மைதிலியின் பேச்சைக் கேட்ட ரஞ்சனிக்கு பயம் தான். முதலீடு மொத்தமும் அவர் பணம் தான். அதன் பிறகு ரவி வாங்கிய சொத்துமே மைதிலியின் பேரில் தான். ஏன் ஹாஸ்பிடல் கூட அவர் பெயரில்தான் இருக்கிறது. இனி என்னவெல்லாம் செய்யப்போகிறாளோ என்று நினைக்கும் போதே இதயம் தாறுமாறாக துடித்தது ரஞ்சனிக்கு.

ரஞ்சனி இப்படி தன் நினைவில் இருக்க, அவருக்கு எதிரில் வந்து நின்றனர் மகியும் வினோத்தும்.

அவர்களைப் பார்த்ததுமே ரஞ்சனி அரண்டு போக “ஆக இதுதான் உங்க திட்டம் இல்லையா? உங்க மேல இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கை கூட இப்போ இல்ல.” என்றாள் மகிழினி கண்களில் வெறுப்பைத் தேக்கி.

“பாப்பா.. அது அப்படி இல்லடி.. அண்ணிக்காக.. அவங்களை சமாதானம் செய்றதுக்காக தான் அப்படி பேசினேன். மத்தபடி நீ நினைக்கிற மாதிரி நான் யோசிக்கக்கூட இல்லடி.. நம்பு மகி.. அந்த மாதிரியான எண்ணமே எனக்கு இல்ல..” என மகளிடம் கெஞ்ச,

“உங்களை நான் ரொம்ப நம்பினேன்.. அதையும் தாண்டி ஒரு குற்றவுணர்ச்சி. உங்களை ஒதுக்கி வச்சு என் கல்யாணம் நடக்குதேன்னு நான் வருந்தாத நாளே இல்ல. மஞ்சு அத்தை தான் அவர்கிட்ட பேசி, சமாதானம் செஞ்சாங்க. இல்லைன்னா அவர் இறங்கி வர வாய்ப்பே இல்ல. ஆனா நீ அவங்களையே பிரிக்க நினைக்கிறீங்கள்ல.” என காட்டமாக பேச,

“மகி.. நான் எப்படி சொல்லி உனக்கு புரிய வைப்பேன்..” என கதறியவர், பக்கத்தில் நின்ற வினோத்திடம் “வினோ நீயாவது புரிஞ்சிக்கோடா. அண்ணி ரொம்ப பேசிட்டாங்கடா.. எல்லாரையும் நடுத்தெருவுல நிறுத்துவேன், உன் குடும்பத்தை ஜெயிலுக்கு அனுப்புவேன்னு எல்லாம் பேசவும், அவங்க வாயை அடைக்கிறதுக்காகத்தான் அப்படி பேசினேன்.. நிஜம்டா.. நீயாவது மகிக்கு சொல்லி புரிய வை டா..” என்று அழ,

“ச்சீ.. நீயெல்லாம் இந்தளவுக்கு தரம் தாழ்ந்து போவன்னு நான் நினைக்கவே இல்ல ரஞ்சி. அவங்களுக்காகன்னாலும் உன்னால எப்படி அந்த மாதிரி பேச முடிஞ்சது. நாளைக்கு அந்த வீட்டுல மகி எப்படி நிம்மதியா வாழ்வா.. அதெல்லாம் நீ யோசிக்க மாட்டியா? ஒரு விசயம் புரிஞ்சிக்கோ ரஞ்சி, அவங்களுக்கு ஒரு குழந்தை இருந்து, இப்படி ஒரு சூழ்நிலை வந்தா கண்டிப்பா அவங்க நம்ம யாரையும் யோசிக்காம சுயநலமாத்தான் முடிவெடுப்பாங்க. இத்தனை வருசம் பழகின உனக்கு இது கூட தெரியலையா? இன்னும் அவங்களுக்காகன்னு போய் நீ எதையெல்லாம் இழக்கப்போற, இப்போவே உன் குடும்பத்தை உங்கிட்ட இருந்து பிரிச்சிட்டாங்க.. இன்னும் என்ன இருக்கு உனக்கு..” என வினோ கோபமாக கத்த, ரஞ்சனியால் அதற்கு பதிலே பேச முடியவில்லை.

“அண்ணன் செஞ்சது பச்சத் துரோகம். அதுக்கான தண்டனையைத்தான் இப்போ அவர் அனுபவிச்சிட்டு இருக்கார். சொந்த பொண்ணை தூர இருந்து பார்க்கிற இந்த கொடுமையை கொடுத்த உங்களுக்கு என்ன தண்டனை கிடைக்கும். அம்முவையும், அண்ணியையும் பார்க்கும் போதெல்லாம் மனசாட்சி முள்ளா குத்துது ரஞ்சிக்கா. ஒரு ஆம்பள எனக்கே அவ்வளவு வலிக்கிதுன்னா, உனக்கு கொஞ்சம் கூட கஷ்டமா இல்லையா? இல்ல இன்னும் அந்த பணம்ன்கிற மாய உலகத்துல இருந்து வெளிய வரலையா? என்றவன், “உன்கிட்ட இதை சொல்லக்கூடாதுனு தான் நினைச்சேன். ஆனா இப்போ நீ பேசினதுக்கெல்லாம் அனுபவிக்கனும் இல்லையா அதுக்காக சொல்றேன். அம்மு தான் இந்த வீட்டு மருமக.. எழுதி வச்சிக்கோ, உன் பையன் அவளை விட மாட்டான். அவ கால்ல விழுந்தாவது கல்யாணம் செஞ்சிப்பான். அப்புறம் நீ மகிக்கு சொன்ன மாதிரி தான், அவனை அம்மு இந்த பக்கமே அனுப்பமாட்டா. மகியும் இல்லாம, கண்ணாவும் இல்லாம இந்த வீட்டுல நீ அநாதையாத்தான் இருப்ப..” என கத்தி முடித்தவன், ரஞ்சனி அதிர்ந்து நின்றதை கூட கண்டுகொள்ளாமல் “போலாம் மகி..”
என தன் மருமகளை அழைத்துக் கொண்டு கிளம்பிவிட்டான்.

