அகானா - 54
‘ஆரியன் வெட்ஸ் மகிழினி’ என்ற பெயர் பலகையைப் பார்த்தபடி அந்த மண்டபத்தின் வாசலிலேயே நின்றிருந்தார் ரஞ்சனி.
சற்று முன் தான் பெண்ணழைப்பும், மாப்பிள்ளை அழைப்பும் முடிந்திருந்தது.
மகளை மணக் கோலத்தில் பார்க்க தவமிருந்த ரஞ்சனி, இன்று மகளை அப்படி பார்த்ததும் பூரித்து தான் போனார்.
‘என் பொண்ணு’ என்று மனமெல்லாம் ஒரு கர்வம் உண்டானது உண்மை.
ஒரு வாரமாக மைதிலியை அழைத்து அழைத்து சோர்ந்து போயிருந்தார். மேலும் வீட்டிற்கு சென்று அழைத்தும் வந்திருந்தார்.
ஆனாலும் இப்போது வரைக்கும் எங்கேயுமே மைதிலி இல்லை. ரவியிடமோ மகனிடமோ கேட்கவே பயமாக இருந்தது.
சரஸ்வதி இன்னும் மருத்துவமனையிலேயே இருக்க, அவரை பார்த்துக்கொள்ள ஆட்களை வைத்துவிட்டு நித்யா இங்கு வந்திருந்தார்.
அவர் தான் பம்பரமாக சுழன்று வேலைகளை செய்து கொண்டிருந்தார்.
‘ஆகவே ஆகாதென நினைத்து மைதிலியோடு சேர்ந்து எவ்வளவு கஷ்டங்களைக் கொடுத்திருப்பார் நித்யாவிற்கு. ஆனால் அதன் பிரதிபலிப்பு கொஞ்சமும் இல்லாமல் தன் வீட்டு விஷேசம் போல இறங்கி வேலை செய்கிறாள்.
ஆனால் இந்த மைதிலி அண்ணி.. எந்தளவிற்கு மோசமாக மாறிவிட்டார் என மனதுக்குள்ளே அழுது தீர்த்துக் கொண்டார்.
மாப்பிள்ளை வீட்டில் வந்திருந்த சொந்தங்களைப் பார்த்து வாயடைத்து போயிருந்தனர் அழகரும் ரஞ்சனியும். அவர்கள் வீட்டில் அனைவருமே படித்து பெரிய பெரிய வேலையில், அதிலும் அரசு வேலையில் இருப்பவர்கள்.
அவர்களின் தோரனையே இவர்களை இரண்டடி பின்னால் தள்ளி நிற்க வைத்தது.
மாப்பிள்ளை அழைப்பு முடிந்து உள்ளே அழைக்கும் போது கூட ஆரியனுக்கு மஞ்சரி தான் ஆரத்தி எடுத்தார். அப்போதுதான் மஞ்சரி அந்த வீட்டிற்கும் அவர்களுக்கும் எவ்வளவு முக்கியம் என்பது புரிந்தது இருவருக்கும்.
இத்தனை நிகழ்விலும் மகிழினி ரஞ்சனியுடன் பேசவே இல்லை. மகளின் பாராமுகம் வேறு அவரை மிகவும் வருத்தியது.
அந்த வர்ண விளக்குகளையே வெறித்துக் கொண்டிருந்தவரின் அருகில் வந்து நின்றான் ஆகன்.
“ஏன் இங்க நிக்கிறீங்க.?” என்றான் அம்மா என்ற வார்த்தையைத் தவிர்த்து.
“ம்ச்..” என்றவர் அவனைத் தாண்டி செல்லப் போக, அவர் கையைப் பிடித்தவன் “ஆரி மகியை ரொம்ப நல்லா பார்த்துப்பான். எனக்கு அவன் மேல முழு நம்பிக்கை இருக்கு. உங்க மேல இருக்கிற கோபத்துல அவளை பழி வாங்குற அற்ப புத்தி அவனுக்கு இல்ல. நீங்க தேவையில்லாம யோசிச்சு பயந்துக்காதீங்க..” என்றான் பொறுமையாக..
“ம்ம் சரி..” என அவர் நடக்க, ஆகனின் முகம் யோசனையானது.
உடனே தன் மொபைலை எடுத்து கண்ணனுக்கு அழைத்தான். அவர் எடுக்கவும் “அங்க எல்லாம் ஓக்கே தான அங்கிள்..” என்றான் சற்று பதட்டமாக.
“எல்லாம் பக்கா சார்.. உங்க அப்பாக்கிட்ட இருந்து அந்த மாடல் வாங்குறதுக்கு தான் கஷ்டமா போச்சு. மத்தபடி எல்லாம் ரெடி சார்..”
