• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அ.. ஆ.. - 49

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,392
445
113
Tirupur
அகானா - 49

ஆபரேஷன் முடிந்து இரண்டு வாரங்கள் ஆகியிருந்தது. மஞ்சரி மகளை விட்டு இம்மியும் நகரவில்லை. யாரையும் மகளை நெருங்கவும் சம்மதிக்கவில்லை. யாருடைய சமாதானங்களும் அவரை அசைக்கவில்லை.

‘மகளால் பழைய மாதிரி நடக்க முடியாது’ என்ற வார்த்தைகள் அவரை முற்றிலும் இறுக வைத்திருந்தது.

முதலில் அழுது கரைந்தார். அத்தனை கடவுளையும் நிந்தித்தார். எல்லாம் ஒரே நாள் தான். அடுத்த நாள் பீனிக்ஸ் பறவையைப் போல் அதனை கடந்து வந்து விட்டார்.

இப்போ என்ன என் பொண்ணுக்கு நான் இருக்கேன், நான் பார்த்துக்குவேன்.. இதெல்லாம் எனக்கு என்ன புதுசா? என்ற எண்ணத்தை உருவாக்கி தன்னை தேற்றிக் கொண்டார். மகளையும் தேற்றினார்.

மஞ்சுவின் இந்த செய்கை அத்தனை பேரையும் வியக்க வைத்தது. அகானாவின் தன்னம்பிக்கையும், தைரியமும் எதையும் எதிர்கொள்ளும் பாங்கும் எங்கிருந்து வந்தது என்று அனைவராலும் புரிந்து கொள்ல முடிந்தது.

அதே நேரம் ரவியின் குணம் சிறிது கூட அவளிடம் இல்லையென்று ஆசுவாசமும் பட்டுக் கொண்டனர்.

இதற்கிடையில் ஆரியனின் திருமண வேலைகளும் நடந்து கொண்டிருந்தது. தள்ளிப்போடலாம் என ஆரியன் கூற, வேண்டவே வேண்டாம் என மறுத்தது அகானா அல்ல, மஞ்சரி.

மகியின் வீட்டாரை மனதில் வைத்து, தள்ளிப்போட வேண்டாம் என்று உறுதியாக கூறிவிட்டார்.

அன்று அகானாவை பார்க்க வந்திருந்தார் விஜயா. மஞ்சரியைப் பார்த்ததும் அவருக்கு ஏதோ சரியில்ல என்று புரிந்தது. அவரிடம் பேசியே ஆகவேண்டும் என்றும் முடிவு செய்தார்.

“மஞ்சு நீ இப்படி இருக்கிறது சரியில்ல.. நீ பயந்து அவளையும் பயமுறுத்துற..” என்ற விஜயாவிடம்,

“எல்லாம் தெரிஞ்சும் நீங்க இப்படி பேசுறது கஷ்டமா இருக்கு விஜி க்கா..” என்றார் வேதனையாக.

“மஞ்சு.. சிலது நம்மளையும் மீறி நடக்கும் அதை நம்மளால தடுக்கவே முடியாது. இதுவும் அப்படித்தான். தயவுசெய்து நிதர்சனத்தை புரிஞ்சிக்கோ மஞ்சு. அவ சின்னப் பொண்ணு இல்ல..”

“ஹான்.. அவ சின்னப் பொண்னு இல்லதான்..” என்றார் நீண்ட பெருமூச்சோடு.

“மஞ்சு..”