காரில் ஏறியதுமே தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள் மகிழினி. “அம்மா இப்படியெல்லாம் யோசிப்பாங்கன்னு நான் நினக்கவே இல்ல மாமா. என் வாழ்க்கை கூட அவங்களுக்கு ஒரு பொருட்டு இல்ல. அவங்களுக்காக எந்த அளவுக்கு இறங்கிட்டாங்க..” என அழுகையினூடே கூற,

“மகி.. உன் அம்மா இப்படி பேசலன்னாதான் அதிசயம். விடு.. இப்படி அழாத.. ஆரியும், ஆகனும் கண்டுபிடிச்சிடுவாங்க. இந்த விசயம் நம்மளோடவே இருக்கட்டும். நீ இனி தைரியமா இருக்கனும். ஆரியன் உன்னை எந்த இடத்துலயும் விட்டுக்கொடுக்க மாட்டான். நீயும் அப்படி இருக்கனும். அதுதான் உங்க கல்யாணம் ஜெயிக்க முக்கியக் காரணமா இருக்கும்..” என மருமகளைத் தேற்றி சமாதானம் செய்து தன் வீட்டில் கொண்டு வந்து விட்டான் வினோத்.

மகியைப் பார்த்ததும் ஆர்ப்பரித்த குழந்தைகளைக் கட்டிக் கொண்டவளுக்கு அழுகை கொஞ்சம் மட்டுப்பட்டது. அகானாவிற்கு அடிப்பட்டிருக்கிறது என்று தெரிந்ததும், குழந்தைகளும் மருத்துவமனைக்கு வருகிறேன் என அடம் பிடிக்க, “மகி க்கா.. ரெஸ்ட் எடுத்துட்டு உங்களை கூட்டிட்டு வருவா.. அதுக்குள்ள அம்முவுக்கு சர்ஜரி முடிஞ்சிடும். நீங்களும் பார்க்கலாம்..” என சமாளித்து கிளம்பியிருந்தான் வினோத்.

பின் தன் தாய்க்கு அழைத்து, “ரெண்டு பேரும் வீட்டுல இருந்து என்னதான் செய்றீங்க. போய் ரஞ்சி கூட இருங்க. அவளுக்கும் மாமாவுக்கும் கொஞ்சம் பிரச்சினை.” என மட்டும் சொல்லி அவர்களை ரஞ்சனி வீட்டுக்கு அனுப்பிவிட்டு இவன் மருத்துவமனைக்கு வந்துவிட்டான்.

வினோத் மருத்துவமனைக்கு வருவதற்குள்ளாகவே அகானாவை ஆபரேஷன் தியேட்டருக்கு கொண்டு சென்றிருந்தனர்.

ஆர்த்தோ டாக்டரின் ஒபினியன் கிடைத்ததுமே சர்ஜரியை வைத்துவிட்டான் ஆகன். அதுவரைக்குமே அகானாவை சடைசேனில்தான் வைத்திருந்தான். விழித்தால் கண்டிப்பாக வலி அதிகம் தெரியும், அதோடு இத்தனை வலியிலும் இங்கிருந்து போயே ஆகவேண்டும் என்று உறுதியாக நிற்பாள், அவளைப் பற்றித் தெரிந்ததால் தான் இப்படி ஒரு முடிவை எடுத்தான் ஆகன்.

ஆரியனுக்கும் இது புரிய, வேண்டாம் என்று மறுக்கவில்லை. அவன் தங்கை குணமாகி வந்தாலே போதும் என்ற எண்ணம் மட்டுமே அவனிடம் தேங்கி நின்றது.

அந்த அறுவை சிகிச்சை அறையின் ஒரு பக்கம் மஞ்சரியும், அவரின் சொந்தங்களும் இருக்க, மற்றொரு பக்கம் நித்யாவும், சங்கரும் நின்றிருந்தனர். அவரகளுக்கு அருகே வந்து நின்ற வினோத “என்னாச்சு மாமா?” என அவர்களின் கலக்கம் உணர்ந்து கேட்க, நித்யாவிற்கு கேவலே வந்துவிட்டது.

“என்ன மாமா? ஏன் அண்ணி இப்படி இருக்காங்க.? அவங்க வீட்டு ஆளுங்க முகமும் ஒன்னும் சரியில்ல. நித்தியும் அழறா, என்ன மாமா? என்ன சொன்னாங்க? அம்மு இங்க வேண்டாம்னு பிரச்சினை பண்றாளா?” என பதட்டமாக கேட்க,

‘இல்லை’ எனும் விதமாக தலையை ஆட்டியவர், தன் துக்கத்தை தொண்டைக்குழிக்குள் அடைத்து, மிகவும் சிரமப்பட்டு “அது.. அது அம்மு இனி நார்மலா நடக்கிறது கஷடம்னு சொல்லிருக்காங்க..” என்றவருக்குமே குரல் அடைத்தது.

“என்ன மாமா? என்ன சொல்றீங்க.?” என்ற வினோத்தோ உச்சக்கட்ட அதிர்வை சந்தித்தது போல, செயலிழந்து நின்றான்.

 
  • Like
Reactions: Anandi