“ம்ம் ஓகே அங்கிள்.. நாளைக்கு நீங்க உங்க மேடம் கூட வருவீங்களா? இல்ல முன்னாடியேவா?”
“இல்ல தம்பி.. நான் கோவிலுக்கு போய்ட்டு அர்ச்சனை செஞ்சி வாங்கிட்டு அப்படியே வந்துடுவேன். பாப்பா கூட நவீன் சார் வருவார்.”
“ஓ.. அப்போ அவனையும் சமாளிக்கனுமா?” என வாய்க்குள் முனக,
“ஹ்ம்ம் அவர் பார்வையே சரி இல்ல சார். அவர்கிட்ட கொஞ்சம் கவனமா இருங்க, மாட்டிக்காதீங்க..” என்றதோடு வைத்துவிட்டார் கண்ணன்.
கண்ணனின் பேச்சு ஆகனுக்கு யோசனையைக் கொடுத்தாலும், அதை அவன் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
இங்கு மருத்துவமனையில் “பாப்பா..” என்று தயக்கமாக அழைத்தார் கவிதா.
“என்ன பெரிம்மா..” என்றாள் அகானாவும்.
“அது பாப்பா.. நாளைக்கு அங்க வச்சு எந்த பிரச்சினையும் வேண்டாம் பாப்பா.. அது சரியா இருக்காது.. அவங்க எல்லாம் பழி பாவத்துக்கு அஞ்சாதவங்க.. அவங்க மரியாதையைப்பத்தி எல்லாம் பயப்படவே மாட்டாங்க. ஆனா உன் மரியாதையும், மஞ்சு மரியாதையும் ரொம்ப முக்கியம். அதை மறந்துடாத பாப்பா..”
“பெரிம்மா… எனக்கு ஆரியோட மேரேஜ் நல்லபடியா முடிஞ்சா போதும். இவங்களை எல்லாம் நான் மைண்ட்ல ஏத்திக்கவே இல்ல. நீங்க ஏன் இப்படி கேட்குறீங்க..”
“அது அப்படி இல்ல பாப்பா. உன் முகத்துல இருக்குற தீவிரம் எதையோ செய்யப் போறன்னு எனக்கு சொல்லுது.. அதோட அந்த மைதிலியும் இப்படி அமைதியா இருக்குற ஆளே இல்லை.”
“பெரிம்மா.. கண்டிப்பா நான் எதுவும் செய்யமாட்டேன். எனக்கு ஆரி முக்கியம். அவனோட அழகான நேரத்தை நான் பாழ் பண்ண மாட்டேன். ஆனா அங்க இருக்கிறவங்க சும்மா இருப்பாங்களா? அவங்க சும்மா இருந்தா நானும் சும்மா இருப்பேன்.”
“அது நமக்கு தேவையே இல்ல பாப்பா. என்னமோ பண்ணிக்கட்டும். நீ எதுவும் செஞ்சிடாத..”
“கண்டிப்பா பெரிம்மா.. நீங்க பயப்படாதீங்க..” என்றவளுக்கு செய்ய ஆயிரம் இருந்தும், அதற்கு இதுதான் நேரம் என வாய்ப்பும் இருந்தும், அவள் எதுவும் செய்யாமல அமைதியாக ஆரியனின் திருமணத்தை ஆர்வமாக எதிர்பார்த்தாள்.
அனைவரும் எதிர்பார்த்த அந்த நாள் ஆரியன்-மகிழினி திருமண நாள்.
அந்த திருமண மண்டபத்தில் கூட்டம் அலைமோதியது. சங்கரின் சொந்தங்கள் ஒரு பக்கம், ரவியின் சொந்தங்கள் ஒரு பக்கம், வினோத்தின் சொந்தங்கள் ஒரு பக்கம், அது இல்லாமல் ரவியின் தொழில் முறை நண்பர்கள், ஆகனின் நண்பர்கள், வினோத்தின் நண்பர்கள் என எங்கு திரும்பினாலும் மக்கள் கூட்டம் தான் அந்த மண்டபத்தில்.
அதோடு அகானாவும் அங்கிருக்க, மிகுந்த கட்டுப்பாடுகளுடன் காவல்துறை பணியாளர்களும் அவளின் பாதுகாப்பிற்கு வந்திருந்தனர்.
ஆகனுக்கும், ஆரியனுக்குமான பொதுவான நண்பர்கள் வந்திருக்க, அவர்களை கவனிக்க முடியாமல் ஆகன் திண்டாட, கண்ணனை அவர்களைப் பார்த்துக் கொள்ளும்படி கூறியிருந்தாள் அகானா.