“ஆமா விஜி க்கா.. அவ சின்னப் பொண்ணு இல்ல.. சின்ன பொண்ணுங்க எப்படி இருப்பாங்கன்னு கூட அவளுக்குத் தெரியாது. அப்படித்தான் வளர்த்துட்டேன். என்னோட சுயநலத்துக்காக அவளோட சின்ன வயசு பருவத்தையே நான் கொன்னுட்டேன். அந்த வயசுலயே என் பொண்ணுக்கு எவ்ளோ பக்குவம்னு உங்களுக்குத் தெரியும். இப்போ சொல்லவே வேண்டாம்.” என நிறுத்தியவர், “இது இதுதான் என்னோட பயம் விஜி க்கா. அவளுக்கே அவளுக்கான ஆசைகள் எதுவுமே இல்லாம வளர்த்திட்டேன். அவ வாழ்க்கையை யோசிக்காம, இப்படி வந்து படுத்துட்டா.. அவளுக்கு ஒன்னுனா நான் என்ன செய்வேன் விஜி க்கா..” என்றார் அழுகையோடு.

“மஞ்சு.. நீ ஓவர் திங்க் பண்ற.. கண்டிப்பா நீ பயப்படுற அளவுக்கு அகி நடந்துக்கமாட்டா.. நீ இப்படி கவலைப்படாத. இது உன் உடம்பையும் பாதிக்கும் புரிஞ்சிக்கோ.. நீ நல்லா இருக்கேன்னு தெரிஞ்சாலே அகி சீக்கிரம் சரியாகிடுவா..” என இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் நேரம், ரவி முன்னே வர, அவருக்கு பின்னே ஆகனும், ஆரியனும் வந்து கொண்டிருந்தார்கள்.

அவர்களைப் பார்த்ததும் மஞ்சரி அமைதியாக, விஜயா தான் மகனை என்ன என்பது போல் பார்த்தார்.

அவர் இன்னும் ரவியுடன் பேசியிருக்கவில்லை.

“ஒன்னுமில்ல ம்மா.. அகி க்கு செக்கப். இப்போ ஒரு எக்ஸ்ரே எடுத்து அனுப்ப சொல்லிருக்காங்க.”

“யார்… யார் அனுப்ப சொன்னது..?” என ஆரியனிடம் வேகமாக வந்தார் மஞ்சரி.

“மஞ்சு ம்மா.. அது சாரோட சீனியர் மலேசியால இருக்கார். அவர் அகியோட ரிப்போர்ட்ஸ் எல்லாம் பார்த்தார். இப்போ ஒரு எக்ஸ்ரே மட்டும் அனுப்ப சொல்லிருக்கார்.”

“ஹ்ம்ம் அம்மு சரியாகிடுவால்ல.. ரொம்ப வலிக்கும் போல ஆரி.. எப்பவும் யோசனையிலேயே இருக்கா. என்கிட்ட கூட பேசல. எனக்கு பயமா இருக்கு ஆரி..” என மற்றவர்கள் இருக்கிறார்கள் என்று கூட பார்க்காமல் ஆரியனின் கையைப் பிடித்துக் கொண்டு அழுதார் மஞ்சு.

ஆகனும், ரவியும் ஒரு இயாலாமையுடன் அங்குதான் நின்றிருந்தனர்.

“மஞ்சு ம்மா.. அகியைப் பத்தி தெரிஞ்சும் நீங்க எதுக்கு இவ்ளோ அழறீங்க. நாமளே எதிர்பார்க்காத அளவுக்கு எழுந்து வருவா.. அவ தன்னம்பிக்கையை எப்பவும் குறைச்சி எடை போடாதீங்க..” என்றவன், தன் தாயிடம் கண்னைக் காட்டி நகர, விஜாயாவும் மஞ்சரியை சமாதானம் செய்தார்.

மூன்று பேரும் அகானாவின் அந்த அறைக்குள் நுழைய, யோசனையாக அவர்களைப் பார்த்தாள்.

ஆரியனும், ரவியும் தள்ளி நிற்க, ஆகன் தான் அவள் காலில் இருக்கும் கட்டை ஆராய்ந்தான். பின் “இப்போ எப்படி இருக்கு? பெயின் குறைஞ்சிருக்கா?” என ஒரு நோயாளியிடம் பேசுவதைப் போல பேச,

“ம்ம்ம் பெட்டர் டாக்டர் பட்..” என இழுத்து, “என்னால முன்ன மாதிரி நடக்க முடியாது ரைட்..” என புன்னகைக்க,

“அகி..” என அதட்டினான் ஆரியன்.

“நோ மிஸ் அகானா.. கொஞ்சம் நாளாகுமே தவிர நீங்களும், உங்க காலும் சீக்கிரம் சரியாகிடும். முன்னை விட நல்லாவே நடப்பீங்க.. பட்..” என அவனும் அவளைப் போலவே இழுக்க,

“பட்..” என மூவரையும் யோசனையாக பார்த்து ரவியிடம் தன் பார்வையை நிறுத்த,

“நீங்க எங்க ட்ரீட்மென்ட்க்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கனும். என் ப்ரண்ட் மலேசியால இருக்கார். அவர்கிட்ட உங்க ரிப்போர்ட்ஸ் சென்ட் பண்ணிருந்தோம். அவர் இப்போ ஒரு எக்ஸ்ரே அனுப்ப சொல்லிருக்கார். அதை பார்த்துட்டு, நாங்க டிஸ்கஸ் பண்ணிட்டு, ஒரு மினி சர்ஜரி செய்ய வாய்ப்பிருக்கு. அதுக்குப் பிறகு உங்களுக்கு எந்த பிரச்சினயும் இருக்காது..” என ரவியும் ஒரு ஃபார்மல் டாக்டராக பேச,

“ஓ.. அவர் இங்க வரனும்.. அப்பாய்ன்மென்ட்ஸ் எப்படி..?” என்றவள், “அம்மாவை கேட்கனும் ஆரி.. சேவிங்க்ஸ் எல்லாம் பார்க்கனும்..” என்றதும்,

“வாட் த ஹெல்..” என ஆகன் ஏதோ சொல்ல வர,

“அகி.. நான் மஞ்சும்மாக்கிட்ட முன்னாடியே பேசிட்டேன். சேவிங்க்ஸ் ஓக்கே.. பத்தலன்னா ஜ்வல்ஸ் இருக்குன்னு சொல்லிருக்காங்க. அப்புறம் அப்பா ஆல்ரெடி உங்க ரெண்டு பேருக்கும் ஹெல்த் இன்சூரன்ஸ் பண்ணிருக்கார். சோ கிளைம் பண்ணிக்கலாம். டோன்ட் வொரி..” என்று பொறுமையாக கூற,

“ஹ்ம்ம்.. அட்வான்ஸ் எவ்ளோன்னு கேட்டு பே பண்ண சொல்லு ஆரி. கண்ணன் அங்கிள் வந்தா என்னை பார்த்துட்டு போகச் சொல்லு..” என்றதும்,

“ஓக்கே டா.. அதெல்லாம் பார்த்துக்கலாம். இப்போ என்ன செய்யலாம். உன் முடிவு என்ன?”

“எனக்கு ஒரு பிரச்சினையும் இல்ல ஆரி. அம்மாக்கிட்ட பேசிக்கோ. விஜிம்மாக்கிட்டயும் கேட்டுக்கோ..” என கண்னை மூட, சோர்ந்து போய் ஒளியில்லாத தன் மகளின் முகத்தையே ஒரு கையாலாகாத தனத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார் ரவீந்திரன்.

“இப்பவும் பெயின் இருக்கா.. இஞ்செக்சன் போட்டுக்கலாமா?” என என்ன முயன்றும் மறைக்க முடியாத தழுதழுப்பு குரலில் கேட்டார் ரவி.

“நோ டாக்டர்.. இதெல்லாம் எனக்கு பழகின வலிதான். எட்டு வயசுலயே இதைவிட அதிகமான வலியை பார்த்துருக்கேன். இப்போ இந்த வலியெல்லாம் எனக்கு சாதாரனம்..” என மெல்ல புன்னகைக்க,

உயிருடன் ஒரு மனிதைரை கொல்வது எப்படி என்று தன் மகளிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும் என தெரிந்துகொண்டார் ரவி.