பட்டு வேட்டி சட்டையில் தங்கையின் திருமணத்தில் ஓடிக் கொண்டிருந்தவனை நொடிக்கும் அதிகமான நேரம் பார்த்திருந்தாள் அகானா.
அவளுமே வெண்பட்டு தான் உடுத்தியிருந்தாள். மெரூணில் க்ரீம் கலர் வேலைப்பாடுகள் செய்த ப்ளவுஸ், அதற்கு மேட்சாக வெண்பட்டு.
அந்த பிளவுஷ்தான் அத்தனை அழகு. காயத்ரியின் கைவைண்ணம் அது. அகானாவிற்காக இரண்டு நாட்களாக இந்த வேலையை செய்திருந்தாள். அது அத்தனை பொருத்தமாகவும் இருந்தது பெண்ணுக்கு.
வீல் சேரில் வந்திருந்தாலும், ஆரியனுக்கு பின்னே ஒரு சேரில் அமர வைக்கப்பட்டிருந்தாள் நாத்தனார் முடிச்சு இடுவற்காக.
மஞ்சு மாப்பிள்ளை வீட்டாட்களை கவனித்துக் கொண்டிருக்க, அகானாவின் ஒரு புறம் நவீனும், மறு புறம் குமரனும் நின்றிருக்க, எதுவோ ஐயரிடம் சொல்ல வந்த ஆகனுக்கு அதைப் பார்த்து கடுப்பாகிவிட்டது.
மூவரையும் முறைத்துவிட்டு அங்கிருந்து நகன்றவனைப் பார்த்து ஆரியனுக்கு சிரிப்பு வந்துவிட்டது.
மனைவியாகப் போகிறவளின் அருகாமையை அனுபவித்துக் கொண்டே “சீனியர் முகத்துல ஒரு டப்பா கடுகை போட்டா படபடவென பொறிஞ்சிடும்..” என்றான் மெல்ல.
“ஏன்..?” என்றவள் கணவனின் பார்வையை உணர்ந்து திரும்பி பார்த்து சிரித்தாள்.
“பாவம் ஆகன். எவ்ளோ பேரைத்தான் சமாளிப்பான்..” என்றாள் புன்னகையாக.
“ம்ம் அகி கிடைக்க இந்த போராட்டம் கூட இல்லைன்னா எப்படி?” என சிரித்தவன், “இன்னைக்கு யாருமே எதிர்பார்க்காத அதிர்ச்சி எல்லாம் இங்க நடக்கப் போகுது. மனசை தைரியமா வச்சிக்கோ..” என்றான் கண்ணைச் சிமிட்டி.
“என்ன என்ன சொல்றீங்க? அம்மா உங்ககிட்ட பேசினாங்களா?” என்றாள் உடனே பயந்து..
“ச்சே.. ச்சே அவங்களை எப்படி டீல் பண்றதுனு எனக்குத் தெரியும் இது வேற..” என்றவன் “உங்க பெரிய அத்தை வரலியா?” என்றான் சுற்றிலும் பார்வையை ஓட்டி..
“வரலன்னு தான் சொன்னாங்க..” என்ற மகியின் பார்வை சற்று தள்ளி வினோத்திடம் பேசிக் கொண்டிருந்த ரவியின் மேல் இருந்தது.
அவரோ தம்பியிடம் பேசிக் கொண்டிருந்தாலும் பார்வை மொத்தத்தையும் மகள் மேலே தான் வைத்திருந்தார். அதை அகானா உணராமல் இருப்பாளா என்ன?
அவரின் பார்வையை கண்டு கொள்ளாமல் மஞ்சுவையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
தெரிந்தவர்கள் யாரேனும் அவரிடம் பழையதை பேசிக் கேட்டு வருத்தப்படுத்தி விடுவார்களோ என்று சிறு பயம் இருந்தது. அதனால் அவரையே பார்த்தாள்.
ஆனால் மஞ்சரிக்கு அப்படி எல்லாம் எந்த அசௌகரியமும் இல்லை. மிகவும் கவனமாக அந்த பேச்சுக்களை கையாண்டார்.
அவர் இன்னும் உலகம் தெரியாத அதே சிறு பெண் இல்லையே.
ஒரு துரோகத்தால், ஒரு ஏமாற்றத்தால், ஒரு பொய்யால் வாழ்க்கையை இழந்து, அதிலிருந்து பாடம் கற்று பண்பட்டு வந்து நிற்கிறார். அவரை வார்த்தைகளால் வதைத்திட முடியுமா?
“அம்மு..” என்ற நவீனின் குரலில் நிகழ்வுக்கு வர, அவளுக்கு அருகிலேயே ஆகன் நின்றிருந்தான்.