அவளைப் பார்த்த நாளில் இருந்து எத்தனை முறைதான் அவரை உயிரோடு கொல்வாள். விரக்தியான புன்னகையோடு அவளையே பார்க்க, அவளோ யாரையும் பார்க்க விரும்பாமல் கண்ணை மூடிக் கொண்டாள்.

மகளின் உதாசீனத்தில் மனிதர் தளர்ந்து போய் வெளியேற, அவருக்குப் பின்னே ஆரியன் நடக்க, அகானாவையே பார்த்தபடி நின்று கொண்டிருந்தான் ஆகன்.

‘என்னை எப்படியாவது காப்பாத்திடு. என்னைவிட்டா என் அம்மாவுக்கு யாருமே இல்ல’ என அன்று மயக்கமடைவதற்கு முன் ஆகனைப் பார்த்து அகானா கூறிய வார்த்தைகள் இவை.

இப்போதும் அதை நினைத்தால் அவன் இதயமே நடுங்கிப் போகும். எப்படி அவளை இங்கு கொண்டு வந்து சேர்த்தானோ தெரியாது. அவளுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்று அந்த நேரத்தில் எத்தனை கடவுள்களை வேண்டியிருப்பானோ தெரியாது.

அன்றைய நாளை நினைத்ததுமே ஆகனின் விழிகள் தன்னால் நிறைந்து போனது.

தன் கட்டுப்பாட்டையும் மீறி அவள் கையை இறுக்கமாகப் பிடித்து தன் நெஞ்சில் வைத்துக் கொண்டான். அதில் சட்டென விழிகளைத் திறந்தவள் அவனைக் கூர்மையாகப் பார்க்க, அவனோ பின் அந்த கையைத் தன் முகத்தில் அழுத்தி வைத்துக் கொண்டான்.

“ஸாரி ன்னு கேட்க கூட தகுதியில்லன்னு தெரியும். ஆனா இப்போ என்ன கேட்கன்னு கூட தெரியல அம்மு.. எங்களை நினைச்சு உன்னை நீ இவ்ளோ கஷ்டப்படுத்திக்காத ப்ளீஸ்… நீ எங்களை என்னவும் செய். நாங்க யாரும் எதுவும் கேட்க மாட்டோம். உன்னோட கோபம் குறைய என்ன செய்யனும்? சத்தியமா எனக்குத் தெரியல அம்மு.. என்னடி செய்யனும் நான்.. எனக்குத் தெரியவே இல்ல.. சொல்லுடி.. நான் என்ன செய்யனும்..” என மெல்ல ஆரம்பித்து கதறலாக முடிக்க, அகானாவின் விழிகளும் கலங்கித்தான் போனது.

அதை அவன் பார்க்கும் முன்னே மற்றைய பக்கம் முகத்தை திருப்பியவள் “ப்ளீஸ்.. என்னை இப்படி வீக் ஆக்காதே.. நான் இப்படித்தான் இருக்கனும்.. அது அதுதான் எல்லாருக்கும் நல்லது. விடு.. இதெல்லாம் வேண்டாம்.. இப்படியெல்லாம் வேண்டவே வேண்டாம்..” என்றாள் தழுதழுக்க,

அந்த வார்த்தைகளில் ஆகன் உடைந்துதான் போனான். யார் செய்த பாவம். ஏன் எங்கள் வாழ்க்கையில் விதி இப்படி விளையாடியது. ஒருவரையொருவர் உணர்ந்த காதலை வெளிப்படுத்தக் கூட இல்லையே.. இதோ அந்தக் காதலுக்காக இருவரும் தவிக்கும் தவிப்பு.. அய்யோ.. என தன் நெற்றியிலேயே அறைந்து கொண்டான் ஆகன்.

“ஏய் என்ன பண்ற.. விடு.. விடு ப்ளீஸ்.. நீ இங்க இருந்து போ.. யாராவது வந்தா என்ன நினைப்பாங்க.. போ.. என்னை இப்படி வீக் ஆக்காத.. போ.. போ..” என அவனை அங்கிருந்து துரத்தவே முயன்றாள்.

இன்னும் சில நிமிடங்கள் அங்கு இருந்தால், தன்னையும் மீறி அவனைக் கட்டிக்கொண்டு அழுது தீர்த்து விடுவோமோ என்ற பயம் முதன் முறையாக பெண்ணவளை ஆட்டிப் படைத்தது.

அதை ஆகனும் புரிந்து கொண்டானோ “என்னால முடியல அம்மு.. எனக்கு நீ வேனும்.. நீ மட்டும் தான் வேணும். இவங்க யாரும் நமக்கு வேண்டாம். எங்கேயாவது யார் கண்ணுலயும் படாம, இந்த உலகத்தோட கடைசிக்கு கூட போயிடலாம். ஆனா அதுக்கு நீ வேனும் அம்மு..” என்றவனை வெறித்துப் பார்த்தாள் அகானா.

அந்த வெறித்த விழிகளில் இருந்து கண்ணீர் கோடாக இறங்க, முதல் முறையாக அவள் அழுது அவன் பார்க்கிறான்.

ஒரே எட்டில் அவளுக்கு அருகில் மிக நெருக்கமாக வந்தவன், வழிந்த கண்ணீரை அழுத்தமாக துடைத்துவிட்டு, “நான் உன்னை பலவீனமாக்க மாட்டேன். என் அம்மு எப்பவும் ஸ்ட்ராங்க்தான். அவளை யாராலயும் வீக்காக்க முடியாது. எல்லாம் சரியாகிடும். நீ பழைய மாதிரி மிடுக்கா, நிமிர்வா நடந்து வருவ. அதை நாங்க எல்லாருமே பார்ப்போம். இப்போ நீ மெண்டலி வீக். அது கூட இல்லன்னா எப்படி. ஹ்ம்ம் சரியாகிடும் அம்மு.. எக்ஸ்ரே பார்த்துட்டு அடுத்து ப்ளான் பண்ணலாம்..” என அவள் நெற்றியில் முட்டி கூற, அவனுக்கு தலையை ஆட்டிக்கூட அவள் சம்மதம் சொல்லவில்லை.

நேர்ப்பார்வையாக பார்த்தவளிடம் “இந்த கண்ல நான் எனக்கான காதலை அன்னைக்குப் பார்த்தேன். இனி நீயே நினைச்சாலும் உன்னை எங்கிட்ட இருந்து பிரிக்க முடியாது.” என கண்ணீர் விழிகளுடன் புன்னகைக்க, அப்போதுமே அகானாவிடம் நேர்ப்பார்வைதான்.

அவள் முகத்தையும், தன் முகத்தையும் துடைத்தவன் அங்கிருந்த பெல்லை அமர்த்த, அதற்காகவே காத்திருந்ததைப் போல ஒரு நர்ஸ் ஓடி வர, “ஸ்ட்ரெச்சர் கொண்டு வந்தாச்சா?” என்றான் அதட்டலாக..

“ஹான் எஸ் டாக்டர்..” என அவள் பயந்து போய் கூற,

“ஹ்ம்ம்” என்றவன், அவளின் ஐவி லைனை அவனே கழட்டி எடுத்துவிட்டு, அவளைத் தன் கைகளால் அள்ளி அந்த ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்தவன், முதல் முறையாக தன்னவள் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டு, ‘எல்லாம் சரியாகிடும் டோன்ட் வொரி’ என வருத்தமாக புன்னகைக்க, ‘ஆ’வென பார்த்துக் கொண்டிருந்தாள் அந்த நர்ஸ்.