“என்ன.?” என்பது போல் ஆகனை நிமிர்ந்துப் பார்த்தவள் அப்படியே நவீனைப் பார்க்க, அவனோ ஆகனைப் பார்த்தான்.
அதைக் கண்டுகொள்ளாத ஆகன் “தாலி கட்ட போறாங்க..” என்றான் அமைதியாக.
“ஓ..?” என்றவளின் சேரை சற்று நகட்டி மகியின் அருகில் விட்டான் ஆகன்.
‘என்ன இது?’ என்பது போல் பார்த்தவளிடம் “எட்டி போட சிரமமா இருக்கும்.. ஒரு முடிச்சு தானே பக்கத்துல இருந்து போடு..” என்றான் அவளைப் பார்க்காமல்.
ஆனால் அகானா அதையெல்லாம் கவனிக்கவே இல்லை. இப்போது அகானாவிற்கு இரண்டடி தள்ளி நவீனும், குமரனும் இருக்க, அருகில் ஆகன் இருந்தான்.
இருவரும் அவனை முறைத்தாலும் கண்டு கொள்ளாமல், அவர்களுக்கு அவள் தெரியாதது போல சற்று மறைத்து வேறு நின்றுகொண்டான்.
வெளியில் இருந்து பார்த்தால் அப்படி தெரியாது. ஆனால் அங்கேயே நிற்கும் அவர்களுக்கு இது தெரியாமல் இருக்குமா?
“இவன் ஏதோ பண்றான் டா?” என நவீன் கூற, குமரனுக்கும் அதே எண்ணம் தான்.
இருவரும் முன்னே வரலாம் என்றால், அங்கு இரு வீட்டு ஆட்களும் நிற்கவே இடம் பற்றாக்குறையாக இருந்தது. தங்களை மீறி என்ன நடந்து விடும் என்ற எண்ணத்தி இருவரும் அதே இடத்தில் நின்று விட்டனர்.
பெரியவர்களிடம் ஆசி வாங்கி மாங்கல்யம் ஆரியனின் கைகளில் வந்துவிட, ஐயரும் கெட்டி மேளம் கெட்டி மேளம் சொல்ல, இருவீட்டு பெரியவர்களும் அர்ச்சதை தூவ, ஆரியன் மாங்கல்யத்தை அணிவித்து இரண்டு முடிச்சிட்டு, மூன்றாவது முடிச்சு அகானா போட்டுக் கொண்டிருக்கும் அந்த சில நொடி நேரத்தில், ஆகன் அகானாவின் கழுத்தில் தன் பரம்பரைக்கே உரித்தான மாங்கல்யத்தைக் கட்டி முடித்திருந்தான்.
அத்தனை பேரும் நடந்த நிகழ்வில் அதிர்ந்து போய் நின்றிருக்க, நவீனும், குமரனும் வேகமாக முன்னுக்கு வர, அகானாவின் பார்வையோ மஞ்சரியைத் தொட்டு நிற்க, விஜயாவின் அருகில் நின்றிருந்த அவர் பார்வையும் அந்த நொடி மகளைத்தான் தொட்டு நின்றது.
அந்த பார்வை பரிமாற்றத்தின் பொருளை அங்கிருந்த யாராலும் கணிக்க முடியவில்லை.
நடந்த நிகழ்வில் விஜயா மஞ்சரியின் கையைப் பிடித்துக் கொண்டு “என்ன மஞ்சு இதெல்லாம்?” என கோபப்பட, அப்போதும் அவர் பார்வை மகளிடம் தான்.
ஆனால் இப்போது மகளின் பார்வை தான் இந்த உலகிற்கு வர காரணமான அந்த மனிதரை தொட்டு நின்றது.
மகளின் கூரிய பார்வை அந்த மனிதனை தலை குனிய வைத்தது. ஆனால் இந்த நொடி தான் இப்படி நிற்கக்கூடாது, அவளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து ‘அம்மு’ என அவளை நோக்கி ஒரு அடி தான் எடுத்து வைத்திருப்பார்.
எங்கிருந்தோ மின்னல் வேகத்தில் வந்த புல்லட், ரவியை துளைத்துவிட்டு சென்றிருந்தது.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த நிகழ்வில் அந்த மண்டபமே அல்லோகலப்பட்டது.
வந்திருந்த மக்கள் திசைக்கொரு பக்கம் ஓட, நிமிடத்தில் அந்த இடத்தை காவல்துறை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.
ஆரியனும் ஆகனும் ரவியிடம் ஓடியிருக்க, நவீனும் குமரனும் அகானாவிடம் வந்துவிட்டனர்.
மஞ்சரியும் அகானாவும் வெறித்த பார்வையுடன் ரவியின் ரத்தம் வடிந்த அந்த உடலையே பார்த்துக் கொண்டிருந்தனர்.